மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். உங்களது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
காந்தி குறித்த உங்கள் கட்டுரைகள் தெளிவான வாதங்களுடன் இருந்தன.
காந்தி குறித்து பல புத்தகங்களை வாசித்துள்ளேன். அதிலும் குறிப்பாக கடந்த ஓராண்டு காலமாக நிறைய படித்தேன். ‘தண்டி யாத்திரை’ என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் இரு மாதங்களுக்கு முன் என்னுடைய புத்தகத்தை பிரசுரித்தது. இந்த புத்தகத்திற்காக தகவல்கள் சேகரிக்கும் போது தான் காந்தியை நெருக்கமாக புரிந்து கொண்டது போல் உணர்ந்தேன். உங்கள் கட்டுரைகளை படித்த போதும் அதே உணர்வு தான்.
உங்களுக்கு நேரம் இருப்பின் நீங்கள் படிப்பதற்கு ‘தண்டி யாத்திரை’ புத்தகத்தை அனுப்பி வைக்க விருப்பம். உங்களின் விமர்சனங்களை தெரிந்து கொள்ள ஆவல்.
என்றும் அன்புடன்
பா.முருகானந்தம்
அண்ணா ,
காந்திய நிர்வாகவியல் கட்டுரை நீண்ட நாட்களாக உங்களிடம்
எதிர்பார்த்திருந்தது , மிக உதவிகரமான கட்டுரை ,மிக்க நன்றி , இந்த
கட்டுரை படித்தவுடன் போனில் அழைக்க நினைத்தேன் ,போனில் தொல்லை செய்ய
கஷ்டமாக உள்ளது ,
புத்தாண்டு அன்பளிப்பு காலம் , காந்திய நிர்வாகவியல் குறித்து ஒரு
போஸ்டர் என் கிளையண்ட்களுக்கு அளிக்க எண்ணினேன் ,பல வருடங்களுக்கு
அவர்களின் அலுவலங்களில் இடம் பெறும் ,
இந்த இணைப்பை பாருங்கள் ,எனக்கு தெரிந்த அளவில் முயன்றுள்ளேன் , இன்னும்
சிறப்பாக உதவுங்கள் ,
டிசைனிங் எதுவும் செய்யவில்லை , ஏ 3 சைஸில் நல்ல லேமினேட்டட் போஸ்டராக
1000 காப்பி (Rs.40/-) அடிக்க நினைத்துள்ளேன் ,
கொஞ்சம் உதவ இயலுமா ?
With Best Regards,
For Universys,
Arangasamy.K.V
அன்புள்ள அரங்கசாமி
டிசைனிங் குறித்தெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. முடிந்தவரை நீங்களே செய்யவும். அல்லது ஒரு நல்ல டிசைனரைப் பார்க்கவும்
நல்லவிஷயம்தான் நடக்கட்டும்
ஜெ
ஜெ,
சமீபத்திய வாசிப்போ ஆராய்சியோ ஏதுமின்றியே இக்கட்டுரைகளை எழுதி உள்ளீர்கள் என்பது அந்த விஷயங்களை எவ்வளவு தூரம் உள்வாங்கியிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.இத்தனை ஈடுபாடான படிபும் சிந்திப்பும் எனக்கும் கைவருமா என்று ஏங்குகிறேன்.
தவிர, காந்தி கனவு கண்ட இந்தியா இன்றைய இந்தியாவிலிருந்து என்னென்ன கூறுகளில் வேறுபட்டிருக்கும் எவற்றில் உடன்பட்டிருக்கும் என்பது பற்றி உங்களுக்கொரு மனச்சித்திரம் உண்டா ?
அதுபற்றியும், காந்தி கூறும் ‘கிராம சுயராஜ்யம்’ மற்றும் ‘ராம ராஜ்யம்’ என்ன என்பது பற்றிய உங்கள் புரிதல்களையும் எழுதவேண்டுகிறேன்.
அன்புடன்,
மதி
அன்புள்ள மதி,
காந்தியின் கிராமசுயராஜ்யம் குறித்து விரைவில் எழுதுகிறேன். அவரது கிராம சுயராஜ்யம் என்பது தன்னிறைவுள்ள, நுகர்வு வரையறைசெய்யப்பட்ட , தன்னாட்சியுள்ள கிராமங்கள் ஒரு நாடாக சேர்ந்து இயங்குவதாகும். அந்த அமைப்பு அறத்தின் அடிப்படையில் இயங்கும் என்பதனால் அதை காந்தி ராமராஜ்யம் என்றார். மற்றபடி அதற்கும் ராமனுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்தக் கருத்துருவத்தை அவர் ஐரோப்பிய அரசின்மை சிந்தனைகளில் இருந்தே பெற்றுக்கொண்டார்
ஜெ
ஜெயமோகன் அவர்களுக்கு,
மெளலானா அபுல் கலாம் அசாத் தன் சுயசரிதையில் பதிவு செய்கிறார்.டெல்லியில் மதக்கலவரம் பயங்கரமாக நடந்து கொன்டிருந்த சமயத்தில் பட்டேல்,நேரு,அசாத் காந்தியை சந்திக்கின்றனார்.அப்போது நேரு தனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று மிகவும் வருத்தப்படுகிறார்.பட்டேல் அப்படி நேரு வருத்தப்படும் அளவுக்கு ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை.எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்கிறார்.பட்டேல் அப்படி சொன்னதும் அதிர்ச்சி அடைந்த நேரு பட்டேல் அப்படி சொல்வார் என்றால் தனக்கு மேலே சொல்ல ஏதுமில்லை என்கிறார்.காந்தி தனக்கு இன்னும் செவியும்,கண்களும் இருக்கிறது என்கிறார்.காந்தி உன்னாவிரதம் எடுக்க ஆரம்பிக்கையில் பட்டேல் கிளம்பி மும்பை செல்கிறார்.காந்தி இறந்த பின் பட்டேலுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.அதன் பின் சில வருடங்கள் அவர் வாழ்ந்தாலும் அவர் உடல் நல்ல நிலைமைக்கு திரும்பவில்லை.காந்திக்கு அவர் செய்த துரோகத்தின் குற்ற உணர்வே அவர் உடல் நலிவடைந்த்தற்கு காரணம் என்கிறார் அசாத். கலாம் ஒருமுறை செய்தியாளர்களை சந்திக்கையில் தான் இஸ்ரேல் சென்ற போது குண்டு வெடிப்பு சம்பங்கள் நிகழ்ந்த்தாகவும் ஆனால் மறுநாள் செய்திதாளில் அது முதல் பக்க செய்தியாக வரவில்லை என்றும் இந்தியாவிலும் அதை பின்பற்ற வேண்டும் என்றார்.கலாமை பட்டேலோடு ஒப்பிடலாம்.நேருவோடு அல்ல.நேரு அறிவியலை நம்பினாலும் அவர் ஜனநாயகவாதி.காந்தி அவரை பாதித்திருக்கிறார்.பட்டேல் இந்துத்துவாதி என்றால் , கலாம் தேசியவாதி, அறிவியல்வாதி அவ்வளவுதான். நன்றி, சர்வோத்தமன்.
அன்புள்ள சர்வோத்தமன்
பொதுவாக அரசியல்தலைவர்களைப்பற்றி நாம் அறியும் சில சில தகவல்களை வைத்துக்கொண்டு இறுதியான முடிவுகளுக்கு வருவதும் முத்திரை குத்துவதும் சரியாக இருக்காது என்பதே என் எண்ணம். என்னுடைய இந்த கட்டுரைத்தொடர் முழுக்க நான் சொல்லிவருவதே உண்மை என்பது எவ்வளவு பன்முகம் கொண்டதாகவும் சிக்கலாகவும் இருக்கிறது, எப்படி ஒரு வரலாற்றுத்தருணத்தில் வைத்து மட்டுமே புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது என்பதே.
மௌலானா ஆசாத் நேருவின் நெருக்கமான நண்பர். நேருவின் இரு தளபதிகள் கிருஷ்ணமேனனின் மௌலானாவும். முதல் இந்திய அரசில் நேருவும் பட்டேலும் இரு முக்கியமான அதிகாரப்புள்ளிகளாக இருந்தார்கள். இருவருக்கும் தனித்தனிக் கோஷ்டிகள் இருந்தன. சுதந்திரத்துக்கு முன்னரே அந்த இருமையங்கள் இருந்தன. காங்கிரஸை ஒரு தொண்டர்கட்சியாக கட்டி எழுப்பியவர் பட்டேல்தான். நேருவுக்கு காங்கிரஸீன் அமைப்பு குறித்து எதுவுமே தெரியாது. இயல்பால்க பட்டேல்தான் இந்தியப்பிரதமராக இருக்கவேண்டும்.
ஆனால் காந்தி நேரு தன் வாரிசாக வேண்டும் என்று சொன்னார். ஆகவே பட்டேல் அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை உருவாகியது. அவருக்கு மனவருத்தம் இருந்தாலும் அவர் காந்தி சொன்னதை மீறவில்லை. நேரு படேலைவிட ஜனநாயகவாதி என்று காந்தி நினைத்தார்.
இந்த அதிகாரப்புள்ளிகளில் ஒரு தரப்பைச் சேர்ந்தவர் இன்னொரு தரப்பைச் சேர்ந்தவர் மேல் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு பொருளே இல்லை. ஆசாத் கிருஷ்ணமேனனைப்பற்றி இன்னும் மோசமாக எழுதி அதை பூட்டிவைத்துவிட்டு இறந்தார்.
பட்டேல் நேருவைப்போன்றவர் அல்ல. உணர்ச்சியற்றவர் , நிர்வாகி. மௌலானா சொல்வதல்ல உண்மை. இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த பட்டேல் தான் புரிவினையின் கசப்பால் இந்தியாவில் எங்கும் இஸ்லாமியர் மேல் தாக்குதல் நிகழாதவாறு செய்தவர். அதற்காக மிகவும் கடுமையான நடவடிக்கை எடுத்தார்.
அதைத்தான் கலாம் குறித்தும் சொல்வேன். எளிமையான மதிப்பீடுகளுக்குச் செல்வது பெரும்பாலும் தவறானது. கலாம் அறிவியல்வாதி. ஆகவே அறிவியல் குறித்த காந்திய சிந்தனைகளை ஏற்றுக்கொள்பவர் அல்ல. ஆனால் காந்தியின் அறிவியல் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட காந்தி மாணவர்கள் ஜெ.சி.குமரப்பா போன்ற மிகச்சிலரே. காந்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் பாதித்திருக்கிறார்
ஜெ
நன்றி திரு. ஜெயமோகன்…
நான் தேடித்தேடி இவற்றைப் படிப்பதில்லை என்பது உண்மைதான். தமிழினி இதழில் தங்களின் இது தொடர்பான கட்டுரையைப் பார்த்துவிட்டுத்தான் வேறொருவருடன் விவாதித்தபோது இவ்வினாக்கள் எனக்கு எழுந்தன… எனவே தாங்கள் இவை தொடர்பாக எங்கு எழுதியிருக்கிறீர்கள் என்பதற்கான சுட்டியைக் கொடுத்திருக்கலாம்… அதை விடுத்து மொட்டையாக இப்படி பதில் சொல்லியது ஏன் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை….
ப்ரவாஹன்.
அன்புள்ள பிரவாகன்,
நான் காந்தியைப்பற்றிய ஒரு கட்டுரை அவ்ரிசையை என் இணைய தளத்தில் எழுதிவருகிறேன். பெரும்பாலான கட்டுரைகளின் அடியில் அதற்கான சுட்டிகள் உள்ளன.
என்னை சட்டென்று எரிச்சல்படுத்தியது உங்கள் முன் தீர்மானம். ப்நெஉம்பாலான விஷயங்களை வாசிப்பின் பின்பலமில்லாமல் வெறும் செவிவழி ஊகங்களாகவே சொல்கிறீர்கள். என்னுடைய கட்டுரைகள் பொதுவாக விரிவான ஒரு வரலாற்றுப்புலத்தில் இவற்றை வைத்து ஆராய்பவை
உதாரணமாக 1912 ல் வ.உ.சி சிறைமீண்டுவிட்டார். காந்தி இந்தியாவருவதே 1915ல் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிலந்தான். சாதாரணமான அழைபபளராகத்தான் கலந்துகொண்டார். 1910 முதல் காந்திக்கும் சிதம்பரனாருக்கும் சில கடிதப்போக்குவரத்துக்கள் நடந்தன. 1918க்குப்பின்னரே காந்தி இந்தியாவில் ஓர் அரசியல் தொடக்கத்தை நடத்துகிறார். அப்போது சிதம்பரனார் காங்கிரஸில் இருந்து வெகுவாக விலகிச்சென்றும் விட்டார்.
நீங்கள் காந்தி ஏன் வ.உ.சியை விடுதலைசெய்ய போராடவில்லை என்கிறீர்கள். அத்தகைய ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னால் அந்த வரலாற்றுப்புலம் குறித்த எளிய விசாரணையைக்கூட நீங்கள் மேர்கொள்ளவில்லை என்றல்லவா அதற்குப் பொருள். நீங்கள் கேட்ட பிற வினாக்களும் அத்தகையவையே
மன்னிக்கவும், சட்டென்று கடுமையான சொல்லாட்சி வந்துவிட்டது.
ஜெ