தமிழின் நல்லூழ்:இரா. சோமசுந்தரம்

கொற்றவையை எப்படி விமர்சனம் செய்வது? அல்லது விமர்சனம் செய்யாமல் இருப்பது? இதை விமர்சனம் என்பதை விட கருத்துப் பகிர்வாகத்தான் வைத்துக் கொள்ள முடியும். கொற்றவையை நாவல் என்று சொல்ல தயக்கம் ஏற்படுகிறது. சிலப்பதிகாரத்தின் தழுவல், அல்லது படியாக்கம் என்றும் சொல்லமுடியாது. கொற்றவை சிலப்பதிகாரத்தின் இடைவெளிகளில் புகுந்து விரியும் இலக்கியம். அதில் வரும் கண்ணகியும் கோவலனும் அதே கதை மாந்தர்கள். ஆனால் அவர்கள் உலவும் இலக்கிய தளமும் பரப்பும் வேறானவை. அவர்கள் ஏதோ ஒரு காலத்தில் தோன்றி மறைந்த மனிதர்களின் நிழல்கள் அல்ல. அவர்கள் இந்தத் தமிழ் மண்ணில் பன்னெடுங்காலமாக தோன்றி மறைந்து தோன்றி மறைந்து தன்னை நிலை நிறுத்திக் கொண்டே வரும் அறத்தின் கூறுகள். இளங்கோ அடிகள் காட்டிய கோவலனையும் கண்ணகியையும் மதுரையையும் அதே நிலையில் கொற்றவையில் காண முயல்வது அர்த்தமற்ற தேடலாக முடியும்.

பன்னெடுங்காலமாக வாய்மொழி இலக்கியமாக இருந்ததை எப்படி இளங்கோ அடிகள் எழுத்து வடிவில் சிலப்பதிகாரத்தை தந்து சென்றாரோ அதே போன்று, ஜெயமோகனின் கொற்றவையும் (அல்லது 2வது சிலப்பதிகாரம்).

ஜெயமோகனின் பரந்துபட்ட வாசிப்பும் அறிவின் தேடலும் இந்திய தத்துவ மரபுகளின் மீதான ஈடுபாடும் இலக்கியத் திறனுமாக குழைக்கப்பட்ட வண்ணம்தான் கொற்றவை.
கொற்றவை 5 பகுதிகளைக் கொண்டது. நீர், காற்று, நிலம், எரி, வான்.

நீர் :

தமிழர் தொல்குடி, அதில் தோன்றிய முக்கண் முதல்வன், அவர்களது மகன்களான ஆனைமுகன், ஆறுமுகன், பணிகசிவம் என வழிபட்ட தொல்மூதாதையர், கடல்கொண்ட மதுரைகள், கபாடபுரம், தென்மதுரை, கடல்கொள்ளாதவாறு வடக்கு நோக்கி நகர்ந்து சிதறிப் பெருகும் பல குடிகள், வெப்பப் பாலையில் ஓடும் வெய்யை (வைகை) நதியோரம் அமைத்த மதுரையும் அதன் அரசனும் வரையிலான தொல்கதைகளின் தொகுப்பு
காற்று:

பெரும்புகார் நகரத்தில் பன்னிரண்டு வயதான கண்ணகைக்கு குலவழக்கப்படி கண்ணையன்னை தெய்வத்தின் இடக்கால் சிலம்பில் அச்செடுத்து, வடித்து, அமணி பெய்த பொற்சிலம்பு அணிவிக்கப்படுவதும் அதே வேளையில் கோவலன் தன் குலத்துக்குரிய வணிக நடைமுறைகளிலிருந்து விலகி யாழும் கணிகையருமாய் சுற்றியதும், திருமணமும், மாதவியின் நாட்டிய அறங்கேற்றமும், மாதவி இல்லத்தின் கோவலன் போய் அனைத்து செல்வத்தையும் இழந்தபின் வீடுதிரும்பி, இருந்த ஊரைவிட்டு வெளியேறி, இச்சிலம்பை விற்று மீண்டும் தொழில் செய்வோம் எனப் புறப்படுதலும். இதன் ஊடாக கண்ணகிக்கு இணையாக பாண்டியமாதேவியின் திருமணமும்.

நிலம்:

புகாரை நீங்கி, கவுந்தி அடிகள் வழித்துணையுடன் மதுரை வந்து சேர்கிறார்கள். மதுரை புகுமுன்பாக யாதவப் பெண் மாதயிடம் அவர்களை விருந்தினராய் ஒப்படைத்து தன்வழி செல்கிறார் கவுந்தி.

எரி:

மதுரையில் அரசியல் சூழல் கொந்தளிக்கிறது. அரசியின் கட்டளைக்கே மதிப்பு. மறவர்களின் ஊழல்களால் எண்குடிகளும் கொதித்து அரசுக்கு எதிராக கலகம் செய்ய ஆயத்தமாக இருக்கிறார்கள். இந்த கருத்துமாறுபாடுகளை சரிசெய்ய எண்குடிகளையும் அழைத்து கூட்டம் நடத்தவும் பாண்டிமாதேவியின் இடக்கால் சிலம்புக்கு (பேராச்சி தெய்வத்தின் மந்தணச்சொல் பொறித்தது) விழா எடுப்பது என்றும் முடிவு செய்த நேரத்தில் சிலம்பு களவுபோயிருப்பதை அரசி அறியவருகிறாள். எடுத்தவன் தலைமை பொற்கொல்லன் என்று சந்தேகம் வலுப்பதால் சூழ்ச்சிக் குழுக்கள் அவரிடம் விவரம் சொல்லி ஒதுங்கிக்கொள்கின்றன. திருட்டை திசை திருப்பும் எண்ணத்தில் வந்து கொண்டிருக்கிறார் தலைமை பொற்கொல்லர்.

சிலம்பை விற்க அங்காடி வீதிக்கு வருகிறான் கோவலன். அனைத்தையும் இழந்த பின் இதை விற்பது பெருவணிகர் குல வழக்கம். பாண்டிய நாட்டில் இதை விற்காமல் அரசனிடம் அடகு வைத்துப் பொருள் பெற முடியும் என்று சொல்லும் ஒரு வணிகன், அந்நேரத்தில் அங்கே குழாமுடன் நடந்துவரும் தலைமைப் பொற்கொல்லனிடம் கேட்கும்படி சொல்கிறான். ஊழ் வலி உறுத்துவந்தூட்டுகிறது. கோவலன் போகிறான். கோவலனைத் தன் வீட்டில் அமரச் செய்யும்படி சொல்லிவிட்டு அரண்மனைக்குப் போய் கள்வனை சிலம்புடன் கண்டுபிடித்து வீட்டில் நிறுத்தி வைத்திருப்பதாகöö சொல்கிறான்.

காவலர்கள் கோவலனிடமிருந்த சிலம்பைப் பெற்றுக்கொண்டு அங்கேயே அவனை வெட்டிப் போடுகின்றனர். இந்த அநீதியைப் பார்க்கும் மக்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்து, அது பல்கிப் பெருகி, கண்ணகியையும் சேர்கிறது. அவள் தன் சிலம்பைக் கையில் ஏந்தி நீதி கேட்க வருகிறாள். அவள் பின்னே ஆவேசக் கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கிறது. அவைக்கு வரும் கண்ணகி தன் சிலம்பின் அமணியை உடைத்துக் காட்டுகிறாள். பாண்டியனின் உதட்டைக் கிழிக்கிறது ஒரு மணி. இறந்து விழுகிறான். அவனுடன் பாண்டிய தேவியும் வைர மோதிரத்தை உண்டு அங்கேயே இறக்கிறாள். வெளியே கொந்தளிப்புடன் நிற்கும் கூட்டம் நகரைக் கொள்ளையடிக்கிறது. மதுரை எரிகிறது. தான் இனி யாருக்கும் ஆளில்லை என்பதையும், இனி குழந்தைக்குப் பாலூட்ட மாட்டேன் என்பதையும் அறிவிக்கும் தொல்குடி மரபின்படி இடமுலை அரிந்து எறிகிறாள் கண்ணகி.

வான்:

கண்ணகி சேர நாட்டை அடைந்து, மலை உச்சியில் தவமியற்றி இறைநிலை எய்துகிறாள். அவளுக்கு கோயில் கட்டப்படுகிறது. அவள் சென்ற இடம் எல்லாம் அன்னையின் கோயில்கள். அவளைப் பற்றிய மக்கள் கதைகளும் செவிவழிக் கதைகளுமாக அவள் தெய்வத்தன்மை மேலும் மேலும் மக்களை அணைத்துக் கொள்கிறது. வழிபாட்டு முறைகளும், சேரன் செங்குட்டுவன் பங்குகொள்ளும் கண்ணகி கோயில் விழாவும், கதைகளும், அக்கோயில் தொடர்பான சம்பவங்களும் இன்றைய தேதி வரை இடம்பெறுகின்றன.

ஓர் அறிமுகத்துக்காக இந்நாவலை இப்படியாக சுருக்கமாக வி(வ)ரிக்கலாம் என்றாலும், 600 பக்க நாவலும் அதில் கையாளப்பட்டுள்ள மொழியும் கருத்துகள் சொல்லப்படும் விதமும் தமிழில் இதுவரை யாரும் செய்யாதவை.

தம்பிதான் அரசாள்வான் என்று ஒரு ஜோதிடன் சொன்னதால் உடனே துறவறம் பூண்டார் இளங்கோ என்பதுதான் நாம் அறிந்த கதை. ஆனால் கொற்றவை இதில் வேறு தொல்கதைகளைச் சேர்த்து புது வடிவம் தருகிறது. வேட்டைக்குச் செல்லும் ஐயப்பன் (என்ற இளங்கோ அடிகள், சேரனின் வளர்ப்பு மகன், காட்டில் கண்டெடுத்த குழந்தை) புலிகளைக் கொல்லாமல் அவற்றை பார்வையாலேயே பணிய வைப்பதும், வாமரை தனித்து வெற்றி கொள்வதும், சேரன் செங்குட்டுவனுக்கு மகுடம் சூட்டுவதைவிட அனைத்துத் தகுதிகளும் பெற்ற ஐயப்பனுக்குத்தான் பட்டம் சூட்ட வேண்டும் அமைச்சரவை சொல்வதால் இளங்கோ துறவு ஏற்பதும், கண்ணகி குறித்து கேள்வியுற்று அவள் சென்ற பாதையில் மதுரை வரை சென்று அவளுடன் தொடர்புள்ள மாதயின் மகள், மணிமேகலை, பாண்டிய வம்சாவளியினர் அனைவரிடமும் பேசிய பின்னர் கன்னியாகுமரி வரை சென்று திரும்பி தவத்தில் ஆழ்ந்து, சிலப்பதிகாரம் இயற்றியதுமான சம்பவக் கோர்வைகள் இதுவரை கேள்விப்படாதவை. இந்தக் காப்பியத்தின் பிரதியைக்கூட இளங்கோ அடிகள் யாரோ ஒருவரிடம் கொடுக்க, அவர் கொண்டுவந்து செங்குட்டுவன் அவையில் படிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மாதவிக்கு சிலப்பதிகாரத்தில் தரப்பட்ட இடத்தைவிட, கொற்றவையில் மிகவும் குறைவான இடமே.

கோவலனுக்கு கவுந்தி அடிகளாகவும் கண்ணகிக்கு அவரே நீலியாகவும் காட்டப்படுகிறது. இதுவரை இல்லாத முயற்சி. வண்ணச் சீரடி மண்ணில் படும் வழிதோறும் கண்ணகிக்கு ஐவகை நிலங்களையும், அங்கு நடந்த நிகழ்வுகளையும் காணும் பார்வைöயைத் தருகிறாள் நீலி. அந்தப் பார்வையிலும் தொல்கதைகள் தோன்றி மறைகின்றன.

வணிகத்தில் நாட்டம் கொள்ளாத கோவலன், மலர்க்காடுகளிலும் மதுவரங்குகளிலும் கணிகையர் இல்லங்களிலும் அலைந்தான் என்று சித்தரிக்கப்படுகிறது. கோவலன் கணிகையிடம் சென்றது திருமணத்துக்குப் பின்பா, முன்பா? இந்திய முஸ்லிம் லீக் தலைவர்களில் ஒருவரான அப்துல் சமது ஒருமுறை ஈ.வெ.ரா. பெரியார் தன்னிடம் கண்ணகி சிலை திறப்பு விழாவில் கூறியதாகக் கூறியது நினைவுக்கு வருகிறது. கண்ணகிக்கு நடைபெற்றது குழந்தைத் திருமணம். இளமைப் பருவத்தில் இருந்த கோவலன் மாதவியிடம் போனான். இரண்டு மூன்று வருஷத்தில் இங்கே வீட்டில் கண்ணகி வளர்ந்து பூத்து நிற்கிறாள். கண்ணகியிடம் திரும்பி வந்துவிட்டான். இது குழந்தை மணம் என்பதே சரி என்றும் படுகிறது. வாய்மொழிக் கதைகளில் கண்ணகி கடைசி வரையிலும் காமம் நுகரா கன்னியாக சொல்லப்பட்டிருக்கிறாள்.

ஆனால், கொற்றவை மீண்டும் ஒரு கதை சொல்லல் அல்ல. அதே கதையின் ஊடாக வேறொன்றை எழுதிச் செல்லும் நூல். மு.வ எழுதிய கண்ணகி மிகவும் எளிமையானது. அது சிலப்பதிகாரம் படிக்காதவர்களுக்காக எழுதப்பட்டது. ஆனால் கொற்றவை படிக்க வேண்டுமானால் சிலப்பதிகாரம் படித்திருக்க வேண்டும். சங்க இலக்கியமும் தமிழகத்தின் தொல்வரலாறும் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். இந்தியத் தத்துவ மரபுகள் தெந்திருக்க வேண்டும். அதனால் இதன் மொழிநடைகூட எளிமையானது அல்ல. ஒரு பிளஸ் டூ படித்த மாணவனால் இந்த நாவலை படிப்பது மிகவும் கடினம். இலக்கிய வாசிப்பு உள்ளவர்களுக்கும்கூட சில நேரங்களில் மொழியிலிருந்து எழுந்து விரியும் கற்பனைக்குள் செல்லும் திறப்புகளைக் கண்டடைவதில் சிக்கலை ஏற்படுத்தும் இடங்கள் கொற்றவையில் நிறைய உண்டு.

இருப்பினும் இதற்காக ஜெயமோகனின் உழைப்பு ஆச்சயம் தருபவை. மாதம் ரூ 20 ஆயிரத்துக்கும் அதிகமாக ஊதியம் பெறும் தமிழ்ப் பேராசிரியர்கள் செய்திருக்க வேண்டிய ஆய்வுகள் அனைத்தும் இந்த காப்பியத்துக்குள் இருக்கின்றன. புதுப்புது சொல்லாடல். வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களை மீண்டும் நினைவூட்டிச் செல்லும் மொழிநடை. அதிலும் காடு என்றாலே ஜெயமோகனின் உரைநடையில் மரங்கள் முளைத்து நீரோடைகள் சலசலக்கத் தொடங்கிவிடுகின்றன. காட்டு மலரின் வாசம் தொடங்கிவிடுகிறது. கண்ணகி கோயில் விழாவுக்காக செங்குட்டுவன் கல்லாறு நதியைக் கடந்து, அமைதிப் பள்ளத்தாக்கைக் கடந்து செல்லும் பகுதி ஜெயமோகனின் காட்டெழுத்துக்கு ஓர் அடையாளம்.

பவகாரணி என்னும் பிறப்பறுவாவிக்குள் செல்கிறான் கோவலன், முதல்முறை முழுகினால் முன்னை வினை தெரியும். இரண்டாம் முறை மூழ்கினால் பின்னை வினை தெரியும். மூன்றாம் முறை மூழ்கினால் நிகழும் வினை தெரியும் என்கிறது அங்குள்ள ஓவியப்பாவை. முதல் முறை மூழ்கியதும் தான் ஒரு பொற்கொல்லனை ஏமாற்றி, கொலைக்குக் காரணமாக இருப்பதைக் காண்கிறான். இரண்டாவது முறை மூழ்கும்போது அன்னை தெய்வம் கண்ணகியைக் காண்கிறான். மூன்றாவது முறை மூழ்காமல் எழுந்து வந்துவிடுகிறான். ஒளிப்பாவை நினைவூட்டியபோதும், இந்த வாழ்வில் இனி நிகழப் போவதை அறிய விழையவில்லை என்கிறான். அதைப்போலவே இந்த நூலுக்குக் கிடைக்கும் நிகழ்கால மதிப்பீடுகள் விழையத்தக்கன அல்ல.

ஏனெனில் இது கதைமாந்தர்களை நிறுவும் நாவல் அல்ல. கண்ணகியை தெய்வமாக நிறுவும் இன்னொரு காப்பியத்துக்கான தேவையும் இதில் இல்லை. இது ஒரு ஆவணக் காப்பியம். ஆய்வுக் காப்பியம். ஒப்பிலக்கிய காப்பியம் என வேறு தளங்களுக்கு உரியது. இதைப் பேசப்படாமல் விடலாம். ஆனால் புறக்கணிக்கவே முடியாது. இதில் விவாதம் செய்வதற்குரிய விஷயங்கள் பல. இதன் முரண்களுக்காகவும் மேதைமைக்காகவும் இது தொடர்ந்து விவாதிக்கப்படும். ஆனால் மிகச் சிலரால்.

உலகில் எல்லாவற்றிலும் ஊடுருவி அனைத்தையும் தாங்கி நிற்கும் அறம், தன்னை எவ்வாறு வெளிப்படுத்தி தன்னைத் தானே நிறுவிக் கொள்கிறது என்பதை சிலப்பதிகாரத்துக்கு முன்பும் பின்புமாக நகர்த்தி அறத்தின் போக்கை மீள்பதிவு செய்வதுதான் இந்நூலின் நோக்கம். அறம் காலம்தோறும் பெண்ணில் வெளிப்படுகிறது. அத்தகை அன்னையர் கொற்றவையாக, கன்னியாகுமரியன்னையாக, நாராயணீயாக அறத்தமர்செல்வியாக (பிரக்ஞ்ஞதாரா தேவி) வழிபடப்படுகிறார்கள். இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தை அறம் ஆள்கிறது. அரசியல் பிழைத்தோர்க்கும் அநீதி இழைத்தோர்க்கும் அறம் கூற்றாகும். இந்தப் புதலை ஏற்படுத்தும் நோக்கம் இந்நூலில் நிறைவாகவே செய்யப்பட்டுள்ளது.

‘இந்நூல் தமிழின் நல்லூழ்’

‘ஆம் அவ்வாறே ஆகுக’

நன்றி

http://www.keetru.com/vanam/sep07/somasundaram.php

கொற்றவை – ஒருகடிதம்

கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் : அரவிந்தன் நீலகண்டன்

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை. ராமபிரசாத்

முந்தைய கட்டுரைஇளங்கோவடிகள்தான் ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்:ஓர் இணையப்பதிவு