வரலாற்றை சாராம்சப்படுத்துதல்
‘ஒரு வரலாற்று நாவல் வரலாற்று வாதத்தை உருவாக்குகிறது, பின்னர் அந்த வரலாற்று வாதத்தை மீறிச் செல்கிறது’ என்று ஒரு விமரிசனக் கூற்று உண்டு. வரலாறு என்பது தன்னிச்சையான நிகழ்வுகளின் தொகை. தொடர் நிகழ்வுகள், உதிரி நிகழ்வுகள் என்று வரலாறு முழுக்க அர்த்தமற்ற நிகழ்வுகள்தான் பரவிக் கிடக்கின்றன. அவற்றைப் பார்க்கும் மானுடப் பிரக்ஞை அவற்றுக்கு இடையே ஒரு காரியகாரணத் தொடர்பினை உருவகித்துக் கொள்கிறது. அந்தத் தொடர்புக்கு வழிவகுக்கும் ஒரு மையத்தை உருவகித்துக் கொள்கிறது. பிறகு அந்த மையத்தை நிறுவக்கூடிய, அல்லது மறுக்கக்கூடிய புள்ளிகளை மட்டும் சார்ந்து அதன் வரலாற்றுப் பார்வை விரிவடைகிறது. அதுவே வரலாற்றுவாதம் [Historicism]
காலம் முழுக்க மனிதர்கள் உருவாக்கிய எல்லா வரலாறுகளும் வரலாற்றுவாதம் தான்… வரலாற்று வாதம் இல்லாமல் வரலாற்றெழுத்தே சாத்தியமில்லை. வரலாற்று வாதம் சார்ந்த எல்லா வரலாற்று எழுத்தையும் நிராகரிக்கும் நீட்சே வம்சாவளி வரலாறு மட்டுமே (Geneological History) உண்மையான வரலாறு என்கிறார். ஆனால் நடைமுறையில் வம்சாவளி வரலாறும்கூட ஒரு மையநோக்கின் விளைவே.
வரலாறு வரலாற்று வாதத்தை முன்வைக்கிறது என்றால் இலக்கியம் அதற்கு மாற்றான வரலாற்று வாதங்களை முன்வைக்கிறது. ஒரு சிறந்த வரலாற்று நாவல் ஏராளமான வரலாறுகளை உருவாக்கி வரலாற்றுக்கு முன்னால் வைத்துவிடுகிறது. ஒவ்வொன்றும் தனித்தர்க்கம் கொண்ட, தனி மையம் கொண்ட, வரலாற்று வாதங்கள். வரலாறு என்பது மாபெரும் ஒற்றைத் தர்க்கம் மட்டும் உடையதல்ல என்றும் பலவகையான தர்க்கங்களின் பெருந்தொகை அது என்றும் அது கூறமுற்படுகிறது.
ஆகவேதான் ஒரு சிறந்த வரலாற்று நாவலை நாம் வாசிக்கும்போது முதலில் சித்தரிப்பின் மூலம் உயிருடன் விவரித்துக் காட்டப்படும் ஒரு கோர்வையான வரலாறைப் பார்க்கிறோம். அதன் தர்க்க ஒழுங்கு நம்மை பிரமிக்கச் செய்கிறது. வரலாற்று மொழியில் உள்ள இடைவெளிகளையும் விடுதல்களையும்கூட தன்னுடைய கற்பனை மூலம் நிரப்பிக் கொள்கிறது. மையம் வலுவாகத் திரண்ட, கூறுகள் அதைச்சுற்றி திட்டவட்டமாகப் பின்னியமைந்த ஒரு வரலாற்று மொழிபை நாம் வரலாற்று நாவல்களில் பார்க்கிறோம். வரலாற்று நாவல் உருவாக்கும் வரலாற்று வாதம் இது.
ஆனால் மேலதிக வாசிப்பில் நாம் அந்த வரலாற்று வாதம் அந்நாவலின் மொழிபுக்குள் உள்ள துணை மொழிபுகளால் மறுக்கப்படுவதையும் காணலாம். நல்ல நாவல் அப்படி மேலும் மேலும் புதிய வரலாற்று வாதங்களை உருவாக்கிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை முன்வைக்கும். அதன் மூலம் ஏற்கனவே நாம் அறிந்த வரலாறு உருவாக்கிய வரலாற்று வாதத்தை மட்டுமல்லாது அந்நாவல் உருவாக்கிய வரலாற்றுவாதத்தையே அது மறுத்துவிடும்.
தல்ஸ்தோய் அவரது பேரிலக்கிய ஆக்கமான ‘போரும் அமைதியும்’ நாவலில் பிரம்மாண்டமானதும் ஒத்திசைவுள்ளதுமான ஒரு வரலாற்று வாததை கட்டமைத்துக் காட்டுகிறார். ஆனால் அந்நாவலின் துணை மொழிபுகள் அந்த வரலாற்று வாதத்திற்கு எதிரானவை. வரலாறு என்பது அந்த மக்கள் தொகையின் கூட்டான நனவிலியின் தன்னிச்சையான வெளிப்பாடு என்று தல்ஸ்தோய் பல அத்தியாங்களில் விரிவாக விளக்குகிறார். ஆனால் நாவலில் தனிமனித இச்சைகள் வரலாற்றைத் தீர்மானிப்பதில் வகிக்கும் பங்கு விவரிக்கப்படுகிறது. நில உடைமை என்ற புறவயமான விஷயம் வரலாற்றின் கதியைத் தீர்மானிப்பதும் விவரிக்கப்படுகிறது. ஏன் முற்றிலும் தற்செயலால் வரலாறு திசை திரும்புவதம் காட்டப்படுகிறது.
உதாரணமாக ஒரு திருப்புமுனைப் போரின் வெற்றியானது முழுக்க முழுக்க தற்செயலால் நிகழ்கிறது. போர்முனையில் ஒரு குறிப்பிட்ட பீரங்கிப்படைத் தலைவனுக்கு பின்வாங்குவதற்கான ஆணைச் சென்று சேரவில்லை. ஆகவே அவன் தொடர்ந்து கண்மூடித்தனமாகச் சுடுகிறான். அதன் விளைவாக ஏற்கனவே தோற்றுவிட்ட போர் வெற்றியாக மாறி வரலாறு அந்த வழி நோக்கி பெருக்கெடுக்கிறது. இதுவே நல்ல வரலாற்று நாவலின் குணம். அது தத்துவம்போல ஒரு வரலாற்று வாதத்தை முழு முற்றாக கட்டமைப்பதில்லை. வரலாற்று வாதங்களுக்கான முடிவில்லாத சாத்தியங்களைத் திறந்து காட்டுகிறது.
மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் சு.வெங்கடேசன். அந்த அரசியல் தரப்பை ஏற்று செயல்படுபவர். ஆனால் இந்நாவலில் மார்க்ஸிய அரசியல் நேரடியாகவே மறைமுகமாகவோ வெளிப்படவில்லை. அதனால் வழக்கமான முற்போக்கு வாசகர்களுக்கு இந்நாவலை உள்வாங்கிக் கொள்வது கடினமாகவும் இருக்கக்கூடும். அதேசமயம் மார்க்ஸிய மெய்யியலின் கருவிகள் இதன் வரலாற்றாய்வில் விரிவாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்க்ஸியக் கோட்பாட்டை வரலாற்று முரணியக்கப் பொருள்முதல்வாதம் என்று கூறுகிறார்கள். வரலாறு என்பது அதில் உள்ள பொருண்மைச் சக்திகளின் தொடர்ச்சியான முரணியக்கம் மூலம் முன்னகர்கிறது, அந்த முன்னகர்வு என்பது ஒரு வளர்சிதை மாற்றமே என்பதுதான் அதன் கூற்று. வெங்கடேசனின் காவல் கோட்டத்தில் அடிப்படையான வரலாற்றுவாதம் என்பது மார்க்ஸியம் முன்வைக்கும் இந்த மார்க்ஸிய வரலாற்றுவாதமேயாகும்.
எந்த ஒரு வரலாற்று நாவலிலும் காலம் மாறுவதை அது எப்படி உருவகிக்கிறது என்பதை ஒட்டியே அதன் வரலாற்றுத் தரிசனத்தை நாம் உருவகித்துக் கொள்ளமுடியும். சு.வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்குரிய வரலாற்றுத் தரிசனம் வெள்ளையரின் நவீன அரசுக்கும் பிறமலைக்கள்ளர்களின் பழங்குடி மரபுக்கும் இடையேயான போரை அவர் சித்தரிக்கும் விதத்தில்தான் சிறப்பாகக் காணக்கிடைக்கிறது. ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்நவாலில் மிக உத்வேகமான பகுதி என்பது இந்த இறுதிக்கட்டப் போர்தான். மிகவிரிவான தகவல்களுடன் செவ்வியல் யதார்த்தவாதத்திற்குரிய விரிவான காட்சிச் சித்தரிப்புடன் ஒரு ‘தல்ஸ்தோயிய யதார்த்தத்துடன்’ எழுதப்பட்டிருக்கும் இப்பகுதிதான் இந்நாவலின் மகுடம். தமிழ்ப் புனைவிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்று என்பதை எந்த வாசகரும் உணர்ந்து கொள்ள இயலும்.
இந்தப் பெரும் சமருக்கு முன்னோடியாக தாதுவருஷப் பஞ்சத்தின் விரிந்த சித்திரத்தை வெங்கடேசன் உருவாக்குவது மிகவும் கவனத்திற்குரியது. அந்த பஞ்சமேகூட வெள்ளையரின் நவீன ஆட்சியின் விளைவுதான் எனும்போது அதை முதல் போர் என்று கூறலாம் என்றே படுகிறது. காவல்கூலி பெற்று வாழும் மக்கள் விவசாயிகளின் உபரியில் வாழ்பவர்கள். மழை பொய்த்துப் போய் விவசாயிகள் அகதிகளாகும்போது அதற்குமுன்னரே இவர்கள் அகதிகளாகி விடுகிறார்கள். பஞ்சத்தைத் தாங்கும் அபாரமான திறன் கொண்டவர்கள் இவர்கள். எந்த ஒரு வேட்டை உயிரினத்தையும் உண்டு வாழ இவர்களால் முடியும். ஆயினும் பஞ்சத்தில் கூட்டம் கூட்டமாக சாக நேர்கிறது. இடம்பெயரவும் இறக்கவும் அடிமை வாழ்வுக்கு செல்லவும் நேர்கிறது.
தமிழிலக்கியத்தில் கூறப்பட்ட மிகச்சிறந்த பஞ்சச் சித்தரிப்பும் காவல் கோட்டத்தில்தான் உள்ளதுதான். மழை இல்லாமல் நீர்நிலைகள் வரள்கின்றன. கிராமங்களில் பட்டினி படர்கிறது. பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டுச் செல்லும் முத்தண்ணனும் மனைவியும் பஞ்சத்தின் பருவடிவங்களாக வரும் காட்டு நாய்களால் கடிபட்டு உண்ணப்படும் நிகழ்ச்சி ஒரு குறியீடு போல பஞ்சத்தின் பெரும் சித்தரிப்பை அளிக்கிறது. காடுகள் சடுகுக் குவியல்களாக மாறுகின்றன. ஊர்கள் கைவிடப்பட்டபோது சாமிகள் வெறும் கற்களாகின்றன. பஞ்சத்தை ஒரு தருணமாகப் பயன்படுத்தி மதமாற்றம் செய்யும் மிஷனரிகள் ஆன்ம அறுவடையில் ஈடுபடுகிறார்கள்.
தாதனூர்க்கள்ளர்கள் தங்களைத்தாங்களே அடிமைகளாக விற்றுக்கொள்கிறார்கள். வாழ்க்கையையே களியாட்டமாக ஆக்கிக்கொண்ட மக்கள் அவர்கள். எந்த அதிகாரத்துக்கும் அப்பாற்பட்டவர்கள். பகலை விலக்கி இரவில் வாழ்பவர்கள். ஆனால் பட்டினி காரணமாகஅடிமைவேலைக்காக மேற்குமலை ஏரி கேரளப்பகுதி தோட்டங்களுக்குச் செல்கிறார்கள். கொழும்புக்கும் மலாயாவுக்கும் செல்கிறார்கள். செல்லும் வழியெங்கும் செத்து செத்து உதிர்கிறார்கள். மரணம் எங்கும் நிறைந்து ததும்பி நின்றிருக்கிறது.
பஞ்சம் விலகும் சித்தரிப்பும் இந்நாவலில் ஒரு செவ்வியல் தன்மையுடன் அமைந்திருக்கிறது. மரணப் பெருவெளியில்கூட பிறப்பு விடாமல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கருவாசல் திறந்து குழந்தை பிறந்து வெளிவருகிறது. அதன் கைகள், முகம், கண்கள் அனைத்தையும் பார்த்து பஞ்சத்தில் இறந்த அதன் தகப்பனையும் மூதாதையரையும் எண்ணி அதன் அன்னை மார்பிலும் தலையிலும் அறைந்து கொண்டு கதறி அழுகிறாள். உறைந்துபோன கல்லாக இருந்த அவளுடைய மார்பில் பால் குடித்துவிட்டு மீண்டும் அழுகிறது அது. அடுத்த வரியில் ‘தாதுவருடத்தைத் தொடர்ந்து இரண்டாண்டுகள் நல்ல மழை பெய்து பூமியின் வெக்கை தணிந்தது’ என்று கூறும் நாவலின் நடை அற்புதமான, கவித்தவமான ஒரு தாவலை அங்கே நிகழ்த்துகிறது. காவல்கோட்டத்தின் அற்புதமான தருணங்களில் ஒன்று இது.
பஞ்சம் மூலம் புதிய வரலாறு உருவாகி வருகிறது. புதிய கதாநாயகர்கள், நாயகிகள். தாசி குஞ்சரம்மாள். நல்ல தங்காள். பஞ்சத்தை இருவகையில் எதிர்கொண்ட இரண்டு மானுடப் புள்ளிகள் அவர்கள். ஒன்று பொதுநல தியாகம், இன்னொன்று சுய அழிப்பு. தாசி குஞ்சரம்மாள் தன் சொத்துக்களை விற்று ஊருக்கு ஊட்டுகிறாள். கடைசி நகைவரை கொடுத்து மரணமடைகிறாள். அந்த தியாகத்தை கௌரவிக்க மதுரையே அவள் உடலை தொடர்ந்து சென்று கௌரவிக்கிறது. பஞ்சத்தின் வரண்டுபோகும் மானுட உறவுகளின் வெம்மை தாளாமல் இறந்த நல்லதங்காள் அத்தகைய நூற்றுக்கணக்கான பெண்களின் குறியீடு. அவர்களின் துயரத்தை அவள் காலத்தில் நிரந்தரமாக்குகிறாள்.
பஞ்சத்தில் நடந்த கொள்ளைகள் காரணமாக தாதனூரின் குடிகாவல் இன்னமும் முக்கியத்துவம் பெருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி உருவானபோதே குடிகாவலுக்கு எதிரான போர் ஆரம்பித்துவிட்டிருந்தது. ஆனால் அது நடைமுறையில் சாத்தியமாகவில்லை. மேல் மட்டத்திற்குத் தெரியாமல் கீழ்த்தளத்தில் குடிகாவல் இருந்து கொண்டுதான் இருந்தது. பஞ்சத்திற்குப் பிறகு மீண்டும் தாதனூர் தழைத்து மீண்டும் குடிகாவல் வேரூன்றியபிறகு வெள்ளையரின் ஆட்சி தாதனூருக்கு எதிரான போரை மீண்டும் ஆரம்பிக்கிறது. இந்தப் போரை பலமுனைகள் கொண்டதாகவும் பல தட்டுக்கள் கொண்டதாகவும் சித்தரிக்கிறார் வெங்கடேசன்.
வெள்ளையர் ஆட்சியை ஒட்டி, அதன் மூலம் உருவான பெரும் பஞ்சங்களை திறமையாகப் பயன்படுத்திக்கொண்டு மெல்ல மெல்ல உபஅதிகார வர்க்கங்கள் உருவாகி வருவதை நாவல் விரிவாகச் சித்தரிக்கிறது. அரசு அதிகாரத்தின் பகுதியாக ஆவதன்மூலம் உருவாகிவரும் பிரமாணர், வேளாளர் சமூகங்கள். வணிகம் மூலம் உருவாகிவரும் செட்டியார், நாடார் சமூகங்கள். இச்சமூகங்களை தன்னுடைய குடிபடைகளாக மாற்றிக் கொண்டு, இவர்களை வைத்துத்தான் ஆங்கில அரசு பிற மக்கள் மீதானப் போரைத் தொடுக்கிறது. சிவானந்த ஐயர் மதுரை சேர்மனாக வந்து தாதனூரின் அதிகாரத்தை இல்லாமலாக்க முயல்கிறார். பின்னர் சேர்மன் தில்லைவனம்பிள்ளை வருகிறார். சிவானந்த ஐயரால் முடியாத விஷயம் தில்லைவனம் பிள்ளையின் காலத்தில் கைகூடுகிறது.
இந்த மாற்றத்தை ஓர் ஒற்றைப்படையான மாற்றமாக சித்தரிப்பதில்லை இந்த நாவல். ஓரிரு அத்தியாயங்களில் கடந்துசெல்வதுமில்லை. இது ஒன்றுக்குள் ஒன்றாக நிகழும் நுட்பமான முரணியக்கமாக இருக்கிறது. சிவானந்த ஐயருக்கு பிறகு தில்லைவனம் பிள்ளை வருவது என்பதே ஒரு முரணியக்கம். புதிதாக உருவாகிவரும் நாடார்களின் வணிக ஆதிக்கத்துக்கு எதிராக சிவானந்த ஐயரின் தலைமையில் ஒரு போர் நடக்கிறது. அந்தப் போரில் செட்டியார்கள் ஐயருடன் நிற்கையில் சமணரான நேமிநாதன் செட்டியார் கள்ளர்களுக்கும் நாடார்களுக்கும் ஆதரவாக இருப்பது இந்தச் சமரின் உள்ளே உறையும் சமூகவியல் கணக்குகளைக் காட்டுகிறது.
கள்ளர்களுக்கு எதிராக கோனார்களின் புறக்கணிப்பு போராட்டமும் கலகமும் ஏற்படுவ¨வீந்நாவல் விவரிக்கிறது. அன்றுவரை கோனார்கள் அதை எண்ணிக்கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆங்கில ஆட்சியின் காவல்முறையே குடிகாவலை திருட்டு மட்டுமாக அவர்களின் கண்களுக்குக் காட்டுகிறது. ஏன், கள்ளர்களுக்குள்ளேயே இந்த முரண்பாட்டு இயக்கம் இருக்கிறது. செம்பூர்க்கள்ளர்கள் மதுரையைக் கொள்ளையிட வரும்போது தாதனூர் கள்ளர்கள்தான் எதிர்த்து நிற்கிறார்கள். செம்பூர்க்கள்ளர்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வேருடன் கெல்லி எறியும்போது தாதனூர் கள்ளர்கள் ஒதுங்கியே இருக்கிறார்கள்.
நவீனத்துவம் மதுரைச் சீமையை விழுங்குவதேகூட விசித்திரமான முரணியக்கம் மூலமே இந்நாவலில் விவரிக்கப்படுகிறது. ஏகாதிபத்தியத் தன்மை கொண்ட நவீனத்துவத்தின் பரவலை இத்தனை பிரம்மாண்டமான சித்திரத்துடன் எந்த ஒரு தமிழ் நாவலும் எழுதிக் காட்டவில்லை என்றே கூறவேண்டும். காப்டன் பென்னி குக் மதுரைக்கு பெரியாறு அணை நீரைக் கொண்டுவருகிறார். அதன்மூலம் குறுங்காடுகளாக வறண்டு கிடந்த நிலங்கள் முழுக்க வளம் பெறுகின்றன. எங்கே குற்றத்தொழில் மரபு கொண்ட மக்கள் இருக்கிறார்களோ அங்கேதான் தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. தண்ணீரும் ஓர் ஆயுதமாகிறது!
தாங்களும் தினம் அரிசிச் சோறு சாப்பிடுவோம் என்று நம்பியிராத அம்மக்களுக்கு அது பெரும் வரப்பிரசாதம். ஆனால் அது அவர்களை அன்னிய ஆட்சிக்கு கடன்பட்டவர்களாகவும் ஆக்குகிறது. அவர்களின் மரபான தன்னுரிமை முழுக்கவே இல்லாமலாகிறது. அதிகாரமில்லாதவர்களாக, வரிகட்டும் மக்கள் திரள் மட்டுமாக அவர்கள் மாறிவிடுகிறார்கள்.
அதேபோலத்தான் பென்னிங்டன் சாலையையும் கூறவேண்டும். அந்தச் சாலை தாதனூரை புற உலகுடன் இணைத்து அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறது. ஆனால் அது தாதனூரின் மீதான கொடிய அடக்குமுறையின் விளைவாகவே போடப்படுகிறது. அதன்வழியாக தாதனூர் மெல்ல மெல்ல வெள்ளையரின் அதிகாரத்திற்குள் மூழ்கி மறைகிறது. அது புற உலகின் தீண்டல் மட்டுமல்ல, அதிகாரத்தின் பிடியும்கூட! மதுரைக்கு வரும் ரயில்பாதைகளும் அவ்வண்ணமே. ரயிலில் சென்று தாதனூர் கள்ளர்கள் திருடிவருகிறார்கள். ஆனால் ரயில் வண்டிப்பாதைகளை இல்லாமலாக்குகிறது. ஆகவே குடிகாவல் தேவையில்லாமலாகிறது.
அணைக்கட்டு, சாலை ஆகியவற்றுக்கு இணையான ஒரு நவீன அடக்குமுறை ஆயுதத்தையும் இந்நாவல் விரிவாக பேசுகிறது – தகவல்! வெள்ளைய ஆட்சியாளர்கள் அவர்கள் ஆளும் நிலப்பகுதியைப் பற்றி துல்லியமான தகவல்களைத் திரட்டுகிறார்கள். இந்தத் தகவல்களை அவர்களின் அதிகாரத்தைக் கட்டமைக்கும் மிகப்பெரிய ஆற்றலாக மாறுகின்றன.
இந்தத் தகவல் சேகரிக்கப்படும் முறையும் மிகவும் கூர்ந்து கவனிக்கத்தக்கது. பிறமலைக் கள்ளர் சாதியைச் சேர்ந்த சாம்ராஜ்தான் அந்தத் தகவல்களைச் சேகரிப்பவன். ஜேசு சபையினரால் மதம் மாற்றப்பட்ட சாம்ராஜுக்கு அது அவனுடைய வேர்களைத் தேடி அறியும் முயற்சியே. அந்தத் தகவல்கள் தாதனூர்காரர்களால் அவனுக்கு மனமுவந்து அளிக்கப்படுகின்றன. ஜேசு சபையை தகவல்களுக்காக நாடிய ஏகாதிபத்தியம் அதை கடைசியாக அம்மக்களுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்கிறது. தகவல்கள் கிடைக்கும்போது மதுரை கலெக்டர் அடையும் குதூகலம் நாவலில் தெளிவாகவே பதிவாகியிருக்கிறது.
இவ்வாறாக காவல் கோட்டம் வரலாற்றின் பரிணாமத்தை மார்க்ஸிய வரலாற்றாய்வு உபகரணமாகிய முரணியக்க வரலாற்றுப் பொருள்முதல்வாத நோக்கிலேயே அணுகுகிறது. உற்பத்தி, வினியோகம் ஆகிய இரண்டு தளங்களையும் சார்ந்த உற்பத்தி உறவுகள் மட்டுமே வரலாற்றைத் தீர்மானிக்கின்றன. உற்பத்தி உறவுகளின் முரணியக்கமே அதன் இயங்குவிதியாக இருக்கிறது.
ஆனால் நம்முடைய சம்பிரதாயமான மார்க்ஸிய நோக்குள்ள நாவல்கள் இதை மிகமிக எளிமைப்படுத்தி விட்டிருக்கும். ‘சுரண்டல் சக்தி – சுரண்டப்படும் மக்கள்’ என்று ஒரு நிரந்தரமான இருமையை உருவாக்கிக் கொண்டு அவற்றின் முரணியக்கத்தை மட்டுமே அவை சித்தரிக்கும். காவல் கோட்டத்தில் அத்தகயை முடிவிலாத முரணியக்கங்கள் பல உள்ளன. அந்த முரணியக்கங்களின் ஒட்டுமொத்தமாகவே வரலாறு முன்னகர்வதாகக் காட்டுகிறது இந்நாவல். கோட்பாட்டில் இருந்து படைப்பூக்கத்தை நோக்கி ஒரு படைப்பு நகரும்போது சாத்தியமாகும் விரிவு இது.
ஒற்றைப் படைத்தன்மையை விலக்குவது என்பதைத்தான் உண்மையான படைப்பிலக்கியம் தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கும். வாழ்க்கையைப் பற்றி முற்று முடிவாக எதையும் கூறிவிடமுடியாது என்பதே எந்த ஒரு நாவலுக்கும் உரிய அடிப்படைக் கோட்பாடாக இருக்க முடியும். ஆகவே எதற்குமே மறுபக்கம் இருக்கும், எந்த உண்மையும் மறுக்கப்படும், எந்த விஷயமும் மறிகடக்கப்படும் என்பதையே அது சொல்லிக் கொண்டிருக்கும்.
உதாரணமாக காவல் கோட்டத்தில் தாதனூர் கள்ளர்கள் இருளுக்குள் நீந்தும் பெரும் கள்ளர்களாகக் காட்டப்படுகிறார்கள். வெறுமே ஒருவரைப் பார்த்து பேசிவிட்டு திரும்பும்போது எறும்புகள் முன்வாசல் வழியாக உள்ளே நுழைவதை பார்த்து வீட்டுச்சுவர் மிக வலுவானது என்று கண்டுகொள்ளக்கூடியவர்கள். மீண்டும், மீண்டும் தாதனூர்க்காரர்களின் திருட்டுத்திறன் பேசப்பட்ட நாவலில் காது வடித்து தண்டட்டி போட்டு விடுவதற்காக வரும் ஒரு குறவன் தாதனூரிலேயே தங்கி பக்கத்து ஊரில் முழுக்க திருடிவிட்டு தாதனூரின் ஒரே செல்லமாகிய உலக்கைகளின் பித்தளைப் பூண்களையும் திருடிவிட்டுச் செல்வதை காட்டும் இடம் ஒன்று வருகிறது.
மிகவும் முக்கியமான ஒரு சந்தர்ப்பம் இது. தகவலமைப்பையே இயங்குவிதியாகக் கொண்ட ஒரு சமூகத்தில் அதற்கான திறன்களில் ஒவ்வொரு சமூகமும் இன்னொன்றை வெற்றி கொள்வதை இது காட்டுகிறது. அத்துடன் நுண்ணிய ஓர் சமூகவியல்தகவல் இங்கே உள்ளது. ஐம்பதுகளில்கூட குறவர்கள்தான் காதுகுத்திக்கொண்டிருந்தார்கள். அது ஒரு தந்திரம், காதுகுத்துபவர்களிடம் பொன் இருக்கும் என்ற கணக்கு. அவர்களில் பலர் கள்ளர்கள். தென்னகம் முழுக்க காதுக்குத்துதல் என்பதை ஏமாற்றுதல் என்ற பொருளில் பயன்படுத்துவதற்கான காரணம் இதுவே.
படிப்படியாக தாதனூர் கள்ளர்கள் அழிவதன் சித்திரத்தை விரிவான ஒரு காவியத்தன்மையுடன் சித்தரித்து முடிக்கிறது இந்நாவல். காவல்கூலி வாங்கும் சமூகமாக இருக்கிறார்கள் தாதனூர் கள்ளர்கள். காவல் தடைசெய்யப்படும்போது திருட்டுக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆகவே திருட்டுக்கு துப்புகூலி வாங்குபவர்களாக மாறுகிறார்கள். காவலர்கள் சில நாட்களில் திருடர்களாக உருமாறுகிறார்கள். அதன்பின் அவர்கள் மீது பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறைத்தளை இறுகி இறுகி வருகிறது. அதன் உச்சகட்டமே அவர்களை பிறவிக் குற்றவாளிகளாக அறிவித்து ‘ரேகை பிடித்தல்’
குற்றபரம்பரைச் சட்டம் எனப்படும் [Criminal Tribes Act (CTA) 1871] சட்டம் இந்தியாவின் பலபகுதிகளில் திருட்டை ஒரு வாழ்க்கைமுறையாகக் கொண்டு வாழ்ந்த மக்களுக்கு எதிராக பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிய சட்டம். 1876 ல் இது வங்காள பழங்குடியினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. 1911ல் இதன் இறுதி வடிவம் உருவாக்கப்பட்டது. அப்போதுதான் அது சென்னை ராஜதானிக்கு கொண்டுவரப்பட்டது. ஆரம்பத்தில் ஆந்திரம், தமிழகம், மலபார் உட்பட்ட பகுதிகளில் வாழ்ந்த ஒன்பது பழங்குடி இனங்களுக்கு எதிராகவே அது பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1924ல் தான் அது கள்ளர்களுக்கு எதிராகத் திரும்பியது.
காவல்கோட்டம் நாவலின் கரு அதிகாரத்துக்கும் மக்களுக்குமான, எழுதப்பட்ட வரலாற்றுக்கும் எழுதப்படாத வரலாற்றுக்குமான முரணியக்கம்தான். அதன் ஒருபகுதியாகவே இந்நாவல் குற்றபரம்பரைச் சட்டம் நோக்கிச் செல்கிறது. மிக விரிவான அஸ்திவாரம் அமைத்து இந்த உச்சி நோக்கிச் செல்கிறது ‘காவல்கோட்டம்’. முன்னர் சாம்ராஜ் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் கலெக்டரை ஏன் மகிழ்ச்சியடையச்செய்கின்றன என்பது இப்போதுதான் நமக்குப் புரிகிறது. அந்தத் தகவல்கள்தான் கள்ளர்களை எளிதாக பிறவிக்குற்றவாளிகள் என்ற முத்திரைகுத்த உதவுகின்றன.
இங்கே ஒரு விஷயம் வாசகர் கவனத்துக்கு வரவேண்டும். இந்நாவலைப் பற்றிய மேலோட்டமான சில விமரிசனங்களில் கள்ளர்கள் வாழ்க்கையின் நெருக்கடிகளால் கள்ளர்களாக ஆனவர்கள் என்றும், அந்த அவலத்தை இந்நாவல் பதிவுசெய்யாமல் களவைக் கொண்டாடுகிறது என்றும் எழுதப்பட்டிருந்தது. இன்று ஒருவர் கள்வனாக ஆவதை எப்படிப் புரிந்துகொள்கிறோமோ அதையே அப்படியே வரலாற்றுக்கும் போட்டுப்பார்ப்பது அது. முதிர்ச்சியில்லாத இத்தகைய மனிதாபிமானப்பார்வைகள் வரலாற்றை புரிந்துகொள்ள உதவாது.
இந்தியாவின் திருட்டுத்தொழில் செய்த சமூகங்கள் அதற்கு எதிரான ஒழுக்க நெறியை கொண்டவர்களாக இருந்தும் அந்த வாழ்க்கை நோக்கி தள்ளப்பட்டவர்கள் அல்ல என்பதே உண்மை. மொத்தச் சமூகத்துக்கும் உரிய பொது ஒழுக்க நெறிகள் சென்ற காலங்களில் இல்லை. சமணம் முதலிய பெருமதங்களால் மெல்லமெல்லத்தான் அவை உருவாக்கப்பட்டன. நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அப்போதுகூட விடுபட்ட சமூகங்கள் ஏராளமாக இருந்தன. அவர்களின் ஒழுக்க நெறி அவர்களுக்குரியதாக மட்டுமே இருந்தது. அதன் விதிகள் பிற சமூகங்களுக்கு அநீதியாகவோ ஒழுக்கமின்மையாகவோ தோன்றும். பாலைநிலத்தில் கள்ளர்கள் களவையே தங்கள் அறமாகக் கோண்டுவாழ்வதன் சித்திரத்தை நாம் சங்ககாலம் முதலே விரிவாகப் பார்க்கிறோம்.
காவல் கோட்டம் தாதனூர் கள்ளர்களின் திருட்டையும் மன்னர்களின் படையெடுப்பையும் மீண்டும் மீண்டும் ஒப்பிட்டபடியே வருவதைக் காணலாம். மன்னர்களை யாரும் படையெடுப்பு என்ற ‘அவல’த்துக்கு தள்ளிவிடவில்லை. அவர்களின் வெற்றியும் செல்வமும் அதில்தான் உள்ளது. அதேபோன்றுதான் தாதனூருக்கு திருட்டு. நாவல் ஆரம்பிக்கும்போதே தாதனூர் கள்ளர்கள்தான் மதுரைக்கிராமங்களை காவல்காக்கிறார்கள். அவர்களில் ஒருவனை படையெடுத்துவரும் மாலிக் கா·பூரின் படை கொல்லும்போதுதான் நாவலே ஆரம்பிக்கிறது. திருட்டு அவர்களின் வல்மை, காவல் அவர்கள் அவ்வலிமையை வைத்து பேரம்பேசி அடையும் உரிமை. அந்த உரிமையைத்தான் திருமலைநாயக்கர் மீண்டும் கொடுக்கிறார்.
வெள்ளையர் உருவாக்கிய பொதுவான குற்றநடைமுறைச் சட்டம் சட்டென்று அத்தனை மக்களையும் பொதுவான ஒரு ஒழுக்க நெறிக்குள் கொண்டுவந்துவிடுகிறது. அதன் விளைவாகவே சட்டென்று திருட்டு ஓர் இழிந்த குற்றமாக ஆகிவிடுகிறது. இந்த நுண்ணிய மாற்றம் மூலம் தாதனூர் கள்ளர்கள் அத்தனை சமூகத்தினருக்கும் எதிரிகளாக ஆகிவிடுகிறார்கள். ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்து அவர்களை ஒடுக்கும் மனநிலை உருவாகி விடுகிறது. நேற்றுவரை வரை அவர்களின் திருட்டை சமூகத்தில் உள்ள பல்வேறு அதிகாரக்கூறுகளில் ஒன்றாகப் பார்த்த மக்கள் அதை இழிவாக எண்ண ஆரம்பித்துவிடுகிறார்கள். இதைத்தான் காவல்கோட்டம் அவலமாக சித்தரிக்கிறது.
அந்த அவமானத்திற்கு எதிராக தாதனூர் தன்னுடைய கடைசி உயிர்த்துடிப்பு வரை போராடும் சித்திரம் இந்நாவலை ஒரு பெரும் அவலப் படைப்பாக ஆக்கிவிடுகிறது. தமிழ் வரலாற்றின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்று இது. ஒரு சமூகத்தையே குற்றவாளிகளாக ஆக்குதல். அந்த மைய அரசின் ஆதிக்கமும் அதற்கெதிரான மக்கள்ப்போராட்டமும் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான வரலாற்று அத்தியாமாக இருந்தபோதிலும்கூட மிகக் குறைவாகவே அதைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவலில் வேம்பர்கள் என்றபேரில் கள்ளர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். நாவலின் மையச்சரடுடன் ஒட்டாத மிகமேலோட்டமான ஓர் உதிரிச் சித்திரம் ரேகைபிடித்தலைப்பற்றிஆதில் அளிக்கப்படுகிறது. வேல ராமமூர்த்தி சில குறிப்பிடத்தக்க கதைகளை எழுதியிருக்கிறார். தினகரன் ஜெய் இயக்கிய ரேகை என்ற ஆவணப்படம் ஓரளவு தகவல்களை அளிக்கிறது.
தமிழில் இந்த வரலாற்று நிகழ்வு மனிதாபிமான எளிமைப்படுத்தல்கள், உணர்ச்சிகரமாக்கல்கள் ஏதுமின்றி மிக விரிவாக முன்வைக்கப்பட்டிருப்பது இந்நாவல்வழியாகவே. வரலாற்றை ஆராய்வதற்கான ஆகச்சிறந்த கருத்தியல் கருவியான வரலாற்று முரணியக்கப் பொருள்முதல்வாத அணுகுமுறையுடன் முன்வைக்கப்பட்டிருப்பதனாலேயே இது ஓர் செவ்வியல் வீச்சுடன் உள்ளது. தாதனூர்க் கள்ளர்கள் அவர்களுக்கு இடமில்லாத ஒரு காலகட்டத்தின் மாபெரும் சக்கரங்களுக்கு கீழே நசுங்கியழிகிறார்கள்.
இந்தச் சரிவின் மிகச்சிறந்த சித்திரம் விட்டி பெரியாம்பிளையின் கதை. குஸ்திமிராசு வீட்டுக்குத் திருடப் போனவரை அடிமுறை நிபுணரான குஸ்திமிராசு பின்னால் வந்து பிடிக்க முயல்கிறார். ஆனால் பிடிக்க முடியவில்லை. அவரது மொத்த பலமும் விட்டி பெரியாம்பிளையை ஒன்றும் செய்யவில்லை. அந்த வீரத்தில் மயங்கிய குஸ்திமிராசு அவருக்கு கோயில் விழாவில் பரிவட்டம் கட்டி விட்டு மரியாதை செய்ய முன்வருகிறார். அத்தகைய கௌரவம் கொண்ட குடும்பத்தில் கடைசி வாரிசும் கொலைக் குற்றத்துக்காக தூக்கிலே தொங்க மரியாதை பாரம்பரியம் அறுந்து இல்லாமலாகிறது. படிப்படியான அந்தச் சரிவை பல உபகதைகள், நிகழ்ச்சிகள் மூலம் விரித்து விரித்துச் சொல்லிக் கொண்டு செல்கிறது நாவல்.
ஆயிரம் பக்கம் கொண்ட இந்த நாவலின் உச்சம் என்பது ரேகை பிடித்தல் என்ற பிரிட்டிஷ் அடக்குமுறையின் சரிதம்தான். கொடூரமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக கள்ளர்கள் அவர்களின் கடைசித்துளி உக்கிரத்துடனும் போராடுகிறார்கள். தாதனூரை மீண்டும் மீண்டும் சுற்றி வளைத்து தாக்குகிறது வெள்ளையர் படை. ஆனால் மலை ஏறிச்சென்று தப்பும் கள்ளர்களைப் பிடிக்கமுடியாமல் கடைசியில் தனித்தனியாக வளைத்து பொய்க்குற்றங்கள் சாட்டி தூக்கிலேற்றுகிறார்கள், தீவாந்தரச் சிறைக்கு அனுப்புகிறார்கள். அடக்குமுறைக்கு எதிராக பெண்களும் உக்கிரமாகப் போராடுவதை விரிவாகச் சித்தரிக்கிறார் வெங்கடேசன்
ஆனால் நவீனத்துவத்தை பழங்குடிக்காலகட்டம் வெல்வது சாத்தியமே அல்ல. படிப்படியாக மொத்த பிறமலைக் கள்ளர் சாதியும் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டுவிடுகிறது. அவர்கள் தங்கள் கைரேகைகளை தாங்களே ஒட்டிக் கொடுத்து போலீஸ் நிலையங்களில் இரவு தூங்க வேண்டியவர்களாக ஆகிறார்கள். மானமும் தொழிலும் இழந்து திறந்தவெளி கைதிகளாக ஆகிறார்கள்.
இந்த பரிபூரணமான ஒடுக்குமுறையைச் சாத்தியமாக்கியது அந்த மக்களிடமிருந்தே திரட்டப்பட்ட அவர்களைப் பற்றிய தகவல்கள்தான். அதைத் திரட்டிக் கொடுத்த ஜேசு சவை பாதிரியரான சாம்ராஜ் அவர்களை அந்த அழிவிலிருந்து மீட்க பலவகையிலும் முயல்கிறார். அவர்களை பிரித்து பிரித்து பல இடங்களில் குடியேறச் செய்கிறார். புதிய காலகட்டத்தைச் சமாளிப்பதற்கு அவர்களை தயாரிக்க முடிவு செய்து உழைக்கிறார். ஆனால் எதுவும் பெரிய பலன் அளிப்பதில்லை. சரிவு தொடங்கி விட்டது. அடுத்த காலகட்டம், ஜனநாயகத்தின் காலகட்டம், அவர்கள் தங்கள் மீட்புக்கான வழியைத் திறப்பதற்கான காலகட்டம் வந்து வாசலில் நிற்கும் போது நாவல் முடிவடைகிறது.
இங்கே ஒரு ஆர்வமூட்டும் விஷயம் உண்டு. கள்ளர் மறவர் அகமுடையார் என்னும் மூன்று சாதியினரையும் குற்றபரம்ச் சட்டத்துக்குள் கொண்டுவந்தது பிரிட்டிஷ் அரசு. அதற்கு எதிரான போராட்டம் அவர்களை இணைத்து ஒரேசாதிபோல ஆக்கியது. முக்குலத்தோர் என்ற அடையாளம் அவ்வாறு உருவானதே. அந்த இணைப்பே அவர்களின் அரசியலதிகாரத்துக்கு காரணமாக ஆயிற்று. அவர்கள் சேர்ந்து போராடி அச்சட்டத்தை வென்றார்கள்.
அந்த கூட்டு அடையாளம் அவர்களுக்கு ஜனநாயகத்தில் மேலாதிக்கத்தைய அளித்தது. அந்த ஜனநாயக உரிமையை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் புதிய காலகட்டத்தை நோக்கி வந்தார்க்ள. இந்திய விடுதலைப் போரில் அவர்கள் பங்கு பெற்றார்கள். சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அமைப்பில் அவர்களின் ஒன்று திரண்ட சக்தி ஒரு சமூக வல்லமையாக அவர்களை மாற்றியது.
மதுரையை குமார கம்பணன் கைப்பற்றும்போது ஆரம்பிக்கும் ஒரு மாபெரும் வரலாற்றுச் சித்திரம் மதுரை ஜனநாயகத்தின் வாசலுக்கு வந்து நிற்கும்போது நிறைவு பெறுகிறது. வழக்கமான செவ்வியல் நாவல்கள் முடிவதில்லை. சென்றுகொண்டெ இருக்கும் நிலையில் அவற்றின் சித்தரிப்பு நின்றுவிடும். வெங்கடேசனின் மார்க்ஸிய அணுகுமுறைக்கும் அது உகந்ததாக உள்ளது. பழங்குடிக்காலத்தில் தொடங்கி நிலப்பிரபுத்துவ காலம் வழியாக வந்த கள்ளர்களின் வரலாறு ஜனநாயக யுகத்தில் முட்டி நிற்கும்போது நாவல் முடிகிறது. பெருங்காமநல்லூர் துப்பாக்குச்சூட்டை இந்நாவலின் முடிவுப்புள்ளி எனலாம். தங்கள் மீதான ஒடுக்குமுறையில் இருந்து கள்ளர்கள் விடுதலைபெறும் சித்திரத்துக்குப் பதிலாக போராடும் இடத்திலேயே நாவல் முடிந்துவிடுகிறது.
கதைகளும் முகங்களுமாக பெருகிப் பெருகி செல்லும் இந்த சித்தரிப்புப் பெருவெள்ளத்தில் விசுவநாத நாயக்கருக்கும் கிருஷ்ண தேவராயருக்கும் நிகரான கம்பீரத்துடன் மாயாண்டிப் பெரியாம்பிளையும் விருமாண்டியும் நிற்கிறார்கள் என்பதே இந்நாவலின் ஒட்டுமொத்தமான பங்களிப்பு என்று கூறலாம்.