செழியனின் இசை

DSCN0313

 

2005-இல் நண்பர் சுகாவின் நண்பராக நான் செழியனை சந்தித்தேன். அதற்கும் முன்னரே அவரை சந்தித்திருக்கிறேன் என்று அவர் சொன்னபோது அந்த வசீகரமான முன்வழுக்கையை நினைவுகூர்ந்தேன். 1997-இல் விஷ்ணுபுரம் நாவல் சிவகங்கை அகரம் [அன்னம்] பதிப்பகத்தில் அச்சாகிக்கொண்டிருந்தபோது நான் சிவகங்கை சென்றிருந்தேன். அப்போது மீராவின் அச்சகத்தில் செழியனைப் பார்த்தேன். அன்று அவர் மிக இளைஞர், இலக்கிய வாசிப்பு கொண்டவராகவும் நிதானமாக பேசுபவராகவும் இருந்தமையால் பையன் என்று சொல்வதை தவிர்க்கிறேன். சுப்ரபாரதிமணியனின் ஒரு சிறுகதைத் தொகுதிக்கு [அப்பா] அவர் முன்னுரை எழுதியிருந்தார். அழகான சுருக்கமான முன்னுரை. இயல்புவாதத்தை வலியுறுத்தியது அது.

சிவகங்கையில் செழியனுக்கு நாடகம், திரைப்படம், புகைப்படம் என்றெல்லாம் ஆர்வங்கள் இருந்தன. அங்கே அவரது அந்தத்தள நண்பர்களாக இருந்தவர்கள் இன்று பேரரசு என அறியப்படும் இயக்குநர், அவரது தம்பியான முத்துவடுகு. முத்துவடுகு இப்போது காவியத்தலைவனில் இணைஇயக்குநர். அவர்களைத் தொடர்ந்து செழியனும் சினிமா ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்தார். பாலுமகேந்திராவுடன் அறிமுகம் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக ஆனார். சீமானின் கூடாரத்தில் இணைந்தார்.அழகிய புகைப்படங்கள் எடுத்தார். நண்பர்களின் குறும்படங்களுக்கும் ஆவணப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்தார். செழியன் ஒளிப்பதிவு செய்த முக்கியமான குறும்படம் மு.கருணாநிதி அவர்களைப்பற்றி கனிமொழி எடுத்தது.

ஆனால் இந்த மொத்த அலையிலும் அவரை வேறிட்டு நிறுத்தியது செழியன் தீவிரமான கலைப்படங்களின் மேல் முதன்மை ஈடுபாடு கொண்டவர் என்பது. இன்னொருமொழியில் என்றால் அவரே சில முக்கியமான படங்களை இயக்கியிருப்பார். இங்கு அப்படி ஓர் அலையே எழவில்லை. ஆனாலும் சென்ற பதினைந்தாண்டுகாலத்தில் சென்னையை மையமாகக் கொண்டு நிகழும் முக்கியமான எல்லா மாற்றுசினிமா முயற்சிகளிலும் செழியனின் பங்களிப்பு உண்டு.

செழியன் பின்னர் ஒளிப்பதிவாளராக தமிழில் அறிமுகமானார். சீமானின் தம்பி படத்தில் சிலபகுதிகளை ஒளிப்பதிவு செய்தார். அதன்பின் பாலாஜி சக்திவேலின் கல்லூரி. கடைசியாக பாலாவின் பரதேசி. பரதேசியில் அவரது ஒளிப்பதிவு அவரது இயல்புக்கு ஏற்ப மிக அடக்கமான தொனியில் அமைந்திருந்தது. அதில் ஒற்றை ‘ஷாட்’ காட்சிகள் பல தமிழ் ஒளிப்பதிவின் சாதனைகள் என்கிறார்கள். ஆனால் பளிச்சென்று எடுக்கப்படும் ஒளிப்பதிவுக்கு மட்டுமே இங்கே ரசிகர்கள் உண்டு, திரைவிமர்சகர்களில்கூட. பரதேசியில் குடிசைகளாலான ஊர் காட்டப்படும் முதல்காட்சியின் நீளமான ஷாட் பற்றி ஓர் திரைவிமர்சகர் எழுதிய குறை, அது ‘செட்’ என்று நன்றாகவே தெரிகிறது என்று. அது உண்மையான கிராமம், செட் அல்ல என்பது முதல் விஷயம். அப்படித் தெரிந்தாலும் அது ஒளிப்பதிவின் பிரச்சினை அல்ல என்பது அடுத்தபடி.

செழியனின் இன்னொரு முகம் அவர் சிறுகதையாசிரியர் என்பது. மிக அரிதாகவே அவர் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அவற்றில் பல கவனிக்கப்பட்டிருக்கின்றன. அவரது ஹார்மோனியம் என்ற சிறுகதை கதா விருது பெற்றது. அவரது பேச்சுபோல ஓசையில்லாமல் வெளிப்படும் இயல்புவாதச் சிறுகதைகள் அவை. எழுத்தாளராக அவர் அறியப்பட்டது அவர் ஆனந்தவிகடனில் எழுதிய உலகசினிமா அறிமுகத் தொடர்தான்.

செழியனை நான் பதினைந்தாண்டுகளாக அறிந்திருந்தாலும் நானறியாத முகம் இசை. அதாவது தெரியும், ஆனால் அறியவில்லை. முறையாக மேலை இசையும் கருவியிசையும் கற்றவர். அவரது மனைவி மேலையிசை கற்பிக்கும் கல்விநிலையத்தை நடத்துகிறார். அவரும் சுகாவும் இசையைப்பற்றி முடிவேயில்லாமல் பேசிக்கொண்டிருக்கையில் நான் சோகமாக கேட்டுக்கொண்டிருப்பேன்.

செழியன் மேலை இசை கற்பதைப்பற்றிய அறிமுகநூல் ஒன்றை நான்கு பகுதிகளாக எழுதியிருக்கிறார். அதை நான் வெளியிடவேண்டும் என்றார். ஒரு நண்பர் சந்திப்பிலேயே வெளியீடு முடிந்தது. வீட்டுக்குக் கொண்டுவந்து வாசித்தேன். நடை மிக கச்சிதமாக எளிமையாக இருக்கிறது என்பதற்கப்பால் எனக்கு பிடிகிடைக்கவில்லை. எனக்கு பொதுவாகவே இசைஞானம் இல்லை என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் இங்கேயே ஓர் இசைப்பயிற்றுநருக்கு அதை பரிசளித்தபோது அவர் கூப்பிட்டு பரவசமாக தமிழில் இது ஒரு சாதனை என்றார். ஒரு பாடநூலாகவும் அறிமுகநூலாகவும் இதற்கிணையான ஒன்று வந்ததே இல்லை என்றார்.

செழியனுக்கு வாழ்த்துக்கள்!

 

செழியன் பற்றி வெங்கட் சாமிநாதன்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 44
அடுத்த கட்டுரைஅஞ்சலி: பாலு மகேந்திரா