நண்பர் செல்வம் கனடாவில் இருக்கிறார். காலம் என்னும் புலம்பெயர்ந்த இதழின் ஆசிரியர். கனடாவில் தமிழிலக்கியச் செயல்பாடுகளின் மையம் போன்றவர் அவர். எண்பதுகளில் தமிழகத்திலிருந்து வெளிவந்த பாலம் என்னும் சிற்றிதழுடன் தொடர்புகொண்டிருந்தவர்.
2000-த்தில் நான் அவரது இல்லத்தில் தங்கியிருந்தேன். அப்போது அவரது தாயாரும் அவருடன் இருந்தார். முதிர்ந்த வயது. ஆங்கிலம் தெரியாது. யாழ்ப்பாணத்தின் கடலோரத்தைச் சேர்ந்தவர். நான்கு நாட்களுக்குப் பின்னர்தான் தயக்கம் விலகி என்னிடம் பேசினார். பேசத் தொடங்கியதும் தன் அலைக்கழிப்புகளையும் துயரங்களையும் சொல்லிக்கொண்டே இருந்தார்.
அவரது பிரச்சினை அவருக்கு வெளியுலகமே இல்லை என்பதுதான். கடும் குளிர் காரணமாக வெளியே செல்லமுடியாது. மொழி தெரியாது. அந்த வீட்டில் அனைவருமே காலையில் வெளியே சென்றுவிடுவார்கள். செல்வமும் மனைவியும் இரண்டுவேலைகள் பார்த்த நாட்கள் அவை. குழந்தைகள் பள்ளிக்கும் பாலர்நிலையத்துக்கும் சென்றுவிடும். வீட்டில் அவர் மட்டும் இருப்பார். அவருக்குத் தெரிந்த எதுவுமே இல்லாத வீடு.
அத்துடன் குளிரினால் வரும் மூட்டுவலியும் இருந்தது. ஆனாலும் பிடிவாதமாக மாதாகோயிலுக்குச் சென்றுவந்துகொண்டிருந்தார். காரணம் அங்குதான் சில முகங்களைப் பார்க்கமுடிந்தது. அபூர்வமாக சில யாழ்ப்பாணத்துக்காரர்கள். “தம்பி எப்டியாவது என்னை யாப்பாணத்திலே கொண்டுபோய் விட்டிடச்சொல்லு” என்று என்னிடம் கேட்டுக்கொண்டார். “இங்க இருக்க ஏலாது. நான் அங்க போயில் சாவுறன்” என்றார்.
அவரது துயரத்தை நான் புரிந்துகொண்டேன். ஆனால் அவருக்கு அன்றைய யாழ்ப்பாண நிலவரத்தை எப்படிச் சொல்லமுடியும்? எவ்வளவு செலவுசெய்து எத்தனை சிரமங்களுடன் அவரை செல்வம் கனடாவுக்குக் கொண்டுவந்தார் என எப்படி விளக்கமுடியும்? நான் ஓரளவு முயன்றேன். ஆனால் அவர் அதையே திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.
பின்னர் தோன்றியது, அவருடைய வாழ்க்கை ஆயுள்தண்டனையைவிட மோசம் என. ஆயுள்கைதிக்காவது வெளியே ஓர் உலகம் உண்டு. பரோல்கூட உண்டு. ஆனால் அன்று ஐரோப்பாவுக்குப் புலம்பெயர்ந்த முதியவர்கள் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை அதுவாகவே இருந்தது.
ஆகவேதான் 2010-இல் செல்வம் என்னிடம் தொலைபேசியில் “அம்மா யாப்பாணத்திலே கொண்டு போய்விடு எண்டு சொல்லுறவள்” என்று சொன்னபோது உடனே செய்யும்படிச் சொன்னேன். அங்கே அவரது அன்னையின் தங்கைமுறையுள்ள உறவுகள் இருந்தன. புதுப்பித்தால் குடியேறக்கூடிய வீடு இருந்தது. செல்வம் யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சினார். “அந்த அச்சத்துக்கே இடமில்லை, அவர்களின் அகம் வாழும் மண் அது, அங்கே செல்வதைத்தவிர அவர்கள் அடையும் நிறைவு வேறு ஏதுமில்லை” என்று நான் சொன்னேன்.
செல்வம் அவர்களை யாழ்ப்பாணத்துக்கே கூட்டிச்சென்றார். அதில் மிகுந்த தயக்கமும் மனவலியும் அவருக்கிருந்தது. அடிக்கடி வந்து பார்த்துக்கொள்ளமுடியாதென்று அவருக்குத் தெரியும். மேலும் அவர் ஒருவகை ‘அம்மாபிள்ளை’யும்கூட. யாழ்ப்பாணம் செல்லும் வழியில் சென்னையில் இருந்து என்னிடம் தொலைபேசியில் பேசும்போதுகூட குரல் தழுதழுத்தது.
நான் அப்போது ஓர் இந்தியப்பயணத்தில் மத்தியப்பிரதேசத்தில் இருந்தேன். “மிகச்சரியான விஷயத்தைச் செய்கிறீர்கள். செடிகளை பிடுங்கிநடலாம். மரங்களை எளிதில் பிடுங்கிநட்டுவிடமுடியாது. மண் அத்தனை வல்லமை மிக்கது” என்று நான் சொன்னேன். அதைப்பற்றி நாங்கள் காரிலேயே பேசிக்கொண்டு பயணம் செய்தோம்.
யாழ்ப்பாணத்திலிருந்து மீண்டும் செல்வம் அழைத்திருந்தார். ஊருக்கு வந்ததுமே அம்மா தெளிந்துவிட்டார்கள் என்றார். “வந்து சேந்ததுமே சந்தோசமா ஆயிட்டவள். கடலுக்குப்போயி மீனு வாங்கணுமெண்டு சொல்லுறவள்” என்றாள்.
ஒருவாரம் கழித்து பேசியபோது செல்வம் சிரித்துக்கொண்டே சொன்னார். “கடல் அப்டியே இருக்கு எண்டு சொல்லுறவள். அவ இங்காலை இருந்தப்ப மீனு வித்த ஒரு வயசான மனுசன் அப்டியே இப்பவும் இருக்கிறவன். அம்மாவுக்கு அதில சந்தோசம்” அவருக்கே பழைய யாழ்ப்பாணத்தெருக்களில் நடப்பதன் உல்லாசம் இருந்தது.
எஞ்சியவற்றில் இருந்து தன் பழைய யாழ்ப்பாணத்தை அம்மா மீட்டுக்கொண்டார்கள். செல்வமும் ஏன் கனடாவை விட்டு வந்து யாழ்ப்பாணத்தில் அவர்களுடன் இருக்கக்கூடாது, இங்கே எல்லாமே நன்றாகத்தானே இருக்கிறது என்ற சிறு மனக்குறை மட்டும் எஞ்சியிருந்தது. கொஞ்சநாளில் அதுவும் விலகிவிட்டது.
கனடாவில் இல்லாத ஒன்று யாழ்ப்பாணத்தில் இருந்தது அவர்களுக்கு. ஈடுசெய்ய முடியாதது. வெப்பமான சூரியன். பொழிந்து நிறையும் வெயில். அதில் அவர்கள் மகிழ்ந்து திளைத்தார்கள். கூப்பிடும்போதெல்லாம் செல்வம் “அம்மா அங்க சந்தோசமாக இருக்கிறவள்” என்றார். அவர்கள் அங்கே சந்தோஷமாக இருக்க இருக்க கனடாவில் அவர்களை அவ்வளவுநாள் வைத்திருந்த குற்றவுணர்ச்சிக்கு அவர் ஆளாகிறாரோ என எனக்குத் தோன்றியது.
சென்ற மாதம் செல்வத்தின் அன்னை யாழ்ப்பாணத்தில் இறந்துவிட்டதாக கனடாவிலிருந்து உஷா மதிவாணன் சொன்னார். நான் செல்வத்தை தொலைபேசியில் அழைத்தேன். யாழ்ப்பாணத்தில் இருந்து சோர்ந்த குரலில் பேசினார். கடைசிமகளுடன் யாழ்ப்பாணம் வந்திருப்பதாகச் சொன்னார். அம்மாவுக்கான இறுதிச்சடங்கும் ஆன்மாவின் ஈடேற்றத்துக்காக மாதாகோயிலில் பிரார்த்தனையும் நடந்ததைச் சொன்னார்.
தெளிவத்தை ஜோசப்பைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு ஊர் திரும்பியசெய்தியை செல்வம் அனுப்பியிருந்தார். மரணம் துயரமானதுதான். ஆனால் இந்தமரணம் ஒரு மெல்லிய நிறைவையும் அளித்தது. அன்னை அவரது கடைசிநாட்களில் அவர் விரும்பிய மரணத்தை அடைந்தார். அவரது முன்னோர்கள் வாழ்ந்து அடங்கிய மண்ணில், அவரது இளமை திகழ்ந்த ஊரில், அவர் மிகவிரும்பிய சூரியனுக்குக் கீழே, அவரை வளர்த்த கடலுக்கு அருகே.