காவல் கோட்டம் 2

2. வரலாற்றில் வண்ணம் சேர்த்தல்

 

வரலாற்று நாவல் என்பது என்ன? முகங்களாக ஆக்கப்பட்ட வரலாறு என்று அதைப்பற்றி கூறலாம். வரலாறு என்ற வரைபடத்தை மரங்களும், மிருகங்களும், மக்களும் வாழ்க்கையும் ததும்பும் நிலமாக மாற்றுவதே வரலாற்று நாவலின் கலை.

சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’ ஏன் ஒரு தோல்வி என்றால், அந்நாவல் இந்தச் சவாலில் வெல்ல முடியவில்லை என்பதே. தல்ஸ்தோயின் ‘போரும் அமைதியும்’ ஏன் வெற்றிகரமான நாவல் என்றால் மொத்த வரலாற்றையும் நாமே சென்று வாழ்ந்து விட்டு மீளக்கூடிய ஒரு பரப்பாக, என்றும் உணரும் வாழ்க்கையாக அது மாற்றிவிடுகிறது என்பதே. அதாவது செல்லப்பாவின் நாவலில் நாம் வரலாற்றையே காணமுடியும். அதேசமயம் தல்ஸ்தோயின் நாவலில் நாம் வாழ்க்கையையே வரலாறாகக் காண்கிறோம். இதையே வரலாற்றுக்கு வண்ணம் சேர்க்கும் பணி என்று கூறுகிறேன்.

வரலாற்றின் பக்கங்களில் நாம் காண்பது ஒரு செய்தியை. ‘கி.பி.பதிமூன்றாம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட குமார கம்பணன் என்ற மன்னன் தன் பெரும் படையுடன் இஸ்லாமிய தளகர்த்தர்களால் ஆளப்பட்ட மதுரைமீது படையெடுத்து வந்து அதைக் கைப்பற்றினான்.’ ஆனால் அதை காவல் கோட்டம் ஒரு நிகழ்வாகச் சித்தரிக்கிறது. ‘வைகையின் நீர் மெலிந்து வடகரையோரம் நூலாக ஓடியது’ என்று ஆரம்பிக்கிறது சித்தரிப்பு. கழுத்தளவு நீரில் சிறுவர்கள் நீந்தி தாவி குதூகலிக்கிறார்கள். அவர்கள் அன்னையர் துணி துவைத்துக் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு சிறுவன் “நாயீ நாயீ” என்று கத்தினான். அவன் குரல் கேட்டு தாய் மேற்கே பார்த்தாள்.

‘பத்திருபது நாய்கள் மணல் வெளியில் தென்கரையை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்க, ஐம்பதுக்கும் மேல் நாய்கள் நீரில் நீந்திச் சென்றன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே வடகரையில் இருந்து நாய்கள் அலையலையாக பாய்ந்து வந்து நீந்திக் கடந்து மதுரைக்குச் சென்றன. கூர்நாசி காற்றைக் கிழிக்க, சாட்டை போன்ற உடல் வளைந்து வளைந்து நீள, நீண்ட கால்கள் தரையில் பட்டும் படாமல் அலைபாய்ந்து சென்றன. இப்பகுதியிலேயே இல்லாத வேறுவகை நாய்கள். மேற்கே புழுதிப்படலம் எழுந்தது….’ என்று நாயக்கர்படை மதுரைக்குள் நுழைவதன் பிரம்மாண்டமாக சித்திரம் துவங்க ஆரம்பிக்கிறது.

இத்தகைய ஒரு உயிர்ப்புள்ள சித்திரத்தை அளிப்பதற்கு இன்றியமையாதது விரிவான தகவல் அறிவும், காட்சி நுண்ணுணர்வும். ராஜபாளையம் நாய்கள் நாயக்கர்களால் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டன, அவை போர்களின்போது முன்னோடியாக ஓடவிடப்பட்டன. குறுக்குவழியை கண்டுபிடிப்பதிலும், எதிரியின் வருகையை முன்னறிவிப்பு செய்வதிலும் அவை திறன்மிக்கவை என்ற தகவல் அறிவு. கூடவே ராஜபாளையம் நாய்கள் எப்படி ஓடும் என்ற காட்சி நுட்பம். இவை இணையும்போதே வரலாற்று வரைபடத்தில் எழுத்தாளன் வண்ணம் ஏற்றமுடியும். சு.வெங்கடேசன் அவரது நாவலில் அடைந்த வெற்றி என்பது வரலாற்றை உயிர்த்துடிப்புள்ள வண்ணமயமான ஒரு வாழ்க்கைப்படலமாக மாற்றிக்காட்டியதே.

இத்தகைய தகவல் விரிவை அடைவது ஒரு மேலைநாட்டு எழுத்தாளனுக்கு மிக எளிய விஷயம். அவை பல்வேறு துறையறிஞர்களால் மிக விரிவாக எழுதப்பட்டு வாசிக்கக் கிடைக்கும். தமிழர் வரலாறு, நான் ஏற்கனவே கூறியது போல, பொது வரைபடம் ஒன்றை உருவாக்குவதுடன் முடிந்துவிடக்கூடியதாகவே இன்றுவரை உள்ளது. எண்பதுகளில் நம் கல்விப்புலத்தில் நாட்டாரியலும் சமூகவியலும் ஆர்வத்தை உருவாக்க ஆரம்பித்த பிறகே நுண் தகவல்கள் ஓரளவேனும் பதிவு பெற ஆரம்பித்தன.

ஆகவே தமிழில் எழுதும் வரலாற்றுப் புனைகதையாசிரியன் அவனே அலைந்து திரிந்து நுண்தகவல்களை களத்தில் இருந்து சேர்த்துக் கொண்டால்தான் உண்டு. பெரும்பாலும் அது போதுமானதல்ல. தமிழில் பெரும்பாலும் நுண்தகவல்கள் கொண்ட  வரலாற்றை அந்த ஆசிரியன் அவன் பிறந்து வளர்ந்த சாதி,சமூகப்புலம் சார்ந்து மட்டுமே எழுதமுடியும் என்பதே தமிழின் இன்றைய நிலை.

மதுரையைத் தாக்க வரும் நாயக்கர் படைகளின் சாதியமைப்பை வெங்கடேசன் விரிவாகவே கூறுகிறார். “கிழக்கே வைகையின் தென்புறமெங்கும் தோப்புக்குள் கொல்லவார்களின் பெரும்படை காத்திருந்தது… நாற்பத்திரண்டு குலங்கள். வைகைக்கரையில் ஆரம்பித்து புல்லாவுலவாரு, பந்துமுலுவாரு என்று அடுக்கடுக்காய் நீண்டு கடைசியில் சூர்ணவாரு வகையறக்களோடு அணிகள் நிறைவுற்றன.” அடுத்த குலத்தின் வருணை மீண்டும் வருகிறது. “கொல்லலாருகளில் வல்லக்கவாரு குலம் தென்புற முற்றுகையில் நின்றது….” அதற்குப்பின் உப்பலவாருகள். பிற உபசாதிகள்.

இந்த விரிவான தகவல்களை வெங்கடேசன் விரிவான கள ஆய்வு மூலம்தான் உருவாக்கியிருக்கிறார். வெறும் வரைபடமாக இருந்த வரலாற்றில் இந்தத் தகவல்களை பெய்து அதை வாழ்க்கையாக ஆக்கியிருக்கிறார். நாம் சோழர் படை என்கிறோம். பட்டாணிப்படை என்கிறோம். அந்தப் படையில் இருந்த மனிதர்கள் யார்? அவர்கள் அடையானம் என்ன மரபுகள் ? எதையுமே கவனிப்பதில்லை. அவை நம் வரலாற்றில் இருப்பதில்லை. அவர்கள் அந்த மன்னரின் ஓர் ஆயுதம் என்று மட்டுமே கண்ணிலெடுத்துக் கொள்ளப்படுவார்கள். சிலசமயம் அபூர்வமாக பெருந்தளபதிகளின் பெயர்கள் இருக்கும்.

ஆனால் ஒரு இந்திய, தமிழ் ராணுவம் என்பது சாதி மதங்களும் குலங்களுமாகவே இருந்திருக்க முடியும். அது எப்படி அணிவகுத்து சென்றது, எந்த ஆயுதங்களை வைத்திருந்தது, எதை உண்டது, அதன் உட்கூறுகளின் உறவுநிலைகள் என்ன, எல்லாவற்றையும் அந்த சாதி, மத, குல அடையாளத்தை வைத்தே நம்மால் ஊகிக்க முடியும். அந்த தகவல்கள் இல்லாத ‘படை’ என்பது வெறும் ஒரு சொல்தான். அதைத்தான் வெங்கடேசன் உடைக்கிறார். உருப்பெருக்கிக் கண்ணாடி மேலும் மேலும் கூர்மை கொண்டு ஒரு ராணுவத்தையே மனிதர்களாக மாற்றிக் காட்டுகிறது.

ஒரு வரலாற்றுநாவல் என்பது தகவல்களே என்ற கூற்றை மேலும் நிறுவுகிறது இந்நாவல். வரலாற்றுத் தகவல்கள், மேலும் தகவல்கள், மேன்மேலும் தகவல்கள் என பெருகிச்செல்லும் இதந் ஓட்டம் சென்று மறைந்த ஒரு காலத்தை நம் கண்முன் விரிக்கிறது. ஆனால் இந்த மொழிபு வெறும் தகவல்வரியையாக மட்டுமே இருப்பதில்லை என்பதையே இந்நாவலின் முக்கியமான வெற்றி என்று நினைக்கிறேன்.வைந்தகுலத்தகவல்கள் நமக்குக் காட்டும் சித்திரம் என்பது ஒரு மன்னன் ஒரு நகரத்தைக் கைப்பற்றும் போர் அல்லது இது, ஒரு சாதி சமூகம் இன்னொரு சாதி சமூகத்தை  வெல்லும் போர் என்பதே. ஆகவே தகவல்கள் மிக முக்கியமான சித்திரங்களாக ஆகின்றன.

உதாரணமாக மதுரை கோட்டையை நாயக்கர் படைகள் சூழ்ந்து கொள்ளும் காட்சி. உப்பலவாரு குலத்தைச் சேர்ந்தவர்கள் அகழியைத் தகர்க்கும் காட்சி விரிவாகவே காட்டப்படுகிறது. மதுரைக்கு நான்கு கல் தூரத்தில் உள்ள அனுப்பானடி கால்வாயை தேர்வு செய்து அங்கிருந்தே தோண்டிக் கொண்டு வந்த கால்வாயை அகழியுடன் இணைக்கிறார்கள். மரங்களுக்குள் ரகசியமாக வந்த அந்த ஓடை அகழியைத் தொட்டதும் அகழிநீர் கண்மாய்க்குள் சென்றுவிட்டது. வறண்ட அகழியை எளிதில் தாண்டுகிறார்கள். போரை வெறுமே அலங்கார வர்ணனைகளாக சொல்லாமல் நுண்ணிய காட்சித் தகவல்களுடன் கண்முன் காட்டுகிறது காவல் கோட்டம்.

காவல் கோட்டத்தில் முதல் நூறு பக்கங்கள் அதன் வரலாற்றுப் பார்வையை வரலாறுகளைத் திருப்பிச் சொல்வதற்கு அளிக்கப்பட்டுள்ளன. புனைவின் தரத்தை வைத்துப் பார்க்கும்போது இந்நாவலின் பலவீனமான பகுதிகளாகவும் இவையே உள்ளன என்று கூறவேண்டும். இப்பகுதிகள் இன்னும் கவனத்துடனும் உழைப்புடனும் எழுதப்பட்டிருக்கலாம். அதைவிட இன்னும் சிறப்பாக ஒரு நூல்தொகுப்பாலரால் வெட்டப்பட்டிருக்கலாம். ஆகவே நாவலுக்குள் நுழையும்போது வாசகனுக்கு ஒரு மானசீகமான தடை உருவானால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சுருக்கமாக தாவித்தாவிச் செல்லும் மொழிபு மூலம் விஜயநகரம் உருவான வரலாறும் அதிலிருந்து மதுரை கிளைத்த கதையும் கூறப்படுகின்றன. விஜயநகரப் பேரரசினை காப்பு பலிஜர்கள் கைப்பற்றி ஆளும் வர்க்கமாக ஆகிறார்கள். விஜயநகரப் பேரரசு உருவாவதற்காக உதிரம் சிந்திய கொல்லவார் சாதி அன்னியப்படுகிறது. கொல்லவார் தலைவரான தென்னக மகாமண்டடேஸ்வரன் நாகம நாயக்கன் மதுரையை கைப்பற்றும்படி விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால் அனுப்பப்படுகிறான். மதுரையைக் கைப்பற்றிய நாகம நாயக்கன் மதுரையை கொல்லவார்களின் நாடாக ஆக்க முயல்கிறான்.

நாகம நாயக்கனின் ஒரே மகன் விஸ்வநாத நாயக்கனை தந்தையைப் பிடித்துவர அனுப்புகிறார் கிருஷ்ண தேவராயர். மதுரையைப் பிடித்த விசுவாத நாயக்கர் தந்தையைச் சிறைப் பிடித்து விஜயநகருக்குக் கொண்டு செல்கிறார். அங்கே நாகம நாயக்கர் சிறையில் போடப்படுகிறார். ஆனால் விசுவநாத நாயக்கரின் தீரத்தை மெச்சிய கிருஷ்ண தேவராயர் நாம நாயக்கரை விடுதலை செய்கிறார். மதுரையை விசுவநாத நாயக்கருக்கு தன்னாட்சி கொண்ட நாடாக அளித்து விடுகிறார். இவ்வாறு மதுரையில் நாயக்கராட்சி உருவாகிறது. [தமிழில் இவ்வரலாற்றை ஒட்டி அகிலன் ‘வெற்றித்திருநகர்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார்]

பெரும்பாலும் விஜயநகரப் பேரரசு குறித்த வரலாற்றுப் பதிவுகளின் மறு பதிவாகமாகவே நீளும் இப்பகுதி வரலாற்றை நேரடியாகப் படிப்பதுபோல உள்ளது. நூல்வரலாற்றை அப்படியே காட்ட வேண்டிய புனைவுத்தேவை இருந்தாலும் இதை இன்னமும் தீவிரமாக எழுதியிருக்கலாம் என்றே நினைக்கிறேன். இந்நாவலில் இந்த வரலாறு ஆசிரியரால் ஒருவகை கலவையான முறையில்  எழுதப்பட்டிருக்கிறது. சில இடங்கள் நாடகீயமான தருணங்களாக விரிக்கப்பட்டிருக்கின்றன. பல இடங்கள் வெறும் குறிப்புகளாக கடந்துசெல்லப்படுகின்றன.

அதேசமயம் கவனித்து வாசிப்பவர்கள் அந்த அரசியல் பரிணாமத்தில் உள்ள துரோகம் என்ற அம்சத்துக்கு அழுத்தம் கொடுத்து எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். கிருஷ்ணதேவராயரை தூக்கி வளர்த்து அவருக்கு அமைச்சராக இருந்த மூத்த பிராமணனாகிய திம்மரசு கிருஷ்ண தேவராயரின் ஒரே மகனே விஷம் வைத்துக் கொல்கிறார். அவரைச் சுற்றி இருந்த விசுவாசிகளே அதற்கு உடந்தையாக இருந்தார்கள். ஆனால் கிருஷ்ண தேவராயரின் சாளுவ வம்சமே அதேபோன்ற அரண்மணைச் சதிகள் மற்றும் கொலைகள் மூலம் அதிகாரத்துக்கு வந்ததுதான்.

சதிகள் துரோகங்கள் வழியாக முன்னகரும் ஒரு வரலாற்றுச் சித்திரத்தின் நடுவேதான் விசுவநாத நாயக்கனின் அர்ப்பணிப்பும் நேர்மையும் உணர்ச்சிகரமான ஒரு அத்தியாயமாக எழுந்து வருகின்றன. சிறையிலிருக்கும் நாகம நாயக்கரை கிருஷ்ண தேவராயர் சந்திக்கும் காட்சியில் இந்த வரலாற்றுப் பின்புலம்தான் மேலதிக அழுத்தத்தை அளித்து அதை ஒரு பெரும் தொடக்கப்புள்ளியாக ஆக்குகிறது. உண்மையில் காவல் கோட்டம் நாவலின் தொடக்கப் புள்ளியே அதுதான். துரோக நதியில் பூத்த ஓர் அழகியமலர் அந்த நெகிழ்ச்சி.

மதுரையைப் பெற்ற விசுவநாத நாயக்கன் தன் பிரியத்துக்குரிய துணைவன் அரியநாத முதலியாரின் உதவியுடன் தென்னகத்தில் ஒருங்கிணையுள்ள ஓர் வலுவான அரசை உருவாக்கும் சித்திரம்  அதன்பின் கூறப்படுகிறது. காகதியராணி ருத்ராம்பாள் தன் நாட்டை எழுபத்திரண்டு பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்தாள். அதேமுறைதான் விஜயநகரத்திலும் இருந்தது. அரியநாதர் மதுரையை பாளையப்பட்டுக்களாக ப்ரிந்த்தார்.. குமார கம்பணன் காலகட்டத்திலேயே மதுரைப்பக்கம் வந்து குடியேறிய நாயக்க வம்சங்கள் ஆரம்பகட்ட பாளையப்பட்டுக்களாக அங்கீகரிக்கப்பட்டன. ஒவ்வொரு பகுதியிலும் செல்வாக்குள்ள சிறு ஆட்சியாளர்கள் பாளையப்பட்டுக்களாக அங்கீகரிக்கப்பட்டு மதுரை ஆட்சிக்கு கீழே கொண்டு வரப்பட்டனர். மதுரை அரசு உருவாகி வருகிறது.

இந்தச்சித்திரம் ஏன் இங்கே முக்கியமானது என்று பின்னர் தாதனூரின் வரலாறு வரும்போது நமக்குப் புரிகிறது. இதன் மூலம் இந்நாவல் வரலாற்றின் இயக்கத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறது. துரோகம்,விசுவாசம் இரண்டும் ஒருநாணயத்தின் இரு பக்கங்களாக இருப்பதே அரசாட்சி. நாகம நாயக்கரின் துரோகத்துக்கும் விசுவநாத நாயக்கரின் விசுவாசத்துக்கும் ஒரே சமயம் கிடைத்த பரிசுதான் மதுரை.

மதுரை உருவாவதில் உள்ள அந்த அம்சம், எதிர்தரப்பை அணைத்துக்கொள்ளும் கூறு, தொடர்ந்து ஒருமுக்கியமான ஆட்சித்தந்திரமாக நீடிக்கிறது. ஏற்கனவே மது¨ரை நிலத்தை ஆண்டுவந்த தங்கள் எதிரிகளான சிறு ஆட்சியாளர்களை நட்பாக்கி அவர்களுக்கே அந்த நிலப்பகுதியை ஆட்சி செய்யக்கொடுத்து தங்கள் பாளையக்காரர்களாக ஆக்கிக்கொண்டு மதுரையில் ஆட்சியமைக்கிறார்கள் நாயக்கர்கள். அந்த பாளையக்காரர்களின் ஆட்சியும் அப்படித்தான், ஒரு இடத்தின்மீது யாருக்கு ஆதிக்கமோ அவனையே ஊர்த்தலைவனாக்குகிறார்கள். இந்த மனநிலையே திருடனையே காவலனாக நியமிக்கும் மனநிலைக்கு ஊற்றுமுகம்.
மதுரை நாயக்கர் அரசின் உருவாக்கத்தை விசுவநாத நாயக்கர் மதுரை கோட்டையை கட்டிய காட்சியை விரிவாக சொல்வதன் மூலம் சித்தரிக்கிறார் வெங்கடேசன். அந்தக் கோட்டையே இந்த பெரும் நாவலின் மையம். பின்னர் கதை அந்தக் கோட்டையை மையமாக்கித்தான் பெருகிச் செல்கிறது. ஏற்கனவே இருந்த சிறிய கோட்டை உடைக்கப்பட்டு அகழியில் போடப்பட்டு அகழி தூர்க்கப்படுகிறது. அது பாண்டியன் அகழியாதலால் அந்த அகழி இருந்த இடம் பாண்டியன் அகழித்தெரு என்ற பேரில் ஒரு விதியாக ஆகிறது. எர்ர ரதிம்மன் என்ற சக்கிலிய இளைஞன் தன் தலையை தானே அறுத்து களப்பலியாக மதுரை கோட்டைக்கு கால்கோள் நாட்டப்படுகிறது. கோட்டை நாயக்கராட்சியின் வலுவான அடித்தளத்தில் குறியீடாகிறது.

இந்த வென்று உள்ளிழுத்தல் மூலம் நாயக்கர் ஆட்சி தென்னகச் சாதிகளின் மீது முழுமையான அதிகாரத்தை அடைகிறது. தோற்கடிக்கப்பட்டு விளிம்புக்குத் தள்ளப்பட்ட பிறமலைக்கள்ளர் போன்ற நிலமற்ற சாதிகள் சிறுசிறு எதிர்ப்புகள் வழியாக தங்களை வெளிக்காட்டியபடி இருக்கிறார்கள்.   அந்த மக்களின் ஒரு மையமாக இந்நாவலில் தாதனூர் விவரிக்கப்படுகிறது. தாதனூர்காரனாகிய கழுவன் என்பவன் கட்டுக்காவல் மிகுந்த திருமலை நாயக்கர் அரண்மனையில் கன்னம் வைத்து நுழைந்து மன்னரின் முத்திரை மோதிரத்தை திருடி வந்துவிடுகிறான். அரண்டு போகிறார் நாயக்கர். அரச முத்திரையை திருப்பிக் கொண்டு வருபவனுக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கிறார்.

தாதனூர்க்காரனே இதைச் செய்திருக்கமுடியும் என்று காவலர்களுக்கு தெரிகிறது. துப்பு பேசி கடைசியில் தாதனூர்க்காரர்கள் கழுவனை கொண்டுவருகிறார்கள். திருடிய குற்றத்துக்கு கழுவனுக்குச் சவுக்கடி தண்டனை விதித்த நாயக்கர் அவனுடைய அபாரமான திறமையைப் பாராட்டி அவனுக்கே கோட்டைக் காவலன் பொறுப்பை அளிக்கிறார். பல நூற்றாண்டுகளாக அதிகாரம் இழந்து கள்வர் நிலமாக மாறிவிட்டிருந்த தாதனூர் மீண்டும் அரசதிகாரத்தின் பங்கை அடைகிறது. அதன்பிறகு இந்த பெரும்நாவல் கிட்டத்தட்ட தாதனூர் கள்ளர்களின் கதையாகவே விரிகிறது. கதையின் ஒரு சரடு மதுரை மீதான படையெடுப்புகள் மற்றும் ஆதிக்கத்தின் கதையாக நீளும்போது இன்னொரு சரடு அதற்கு தாதனூர் அளிக்கும் எதிர்வினையாக வளர்கிறது.

இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் இதுதான். மதுரை நாயக்கர் ஆட்சியில் ஒவ்வொரு சாதியும் அவர்களின் அதிகாரத்தை நிலம் மூலமே அடைந்தார்கள். அதிக நிலத்தை கையடக்கி வைத்திருந்து அரசுடன்  போராடியவர்கள் அதிக அதிகாரம் பெற்றார்கள். அதாவது அரசுக்குக் கொடுக்கும் எதிர்ப்பே  அரசின் அதிகாரத்தில் உள்ள பங்காக மாறுகிறது. அப்படியானால் நிலமற்றவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் அரசுக்கு அளிக்கும் எதிர்ப்பு, அவர்களின் பேரம்பேசும் ஆற்றலை உருவாக்குவது, திருட்டே. இது பிறமலைக்கள்ளர் மட்டுமல்ல குறவர்கள் போன்ற நாடோடிச்சமூகங்களும் செய்வது என்கிறது நாவல்.

இந்நாவலின் தொடக்கத்தை ஊகிப்பது ஓர் ஆர்வமூட்டும் விஷயம். இந்நாவலின் புனைவின் சரியான தொடக்கம் என்பது திருமலைநாயக்கரிடம் தாதனூர் மதுரையின் காவலுரிமையைப் பெற்ற தருணம்தான். ஆனால் அந்தத் தருணம் அமைந்திருப்பது நாயக்கர்கள் மதுரையைக் கைப்பற்றிய இன்னொரு பெருவரலாற்றின் பின்னணியில். அப்படியானால் தொடக்கம் என்பது விசுவநாத நாயக்கன் மதுரையைக் கைப்பற்றுவதில்தான். ஆனால் அந்த தொடக்கத்தின் தொடக்கம் என்பது குமாரகம்பணன் மதுரையை கைப்பற்றுவது. ஆனால் அந்த வரலாற்றின் தொடக்கமாக இன்னொரு புள்ளி உள்ளது. அது டெல்லி சுல்தானின் தளபதியான மாலிக் காபூரின் படையெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு மதுரையை கள்ளர்கள் கைவிட்டுச் செல்வது.

மதுரையை நீங்கிய காவலன் மனைவி தாதனூருக்குமேலே இருக்கும் அமணர்குகையில்தான் சென்று தங்குகிறாள். இந்த  ஒட்டுமொத்த நாவலையும் இன்னொரு கோணத்தில் வாசிப்பதற்கான ஒரு சிறு குறிப்பாக அதை எடுத்துக்கொள்ளலாம். அதாவது மதுரையின் காவல் என்பது தாதனூருக்கு என்றுமுள்ள உரிமையாகவே இருந்துள்ளது. மாலிக் காபூர் படையெடுப்பில் அவர்கள் தோற்கடிக்கப்படும்போது அவர்கள் காடுகளுக்குத்தள்ளப்படுகிறார்கள். உடனே திருடர்களாக ஆகிறார்கள். அடுத்து மீண்டும் அவர்களுக்கு காவலுரிமை கிடைப்பது திருமலைநாயக்கர் ஆட்சியில். இந்த இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள வரலாறாகவே இந்நாவலில் விஜயநகரத்தின் எழுச்சியும் அது மதுரையைக் கைப்பற்றியதும் சொல்லபப்டுகிறது.

அந்தக்காவலுரிமையை தாதனூர் கள்ளர்கள் மீண்டும் இழப்பது இன்னொரு படையெடுப்பால். ஆங்கிலேயர் ஆட்சி அவர்களை மீண்டும் வெறும் திருடர்களாக ஆக்குகிறது. அப்படியானால்  பாண்டியர் ஆட்சிக்கு முன்னர் சோழர்களின் படையெடுப்பில் அவர்கள் எப்படி இருந்தார்கள்? நாவல் கொடுக்கும் குறிப்பை வைத்துப் பார்த்தால் திருடர்களாகத்தான்! ஆட்சியதிகாரத்தில் காவலர்களாகவும் அதிலிருந்து வெளியேற்றப்படுகையில் திருடர்களாகவும் இருக்கும் குடிமக்கள் அவர்கள்.

திருடர்களைக் குடிகளாகக் கொண்ட அரசாங்கத்தின் கதையை சொல்கிறது காவல்கோட்டம். இன்னொரு கோணத்தில் பார்த்தால் சதிகாரர்களை அரசர்களாகக் கொண்ட திருடர்களின் கதையைச் சொல்கிறது. இருகதைகளையும் மாறி மாறிப்பின்னிச் செல்லும் இந்நாவலின் மொழிபு தன் நோக்கத்துக்கு எது தேவையோ அதை மட்டும் விரித்துரைக்கிறது. ஏற்கனவே சொன்னதைப்போல விஜயநகர வரலாற்றில் சதிகளையே அது விரிக்கிறது. அதன் இணையோட்டமாகவே குடிகளின் திருட்டு செல்கிறது. சதி அரசர்களின் பேரசக்தி என்றால் திருட்டு குடிகளின் பேரசக்தி.

இந்த அமைப்பு நாவலின் வரலாற்றுச் சித்தரிப்புக்கு பொருத்தமாக உள்ளது. வரலாற்றின் பெருமொழிபு (grand narration) ஒரு ஓட்டம் வரலாற்றின் நுண் மொழிபு (micro narration) இன்னொரு ஓட்டம். அந்த இரு ஓட்டங்களும் ஒன்றை ஒன்று விளக்கியும் நிரப்பியும் நகரும் சித்திரமே இந்நாவல் உருவாக்கும் வரலாற்றுப் பாடம் ஆகும். வெங்கடேசன் மையப்படுத்தவது வரலாற்றின் நுண்மொழிபைத்தான். அந்த நுண்மொழிபு அமைந்திருக்கும் ஒட்டுமொத்த வரைபடம் என்ற அளவிலேயே பெருமொழிபு கூறப்படுகிறது.

இருவகையில் இந்நாவல் வரலாற்றின் பெருமொழிபை விரித்துச் சொல்கிறது. இந்நாவலில் உள்ல பெருமொழிபுகள் இரண்டு. இரண்டுக்கும் தெளிவான புனைவுநோக்கம் உள்ளது. ஒன்று நாயக்கர்களின் எழுச்சியும், மதுரை ஆக்ரமிப்பும், அரண்மனைச் சதிகளும். அந்தப் பின்னணியில்தான் தாதனூர்க் கள்ளர்களின் முதற்கட்ட வாழ்க்கை சொல்லபப்டுகிறது.  அதாவது அவர்கள் அதிகாரம் பெற்ற கதை. அதேபோல இரண்டாவது பெருமொழிபாக பிரிட்டிஷார் மதுரையைப்பிடித்ததும் அவர்கள் அதை நிர்வாகம் செய்வதற்காக மாற்றியமைப்பதும் விரிவாகச் சொல்லப்படுகிறது. அந்தப்பின்னணியிலேயே தாதனூரின் அழிவு சொல்லப்படுகிறது

இந்த இரு பெருமொழிபுகளும் பெரும்பாலும் எழுதப்பட்ட வரலாற்றை மிக ஒட்டிச் செல்லும்படி எழுதப்பட்டுள்ளன. கற்பனைசார்ந்த ஊடுருவல்கள் இவற்றில் மிகக்குறைவு.  நாயக்கர் வரலாறு தெலுங்கில் எழுதப்பட்ட நாயக்கர் கால எழுத்துக்கள் மற்றும் வரலாற்று நூல்களில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் வரலாறு அக்கால பிரிட்டிஷ் ஆவணங்கள் மற்றும் ஜேசுசபை கடிதங்களில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது.

 

இந்த வரலாறு ஏன் இப்படி நேரடியாகவே நூல்களைச் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற வினாவுக்கு நாவல் கூறும் பதில் என்னவென்றால் மறுபக்கமாக வரும் தாதனூரின் கதை முற்றிலும் எழுதப்படாத வரலாறு என்பதே. எழுதப்பட்ட வரலாற்றில் எழுதப்படாத வரலாறு அமர்ந்திருக்கும் விதமே இந்நாவல் கவனப்படுத்த விரும்பும் கரு.

இந்நாவலை தாதனூர் கள்ளர்களின் கதையாகவே கூறியிருக்க முடியும். அதுவே நம்முடைய தமிழ் இலக்கிய வழக்கம். ஆனால் தாதனூர் கள்ளர்களின் ஒவ்வொரு வாழ்க்கைக்கூறும் மதுரை வரலாற்றின் பெரும் சித்திரத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்று வெங்கடேசன் கருதுகிறார்.ஆகவே அவருக்குத் தோன்றும் வரலாற்றுச் சித்திரம் இவ்விரு வரலாறுகளுக்கும் இடையே உள்ள முரணியக்கம்தான். அதையே அவர் தன் நாவலுக்கான வடிவமாகச் சொல்கிறார்.

தாதனூர் வரலாறு சொல்லப்படும்போது நாவலின் சித்தரிப்புமுறை முற்றாக மாறுபடுகிறது. நூற்றுக்கணக்கான ஜதீகங்கள், ஆசாரங்கள், மரபுகளினால் அந்த வரலாறு முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. ஒத்தப்பல்லன் வகையறா காக்குவீரன் கொடிவழிக்கும் காளைவகையறா சின்னராசு கொடி வழிக்கும் காணிக்கைவரி கொடுக்க வேண்டிய மரபு உருவான அந்த ஜல்லிக்கட்டு காட்சியானது நாவலின் பெருமொழிபு மேலும் விரிவான நுண்மொழிபுக்கு இடம் விட்டு பின்னகர்வதைக் காட்டுகிறது. அது வரை சதிகள், தியாகங்கள், அதிகாரக்கைமாற்றங்கள் என நகர்ந்த வரலாற்றுக்கு தொடர்பே இல்லாமல் வெறும் மானுடத்தசைகளால் ஆன இன்னொரு உலகம் இது.

நடுவப்பாளையம் கனகலிங்கம் பிள்ளை வீட்டுக்கு கன்னம் வைக்கப்போன தாதனூர் ராக்கன் கொத்து கிளம்பிச் சென்று கன்னம் வைத்த துளை வரியாக மொண்டி உள்ளே தலையை விட்டபோது தலை கரகரவென்று அரியப்பட்டு காலைப்பிடித்து இழுத்தவர்களுக்கு முண்டம் மட்டும் கிடைப்பதும், கொங்குப் போரில் மூக்கு அறுபட்ட மொண்டியின் தலை ஒரு ஆதாரமாக ஆகும் என்று உணர்ந்து ஓடிப்போன தாதனூர் ராக்கன் குழு திரும்பி வந்து அந்தத் தலையை அழிப்பதும் இன்னொரு உத்வேகமான அடுத்த சித்தரிப்பு.

அதிலிருந்து கன்னம் வழியாக முதலில் ஒரு கம்பில் துணி சுற்றி உள்ளேவிடும் மரபு உருவாகிறது. அதற்கு மொண்டிக்கொம்பு என்றுபெயர் இவ்வாறாக கடுமையான வண்ணங்களில் தீட்டப்பட்ட தாதனூரின் கதைகள் வரிசையாக வருகின்றன. தாதனூரில் இறப்பவர்கள் நேராக வாய்மொழி வரலாற்றில் சென்று அமர்ந்து தொன்ம வடிவம் கொள்கிறார்கள்.இத்தகைய பலநூறு ஆயிரம் பல்லாயிரம் தனிக்கதைகளினால் ஆனதே நாம் காணும் வரலாறு என்ற நாவலின் அணுகுமுறையை தெளிவாக்குகின்றன.

தாதனூர் கதைகள் வழியாக முதலில் தாதனூரின் தொன்மங்களும் ஆசாரங்களும் உருவானவிதம் சொல்லப்படும்போதே தாதனூர் தான் சொல்லி வரும் மதுரை வரலாற்றின் ஒரு சிறுதுளிதான் என்பதையும் சொல்லியபடி வருகிறார். சு.வெங்கடேசன் இரு கதைகளும் இரு தடங்களில் இணையாக நகர்கின்றன. தாதனூரின் மீது நாவல் குவியும்போது மிகத்தொலைவில் மெல்லிய காலடிகளுடன் வரலாறு செல்வதையே நாம் காண்கிறோம்.

தாதனூர் விரிய ஆரம்பித்ததுமே மதுரையின் பெருமொழிபு பல இடங்களில் நேரடியான வரலாற்றுக் குறிப்புகளாகச் சிறுத்து தாவித் தாவிச் செல்கிறது. வரலாற்றின் பெரும் மாற்றங்கள் எளிய நினைவுறுத்தல்களாக மாறி மின்னிச் செல்கின்றன. ராணி மீனாட்சியை சந்தா சாகிப் ஏமாற்றி மதுரையைப் பிடித்தது நாயக்கர் ஆட்சியின் இறுதிப்புள்ளி. தாதனூரின் அதிகாரம் இல்லாமலாவது அங்கிருந்தே. நாயக்கர் ஆட்சி உருவானதை அத்தனை விரிவாகச் சொல்லும் நாவல் அதன் வீழ்ச்சியை மட்டும் சில வரிகளில் சொல்லிச்செல்கிறது.

அதேபோல மதுரையை ஆண்ட கான் சாகிப் (மருதநாயகம்) வெள்ளையர்களால் தோற்கடிக்கப்பட்டு மதுரையில் வெள்ளையர் ஆட்சி வலுவாக வேரூன்றுவது இன்னொரு யுகத்தின் தொடக்கம். அதுவே தாதனூர்க்கள்ளர்களை அழிக்கிறது. ஆனால் அதுவும் மிகச்சில வரிகளில் கூறப்பட்டிருக்கின்றது. ஏனென்றால் தாதனூரைப் பொறுத்தவரை அதை நேரடியாக வந்து தொட்டுச் சீண்டும்போது மட்டுமே அது வரலாற்றை திரும்பிப்பார்க்கிறது.

தாதனூர் கள்ளர்களின் வரலாறு இன்றுவரை தமிழிலக்கியம் கள்ளர்களைப் பற்றி எழுதியிராத அதிநுட்பத்துடன் பதிவாகியிருக்கிறது. தமிழில் கள்ளர்களைப்பற்றி எழுதப்பட்ட முதன்மையான இலக்கிய ஆக்கம் மட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பரிணாம வரலாற்றைப்பற்றி எழுதப்பட்ட நாவல்களிலேயே முக்கியமான ஆக்கமும் இதுவே. தாதனூரில் தொழில் களவு அல்ல, அவர்களுடையது ‘ராஜகளவு’. அது எடுக்கப்பட்ட பொருளின் அளவை வைத்து மதிப்பிடப்படும் களவு அல்ல. எடுத்தவிதத்தின் சாகசத்தை வைத்தே மதிப்பிடப்படும் களவு. ஒரு சாதாரண களவில் பெரும் செல்வம் கிடைத்தால்கூட வீம்புக்காக அதை விட்டுவிட்டு வருவார்கள் அவர்கள். களவுதான் அவர்களின் கௌரவம்,

களவு நூற்றாண்டுகளாக நடந்து நடந்து அதன் அனைத்து நுட்பங்களும் அவர்களின் குலத்தின் ஆழ்மனமாக மாறியிருந்தன. அதற்கான மிக விரிவான சமூக அமைப்புகள் உருவாகியிருந்தன. துப்பு கொடுப்பவர்கள், களவுக்குப்பின் சமரசம் பேசும் அமைப்புகள், பஞ்சாயத்துக்கள், பலிகள் என்று களவே ஒரு பெரிய சமூக ஆசாரமாக, ஒரு சமூக நிறுவனமாக அவர்களில் மாறியிருப்பதை விரிவாக வரைந்து காட்டுகிறது காவல் கோட்டம்.

களவைப் பற்றிய தகவல்களும் நுண் சித்தரிப்புகளும் இந்நாவலின் முக்கியமான பலம் என்று கூறலாம். கல்வீட்டுச் சுவரில் கல்லிடுக்கில் உள்ள காரையை தோண்டும்போது எறும்பு நுழைகிற அளவுக்கே காரையை உதிர்த்து தோண்டும் நேர்த்தி, தோண்டிய விளிம்பில் ரம்பம் வைத்து அறுத்ததைப் போல் நேர்த்தியாக சுவர் அறுக்கப்பட்டிருக்கும் விதம் என்று கன்னம் வைக்கும் கலை விரிவாக வருகிறது. உள்ளே நுழையும்போது பாம்பு தன் புற்றுக்குள் நுழைபவது போல நுழைகிறார்கள்.

ஆந்தைகளின் குரலை வைத்து இடத்தையும் காலத்தையும் ஆள் நடமாட்டத்தையும் அறிகிறார்கள். ஒவ்வொரு பறவைச்சத்தத்தையும் கவனித்து கண்பார்வைக்கு நிகராக காதோசையை பயன்படுத்துகிறார்கள். தூங்குபவர்கள் நடுவே அமர்ந்து பொய்க்குரட்டை விட்டு தூங்குபவர்களின் தூக்கத்தின் ஆழத்தை அளக்கிறார்கள். ஆனால் எதிர் குரட்டை மனிதர்களை தவிர பிற உயிர்களைக் கலைத்துவிடும் என்று ஒரு நிபுணன் இன்னொருவனுக்குச் சொல்கிறான்.

“சித்திரை மாசதத்தில் கட்டிலுகால் வெள்ளி அடிவானத்து தூர்ல இருந்து ஆள் உசரத்துக்காவது மேல தெரிஞ்ச பெறகுதாண்டா களவுக்குப் போகணும். நீ என்னடான்னா அதுக்குள்ள கல்லை நோண்டி உள்ள நுளைஞ்சிட்டே” என்று பரம்பரை ஞானம் பேசுகிறது.
தாதனூர் களவின் அதிநுட்பங்கள் இந்நாவலின் மேல்தளப்புனைவாகிய வரலாற்று விவரிப்பின் அடித்தளமாக அமைகின்றன.

தாதனூர் பெயரைச் சொல்லி தாதனூர்காரர்களுக்கு முன்னதாகவே சென்று திருடும் சின்னானை மாயாண்டி கண்டு பிடிக்கிறான். அந்த நிபுணத்துவத்தை மெச்சி தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். ஆனால் பிற ஒருவனை களவூராகிய தாதனூர் ஊருக்குள் விடுவதில்லை. ஆகவே சின்னான் அமணர் மலையின் குகைகளில் தங்கிக் கொள்கிறான். அவனும் தாதனூர் கொடிவழிதான் என்பதை மாயாண்டி அறியும் இடம் தாதனூரின் மாறாத ஆசாரத்திற்கும் குல முறைகளுக்கும் சான்று. தேவிபட்டினத்திலிருந்து திரும்பி வரும் வழியில் கருப்பு கோயிலில் ஒரு தூக்கம் போடுகிறார்கள். அப்போது சின்னான் தாதனூரின் குலதெய்வமாகிய சடச்சி ஆலமரத்தின் பெரும் தூர் பக்கமாகச் சென்று ரகசியமாக அதைக் கும்பிட்டுவிட்டு வந்துதான் கருப்பனைக் கும்பிடுகிறான். ஆகவே அவன் தாதனூர்க்காரனே என்று தெரியவருகிறது.

சின்னானை விரும்பி ஊர்ப்பெண் ஒருத்தி அவனுடன் சென்று அமண மலையில் குடித்தனம் இருக்கிறாள். ஆனால் சின்னான் தான் யார் என்பதை அவளிடமும் கூறவில்லை. கடைசியில் அது தெரியவருகிறது. சின்னிவிரன் பட்டியைச் சேர்ந்த நல்லையாதான் அவன். பக்கத்து ஊரைச்சேர்ந்த ஒருவன் சின்னிவீரம்பட்டியில் வந்து இரவு தூங்கும்போது தவறுதலாகக் கொல்லப்படுகிறான். கொல்லப்பட்டவனின் ஊர் பழிவாங்க வரும்போது சின்னிவீரம்பட்டிக்காரர்கள் சமரசம் பேசுகிறார்கள். அதன்படி நல்லையாவை பதிலுக்குப் பலி கொடுக்க ஒத்துக்கொள்கிறார்கள்

நல்லையாவை ஊரே கொண்டாடுகிறது. உணவூட்டுகிறது. சீராட்டுகிறது. அவன் மரணநாள் நெருங்கி வருகிறது. உயிருக்குப் பயந்த அவன் தன் தாயின் ஊரான தாதனூருக்குச் சென்றுவிடுகிறான். தாதனூரின் வாக்கை உதறி வாழ்க்கைப்பட்டு போன ஒரு பெண்ணின் மகன் அவன்.  நல்லையாவுக்குப் பதிலாக பகை ஊருக்கு பலி அளிக்கப்பட்டவனின் பிள்ளைகளுக்கு நல்லையா என்ற சின்னானை பலிகொள்ள உரிமை இருக்கிறது.  அவர்கள் வந்து சின்னானை கொல்கிறார்கள். தாதனூர் அவனை சின்னிவீரம்பட்டியிடம் இருந்து காப்பாற்றவில்லை.

புனைவும் சித்தரிப்புத் திறனும் உச்சம் கொண்டுள்ள இடம் இது . ஒருவனை ஊரின் பொருட்டு பலியாகத் தேர்ந்தெடுப்பதில் உள்ள இயந்திரத்தனமான ஆசாரம், அதன் இரக்கமற்ற குளுமை, அந்தக்காலத்து மனநிலைகளுக்குள் நம்மை கூட்டிச் செல்கிறது. அங்கே மானுட உயிர் என்பது சற்றும் பொருட்டில்லாத விஷயம். மரணம் என்பது மிக எளிய ஓர் விளையாட்டு. மறவர்கள் பிறந்து மடிந்து கொண்டே இருக்கிறார்கள் – பிறப்பதே கொலையுண்டு அழியத்தான் என்பதுபோல. வஞ்சமும் கொலைகளும் ஒன்றில் இருந்து ஒன்றாக முளைத்தபடியே உள்ளன.

இதற்கிணையான தருணங்களை சினுவா ஆச்சிபி, பென் ஒக்ரி போன்ற ஆப்ரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளில் காணலாம்.கிட்டத்தட்ட இதனுடன் ஒப்பிட்டதாக நிகழ்வு. சினுவா ஆச்சிபியின் Things Fall Apart (தமிழில் ‘சிதைவுகள்’ என்.கெ.மகாலிங்கம்) நாவலில் காணலாம். அதன் கதாநாயகனாகிய ஓங்கோங்வா பணயப் பொருளாக பிற இனக்குழுவில் இருந்து பெற்றுக் கொண்டு தன்னுடன் வைத்திருந்து தன் பிள்ளைகளில் ஒருவனாகவே வளர்க்கும் சிறுவனை கொலை செய்யும் சந்தர்ப்பம். அது பழங்குடி ஆசாரங்களில் உள்ள ஈவிரக்கமற்ற மரபினை வலுவாகச் சித்தரித்த ஒரு இடம். இத்தகைய நிகழ்ச்சிகள் சட்டென்று ஒரு இடத்தின், ஒரு குலத்தின் கதையை மானுடக்கதையாக ஆக்குகின்றன.

தாதனூர்க்காரர்களின் கொள்ளைகளின் விவரிப்புகள் வாய்மொழி வரலாற்றின் வசீகரத்துடன் இதழ் விரிகின்றன. திருடப்போன இடத்தில் கிணற்றுக்குள் விழுந்துவிட்ட ஒருவனைக் காப்பாற்ற இன்னொரு இடத்தில் மாட்டைத் திருடி அதை ஓட்டிக் கொண்டு மாட்டு வியாபாரிகள் போல அதே ஊருக்குத் திரும்பி வருகிறார்கள். அந்தக் கிணற்றில் மாட்டுக்கு நீர் காட்டுவதுபோல உள்ளே இறங்கி அவனைத் தூக்கி மாட்டில் வைத்தே கொண்டு வந்துவிடுகிறார்கள். மிகுந்த நுட்பங்களுடன் கூறப்பட்டிருக்கிறது இந்தக் காட்சி. ‘வாலின் அடித்தண்டு கனமாக இருந்தால் பெரும்பாலும் அது நல்ல மாடாக இருக்கும். ஆனால் வேகமாக நடக்காது. வால் கொடி போல இருந்தால் படு வேகமாக நடக்கும். இப்போது தேவை வேகமாக நடக்கும் மாடுகள்தான்….’ என்பதுபோன்ற நுண் தகவல்கள் ஒரு பண்பாட்டையே கண்முன் விரியச் செய்கின்றன.

நதியின் ஆழத்தில் அசையாமல் மூழ்கி கிடப்பதுபோல வரலாற்றுப் பெருக்கில் கால வெள்ளத்தில் கிடக்கிறது தாதனூர். தலைக்குமேலே மதுரையின் வரலாற்றில் அலைகள் அடிக்கின்றன. பெரும் சுழல்கள் எழுகின்றன. கொந்தளிப்புகள் நிகழ்கின்றன. தாதனூர்க்காரர்களுக்கு அதெல்லாம் பெரிய பொருட்டு அல்ல – காவல் கோட்டத்தின் ஆசிரியருக்கும் அதெல்லாம் பெரிய விஷயமில்லை என்பதுபோல நாவல் அவ்வரலாற்றை தொட்டுத் தொட்டுதான் தாவி வந்துவிடுகிறது. மதுரையின் வரலாறு எப்போதெல்லாம் தாதனூரை வந்து ‘ஜாடையாக’த் தொட்டுச் செல்கிறதோ அப்போதெல்லாம் ஆசிரியரின் சித்திரிப்பு உற்சாகம் கொள்கிறது.

மூன்று இடங்களை உதாரணம் காட்டலாம். தன் வீட்டுக் கொல்லையில் பாத்திரம் கழுவிக் கொண்டிருக்கும் தாதனூர் பெண்ணிடம் வந்து குடிக்க புளித்த நீர் கேட்கும் முத்து வீரப்ப நாயக்கனின் வருகை. தாதனூர் அவனுடைய வருகையைக் கொண்டாடுகிறது. அவன் திரும்பி வரும்போது கறி விருந்தளித்து உபசரிக்கிறது. அந்த மக்களுக்கு பலவிதமான வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டுச் செல்லும். முத்துவீரப்ப நாயக்கன் அதிகநாள் வாழ்வதில்லை. பின்னர் அவன் மனைவி ராணி மங்கம்மாளுக்கும் தாதனூர் மக்களுக்குமான உறவும்கூட அதேபோல மெல்ல தீண்டிச்செல்லும் உறவே. தாதனூர்க்காரர்கள் வாழ்வில் ஒரு பொருளியல் மலர்ச்சியை உருவாக்கியவை மங்கம்மாளின் திட்டங்கள்.

அதன்பின் மங்கம்மாளின் பேரனின் மனைவியும் கடைசி மதுரை அரசியுமான ராணி மீனாட்சி தாதனூர் வழியாகச் செல்லும் பயணம். உபசரிப்பால் உற்சாகக் கொந்தளிப்பால் அவளை அது தன் வாழ்க்கையின் ஒரு பொன்னாள் என நினைக்கச் செய்கிறது தாதனூர். மீனாட்சிக்கு ஆடுகள் காணிக்கையாக வந்து குவிகின்றன. அனைவரிடம் விடைபெற்று ராணி சந்தோஷமாக சயனகிருஹத்திற்கு வந்தாள். அவளுக்கு உதவி செய்ய வந்த பாளையக்காரியிடம் கேட்டாள். “பரிசாக வந்த ஆடுகளை என்ன செய்வது?” பாளையக்காரி சிரித்தபடி, “கோனார்களை அழைத்து பரிசாகக் கொடுத்தால் கணக்கு சரியாகிவிடும்” என்கிறாள். தாதனூர் எப்போதுமே தாதனூர்தான்.

தாதனூரின் சிறு வரலாறும் மதுரையின் பெரு வரலாறும் இரு புரிகளாகச் செல்லும் இந்நாவலில் ஒரு வரலாற்றுத் தரிசனம் வாசகனுக்கு உருவாகிக் கொண்டே இருக்கிறது. களவு எப்படி தாதனூருக்கு ‘பண்பாட்டு’ அடிப்படையோ அதைப்போலவே சதி மதுரையின் ‘ராஜதர்ம’ அடிப்படை. ஆகவே மதுரையின் பெரு மொழிபில் எங்கெல்லாம் சதி விவரிக்கப்படுகிறதோ அங்கு மட்டுமே அந்த வரலாற்றை விரிவாக்கி எழுத முற்படுகிறார் ஆசிரியர். தாதனூரில் களவை மட்டுமே ஆசிரியரின் கரம் விரித்தெழுதுகிறது

மதுரை நாயக்கர் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய அரியநாத முதலியாருக்கே அந்தச் சதியின் விஷம் கடைசியில் அளிக்கப்படுகிறது. அவநம்பிக்கைகளை உருவாக்குதல், பிரித்தல் ஒவ்வொரு கணமும் அங்கே நடந்து கொண்டே இருக்கிறது. ராணி மங்கம்மாளின் சித்திரம் இந்நாவலின் ஒளிமிக்க பகுதிகளில் ஒன்று. கணவன் மனைவிக்குப்பின் மகனும் மறைய பேரனுக்காக அரசுக் கட்டிலில் ஏறும் மங்கம்மாள் மதுரைக்கு நல்லாட்சி அளித்த அரசி. அவனுக்கு எதிரான எல்லா சதிகளையும் மதியூகத்தால் மங்கம்மாள் தோற்கடிப்பதை சித்தரிக்கும் ஆசிரியர் சொந்தப் பேரனை மதிப்பிடுவதில் மட்டும் அவள் செய்த பிழையால் சிறைப்பட்டு பட்டினி போடப்பட்டு இறப்பதன் தீவிரமான சித்திரத்தை அளிக்கிறார்.

வரலாற்றின் இந்த விஷத்தை தன் கடைசி நாட்களில் உணரும் மங்கம்மாளின் இறுதிக் கணங்கள் இந்நாவலின் உச்சங்களில் ஒன்று என்று கூறலாம். தான் செய்த தவறு என்ன என்று எண்ணி மனம் உடைகிறாள். பின்னர் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டு பேரனையும், அரண்மனையையும் மறக்கிறாள். “அன்ன சத்திரங்கள் வந்து மறைந்தன. நின்ற குளங்கள் தோன்றி நீரலைகள் போல கலைந்து போயின. பொதிகை மலையையும் கீழக்கடலையும் தென்கடலையும் காவிரியையும், நீல மலையையும் தொட விரியும் நிழல் படிந்த கல் சாலைகள் தோன்றி மறைந்தன…” மறைந்த தன் மகன் பாலகிருஷ்ணனாய் தவழ்ந்து தன்னை நோக்கி வருவதை அவள் கடைசியில் உணர்கிறாள். முத்து வீரப்பனின் கனவுகளை நிகழ்த்தவே அவள் வாழ்நாளை செலவழித்திருந்தாள்.

இந்நாவலுடன் ஒப்பிடத்தக்க ‘டிரினா நதிப்பாலத்’தின் முக்கியமான சிறப்பு குறித்து அக்காலக்கட்டத்தின் விமரிசகர் ஒருவர் எழுதினார். ‘பாத் டப்பில் சோப்பு வழுக்குவதுபோல வரலாறு ஓடிச் செல்வதை அது காட்டுகிறது’ என்று. அந்த புனைவு நுட்பம் நெடுங்காலம் வரலாறு எழுதப்பட்டு, வர்ணிக்கப்பட்டு, சொல்லப்பட்டு வந்த ஒரு வரலாறு உள்ள பண்பாட்டுக்கே பொருந்தும். நமது வரலாறு நம்மால் எழுதப்பட்டதல்ல.

நமக்கு இருவகை வரலாறுகள் உள்ளன. ஒன்று வாய்மொழி வரலாறு. தொன்மங்களும் வீரகதைகளும் அடங்கியது. இன்னொன்று நவீன காலத்தின் கால வரிசை வரலாறு. அட்டவணை வரலாறு என்றும் அதைக்கூறலாம். நமது பிரம்மாண்டமான தேசத்தின் வரலாறு நமக்கு உதிரித் தகவல்களாகவே இன்று வரை கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே சீரான ஒரு ஓட்டத்தில் வரலாற்றை விவரிப்பதென்பது இன்றுவரை நமது வரலாற்றாசிரியர்களுக்கே சாத்தியப்படவில்லை. நமது எல்லா வரலாறுகளும் துண்டுபட்ட சித்தரிப்புகளே. அதனால்தான் போலும் காவல் கோட்டமும் ஒரு இயல்பான, சகஜமான வரலாற்று பரிணாம சித்திரத்தை அளிக்கவில்லை.

இரண்டு தடங்களில் மாறி மாறிப் பயணம் செய்யும் காலக்கோட்டம் அதன் ஆசிரியரின் தேர்வின்படி சிறுமொழிபையே தன்னுடைய அதிக கவனத்திற்கு உள்ளாக்குகிறத. பெருமொழிபை மனிதப் புள்ளிகளாகச் சொல்லிச் சொல்லித் தாவிச் செல்கிறது. உண்மையில் அது இந்நாவலின் வரலாற்று நோக்கையே வெளிப்படுத்துகிறது. தனிமனிதத் தீவிரங்களின் சில தருணங்கள், எப்போதும் இருந்து கொண்டிருக்கும் அரண்மனைச் சதிகள், படையெடுப்புகளின் அழிவுகள் ஆகியவை தவிர வரலாறு என்றால் வேறு என்ன என்று கேட்கிறது இந்நாவல்.

ஒரு பொது வாசகன் இந்நாவலின் பெருமொழிபு வரலாறு வழியாக கடந்து செல்லும்போது அவனுக்கு மனதைக் கவரும் புள்ளிகளாக இருக்கும் இடங்கள் பல உள்ளன. குறிப்பாக நாயக்கர் வரலாற்றில், கிருஷ்ண தேவராயரின் நிதானமான குணச்சித்திரம், விசுவநாத நாயக்கனின் இலட்சியவாத குணச்சித்திரம் இரண்டும் அந்த உணர்ச்சிகரமான நாடக நிகழ்ச்சிகளின் பின்னணியில் அழகாக உருவாகி வந்திருக்கின்றன. கிருஷ்ண தேவராயர் காகதிய நாட்டில் இருந்து சிறைப்பிடித்துக் கொண்டு வந்து அரசியாக்க முனைகையில் சற்றும் குறையாத பெண்மையின் வீம்புடன் எதிர்த்து நின்று கடைசி வரைக்கும் கன்னியாகவே இருக்கும் துக்கா தேவியின் குணச்சித்திரம் அந்த மனதின் ரகசியங்கள் துலங்கியும் துலங்காமலும் நிற்க அழகாக தொட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

தஞ்சை நாயக்கரின் மகளை விரும்பிப் பெண் கேட்டு ஏமாந்து படை கொண்டு செல்லும் சொக்கநாத நாயக்கனின் கதை வரலாறும் தனிமனித இச்சைகளும் பின்னிப்பிணைவை தன் சித்திரத்தை அளிக்கிறது. கடைசிவரை ‘மாடு மேய்க்கும்’ கொல்லவாருக்கு பெண் கொடை மறுத்து போராடி அழியும் தஞ்சை நாயக்கரின் மனநிலை அன்றைய நாயக்க அரசின் உள்ளோட்டங்களில் ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது. பல்வேறுபட்ட உபசாதிகள் அச்சாதிகளுக்கு இடையே பல்வேறு வகையான உள் மோதல்கள் ஆகியவற்றின் சமரசமாகவே அந்த பேரரசு இயங்கியுள்ளது.

ராணி மங்கம்மாளின் கதையும் பலவகையான ரகசிய மடிப்புகளுடன் உள்ளது. முத்து வீரப்ப நாயக்கனின் கனவுகளை நிறைவேற்றும் இலக்குடன்தான் அவள் தாயாகிய மங்கம்மாள் பதவிக்கு வருகிறாள். ஒருவகையில் அவளுடைய தனிவாழ்க்கை என்பது மிகப்பெரிய தோல்வி. காதல் அற்ற கணவன்; இளம் வயதிலேயே இறந்த மகன், உதவாக்கரை பேரன், எந்நேரமும் கவிழ்க்கச் சதி செய்யும் அரச சபை, அவள் சாதியில் குறைந்தவள் என்று எண்ணும் பாளையக்காரர்கள் என்று அத்தனை தளத்திலும் அவளுக்கு வீழ்ச்சியும் துக்கமும்தான். அத்துடன் ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் கும்பல் செய்யும் முக்கியமான சதி – அவள் ஒழுக்கத்தை கறைப்படுத்தல் – அவளை எந்நேரமும் மேகம் போல் சூழ்ந்திருந்தது. அதையும் மீறி மேகம் சூழ்ந்த சூரியனின் ஒளி போலத்தான் அவள் ஒளிர்ந்தாள். நாயக்கர் வரலாற்றின் மிகப்பெரிய மிக வெற்றிகரமான புறவாழ்க்கை அவளுடையதே.

அலையலையாக, துயரமும் கசப்பும் சதிகளும் தியாகங்களும் வெற்றிகளும் தோல்விகளுமாக வரலாறு பொங்கி கொந்தளித்து அடங்கி, அடுத்த கட்டத்திற்கு வழிவிடுவதை இப்புள்ளிகள் வழியாகச் சொல்லியிருக்கிறார் வெங்கடேசன். இந்நாவலில் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் நாயக்கர் வரலாறு இந்தப் பெருமரபுச்சித்தரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதே. இதற்கு வெளியே குடிமக்களான நாயக்கர்களின் அன்றாட வாழ்க்கைச் சித்திரங்கள் அனேகமாக இந்நாவலில் இல்லை. நாயக்கர்களின் குலங்களான கொல்லவாருகளும் கம்மவாருகளும் எப்படி புதிய மண்ணில் வேரூன்றினர் எப்படி ஆதிக்கத்தை அடைந்தனர் எப்படி தங்களுக்குள் உள்ள சாதி ஏற்றத்தாழ்வை தக்கவைத்துக்கொண்டனர் எதுவுமே இல்லை. ஒரே ஒரு கதைச் சரடு தவிர. குடியேறிய இடத்தில் நாயக்கர்கள் எப்படி தங்களை ஒரு இறுக்கமான சாதிசமூகமாக ஆக்கிக்கொண்டு தங்கள் தனித்தன்மையை விடாமலிருக்கிறார்கள் என்று காட்டும் கதை அது.

ஏனென்றால் காவல்கோட்டத்தின் சிறுமொழிபு முழுக்கமுழுக்க தாதனூரின் கதையே. தலைக்குமேல் வரலாறு ஓடும்போது ‘வரலாறற்ற’ ஒரு வெளியில் தாதனூர் மாறாமல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. எழுதப்படாத மக்கள் அவர்கள். களவும் குடியும் காமமும் கொலையுமாக ஓர் அரசின் கீழ் அந்த அரசுக்கு கட்டுப்படாதவர்களாக வாழ்கிறார்கள். . காவல் கோட்டம் அளிக்கும் நாயக்கர் வரலாறு, பிரிட்டிஷ் வரலாறு போன்ற பெரு மொழிபுகளை தாதனூர் தன் சிறுமொழிபால் வண்ணம் சேர்த்துக் கொண்டே இருக்கிறது.
[மேலும்]

முந்தைய கட்டுரைசட்டநாதக் கரையாளர்
அடுத்த கட்டுரைகாந்தி புதிய கடிதங்கள்