முதற்கனல் வடிவம்

வெண்முரசு விவாதங்கள்

அன்புள்ள ஜெமோ,

முதற்கனல் புதினத்தை மிகுந்த ஆர்வத்துடன் வாசித்துவந்தேன். கடைசி இரு பகுதிகளிலும் கதை திடீரென்று திரும்பி உடனடியாக முடிந்துவிட்டது என்ற உணர்வை அடைந்தேன். அதன் அமைப்பினை புரிந்துகொள்ள முடியவில்லை. புதினம் நல்ல அருமையான தமிழில் எழுதப்பட்டிருந்தது. மொழிநடையை வாசித்துவாசித்து இன்புற்றேன். ஓசைநயமும் பொருள்நயமும் உள்ள தமிழுக்காகவே வாசிக்கவேண்டிய புதினம். நன்றி.

கதிர் அருணாச்சலம்

அன்புள்ள கதிர்,

நன்றி.

மகாபாரதத்தை அப்படியே ஒரே தொடர்கதையாக எழுதப்போவதில்லை என முன்னரே சொல்லியிருந்தேன். தனித்தனி நாவல்களால் ஆன ஒரு நாவல் வரிசை இது. அதில் முதல்நாவல் முதற்கனல்.

தலைப்பே சுட்டுவதுபோல இது அஸ்தினபுரி என்ற காட்டை அழித்த முதற்கனல் என்னவாக இருக்கமுடியும் என்ற வினாவை முன்வைக்கும் நாவல். வள்ளுவர் சொன்ன

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீரற்றே
செல்வத்தை தேய்க்கும் படை

என்பதுதான் உள்ளடக்கம். அந்தக் கண்ணீர்தான் முதற்கனல்.

அஸ்தினபுரியின் அழிவை பல்லாண்டுகளுக்குப் பின்னர் ஒட்டுமொத்தமாகக் காட்டியபடி நாவல் தொடங்குகிறது. ஜனமேஜயன் அந்தப் பேரழிவு பேராசையால் உருவானது என நினைத்து ஆசை காமம் முதலியவற்றை முற்றாக அழிக்க முயல்கிறான். அதை ஆஸ்திகன் வந்து தடுக்கிறான். ஆசையும் காமமும் இல்லாமல் மானுடம் வாழமுடியாது என்கிறான்.

அப்படியென்றால் எது அஸ்தினபுரியின் அழிவுக்கான காரணம் என்ற வினாவை எழுப்பிக்கொள்கிறது நாவல். நேராக அஸ்தினபுரியின் ஒரு வரலாற்றுத்தருணத்தில் திறக்கிறது. பீஷ்மர் சத்யவதியின் கூற்றுக்கு ஏற்ப அம்பை முதலிய இளவரசிகளை சிறைப்பிடிக்கும் சந்தர்ப்பத்தைச் சொல்லியபடி ஆரம்பிக்கிறது.

அந்த அரசியல்செயல்பாடு எப்படி பெரும் அநீதியாக மாறி செல்வத்தைச் சுட்டெரிக்கும் கண்ணீராக ஆகியது என்பதே இந்நாவல் விவரிக்கும் கதை. அதன் வெவ்வேறு பக்கங்கள் இதில் உள்ளன. அந்தக்கண்ணீர்தான் சிகண்டியாக முளைத்து எழுந்து அழித்தே தீருவேன் என்ற பெரும் வன்மமாக நிற்கிறது. கரி வைரமாவது போல அந்த வன்மம் ஒருகட்டத்தில் கோபம்கூட இல்லாமல் தூய வேகமாக மட்டுமே ஆகிவிடுகிறது.

பேராசையாலோ, சினத்தாலோ அநீதிகள் இழைக்கப்படுவதுண்டு. அதுதான் உலகவழக்கம். ஆனால் இங்கே கடமை காரணமாக, ஓர் ஆட்சியாளன் தன் நாட்டு மக்களின் நலனை மனமார நாடுவதன் விளைவாக அநீதி இழைக்கப்படுகிறது. இங்குதான் மகாபாரதம் சொல்லும் ‘மகத்தான அறமோதல்’ நிகழ்கிறது.

அந்த மோதல்கணத்தின் உச்சமே சிகண்டியும் பீஷ்மரும் ஒருவரை ஒருவர் காணும் தருணம். அங்கே நாவலின் உச்சம் நிகழ்ந்துவிடுகிறது. அதன்பின் நாவல் தொடங்கியபுள்ளிக்குத் திரும்புகிறது. ஆஸ்திகனின் திரும்பிச்செல்லல் நிகழ்கிறது. அங்கே அந்த அறமோதலுக்கான முதல் காரணமென்ன என்பதுதான் கத்ருவின் கதை வழியாக விவரிக்கப்படுகிறது. காமகுரோதமோகங்கள் அல்ல, அவற்றுடன் இணையும் அகங்காரமே அறவீழ்ச்சியின் மையம் என அக்கதை சொல்கிறது.

நாவல் தொடங்கியபோது எழுப்பப்பட்ட வினாக்களை அந்த ஆழ்மபடிமங்கள் வழியாக மீண்டும் தொகுத்துக்கொள்கிறது இறுதிப் பகுதி. அதுவே இயல்பான முடிவு. நாகங்களின் அழிவில் தொடங்கும் நாவல் அவை புதியதாக மீண்டெழுவதில் நிறைவுகொள்கிறது.

உள்விரிவுகள் பல உள்ளன. அவை வாசகர்களின் ரசனைக்கும் கற்பனைக்கும் சிந்தனைக்கும் அறைகூவல் விடுப்பவை. ஆனால் மிக எளிமையாகச் சொன்னால் இதுதான் முதற்கனலின் வடிவம். தன்னளவில் இது ஒரு முழுமையான நாவல். மகாபாரதத்தின் முதல் அறப்பிழை எப்படி எங்கே நிகழ்ந்தது என ஆராயும் ஒரு புனைவுநூல் இது.

அடுத்த நாவல் இதேபோல ஒரு தனியான புனைவுப்படைப்பாக, அதற்குரிய வடிவமுழுமையுடன் வெளிவரும். ‘மழைப்பாடல்’ என்று பெயர். நன்மை தீமை என அனைத்து விதைகளையும் முளைக்கச்செய்யும் மழையைப்பற்றிய நாவல் அது.

ஜெ

முதற்பிரசுரம் Feb 20, 2014

முந்தைய கட்டுரைபேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல்- கனகலதா
அடுத்த கட்டுரைஎம்.வி.வியின் காதுகள்: சுனீல் கிருஷ்ணன்