‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 17

பகுதி மூன்று : புயலின் தொட்டில்

[ 7 ]

மகதமன்னன் விருஹத்ரதன் இளைஞனாக இருந்தபோது இமயத்தின் அடிவாரக் குன்று ஒன்றில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கையில் உயர்ந்த பாறை ஒன்றின் இடுக்கில் செங்கழுகின் கூடு ஒன்றைக் கண்டடைந்தான். அதனுள் இரு சிறகுமுளைக்காத குஞ்சுகள் அன்னை கொண்டுவரும் உணவுக்காக ஏங்கி கூண்டிலிருந்து எம்பி எம்பி மெல்லிய ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. கீழே மலைமடம்பு ஒன்றுக்குள் கண்மூடி இளங்காற்றேற்றுப் படுத்திருந்த விருஹத்ரதன் அந்த மெல்லிய ஒலியைக்கேட்டு தன் வழிகாட்டியான வேடனிடம் “அது என்ன ஒலி?” என்று கேட்டான்.

வேடன் செவிகூர்ந்தபின் “அது செங்கழுகுக்குஞ்சுகளின் ஒலி. அவை தாயை எதிர்பார்த்திருக்கின்றன. ஆனால் இயல்பாக அவை ஒலியே எழுப்புவதில்லை. செங்கழுகு சக்ரவர்த்திகளைப்போல அமைதியானது. அந்தத் தாய்ப்பறவை அனேகமாக எங்கோ இறந்திருக்கும். பசியில்தான் இவை ஒலியெழுப்புகின்றன” என்றான். அந்தக்குஞ்சுகளை உடனே பார்க்கவேண்டுமென விருஹத்ரதன் ஆசைகொண்டான். “அரசே, செங்கழுகு எப்போதும் அணுகமுடியாத பாறைநுனியிலேயே கூடுகட்டும். அங்கே செல்வது மனிதனால் முடியாதது” என்று வேடன் சொன்னான்.

முடிவெடுத்தபின் பின்வாங்காதவனாகிய விருஹத்ரதன் வேடனைத் தூண்டி பாறைவிளிம்புக்குச் செல்லவைத்து செங்கழுகின் கூட்டை கண்டுபிடித்தான். கீழே ஒரு காதம் ஆழத்தில் பச்சைவிரிப்பு போல காடு தெரிய மேகங்கள் உரசியதனால் கருமையில் ஈரம் வழிய நீட்டி நின்றிருந்த பாறை ஒன்றின் விளிம்புத் துருத்தலில் அந்தக்கூடு இருந்தது. “அரசே, அக்குஞ்சுகளுக்கு எதிரிகள் இல்லை. அவற்றின் அன்னை வராததனால் அவை பசித்து இறக்குமே ஒழிய அவற்றை எவ்வுயிரும் தீண்ட முடியாது” என்றான் வேடன்.

விருஹத்ரதன் பட்டுநூல் முறுக்கிச் செய்த கயிற்றை மேலே நின்றிருந்த பாறை நுனியில் கட்டிவிட்டு அதைப்பற்றியபடி அந்த வழுக்கும் ஈரம் வழியாக இறங்கினான். இருமுறை அவன் கால்கள் வழுக்கினாலும் அவன் கீழே விரிந்த பாதாளத்தைப்பார்க்காமல் அந்தக்கூட்டையே நோக்கியபடிச் சென்றதனால் அவனால் அங்கே சென்று சேரமுடிந்தது. அந்தக்கூட்டுக்குள் இருந்த ஒரு குஞ்சு இறந்திருந்தது. மற்ற இரு குஞ்சுகளும் இறக்கும் நிலையில் இருந்தன.

விருஹத்ரதன் அக்குஞ்சுகளை தன் ஆடையில் கட்டிக்கொண்டு மேலேறினான். அவற்றுக்கு பாறையில் ஒட்டியிருந்த புழுக்களைப் பிடித்து கசக்கி ஊட்டியபோது அவை பசியடங்கி அவன் உடலின் வெம்மைக்குள் ஒண்டிக்கொண்டன. அவன் அக்குஞ்சுகளை தன்னுடன் தன் தலைநகரமான ராஜகிருகத்தின் அரண்மனைக்குக் கொண்டுவந்தான். சுபட்சன், சுகோணன் என்னும் அந்த இரு செங்கழுகுகளும் அரண்மனை மருத்துவர்களாலும் சேவகர்களாலும் பேணப்பட்டு அரசகுமாரர்களைப்போல வளர்ந்தன. அவற்றுக்கு காட்டுக்குள் வேட்டையாடவும், நெடுந்தூரத் தூதுசெல்லவும் அரண்மனையிலும் கோட்டைவளாகத்திலும் பறந்து வேவுபார்க்கவும் பயிற்றுவிக்கப்பட்டது. அவை குதிரையிலும் ரதங்களிலும் அமர்ந்து பயணம்செய்யவும் கற்றிருந்தன.

விருஹத்ரதன் வேட்டைக்குச் செல்லும்போது தோளிலும் முழங்கையிலும் அணிந்த தோலுறைக்கு மேல் அவற்றில் ஒன்று அமர்ந்திருக்கும். இன்னொன்று தளபதி ஒருவனின் தோளில் இருக்கும். காட்டை அடைந்ததும் அவற்றுக்கு மன்னன் ஆணையிடுவான். அவை காட்டுக்குமேல் பறந்து வேவுபார்த்துத் திரும்பி வந்து வேட்டைமிருகங்கள் இருக்குமிடத்தை கூவியறிவிக்கும். அவற்றுக்குக் கீழே மன்னனின் வேட்டைக்குழு குதிரைகளில் பாய்ந்துசென்று வேட்டையாடும். சுபட்சனும் சுகோணனும் போர்களில் மன்னனை பாதுகாத்தன. நெடும்பயணங்களில் அவனை வழிநடத்தின.

இருபறவைகளையும் பாரதவர்ஷத்தின் அனைத்துப் பெருநகரங்களுக்கும் ஒற்றர்கள் வழியாக அனுப்பி அங்கே சென்று மீள்வதற்கான பயிற்சியை மகதத்தின் பறவைநிபுணர்கள் அளித்திருந்தனர். அவற்றின் அலகுகளின் நுனியிலும் காலின் பின்விரலிலும் கூரிய இரும்புமுனைகள் மாட்டப்பட்டிருந்தமையால் வானில் அவற்றைத் தடுக்கும் பறவைகள் எவையும் இருக்கவில்லை. இணையற்ற வல்லமை அளிக்கும் நிமிர்வே பிற பறவைகளை அவற்றை அஞ்சி ஓடச்செய்தது. எப்போதேனும் அறியாது எதிர்க்கவந்த கழுகுகளோ வல்லூறுகளோ அக்கணமே உடல்கிழிபட்டு வானில் சுழன்றிறங்க அவற்றை வானிலேயே சுழன்றுவந்து கால்களால் கவ்விப்பிடித்துக் கொண்டு சென்று மரக்கிளை உச்சியில் அமர்ந்து கிழித்துண்டன சுபட்சனும் சுகோணனும்.

சுகோணனின் முதல் பெரும்பயணம் அஸ்தினபுரியில் இருந்து ராஜகிருகத்துக்கு ஒற்றன் காளன் அனுப்பியசெய்தியுடன் பறந்ததுதான். பன்னிருநாட்களாக அஸ்தினபுரியின் வடபகுதியில் இருந்த புராணகங்கை காட்டில் வேட்டையாடியபின் இரவில் அரண்மனையை ஒட்டிய மரக்கிளையில் சேக்கேறியது சுகோணன். ஒவ்வொருநாளும் அது அங்கிருப்பதை காளன் உறுதிசெய்துகொண்டான். பீஷ்மரும் சத்தியவதியும் உரையாடியதை காளன் கண்டான். மறுநாள் மாலைக்குள் அவ்வுரையாடலின் சாரம் அரண்மனையின் சூதப்பணியாளர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பரவியது. பீஷ்மர் வியாசரைக்காணச் சென்றிருக்கிறார் என்ற தகவலை அறிந்ததும் காளன் அவர் திரும்பி வருவதை எதிர்பார்த்துக்காத்திருந்தான். பீஷ்மர் வந்ததுமே ரதங்களைப்பூட்ட ஆணையிட்டதும் அவர் சுயம்வரத்துக்காக காசிக்குச் செல்லவிருக்கிறார் என்ற ஒற்றுசெய்தியை அவன் மந்தண எழுத்தில் எழுதிக்கொண்டான்.

மந்தணச்செய்தி எழுதப்பட்ட தோல்சுருள் உடலின் தூவிகளுக்குள் சுற்றிக்கட்டப்பட்டு வழியனுப்பப்பட்ட சுகோணன் நள்ளிரவில் சிறகுவிரித்துக் கிளம்பியது. அதிகாலையில் அது கீழே கங்கையின் படித்துறை ஒன்றில் புதுக்குருதியை அறிந்துகொண்டது. ஏழுமுறை வானில் சிறகுவிரித்து வட்டமிட்டபின் மெல்ல காற்றின் படிக்கட்டுகளில் வழுக்கி இறங்கி அருகே இருந்த பாறை விளிம்பில் அமர்ந்து கவனித்தது. வெண்பசு ஒன்று முக்காலும் உண்ணப்பட்ட நிலையில் படித்துறையில் கிடப்பதைக் கண்டது. பசுவின் தோல்சிதர்களும் தசைத்துணுக்குகளும் அங்கே பரவிக்கிடந்தன. அதன் உண்ணப்படாத தலையின் கொம்புகளும் சரிந்திருக்க வாய் திறந்து மஞ்சள்படிந்த சப்பைப் பற்கள் தெரிந்தன. நீலம்பரவிய நாக்கு ஒருபக்கமாகச் சரிந்து வெளியே கிடந்தது. அதன் கண்கள் விழித்திருந்தாலும் உயிரற்றிருந்தன.

அந்தப்பகுதியைச் சுற்றி பாறை மேலும் மரங்களிலும் முடியற்ற கழுத்துகளை உடலுக்குள் இழுத்துக்கொண்டு பாம்பு போன்ற தலையுடன் கழுகுகள் அமர்ந்திருப்பதையும் புதர்களுக்குள் கழுதைப்புலிகள் பொறுமையில்லாமல் நாக்கை நீட்டியபடி எழுந்தும் அமர்ந்தும் கால்களால் மண்ணைப்பிராண்டியும் காத்திருப்பதையும் கண்டது. அதன்பிறகுதான் பாறைகளுக்கு நடுவே பசுவை நோக்கியபடி செம்பிடரித்தலை காற்றில் பறக்க பெரிய கிழச்சிங்கம் ஒன்று படுத்திருப்பதைக் கண்டது.

சிங்கம் கால்களை நீட்டி அதன்மேல் தலையை வைத்து அடிக்கடி காதுகளை அசைத்து மொய்க்கும் பூச்சிகளை விரட்டியபடி படுத்திருந்தது. மெல்ல அதன் கண்ணிமைகள் கீழிறங்கி தலை படியத்தொடங்குகையில் விழித்துக்கொண்டு மெல்ல உறுமியபடி தலையைக் குடைந்தது. நாக்கால் தன் கால்களையும் பாதங்களையும் நக்கிக்கொண்டது. அப்படியே மல்லாந்து நான்கு கால்களையும் மேலே தூக்கி முதுகை மண்ணில் புரட்டிக்கொண்டது. மீண்டும் எழுந்து முன்னங்கால்களை நீட்டி முதுகை நிலம்நோக்கி வளைத்து நிமிர்ந்தபின் வாயை அகலத்திறந்து கொட்டாவி விட்டது. ஆர்வமில்லாமல் எழுந்து வந்து பசுவைச் சுற்றியபின் ஆங்காங்கே முகர்ந்தும் மெல்லக்கடித்தும் சுவைத்தபின் மீண்டும் சென்று படுத்துக்கொண்டது.

சுகோணன் அதைப்பார்த்துக்கொண்டு காத்திருந்தது. சிங்கம் அவ்வுணவை இழக்க விரும்பவில்லை என்பதை அது புரிந்துகொண்டது. ஆனால் அது துயிலாமலிருக்கவும் முடியாது. தொடர்ச்சியாக அது அப்பசுவைத் தின்றுகொண்டிருந்தது என்பது சிங்கத்தின் நடையின் தொய்விலிருந்தே தெரிந்தது. சுகோணன் சிங்கம் மீண்டும் சென்று இன்னொரு இடத்தில் படுத்துக்கொண்டு கால்களை நீட்டுவதையும் மீண்டும் கொட்டாவி விடுவதையும் கண்டது. மெல்ல அதன் தலை தரையில் படிந்து வயிறு சீராக ஏறியிறங்கத் தொடங்குவதைக் கண்டபின் சிறகுகளை விரித்து ஓசையில்லாமல் காற்றில் இழிந்து மண்ணில் இறங்கி நகங்கள் விரிந்த கால்களை மெல்லத்தூக்கி வைத்தும் சிறகை விரித்து எம்பியும் பசுவின் அருகே வந்தது.

சுகோணன் பசுவின் குடலைக்கடித்து இழுத்து வெட்டிக்கொண்டிருந்தபோது கழுதைப்புலிகள் எக்காள ஒலியெழுப்பி குதித்தன. ஒரு கழுகு பெரிய சிறகுகள் படபடக்க அருகே வந்தமர்ந்தது. இன்னொருகழுகு அதனருகே வந்தமர அக்கழுகு சீறி அதை விரட்டியது. அவ்வொலிகேட்டு சிங்கம் விழித்துக்கொண்டு கர்ஜனை செய்தது. அதன் பெரிய வாய்க்குள் குருதிபடிந்த பற்கள் வெளுத்துத் தெரிந்தன. சிங்கம் பிடரியை சிலுப்பிக்கொண்டு எழுந்து பாய்ந்து வருவதற்குள் கழுகுகள் வானில் எம்பிவிட்டன. கழுதைப்புலிகள் புதர்களுக்குள் மறைந்தன.

சுகோணன் பெரிய துண்டாக வெட்டி எடுத்த குடல்ஊனுடன் எழுவதற்குள் சிங்கம் அருகே வந்துவிட்டது. அது கைநீட்டி அறைந்ததை சிறகடித்து விலகித் தவிர்த்த சுகோணனின் வாயிலிருந்து ஊன்துண்டு கீழே விழுந்தது. கடும் சினத்துடன் சிறகடித்தபடி முன்னால் பாய்ந்த சுகோணன் சிங்கத்தின் வலப்பக்கத்து விழியை தன் இரும்புமுனையுள்ள அலகால் கொத்தியது. கண்ணுக்குள் சென்ற அலகை அது இழுத்தெடுத்தபோது தசை அறுபட சிங்கம் வலியுடன் உறுமியபடி காலை ஓங்கி மண்ணில் அறைந்துகொண்டு சுழன்றது. சுகோணன் அந்த ஊன்துண்டைக் கவ்வி எடுத்துக்கொண்டு சிறகடித்து வானிலேறிக்கொண்டது.

சுகோணன் வந்துசேர்ந்த மறுநாள் சுபட்சன் அஸ்தினபுரிக்குச் சென்றது. பீஷ்மர் இரண்டு இளவரசிகளுடன் வந்த செய்தியை மகதத்துக்குக் கொண்டு மீண்டது. அம்பை நகர்நீங்கிய செய்தியை மீண்டும் சுகோணன் கொண்டுசென்றது. அதன்பின் அவை இரண்டும் நூற்றுக்கணக்கான முறை அஸ்தினபுரிக்கும் ராஜகிருகத்துக்கும் பறந்தன. பீஷ்மர் காந்தாரத்துக்குச் செல்லவிருக்கும் செய்தியுடன் சென்ற சுகோணன் ராஜகிருகத்தின் அரண்மனை முகடில் சென்று இறங்கிய அன்றுதான் அங்கே காந்தாரத்தின் அமைச்சரான சுகதர் ராஜகிருகத்தில் இருந்து தூது மறுக்கப்பட்டு மனச்சோர்வுடன் கிளம்பிச்சென்றார்.

VENMURASU_EPI_67
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சுகதர் வந்ததும் மீண்டதும் மகத இளவரசனான பிருகத்ரதனுக்குத் தெரியாது. அவன் அப்போது கங்கை வழியாக படகில் வங்கம் சென்று கடலை அடைந்து கடல்வழியாக கலிங்கம் செல்வதற்காக கலம் காத்து இருந்தான். கலிங்கத்தின் பாலூர் துறைமுகத்தில் இருந்து கடல்வழியாக வேசரத்துக்கும் சோழநாட்டுக்கும் சென்று மீளவேண்டுமென அவன் எண்ணியிருந்தான். மகதத்தில் இருந்து அவன் கிளம்பியநாள்முதல் ஒவ்வொரு நதியும் கலங்களும் துறைகளும் பெரிதானபடியே வருவதைத்தான் கண்டான். கங்கையின் நடுவே செல்லும் நூறு பாய்கொண்ட மரக்கலங்கள் அவன் அரண்மனை வளாகத்தைவிடப் பெரிதாக இருந்தன. கங்கையின் இருகரைகளும் முழுமையாகவே மறைய முற்றிலும் நீராலான பரப்பில் அவன் கலம் சென்றுகொண்டிருந்தது.

கங்கை சென்று சேர்ந்த கடல்முனையில் இருந்த தாம்ரலிப்தி துறைமுகம் ராஜகிருகத்தைவிட இருமடங்கு பெரியது. நூறு மரக்கலங்கள் ஒரேசமயம் கரைதொடும்படி அமைக்கப்பட்டிருந்த தாம்ரலிப்தியின் துறைகளில் வயலோரமரத்தை அணுகும் கொக்குக்கூட்டம் போல யவன வேசர பீதர்நாட்டு நாவாய்கள் பாய்மடக்கி அணைந்திருந்தன. துறைமுகத்தருகே பெரிய கடலைநோக்கி சிறிய கடல் வந்து சேர்வதுபோலத் தெரிந்த கங்கைக் கழிமுகத்தில் ஆற்றுக்குள் தடிகளை நாட்டி எழுப்பப்பட்டிருந்த மரக்கட்டடங்களில் ஒன்றில் அவன் வணிகனின் வேடத்தில் தங்கியிருந்தான். அவனுடன் அவனுடைய துணைவனான கஜன் வேலையாள் வேடத்தில் இருந்தான். அவர்கள் வந்த கலம் பொருட்களை இறக்கியபின் பாலூர்துறைக்கான பொருட்களை ஏற்றும்பொருட்டு துறைமுகத்தில் காத்து நின்றிருந்தது.

தாம்ரலிப்திக்கு வந்துசேர்ந்த அன்றே பிருகத்ரதன் அனுப்பிய வெண்புறாவான ஷீரை ராஜகிருகத்தில் இருந்து அவனது பிரியத்துக்குரிய அமைச்சர் பௌரவனின் செய்தியுடன் திரும்பி வந்தது. அதில் சுகதரின் தூது பற்றி சொல்லப்பட்டிருந்ததை வாசித்ததும் பிருகத்ரதன் திகைப்புடன் தன் துணைவனிடம் அந்த ஓலையைக் கொடுத்தான். நான்குநாட்கள் முன்னர் படகில் வரும்போதுதான் அவர்கள் காந்தாரத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். கஜன் “இளவரசே, இங்குள்ள எந்த ஷத்ரியகுலத்துடன் நாம் மண உறவுகொண்டாலும் நாம் அஸ்தினபுரியிடமிருந்து காக்கப்படப் போவதில்லை. அதற்கு வல்லமை உடைய ஒரே அரசு காந்தாரம்தான்” என்றான்.

இருபக்கங்களிலும் அலையடித்த நீர்வெளியைப் பார்த்துக்கொண்டு படகின் முனம்பில் நின்றிருந்த பிருகத்ரதன் சொல் என்பதுபோல தலையசைத்தான். “நாம் உண்மையில் ஒரு மிகச்சிறிய அரசு அரசே. கங்கைக்கரை ஷத்ரியர்கள் உலகம் செல்லும் திசையை அறியாமல் வயதுவந்தபின்னும் தொட்டிலில் தூங்கும் குழந்தைகளைப் போலிருக்கிறார்கள். வங்கமும் கலிங்கமும் கடல்வணிகத்தால் செழிக்கின்றன. அவர்களின் கருவூலங்கள் மழைக்கால ஏரிகள் போல வீங்கிக்கொண்டிருக்கின்றன. நாம் வேடர்களிடமும் ஆயர்களிடமும் வரி கொண்டும் படகுகளில் சுங்கக்கொடி கட்டியும் நாணயங்களை எண்ணிக்கொண்டிருக்கிறோம். தங்களை இந்தப்பயணத்துக்கு நான் அழைத்துச்செல்வதே தாங்கள் இன்றைய சூழலை உணரவேண்டுமென்பதற்காகத்தான்” என்றான்.

“அதை இந்த நாவாயைப் பார்த்ததுமே உணர்ந்துகொண்டேன். நம் துறையில் அணையும் நூறு படகுகள் இந்த ஒரு கலத்துக்கு நிகர்” என்றான் பிருகத்ரதன். “ஆம் அரசே, இனி நாவாய்களே மன்னனின் வல்லமையை வகுக்கப்போகின்றன. நதிகளும் வயல்களும் அல்ல, கடலே இனி பொன்விளையும் வெளி” பிருகத்ரதனின் விழிகளை நோக்கி கஜன் சொன்னான். “நமக்குத்தேவை பெருநாவாய்கள். அவற்றை நாமே கட்டவேண்டும், அல்லது விலைகொடுத்துப் பெறவேண்டும். மகதத்திடம் விற்கும்பொருட்கள் குவிந்துள்ளன. நாவாய்களை நாம் அடைந்தால் மிகவிரைவில் நமது கருவூலத்தை நோக்கியும் செல்வத்தின் மடைகள் திறக்கும்.”

“ஆனால் இத்தகைய பெருநாவாய்களை நாம் எப்படி வாங்கமுடியும்?” என்று பிருகத்ரதன் வினவினான். “அதற்கான செல்வத்தை நாம் கண்டடையவேண்டும். அதற்கு நாம் வல்லமை கொள்ளவேண்டும். அத்தகைய வல்லமையை நாம் பெறுவதற்குரிய வழிகள் இரண்டே. ஒன்று நாம் காந்தாரத்துடன் மணஉறவில் இறங்கவேண்டும். காந்தாரம் வடக்கே உத்தரபதத்தை முழுக்க ஆட்சி செய்கிறது. அந்த வணிகப்பாதை பொன்வெள்ளம் பெருகும் ஆறுபோன்றது. காந்தாரத்திடமிருக்கும் செல்வத்தில் ஒருபகுதி போதும் நாம் நூறுநாவாய்களை வாங்கி இந்த கங்கையை நிறைக்க முடியும்.”

திகைத்து நின்றிருந்த பிருகத்ரதனை நோக்கி கஜன் சொன்னான் “காந்தார இளவரசிக்கு அவர்கள் மணமகன் தேடிக்கொண்டிருக்கிறார்கள். வசுமதி என்ற பேருள்ள அவள் அழகி என்றனர் சூதர். நாம் கவனம்கொள்ளவேண்டியவன் அவள் தம்பி சகுனி. மூன்று இளவரசர்கள் இருந்தும் அவனையே சௌபாலன் என்கின்றனர் மக்கள். அவன் இளையவன் ஆதலால் காந்தார முடியுரிமை அற்றவன். ஆனால் மண்ணாளும் கனவுகொண்ட ஷத்ரியன் அவன். புதுநிலங்களை நோக்கி அவன் கனவு விரியும். அவனுடைய கண்கள் கங்கைக்கரைமேல் படிந்துவிட்டன என்கிறார்கள். அவனைவிட சிறந்த அரசத்துணைவன் உங்களுக்கு அமையப்போவதில்லை.”

பிருகத்ரதன் அந்த எண்ணத்தையே நெஞ்சில் மீட்டிக்கொண்டிருந்தான். ஏழ்நிலை மாடங்கள் செறிந்த தாம்ரலிப்தியின் நதிக்கரை அவனைநோக்கி லட்சம் நாவாய்களை உள்ளடக்கிய நாவாய் போல எழுந்து நெருங்கி வரக்கண்டதும் சொல்லிழந்து படகின் கயிற்றைப்பற்றியபடி விழிவிரிந்து நின்றான். தன் நாவாய் அந்தப்பெருந்துறையில் ஒரு வேப்பிலைச்சருகு போல மிதந்து நெருங்கியபோது அவன் சிறுமையுடன் திரும்பி கஜனிடம் “இதென்ன மயன் பணித்த துறைநகரா?” என்றான்.

“அரசே, காந்தார மரச்சிற்பிகளைத்தான் நாம் பாரதவர்ஷம் முழுக்கவே கொண்டுசென்று அரண்மனைகளை கட்டிக்கொண்டிருக்கிறோம்” என்றான் கஜன். பெருமரம் விழுந்து அலையெழுந்த சிறுகுளம்போல அதிர்ந்த மனத்துடன் பிருகத்ரதன் கஜனின் தோளைப்பற்றிக்கொண்டான். “தோழனே, நான் இந்நகரை வெல்ல வேண்டும். இந்நகரம் எனக்கு வேண்டும். இந்நகரின் அத்தனை மாளிகை முகடுகளிலும் மகதத்தின் கொடி பறக்கவேண்டும்” என்றான். “அரசே, அது முடியாதது அல்ல. கலிங்கத்தையே மகதம் வெல்லும் நாள் வரும்” என்றான் கஜன்.

கஜன் ஷீரை கொண்டு வந்த செய்தியை வாசித்தபின் “இதில் வியப்படைய ஏதுமில்லை அரசே” என்றான். “ஒரு ஷத்ரியமனம் இப்படித்தான் செயல்படும். தங்கள் தந்தை மட்டுமல்ல, ஆரியவர்த்தத்தின் ஷத்ரியர் அனைவருமே இந்த வாய்ப்பை இப்படித்தான் பயன்படுத்திக்கொண்டிருப்பார்கள்.” பிருகத்ரதன் “குதிரைச்சவுக்கை அனுப்பும் எண்ணம் என் தந்தையின் நெஞ்சில் பிறந்தது அல்ல. அது தேவபாலரின் செய்கை” என்றான். “யார் செய்ததாக இருந்தாலும் மிகப்பெரிய தீங்கு நிகழ்ந்துவிட்டது. பாரதவர்ஷத்தின் வரலாற்றிலேயே ஆற்றலும் கனவும் மிக்க அரசகுமரன் ஒருவனை நாம் அவமதித்துவிட்டோம். அவன் அதை அறைகூவலாக மட்டுமே எடுத்துக்கொள்வான்.”

பிருகத்ரதன் “என் தந்தை இதற்குள் இச்செய்தியை சூதர்களைக்கொண்டு அனைத்து ஷத்ரியர்களிடமும் கொண்டு சேர்த்திருப்பார். ஒரு கோட்டையைக் கைப்பற்றிய மகிழ்வுடன் அந்தப்புரத்தில் அமர்ந்து யவனமதுவை அருந்திக்கொண்டிருப்பார். சூதர்கள் சூழ்ந்து அவர் வரலாற்றை உருவாக்கிவிட்டார் என்று பாடுவார்கள்.” கஜன் சிரித்து “என்ன ஐயம்? ஷத்ரியர்கள் அனைவரும் ஒன்றே. சென்ற ஈராயிரமாண்டுகாலமாக அவர்கள் அனைவரும் சேர்ந்து உருவாக்கியது ஷத்ரியர் என்ற சொல்லை மட்டுமே. அவர்கள் ஒவ்வொருவரும் நூறு தலைமுறைகள் வழியாக அடைந்த செல்வமென்பது ஷத்ரியர் என்னும் அடையாளம்தான். அதைத்தான் எண்ணி எண்ணி மகிழ்வார்கள். அதன்பொருட்டே போர்புரிந்து மடிவார்கள்” என்றான்.

பிருகத்ரதன் பெருமூச்சுடன் “இனி ஒன்றும் செய்வதற்கில்லை” என்றான். “இளவரசே, எப்போதும் வழி ஒன்று எஞ்சியிருக்கும்” என்றான் கஜன். “நம்முடைய ஒற்றன் பாகுலன் காந்தார நகரியில் இருக்கிறான். அங்கிருந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சுகோணன் செய்திகொண்டு வருகிறது. அது தற்போது ராஜகிருகத்தில் உள்ளது. உடனே நாம் ராஜகிருகம் செல்வோம். காந்தாரநாட்டு இளவரசர் சகுனிக்கு தங்கள் அரசமுத்திரையுடன் தனிப்பட்ட செய்தி ஒன்றை அனுப்புவோம். அச்செய்தி சகுனியின் கையில் கிடைக்குமென்றால் நாம் அவரை வென்றெடுக்கமுடியும்.”

“சவுக்கைக் கண்டபின்னரும் நம்மை சகுனி ஏற்பானா?” என்றான் பிருகத்ரதன். கஜன் “சகுனி நெடுநாட்கள் திட்டமிடாமல் நம்மை நோக்கி இந்தத் தூதை அனுப்பியிருக்கமாட்டார். அவர் உங்களையும் மகதத்தையும் நன்கறிந்திருப்பார். உங்கள் தந்தை செய்த சிறுமையால் அவரது அந்தப் பெரும் திட்டம் சிதறுவதை அவர் விரும்ப மாட்டார். நானறிந்தவரை இங்குள்ள ஷத்ரியர்களைப்போல அரசியலுக்குமேல் அகந்தையை ஏற்றி வைத்திருப்பவரல்ல அவர்” என்றான். “சுகதர் கிளம்பிச்சென்று நான்கு நாட்களாகின்றன. நாம் சென்றுசேர மேலும் எட்டுநாட்களாகும். சுகதர் கொண்டுசெல்லும் சவுக்கைக் கண்டு சகுனி அடுத்தமுடிவுகளை எடுப்பதற்குள் நம் தூது அவர் கையில் கிடைத்தாகவேண்டும்.”

“ஆனால் நாம் இன்னும்கூட நம் அரசரின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள்” என்று பிருகத்ரதன் சொன்னான். “ஆனால் அவரும் நாமும் ஷத்ரியர்களின் முறைமைக்கு அடங்கியவர்கள். நாம் ராஜகிருகத்தில் இருந்து உடனே காந்தாரம் நோக்கிச் செல்வோம். நாம் செல்வதற்குள் அங்கே காந்தாரிக்கு சகுனி ஒரு சுயம்வரம் ஒருங்குசெய்யவேண்டும். நாம் சென்று அந்த சுயம்வரத்தில் பங்கெடுத்து அரசியை மணப்போம். அவளை நாம் மகதத்துக்குக் கூட்டிவருவதை அரசரோ ஷத்ரியகுலமோ தடுக்கமுடியாது.”

கலத்தை அப்படியே விட்டுவிட்டு இன்னொரு சிறியபடகில் கஜனும் பிருகத்ரதனும் கங்கைக்கரை வழியாக ராஜகிருகத்துக்கு வந்தனர். அவர்கள் வந்த அன்றே சுகோணன் சகுனிக்கான செய்தியுடன் வானில் எழுந்தது. சுதுத்ரியின் கரையை பீஷ்மரும் பலபத்ரரும் படகில் கடந்துகொண்டிருந்தபோது சுகோணன் வானில் அவர்களைத் தாண்டிச்சென்றது. சிபிநாட்டுக்குச் சென்றபின் அதன் வேகம் மட்டுப்பட்டது. இரவில் அதனால் பறக்கமுடியாது. பகலில் வேகக்காற்றுகள் இல்லாமலிருக்கையில் மட்டும் அது பறந்தது. எட்டு நாட்களுக்குப்பின் பீஷ்மர் தங்கியிருந்த சோலைக்குமேல் அது இளைப்பாறியது. பின்னர் பீஷ்மர் சென்ற பீதர்களின் வணிகக்குழு அதைத் தாண்டிச்சென்றது.

மேலும் இருபது நாட்களுக்குப்பின் மெலிந்து எடையிழந்த சுகோணன் காந்தாரத்தை அடைந்தது. வானையும் மண்ணையும் இணைத்த அனல்வெளியில் தகிக்கும் சிறகுகளுடன் பறந்த அது கீழே தெரிந்த காலிகவனத்தின் பசுமையைக் கண்டு சிறகு தாழ்த்தி இறங்கியது. வானில் சுழன்றபடி கீழே நோக்கியபோது சோலைநடுவே இருந்த கலங்கிய சிறு ஊற்றைக் கண்டது. அதனருகே அசைந்த எலியொன்றை பாய்ந்து கவ்விக்கொண்டு சிறகடித்து எழுந்து சோலையிலேயே உயரமான ஸாமி மரத்தின் சிறுகிளையில் அமர்ந்து அந்த எலியை உண்டபின் கழுத்தை இறகுக்குள் தாழ்த்திக்கொண்டு இமைகளை மேலேற்றி துயிலத் தொடங்கியது.

துயிலின் நடுவே காற்றுக்கேற்ப இருமுறை மெல்ல அசைந்து சிறகுகளை மீண்டும் அடுக்கி அமர்ந்தபோது கீழே துயின்றுகொண்டிருப்பவனை சுகோணன் நோக்கியது. ஆனால் அவனை அது பொருட்படுத்தவில்லை. அவன் எழுந்த அசைவை கண்ணுக்குள் உணர்ந்து அது விழித்துக்கொண்டு சிறகுகளை நீவிச்சீராக்கியபின் கிளையை உந்தி வானிலெழுந்து வெண்சுடராக நிறைந்திருந்த காற்றில் சுழன்றேறத்தொடங்கியபோதுதான் அதன் விலாவை அம்பு தாக்கியது. அந்த விசையில் காற்றில் தள்ளப்பட்டாலும் சுகோணன் மேலும் சிறகடித்துப் பறக்க முயன்றது. வானில் வீசிய காற்றுடன் அந்தச்சிறகசைவு அதற்கு முற்றிலும் பழக்கமில்லாதபடி முரண்பட பக்கவாட்டில் சரிந்தபடியே சென்றது. அதன் ஒற்றைக்கண்ணுக்கு கீழே வெந்துவிரிந்த பாலைநிற மண்வெளி வேகமாக ஓடிச்சென்றது.

மண்குன்று ஒன்று அதைநோக்கி வந்தது. அதற்கப்பாலிருந்த மென் மணலில் விழுந்த சுகோணன் தன் நகங்கள் பதிய மணலை அள்ளி அள்ளி நடந்து சிறகடித்து மேலும் எழுந்தது. முழுவிசையாலும் சிறகுகளை வீசி காற்றில் எழமுயன்றது. ஒரு சிறகு மட்டுமே முழுமையாக அசைவதை உணர்ந்தாலும் அதன் வேகம் குறையவில்லை. வானில் சிறிது எழுந்தபின் அதன் தலையும் அலகும் முன்னால் சரிந்தன. அலகு புழுதியில் ஆழப்பதிய அது மீண்டும் விழுந்தது. சிலகணங்களுக்குப்பின் சிறகுகள் புழுதியில் அளைய எம்பி எம்பி மேலும் எழுந்து சற்று தள்ளி விழுந்தது. விழுந்து எழுந்து விழுந்தபடியே சென்று பின் கொதித்துக்கொண்டிருந்த மண்ணில் புதைந்து இருமுறை அதிர்ந்தது. அதன் விழிகள் மூடிக்கொண்டன. கடைசியாக ஒளியுடன் விரிந்துகிடந்த மேகமற்ற வானை அது நோக்கியது. அதன் அகத்தில் பச்சைவிரிந்து கிடக்கும் கங்கைக்கரை காடுகள் ஓசையில்லாமல் ஒழுகிச்சென்றன.

மறுநாள் பகல் முழுக்க சுகோணனின் உடல் அந்த பாலையிலேயே கிடந்தது. அதன் மேல் வானத்தில் சுபட்சன் பீஷ்மரின் தூது தோற்றுவிட்ட செய்தியுடன் பறந்து மகதம் நோக்கிச் சென்றது. அன்றிரவு விண்மீன்களின் வெளிச்சம் மட்டும் பரவிய பாலைநிலத்தில் மெல்லிய காற்றால் மண்பரவி மூடப்பட்டிருந்த சுகோணனின் உடலை நாசிகன் என்னும் ஓநாய் கண்டெடுத்தது. ஏழுநாட்களுக்கும் மேலாக உணவில்லாமல் சிதல்களையும் சிறிய வண்டுகளையும் நக்கி உண்டு பாலையில் அலைந்து கொண்டிருந்த நாசிகன் அந்த மாமிசத்தின் வாசனையை தொலைவிலேயே அறிந்துகொண்டது. அதன் தொங்கி ஆடிய நாக்கிலிருந்து எச்சில் வழிந்தது. முன்னங்கால்களால் மண்ணை மிதித்து எம்பி வயிறு ஒட்டியதனால் ஒன்றோடொன்று பின்னிக்கொண்ட பின்னங்கால்களை சேர்த்து தூக்கி வைத்து நாசிகன் ஓடிவந்தது. வரும்போதே உள்ளம்தாளாமல் முனகல் ஒலியை எழுப்பியது.

உணவருகே வந்ததும் நாசிகன் திகைத்து சிலகணங்கள் நின்றது. அதைச்சூழ்ந்திருந்த இரவின் இருளுக்குள் காற்று ஓடும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருக்க நிலத்தில் மணல்கள் மெல்ல இடம்பெயர்ந்துகொண்டிருந்தன. நாசிகன் மூக்கை நன்றாகத் தாழ்த்தி இரையை கூர்ந்து நோக்கியது. இரை அசையவில்லை என்று உணர்ந்த பின் மெதுவாக அணுகி மூக்கை நீட்டியபடி உறுமியது. முன்னங்கால்களால் மணலை வேகமாக அள்ளி பின்னால் வீசியது. அதன்பின் மெதுவாக உடல்தாழ்த்தி மணலில் வயிற்றைப் படியவைத்து படுத்துக்கொண்டது. உணவை அடைந்த உத்வேகத்தில் அது பசியை முற்றிலும் மறந்துவிட்டிருந்தது.

பின்பு மெதுவாக மேலும் முன்னகர்ந்து சுகோணனின் உடலை அது மூக்கால் தொட்டது. உறுமியபடி வாலைச்சுழற்றி பாய்ந்து கவ்வி எடுத்துக்கொண்டு ஓடி சற்று தள்ளி நின்று திரும்பி நோக்கியபோது மணல்மேட்டின் உச்சியில் ஒருநாயும் இருவேட்டைக்காரர்களும் நிற்பதைக் கண்டது. மேலும் ஓடி ஓர் இடத்தில் இரையை போட்டபின் உறுமியது. நாய் அஞ்சி பின்னடைந்தது. வேட்டைக்காரர்கள் தன்னை தொடரவில்லை என்று உணர்ந்ததும் நாசிகன் அவர்கள் மேல் கண்களை நாட்டியபடி இரையை கீழே போட்டு அதன் இறகுகளைப் பிய்த்து வீசியது. உலர்ந்த மாமிசத்தை நீண்ட கோரைப்பற்களால் கிழித்து உறுமியபடி குதறி உண்ணத்தொடங்கியது.

அப்பால் மணல் மேட்டில் அமர்ந்திருந்த சகுனி ஓநாய் தன் இரையை உண்பதை பார்த்துக்கொண்டிருந்தான். நெடுநாட்கள் பசி இருந்தாலும் அதுகொண்டிருக்கும் எச்சரிக்கையை கவனித்தான். ஒவ்வொரு கவ்வலுக்குப் பின்னரும் அது நான்குபக்கமும் கவனித்தது. அவர்களை நோக்கி மின்னும் கண்களுடன் மெல்ல உறுமியது. உலர்ந்து தோல்போல ஆகிவிட்டிருந்த இறைச்சியை அது கவ்வி கிழித்து மெல்லும் ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. அவன் மணலில் அப்படியே அமர்ந்துகொண்டு வில்லை தன் மடியில் வைத்தபடி அதைக் கவனித்தான். சூனிகன் “அது ஒரு செங்கழுகு” என்றான். “வழிதவறி வந்து பாலையில் இறந்திருக்கிறது.”

சகுனியின் மனம் நிறைவுடன் இருந்தது. பீஷ்மர் அஸ்தினபுரிக்குக் கிளம்பிச்சென்றதும் அவனும் கிளம்பி அந்த ஓநாயைத்தேடி வந்திருந்தான். சூனிகன் அவனை எதிர்கொண்டு ஓநாய் இரையைக் கண்டுபிடித்த இடத்துக்கு அழைத்துவந்திருந்தான். “எப்போதாவதுதான் செங்கழுகுகள் வழிதவறுகின்றன” என்றான் சூனிகன். சிரித்தபடி சகுனி “பாலை வானம் நோக்கித் திறந்திருக்கும் ஒரு வஞ்சக்குழி…யானைகள்கூட அதில் விழுந்துவிடும்” என்றான்.

ஓநாய் இரையைக் கவ்வி இன்னும் சற்று தள்ளி கொண்டுசென்று போட்டு உண்ணத் தொடங்கியது. அதன் வால் மண்ணில் கீரிப்பிள்ளைபோல புரண்டு விளையாடியது. காதுகள் சிறு நாகபடங்கள் போலத் திரும்பிக்கொண்டே இருந்தன. “அந்தப்பறவையை ஓர் அம்பு வீழ்த்தியிருக்கிறது” என்றான் சூனிகன். “அவ்விறகுகளுக்குள் அம்பு ஒன்று தொங்குகிறது. ஆம் அது அம்புதான், கால் அல்ல.”

சகுனி வியப்புடன் எழுந்துவிட்டான். அதைக்கண்டு ஓநாயும் எழுந்தது. அவன் அமர்ந்ததும் அது எஞ்சிய உடலைத் தின்னத்தொடங்கியது. அவன் அது உண்பதையே பார்த்துக்கொண்டிருந்தான். நெருப்பு எரிவதைப் பார்ப்பதுபோலிருந்தது. பசிக்கு நிகராக பிரம்மத்தைக் காட்டும் வல்லமை இப்பூமியில் வேறேது என எண்ணிக்கொண்டான். பாலைநிலத்தில் வாழாதவர் எப்படி பசியை அறிந்திருக்கமுடியும்? பாலைநிலம் பருவடிவம் கொண்ட பசி. அதில் வாழ்பவர்கள் பசியாலானவர்கள். பசியே கண்கள். பசியே வாயும் நாசியும். பசியே கைகால்கள். பசியே உடல்.

நான் ஒரு பெரும்பசி என சகுனி நினைத்துக்கொண்டான். பசிவெறியுடன் உண்ட உணவுகளெல்லாம் நினைவுக்கு வந்தன. அவ்வெண்ணமே கடும்பசியை எழுப்பியது. எழுந்துசென்று அந்த ஓநாயுடன் சேர்ந்து சீறிச்சண்டையிட்டு அதன் உணவை பிடுங்கிப் பங்கிட்டு உண்ணவேண்டுமென்று தோன்றியது.

கிழக்குவானில் ஒளிபரவியபோது ஓநாய் சுகோணனின் கால்களையும் நன்றாக மென்று தின்றுவிட்டிருந்தது. கூரிய நகங்களுடன் அதன் இருகால்களை மட்டும் அது நறுக்கி மண்ணில் துப்பியது. அப்பகுதியை நன்றாக முகர்ந்து எஞ்சிய துணுக்குகள் ஏதுமில்லையே என்று பார்த்தது. காற்றால் அள்ளப்பட்டு மணலில் பரவிக்கிடந்த இறகுகள் கூழாங்கற்களில் சிக்கி தூவிகுலைந்து அதிர்ந்தன. நீரோட்டத்தில் சென்று படிந்தவைபோல ஒரு பள்ளத்தில் குவிந்துகிடந்தன. ஓநாய் இறகுகளில் இருந்து எதையோ எடுத்துப் பார்ப்பதை சகுனி கண்டான்.

ஒருகணத்தில் தன் வில்லை எடுத்து சரமேற்றி எய்தான். அம்பு சென்று ஓநாயின் அருகே விழுந்தது. வாயில் அந்த தோல்சுருளைக் கவ்விய ஓநாய் அதை விரைந்து மென்று விழுங்கியது. அவன் அருகே வருவதற்குள் அதை உண்டு முடித்து நாவைச்சுழற்றி நக்கியபடி பின்கால்களில் அமர்ந்து வெண்பற்கள் தெரிய தீ எரியும் ஒலியில் சீறியது. சகுனி கையில் வில்லும் அம்புமாக அதை நோக்கிச் சென்றான். அது பின்னகர்ந்தபின் திரும்பி வாலைச்சுழற்றியபடி ஓடி மேடேறி அவனைப் பார்த்தது. அவன் ஓடிவிலகும் ஓநாயை நோக்கியபடி நின்றபோது ஆழ்கிணற்றுநீர் காற்றில் அசைவதுபோல தன் அகத்தில் ஒரு சஞ்சலத்தை அறிந்தான்.

முந்தைய கட்டுரைவெள்ளையானை – அதிகாரமும் அடிமைகளும்
அடுத்த கட்டுரைநாகமும் யோகமும்