பின்தொடரும் நிழலின் குரல்களைப்பற்றி…

அன்பின் ஜெ ,
நலமா? பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். நாவலை முழுமூச்சில் வாசிக்க முடிந்தது வீரபத்திர பிள்ளையின் கடிதத் தொகுப்புகள் பகுதி வரை. அந்தப் பகுதியை வாசிக்கும்போது நான் அடைந்த சோர்வு வார்த்தைகளில் கூறக்கூடியதல்ல. நேற்று நானும் எவ்வளவோ முயன்றும்,நூலை நெருங்க முடியவில்லை.

அருணாசலத்தின் கட்சி விசாரணையின்போது விரியும் வீரபத்திர பிள்ளையின் சொற்கள் இந்நாவலின் உச்சம். எனக்கு சித்தாந்த அறிமுகமேதும் இல்லை. மார்க்சியத்தின் மீது முன்முடிவுகளேதும் எனக்கு இல்லை. நாவலை வாசிக்கும் முன்பு என் முன் நின்ற சொற்கள் “இந்த நாவலை தாங்கள் எழுதியிருக்கக் கூடாது” என்ற மறைந்த மார்க்சிய அறிஞர் திரு.சோதிபிரகாசம் அவர்களுடையது. ஆனால் நாவலுக்கான மார்க்சிய தரப்பு எதிர்வினை வலுவாக பதிவு செய்யப்படாது போனது ஏமாற்றமே. ஆனால் நாவல் இரண்டு தரப்புகளையும் விரிவாகவே விவாதிக்கிறது.

அருணாசலம் தீவிர மன உளைச்சலில் இருக்கும் பகுதியில்,ஒரு இடம் —

முள் அவன் தலைக்குள் மூளையை வருடிச் செல்வதாக பட்டது. பல இடங்களின் மூளை வெறும் சுண்ணாம்புப் பரப்பாக இருந்தது. சில சதைத் துளிகளில் மட்டும் ஒளி இருந்தது. கூச வைக்கும் ஒளியுடம் மூளையைக் குடைந்து சென்றது. எந்தகணமும் ஒரு ஒலி வெடித்து காதை அறையக் கூடும்.

– இந்நாவலின் இந்த ஒரு பத்தி போதும் முழு நாவலின் தரத்தைக் கூற. மீண்டும் மீண்டும் நான் உணர்வது புனைவுகளில் தங்களது அளவிற்கு என்னை நிறைவடையச் செய்யும் நாவலை நான் இன்னும் (என்னுடையது மிக மிகக் குறைந்த பரப்பிலான வாசிப்பு என்ற போதிலும்) வாசிக்கவில்லை.

இந்த இரு மாதத்தில் வெள்ளை யானை தவிர நாஞ்சில் அவர்களின் மூன்று நாவல்களை வாசித்து முடித்தேன். நாஞ்சிலை நேரில் சந்திக்கவும் விரும்பி அவரது சிங்கநல்லூர் வீட்டில் சென்று உரையாடி வந்தேன். நிறைவாக இருக்கிறது. சினிமாவும் தொலைக்காட்சியும் பீடித்திருந்த என்னை இன்று இலக்கியத்தில் முழுமையாக ஆற்றுப் படுத்தியது தங்கள் படைப்புகள் என்பதை நன்றி உணர்வுடன் நினைவு கூறுகிறேன்.

மற்றபடி வெண்முரசு தவறாமல் வாசித்து வருகிறேன். வெறும் கதைக்காக மட்டுமே வாசிக்கக் கூடிய படைப்பல்லவென்பது முதலிரு அத்தியாயமே சொல்லி விட்டது.

நன்றிகளுடன்,

பிரகாஷ் ,
கோவை.

அன்புள்ள பிரகாஷ்,

அரசியலில் வெளிப்படும் அறம் பற்றிய உள்ளார்ந்த அக்கறையும் தேடலும் கொண்டவர்க்ளுக்குரிய நாவல் பின் தொடரும் நிழலின் குரல். அதன் ஆழமான பதற்றம் ஒரு குறிப்பிட்ட அரசியலைச் சார்ந்தது அல்ல. எப்போதுமிருக்கும் அதிகார அரசியலைச் சார்ந்தது. இப்போது மகாபாரதத்தை எழுதிக்கொண்டிருக்கையில் அதை மிகவும் அந்தரங்கமாகவே உணர்கிறேன். அன்றும் இன்றும் உள்ள பிரச்சினைதான் அது.

அந்த எப்போதைக்குமான சிக்கலை அந்நாவலில் உணராதவர்களே அதை மார்க்ஸிய அரசியல் மீதான விமர்சனம் மட்டுமே என் வாசித்தனர். அக்காலகட்டமும் அத்தகையது. சோவியத் அரசின் வீழ்ச்சி உணர்ச்சிகரமாக அனைவரையும் பாதித்திருந்த காலகட்டத்தில் அந்நாவல் வந்தது. இப்போது அதெல்லாமே வரலாறாக ஆகிவிட்டன. இன்று அதன் சமகால அரசியலைத் தாண்டி அதன் ஆன்மீகத்தையும் தத்துவத்தையும் எளிதில் அணுகமுடியும் என நினைக்கிறேன்’

அத்துடன் அதில் தனிமனிதனின் வீழ்ச்சி ஒன்றுள்ளது. எழுச்சியும். தன் வேகத்தை வெளியே இருந்து பெற்றுக்கொண்டவன் அதை வெளியுலகில் இழந்ததும் நொறுங்கிப்போகிறான். பின் தனக்குள்ளேயே கண்டுகொண்டு மீண்டு வருகிறான். அதுதான் உயிர்த்தெழுதல்.

அந்த வாசிப்புகொண்டவர்கள் இன்னும் நெடுந்தொலைவுக்கு அந்நாவல் வழியாகச் செல்லமுடியும். சென்றிருக்கிறீர்கள். நன்றி.

ஜெ

அன்பின் ஜெ,
நாவலை முடித்துவிட்டு எழுதுகிறேன். ஒரு சோர்வும், நிம்மதிப் பெருமூச்சும் ஒரே சமயம் எழுகிறது. பெரும் படைப்புகளை வாசிக்கும்போது இது தவிர்க்க முடியாதது என்று படுகிறது. தங்கள் பதில் கண்டவுடன் ஒரு சுமை விலகியது போல் உணர்ந்து, மீண்டும் வாசிக்கத் துவங்கினேன். என் வாசிப்பின் போதாமையை பல இடங்கள் சுட்டிச் சென்றது. குறிப்பாக ஜோணி, இராமசாமி இடையேயான உரையாடல்கள். மேலும் டால்ஸ்டாய், தஸ்தயெவஸ்கி படைப்புகளின் அறிமுகமில்லாமையும். ருஷ்ய பேரிலக்கியங்களையும், சித்தாந்தங்களையும், கிறிஸ்துவ மெய்யியலையும் வாசித்த பிறகே இதன் உள்விரிவுகளை மேலும் அள்ள முடியும் என்று எண்ணுகிறேன். அந்த அபத்த நாடகத்திற்கு முன்பான அத்தியாயத்தில் அருணா, நாகம் இடையேயான உரையாடலில் நாகம்மையின் தெளிவு! அந்த அத்தியாயமே ஒரு ஆழ்ந்த பெருமூச்சாக, பெருமழை ஓய்ந்த வனமாக. அபத்த நாடகத்தில் வரும் அங்கதங்கள்! ஆனால் ஓயாது மேலிருந்து வரும் “எப்படா இந்த நாடகம் முடியும் என்ற குரல்” யாருடையதாக இருக்கமுடியும். லட்சியவாத, சித்தாந்தங்களின் சுமையில்லாத சாதாரண லௌகீகனுடயதாக?..வரலாற்றில் இப்படி எத்தனை புகாரின், வீரபத்திர பிள்ளை, அருணாசலம்கள். நாவலில் லட்சியவாதத்தின் எதிர்தரப்புவாதம் வலுப்பெற்று முடியும் ஒவ்வொரு தருணத்திலும் இயல்பாகவே மனம் காந்தியை ஒட்டியே சிந்திக்கச் செல்கிறது.

ஒரு நாவலுக்குள் வாழும் அனுபவம் முற்றிலும் மகத்தானதென்பதை மீண்டும் ஒரு முறை உணர்கிறேன்.

நன்றிகளுடன்

பிரகாஷ்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 14
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 15