கடலோர மரம்- கடிதங்கள்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். செல்வத்தின் அம்மாவைப் போல ஆயிரக்கணக்கான அம்மாக்கள் அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் என ஆயுள்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்வம் அவர்கள் தனது அம்மாவை அன்பினால் அழைத்துச் சென்றிருக்கிறார். இன்னுமொரு வகையும் இருக்கிறது. அவர்களை IAS (Indian Aya Service- இண்டியன் ஆயா சர்வீஸ்) எனக் குறிப்பிடுகின்றனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கப் பெற்றதும் எப்பாடுபட்டாவது குடியுரிமை வாங்கித் திருமணம் செய்து குழந்தை பிறந்ததும், முதல் வேலை வீட்டுப் பணிப்பெண் தேடுவது. வீட்டுப் பணிப்பெண்ணின் விசா செலவுகள் சம்பளம் நம்பகத்தன்மை அனைத்தையும் விட ஓசியில் கிடைக்கும் முதியோர் (அம்மா அல்லது மனைவியின் தாயார்) மீது கவனம் குவியும். நைச்சியமாகப் பேசி இந்தியாவிலிருந்து அவர்களை அழைத்து வந்துவிடுவர். பெரும்பாலும் மனைவியின் அம்மாதான் இலக்கு. அவர்களும் பேரனையோ அல்லது பேத்தியையோ பார்க்கப் போகிறோம் என்ற சந்தோஷம் முதல் விமானப் பயண எதிர்பார்ப்பு மற்றும் அண்டை சகவாசிகளிடம் காட்டிக் கொள்ளும் பெருமிதம் ஆகியவற்றோடு வெளிநாடுகளுக்கு வருகின்றனர்.

இங்கு வந்து சமையல் வேலை, துணிகளை சலவை செய்வது, வீட்டினைச் சுத்தப்படுத்துவது மற்றும் பேரனைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு. காலையில் மகளும் மருமகனும் அலுவலகம் சென்றபின் நீண்ட பகல் பொழுதில் தனிமை.. தனிமை… அனாதையாய் அப்பார்ட்மெண்டின் கீழே அமர்ந்திருப்பர். கண்களில் சோகம் கசிந்து கொண்டேயிருக்கும். பேரனோ, பேத்தியோ 90 விழுக்காடு ஆங்கிலம் 10 விழுக்காடு தமிழ் பேசுவர். பாட்டியின் நிலமை மிகவும் பரிதாபமாக இருக்கும். பகல் முழுவதும் குழந்தை தொலைக்காட்சியில் கார்டூன் பார்த்துக் கொண்டிருக்கும். புரியாமல் பாட்டியும் அதையே பார்த்துக் கொண்டிப்பார். பேசுவதற்கு ஆளே இல்லாத பரிதாபம். அலுவலக இடைவேளையில் மகளிடமிருந்து ஒரு நிமிட போன் மகன் அல்லது மகள் சாப்பிட்டார்களா என?

ஒரு வாரத்திலேயே இவர்கள் தங்கள் ஆயுள் தண்டனையை உணர ஆரம்பித்துவிடுவார்கள். பேரக்குழந்தைகள் தங்களின் பாட்டியை மரியாதைக் குறைவாய் நடத்துவதையும் எனது 10 வருட அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். எண்ணம் முழுவதும் பிறந்த ஊரின் நினைவுகள், மகளின் மீதான பாசத்தால் வெளி நாட்டில் மாட்டிக் கொண்ட அவலம் என இரட்டை வாழ்க்கை வாழ்கின்றனர். இந்தியாவிற்குத் திரும்பிச் செல்லலாம் என இவர்கள் பேச்சை எடுக்கவே முடியாது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானதும் இவர்கள் விரும்பினாலும் வெளி நாட்டில் இருக்க முடியாது. ஏனெனில் இவர்களின் தேவை அப்போது தேவையில்லை. கண்டிப்பாக திருப்பி அனுப்பப்படுவர். இவர்கள் சம்பளமில்லாத ஆயாக்கள் :( வார இறுதி கோவிலும், மெக் டொனால்ட், கே.எஃப். ஸி யும் கண்டிப்பாய் இவர்களுக்கு மகிழ்வைத் தராது. இறுதிக் காலத்தில் பகடைக்காயாய் மாட்டி அல்லறுகின்றனர். :(

Cheers,
பாலா

அன்புள்ள ஜெ

இது மிகவும் உண்மை, செல்வம் நல்ல காரியம் செய்தார்.

இங்கே இதை நிறைய பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.

எங்களுக்கும் இது நேரப் போகிறது.

முதுமையில் தனிமை கொடிது. அதிலும் அகதிகளாக தனிமைப் பட்டு வாழ்வது மிக மிக வலி கொண்டது.

யாதும் ஊரே யாவரும் கேளீர். நடைமுறையில் சாத்தியமா?

கேள்விக் குறிதான்!!

மாலா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50
அடுத்த கட்டுரைமுதற்கனல் நிறைவு