நான் தேர்ந்தெடுத்த முகம்

DSCN0316

அசோகமித்திரன் ஒருமுறை எழுதினார், நம் புகைப்படங்கள் நமக்கு அழகாக தெரியவேண்டும் என்றால் நமக்கு அப்படத்தில் இருப்பதைவிட அதிக வயது ஆகவேண்டும் என்று. நாம் நம்மைப்பற்றிக் கொண்டிருப்பவற்றை நம் படங்கள் காட்டுவதில்லை. அதிலும் முகக்கண்ணாடியை கூர்ந்து பார்க்கும் வழக்கமில்லாத, நான்குநிமிடத்தில் கையால் தடவியே சவரம் செய்துகொண்டு விரையும் எனக்கு புகைப்படங்கள் விதவிதமான அதிர்ச்சிகளை அளிப்பவை.

சென்றமாதம் வெண்முரசு எழுதத்தொடங்கி இருபதுநாள் வீட்டிலேயே இரவுபகலாக எழுதிக்கொண்டிருந்தேன். சவரம் செய்யவில்லை. நாளிதழ்கள் படிக்கவில்லை. மாலைகளில் அஜிதனுடன் ஒரு நீண்ட நடை தவிர எழுத்திலிருந்து வெளிவரவேயில்லை. அப்படியே மூணாறு சந்திப்புக்கும் சென்றேன்.

அங்கே நண்பர் தங்கவேல் எடுத்த படங்களைக் கண்டபோது வேடிக்கையாக இருந்தது.நரைகலந்த தாடியும் கண்ணாடியுமாக ஒரு நடுவயது ஆசாமி எங்கோ எதிலோ கவனமாக இருப்பதைக் கண்டேன்.அவனை நான் அதிகம் கண்டதேயில்லை

1986 க்குப்பின் நான் தாடி வைத்துக்கொண்டது மிகக்குறைவு. அதுவரை சவரமே தெரியாத பரட்டைத்தாடிதான். சவரம் செய்யத்தொடங்கியதே ஒரு மனஎழுச்சியின் விளைவாக. அதை என் வாழ்க்கையின் ஒரு புதுத்தொடக்கமாகக் கொண்டேன். சோர்ந்த, களைத்த, சலிப்புற்ற மனநிலையே எனக்கிருக்கக் கூடாது என்ற முடிவை எடுத்த நாள் அது.அதன்பின் இன்றுவரை நான் அப்படித்தான்.

பின்பொருநாள் மீசையை எடுத்தேன். அதற்குக் காரணமும் அதே. மீசை எனக்கு மெல்லிய சோர்வுள்ள முகபாவனையை அளித்தது. அதை தினமும் கருப்பாக்குவது என்னால் முடியக்கூடியதல்ல. எடுத்ததும் ஒரு ‘உல்லாச’ முகம் வந்தது. நல்லவிஷயம்தானே. எதைப்பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத, எப்போதும் ஒரு சிரிப்புக்குத் தயாராக இருக்கிற ஊர்சுற்றியின் முகம்.ஆம், அதுதான் நான்.

மூணாறிலிருந்து வந்ததுமே கண்ணாடியில் என்னைப்பார்த்தேன். நரைகலந்த தாடி சோர்ந்த முகத்தை அளித்தது. ஒரு விசித்திரமான சாந்தம். ஆனால் நான் அப்படிப்பட்டவனே அல்ல. வேடிக்கையும் விளையாட்டும் இல்லாமல் இருக்கமுடியாதவன். எனக்கு மாறான ஒரு முகம் என் முன் தெரிந்தது. சவரம் செய்துகோண்டேன்.

இந்தமுகம் ஒரு உற்சாகமான நடுவயது மனிதனைப்போலிருக்கிறது. சாலையில் நின்றால் அங்கே நிற்கும் மகிழ்ச்சியான சிலரில் ஒருவராக என்னைக் காட்டுகிறது. இது எனக்குப் போதும் என்று முடிவெடுத்தேன். நண்பர் செழியன் எடுத்த இந்தப்படத்தை சைதன்யாவிடம் காட்டினேன். ‘புரடியூசர் செக் குடுத்த உடனே எடுத்த படம் மாதிரி இருக்கு அப்பா’ என்றாள்

அதுதானே? மாங்காய்ப்பாலுண்டு மலைமேலிருப்பவர்களின் முகம் எனக்கு எதற்கு? நான் தேங்காய்ப்பாலுண்டு தெருவில் நடப்பவன்.