‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 22

பகுதி ஐந்து : முதல்மழை

[ 1 ]

காந்தாரநகரத்தின் அரண்மனையில் தென்மேற்குமூலையில் இருந்த மங்கல அறையில் காந்தாரி திருதராஷ்டிரனுக்காக காத்திருந்தாள். ஏழு நாட்கள் நீண்டுநின்ற மணநிகழ்வுகள் அன்று மாலையுடன் முடிவடைந்தன. அந்தப்புரத்தில் நிகழ்ந்த சிறிய சடங்கில் அவள் கையில் கட்டப்பட்டிருந்த மஞ்சள் காப்புச்சரடை மூன்று மங்கலையன்னையர் சேர்ந்து அவிழ்த்தனர். சேடியரும் அரண்மனைப்பெண்டிரும் குரவையிட்டனர்.

அவள் மீண்டும் நீராடி அஸ்தினபுரியில் இருந்து கொண்டுவரப்பட்டு அவளுக்கு மணக்கொடையாக அளிக்கப்பட்ட கலிங்கத்துப் பட்டாடையை அணிந்துகொண்டாள். மூதன்னையர் எழுவர் அவள் கன்னத்தில் மஞ்சளும் சந்தனமும் கலந்த கலவையைப் பூசி அவள் நெற்றியில் குங்குமம் இட்டு வாழ்த்தினர். முதியவள் அவளிடம் “இன்றுமுதல் நீ அஸ்தினபுரியின் மருமகளானாய். நீ வாழ்க! உன் உதரத்திரை விலக்கி இவ்வுலகுக்கு வரும் அரசகுமாரர்கள் வாழ்க. உன் நாடு பொலிக!” என்றாள்.

ஏழுநாட்கள் இரவும்பகலும் சடங்குகள் நடந்துகொண்டே இருந்தன. ஒருகட்டத்தில் அச்சடங்குகளே அன்றாடச் செயல்களாக ஆகி அவள் அதிலேயே வருடக்கணக்காக வாழ்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றத் தொடங்கியது. காந்தாரநகரியின் இருவேறு உலகங்களிலும் மாறிமாறிச் சென்றுகொண்டிருந்தாள். லாஷ்கரர்குலத்துச் சடங்குகள் முடிந்ததும் வைதிகச்சடங்குகள் தொடங்கின. அவைமுடிந்ததும் மீண்டும் லாஷ்கர குலத்துச் சடங்குகள்.

அரண்மனைமுகப்பில் கட்டப்பட்ட பந்தலில் மணமேடையில் அமர்ந்து ஐந்து பருப்பொருட்களின் அடையாளமாக வைக்கப்பட்ட பிடிமண், மண்ணகல், நீர்க்குடம், ஊதுகொம்பு, வெண்திரை ஆகியவற்றை சான்றாக நிறுத்தி திருதராஷ்டிரன் அவள் கழுத்தில் ஓலைத்தாலியைக் கட்டினான். மங்கலநீரால் அவள் கால்களை நீராட்டி மஞ்சள் தொட்டுவைத்து அந்தக்காலைத் தூக்கி தன் இடது தொடையில் வைத்துக்கொண்டு தன் உடலின் இடப்பகுதியாக அவளை ஏற்றுக்கொண்டான். அவள் தன் கழுத்தில் அணிந்திருந்த தாலிப்பனை பூவில் கட்டியமாலையை அவனுக்குப் போட அவன் தன் கழுத்துமாலையை அவளுக்குப்போட்டான். மும்முறை மாலை மாற்றியபின் அவன் அவளுக்கு மலர்களால் பொதியப்பட்ட புத்தாடையை அளிக்க அவள் அவனுக்கு தாம்பூலம் சுருட்டிக்கொடுத்தாள். அவன் அவளுடைய கைகளைப்பற்றிக்கொண்டு ஏழு காலடிகள் வைத்து நடந்தபோது அனைவரும் வாழ்த்தொலி எழுப்பினர். அவர்கள் குலமூத்தார் பெற்றோர் ஆசிரியர்கள் கால்களில் விழுந்து ஆசிபெற்றனர்.

மறுநாள் எதிரே இருந்த வேள்விச்சாலையில் வைதிக மணம். மூன்று எரிகுளங்களில் எரிந்த முத்திசை நெருப்பை சான்றாக்கி அவன் அவளை அறத்துணைவியாக்கினான். முதலில் இறைவேட்டல் சடங்கில் அவனுடைய குலதெய்வத்தை அவளும் அவள்குலதெய்வங்களை அவனும் ஏற்றுக்கொண்டு வணங்கினர். பின்னர் குலமங்கலச்சடங்கில் திருதராஷ்டிரனின் பிதாமகராகிய பீஷ்மரும் அவள் தந்தையும் தாம்பூலங்களும் மங்கலங்களும் கைமாறிக்கொண்டனர். இருவருடைய குலமுறைமையை நிமித்திகர் கூவி அவைக்கு அறிவித்தனர். இளங்கொம்பு நாட்டல் சடங்கு தொடர்ந்தது. அவனும் அவளும் சேர்ந்து ஆலமரக்கொம்பு ஒன்றை நட்டு அதற்கு நீரூற்றினர். அவர்களின் குலம்போல அது அம்மண்ணில் தழைக்குமென்றனர் வைதிகர்.

திருதராஷ்டிரன் கையில் வேள்விக்கங்கணத்தை வைதிகர் கட்டினர். அவர்கள் இருவரும் இணைந்து மூதாதையருக்கு அரிசியும் நீரும் அளித்து வணங்கினர். திருதராஷ்டிரன் தன் மாணவநோன்பை கைவிடுவதாக உறுதிமொழி சொன்னான். அவனிடம் காந்தார நாட்டு இளவரசியை அவன் மணந்துகொள்கிறானா என்று வைதிகர் கேட்க அவன் ஆம் என்றபின் சுபலர் அவளை அவனுக்கு நீர் ஊற்றிக் கையளித்தார். வேதமந்திரங்கள் சூழ அவள் கைபற்றி ஏழடி நடந்து நன்மக்கள் பேறுக்கென முன்னோரை வாழ்த்தினான். வைதிகர் மண்ணகலில் வேள்விநெருப்பைக் கொளுத்திக் கொடுக்க காந்தாரி அண்ணாந்து வடமீனை நோக்கியபடி அஸ்தினபுரியின் வாசலென போடப்பட்டிருந்த கருங்கல்லை மிதித்து கையில் தீபத்துடன் கிழக்குநோக்கி மூன்றடி எடுத்துவைத்து அவன் இல்லம்புகுந்தாள். மங்கல நாதம் முழங்க அவளை அவன் மனைவி என வேதங்கள் ஏற்றுக்கொண்டன.

மறுநாள் அவள் கையின் காப்புச்சரடுகள் அவிழ்க்கப்பட்டபோது அவள் காந்தாரநகரியில் ஊன்றிவிரிந்த தன் வேர்கள் விடுபடும் உணர்வை அடைந்தாள். அவன் மணக்கொடையாக அளித்த பட்டு அவனுடைய கைகளாகவே அவளைத் தழுவியது. மங்கலப்பெண்கள் வழிநடத்த மஞ்சத்துக்குச் சென்று அவனுக்காக அங்கே காத்திருந்தபோது தன் மேலாடைக்குள் இருந்து அந்த சிறிய தாலிச்சுருளை எடுத்து பார்த்துக்கொண்டாள். அத்தனை சடங்குகளும் பாற்கடலைக் கடைவதுபோலத் திரட்டி எடுத்த அமுதத்துளி அது என்று தோன்றியது.

மூன்று சூதப்பெண்கள் உள்ளே வந்து அவள்முன் அமர்ந்தனர். ஒருத்தி யாழும் இன்னொருத்தி குறுமுழவும் மூன்றாம் பெண் சோழிகள் அடங்கிய தோல்பையும் வைத்திருந்தார்கள். மூத்த சூதப்பெண் “அரசி, நாள்மங்கலம் நோக்கி இன்றைய தேவனை எழச்செய்ய நாங்கள் வந்திருக்கிறோம்” என்றாள். காந்தாரி பெருமூச்சுடன் தலையசைத்தாள். சூதப்பெண் தரையில் பன்னிரு களங்களை வரைந்து எண்களை எழுதியபின் தோல்பையில் இருந்து பன்னிரு சோழிகளை எடுத்துப்பரப்பினாள். கணிதத்துக்கு ஏற்ப ஒவ்வொன்றாக நீக்கி கடைசியில் இளஞ்சிவப்பான ஒரு சோழியை தொட்டு நின்றாள்.

“அரசி, ஆதித்யர்கள் பன்னிருவர். விஷ்ணு, சுக்ரன், ஆர்யமான், தாதா, த்வாஷ்டன், பிருஷன், விவஸ்வான், சவிதன், மித்ரன், வருணன், அம்ஸு, பகன் என அவர்கள் இப்பூமியை தங்கள் ஒளிமிக்க விழிகளால் விண்ணிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றைய நாள் கடைசி ஆதித்யனான பகனுக்குரியது. பகனுடைய கதையை சொல்கிறேன். அவன் வாழ்க” என்றாள் சூதப்பெண்.

பன்னிரண்டாவது ஆதித்யனான பகன் காசியபகுலத்தில் உதித்தவன். அளவிலாத ஆற்றல் கொண்டவன். ஆகவே அளவில்லாத விடாய் கொண்டவன். அவனுடைய கண்கள் கோடிச் சூரியன்களைப்போல அனலெழுந்தவை. அவை விண்ணகநெருப்பையெல்லாம் உறிஞ்சி உண்டன. விண்ணகப் பாற்கடலை ஒளியவரும் இருளவரும் சேர்ந்து கடைந்து அழிவின்மை எனும் அமுதத்தை எடுத்தபோது தணியாத பெருவிடாயுடன் அக்கலத்தை நோக்கிய பகன் ஆதித்யர்களின் இயல்புக்கேற்ப நோக்கையே உடலாகக் கொண்டு நோக்கும்பொருளை எட்டமுடிபவனாதலால் பிறர் தொடுமுன்னரே அமுதத்தைத் தொட்டு உண்டான். அன்னை ஏந்திவந்த அமுதத்தில் பெரும்பகுதி அவன் ஆகமாகியது.

தேவர்கள் உளமுடைந்து கதறினர். மாலும் அயனும் சென்று அரனை வணங்கி கோரினர். முக்கண்ணனின் சினம் ருத்ரன் என்னும் செந்தழலாக விண்ணகங்களை மூடி எழுந்தது. ருத்ரனின் கோடித்தழல் கிரணங்கள் அம்புகளாக எழுந்து வெளியெங்கும் பரவின. பேரொளி சிற்றொளியை கருகச்செய்ய பகன் விழியிழந்து கருங்கோளமாகி தன்னை தான் மட்டுமே அறிய வெளியில் தனித்தலையத்தொடங்கினான்.

விழியிழந்தவன் வாழும் இருளில் பகன் விண்ணகவெளியில் நூறாயிரம் கல்பகாலம் சுழன்றலைந்தான். அவனுடைய துணைவி ஸித்தி அவனை ஒளிவிரலால் தீண்டி இடிக்குரலால் ஓச்சி வழிநடத்திச் சென்றாள். அவன் வலிமைகுன்றக்குன்ற அவளுடைய காதல் பெருகியது. அக்காதலே அவளை ஒளிபெறச்செய்தது. அவள் அவனுடைய நெற்றியில் ஒரு தண்ணொளி சிந்தும் கண்ணாகச் சென்று அமர்ந்தாள். அவ்வொளியில் பார்வையைப் பெற்ற பகன் முன்னிலும் மகிழ்வுகொண்டவனானான்.

தன்னால் விழிபறிக்கப்பட்ட பகன் எப்படி விழிகொண்டவனானான் என்று ருத்ரன் வியந்து நோக்கினான். அவன் ஸித்தியின் பெருந்தவ நெருப்பைக் கண்டறிந்தான். அந்தக் காதலுக்கு தலைவணங்கி மீண்டும் பகனுக்கு அவன் விழிகளை அளித்தான். ஆனால் இம்முறை அவ்விழிகளில் விடாயென ஏதும் இருக்கவில்லை. அவை மலர்களைத் தழுவி ஒளியை அளிக்கும் அதிகாலைச் சூரியனைப்போல குளிர்ந்து கனிந்திருந்தன.

சூதப்பெண் பாடிமுடித்தாள் “ஆதித்யர்களின் மகளாகிய பூமாதேவி வாழ்க! அவளில் மலர்களாக விரிந்திருக்கும் காந்தாரமும் அஸ்தினபுரியும் வாழ்க. ஆம் அவ்வாறே ஆகுக!” காந்தாரி வணங்கி அவர்களுக்கு பொன்நாணயங்களைப் பரிசளித்து வழியனுப்பி வைத்தாள். தீபச்சுடர் அசையும் இரவில் சூதப்பெண்களின் சொற்களை எண்ணிக்கொண்டு அவள் அமர்ந்திருக்கையில் கனத்தகாலடிகளுடன் திருதராஷ்டிரன் வரும் ஓசை அம்மாளிகையின் இதய ஒலியென கேட்டது.

இருபாங்கர்களால் அழைத்துவரப்பட்ட திருதராஷ்டிரன் கதவைத் திறந்து உள்ளே அனுப்பப்பட்டான். அவனுடைய உயரத்துக்கும் உடலளவுக்கும் மிகச்சிறியதாக இருந்த அறைவாயில் அவனை உள்ளே அனுப்பிவிட்டு மூடிக்கொள்ள குனிந்து அவன் வந்தது பிதுங்கி உள்ளே நுழைவதுபோலத் தோன்றியதும் காந்தாரி புன்னகைசெய்தாள். எழுந்து அவனைப்பார்த்து நின்றாள். அவன் உள்ளே வந்து நிமிர்ந்து தலையைச் சுழற்றி கைகளை ஒன்றுடனொன்று சேர்த்துக்கொண்டான். முகத்தைச் சுளித்து தாடையை முன்னால் நீட்டினான்.

அவனுடைய மாறுபட்ட உடலசைவுகளின் காரணம் அவளுக்குப்புரிந்தது. அவன் ஒலிகளைக் கேட்க காதுகளைத் திருப்புகிறான். பெரும்பாலும் முன்னால் ஒலிக்கும் குரல்களைக் கேட்க காதுகளை முன்னால் கொண்டுவருவதற்காகவே முகத்தை பக்கவாட்டில் திருப்பிக்கொள்கிறான். அவனுடைய பெரிய கரங்களை தொங்கவிடுவது கனமாக இருப்பதனால் இரு உள்ளங்கைகளையும் கோர்த்துக்கொள்கிறான். வாசனைகளுக்காக மூக்கை கூர்ப்படுத்தும் அசைவே நாசியைத் தூக்கி முகத்தை சுளிக்கச்செய்கிறது. அவள் புன்னகையுடன் பார்த்துக்கொண்டே நின்றாள். முதலில் பார்த்தபோது அவனை பிறரிடமிருந்து விலக்கி விசித்திரமான விலங்குபோலத் தோன்றச்செய்த ஒவ்வொன்றும் அவனுடைய விருப்பூட்டும் தனித்தன்மைகளாக மாறிக்கொண்டே செல்வதை அவள் அறிந்தாள்.

VENMURASU_EPI_72
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

அவன் சில அடிகள் முன்னால் நகர்ந்தபின் அவளை உணர்ந்துகொண்டான். உடனே பின்னால் நகர்ந்து மரச்சுவரில் ஒலியுடன் முட்டிக்கொண்டு அசைவில்லாமல் நின்றான். காந்தாரி மெல்ல வளையல்களும் அணிகளும் ஒலிக்க ஆடை மடிப்புகள் விரிந்தொசிந்து ஒலிக்க சென்று அவனை அணுகி எந்தத் தயக்கமும் இன்றி அவன் கைகளைத் தொட்டாள். “அரசே, நான் வசுமதி” என்றாள். அவன் உடல் துள்ளி அதிர கைகளைப் பின்னாலிழுத்துக்கொண்டான். மேலும் பின்னகர்பவன்போல சுவரில் முதுகை உரசினான். அவன் தாடை அசைய கழுத்துத்தசைகள் அதிர்ந்தன.

“அரசே, நான் தங்கள் அறத்துணைவி. தங்களை அடைந்ததனால் இப்புவியிலேயே நல்லூழ் கொண்டவளாக உணர்பவள்” என்றாள். திருதராஷ்டிரன் தன் வலக்கையை காற்றில் நீட்ட அவள் அதைப்பற்றி தன் கன்னங்களில் வைத்தாள். அஞ்சி அஞ்சி தலைநீட்டி முகர்ந்து நோக்கும் மலைப்பாம்பு போலிருந்தது அவன் கை. அதன் நாக்கு போல அதில் சுட்டுவிரல் துடித்தது. அவள் காதுமடலை மெல்லப்பிடித்து அங்கே ஆடிய குழையைப்பற்றி நெருடி பின் வருடிக்கொண்டு கீழிறங்கி அதன் கீழ்மடலில் தொங்கிய குழையைத் தொட்டான். அவள் அவன் இன்னொருகையை எடுத்து தன் தோளில் வைத்துக்கொண்டாள். இருகைகளின் எடையையும் தாளமுடியாமல் இடைவளைந்தாள்.

அவன் உதடுகளைக் குவித்து தலையை இல்லை இல்லை என்பதுபோல ஆட்டியபடி அவள் காதையும் கன்னத்தையும் தொட்டு வருடினான். அவள் தோள்களை வருடி கரத்தோளுக்கு வந்த கைகள் ஒருகணம் நிலைத்தன. அவனில் நிகழ்வதை அறிந்தவளென அவள் தன் இருகைகளாலும் அவனை அணைத்து அவன் மார்பில் தன்னை சாய்த்துக்கொண்டாள். அவன் குறுங்கோல் பட்ட பெருமுழவு போல உறுமியபடி, அவளை அள்ளி இறுக அணைத்தான். பாறைகள் பறக்கும் பாலைப்புயலால் அவள் முற்றிலும் மூழ்கடிக்கப்பட்டாள்.

அவள் அவனை மஞ்சத்தில் அமர்த்தினாள். திருதராஷ்டிரன் அவளிடம் “நான் எதன்பொருட்டும் உன்னை விடமாட்டேன் என்று நினைத்தேன். நீ என்னை மறுத்தாலும் தூக்கிச் சென்றுவிடவேண்டும் என்று நினைத்தேன்” என்றான். “நான் உங்களை மறுக்கவில்லையே” என்று காந்தாரி சொன்னாள். “மறுத்தாலும் நான் விடமாட்டேன்… எதையும் நான் விடமுடியாது” என்றான் அவன். “நீங்கள் எதையும் விடவேண்டியதில்லை… அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும்” என்று அவள் சொன்னாள். அவன் நடுங்கும் கைகளால் தன் தலையைத் தடவிக்கொண்டான். அந்தக்கரங்களை எங்கே வைப்பது என்பது போல காற்றில் துழாவியபின் தன் தொடையில் வைத்துக்கொண்டான்.

“ஏன் பதற்றமுறுகிறீர்கள்?” என்றாள். “உன் வாசனை…உன் வாசனை” என்று அவன் தலையைத் திருப்பிக்கொண்டு சொன்னான். அவள் மெல்ல நகைத்தபடி “உங்கள் வாசனைகூடத்தான்…” என்றாள். “என்ன?” என்றான். “எப்போதாவது பாலையில் மழைபெய்யும்போது சுண்ணாம்புக்கல் பாறைகள் எழுப்பும் வாசனை” என்றாள். அவன் “என் மேல் சுண்ணம் பூசினர்” என்றான். “அதுவல்ல. இது வியர்வையின் வாசனை” என்றாள். “வியர்வை வரக்கூடாதென்றுதான் சுண்ணம்” என்றான். அவள் அவன் தோளில் தன் முகத்தை வைத்து “வியர்வை வந்தால்தானே இவ்வாசனை வரும்?” என்றாள்.

அவன் கைகள் அவள் கன்னங்களையும் கழுத்தையும் தொட்டபின் உடனே விலகிக்கொண்டன. “ஏன்?” என்றாள். “மிகமென்மையாக இருக்கிறாய். அச்சமாக இருக்கிறது” என்றான். “ஏன்?” என்றாள். “என் கைகள் கடினமானவை… நான் பெரிய பாறைகளைத் தூக்கி உடற்பயிற்சி செய்வேன்.” காந்தாரி மென்மையாகச் சிரித்தபடி “மென்மையானவற்றையும் பயிலவேண்டும் அல்லவா?” என்றாள். அவன் புரியாமல் “ஆம்” என்றபின் வாயை நாவால் தடவியபடி “நீர்” என்று கேட்டான்.

அவள் அவனுக்கு பொற்குவளையில் அளித்த தண்ணீரைக் குடித்ததும் அவன் சற்று நிலைக்கு வருவதுபோலத் தோன்றியது. அவன் அவளை நோக்கித் திரும்பி “நீ நடந்து செல்லும் அசைவையே நான் முகர்ந்தறிய முடிகிறது” என்றான். “நீ என்னென்ன நறுமணங்கள் அணிந்திருக்கிறாய் என்று என்னால் சொல்லமுடியும்… ஆனால் அதை எல்லாம் ஒன்றாக ஆக்குகிறது உன் வாசனை.” அவன் கைகளை நீட்ட அவள் அக்கைகளுக்குள் அமர்ந்தாள். “நீ இசை கேட்பாயா?” என்று திருதராஷ்டிரன் கேட்டான்.

“கேட்பேன்” என்றாள். “நான் இதுவரை வாழ்ந்ததே இசையால்தான். இசையால்தான் நான் வானையும் மண்ணையும் வெயிலையும் மழையையும் அறிந்திருக்கிறேன்…” என்றான் திருதராஷ்டிரன். “எப்போதும் நான் இசையை என்னுள் ஓடவிட்டுக்கொண்டே இருப்பேன். சூதர்கள் ஒருநாள் முழுக்க பாடிய இசையை அப்படியே என் நினைவில் இருந்து திரும்ப மீட்டு ஆண்டு முழுக்க கேட்பேன். ஒருமுறை களிந்த மலைக்குச் சென்றேன். அதென்ன நீரோசை என்றேன். அதுதான் அம்மலையின் ஓசை என்றார்கள். அதில் ஓடும் நீரோடைகளின் ஓசை அது… அதைப்போலத்தான் நானும்…”

காந்தாரி “ஆம் நான் கவனித்தேன்” என்றாள். “மகற்கோள் முடிந்தபின்னர்கூட களத்தில் அமர்ந்து அகத்தே இசையைத்தான் மீட்டிக்கொண்டிருந்தீர்கள்.” திருதராஷ்டிரன் வியப்புடன் “அப்படியா?” என்றான். “நீ என்னை பார்த்துக்கொண்டிருந்தாயா?” அவள் நகைத்து “பார்த்துக்கொண்டே இருந்தேன்… இசைநிறைந்த யாழ் என அமர்ந்திருந்தீர்கள்.” திருதராஷ்டிரன் “இருக்கும். நான் எப்போது இசைக்குள் செல்வேன் என எனக்கே தெரியவில்லை” என்றான். பின்பு முகம்மலர “என்னிடம் விதுரன் சொன்னான். நான் இசையால் ஆசியளிக்கப்பட்டிருக்கிறேன் என்று. விழியுள்ள எவரும் என்னைப்போல ஆழ்ந்து இசைகேட்கமுடியாதாம்.” காந்தாரி “ஆம் அது உண்மை” என்றாள்.

அவன் மார்பில் தலைசேர்த்து அவள் மெல்லச் சொன்னாள் “நான் என்ன எண்ணினேன் தெரியுமா?” திருதராஷ்டிரன் “என்ன?” என்றான். “உங்கள் விரல்நுனியைத் தொட்டால் உங்களுக்குள் ஓடும் இசையை நானும் கேட்கமுடியும் என்று.” திருதராஷ்டிரன் சிரித்து “அதெப்படி கேட்கமுடியும்? அது என் நெஞ்சுக்குள் ஓடுகிறது அல்லவா?” என்றான். “ஏன் நான் உங்கள் நெஞ்சுக்குள் இல்லையா”’ என்று அவள் அவனுடைய இறுகிய நெஞ்சை தன் மெல்லிய கையை முட்டியைச் சுருட்டி அடித்துக்கொண்டு கேட்டாள்.

“தெரியவில்லையே” என்றான் திருதராஷ்டிரன். “உங்கள் நெஞ்சுக்குள் இருப்பவர்கள் யார்?” என்றாள் அவள். “அப்படியென்றால்?” என்றான் திருதராஷ்டிரன். “நீங்கள் யாரை எப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?” திருதராஷ்டிரன் “அன்னையை….அவர்களை நினைக்காமல் என்னால் இருக்கவே முடியாது” என்றான். காந்தாரி “அதன்பின்?” என்றாள். அவன் “அதன்பின் விதுரனை….சிலசமயம் அவனைப்பற்றி எனக்குக் கவலையாகவும் இருக்கும்” என்றான். அவன் முகத்தை நோக்கியவளாக “ஏன்?” என்றாள். “அவன் பேரறிஞன். என் நாட்டை உண்மையில் அவன்தான் ஆளப்போகிறான்….அவன் சூதனானதனால் ஒருவேளை ஷத்ரியர்களாலோ பிராமணர்களாலோ அவனுக்கு அவமானங்கள் வரக்கூடும்” என்றான் திருதராஷ்டிரன்.

அவள் அவன் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தாள். அவன் முகம் கனிந்தது. “அவன் கைகள் மிக மெல்லியவை. சிறுவனின் கைகள் போல. அவன் உண்பதுமில்லை உடற்பயிற்சி செய்வதுமில்லை. நூல்களை மட்டுமே கற்றுக்கொண்டிருக்கிறான்.” திருதராஷ்டிரன் மார்பை கையால் வருடியபடி காந்தாரி கேட்டாள் “இனிமேல் உங்கள் நெஞ்சில் எனக்கான இடம் என்ன?” திருதராஷ்டிரன் “இனிமேலா?” என்றபின் “அன்னைக்கும் விதுரனுக்கும் அடுத்த இடம்… எப்போதும்” என்றான்.

அவள் சட்டென்று உருவான மனநெகிழ்வுடன் அவனை இறுக அணைத்துக்கொண்டாள். அவள் கைகளும் உடலும் அந்த இறுக்கத்தில் அறுபடப்போகிறவை என இறுகித்தெறித்தன. “இச்சொற்களுக்காகவே நான் உங்களை எவ்வளவு விரும்புகிறேன் என அறிவீர்களா? நீங்கள் எந்நிலையிலும் விதுரனை நெஞ்சிலிருந்து இறக்கமாட்டீர்கள் என்று எனக்குத்தெரியும்…ஆனால் அதை என்னிடம் சொல்வீர்கள் என்றுதான் நான் நினைக்கவில்லை.” அவன் முகத்துடன் முகம் சேர்த்தபடி “ஆனால் உங்களால் வேறு எப்படி இருக்க முடியும்? விழிகளை அறியாதவரென்பதனாலேயே நீங்கள் பொய்மையையும் அறியவில்லை” என்றாள்.

அவள் அணைப்பால் அவன் உடல் மாறத்தொடங்கியது. அவளை அவன் அள்ளி தன் உடலுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான். அவள் கரும்பாறை அயலது மாணை என அவனுடலில் படர்ந்தாள். உடல்கள் தங்கள் மேல் பீடம் கொண்டிருக்கும் உள்ளங்களை உதறிவிட்டு சேணம் கழற்றப்பட்ட புரவிகள் போல விரிநிலத்தில் பாய்ந்தோடியும் கழுத்துகளை உரசி அறைந்துகொண்டும் கால் பறக்க துள்ளிக்குதித்தும் தங்களைத் தாங்களே கொண்டாடிக்கொள்ளும் தருணம்.

அவள் விழிப்புகொண்டதும் திடுக்கிட்டவள் போல அவனை பற்றிக்கொண்டாள். “நான் அதைக் கேட்டேன்” என்றாள். “என்ன?” என்று திருதராஷ்டிரன் கேட்டான். “அந்த இசையை… உங்களுக்குள் ஓடிக்கொண்டிருந்த இசையை…” திருதராஷ்டிரன் நகைத்துக்கொண்டு கைகளைத் தூக்கி தலைக்குமேல் வைத்துக்கொண்டான். அவனுடைய கனத்த தோள்தசைகளில் அவள் முகம் சேர்த்தாள். “உண்மை… நான் அந்த இசையைக் கேட்டேன். அறையின் சுவர்களும் கூரையுமெல்லாம் நீர்பிம்பங்கள் போல நெளிந்தன. அதை நான் கேட்டேன் என்று உணர்ந்தபோதே அவ்விசை மறைந்தது.”

“இப்போது கேட்கிறாயா?” என்றான் திருதராஷ்டிரன் சிரித்துக்கொண்டு. “இப்போதும் நான் இசையுடன்தான் இருக்கிறேன்.” அவள் அவன் உடலில் தன் உடலை ஒட்டிக்கொண்டாள். மெல்ல நடுங்கும் தன் உடலால் அவனுள் ஓடும் குருதியின் ஓசையைத்தான் கேட்டாள். “இல்லை…ஆனால் நான் அப்போது கேட்டேன்” என்றாள். “அது உன் உளமயக்கு… ஒருவரின் அக இசையை இன்னொருவர் கேட்கவேமுடியாது. ஆகவேதான் மனிதர்களுக்கு செவிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.”

“இல்லை நான் கேட்டேன்” என்று அவள் சிறுமிக்குரிய பிடிவாதத்துடன் சொன்னாள். “நான் கேட்டேன்…ஐயமே இல்லை….அலைகளின் ராகம்…அலைகளைக் கேட்டேன்” என்றபின் அந்தப் பண்ணை மெல்ல ரீங்கரித்தாள். திருதராஷ்டிரன் சற்று அதிர்ந்து, அவளைத் தூக்கி அவள் முகத்தை தன் கைகளால் வருடினான். “ஆம், அலைகள். அலைப்பண்… இந்தளம் என்னும் தென்னகப்பண் அது.” திகைத்து அவளை அவன் இறுகப்பற்றினான் “ஆம் அதேதான்…அதை நீ எப்படிக் கேட்டாய்? இது தமிழ்நிலத்திலும் திருவிடத்திலும் மட்டுமே உள்ள பண்ணிசை அல்லவா?” என்றான். “நானே இதை ஒரேஒருமுறைதான் கேட்டேன். தென்பாண்டிநாட்டுப் பாணர் ஒருவர் என் அவைக்கு வந்தார்.”

காந்தாரி “நான் கேட்டதில்லை… சற்றுமுன்பு இதை உங்களிடமிருந்து அறிந்தேன்” என்றாள். “அந்த இசைகூட குரலாக ஒலிக்கவில்லை. தேனீக்கள் வெவ்வேறு வகையில் அதிர்வதுபோல அது எழுந்தது.” திருதராஷ்டிரன் வியந்து கைகளை மேலே தூக்கினான். ஏதோ சொல்லவந்தவன் போல கைகளை அசைத்தபின் “எப்படி இது நிகழலாகும்?” என்றான். “அந்த யாழை அவர்கள் மருதயாழ் என்கிறார்கள். அது தேனீ முரலும் ஒலியைத்தான் எழுப்பும். அதைத்தான் நான் கேட்டுக்கொண்டிருந்தேன்.” முகம் மலர்ந்து அவள் தோளைப்பிடித்து அசைத்து “அதை நீ கேட்டிருக்கிறாய்…என் அகத்தில் ஒலித்த இசையை கேட்டுவிட்டாய்…”

காந்தாரி “ஆம்….நான் அதைக்கேட்டபோது உணர்ந்தேன். அதற்கு முன் நான் இசையையே கேட்டதில்லை என்று…” திருதராஷ்டிரன் பரபரப்புடன் “ஆம், உண்மை. இங்கே வடக்கு பாரதவர்ஷத்தில் நாம் உண்மையில் இசையையே கேட்டதில்லை என நானும் உணர்ந்தேன். என் அவைக்கு எப்போதாவதுதான் தென்றிசை பாணர் வருகிறார்கள். இத்தனை தொலைவுக்கு அவர்களைக் கொண்டுவர முடிவதில்லை. அவர்களின் பண்முறை மிகமிக விரிவானது. அது குழலையும் யாழையும் அடிப்படையாகக் கொண்டது. ஆதன் அழிசி என்ற பாணர் என் அவையில் மருதப்பண்கள் பதினாறையும் ஒருநாளுக்கு ஓர் இசை முறையில் வாசித்துக்காட்டினார். அந்தப்பதினாறுநாட்களும் நான் ஆதவனின் நாடாகிய தென்னகத்தில் வாழ்ந்தேன். கடலையும் மலைகளையும் அறிந்தேன்.”

திருதராஷ்டிரன் உரத்த குரலில் சொன்னான் “தக்கேசி, கொல்லி, ஆரியகுச்சரி, நாகதொனி, சாதாளி, இந்தளம், தமிழ்வேளர்கொல்லி, காந்தாரம், கூர்ந்த பஞ்சமம், பாக்கழி, தத்தள பஞ்சமம், மாதுங்க ராகம், கௌசிகம், சீகாமரம், சாரல், சாங்கிமம் என பதினாறு பண்கள். அவற்றில் ஆரியகுச்சரியும் கௌசிகமும் மட்டுமே வடக்கில் அறியப்பட்டவை. ஆறாவது பண்ணான இந்தளம் பேரழகு கொண்டது. பின்மதியத்துக்கான பண். அது பெண்பால் பண் என்றார் பாணர். அதைப்பாடியபோது அலையலையாக வெயிலையும் காற்றையும் அறிந்தேன். அத்துடன்…”

வெட்கிச் சிவந்த முகத்துடன் திருதராஷ்டிரன் குரலைத் தாழ்த்தினான். “நான் அலைகளாக அறிந்தவை என்னை அன்று கிளர்ச்சியுறச்செய்தன. இன்றுதான் அந்த அலைகளெல்லாம் பெண்ணுடல்கள் என்பதை அறிந்தேன்” என்றான். “இந்தளம் முடிவில்லாத பெண்ணுடல் வளைவுகள்…பெண்ணின் வாசனை. பெண்ணின் மூச்சொலி….பெண்ணின் மெல்லிய பேச்சொலிகள்…” காந்தாரி “போதும்” என்று அவன் வாயை தன் கைகளால் பொத்திக்கொண்டு பெருமூச்சுவிட்டாள்.

திருதராஷ்டிரன் “அந்தப் பாணர் என் அவையில் எட்டுமாதங்கள் இருந்தார். அந்தப் பதினெட்டு பண்களையும் என் சூதர்களுக்குக் கற்பித்தார். ஆனால் அவரைப்போல என் பாணர்களால் பாடமுடியவில்லை” என்றான் பெருமூச்சுடன். “ஆனால் எனக்கு அவர்கள் பாடுவது முக்கியமல்ல. என் அகத்தில் உறையும் இசையை அவர்கள் தொட்டு எழுப்பிவிட்டாலே போதும்.” அவன் தன்னுள் மூழ்கி மலர்ந்த முகத்துடன் மல்லாந்துகொண்டான்.

காந்தாரி எழுந்து தன் ஆடையை அணிந்தபடி சாளரம் வழியாகத் தெரிந்த விண்மீன்களைப் பார்த்தாள். அந்தச் சயன அறை காந்தாரநகரியிலேயே உயரமான மாளிகையின் ஏழாவது அடுக்கில் இருந்தது. நகரின் மாளிகை முகடுகள் கீழே செல்ல, கோட்டைக்கு அப்பால் நெடுந்தொலைவு வரை விரிந்த பாலைநிலம் மேலே கவிந்த விண்மீன் கூரையுடன் தெரிந்தது. அப்பால் ஒரு செவ்விண்மீன் இக்கணம் இக்கணம் இக்கணம் இக்கணம் என அதிர்ந்துகொண்டிருந்தது.

“அங்கே தென்னகத்தில் வெண்மருது என்னும் மரம் இருக்கிறது. சேற்றுவயல்களின் அருகிலும் நீர்நிலைக்கரைகளிலும் மட்டுமே அது வளரும். வெள்ளி நிறமான பட்டைகொண்டது. சுண்ணப்பாறையைச்செதுக்கி எழுப்பியதுபோன்ற மாபெரும் அடிமரம் கொண்டது. அதன் அடியில்தான் அங்கே நாகதெய்வங்களை நிறுவி வணங்குகிறார்கள். நாகர்களின் மரம் அது என்று பாணர் சொன்னார். கொத்துக்கொத்தாக அது பூக்கும். பூக்களின் மகரந்தம் மென்மையான பிசினுடன் இருக்கும். நீரில் மிதந்து அது பரவும்போது அங்குள்ள வயல்சூழ்ந்த ஊர்களெல்லாமே மருதவாசனையுடன் இருக்கும்….” என்றான் திருதராஷ்டிரன்.

தனக்குள் என அவன் பேசிக்கொண்டான். “நான் அம்மலரை அறிந்ததில்லை. ஆனால் சற்றுமுன் அந்த வாசனையை முகர்ந்தேன். அதுதான்… உறுதியாகச் சொல்வேன். மெல்லிய அரக்குமணம். விட்டுப்போகாமல் உடலிலும் உள்ளத்திலும் நிறையும் பெண்மையின் மணம்…அதுதான் மருதம்.” அவன் மெல்ல புரண்டபோது மஞ்சம் ஓசையிட்டது. “மருதத்தின் வாசனையும் இந்தளத்தின் பண்ணும் ஒன்றாக என்னுள் கலந்தன… அதைத்தான் நான் இசையாக கேட்டுக்கொண்டிருந்தேன்.”

பாலைமின்னலில் விழியிழப்பதைப்பற்றி காந்தாரி நினைவுகூர்ந்தாள். பாலையில் பிறந்து இறக்கும் பல்லாயிரங்கள் பாலையைப் பாப்பதேயில்லை. பகலொளி விழிகளை மூடு மூடு என்கிறது. இரவொளி பாலையைச் சுருட்டி அருகே கொண்டு வருகிறது. இரவின் முழுமின்னலில் பாலையைப் பார்ப்பவனே அதன் பேருருவைக் காண்கிறான். அக்கணமே அவன் விழிகளை அது எடுத்துக்கொள்கிறது. எஞ்சிய வாழ்நாளெல்லாம் அந்த மின்கணத்தில் அவன் வாழ்வான்.

சகஸ்ரரேணுவில் அவ்வாறு விழியிழந்தவன் ஒருவன் இருந்தான் என்று கூட்டிவந்தனர். தெய்வங்களுக்குரிய முகமும் புன்னகையும் கொண்டிருந்த அவன் காலத்துக்கு அப்பால் இடத்துக்கு அப்பால் இருப்புக்கும் அப்பால் இருந்துகொண்டிருந்தான். ‘அது!’ என்றான். அரசரும் அமைச்சரும் கேட்ட வினாவுக்குப் பதிலாக ‘அது!’ என்று மேலும் பேருவகையுடன் சொன்னான். கைகளை விரித்து பேரெழுச்சியின் மெய்ப்பாடுகளுடன் ‘அது…மட்டும்தான்’ என்றான். இரு கைகளை விரித்து எம்பி கண்ணீருடன் ‘அதுவே ஆம்!’ என்றான்.

திரும்பி கட்டிலில் மல்லாந்து தன் இசையை தானே மாந்திக்கிடக்கும் பேருருவினனை நோக்கியபோது அவனும் அதுவெனும் சொல்லாக அங்கே இருப்பதாக தோன்றியது.

அவள் கண்களை மூடிக்கொண்டாள். அந்த இசையை நினைவுகூர முயன்றாள். மரக்கட்டடத்தின் சுவர்கள் வழியாக ஒலிகள் வந்துகொண்டிருப்பதை அப்போதுதான் அவள் அறிந்தாள். எங்கோ எவரோ ஏதோ சொன்னார்கள். யாரோ பதிலிறுத்தார்கள். ஒருவன் நகைத்தான். காலடிகள் கடந்து சென்றன, திரும்பி வந்தன. வேல் ஒன்று முட்டியது. வாள்பிடிகள் தொடைகளில் தட்டின. பாத்திரங்கள் மெல்லிய உலோக ஓசையுடன் தரையைத் தொட்டன. சாளரக்கதவுகள் ஒலியெழுப்பி அசைந்தன. அந்த அரண்மனை பேசிக்கொண்டிருந்தது.

நெடுநேரம் கழித்து அவள் எழுந்து சென்று கண்களை மூடிக்கொண்டே சாளரமுனையில் நின்றாள். காற்று மரக்கிளைகளை உலைக்கும் ஒலி. மாளிகைமுகடுகளில் கொடிகள் படபடக்கும் ஒலி. பாலை மணல் அசையும் ஒலி. மணல்சரிவுகள் மெல்ல வழியும் ஒலி. மிகமிக அப்பால் ஒரு ஓநாயின் ஊளை. இன்னொரு ஓநாயின் பதில் ஊளை. விண்மீன்கள் மின்னும் ஒலி. அவள் திடுக்கிட்டாள். ஆம், அதுவேதான். உடல் நடுங்க கைகளால் கன்னங்களைப் பற்றியபடி அவள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

திடுக்கிட்டு அவள் கண்விழித்தாள். அவளருகே அப்போது பாலையின் வெங்காற்றில் நீர்மணமாக ஏறிவந்த சக்‌ஷுஸ் என்னும் தேவதையை உணர்ந்தாள். அவள் காதிலாடிய சுரிகுழலை மெல்ல அசைத்து சக்‌ஷுஸ் கேட்டாள். “தோழி ஏன் தனிமை?” காந்தாரி திகைத்து “யார் நீ?” என்றாள். நகைத்தபடி சக்‌ஷுஸ் “நான் விழிகளின் தேவதை. கங்கையின் தோழியாக மாலியவானின் மடியில் பிறந்து கேதுமாலத்தில் ஓடி அவளுடன் இணைகிறேன். ஒருநாள் என் கரைக்கு வா. அன்று நான் என்னை உனக்குக் காட்டுவேன்.”

காந்தாரி நெடுமூச்சிட்டு நின்றதைக்கண்டு அவள் குழலைத் தூக்கி அசைத்து “என்ன துயர் தோழி?” என்றாள் சக்‌ஷுஸ். காந்தாரி நெடுமூச்செறிந்து “அறியேன். இவ்வேளையில் தெய்வங்களாலும் கைவிடப்பட்ட தனியளாக உணர்கிறேன்” என்றாள்.

சக்‌ஷுஸ் நகைத்து “ஆம், மணநாளிரவில் அனைத்துப்பெண்களும் அவ்வண்ணமே உணர்கிறார்கள்” என்றாள். காந்தாரி திகைத்து நோக்க “மணநாளிரவில் துயிலாத பெண் அரிய ஒன்றை இழந்தவள். துயில்பவள் இழப்பதற்கென அரியவை ஏதுமில்லா பேதை” என்றாள் சக்‌ஷுஸ். “நான் இழந்தவற்றைவிடப் பெரியதொன்றை கண்டேன்” என்றாள் காந்தாரி. “ஆம், அதையும் அனைத்துப்பெண்களும் காண்கிறார்கள். கண்டகணமே இழக்கிறார்கள்” என்று சக்‌ஷுஸ் நகைத்தாள்.

“நான் செல்லமுடியாதா அங்கு? அதை மீண்டும் தொடமுடியாதா?” சக்‌ஷுஸ் நகைத்தபடி அறைக்குள் சுற்றிப்பறந்து திரைச்சீலைகளை அசையச்செய்து பீடத்திலிருந்த சுடரை அலைபாயவைத்துத் திரும்பிவந்தாள். “சொல் தேவி” என்றாள் காந்தாரி. “ஒருகணத்தின் இனிமை ஒரு பிறவிக்குப் போதாதா என்ன?” என்றாள் சக்‌ஷுஸ். “இல்லை…எனக்குப் போதாது. நான் அக்கணத்திலேயே வாழவிழைகிறேன்.”

சக்‌ஷுஸ் சிரித்து “பகன் கதையைச் சொன்னார்களே, ஸித்தி என்னவானாள் என்றறிவாயா?” என்றாள். காந்தாரி தலையசைத்தாள். “வான்சரிவில் ஒளிர்ந்து செல்லும் வெண்ணிற ஆதித்யனாகிய பகனின் உடலில் ஒரு கரிய புள்ளியாக அவளிருக்கிறாள். தன்விழியை அவனொளியாக்கி அவனில் முழுதமைந்தாள்.” காந்தாரி அவளையே நோக்கிக்கொண்டிருந்தாள். “விடை” என்று சொல்லி அவள் மேலாடையைப் பறக்கவைத்து சக்‌ஷுஸ் எழ காந்தாரி “இரு” என்றாள்.

தன் மேலாடையைக் கிழித்து மடித்து தன் விழிகளை மூடிக்கட்டிக்கொண்டாள். “இதுதானே அவ்வழி?” என்றாள். “ஆம், அவன் இசையை நீயும் இனி கேட்பாய்” என்றபடி அவள் கன்னத்தைத் தொட்டபின் தொலைவில் நின்ற மரத்தின் இலைகளைக் குலைத்து அப்பால் கோட்டைக்கொடிகளிரண்டை அசைத்து முரசுத்தோலை மெல்ல விம்மச்செய்து சக்‌ஷுஸ் பறந்துசென்றாள்.

முந்தைய கட்டுரைபொன்னூஞ்சல் ஆடும் இளமை
அடுத்த கட்டுரைஐராவதம்