வெள்ளையானை -அடக்குமுறையும் சாதியும்

அன்புள்ள சார்,

சென்னையின் பழைய கட்டிடங்கள் மேல்.. எனக்கொரு மோகமே உண்டு. அங்கே பிறந்து வளர்ந்ததால்… அந்த கட்டிடங்களை பற்றி ஹைதராபாத்தில் தம்பட்டம் அடித்துக்கொண்டும் இருப்பேன்.
ராபர்ட் சிஷோமின் செனெட் ஹவ்ஸ், சென்ட்ரல் ரயில் நிலைய கடிகார கோபுரம், விக்டோரியா ஹால்.. என்னை பெருமை கொள்ள செய்யும். ஆனால் வெள்ளையானை அதையெல்லாம் சுக்குநூறாக உடைத்து விட்டது. இனிமேல் அந்த கட்டிடங்களை ஒரு நெருடலோடு தான் பார்ப்பேன் என்று தோன்றுகிறது.

கடும் பஞ்சத்துக்கும்.. இந்த கட்டிடங்களின் ‘திடீர்’ எழுச்சிக்கும் உள்ள தொடர்பு.. என்னை அதிர செய்து விட்டது.

இந்த கட்டிடங்களை பொறுத்தவரை.. ராபர்ட் சிசோம் எனக்கொரு ஹீரோ! எல்லாம் எஸ். முத்தையாவின் பாதிப்பு! ஒரு சரித்திர நாவலில் ராபர்ட் சிஷோமை இவ்வளவு சகஜமாய்… அவரது இயல்புகளுடன்(?) கொண்டு வந்து நிறுத்தினால் மிகவும் நெகிழ்ச்சியுடன் வியந்து இருப்பேன். ஆனால், வெள்ளையானையில் ராபர்ட் சிசோம் வரும் இடம் .. எய்டன் மாதிரி எனக்கும் துயரத்தை தான் கொடுத்தது! எவ்வளவு பெரிய துயரம் அது!

எனக்கு வெள்ளையானை ஒரு சமூக வரலாற்று படைப்பாகவே தோன்றுகிறது. முதலில் இந்த நாவலை நீங்கள் எழுதிய ஒரு ‘இடைநிலை’ புனைவாக தான் கருதினேன். அதாவது.. விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல் போன்ற பெரும் படைப்புகளுக்கு நடுவே வரும் சற்றே ‘மென்மையான’ படைப்பாக நினைத்தேன். ஆனால் ஒவ்வொரு பக்கமும் என்னை பல நூறு சிதறல்கள் ஆக வெடிக்க வைத்தன.

அந்த பஞ்ச காட்சிகள்… அந்த குழந்தைகளின் ‘தொர’ என்ற குரல்… அறுந்து தொங்கும் குடலை பிடித்து விளையாடுவது போல் இறந்த குழந்தையின் அந்த அசைவு.. நான் வாசிக்கும் பின்னறிவுகளில் என்னை ஓ வென அழவைத்தன!

குழந்தைகளின் அழைப்புக்கு சில கணங்கள் இணங்கி, பிறகு பதறி பின்வாங்கும் அந்த காட்சிகளில்.. இந்த குரங்கு கூட்டத்துக்கு எங்கிருந்து வந்தது இந்த பரிவு! கடவுளின் கண்ணீர்துளியா அது? அந்த கண்ணீர்த்துளியை காலால் நசுக்கி செல்கிறேன்… என்று வரும் அந்த இடம் எனக்கு ஏனோ பின்தொடரும் நிழலில் குரலில் வரும் “தெய்வ மகனின்” காட்சியை தான் நினைவு படுத்தியது.

1870 களின்.. உலகை மிக கச்சிதமாக நாவலில் பொருத்தி இருக்கிறீர்கள்.
சென்னையில் ராயபுரம் என்கிற நகர் அரும்பு விடும் அந்த காலம்!
புதுப்பேட்டை உருவான காலம். அமெரிக்காவில் புதிய எழுச்சிகள் வருகின்றன என்ற நம்பிக்கை பிறக்கும் காலம்!

வெள்ளையானை என்னை உள்ளுக்குள் தகிக்க வைத்த வாசிப்பு அனுபவம். இது நானே அறியாதபடி என்னை செம்மை படுத்தியிருக்கும் என்றே நினைக்கிறேன்!

நன்றியுடன்,
ராஜு


அன்புள்ள ராஜூ

நன்றி. ஒருநாவலாக வெள்ளையானை ‘சொல்வதை’ விட அதிகமாக காட்டவேண்டும் என நினைத்தேன். காட்சிகளை கருத்துக்களாக ஆக்குவதற்கான ஒரு பகைப்புலமாகவே அது ‘பேசுகிறது’

ஆகவே உங்கள் வாசிப்பு நிறைவளித்தது

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெள்ளையானை வாசித்தேன். அருமையான நாவல். நீதியுணர்ச்சியுடன் பேசும் எழுத்து. நன்றி. ஆனால் தலித் என்ற ஒரு நிலை இந்தியாவில் மட்டும் ஏன் இருக்கிறது என்று நீங்கள் சொல்லியிருக்கலாமென்று நினைக்கிறேன். இந்துமதம் அல்லது இந்தியப்பண்பாடுதான் அதர்குக் காரணமா என்று விவாதித்திருக்கலாமே. இஸ்லாமியநாடுகளில் தலித் என்ற நிலை இல்லை அல்லவா?

சமீர்

அன்புள்ள சமீர்

மனிதகுலம் ஒவ்வொரு நிலத்திலும் அங்குள்ள சூழலை ஒட்டி இயற்கையுடனும் தனக்குள்ளும் மோதி முன்னகர்ந்திருக்கிறது. அந்த பரிணாமத்தில் வைத்து அனைத்துப்பண்பாடுகளையும் உரிய மனவிலக்கத்துடன் பார்ப்பதற்குப்பெயரே பண்பாட்டுப்பயிற்சி என்பது.

இந்தப்பரிணாமத்தில் அடிப்படை மனித உணர்வுகள் உலகமெங்கும் ஒன்றாகவே இருந்துள்ளன. பொதுவான உற்பத்தி- நுகர்வுச் சூழலும் ஒரேபோன்றதே. ஆகவே பெரும்பாலான சமூக அமைப்புகள் சிறியவேறுபாடுகளுடன் உலகமெங்கும் காணப்படுகின்றன.

இயந்திரங்கள் உருவாவதற்கு முன்பு சகமனிதர்களையும் விலங்குகளையும் அடிமைகளாக உழைக்கவைத்து அதன் வழியாக உற்பத்தியை பெருக்குமுறைதான் உலகமெங்கும் இருந்தது. அந்த உபரியான உற்பத்தியே நாகரீகத்தை உருவாக்கியது. ஆகவே எங்கு உயர் நாகரீகம் இருந்ததோ அங்கெல்லாம் ஏதேனும் வடிவில் அடிமைமுறை இருந்தது.

நிலப்பிரபுத்துவகாலகட்டம் அதற்கு முன்னிருந்த பழங்குடிக்காலகட்டத்தைத் தொகுத்து உறுதியான அமைப்பாக ஆக்கியதன் விளைவாக உருவானது. ஆகவே உறுதியான சட்டங்களையும் ஆசாரங்களையும் உருவாக்கவே அது முயன்றது.

மிக உறுதியான அமைப்பு என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். ஆகவே சமூகத்தை பிறப்படிப்படையில் பிரித்து அதன் வழியாக சமூக அமைப்பை உருவாக்குவது உலகமெங்கும் உள்ள நிலப்பிரபுத்துவத்தின் இயல்பாக இருதது.அவ்வாறுதான் ஆண்டான் அடிமை ஆள்வோர் அறிவோர் அனைவரும் பிறப்பால் அமைந்தனர்.

உலகமெங்கும் இந்த பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு நிலப்பிரபுத்துவத்தின் மாறா அம்சமாகவே இருந்தது. இல்லாத சமூகம் பழங்குடிக்குலமாக மட்டுமே இருக்கும்.

அடிமைமுறை போரில் சகமனிதர்களை வென்று அவர்களை அடிமைகளாக்கி வேலைவாங்குவதாகவெ உருவானது. அவ்வாறு அடிமையாக்கப்பட்டவர்களை தொடர்ந்து அடிமைகளாக நீடிக்கச்செய்ய அவர்களை அடித்தளமக்களாக இன அடிப்படையில் வகுக்கும் கொள்கைகளும் நம்பிக்கைகளும் உருவாக்கப்பட்டன. அவை மதநம்பிக்கையாகவும் பண்பாட்டுமரபாகவும் விளக்கப்பட்டன.

அடிமைகளை வெறுக்காமல் அவர்களை சுரண்டமுடியாது. ஆகவே அடிமைகள் இழிந்தவர்கள், தூய்மையற்றவர்கள் போன்ற நம்பிக்கைகள் உருவாக்கி நிலைநாட்டப்பட்டன. இந்தியாவில் நில அடிமைகள் தலித் என அழைக்கப்பட்டனர். அவர்கள் இரண்டுவகை. நிலமும் அதிகாரமும் கொண்டிருந்து பின்னர் தோற்கடிக்கப்பட்டவர்கள். பழங்குடிகளாக இருந்து அடிமையாக்கப்பட்டவர்கள்

இத்தகைய தலித்துக்கள் இல்லாத உலகநாகரீகமே இல்லை. எகிப்து, அராபிய, பாரசீக நாகரீங்கள். ஐரொப்பிய நாகரீகம். சீனா, ஜ்ப்பானிய கீழைநாகரீகங்கள். அனைத்து இடங்களிலும் தலித்துக்கள் ஏதேனும் வடிவில் உண்டு. விதிவிலக்கே இல்லை

இயந்திரங்கள் வழியாக நாகரீகவளர்ச்சி உருவானபோது மெல்ல அடிமைமுறை அழிந்தது. ஆனால் அடிமைமுறைக்காக உருவாக்கப்பட்ட மனநிலைகள் பெரும்பாலும் நீடிக்கின்றன. மேலும் ஒருநூற்றாண்டு கழித்தே அவை மறையமுடியும். அதுவே உலகமெங்கும் நிகழ்கிறது

அரபு நிலத்தின் தாழ்த்தப்பட்டவர்கள் – அல் அக்தம்
என்னும் இந்தக்கட்டுரையை ஓர் உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறேன். இணையத்தில் தேடினாலே உலகமெங்கும் உள்ள தலித்துக்களைப்பற்றி நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்

ஜெ

முந்தைய கட்டுரைநூல் ஒன்று – முதற்கனல் – 48
அடுத்த கட்டுரைவெண்டி டானிகர் – மீண்டும்