முதற்கனல் – சில வினாக்கள்

முதற்கனல் நாவலின் முடிவை ஒட்டி சில சொற்களை முன்வைக்க விரும்புகிறேன். இவை சென்ற ஐம்பது நாட்களில் எனக்கு வந்த கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள். நாவலின் உட்குறிப்புகளையோ கருத்துக்களையோ விவாதிக்க விரும்பவில்லை. அவற்றை வாசகர்கள் தங்களுக்குள், தங்கள் நண்பர்களுக்குள்தான் விவாதிக்கவேண்டுமென நினைக்கிறேன். வாசகர்கள் கேட்ட வினாக்களுக்கான பொதுவான பதில்களை மட்டும் இங்கே தொகுத்தளிக்கவிழைகிறேன்.

1. இந்நாவலில் எவையெல்லாம் மகாபாரதத்தில் உள்ளவை, எவை என் கற்பனை? அவற்றை எப்படிக் கண்டுகொள்வது? அவ்வாறு கற்பனையில் விரித்தெடுப்பதற்கான விதிகள் என்னென்ன?

இந்நாவலில் உள்ளபகுதிகள் மகாபாரதத்தின் ஆதிபர்வத்தில் உள்ளவை. மகாபாரத மூலநூல்கள் தமிழிலும் கிடைக்கின்றன. தி.ஈ.ஸ்ரீனிவாசாச்சாரியார் மொழியாக்கத்தில் சக்ரா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள முழுமகாபாரதம் மொழியாக்கத்தில் இவற்றை வாசிக்கலாம். செல்வ அருட்பேரரசன் அவர்கள் கிசாரிமோகன் கங்குலியின் முழு மொழியாக்கத்தை தன் இணையதளத்தில் அளிக்கிறார். அதையும் வாசிக்கலாம். பொதுவாக ஒப்பிட்டாலே நாவல் எடுத்துக்கொண்டுள்ள சுதந்திரம் புரியும்.

மகாபாரதம் ஜய [வெற்றி] என்றபேரில் கிருஷ்ணதுவைபாயன மகாவியாசரால் எழுதப்பட்டது. அதில் பின்னர் அவரது மாணவர்களான வைசம்பாயனர் போன்றவர்கள் பல பகுதிகளை எழுதிச்சேர்த்தனர் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு சேர்க்கப்பட்ட நூலே மகாபாரதம் என அறியப்படலாயிற்று.

பின்னர் பல தனி நூல்கள் மகாபாரதத்தில் எழுதிச்சேர்க்கப்பட்டன. அத்துடன் மிகப்பிற்காலத்தில் கதைப்போக்குகளை விளக்கும்பகுதிகளாக பல எழுதிச்சேர்க்கப்பட்டன. இவ்வாறு பின்னர் சேர்க்கப்பட்டவற்றை பிரக்‌ஷிப்தம் என்று சொல்லி தனியாகவே சுட்டிக்காட்டுவார்கள்.

மூலக்கதையைப் பார்க்கையில் பாண்டவர்களின் பிறப்புக்குப்பின்னரே ஜய ஆரம்பிக்கப்பட்டிருக்கவேண்டும் என ஊகிக்கமுடிகிறது. அவர்களின் பட்டாபிஷேகத்துடன் அது முடிந்திருக்கவும் வேண்டும். முன்னும்பின்னும் உள்ள கதைகள் மிகச்சுருக்கமாக கிட்டத்தட்ட வம்சவரலாற்றுக்குறிப்புகள்போலவே உள்ளன.

பாண்டவர்களின் பிறப்பு வரையிலான கதைகள் மிகச்சுருக்கமாகவே உள்ளன. பீஷ்மர், சத்யவதி, அம்பை, சிகண்டி, விசித்திரவீரியன் போன்றவர்களின் கதைகள் மூலத்தில் மிகச்சில வரிகளில் சொல்லப்படுபவை. ஆனால் அவையே மாபெரும் மகாபாரதக்கதையின் அடித்தளமான நிகழ்வுகள். ஒட்டுமொத்த மகாபாரதத்தையும் இணைப்பவை. ஆகவே அவற்றை மிகவிரிவாக இந்நாவல் கூறுகிறது. விசித்திரவீரியனின் கதையை வியாசர் சொல்வதை அப்படியே எழுதினால் அச்சில் ஒரு பக்கம்கூட வராது. இந்நாவலில் அவன் ஒரு பெரிய கதாபாத்திரம்.

இந்த விரிவாக்கத்தை உருவாக்கவே இந்நாவல் தன் சித்தரிப்பை பயன்படுத்துகிறது. அதற்காக மகாபாரதத்திலேயே உள்ள குறிப்புகளைத்தான் பயன்படுத்திக்கொள்கிறது. மகாபாரதம் அளிக்கும் குணசித்திர விவரணையை இது மாற்றவில்லை. சிலவரிகளில் தெரியவரும் உட்குறிப்பை விரிவாக்குகிறது. உதாரணமாக சித்ராங்கதன் பற்றி பத்து வரிகளே மூலநூலில் உள்ளன.

இதிலுள்ள உபகதைகள் மகாபாரதத்தில் உள்ளவையா? அவை இந்தத் தருணத்தில் சொல்லப்படுபவையா?

இந்நாவலில் உள்ள புராணக்கதைகள் மகாபாரதத்தில் இருந்தும் பிறபுராணங்களில் இருந்தும் எடுத்தாளப்பட்டவை. நாட்டார்கதைகளின் மறு உருவாக்கங்கள் சில உள்ளன. சிலகதைகள் கற்பனையானவை.

மகாபாரதத்தில் புராணக்கதைகள் பெரும்பாலும் மேற்கோளாக ஒரு தருணத்தில் சுட்டிக்காட்டப்படுகின்றன. கதையோட்டத்துக்குத் தொடர்பு அற்றவையாக உள்ளன. அவை பிற்காலச் சேர்க்கைகளாக இருக்கலாம்.

ஆனால் இந்நாவல் அக்கதைகளை ஒரு கதைத் தருணத்தை விளக்க மட்டுமே முன்வைக்கிறது. உதாரணமாக தாட்சாயணியின் கதை அம்பை கதையை விளக்குகிறது. அதே விஷயத்தின் இன்னொரு கோணத்தை கார்த்தியாயனியின் கதை விளக்குகிறது. பாற்கடல் கடையும் கதை விசித்திரவீரியனின் மனநிலையை விளக்குகிறது. பரசுராமனின் கதை சத்யவதியின் மனநிலையை நுட்பமாக குறிப்புணர்த்துகிறது.

சிலகதைகள் மகாபாரதத்திலேயே உள்ளவை. ஆனால் இங்கே வேறுபுராணத்தில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கும். உதாரணம் யயாதியின் கதை. இங்குள்ள கதை பத்மபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது. இது பீஷ்மரின் பிரம்மசரியம் பற்றிய ஒரு நுட்பமான அகவிசாரணையை நோக்கி வாசகனை கொண்டுசெல்லும் நோக்கம் கொண்டது.


இந்த நாவலில் உள்ள ஊர்கள் இன்றுள்ள நிலப்பரப்பை ஒட்டி விளக்கப்பட்டிருக்கின்றனவா? கற்பனையா?

மகாபாரதகால நாடுகளையும் நிலப்பகுதிகளையும் பற்றி நிறைய ஆராய்ச்சிகளும் ஊகங்களும் உள்ளன. பெரும்பாலும் அந்த ஆய்வுகளை ஒட்டியே நிலச்சித்தரிப்பு உள்ளது. தேவையென்றால் மட்டுமே கற்பனை விரிவாக்கப்பட்டுள்ளது.

அஸ்தினபுரி இன்றும் உள்ளது. ஹரியானா மாநிலத்தில். பாஞ்சாலம் என்பது பஞ்சாப் அல்ல. அது இன்றைய ஹரியானாவுக்கு வடக்கே கங்கையின் துணைநதியின் கரைகளில் இருந்த நிலப்பகுதி.

பஞ்சாப் அன்று சப்தசிந்து என அழைக்கப்பட்டது. அந்நதிகளின் புராணகாலப் பெயர்களே இந்நாவலில் கையாளப்பட்டுள்ளன. சுதுத்ரி இன்று சட்லெஜ் என அழைக்கப்படுகிறது. அவற்றை அறியவிரும்புபவர்கள் கூகுளை கையாளலாம்.

மகாபாரதகால நாடுகளைப் பற்றிய குறிப்புகளை இக்காலகட்டத்தில் எளிதில் இணையத்தில் பெறமுடியும். சிபிநாடு இன்று பாகிஸ்தானில் உள்ள சிபி மாவட்டம். மூலதனநகரி அல்லது காசியபபுரி அல்லது ஹம்ஸநகரி இன்று மூல்தான் என அழைக்கப்படுகிறது. பாகிஸ்தானில் உள்ளது. அங்கிருந்த சூரியகோயிலைப்பற்றி பலகுறிப்புகள் உள்ளன. அதனால்தான் அந்த ஊர் மூலத்தானநகர் என அழைக்கப்பட்டது.


இந்தக் குறிப்புகளை அறிந்துகொள்ளாமல் இதை வாசிக்கமுடியாதா?

ஒருநாவல் தகவல்கள் வழியாகவே தன் கலையை நிகழ்த்துகிறது. இந்நாவலுக்குள் அளிக்கப்படும் தகவல்களே இந்நாவலை வாசிக்க போதுமானவை. மேலதிக ஆய்வுக்கு தேவையானவர்கள் தகவல்களை ஆராயலாம்.

அவ்வாறு நுண்தகவல்களால் ஆன ஒரு தளம் இந்நாவலில் உள்ளது. போர்க்கலை, வணிகம், பயணம், சமூகவியல் மற்றும் யோகம் சார்ந்த தகவல்கள். சென்ற இருபதாண்டுகால ஆய்வில் நான் திரட்டியவை. தேவையானவர்கள் அவற்றை கவனிக்கலாம். பிறர் இது முன்வைக்கும் வாழ்க்கைச் சிக்கல்களை மானுட உணர்ச்சிகளை தத்துவதரிசனத்தை மட்டும் கவனித்தால் போதும்.

முதற்பிரசுரம்/Feb 21, 2014

முந்தைய கட்டுரைமலைப்பெருமாள்கள், காட்டு அம்மன்கள்
அடுத்த கட்டுரைவாசிப்பு- ஒருகடிதம்