வெள்ளையானை – அதிகாரமும் அடிமைகளும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

சென்னையில் உங்களை சந்தித்த பின் பிரயாணங்களால் , வேலை அதிகரிப்பால் அனுப்ப நினைத்த மின்னஞ்சலை இப்போதுதான் அனுப்ப முடிந்தது …நேரில் தங்களை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி …கேஜ்ரிவால் பற்றி, ஊழல் பற்றி , மகாபாரதம் பற்றிய உரையாடல் நான் அபூர்வமாக எதிர்கொள்ளும் அனுபவத்தை தந்தது …மிக்க மனநிறைவோடு வீடு சென்றேன் (விடை பெற்று கீழே ஊர்திகள் நிறுத்தும் இடத்தில மேலும் 2 மணி நேரம் நண்பர்கள் ராம் ராமச்சந்திர ஷர்மா , தங்கவேல் அவர்கள் உரையாடல்களை கேட்டு கொண்டிருந்தேன் ! 12 மணிக்கு வீடு சேர்ந்தாலும் சோர்வே தெரியவில்லை!…)

வெள்ளை யானை நாவலை வாசித்து முடித்து விட்டேன் .. வேலை பளு நடுவிலும் தங்கள் புத்தகத்தை 2 வாரத்தில் படிக்க முடிந்தது இதுவே முதல் முறை!.. தங்களின் எப்போதும் இருக்கும் மொழி நடையை விட வெள்ளை யானை சிறிது சுலபமான மொழி நடையில் இருந்ததாக பட்டது … என் எண்ணம் சரியா?.. மொழி நடை எளிமை போல் தெரிந்தாலும் பல இடங்களில் கருத்து மிக தீவிரமாக திரண்டு வந்தது ….படிக்கும் போது பல பல இடங்களில் சிந்தனை , மனம் வெகுவாக தீண்ட பட்டாலும், படித்து முடித்தபின் பல பகுதிகள் மனதில் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கின்றன …அவற்றில் சிலவற்றை பற்றி, அதில் வந்த என் கேள்வி பற்றி கீழே எழுதுகிறேன் .. முதல் முறை ஒரு புத்தகம் பற்றி இவ்வளவு விரிவாக எழுதுகிறேன் ..குறை ஏதும் இருப்பின் மன்னிக்கவும்…

எய்டன் ஐஸ் பாக்டரி பார்வை இட்டு பார்மரிடம் கேட்கும் கேள்விகளும் அதற்க்கு பார்மர் கூறும் பதில்களும் எய்டன்னின் அறியாமையை வெளி கொணர்கிறது ஏனோ அந்த மனநிலை இப்போதும் வாயளவில் , மனதளவில் ஜாதி பிரச்சனைக்கோ , அடித்தட்டு மக்கள், பாதிக்க பட்ட மக்கள் நல வாழ்வுக்கோ பரிதாப படும் அனைத்து மக்களின் மனநிலையை பிரதிபலிப்பதாக பட்டது .. அனைவரும் , அப்படி போராடும் மக்களின் வாழ்கைக்குள் சிறிதளவேனும் செல்லாமல் , அந்த வாழ்க்கையின் வெளியில் நின்று அனைத்தும் பார்த்து நிற்பது … இந்த உலகத்தை பார்த்த பின்னரும் , ராயபுரம் பீட்டர்ஸ் சர்ச்சில் ஒரு தாழ்த்த பட்டவனின் முதுகில் கால் வைத்து எந்த உறுத்தலும் இன்றி இறங்குவது அவனின் , அத்தகையவர்களின் ஒருவகை மன பலவீனம் தானே? மேலும் அவன் நீலமேகததை சிறை செய்து செல்கையில் நீலமேகத்தில் ஜாதி நம்பிக்கை கொண்ட மனத்தையும் , ஒரு புனிதரின் மன நிலையையும் ஒப்பு நோக்குவது எவ்வளவு உண்மை !!!

அடுத்து காத்தவராயன் எய்டனிடம் பஞ்சத்தை பற்றியும் அவன் மக்கள் சாவு பற்றியும் பேசும் இடம் (“சாவு உண்மை தான் .. ஆனால் எப்போது வாழ்ந்தோம் ?…) சாட்டை அடியாக வந்துள்ளது ..அந்த பக்கங்கள் எல்லாமே 2, 3 முறை படித்தேன் .. எவ்வளவு வேதனை , எவ்வளவு சோகம் …நம் தாத்தா காலத்தில் (என் தாத்தா காலத்திலாவது …) தீண்டாமை நேரடியாக வீடுகளில் பார்க்கவில்லையாயினும் அவர்களுக்கு முந்தய தலை முறையில் மிக தீவிரமாக இருந்திருக்கும் என என்னும் போது மனம் நிலை மாறுகிறது …

மரிசா – எய்டன் உரையாடலில் எய்டன் அதிகாரம் , மக்களை ஆட்சி செய்யும் முறை பற்றிய விளக்கங்கள் மிக அற்புதம் .. ஆனால் ஒரு இடத்தில “மக்களை மனமார வெறுக்காமல் ஒருவன் அவரிகளை ஆட்சி செய்ய முடியாது ” என்று வருகிறது . இதை மேலும் விளக்க முடியுமா ?.. ஆட்சி, நிர்வாகம் ஆகியவற்றை நாட்டை ஆட்சி செய்வது என்ற கோணத்தில் மட்டும் இதை புரிந்து கொள்வதா? இல்லை எந்த ஒரு தனி அமைப்பின் (உதாரணமாக ஒரு அலுவலகம்) அதிகாரம் , ஆட்சிக்கும் பொருந்துமா? நாட்டின் ஆட்சி என்று கொண்டாலுமே இது மரிசா சொல்வது போல் புது கோட்பாடாக உள்ளது .. அப்படி செய்வது பொதுவாக சர்வாதிகார மனப்பான்மையாக ஆகாதா?

எய்டன் , ட்யுக் க்கு கடிதம் அனுப்பிவிட்டு பரிதவிக்கும் பக்கங்கள் புன்னகை வர வைத்தன !.. அங்கே விவரித்திருந்த பிரிட்டிஷ் நிர்வாக அமைப்பு இன்றும் எல்லா நிறுவங்களிலும் தொடர்கிறது … பிரச்சினைகள் “மேலே” போகவே கூடாது … :-)

பஞ்ச காட்சிகளும் , எயடனின் கோச் வண்டி பிரயாணம் , மரத்தின் அருகில் பிணக்குவியல் அருகே சென்று அவன் பார்ப்பது , வண்டி மக்கள் மேல் ஏறி செல்வது , andrew இறங்கி செல்வது ஆகிய அனைத்து பக்கங்களும் மிக மிக உக்ரம் .. இப்படி பட்ட காட்சிகள் உண்மையில் நடந்திருக்கும் என்று நினைக்கும் போது எப்படி ஜோசப் போன்றவர்களால் ஒரு விலகல் மனநிலையுடன் வண்டி ஓட்ட முடிகிறது என்று தோன்றுகிறது …

நாவலில் என்னை மிகவும் பாதித்த பகுதி பார்மரின் மன குமுறலும் அதை தொடர்ந்து வரும் பக்கங்கள் .. முரஹரி ஐயங்கார் பகுதிகள் மிகுந்த கொதிப்பை ஏற்படுத்தின .. முன் கூறியது போல் நம் மூதாதையர்கள் இப்படி இருந்திருப்பார்கள் என்று நினைக்கும் போது மனம் அதிர்கிறது … ..கடைசியில் ட்யுக், ரஸ்ஸல் , ஐயங்கார் , பிரிட்டிஷ் அரசு அனைத்துமே எய்டனை ஒரு பகடை காயாக உபயோகித்து அவனது மன குமுறல் மூலம் அனுப்பிய அறிக்கையை தனது ஆதயாதுக்கு உபயோகித்ததை படித்தால் எவருக்கும் ஒரு சோர்வு ஏற்படும் என்று நினைகின்றேன் .. பார்மர், எய்டன் , டாக்டர் சிம்சன் போன்றோர் பலர் இருந்திருக்க கூடும் .. மனதளவில் மாற்றத்தை கொண்டு வர நினைத்து , அதை முழுவதுமாக செயல் படுத்த அதிகாரமோ , மன உறுதியோ இல்லாமல் ஒரு தூரம் வரை ஓடி விட்டு குடியிலோ , வேறு எதாவதிலோ தங்களை மறக்க முயல்பவர்கள்….?

வளர்ந்தது எல்லாம் சென்னையில் என்பதால் தலித் , தீண்டாமை போன்றவற்றின் நேரடி அனுபவம் இல்லையென்றாலும் மனம் கொதிக்க வைத்த பல தருணங்கள் கடந்திருகின்றேன் … நாவல் முடித்து நாவல் பற்றி நினைக்கையில் , எய்டனின் கொதிக்கும் மனநிலை, அவனுடைய அதிகாரம், மேல் ஜாதி மக்கள் சந்திப்பு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் சந்திப்பு , மற்றும் அனைத்தை பற்றியும் அவனின் அவதானிப்புகள் எண்ணுகையில் ஏனோ இன்றைய இந்தியாவின் ஊழல் பிரச்சினை , அதை எதிர்ப்போர் மன நிலை , ஊழல் அரசியல் மனிதர்கள், கட்சிகள் , அரசு , தனியார் நிர்வாகங்கள் , அவற்றின் உரிமையாளர்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பார்கின்றேன்…அப்படி ஒப்பிடுவது தவறோ என்று தோன்றுகிறது …

அன்புடன்

வெண்ணி

அன்புள்ள வெண்ணி

நாவலில் வரும் வரிகள் ‘கருத்துக்கள்’ அல்ல. அவற்றுக்கு தனியாக ஒரு சித்தாந்தமாக நிற்கும் வல்லமை பெரும்பாலும் இருப்பதில்லை. அவை நாவலில் உள்ள கதைமாந்தர்களின் மனதை, கதைத்தருணம் உருவாக்க்கும் ஒரு தரிசனத்தை மட்டுமே முன்வைக்கின்றன

அதிகாரம் மக்களை சுரண்டுவதேயாகும். சுரண்டுவது அளிக்கும் குற்றவுணர்ச்சியை வெல்லவே சுரண்டப்படுபவர்களை சிறுமைப்படுத்தி வெறுக்க ஆரம்பிக்கிறார்கள் – இதை நாமே நமக்குள் நோக்கி உணரலாம்

ஏய்டன் மட்டுமல்ல கதைமாந்தர்கள் எவருமே ஒற்றைபப்டையானவர்கள் அல்ல. ஏய்டனின் ஆளுமையின் மிகச்சிக்கலான இடம் அவன் அந்தத் தாக்குதலுக்கான ஆணைச்சகையை ஏன் அளித்தான் என்பது. அதை அத்தருணத்தில் இருந்து முன்னும் பின்னும் நகர்ந்து அவனுடைய அனைத்துச்செயல்களையும் தொகுத்தே மதிப்பிடமுடியும்

ஜெ


வெள்ளையானை வாசித்த அனுபவம்
ஒரு மதிப்புரை

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் உரை கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17