அக்கினிபிரவேசம்,கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,
இந்த கட்டுரை குறித்து பல்வேறு எதிர்வினைகள் வரக்கூடும்.
அதற்கு முக்கிய காரணம் அவர்கள் மனதில் ஏற்கனவே இருந்த பிம்பங்கள் கலைகிறதே என்ற பயம்தான்.
தாங்கள் கூறிய பல்வேறு தகவல்கள் குறித்து நான் சிலவற்றை கேள்விப்பட்டிருக்கிறேன்.
எம்.எஸ். என்ற மாபெரும் பிம்பம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது வியக்க வைக்கிறது.
ஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையை தானே நிர்ணயித்திக்கொள்ளும் நிலை என்று வருமோ?
உங்கள் கட்டுரையை படித்த பின் எம்.எஸ். பாடியுள்ள பல்வேறு பாடல்களை மிகவும் ரசித்துக் கேட்டிருந்த நான், அதன் பின்ணனியில் தெரியாமல் ஒலிக்கும் சோக கீதத்தை இப்போது உணர்கிறேன். 
எம்.எஸ். பாடிய பாடல்கள் இன்று என் மனதில் புதிய பரிணாமத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
எம்.எஸ். மேலிருந்த மதிப்பு இன்று மேலும் உயர்ந்திருக்கிறது. நன்றி.

அன்புள்ள இளம்பரிதி

உண்மைக்கு எப்போதுமே அதற்கான வசீகரம் உண்டு. அதில் ஓர் ஆத்மா எப்போதுமே கலந்திருக்கும். நம் ஆத்மா அதை அடையாளம் கண்டுகொள்கிறது

ஜெ

 

 

ஒரு கலைஞரின் சாதியைப் பற்றி அறியத் துடிப்பதுதான் உண்மையின் தேடலா?

கார்த்தி

அன்புள்ள கார்த்தி,

ஒரு கலைஞரின் சாதியை அல்ல இங்கே நாம் விவாதிக்கிறோம், ஒரு கலைஞருக்கு சாதி அளித்த இழிவையும் அவர் அதை வென்றதையும்தான்

ஜெ

அன்புள்ள கார்த்தி

 

‘அக்னிப்ரவேசம்’ எழுதிய ஜெயகாந்தன் ‘அந்தரங்கம் புனிதமானது’  என்றுகூட எழுதியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

ஸ்ரினி கண்ணன்

அன்புள்ள கண்ணன்

உண்மைதான். ஆனால் ஏன் புனிதமான ஒன்றை வெளிப்படுத்தக்கூடாது? அதை பிறர் அறியக்கூடாது. ஜெயகாந்தனின் அந்த வரியை அந்தரங்கம் அழுக்கானது, ஆகவே பொத்திப்பேணவெண்டியது என்ற பொருளில் ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள்? எப்படி இருந்தாலும் அந்தரங்கம் புனிதமானது, அதை இழிவாக எண்னவேண்டாம் என்றுதான் அச்சொற்கள் பொருள் தருகின்றன. ஆகவே அதை வெளிபப்டுத்துவதும் கீழானதல்ல

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்
 
MS  சுப்புலக்ஷ்மி பற்றிய கட்டுரை அற்புதம் –  அன்புக்காக இறைஞ்சும் ஒரு பெண்ணின் நுண்ணிய மனம் எவ்வளவு தூரம் கன்றி விடும் என்பது  உண்மை .அதற்குப் பின் அது பூப்பதே இல்லை.  அந்தக் கண்ணீர் ஆழத்தில் கல்லாய் பாறையாய் அமிழ்ந்து விடுகிறது –  பக்தியாக வந்தாலும், பாலாக வந்தாலும்,  அந்த கண்ணீர், குருதியின் குணம் கொண்டதே,    எரிமலையின் வழிதலே. கொற்றவை படித்தப் பின் ஏற்பட்ட நெகிழ்வு , என்னைப் பற்றிய சுயத் தெளிவு, மீண்டும் ஒரு முறை பெற்றேன். ஆழியின் கல் ஆழம் எல்லா பெண்களின் மனதிலும் உண்டு – சிலருக்கு மேலே- சிலருக்கு கீழே.
  

 விஜி


அன்புள்ள விஜி,
உண்மை. சில காயங்கள் கன்றி இறுகி ஆயுதங்களாக ஆகிவிடுகின்றன. அஸாமியக் கவிதை ஒன்றுண்டு. காண்டாமிருகத்தின் கொம்புகள் உண்மையில் இறுகிய மயிற்கற்றைகள். சிலிர்த்துச் சிலிர்த்து அபப்டி ஆயினவாம்!

அன்புள்ள மாதவன்

நலமா?
வாழ்க்கை வரலாறை எழுத நமக்கு மரபு இல்லை. நாம் புராணங்கள் எழுதுபவர்கள். ஆகவே சேக்கிழார் பானியிலேயே நாம் கிருபானனத வாரியாருக்கும் ரஜனிகாந்துக்கும் வாழ்க்கைப்புராணம் எழுதுகிறோம்
ஜெ
 
 
// ]]>

ஜெ

 

அன்புள்ள ஜெ.,

உங்கள் எழுத்துக்களின் நடுவே சகுந்தலை புகைப்படத்தில் எம்எஸ்-ஸின் நெஞ்சு காதலில் விம்மிப் புடைப்பது போலத் தோன்றியது.

இயல்பாகவே நாம் ஒருவித அதிகார அடுக்கு மனோபாவம் கொண்டே வளர்கிறோம். பிரபலங்களையும் அரசியல்வாதிகளையும் கடவுளாகக் காண்பதில் நம் சுயகொளரவம் எள்ளளவும் தடையாக இருப்பதில்லை. கல்வியும், பொருளாதாரமும் அதன் விளைவாகத் தன்னம்பிக்கையும் பொதுவாக சமூகத்தில் வளரும்போது இந்த மனநிலை மாறும் என்று எதிர்பார்க்கலாம். மாறுவது நல்லதுதானா என்பது ஒரு தனிக் கட்டுரை, இல்லையா?

பி.கு: விவேக் ஒரு பிராமணர் என்று தான் முதலில் நினைத்துக் கொண்டிருந்த்தாக சிவாஜி பட விழாவில் ரஜினி பேசியது இங்கே கவனிக்கத்தக்கது. தன்னால் கடுமையாக வெறுக்கப்படும் பிராமணர்களின் மீது நம் சமூகம் வைத்திருக்கும் பிரேமை சமூக விசித்திரங்களுள் ஒன்று.
 
நன்றி
ரத்தன்

முந்தைய கட்டுரைகாவல்கோட்டம் 3
அடுத்த கட்டுரைகாவல்கோட்டம் 4