வலசைப்பறவை 5 : நீர்க்குமிழிகளின் வெளி

முன்பு விகடன் கேள்விபதில் ஒன்றில் இதழாளரான மதனிடம் ஒருவர் ‘வாசிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது இரண்டுக்கும் இடையே என்ன வேறுபாடு?’ என்று கேட்டார். மதன் ‘நிறைய தொலைக்காட்சி பார்த்து அறிவாளியாக ஆன எவரையாவது பார்த்திருக்கிறீர்களா?’ என்று பதில் சொன்னார்.

நேரடியான பதில். ஆனால் தொடர்ந்து சிந்திக்க வைப்பது. தொலைக்காட்சியும் ஓர் ஊடகம்தானே? நம்மவர் ஒருநாளில் ஐந்துமணிநேரத்தை சராசரியாக அதற்கு செலவிடுகிறார்கள். அவர்கள் எவரும் எளிய அளவில்கூட அறிவையோ சிந்தனைத்திறனையோ அடைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஒருநாளில் அரை மணிநேரம் வாசிக்கும் ஒருவர் ஒருவருடத்தில் சிந்தனைத்திறனிலும் மொழியிலும் தகவலறிவிலும் மேம்பட்டவராக ஆவதைக் காணலாம். என்னதான் வேறுபாடு?

நவீன யுகத்தின் அடையாளம் என்பது என்ன என்ற வினாவுக்கு பேரளவிலான உற்பத்தி, நுகர்வுவெறி, தொழில்நுட்பப் பாய்ச்சல், அனைவருக்குமான கல்வி என பலவற்றைச் சொல்வார்கள். முதன்மையானதாக நான் நினைப்பது நவீன யுகம் செய்தித்தொடர்பியலின் விளைவு என்பதைத்தான். செய்தித்தொடர்பை நிகழ்த்தும் ஊடகங்களே இன்று பொதுச்சிந்தனையை உருவாக்குபவை. பொதுச்சிந்தனையில் இருந்தே ஒரு சமூகத்தின் அரசியலதிகாரம் உருவாகிறது. சமூக அமைப்புகளும் தனிநபர் உறவுகளும் உருவாகின்றன. வரலாற்றுணர்வு உருவாகிறது. ஆகவே இன்றைய சூழலில் ஊடகங்கள் வகிக்கும் பங்களிப்பு முதன்மையானது. அதாவது ஊடகங்களே இன்று சமூக உருவாக்கத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

காந்தி பிரிட்டிஷ் பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளிவந்ததும் நிருபர்கள் சூழ்ந்துகொள்கிறார்கள்
காந்தி பிரிட்டிஷ் பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளிவந்ததும் நிருபர்கள் சூழ்ந்துகொள்கிறார்கள்

ஊடகங்களின் வல்லமையை மிகநுட்பமாகப் புரிந்துகொண்டு தன் அரசியல்பணிக்குப் பயன்படுத்திக்கொண்ட சிந்தனையாளர் காந்தி. காந்தியின் எழுத்துக்களில் கால்வாசி அவர் இதழ்களுக்கு எழுதிய வாசகர்கடிதங்கள் என்பதில் அவரது அணுகுமுறை தெரிகிறது. ஊடகங்களைக் கைப்பற்றுவதே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முதல்படி என்று வாதிட்டவர் இத்தாலிய மார்க்ஸியரான அண்டோனியோ கிராம்ஷி. இன்றைய ஊடகவியல்சிந்தனைகளுக்கு அவரையே பிதா என்று சொல்லவேண்டும். இன்று ஊடகங்களை மதிப்பிட்டு ஆராயும் அறிவுத்துறைகளும் கொள்கைகளும் பெருகியிருக்கின்றன.

இந்தியாவின் ஊடகவரலாற்றிலேயே எளிமையான பதில் இதற்கு கிடைக்கிறது என்று நினைக்கிறேன். அச்சு ஊடகம் 1780-களில் தோன்றியபின் இந்தியாவில் ஆங்கிலத்தில் அச்சு வடிவ செய்தி இதழ்கள் வரத்தொடங்கின. நூறாண்டுகாலம் அவை பெரும்பாலும் ஆங்கிலேயரின் குரல்களாகவே இருந்தன. 1850-களில்தான் இந்தியாவுக்குரிய தேசிய செய்தித்தாள்கள் வெளிவரத்தொடங்கின. அதை இந்திய செய்தி ஊடக யுகத்தின் தொடக்கம் எனலாம். 1923 வாக்கில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப்பெற்றபோது உருவான சோர்வுக்காலகட்டத்தில் ஏராளமான தேசியவாதிகள் ஊடகத்துறைக்குள் நுழைந்தனர். இந்தியச் செய்தி ஊடகத்துறையில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை அது உருவாக்கியது. இந்திய மொழிகளில் நவீன இலக்கியம் ஓர் இயக்கமாக வளர ஆரம்பித்தது. அடுத்த காலகட்டம் இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் 1950-களில். வணிகமாகவும் பெருந்தொழிலாகவும் ஊடகத்துறை மலர்ச்சி அடைந்தது அப்போதுதான்.

காந்தியின் ஹரிஜன் இதழ்

தமிழ் மலையாளம் ஆங்கிலம் ஆகிய மூன்றுமொழிகளிலும் இந்த நான்கு கட்டங்களிலும் ஊடகங்களின் பங்களிப்பை நான் ஓரளவு கவனித்திருக்கிறேன். அது சில மனப்பதிவுகளை அளிக்கிறது. முதற்காலகட்டத்தில் அச்சு ஊடகம் இந்தியாவின் பிரிட்டிஷாருக்கு பிரிட்டனின் நினைவை நீட்டிப்பதற்கும் இங்குள்ள அதிகார அரசியலை விவாதிப்பதற்குமான களமாகவே இருந்தது. அன்று அனைவருக்கும் உரிய பொதுக்கல்வி முந்தைய நிலப்பிரபுத்துவ சமூகத்தில் இருக்கவில்லை. படிப்படியாக பிரிட்டிஷார் உருவாக்கிய முதலாளித்துவம் அக்கல்வியை அறிமுகப்படுத்தியது. அப்படி ஒருசமூகம் இங்கே உருவானபின்னர்தான் இரண்டாவது ஊடகக்காலகட்டம் தொடங்குகிறது. தொடக்கத்தில் அந்த அச்சு ஊடகங்கள் உயர்கல்விகற்றவர்களை மட்டுமே சென்றடைவதாக இருந்தாலும் அவை தொடர்ச்சியான பாதிப்பை உருவாக்கி மெதுவாக தங்களுக்குரிய வாசக சமூகத்தை உருவாக்கிக் கொண்டன.

மூன்றாவது காலகட்டம் தேசிய எழுச்சி தேசத்தையே ஒருங்கிணைத்துவிட்ட பின்பு உருவானது. வட்டாரமொழியின் செய்தி ஊடகங்களை மக்கள் கூட்டம்கூட்டமாக நின்று வாசித்துக்கேட்டார்கள். நாகர்கோயிலில் செய்தித்தாள்களை வாசித்துக்காட்டும் மையங்கள் பல அக்காலத்தில் இருந்தன. எழுத்தறிவற்ற நூற்றுக்கணக்கானவர்கள் கூடி செய்திகளைக் கேட்டுச்சென்றனர். ஒரு செய்தி இதழுடன் ஒரு கிராமத்தில் நுழைந்தால்போதும் மக்கள் கூடிவிடுவார்கள், அங்கே அரசியல்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிடலாம் என தொடக்ககால தேசிய இயக்கவாதிகள் பலர் சுயசரிதைகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். அக்காலகட்டத்தில் கிராமங்கள்தோறும் நாளிதழ்களை வாசிப்பதற்கான வாசகசாலைகள் அமைப்பதையே முதன்மையான அரசியல்நடவடிக்கையாக காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் கொண்டிருந்தன.

நான்காவது காலகட்டத்தில் தேசம் முழுக்க கல்விபெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாகப் பெருகிவிட்டிருந்தது. இதழ்களை பணம்கொடுத்து வாங்கும் நடுத்தரவர்க்கம் பிறந்துவிட்டிருந்தது அந்நிலை வந்ததுமே ஊடகத்தை ஒரு பெருந்தொழிலாக லாபநோக்கில் நடத்தும் நிறுவனங்கள் வேரூன்றின. ஏற்கனவே இலட்சியநோக்குடன் தொடங்கப்பட்ட ஊடகங்கள் வணிகநிறுவனங்களாக ஆயின. புதிய வணிகப்பிரசுரங்கள் பிறந்தன. இக்காலகட்டத்தில்தான் ஊடகங்களுக்கு நுகர்வோர் என்னும் ஒரு தரப்பு உருவாகியது. வணிகத்தில் போட்டி பிறந்தது. தொழில்நிறுவனங்கள் அளிக்கும் விளம்பர வருவாய் ஊடகங்களின் போக்குகளைத் தீர்மானிக்கும் விசையாக ஆகியது. விளைவாக நுகர்வோரைக் கவரும்படியாக இதழ்கள் மாற்றம்கொள்ளத்தொடங்கின. நுகர்வோரின் தேவை ஊடகங்களை வடிவமைக்கத் தொடங்கியது.

இந்த மாற்றத்தை நாம் மிகத்தெளிவாகவே இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் உள்ள இதழ்களில் காணலாம். அல்லது ஆனந்தவிகடன் போன்ற ஒரு நெடுநாள் பாரம்பரியம் கொண்ட இதழில் இவ்விரு காலகட்டங்களிலும் வந்த மாறுதல்களை கவனிப்பது மிக ஆர்வமூட்டுவது. முந்தைய இதழ்கள் ஒரு இலட்சியவாதத் தன்மை கொண்டிருந்தன. அவை வாசகனை நோக்கிப் பேசின. அவற்றை மேடையில் இருந்து மக்களை நோக்கிப் பேசும் அரசியல்செயல்பாட்டாளனுடன் ஒப்பிடலாம். அவன் அவர்களை தன்னை நோக்கி இழுக்க முயல்கிறான். தன்னை அவர்கள் கவனிக்கும்பொருட்டு அவர்களை மகிழ்விக்க அவன் சிலவற்றைச் செய்யலாம். ஆனால் அவன் நோக்கம் தன் தரப்பை முன்வைப்பதே. ஐம்பதுகளுக்குப் பின்னால் வந்த இதழ்கள் மேடையில் நின்று கேளிக்கை நடத்தும் கலைஞனைப்போன்றவை. அவற்றுக்கு சொல்வதற்கு ஏதுமில்லை. ரசிகர்களின் ரசனைக்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு அவர்களை முடிந்தவரை மகிழ்வித்து லாபம் கொள்ள அவை முயல்கின்றன.

இந்திய ஊடகங்கள் இந்நான்கு கட்டத்திலும் பொதுச்சிந்தனையைக் கட்டமைப்பதில் எந்த அளவுக்குப் பங்களிப்பாற்றின? முதற்கட்டத்தில் அவை பெரும்பாலும் பிரிட்டிஷாரை நோக்கியே பேசின. அவற்றின் பேசுபொருள் அரசுநிர்வாகம் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் தொடர்ச்சியாக அவை பேசி முன்னிறுத்திய ஒன்று பொதுநீதி என்ற கருத்து என்பதை கவனித்திருக்கிறேன். இந்தியச்சூழலில் மட்டுமல்ல பொதுவாக உலகம் முழுக்கவேகூட அனைவருக்கும் சமமான பொதுநீதி என்ற கருத்து அன்று இருக்கவில்லை. அது ஓர் ஐரோப்பியக் கருத்து அன்று. அதை தொடர்விவாதம்மூலம் நிலைநிறுத்தியவை அக்கால அச்சு ஊடகங்கள்.

இரண்டாம்கட்டத்தில்தான் இந்திய ஊடகங்கள் இன்றைய ஜனநாயக இந்தியாவை கட்டியமைத்திருக்கும் அடிப்படைச் சிந்தனைகள் அனைத்தையும் இங்கே அறிமுகம் செய்து விவாதங்கள் மூலம் நிலைநாட்டின என்று சொல்லலாம். அவற்றை மிகப்பொதுவாக இப்படி தொகுத்துக்கொள்ளலாம். அனைவருக்குமான சட்டம், அனைவருக்கும் பொதுக்கல்வி, தனிமனித உரிமைகள், சிந்தனைச் சுதந்திரம், பாலியல் சமத்துவம், ஜனநாயக அரசியல். அந்தத் தொடக்கத்தை மிக விரிவாக முன்னெடுத்து ஓர் அலையை உருவாக்கியது மூன்றாவது காலகட்டம். மூன்றாவது காலகட்டம் பெரும்பாலும் இந்திய வட்டாரமொழிகளில் ஊடகங்களின் பெருவளர்ச்சியை நிகழ்த்தியது. குறைவான கல்வியறிவுள்ள பெருந்திரள் மக்களைச் சென்று சேர்ந்தது. ஆகவே அதன் பங்களிப்பும் மிக அதிகம்.

இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே மாற்றியமைத்த அடிப்படைக் கருத்துக்கள் வெறும் ஐம்பதாண்டுகாலத்தில் எப்படி பரவின என்று பார்த்தால் வியப்பே எஞ்சுகிறது. 1880 முதல் நம் அச்சு ஊடகங்கள் வெளியிட்ட புகழ்மிக்க எழுத்துக்கள் இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களை உதிரிமேற்கோள்களாகவே அறிமுகம் செய்திருக்கின்றன என்பதை கவனிக்கலாம். அதிலும் மிக முக்கியமானவர்கள் மட்டுமே இங்கு வந்துசேர்ந்திருக்கிறார்கள். சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் போன்ற தொன்மையான சிந்தனையாளர்கள், வால்ட்டேர், ரூசோ, எமர்சன், தோரோ, ரஸ்கின், ஜெ.எஸ்.மில், இங்கர்சால், ஃபாயர்பாக் போன்ற சமகாலச் சிந்தனையாளர்கள்; கதே, தல்ஸ்தோய், ஷெல்லி, விக்டர் ஹ்யூகோ, சார்ல்ஸ் டிக்கன்ஸ், கூல்ரிட்ஜ் போன்ற இலக்கியவாதிகள், மாஜினி போன்றவர்கள் இங்கே பேசப்பட்டிருக்கிறார்கள். இவற்றில் சிறிய வட்டார மாறுதல்கள் உண்டு. உதாரணமாக, கேரளத்தில் விக்டர் ஹ்யூகோவுக்கு இருக்கும் முக்கியத்துவம் தமிழகத்தில் இல்லை. மற்றபடி ஒரே வகையாகவே இந்த கருத்தாடல் நிகழ்ந்திருக்கிறது.

இன்று பார்க்கையில் இச்சிந்தனையாளர்கள் எவரும் ‘முறையாக’ அறிமுகம் செய்யப்பட்டதில்லை என்று தெரிகிறது. இவர்களின் முழுநூல்களும் பெரும்பாலும் எம்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டதில்லை. பிளேட்டோவின் குடியரசு போன்றவை தமிழிலும் மலையாளத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தாலும் பரவலாக வாசிக்கப்படவில்லை. மாறாக சமூகப்பிரச்சினைகளை விவாதிக்கும்போது மேற்கூறப்பட்ட சிந்தனையாளர்களின் பார்வைகள் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன. அவையே இந்தியசிந்தனையில் பெரிய மாறுதல்களை உருவாக்கின. இக்காலகட்டத்தில் தமிழில் புதியசிந்தனைகளை தொடர்ந்து அறிமுகம் செய்த பெ.நா.அப்புஸ்வாமி, ப.ராமஸ்வாமி, சுவாமிநாதசர்மா, ஏ.கே.செட்டியார் போன்ற பலரை நாம் இன்று நினைவுகூரலாம்.

பெ.நா.அப்புஸ்வாமி
வெ.சாமிநாத சர்மா
ஏ.கே.செட்டியார்

நான்காம் காலகட்டத்தில் ஊடகதளத்தில் இலட்சியவாத அலை ஓய்ந்து வணிகஅலை எழுந்தபோது இந்தியாவெங்கும் ஊடகம் இரண்டாகப்பிரிந்தது. பரவலான மக்களைச் சென்றடைந்த வணிக-கேளிக்கை இதழ்கள் ஒரு பக்கம். மறுபக்கம் அறிவியக்கத்துக்காக தகுதிகொண்ட குறைந்த அளவிலான வாசகர்களைச் சென்றடையும் சிற்றிதழ்கள் இன்னொரு பக்கம். ஐம்பதுகள் முதல் இந்தியமொழிகளில் புதியசிந்தனைகளை சிற்றிதழ்களே முன்வைத்தன. அவை ஓரளவு அவற்றைப் பற்றிப்பேசி அவற்றுக்குரிய மொழியையும் சொல்லாட்சிகளையும் உருவாக்கியபின்னர் அவை எளிய வடிவில் வணிக ஊடகங்களில் இடம்பிடித்தன.

அந்தோனியோ கிராம்ஷி

இந்திய சிற்றிதழ்த்தளம் இருவகை சிந்தனைப் போக்குகள் கொண்டதாக இருந்தது. ஒன்று, மார்க்ஸியச் சிந்தனை. இன்னொன்று நவீனத்துவ [modernism] சிந்தனை. முப்பதுகளிலேயே இந்தியாவில் மார்க்ஸியம் பேசப்பட்டாலும் மார்க்ஸியக் கொள்கைகள் விவாதிக்கப்பட்டது சிற்றிதழ்களில்தான். எழுபதுகளில் இந்தியாவில் மார்க்ஸியச்சிந்தனைகளை பேசும் சிற்றிதழ்களின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்தது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ போன்ற செவ்வியல் மார்க்ஸியர்களும் அண்டோனியோ கிராம்ஷி, போன்ற நவமார்க்ஸியர்களும் ராகுல சாங்கிருத்தியாயன், டி.டி.கோஸாம்பி, ஈ.எம்.எஸ் போன்ற இந்திய மார்க்ஸியர்களும் இங்கு விவாதிக்கப்பட்டனர்.

இன்னொருபக்கம் மார்க்ஸியத்தை ஐயப்படவோ மறுக்கவோ செய்த நவீனத்துவச் சிந்தனைகள் ஐரோப்பாவில் இருந்து வந்தன. இந்தியாவைப்பொறுத்தவரை நவீனத்துவ சிந்தனையை தொடங்கிவைத்த முன்னோடிச்சிந்தனையாளர் சிக்மண்ட் ஃப்ராய்ட்தான். நவீனத்துவ இலக்கிய அழகியலை உருவாக்கியவர் எஸ்ரா பவுண்ட். அதன்பின்னரே ரஸ்ஸல், சார்த்ர், சிமோங் த பூவா, மார்ட்டின் ஹைடெக்கர் போன்ற நவீனத்துவச் சிந்தனையாளர்களும், காஃப்கா காம்யூ போன்ற இருத்தலியல் எழுத்தாளர்களும் இங்கே பேசப்பட்டனர்.

இந்தச் சிந்தனைகளும் இங்கே மேற்கோள்கள் மூலமே அறிமுகமாயின என்பதை கவனிக்கலாம். இருபத்தைந்தாண்டுகாலம் பேசப்பட்ட சார்த்ரின் ‘இருத்தலும் இன்மையும்’ [Being and Nothingness] என்னும் முதன்மை ஆக்கம் இன்னும்கூட தமிழிலோ மலையாளத்திலோ கிடைப்பதில்லை. ஃப்ராய்டின் எந்த நூலும் இருமொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படவில்லை. மார்க்சிய மூலநூல்களைப்பொறுத்தவரை மூலதனம் மிகத்தாமதமாக, கிட்டத்தட்ட மார்க்சிய அலையே ஓய்ந்தபின்னர்தான் தமிழுக்கும் மலையாளத்துக்கும் வந்து சேர்ந்தது. மார்க்சியத்தின் மூலதத்துவமாக அமையும் ஹெகல் அல்லது ஃபாயர்பாக்கின் எந்நூலும் தமிழில் கிடைக்கவில்லை.

க.நா.சு

அதாவது சிந்தனைகள் இங்கே வந்ததற்கு ஒரு முறைமை இருக்கிறது. மேலைநாட்டுச் சிந்தனையாளர்களை இங்கே அறிமுகம் செய்வதென்றால அச்சிந்தனைகள் அங்கே பேசப்பட்ட ஒட்டுமொத்தச் சூழலையும், அவை நிகழ்ந்த அறிவுத்தளத்தின் பிறகுரல்களையும் இங்கே கொண்டுவரவேண்டும். அது இங்கே பெரும்பாலும் நிகழவில்லை. மாறாக நாம் இங்கே விவாதிக்கும் ஒரு சமூகவியல், அரசியல், பண்பாட்டுச் சிக்கலைப் புரிந்துகொள்ள மேலைநாட்டுச் சிந்தனையின் கருவிகள் கையாளப்பட்டன. அதன்மூலம் அச்சிந்தனைகள் இங்கே அறிமுகமாயின. அவ்வறிமுகம் பெரும்பாலும் மேற்கோள்களே. ஆனாலும் அவை இங்கே மேலதிக சிந்தனைகளை உருவாக்கின. நம் சூழலுக்கே உரிய விடைகளையும் கொண்டுவந்தன.

இந்தமுறைமை காரணமாக நம்முடைய சிந்தனையைத் தீர்மானிப்பதில் நூல்களை விட இதழ்களுக்கே அதிக முக்கியத்துவம் இருந்து வருகிறது. இந்தியாவில் எந்த ஒரு சிந்தனையாளனையாவது நூல் வடிவில் முழுமையாக அறிந்த வாசகர்கள் எத்தனைபேர் இருப்பார்கள்? ஆனால் ஓரளவு வாசிக்கக்கூடியவர்களுக்கு இதழ்கள் வழியாக சென்றகாலகட்டத்தின் முக்கியமான சிந்தனையாளர்களின் சிந்தனைகள் அறிமுகமாகியிருந்தன. அவர்களின் சிந்தனைகளை அவை பாதித்தன. முப்பதுகளில் வால்டேரும், ஐம்பதுகளில் ரஸ்ஸலும், எழுபதுகளில் மார்க்ஸும், எண்பதுகளில் சார்த்ரும் இப்படித்தான் நம்மை வந்தடைந்தனர். இது போதுமானதா என்ற வினா வேறு. ஆனால் இப்படித்தான் நிகழ்ந்தது. ஆகவே தொண்ணூறுகள் வரைக்கும்கூட பிரபல வணிகக் கேளிக்கை இதழ்களை வாசிக்கும் வாசகர்கூட சிலவருடங்களில் உலகசிந்தனையைப்பற்றிய ஒரு மெல்லிய அறிமுகத்தை அடைய வாய்ப்பிருந்தது.

ஐம்பதுகளில் தமிழகத்தின் வலுவான ஊடகமாக சினிமா மாறியது. முதன்மையாக கேளிக்கை இயல்பு கொண்டிருந்த சினிமா அச்சு ஊடகத்தை தன்னை நோக்கித் திருப்பியது. ஆனந்தவிகடனின் இதழ்க்ளை 1930 முதல் தொடர்ந்து பார்ப்பவர்கள் அது மெல்லமெல்ல சினிமாவை நோக்கித் திரும்பியபடியே இருப்பதைக் காணலாம். இன்று அது கிட்டத்தட்ட ஒரு சினிமாப்பத்திரிகை மட்டுமே. ஒருகாலத்தில் அதில் உ.வே.சாமிநாதய்யர் எழுதியிருக்கிறார் என்றால் இன்றைய வாசகர்கள் அதிர்ச்சி அடையக்கூடும். குமுதம் தொடங்கியதுமுதலே சினிமாவை அண்டி இயங்கிய இதழ். வணிகநோக்கம் கொண்ட அச்சு ஊடகங்கள் மேலும் வணிகநோக்கு கொண்ட காட்சி ஊடகத்தை தங்கள் முன்னுதாரணமாகக் கொண்டன என்று இதைச் சொல்லலாம்.

தொண்ணூறுகளில் தொலைக்காட்சி வந்தது. அச்சு ஊடகத்தின் செல்வாக்கில் அது பெரிய அடியை வீழ்த்தியது. தொலைக்காட்சி முழுக்கமுழுக்க கேளிக்கை ஊடகம். கேளிக்கை அல்லாத எதுவும் அதில் கவனிப்பையே பெறுவதில்லை. அதன் விரிவான செய்திவிவாதங்களால் கூட மேலோட்டமான உத்வேகத்துக்கு அப்பால் எந்த வகையான அறிவளிப்பையும் அதன் பார்வையாளனுக்கு செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியின் செய்திவிவாதங்களைப் பார்க்கும் எவரையேனும் மாதிரிக்காக சோதித்துப்பார்க்கலாம். செய்திகளைப்பற்றியேகூட ஓர் எளிய புரிதல் அவரிடமிருப்பதில்லை என்பதுதான் தெரியவரும். அதைத்தான் மதன் அவரது பதிலில் சுட்டிக்காட்டியிருந்தார்.

கேளிக்கை வணிகம் நோக்கிய நகர்வு காரணமாக அச்சு ஊடகம் ஐம்பதுகள் முதல் படிப்படியாக தன் அறிவியக்கத் தொடர்புகளை வெட்டிக்கொண்டே இருக்கிறது. முப்பதுகளில் அது அறிவியக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஐம்பதுகளுக்குப்பின் அறிவியக்கத்தின் சில துணுக்குகளை எடுத்து பொதுச்சிந்தனைத் தளத்துக்குக் கொண்டு செல்லும் பணியைச் செய்தது. இன்று ஓரளவேனும் எஞ்சியிருக்கும் அறிவியக்கத் தொடர்புகளைக் கூட களைந்துகொண்டு வெறும் கேளிக்கைமேடைகளாக தங்களை ஆக்கிக் கொண்டுள்ளது. மதன் சொன்னதை இப்படி நீட்டிக்கொள்ளலாம். இன்று ஒருவர் நாளில் ஐந்துமணிநேரம் இன்றைய அச்சு ஊடகங்களை வாசித்தாலும் எந்த அறிவுத்தள முன்னகர்வும் அற்றவராகவே இருப்பார்.

அடுத்தகட்டமாக இணையம் வழியாக சமூகவலைத்தளங்கள் என்னும் ஊடகம் வல்லமைபெற்றுள்ளது. அச்சு ஊடகங்கள் அதை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கின்றன. சமூகவலைத்தளங்கள் எந்தவகையான அறிவுப்பரிமாற்றத்துக்கும் ஆற்றலற்றவை, வெறும் சொற்குவியல்களாக நிகழும் அரட்டைகளுக்கு அப்பால் அவற்றை கொண்டுசெல்லமுடியாதென்பது மேலும் மேலும் நிரூபணமாகியபடியே உள்ளது. அனைத்துக்கருத்துக்களையும் உள்ளிழுத்து வெட்டி அரட்டையாக பொருளிழக்கச்செய்து கரைத்துக்கொள்ளும் கடல் அது. இன்றைய முதன்மையான ஊடகமாக சமூவலைத்தளங்கள் மாறும்போது அச்சு ஊடகங்கள் அவற்றின் நீட்சிகளாக தங்களை உருமாற்றிக்கொண்டிருக்கின்றன.

விளைவாக சென்ற நூறாண்டுகளுக்கும் மேலாக சமூகத்துடன் உரையாட அறிவியக்கங்களுக்கு இருந்த ஊடகப்பரப்பு முழுமையாகவே இல்லாமலாகிக்கொண்டிருக்கிறது. அறிவியக்கத்தில் இருந்து சிந்தனைகள் எளிமைப்படுத்தப்பட்டு மக்களின் பொதுச்சிந்தனைத்தளத்துக்கு கொண்டு செல்லப்படுவதேயில்லை. சிந்தனையாளர்கள் அனைவருமே இந்தப்பெருங்கடலுக்குள் மூழ்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன பேசினாலும் அவையெல்லாம் கொப்புளங்களாகவும் குமிழிகளாகவும் மாறி மேலே நீர்ப்பரப்பில் சென்று வெடித்து மறைகின்றன.

[இலங்கையில் இருந்து வெளிவரும் சமகாலம் இதழில் வெளிவரும் தொடர்]

சாமிநாத சர்மா- தயாளன் கட்டுரை

முந்தைய கட்டுரைகாந்தாரமும் தமிழகமும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 14