«

»


Print this Post

சட்டநாதக் கரையாளர்


‘1936 ஆம் வருடம், நவம்பர் மாதம் ஒருநாள் பகல் பன்னிரண்டுமணி.

 

”உங்களுக்கு வயதென்ன?”

 

”இருபத்தாறு”

 

”ஜெயிலுக்குப் போவீர்களா?”

 

”போவேன்”

 

”கல்யாணம் ஆகிவிட்டதா?”

 

”இல்லை”

 

”ஆனால்?”

 

”ஆனாலும் போவேன்”

 

இக்கேள்விகள் திருச்சினாப்பள்ளி சிறையில் இப்போது [1941 ஆம் வருஷம்] நம்பர் 1 கைதியாக இருக்கும் ஸ்ரீ.ராஜகோபாலாச்சாரியாரால் என்னிடம் கேட்கப்பட்டன. இச்சம்பவத்தை ஒருநாள் சாயங்காலம் நான் ஸ்ரீ பி.கோபால் ரெட்டியிடம் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டே ‘நாமெல்லாரும் இப்போது [1940 ஆம்வருஷம் ] ஜெயிலுக்கு வரவேண்டியிருக்குமென்று 1936 ஆம் வருஷத்திலேயே அவருக்கு எப்படித்தெரிந்தது?’ என்று கேட்டார்

 

”எப்படியோ” என்றேன் நான்’

 

— இவ்வாறு ஆரம்பிக்கிறது எல்.எஸ்.கரையாளர் எழுதிய ‘1941 திருச்சி சிறை என்ற சுவாரசியமான சிறு நூல் [தமிழினி வெளியீடு] காந்தி வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை ஆரம்பித்ததை ஒட்டி சிறைசென்ற பல்லாயிரக்கணக்கானவர்களில் கணிசமானவர்கள் திருச்சி சிறையில் இருந்தார்கள். அந்தச் சிறை நினைவுகள் இந்நூலில் உள்ளன.

 

வேடிக்கையான நடை. ”நான் தங்களை குற்றவாளி என்று தீர்மானிக்கிறேன். தங்களுக்கு தண்டனைகொடுக்க வேண்டியிருப்பதற்காக வருந்துகிறேன்.ஆறுமாதம் கடுங்காவல் விதிக்கிறேன்” என்கிறார் நீதிபதி. ”வந்தனம்’ என்கிறார் கரையாளர்.

 

பெரும்பாலும் அழகிய சிறிய ஆளுமைச்சித்திரங்கள்தான்.ராஜாஜி, டி.எஸ்.எஸ்.ராஜன், ஸ்ரீ பிரகாசா போன்ற பலதலைவர்கள். அத்தனை ஆதர்ச தலைவர்களையும் ஒரே சமயம் நெருக்கமாகச் சந்திப்பதனால் உருவாகும் உற்சாகமானது சிறையின் தாளமுடியாத கொசுக்கடி சோளக்கஞ்சி திருச்சியின் உக்கிரமான புழுக்கம் அனைத்தையும் மறக்கடிக்கிறது

 

தியாகி சட்டநாதக் கரையாளர் யாதவகுலத்தைச் சேர்ந்தவர். யாதவர்களில் உள்ள ஒரு குடிப்பெயர்தான் கரையாளர் என்பது. 1909 அக்டோபர் 25 அன்று தென்காசியில் பிறந்தவர். செல்வந்தக்குடும்பத்தைச் சேர்ந்தவர். பி.ஏ,பி.ஏல் படித்தபின் வழக்கறிஞராக தொழில் செய்யாமல் காந்தியால் கவரப்பட்டு சுதந்திரப்போராட்டத்திற்குச் சென்றார்.

 

சுதந்திரத்துக்குப்பின்னர் தமிழ்நாடு மொழிவழிமாநிலமாக ஆனபோது செங்கோட்டை பகுதி கொல்லம் அரசின் கீழிருந்து தமிழ்நாட்டுடன் இணைவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டார். 1968ல் இவர் பெயரில் ஓர் கலைக்கல்லூரி [ தியாகி சட்டநாதக்கரையாளர் யாதவர் கல்லூரி கொடிக்குறிச்சி, தென்காசி] நிறுவப்பட்டது.

 

சங்கரன்கோயில் தொகுதியின் சட்டச்சபை உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டிருந்தார். 29-5-1967ல் மரணமடைந்தார்.

 

கரையாளரின் நூற்றாண்டு நாள் இது. காங்கிரஸ் சார்பில் எதுவுமே செய்யப்பட்டதாக தெரியவில்லை. காங்கிரஸில் இருந்து அதிகாரபூர்வமாக ஒரு செய்தியும் வெளியிடப்படவில்லை. அவர்கள் காந்தியையே மறந்தாயிற்று. தினமணி நாளிதழில் மட்டும் ஒரு கால்பக்க விளம்பரத்தைப் பார்த்தேன்.

 

கரையாளரின் நூலைப்பற்றி விரிவாக எழுதவேண்டும். இன்றும் அச்சொற்கள் வழியாக அவரது உற்சாகமான புன்னகை எனக்கு வந்து சேர்கிறது.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/4660

1 comment

  1. shaan

    கல்லூரி முதலில் செங்கோட்டையில் தொடங்கப்பட்டது. பின்பு மூடப்பட்டது. பின்னர் 1991/92இல் எஸ். சட்டநாதக் கரையாளர் கல்லூரி என்ற பெயரில் தென்காசி கொடிக்குறிச்சியில் தொடங்கப்பட்டது. நான் அந்த கல்லூரியில் தான் படித்தேன். தென்காசியில் கல்லூரியைத் தொடங்கியது இந்தியன் வங்கி புகழ் கோபாலகிருஷ்ணனும் ;-) மற்றும் சிலரும். பின்னர் அது மதுரை நல்லமணி டிரான்ஸ்போர்ட் முதலாளிக்கு விற்கப்பட்டு இப்போது நல்லமணி யாதவா கல்லூரி என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர் ஒரு பெரிய சுதந்திரப் போராட்டத் தியாகி என்பது இதனை நாளும் எனக்குத் தெரியாது :-(

Comments have been disabled.