வெண்டி டானிகர் – எதிர்வினைகள்

அன்புள்ள ஜெ ,

வென்டி டானிகர் புத்தகம் குறித்த தங்கள் கட்டுரையும் அதைக்குறித்து நீங்கள் வாசித்த மதிப்புரை சுட்டியையும் படித்தேன்.அந்த மதிப்புரையைத தவிர வேறு எந்த ஒன்றையும் நீங்கள் படித்தீர்களா தெரியவில்லை.நான் டானிகரின் புத்தகத்தை படித்தேன். இந்த மதிப்புரையில் கூறப்படுவது போல அவதூறை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டதாக எனக்குத் தோன்றவில்லை

டானிகரின் புத்தகம் ஏறக்குறைய 800 பக்கங்கள் கொண்டது அதில் மேற்கண்ட மதிப்புரை ஒரே ஒரு பத்தியை மட்டுமே மேற்கோள் காட்டி மொத்தப் புத்தகத்தையும் நிராகரிக்கிறது.அந்தப் பத்தி அதில் இடம்பெற்றிருக்கிறது என்பது உண்மை.அது எந்த context ல் என்பதைப பார்க்க வேண்டும்.மற்ற சமயங்களுடனான உரையாடல் என்ற தலைப்பின் கீழே இடம் பெற்றுள்ள பத்தி அது. மேலும் டானிகர் வேறு எந்த இடத்திலும் தோமஸின் கிறித்துவம் ஹிந்து சிந்தனைகளை பாதித்ததாக எழுதவில்லை.

இந்த மதிப்புரையில் சுட்டியுள்ள பத்திக்கு அடுத்த பத்தியிலேயே புத்தரின் வரலாற்றிலிருந்து கிருத்துவம் இயேசுவின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் சில சம்பவங்களை (சாத்தானால் ஆசை காட்டப்படுவது) கடன் பெற்றிருக்கக் கூடும் என்றும் குறிப்பிடுகிறார். சமண சமயத்துடனான பரிமாற்றங்கள் குறித்துக் கூறும்போது நீங்கள் சொல்வது போலவே தமிழகத்தில் சமணர்கள் கழுவேற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றே குறிப்பிடுகிறார்.

உண்மையில் இந்தப் புத்தகத்தை நான் படிக்கும் போது அதிகமும் இந்துமதம் குறித்து நீங்கள் எழுதியிருப்பதைத்தான் நினைத்துகொண்டிருந்தேன்.நிறைய ஒற்றுமைகளைச் சொல்லலாம்.குறிப்பாக அதன் நெகிழ்வுத் தன்மையைத்தான் டானிகேர் அதிகம் எழுதியிருக்கிறார்.

இந்திய இடது சாரிகளும் பெரியாரியர்களும் குற்றம் சாட்டுவது போல இந்து மதம் என்பது பிராமண /ஆரிய சம்ஸ்க்ருதக் கூறுகளையே கொண்டது என்பதற்கு மாறாக, நடைமுறையில் உள்ள இந்து மதத்திற்கு,பிராமணர் அல்லாதார் மற்றும் தென்னிந்திய மொழிகளின் பங்களிப்பே அதிகம் என்று தான் டானிகர் கூறுகிறார்.முக்கியமாக இந்துமதத்துக்கு ஆதாரமாக விளங்குவதாக இடது சாரிகளாலும் பெரியாரியர்களாலும் மிகவும் விமர்சிக்கப்படும் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் மனுஸ்ம்ருதி பற்றி அவர் கூறுவது பல்வேறு கட்டுரைகளில் நீங்கள் கூறி வருவதை ஒத்தது.ஆங்கிலேயரின் வருகைக்கு முன் மனுஸ்ம்ருதி என்பது இந்து மதத்தில் உள்ள பல்வேறு ஸ்ம்ருதிகளில் ஒன்றுதான் என்பதும் தனித்த முக்கியத்துவம் ஏதும் அதற்கு இருந்ததில்லை என்றமே சுட்டிக் காட்டுகிறார். 19ஆம் நூற்றாண்டில் மனுஸ்ம்ருதி அடைந்த முக்கியத்துவம் சர்.வில்லியம் ஜோன்ஸ் அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு தற்செயலான விபத்து என்றே டொனிகர் குறிப்பிடுகிறார்.இது போல நிறைய விஷயங்களை இந்த நூலில் இருந்து சொல்லலாம்.

இந்தப் புத்தகத்தை முழமையாகப் படித்த, ஒரு சாதாரண வாசகன் என்ற முறையிலும் இந்து மதம் குறித்த தகவல்களை ஓரளவு அறிந்தவன் என்ற முறையிலும்,உங்களது இந்துமதம் குறித்த எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையிலும், இதைக் கூறுவேன். நீங்கள் சுட்டியுள்ள மதிப்புரை மிகவும் குறைபட்டது என்றும் ஒரே ஒரு பத்தியைத் தவிர இந்தப் புத்தகத்தில் உள்ள வேறு எதையும் காட்டாதது. என்றுமே எனக்குத் தோன்றுகிறது டானிகரின் நூலில் குறைகள் இருக்கலாம் இருக்கின்றன. ஆனால் அவரது நோக்கம் அவதூறு செய்வதல்ல என்றே நான் கூறுவேன். உதாரணமாக, வானரம் என்றால் சற்று மரியாதையாகத் தொனிக்கிறது குரங்கு என்றால் வசையாக இருக்கிறது ஆங்கிலத்தில் இரண்டையுமே monkey என்று தான் மேற்கத்தியர்கள் சொல்கிறார்கள். அனுமனை அநேகமாக எல்லா மேற்கத்திய ஆசிரியர்களுமே The Monkey God என்றே குறிப்பிடுவார்கள் அது வசை என்றும் அவமரியாதை என்றும் ,நாம் எடுத்துக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன். வேறு மதிப்புரைகள் ஏதும் நான் படிக்கவில்லை. நம் குழும நண்பர்களில் யாராவது இது குறித்து எழுதியுள்ளார்களா என்றும் தெரியவில்லை.

உங்கள் கட்டுரையின் இறுதி வரிகளோடு நான் முழுமையாக உடன்படுகிறேன்.மிகப் பெரிய பாரம்பரியத்தையும் நெடிய வரலாற்றையும் கொண்டுள்ள நாம் இவ்வளவு தொட்டாற் சுருங்கிகளாகவும் பொறுமை அற்றவர்களாகவும் இருக்க வேண்டியதில்லை.அது நமது என்று நாம் கொண்டாடும் மதத்துக்கும் பெருமை சேர்ப்பதில்லை என்றே நானும் நினைக்கிறேன்.

அன்புடன்,

சுரேஷ் கோவை.

அன்புள்ள சுரேஷ்,

நான் அந்நூலை வாசிக்கவில்லை என்பதனால் இந்தியாவைப்பற்றிய மேலைநாட்டுப்பார்வையில் உள்ள பொதுவான போக்குகளைப்பற்றியே எழுதினேன். அந்நூலைப்பற்றி நான் வாசித்ததாகச் சொன்ன மதிப்புரை கலவை வெங்கட்டுடையது அல்ல. அது மதிப்புரை அல்ல, எதிர்ப்புரை. நான் வாசித்தது கார்டியன் இதழில் வந்தது என நினைவு. கூடவே வெண்டியின் ஒரு பேட்டி.

கலவை வெங்கட்டை நான் சுட்டியது இந்நூலுக்கான எதிர்வினைகள் எப்படி ஒருவகை ‘சண்டைபிடித்தல்களாக’ நிகழ்கின்றன என நான் சொல்லியிருக்கும் இறுதிப்பகுதியைச் சுட்டுவதற்கே.

தாமஸின் வருகை போல ஒரு வகையான அடிப்படை ஆதாரமும் இல்லாத கற்பனை, இந்துமதத்தை மத்தியகால ஐரோப்பிய மதப்போர்களுக்கு நிகரான மத ஒடுக்குமுறைகொண்ட ஒரு மதம் என நிலைநாட்டும்பொருட்டு கிறித்தவ மதமாற்ற அமைப்புகளால் படிப்படியாக கட்டி எழுப்பி நிலைநிறுத்தப்பட்டு மெல்ல வரலாறாகவே ஆக்கப்பட்டுவருகிறது. வெண்டியின் நூல் அந்த அப்பட்டமான அவதூறை வரலாற்றுப்பாடங்களிலும் நிலைநிறுத்தும் முயற்சியாகவே எனக்குப் பட்டது.

நான் அந்நூலை வாசித்துவிட்டு சொல்கிறேன். வெண்டியின் நூல் அடிப்படையான நல்லெண்ணத்துடன் எழுதப்பட்டிருக்குமென்றால் என் கருத்துக்களை திரும்பப்பெறுவதில் மகிழ்ச்சியே — எவ்வளவு கடுமையான விமர்சனங்களுடன் எழுதப்பட்டிருந்தாலும்

ஜெ

 

அன்புள்ள ஜெ,

வெண்டி டானிகரின் த ஹிண்டுஸ் நூலை நேற்றுதான் படிக்கத் தொடங்கினேன். இந்து மதம் அல்லது இந்திய மரபை அவமதிப்பதாக அல்லது யூரோப்பிய மேட்டிமை மனப்பான்மையோடு எழுதப் பட்டிருப்பதாக தோன்றவில்லை. சொல்லப்போனால் அம்மனப்பான்மையை பல இடங்களில் கேலி செய்கிறது. இந்திய அறிஞர்களின் புத்தகங்களை படித்தவனன்று என்பதால் நான் இது குறித்து கருத்துரைக்க தகுதியானவனில்லை அறிவேன் எனினும் சில நாட்களில் புத்தகத்தை முழுமையாக படித்து முடித்துவிட்டு எழுதுகிறேன்.

அன்புடன்,
லூசிஃபர் ஜே வயலட்

அன்புள்ள ஜெமோ

வெண்டி டானிகரின் நூலுக்கு இந்திய அரசு தடை விதித்திருப்பதாக தோரணையில் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அந்நூலுக்கு இங்கே தடை விதிக்கப்படவில்லை. அது பதிப்பகத்தால் திரும்பப்பெறப்பட்டது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். அதற்கு எதிராக வழக்குத்தான் தொடுக்கப்பட்டது. அதற்கான உரிமை அனைத்துவாசகர்களுக்கும் உண்டு

ஸமன்

அன்புள்ள ஸமன்

நான் அந்நூலை இந்திய அரசு தடைசெய்ததைப்பற்றி சொல்லவில்லை. அப்படி பலநூல்கள் இங்கே பொதுவாக விமர்சனத்துக்கு உள்ளாகி தடைசெய்யப்பட்டுள்ளன. அதையே சுட்டிக்காட்டினேன். அந்தத் தடை ஜனநாயக விரோதமானது என்பதே என் எண்ணம் காந்தியையும் அரவிந்தரையும் விவேகானந்தரையும் அவதூறுசெய்யும் நூல்கள் உட்பட எல்லாமே அனுமதிக்கப்படட்டும். எல்லாமே கருத்துக்கள்தான்

வழக்கு தொடுப்பது ஜனநாயகமல்ல. அரசு விடுக்கும் தடையை விட மோசமான ஜனநாயக மறுப்பு. கருத்துக்களுக்கு எதிராக எவரும் வழக்கு தொடுக்கலாம், ஆசிரியர்கள் நீதிமன்றம் செல்லவேண்டும் என்றால் யார் எதை எழுதமுடியும்? எதை முன்வைத்து விவாதிக்கமுடியும்?

தனிப்பட்டமுறையில் ஒருவருடைய ஆளுமையை உள்நோக்குடன் சிதைக்கமுயன்றிருந்தால் மட்டுமே நீதிமன்ற வழக்கு நியாயப்படுத்தப்படும். அதுகூட ஓர் ஆயுதமாகக் கையாளப்பட்டால் கருத்துரிமைக்கு எதிரானதேயாகும். ஆகவே ஜனநாயகமுறைபப்டி நீதிமன்றம்போனோம், அவர்களே புத்தகத்தை திரும்பப்பெற்றார்கள் என்பதெல்லாம் வன்முறைப்பேச்சு மட்டுமே

நானும் எழுபதுநூல்கள் எழுதியிருக்கிறேன்.இந்துமதத்தையும் பல்வேறு சாதிகளையும் மரபுகளையும் கடுமையாகவே விமர்சித்திருக்கிறேன். இந்தியாவிலுள்ள ஒரு ஐம்பது அமைப்புகள் என்னை நீதிமன்றத்துக்கு இழுத்தால் என் அனைத்துநூல்களையுமே ஒடுக்கிவிடலாம். இது ஜனநாயகம் அல்ல. இதை எந்த எழுத்தாளரும் ஏற்கமாட்டார்கள்

இங்கே அரசியல்வாதிகளுக்கு மட்டும் கருத்துரிமைபோதும் என்பதே அனைவருடைய நிலைப்பாடும். வெண்டி டானிகரின் உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து கொந்தளிப்பவர்கள் ஒரு சாதாரணமான கருத்துக்காக குஷ்புவை ஊர் ஊராக நீதிமன்றத்துக்கு இழுத்தார்கள்.

ஜெ

http://www.theguardian.com/books/2010/oct/23/hindus-history-wendy-doniger-review?CMP=twt_gu

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
அடுத்த கட்டுரைநூல் ஒன்று – முதற்கனல் – 48