வலசைப்பறவை 4 : புயலும் மகரந்தங்களும்

‘எந்த தத்துவமேதையும் பொதுச்சிந்தனையில் அதிகபட்சம் பத்துமேற்கோள்களாகத்தான் அறியப்படுவான்’ என்று ஒருமுறை என் ஆசிரியரும் கீழைத்தத்துவச் சிந்தனையாளருமான நித்ய சைதன்ய யதி சொன்னார். தத்துவமேதை ஹெகலின் எழுத்துக்களின் முழுத்தொகுப்பு நூல்கள் அடுக்கடுக்காக அவரது குருகுலத்து நூலகத்தில் இருந்தன. அந்த பல்லாயிரம் பக்கங்களை பார்த்துக்கொண்டிருந்தபோது அவர் அதைச் சொல்லிக்கேட்டது திகைப்பளிப்பதாக இருந்தது.

‘அப்படியென்றால் எதற்காக ஹெகல் இத்தனை பக்கங்கள் எழுதினார்?’ என்று நான் கேட்டேன். ‘ஒரு முதற்சிந்தனையை முன்வைத்து, அதன் மேல் எழும் அனைத்துக்கேள்விகளுக்கும் விடையளித்து வாதிட்டு நிறுவ அத்தனை பக்கங்கள் எழுதாமல் முடியாது. அவ்வாறு நிறுவப்பட்ட சிந்தனைகள் மட்டுமே பொதுச்சிந்தனையில் அவ்வாறு பாதிப்பைச் செலுத்தமுடியும்’ என்றார் நித்யா.

ஒரேசமயம் சோர்வையும் உத்வேகத்தையும் ஊட்டும் உண்மை இது. மாபெரும் தவத்தின் விளைவுகள் காலத்தால் சுருக்கிச்சிறிதாக்கப்பட்டு மாத்திரைகளாக ஆவது சோர்வளிக்கிறது. ஆனால் அத்தகைய தவங்கள் காலகாலமாக நிகழ்ந்துகொண்டே இருப்பதில் உள்ள அடிப்படை மானுட எழுச்சி உத்வேகத்தையும் அளிக்கிறது.

சமீபத்தில் காந்தியம் என்றால் என்ன என்று ஐநூறு சொற்களில் ஒரு கட்டுரை எழுதியபோது நித்யாவின் அச்சொற்களை நினைவுகூர்ந்தேன். காந்தி ஐம்பதாயிரம் பக்கங்களுக்குமேல் எழுதியிருக்கிறார்.ஆனால் அந்த ஐநூறுவார்த்தையளவுக்குக் கூட அவரது சிந்தனைகள் பொதுச்சிந்தனையில் எஞ்சவில்லை. அவற்றைஎடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது. ஆனால் அவ்வாறு எஞ்சியவை சென்ற நூற்றாண்டின் அரசியலில், சமூகவியலில், சூழியலில் பிரமிக்கத்தக்க மாற்றத்தை உருவாக்கியிருக்கின்றன.

காந்தி அரசியல் செயல்பாட்டாளர். அவரது பாதிப்பு நேரடியாக அளவிடத்தக்கது. ஆனால் நூலகங்களில் அரவிந்தரின் தொகைநூல்களைப் பார்க்கையில் தத்துவஞானிகள் எழுதும் பல்லாயிரம் பக்கங்களின் மதிப்பென்ன என்ற வினா எழுகிறது. காரம் விளையாட்டின் சிவப்புவில்லை போன்றவர்கள் அவரக்ள். அவர்கள் வேறு வில்லைகளைத் தாக்கித்தான் தங்களை நிகழ்த்தமுடியும். தத்துவம் அரசியலிலும் இலக்கியத்திலும் ஆற்றும் பாதிப்பின் வழியாக மட்டுமே செயல்படமுடியும்.

ஆனாலும் சலிக்காமல் மேதைகள் செயல்பட்டிருக்கிறார்கள். பொதுச்சிந்தனை என்பது கருங்கல்லால் ஆன மாபெரும் தூண். அதை அனைத்து உயிர்வேகத்தைக்கொண்டும் உந்தினால்தான் சற்றேனும் அசைக்கமுடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்லாயிரம்பேர் சிந்தனைத் தளத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அனைவருமே ஏதேனும் ஒரு விசையை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் மிகமிகச் சிலரின் பங்களிப்பை மட்டுமே நம்மால் பிரித்தறிய முடியும்.

பொதுச்சிந்தனை என்றால் உண்மையில் என்ன?. என்வரையில் இப்படி வரையறுத்துக்கொள்கிறேன். ‘அன்றாடவாழ்க்கையில் புழக்கத்தில் இருக்கும் அனைத்து அடிப்படை விஷயங்களைப்பற்றியும் குறைந்தபட்சப் புரிதலுக்குத் தேவையான சிந்தனைகளின் களம்’.

பொதுச்சிந்தனை நேரடியாக வாழ்க்கையுடன் கொண்டுள்ள தொடர்பின் அடிப்படையிலேயே உருவாகிறது. ஆகவே எப்போதும் அதில் முதன்மை இடம்பெறுவது அரசியலே. அரசியலுடன் நேரடியாகத் தொடர்புடைய சமூகவியல் அடுத்தபடியாக. அதன்பின் அறநெறிகள். அறநெறிகளை விவாதிக்கும் தன்மைகொண்டவையாதலால் இலக்கியம் அதற்குப்பின்பு வாழ்க்கையுடன் ஊடாடும் தொழில்நுட்பம் அதைத்தொடர்ந்து முதன்மைபெறுகிறது. தத்துவமும் பிரபஞ்சவியலும் அவை அரசியலுடனும் நெறிகளுடனும் எவ்வகையில் தொடர்புகொள்கின்றன என்பதை ஒட்டி மட்டும் முக்கியத்துவம் பெறுகின்றன.

பொதுச்சிந்தனைத்தளம் என்பது ஒருவகையில் ஒரு சராசரிதான். ஒரு சமூகத்தில் பேசப்படும் உச்சகட்ட கருத்துக்களுக்கும் அவைசார்ந்து உருவாகும் குறைந்தபட்சப்புரிதலுக்கும் நடுவே ஒரு இடத்தில் நாம் அதை வகுத்துக்கொள்கிறோம். அதை தெளிவாக தொகுத்துச் சொல்ல முடியாதென்றாலும் எப்படியோ அதை உணர்ந்துகொண்டேதான் இருக்கிறோம்.

ஒருசமூகத்தில் வந்து விழும் பல்வேறுகருத்துக்கள் முட்டி மோதி உருவாகும் முரணியக்கத்தின் சமநிலைப்புள்ளியாக அந்த பொதுச்சிந்தனை உருவாகிறது என்று உருவகித்துக்கொள்ளலாம். இன்றைய தமிழ்ச்சமூகத்தை எடுத்துக்கொண்டால் மரபான இந்துமதச்சிந்தனை ஒரு மைய ஓட்டம். கிறித்தவ இஸ்லாமியச் சிந்தனைகள் கூடவே செல்பவை. தேசிய இயக்க காலகட்டத்தில் உருவான சுதந்திரஜனநாயகச் சிந்தனைகளும் பின்னர் வந்த்க இடதுசாரிச் சிந்தனைகளும் வலுவான பங்களிப்பை ஆற்றுகின்றன. இந்தச்சிந்தனைச்சரடுகளின் இழுவிசையின் மையமே இன்றைய பொதுச்சிந்தனை எனலாம்.

இந்தச்சமநிலைப்புள்ளி தொடர்ந்து உருமாறியபடியே இருக்கிறது. பொதுச்சிந்தனை தொடர்ந்து ஊடகங்கள் வழியாகவும், மக்களின் உரையாடல்கள் வழியாகவும் திரட்டி உருவாக்கப்பட்டபடியே இருக்கிறது. ஒருவகையில் மொழியில் நிகழும் அனைத்துச்செயல்பாடுகளும் பொதுச்சிந்தனையை உருவாக்கும் முயற்சிகளே என்று சொல்லலாம். சென்ற நிலப்பிரபுத்துவ யுகத்தில் பொதுச்சிந்தனை மதம் சார்ந்தும் நெறிகள்.சார்ந்தும் திரட்டப்பட்டு நடைமுறையில் இருந்தது. அதன் மாற்றம் மிக மெல்ல நிகழ்ந்தது.

சென்ற நூற்றைம்பதாண்டுக்காலத்தில் இந்தியப் பொதுச்சிந்தனையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்று ஒட்டுமொத்தமாகத் தொகுத்து நோக்கலாம். நூற்றைம்பதாண்டுக்காலம் முன்பு இந்தியாவில் எழுந்த முதற்பெரும் கருத்தியல் அலை என்பது இந்துமதச்சீர்திருத்த இயக்கங்களால் உருவாக்கப்பட்டது. இந்துமதத்தின் ஆசாரங்களும் நம்பிக்கைகளும் கொள்கைகளும் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் கட்டுப்படுத்தியிருந்த காலகட்டத்தில் மதத்தை சீர்திருத்தாமல் வாழ்க்கை முன்னகரமுடியாதென்ற நிலை உருவானது. ஆகவேதான் ஞானிகளும் சிந்தனையாளர்களும் மதத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கினர்

பிரம்மசமாஜம்,ஆரியசமாஜம், ராமகிருஷ்ண இயக்கம், வள்ளலார் இயக்கம், நாராயணகுருவின் இயக்கம் போன்ற அனைத்துக்கும் இடையேயான ஒற்றுமைகள் சில உண்டு. ஆசாரங்களையும் மதத்தையும் பிரித்துப்பார்த்தல், சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளுக்குப் பதிலாக மதத்தின் தத்துவத்தையும் மெய்யியலையும் முன்னிலைப்படுத்துதல், மதத்தின் அதிகாரக் கட்டுமானத்தை எளியவர்களுக்குச் சாதகமாக ஆக்குதல் ஆகியவை அவை.

இந்த மதச்சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவின் பொதுச்சிந்தனையில் நவீன காலகட்டத்தை நோக்கிய முதல் முன்னகர்வை உருவாக்கின என்று சொல்லலாம். இன்றும் கூட இந்த மதச்சீர்திருத்த அமைப்புகளின் வழிவந்த சிந்தனையாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களின் பாதிப்பும் நம் பொதுச்சிந்தனையில் உள்ளது. உதாரணமாக வள்ளலாரை கருத்தில்கொள்ளாமல் தமிழ்ச்சிந்தனையையோ நாராயணகுருவை எண்ணாமல் மலையாளச் சிந்தனையையோ பேசவே முடியாது.

இந்துமதச்சீர்திருத்த இயக்கங்களே இந்திய தேசிய இயக்கங்களின் அடிப்படைகளை அமைத்தன. தேசிய இயக்கம் இந்தியாவில் சில அடிப்படைச் சிந்தனைகளை அறிமுகம் செய்தது. அதன் உண்மையான பங்களிப்பே அதுதான் என்றுகூடச் சொல்லலாம். அவற்றை இவ்வாறு தொகுத்துக்கொள்லலாம். அனைவருக்குமான பொதுநீதி, தனிமனிதனின் சமூக உரிமைகள், அனைத்துத் தளத்திலும் மனிதர்கள் சமமானவர்களே என்ற எண்ணம், அரசியலைத் தீர்மானிப்பதில் மக்களின் பங்களிப்பு. ஒட்டுமொத்தமாக இவற்றை நவீனஜனநாயகக் கருத்துக்கள் எனலாம்.

கோகலே, திலகர், காந்தி, நேரு போன்ற தேசிய இயக்கத் தலைவர்கள் தொடர்ச்சியாக இச்சிந்தனைகளை ஊடகங்கள் வழியாக இந்தியாவின் பொதுச்சிந்தனையை நோக்கி முன்வைத்தனர்.அவர்களை ஆதர்சமாகக் கொண்ட நூற்றுக்கணக்கான பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் அச்சிந்தனைகளை மொழியின் ஒவ்வொரு வடிவிலும் ஒவ்வொரு தருணத்திலும் ஒலிக்கும்படிச் செய்தனர். பாரதி முதல் கல்கி வரை , சத்யமூர்த்தி முதல் ம..பொ.சி வரை இங்கே செயல்பட்டவர்கள் நம் பொதுச்சிந்தனையில் ஆற்றிய பங்களிப்பை திட்டவட்டமாக வரையறைசெய்யமுடியும்

அரவிந்தர்

தேசிய இயக்கத்தின் எதிர்வினையாக நவீன ஜனநாயகச் சிந்தனையாளர்களின் ஒரு வரிசை இங்கே உருவானது. அம்பேத்கர், எம்.என்.ராய், ராம் மனோகர் லோகியா போன்றவர்கள். அவர்களுடைய சிந்தனைகளும் பல்வேறு வடிவில் தொடர்ச்சியாக நம்முடைய பொதுசிந்தனையை இயக்கி முன்னெடுத்துச்சென்றன. அவர்கள் தான் நம் இன்றைய இலக்கிய, வரலாறு, சமூகவியல் நோக்குகளை வடிவமைத்திருக்கிறார்கள் என்பதைக் காணலாம். தமிழகத்தில் க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரையிலான எழுத்தாளர்களிடம் அவர்களின் செல்வாக்கு உள்ளது.

இந்தியாவைப்பொறுத்தவரை மார்க்சியச் சிந்தனைகள் 1930களிலேயே வந்துவிட்டிருந்தாலும் சுதந்திரத்துக்குப்பின்னரே அவை வலுவாக வேரூன்றின. எஸ்.ஆர்.டாங்கே, இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு, கே.தாமோதரன், டி.டி.கோஸாம்பி போன்றவர்கள் பல்வேறு கோணங்களில் மார்க்ஸிய சிந்தனைகளை இந்தியச்சூழலில் விவாதித்து வளர்த்தெடுத்தனர். தொடர்ச்சியாக இதழ்கள் மூலமும் மேடைகள் மூலமும் முன்வைக்கப்பட்ட மார்க்ஸியநோக்கு நம் பொதுச்சிந்தனையை வலுவாக வழிநடத்தியது. ஜெயகாந்தன் வரையிலான நம்முடைய முதன்மை எழுத்தாளர்கள் கணிசமானவர்கள் மார்க்ஸிய நோக்குள்ளவர்கள்.

இக்கருத்தியல்களை ஒட்டி தமிழகத்தில் நவீனசிந்தனைகளை தங்களுக்கு மட்டுமே உரிய நோக்குடன் முன்வைத்தவர்கள் என நான்மூன்று முதற்சிந்தனையாளர்களைச் சுட்டிக்காடுவதுண்டு.பண்டித அயோத்திதாசர், மு.தளையசிங்கம், எஸ்.என்.நாகராசன். இவர்களில் அயோத்திதாசரை மதச்சீர்திருத்த அலையில் சேர்க்கலாம். மு தளையசிங்கம் இந்திய தேசிய எழுச்சியின் அலையைச் சேர்ந்தவர். எஸ்.என்.நாகராசன் மார்க்ஸிய சிந்தனைக்கு நம்முடைய கொடை.

இ எம் எஸ் நம்பூதிரிப்பாட்

இதெல்லாமே சென்ற இருபதாண்டுகளுக்கு முன்பு வரை இருந்த நிலை. இந்தியஅளவிலும் தமிழ்ச்சூழலிலும் நம் பொதுச்சிந்தனையை உருவாக்கிய அடிப்படைக்கருத்துக்களி முன்வைத்த முதற்சிந்தனையாளர்கள் இருந்தனர். அவர்களை ஒட்டி சிந்தனைகளை தொடர்ச்சியாக முன்வைத்த எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் இருந்தனர். ஒவ்வொருவராக இன்று முதுமை எய்தி காலத்துக்குள் சென்றுகொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர்களில் ஜெயகாந்தனையும் சிந்தனையாளர்களில் கோவை ஞானியையும் அக்காலகட்டத்தின் கடைசிக் குரல்கள் என்று சொல்லலாம்

இங்கே எழும் வினா இதுதான்.இன்று அத்தகைய தணியாவிசையுடன் செயல்படும் முதற்சிந்தனையாளர்கள் யார் யார்? நம் பொதுச்சிந்தனை என்ற மையத்தை நோக்கி வந்துசேரும் இந்தியக் குரல்கள் எவை? இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாடு எழுதிய ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களை தொகுத்து வெளியிட்ட மார்க்ஸிய ஆய்வாளாரான பி.கோவிந்தப்பிள்ளை இதைச் சுட்டிக்காட்டினார். பொதுச்சிந்தனையை நோக்கி வந்துசேரும் விசை கொண்ட பெரும் ஆளுமைகள் இந்தியாவில் இல்லாமலாகிறார்கள் என்றார் அவர்.

ஓர் உவமை சொல்லலாம். முதற் சிந்தனையாளன் என்பவன் பாலையில் பூக்கும் மரம். அவன் காற்றில் வீசும் கோடானுகோடி மகரந்தத்துகளில் மிகச்சிலவே உரிய கருவல்லிகளைக் கண்டுகொள்கின்றன. காயாகிக் கனிகின்றன. அத்தகைய வீச்சுடன் செயல்படாவிட்டால் அவன் அவனைப்போன்ற சிலருக்கு மட்டுமே தெரிந்தவனாக நின்று மறையவே நேரும். அத்தனை மகாந்தங்களையும் உருவாக்கும் விசை அந்த மரத்துக்குள் உறையும் வேட்கைதான். பரவவேண்டும் என்றும் வாழவேண்டும் என்றும் அந்த மரம் கொள்ளும் இச்சை.

இன்றைய சூழலில் இந்தியாவில் எந்த மொழியிலும் அத்தகைய பெரும் வீச்சுடன் எவரும் செயல்படுவதாகத் தெரியவில்லை என்பதே உண்மை. விரிவான ஒரு தேடலில் கடைசியாகச் சொல்லத்தக்கவர் நவகாந்தியச் சிந்தனையாளரான அஷிஷ் நந்தி மட்டுமே. இலங்கைச்சிந்தனையாளரான மறைந்த ரெஜி சிரிவர்த்தனேயையும் ஓர் எல்லைவரைச் சுட்டிக்காட்டலாம். அவர்களும் வரும் எண்பதுகளைச் சேர்ந்தவர்கள். தொண்ணூறுகளுக்குப்பின் என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது?

டி டி கோஸாம்பி

இன்றைய சிந்தனையாளர்கள் இரு பெரும் பிரிவுகளாக இருக்கிறார்கள். ஒருசாரார் பெரும் ஊடகங்களின் உதவியுடன் பரவலாகத் தெரியவந்தவர்கள். ஆனால் இவர்கள் அசலாக எதையும் சிந்திப்பதில்லை. பெரும்பாலும் பத்தி எழுத்தாளர்கள் அல்லது இதழாளர்கள். சமகால அரசியலையோ சமூகவியலையோ மாறாத சில பொதுமதிப்பீடுகளின் அடிப்படையில் எடைபோட்டு கருத்துரைத்துக்கொண்டே இருப்பார்கள். நம் பொதுச்சிந்தனைக்கு இவர்கள் தொடர்ந்து வந்துசேர்ந்தாலும் பாதிப்பு மிகக்குறைவே. மிகச்சிறந்த உதாரணம் என்றால் ராமச்சந்திர குகாவைச் சொல்லலாம்

இன்னொருசாரார் முழுக்கமுழுக்க கல்வித்துறைக்குள் அல்லது தங்களுக்குரிய அறிவுத்துறைக்குள் மட்டுமே செயல்படக்கூடியவர்கள். இன்னொரு நிபுணரால் மட்டுமே அணுகக்கூடியவர்கள். இன்றைய அறிவுத்துறைகள் மிகமிக நுட்பமானவையாக ஆகிக்கொண்டிருக்கின்றன. உச்சகட்ட உழைப்புடன் அத்துறைக்குள் தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே அங்கே வெற்றிபெறமுடியும் என்ற நிலை உள்ளது. ஆகவே அந்த அறிவுத்துறைக்கு அப்பால் அறியப்படும் அறிஞர்களே குறைவு. பொதுவாக பொதுச்சிந்தனைத்தளத்தில் அதிகம் கவனிக்கப்படும் வரலாற்றாய்வுக்குக் கூட இன்று இதே நிலைதான் உள்ளது. டி.டி.கோசாம்பியின் வரலாற்றாய்வுகள் இந்திய சிந்தனையில் அலைகளைக் கிளப்பி புதிய வாசல்களைத் திறந்த அறுபதுகளுக்குப்பின் இங்கே எந்த வரலாற்றாசிரியரும் அத்தகைய வலுவான பாதிப்பை உருவாக்கவில்லை.

அஷிஸ் நந்தி

அப்படியென்றால் நம்முடைய இன்றைய பொதுச்சிந்தனையை உருவாக்கும் விசைகள் என்ன? விரிவான ஆராய்ச்சிக்குரிய ஒரு வினா இது. இன்றைய ஊடகங்கள் அனைத்தையும் கருத்தில்கொண்டு யோசிக்கவேண்டிய ஒன்று. எழுத்தாளனாக என்னுடைய பொதுப்பார்வையில் இன்றைய பொதுச்சிந்தனை முந்தைய காலகட்டங்களைப்போல பலவகையான கருத்தியல்களால் தீர்மானிக்கப்படுவதில்லை, அது முழுக்கமுழுக்க தொழில்நுட்பத்தை மட்டும் சார்ந்ததாகவே உள்ளது என்று தோன்றுகிறது.

ஊடகங்களையும் எழுத்துக்களையும் பொதுவாக நோக்கினால் சென்ற பதினைந்தாண்டுகளில் தொழில்நுட்ப விந்தைகள், அது உருவாக்கும் வாய்ப்புகளைப்பற்றிய விவாதங்களே அதிகமும் கண்ணுக்குப் படுகின்றன. தொழில்நுட்பம் உலகை அழுத்தி ஒன்றாக்கிகொண்டிருக்கிறது. இதன் விளைவாக ஒவ்வொருவருக்கும் உலகின் பல பக்கங்கள் அணுகக்கூடியவையாக இருக்கின்றனல். இது அளிக்கும் விந்தையுணர்ச்சியும் மனக்கிளர்ச்சியுமே எங்கும் காணக்கிடைக்கிறது. எந்தச்சிந்தனையும் வலுவான பாதிப்பைச் செலுத்துவதாக பேசப்படவில்லை. எதுவும் நீடித்துப் பேசப்படுவதுமில்லை.

நான் சொல்வது எளிய மனங்களைப்பற்றி அல்ல. சிந்தனைக்கான ஆற்றலும் பழக்கமும் கொண்டவர்களைப் பற்றி. அவர்களேகூட உலகின் புதிய பகுதிகளை அறிந்துகொள்ளும் ஆர்வத்தையே வெளிப்படுத்துகிறார்கள். லிதுவேனிய இசையைப்பற்றியோ, உகாண்டாவின் ஓவியம் பற்றியோ, நிகராகுவாவின் சினிமா பற்றியோ கவனிக்கிறார்கள், பேசுகிறார்கள். அவை பெரும்பாலும் புதிய அறிதல்களே ஒழிய புதிய சிந்தனைகள் அல்ல.

தொண்ணூறுகள் வரைக்கும்கூட வாழ்க்கையை புதிய கோணத்தில் விளங்கிக்கொள்வதற்கும் வகுத்துக்கொள்வதற்கும் செய்யப்பட்ட முயற்சிகளும் அதன்விளைவான சிந்தனைகளும் இன்று கண்ணுக்குப்படவில்லை. வந்துகுவியும் தகவல்களை ஒருங்கிணைக்கும் பார்வைகள் உருவாகாத காரணத்தால் அவையெல்லாம் உடனுக்குடன் கொப்பளித்து மறைந்துகொண்டே இருக்கின்றன என்று தோன்றுகிறது.

நேற்றைய சூழலை இப்படி விளக்கலாம். நிலத்தாலும் காலத்தாலும் எல்லை வகுக்கப்பட்ட பண்பாடுகளை நோக்கி வெளியே இருந்து சிந்தனைகள் வந்தன. அவை இங்குள்ள சிந்தனையாளர்களை பாதித்தன. அப்பாதிப்புகள் இங்கே உள்ள பொதுச்சிந்தனைத்தளத்துக்கு மெல்லமெல்ல வந்து சேர்ந்து மாற்றங்களை உருவாக்கின. இன்று அந்த எல்லைகள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பண்பாடும் நேரடியாக உலகப்பண்பாடுகளுடன் தன்னை கரைத்துக்கொண்டிருக்கிறது. இன்று நம் பொதுச்சிந்தனையைத் தீர்மானிப்பவர்கள் சிந்தனையாளர்கள் அல்ல. உலகளாவிய ஊடகங்கள் மூலம் நம்முடன் வந்து மோதும் பிற சமூகங்களின் பொதுச்சிந்தனைகள்தான்.

இதை ஒரு குறையாக அல்லது சிக்கலாக நான் குறிப்பிட விரும்பவில்லை. இது ஒரு சமகால நிகழ்வு. இதற்கான காரணங்களை பலகோணங்களில் ஆராயலாம். இதன் விளைவுகளையும் கணிக்கலாம். ஆனால் நம் கண்ணெதிரே சிந்தனைகளுக்கான இடத்தை தகவல்புயல் எடுத்துக்கொண்டிருக்கிறது. நம் சமகாலப் பொதுச்சிந்தனையை நோக்கி என்ன சொன்னாலும் தகவல் பெருக்கின் இரைச்சலில் ஒன்றாகவே அதுவும் ஆகிவிடும் நிலை உருவாகிவிட்டிருக்கிறது.

இன்று ஒரு முதற்சிந்தனையாளன் தன் விரிவான சிந்தனைகளை தொடர்ந்து முன்வைத்தால் அது சென்றகாலம் போல தொடர்ந்து விவாதிக்கப்பட்டு மெல்லமெல்ல சுருக்கப்பட்டு அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்ந்து பொதுச்சிந்தனையை தீர்மானிக்கும் ஆற்றல்புள்ளிகளாக ஆவதில்லை. அந்த மகரந்தங்கள் புயலால் அள்ளி முடிவற்ற வானில் வீசப்பட்டுவிடும்.


[இலங்கையில் இருந்து வீரகேசரி வெளியீடாக வெளிவரும் சமகாலம் என்னும் இதழுக்கு எழுதும் கட்டுரைத்தொடர்]

முந்தைய கட்டுரைமுதற்கனல் நூல் சிறப்புப்பதிப்பு
அடுத்த கட்டுரைபார்வதி கிருஷ்ணன்- அஞ்சலி