சு.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன், கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம்

ஜெ,

காவல்கோட்டம் என்ற நாவலை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கடுமையான விமரிசனம் வழியாகவே கேள்விப்பட்டேன் .  ஒரு பெரிய நாவல் நன்றாக இல்லை என்று சொன்னாலே வாங்கவேண்டாம் என்று தோன்றிவிடுகிறது. ஆகவே வாங்கவில்லை. [நீங்களும் இதேபோல பல நூல்களை கடுமையாக கிழித்திருக்கிறீர்கள் இல்லையா?]

இத்தனை நாள் கழித்து நீங்கள் எழுதியிருக்கும் விமரிசனம் ஆர்வத்தைத் தூண்டுகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் விமரிசனத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அத்துடன் சு.வெங்கடேசன் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நூலுக்கான தகவல்களை அளித்தார் என்று எழுதிய நீங்கள் உடனே ‘ஜகா வாங்கிவிட்டதாகவும் வாசித்தேன்’. கீற்று என்ற தளத்தில் என்று நினைக்கிறேன். விஷயம் தெரியாமல் அப்படி உறுதியாக ஏன் சொல்லவேண்டும் நீங்கள்?

http://www.sramakrishnan.com/deep_story.asp?id=231&page=

செந்தில்

அன்புள்ள செந்தில்,

நீங்கள் நினைப்பது சரி. ஒரு பெரியநாவலை அது வந்ததுமே ‘கிழிப்பது’ கொஞ்சபேரை வாங்கவிடாமல் செய்யும். ஆனால் தமிழில் வெளிவரும் மதிப்புரைகளில் பெரும்பகுதி நம்பத்தக்கவை அல்ல. ஒரு வருஷம் முழுக்க பாருங்கள் ஒரு முக்கியமான படைப்பை இன்னொரு முக்கியமான படைப்பாளி டர்ரென்று கிழித்திருப்பார். சென்ற சிலவருடங்களில் வந்த எல்லா முக்கியமான நூல்களுக்கும் முதலில் எதிர்மதிப்புரைகள்தான் அவசரமாக எழுதப்பட்டன என்பதைக் கவனியுங்கள்.

ஆனால் நூறு தரமற்ற நூல்க¨ளை நூறு சாதாரண ஆட்கள் ஆகாஓகோ என்று சம்பிரதாயமாக புகழ்ந்திருப்பார்கள் .புகழ்ச்சியைக் கண்டு நூல்களை வாங்கினால் உங்கள் வீடே குப்பைக்கூடையாகிவிடும். ஆகவே  தமிழில் நூல்களை வாங்குபவர்கள் வாசித்தவர்களின் கருத்தை வாய்மொழியாகவே அறிந்துதான் வாங்குகிறார்கள், அதிகமும் இரவல். அவ்வகையில் காவல்கோட்டம் பரவலான வாசகவரவேற்பைப் பெற்ற வெற்றிகரமான நூல் என்றே கேள்விப்பட்டேன்.

நான் ஒருபோதும் ஒரு நூல் வந்ததும் அதை கடுமையான எதிர்விமர்சனத்துக்கு ஆளாக்கியதில்லை. வாசிப்பதற்கு கொஞ்சநாள் எடுத்துக்கொள்வது என் வழக்கம். பிடிக்கவில்லை என்றால் பேசாமல் இருந்துவிடுவேன். கடுமையான விமர்சனங்களை இரண்டு காரணங்களால் மட்டுமே எழுதியிருப்பேன். ஒன்று, ஒர் உள்ளீடற்ற எழுத்து பலவகையான பாவலாக்களால் போற்றிபுக்ழப்பட்டால் அதை கறாராக அடையாளம் காட்டியிருப்பேன். பெரும்பாலும் வெரும் உத்திகள், ‘இதுதான் இப்போது பேஷன்’ என்பது போன்ற எழுத்துக்களை. அடுத்தது , காலத்தின் பகுதிகளாக ஆகி நிற்கும் பழைய படைப்பாளிகளை இன்று என்ன எஞ்சுகிறது என்ற கோணத்தில் கறாராக மதிப்பிட்டிருப்பேன்.

ஏற்புக்கும் மறுப்புக்கும் மிகவிரிவான காரண காரியங்களையே நான் முன்வைக்கிறேன், வெறும் நக்கல் கிண்டல் வசைகளை அல்ல. என்னுடைய முடிவுகளை அல்ல, அந்த தர்க்கங்களை மட்டுமே வாசகர் பரிசீலிக்கவேண்டும். என்னுடைய முடிவுகளை நிராகரிப்பவர்களுக்குக் கூட நான் சொல்லும் அவதானிப்புகள் என்னுடைய கண்ணோட்டங்கள் உதவக்கூடும். நான் இலக்கிய ஆக்கங்களைப்பற்றி விமரிசனங்களை உருவாக்கவில்லை, விவாதங்களை மட்டுமே உருவாக்க எண்ணுகிறேன்

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு கள்ளர்சமூகம், குற்றபரம்பரைச் சட்டம் போன்றவற்றைப் பற்றிய தகவல்களை சு.வெங்கடேசன் அளித்தார் என்பது அந்த தொனிவரும்படியாக  எஸ்.ராமகிருஷ்ணனே எழுதி நான் வாசித்ததாக நினைவு. ஆகவேதான் அதை எழுதினேன். எஸ்.ரா மறுக்கும்போது நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. இது ஒன்றும் கருத்துச் சண்டை இல்லை. எங்கே வாசித்தேன் என்றும் நினைவில் இருக்கவில்லை. பின்னர்தான் தேடி மீண்டும் உறுதிசெய்துகொண்டேன். நெடுங்குருதி முன்னுரையில் அவர் சு.வெங்கடேசனுக்கு நன்றியும் சொல்லியிருக்கிறார்.

எஸ்.ராமகிருஷ்ணனின் விமரிசனம் அவரது சொந்தக்கருத்து. அதைப்பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. காலத்தில் அந்த விமரிசனம் நிற்குமென்றால் சரி. எந்த ஒரு நூலும் பெறும் இலக்கிய இடமென்பது மாறுபட்ட கருத்துக்கள் நடுவே உருவாகும் விவாதம் மூலம்  காலப்போக்கில் திரண்டு வருவதுதான்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் சார்,
வெகு நாளாய் எதிர்பார்த்திருந்தேன். ஆக்கபூர்வமான, ஆழ்ந்த விமர்சனம். படிக்கும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. நிச்சயம் வாங்கி விடுகிறேன்.


elamparuthy

அன்புள்ள இளம்பரிதி
நான் காவல்கோட்டத்தை சென்ற ஜூனில்தான் வாசித்துமுடித்தேன். அதற்குள் அமெரிக்க பயணம். அதன்பின் இப்போதே எழுதவாய்த்தது

ஜெ

அன்புள்ள ஜெ
நீங்களும் மேலாண்மைப் பொன்னுச்சாமியும் காவல்கோட்டத்தை ஒரு பெருங்காப்பியம் என்று புகழ்கிறீர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் அதை ஒரு குப்பை மட்டுமே என்று தன் இணையதளத்தில் சொல்கிறார். நானே வாசித்து உண்மையை அறியலாமென எண்ணுகிறேன்

நெடுநேர கூகிள் தேடலுக்குப் பின்னர் தமிழினி அந்நூலை வெளியிட்டிருப்பதாக அறிந்தேன். அவர்களின் இணையதளமோ தொடர்பு முகவரியோ  கிடைக்கவில்லை.

உங்கல் இணையதளத்தில் நீங்கள் கொஞ்சநாள் முன்னர் புத்தகங்கள் விற்காத நிலையைப்பற்றிய உங்கள் ஏமாற்றத்தைச் சொல்லியிருந்தீர்கள். ஆச்சரியமில்லை. இப்படி புத்தகத்தை தேடுவதே கஷ்டமாக இருந்தால் எப்படி புத்தகங்கள் விற்கும்? வாச்கான் ஏமாற்றம் அடையமாட்டானா?

நம் பதிப்பகத்தார் புத்தகங்களை கொன்டுசேர்க்க கற்றுக்கொள்ளவேண்டும்
ஜாஸ் டயஸ்

அன்புள்ள ஜாஸ்,
நல்லது. இதுதான் வாசக ஊக்கம் என்பது.  எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருளை தானே வாசித்து அறிவது.

நான் காவல்கோட்டத்தை மாபெரும் காவியம் என்று சொல்லவில்லை. அது ஒரு முக்கியமான இலக்கிய ஆக்கம், தமிழில் எழுதப்பட்ட வரலாற்றுநாவல்களில் சிறந்தது, அந்த வகைமை தமிழில் இல்லாததனால் அது பல்வேறு வடிவச்சிக்கல்கள் கொண்டதாக இருந்தாலும் தவிர்க்க முடியாதது என்றே சொல்கிறேன். அதை ஏன் சொல்கிறேன் என்றும், ஓரு வரலாற்று நாவலை வாசிக்கும் சாத்தியங்களைப்பற்றியும் பேசுகிறேன்

தமிழில் முக்கியமான எல்லா பதிப்பகத்தாரும் புத்தகங்களை மக்களிடம் கொண்டுசென்றுசேர்க்க இரண்டாயிரம் தொடக்கத்தில் பெரு முயற்சிகளில் ஈடுபட்டார்கள். புத்தகக் கண்காட்சிகள் அவ்வாறுதான் பரவின. ஆனால் வாசகர்களின் ஊக்கமின்மையால் அந்த முயற்சிகள் இப்போது நஷ்டமளிப்பவையாக உள்ளன

இணையத்தில் புத்தகங்களைப் பெற எனி இண்டியன் காம், விருபா காம் , உடுமலை காம் என்று பல இணையதளங்கள் உள்ளன. எல்லா நூல்களும் கிடைக்கும். ஆனால் அவற்றுக்கும் வாசக ஆதரவு மிகமிகக் குறைவு என்பதனால் நடத்த முடியாமல் அவையும் திணறிக்கொண்டிருக்கிறன இதுவே நடைமுறை உண்மை

ஜெ

அன்புள்ள ஜெ,

திண்ணை இணையதளத்தில் முன்பு ஒரு கட்டுரை வாசித்தேன். சு.வெங்கடேசன் என்பவர் எழுதியது. சுட்டி கீழே கொடுத்திருக்கிறேன். அந்த வெங்கடேசன் தானா நீங்கள் சொல்லும் இந்த காவல்கோட்டம் நாவலை எழுதிய வெங்கடேசன்? சமரசமாகிவிட்டீர்களா?

செல்வம்

அன்புள்ள செல்வம்,
நான் எப்போதுமே எல்லாரிடமும் சமரசம்தான். சண்டைபோடுவதில்லை, விமரிசனம்தான் வைக்கிறேன். அது நமது உபாசனை தேவதைக்கு நாம் செய்யும் கடமை -கொஞ்சம் உக்கிரமான மூர்த்தி அது.
வெங்கடேசன் மட்டுமல்ல, தமிழின் முற்போக்கு எழுத்தாளர்கள் எல்லாருமே என்னைப்பற்றிக் கடுமையாகத்தான் எழுதியிருக்கிறார்கள். அதற்காக என்ன செய்வது? ஒரு நல்ல நாவலை நல்ல நாவல் அல்ல என்று சொல்லிவிடவேண்டுமா என்ன?

ஜெ

மதிப்பிற்குரிய ஜெ,
நல்லது. எழுத்து உங்கள் பேட்டை. நீங்கள் ஒரு விமர்சகரும் கூட. உங்கள் பேட்டைக்குள் அடியெடுத்து வைக்கும் எவரையும் அறியாதவர் போல் நீங்கள் இருக்க நேர்ந்தால், அது ஒரு பாசாங்கு மட்டுமே. ‘காவல்கோட்டம்’ நாவல் பற்றி ‘என் மனைவி சொன்னாள்’, ‘வாசித்தவர்கள் சொன்னார்கள்’ இன்ன குறிப்புகளோடு நீங்கள் கைவிட்டது ஏமாற்றமாக இருந்தது. ஊர்ப்பொதுவில் அழுக்குத்துணி கசக்க நேர்ந்த அவலத்திலும் எஸ். ராமகிருஷ்ணன் உயர்ந்திருந்தார்.

நல்லது, தப்புக்கணக்குச் சொல்லப்பட்ட பாரவண்டி தாதனூர்க்காரன் புலனுக்குத் தப்பாதது போல ‘காவல்கோட்டம்’ நாவலையும் கவனித்துவிட்டீர்கள்.

‘காவல்கோட்டம்’ வெளிவந்த முதல் மாதத்திலேயே அதை வாசித்திருந்தேன். ஆனால் எனக்குள் அதன் உணர்வு உச்சங்கள் மட்டுமே நின்றன. அது ‘ஹிஸ் ஹைநெஸ் அப்துல்லா’ வில், ‘ப்ரமர வனம் வீண்டும்’ பாடல் பல்லவி முதல் அடியில், அந்த நீள வராந்தா ‘லாங்-ஷாட்’டில் ஓடி அதன் கோடியில் நாயகி அதிர்ந்து திரும்புகிற ‘க்ளோஸ்-அப்’ மட்டுமே நினைவுகொண்டு நிற்பது போல. உங்கள் புலனுக்கு ஆனால் அந்த இசைப்போட்டி, அதில் இசை எனும் பெருமாண்டத்தின் முன் அவர்கள் புரிதலுக்கு ஆட்படுதல் இன்ன அறிவுகள் தப்பாமல் வசப்பட்டிருக்கின்றன.

உ.வே.சா. அவர்கள் தன் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை சொன்னதாகச் சொன்னது நினைவுக்கு வருகிறது: ‘கற்றுக் கொடுக்கக் கொடுக்கத்தான் ஒருவருக்குத் தெளிவு வருகிறது’. உங்கள் எழுத்துக் கலையின் வியாழம் குறித்து எனக்கு எப்போதுமே ஒரு வியப்பு உண்டு. அதற்கு உங்கள் விமர்சனப் பார்வை மிகுதியும் உதவுகிறது என்று இப்போது புரிகிறது. நல்லது.

அன்போடு
ஜசுந்தரராஜன்

அன்புள்ள ராஜ சுந்தர ராஜன்
வாழ்த்துக்கு நன்றி. நீங்கள் சொல்வது உண்மை, நான் எழுதும் விமரிசனங்கள் பிறருக்குக் கற்றுக்கொடுக்க அல்ல, நானே கற்றுக்கொள்வதற்காகவே. விமரிசனம் மூலம் நான் ஒருநாவலைப்பற்றி ஆழமாக சிந்திக்கிறேன். அதை கடந்தும்செல்கிறேன்.

ஜெ

அன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

எஸ்.பாலசுப்ரமணியம் என்ற எழுத்தாளர் ‘சந்திரவதனா’ என்ற விறுவிறுப்பான
நாவல் எழுதியுள்ளார். அதுவும் மதுரைச் சொக்கநாத நாயக்கருக்கும், தஞ்சை
நாயக்கர் வம்ச இளவரசி சந்திரவதனாவுக்கும் இடையிலான நிறைவேறாத காதலைப்
பற்றிப் பேசும். இறுதியில் அவள் தந்தையாலேயே கொல்லப்பட்டு விட,
சொக்கநாதரை மணம் செய்து கொள்ளும் முத்து*** என்ற பெண்மணி தான் பின்னாளில்
இராணி மங்கம்மாளாகி, பிற்கால மதுரையின் நீண்ட தொலைவு பேருந்துகளுக்குப்
பெயர் கொடுத்தாள்.

அன்புடன்,
இரா.வசந்த குமார்.

அன்புள்ள வசந்தகுமார்
அந்நாவலை நான் வாசித்ததில்லை. எஸ்.பாலசுப்ரமணியம் குமுதத்தில் எழுதிவந்தார் என்று நினைக்க்றேன்
தமிழில் மங்கம்மாலைப் பற்றிய நல்ல நாவல் நா.பார்த்தசாரதி எழுதிய ராணி மங்கம்மாள்

ஜெ

காவல் கோட்டம்:எஸ்.ராமகிருஷ்ணன் கடிதம்

காவல்கோட்டம்,எஸ்.ராமகிருஷ்ணன்

காவல் கோட்டம், கடிதங்கள்

வெங்கடேசன் விமரிசனக் கட்டுரை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20205126&edition_id=20020512&format=html

எஸ்.ராமகிருஷ்ணன் விமரிசனம்

http://www.sramakrishnan.com/deep_story.asp?id=231&page=

சு.வெங்கடேசன் பேட்டி
http://www.keetru.com/puthakam/may09/su_venkatesan.php

விமரிசனங்கள்
http://xn--clc0da2dh4e.com/literature/essays/manimaran.php

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=815:2009-10-17-03-07-06&catid=929:09&Itemid=173

http://www.keetru.com/literature/review/melanmai.php

http://tinypaste.com/a8b71

முந்தைய கட்டுரைகாவல்கோட்டம் 4
அடுத்த கட்டுரைஸெபாஸ்டின் கவிதைகள்