எம் எஸ். சுப்புலட்சுமியின் அதிதீவிர ரசிகரான ஒரு பிராமணர் எனக்கு அலுவலகத்தோழராக இருந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமி பற்றி ஏராளமாகப்பேசியிருக்கிறார். அவரது இல்லத்தில் எப்போதுமே எம்.எஸ் பாடிய பாடல்கள்தான் காலையில் முதலில் ஒலிக்கும் என்றார். ஒருபேச்சில் தற்செயலாகச் சொன்னார், எம்.எஸ்ஸின் முகம்தான் ஒரு மங்கலமான பிராமண குடும்பத்தலைவியின் முகம் என்று.
நான் சாதாரணமாக, எம்.எஸ் பிராமணப்பெண்ணே அல்ல என்றேன். அவருக்கு ஆச்சரியம். நான் அவர் மதுரை சண்முகவடிவு என்ற தேவதாசி குலத்து வீணைக்கலைஞருக்குப் பிறந்தவர். அவரது அப்பாபெயர் என்பது ஊகமே. எம்.எஸ். என்பது அவரது அம்மா பெயரான மதுரை சண்முகவடிவுதான் என்றேன். அவருக்கு அதிர்ச்சி. ‘அப்படியா அப்படியா?’ என்றார். பிறகு ‘அதுக்கென்ன சார்?’ என்றார்.
ஆனால் பின்னர் ஒன்றைக்கவனித்தேன். அவரது மனதில் இருந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி பிம்பம் அழிந்துவிட்டது. அவரால் அந்தப்படல்களை பின்னர் கேட்கமுடியவில்லை. மெல்லமெல்ல அவர் எம்.எஸ்.சுப்புலட்சுமியைக் கைவிட்டு அடுத்த பாடகருக்குப் போய்விட்டார். நான்குவருடம் கழித்து அவர் என்னிடம் முன்பொருமுறை பேசியதையே மறந்துவிட்டது போல ”எம்மெஸ் சுப்ரபாதம் பாடினா கேட்டுண்டு இருக்கலாம். மத்தபடி பாட்டெல்லாம் ஆவ்ரேஜ்தான்” என்றார்.
ஏறத்தாழ இதே நிலை நம் நாட்டின் அதிகம் வாசிக்காத இசை ரசிகர்களிடம் இருப்பதை நாம் காணலாம். கிருபானந்தவாரியார் பிராமணர் என்று எண்ணக்கூடியவர்களைப் பார்த்திருக்கிறேன். திரைநடிகர்களைப்பற்றி தகவல்களை மூளைக்குள் குவித்து வைத்திருப்பவர்கள்கூட அவர்கள் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை அறியாமலிருப்பதை பார்த்திருக்கிறேன்.
நாம் நன்கறிந்த ஒரு பிரபலத்தைப்பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறோம் என்ற கேள்வி எப்போதுமே திகைக்க வைக்கக்கூடியது. அவர்களைப்பற்றி ஏராளமாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் குறிப்பாக எத்தனையோ விஷயங்களை அறியாமலும் இருப்போம். பெரும்பாலும் நாம் அறிவது அந்த ஆளுமையை அல்ல, அந்த ஆளுமை மீது உருவாகியிருக்கும் ஒரு பிம்பத்தை.
இந்தபிம்பத்தை ஆமைஓடு போல என்று சொல்லலாம். உள்ளே இருக்கும் மென்மையான உயிரினம் தன் பாதுகாப்புக்காக தன் தோலை தடிக்கச் செய்து தடிக்கச்செய்து காலப்போக்கில் அந்த ஓட்டை உருவாக்கிக்கொள்கிறது. அது அந்த உயிரினத்துக்கு வெலியுலகின் காற்று மழை உரசல் எல்லாவற்றிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது. அல்லது வெளியுலகின் காற்றும் மழையும் உரசலும்தான் அந்த உயிரினத்தின் தோலை ஓடாக மாற்றும் படைப்புசக்திகளாகவும் இருக்கலாம்.
பின்னர் அந்த உயிராக உலகம் காண்பது அந்த ஓடு மட்டும்த்தான். ஆகவே அந்த ஓடு மீது அந்த உயிர் அழகுகளைச் சேர்க்கிறது. நிறங்கள் செதில்கள் செதுக்கல்கள். அந்த அழகுகள் அனைத்துமே அதுவாழும் சூழலுக்கு ஏற்ப உருவாகின்றன. அந்த சூழலின் படைப்புதான் அந்த அழகுகள் என்றும் சொல்லலாம்.
ஆளுமைகளின் படிமங்களும் அப்படியே. அவை நம்மாலும் மறுமுனையில் அவர்களாலும் உருவாக்கப்படுகின்றன. நாம் காணவிரும்பியதற்குள் அவர்கள் காட்டவிரும்பியதற்கும் நடுவே உள்ளன அவை. நாம் அவர்களைப்பற்றிப் பேசிபேசி அதை ஒரு சமூக அங்கீகாரத்தை நோக்கி நகர்த்துகிறோம். அவர்கள் இறந்துபோனபின்னர் அஞ்சலிகள் நினைவுகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகள் மூலம் அவற்றை நிரந்தரமாக்குகிறோம்.
அபூர்வமாக சிலசமயம் அந்த ஓட்டை கீறி அந்த உயிரைப் பார்க்கும் வரலாறுகள் வருகின்றன. ஒருவகையில் அது வன்முறை. அந்த மனிதர் அந்தரங்கமாக வைத்திருந்தவை எல்லாம் வெளியே வந்து விழுகின்றன. அந்த அப்பட்டம் நம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்கவும் செய்கிறது. நம்முடைய மதிப்பு என்பது அந்த பிம்பத்தை மட்டுமே சார்ந்தது என்றால் நாம் அதை இழக்கவும்கூடும். ஆனால் ஓடுகள் இல்லாத அந்த உயிரை நம்மைப்போன்ற ஒன்றாக நாம் அடையாளம் காண முடிந்தால் நாம் மேலும் நெருங்கத்தான் செய்வோம்.
ஒரு கோணத்தில் யோசித்தால் அந்த உயிரேகூட என் ஓட்டை நீக்கி என்னைக் கொஞ்சம் பார் என்று மிக அந்தரங்கமாகக் கோரிக்கொண்டிருக்கிறதோ என்றும் படுகிறது. ஒரு சமூகம் அப்படி பிம்பங்களை நீக்கி மனிதர்களைப் பார்க்கலாமா கூடாதா என்பது ஒரு சிக்கலான அறவியல் கேள்வி. உண்மையை அறிய சமூகத்துக்கு உரிமை உண்டு என்பது ஒரு வாதம்.
ஆனால் எந்த பிரபலத்துக்கும் ஒரே நீதி விளங்கும் அமெரிக்காவில் அது சரி. இந்தியாவில் எழுத்தாளர்கள் , கலைஞர்கள் போன்ற அப்புராணிகளிடமே இதைச்செய்யமுடிகிறது. ஒரு சாதித்தலைவரை, ஒரு அரசியல்கட்சித்தலைவரை, ஒரு பிரபல நடிகரைப்பற்றி அப்படி எழுத உரிமை இல்லாத சமூகத்தில் அது அநீதியாக தோன்றுவதையும் தவிக்க முடியவில்லை.
டி.ஜெ.எஸ். ஜார்ஜ் எழுதிய ‘எம்.எஸ்: இசையில் ஒரு வாழ்க்கை’ [MS – ‘A Life in Music’ ,T.J.S George ] பிரபலத்தின் உண்மையான ஆளுமையை நோக்கிச்செல்லக்கூடிய ஒரு வாழ்க்கைவரலாறு. கொஞ்சம் இரக்கமில்லாத ஆராய்ச்சி நோக்கு கொண்டது. அதேசமயம் வம்புகளை நோக்கிச்செல்லும் இதழியல் துடிப்பும் இல்லாதது. ஆகவே குறிப்பிடத்தக்க ஒரு நூல் இது.
டி.ஜெ.எஸ். ஜார்ஜ்
இத்தகைய ஒரு நூல் அக்காலத்து சமூக, பண்பாட்டுப் பின்புலத்தை மேலும் விரிவாக ஆராய்ந்து நல்ல சித்திரம் ஒன்றை அளித்திருக்க வேண்டும். ஆனால் அதற்காக முதல் நூறு பக்கங்களை ஒதுக்கியுள்ள இந்நூல் அதற்குத் தவறிவிடுகிறது என்றே படுகிறது. கிட்டத்தட்ட நூறுவருடம் முன்பிருந்த பிராமண சமூகத்தின் மனநிலை, அவர்களின் சமூக நிலை, அன்றைய இசைவேளாளர்களின் சமூக நிலை ஆகியவற்றைப் பற்றி இந்நூல் இன்றைய சமூகவியல் கோட்பாடுகளின் வெளிச்சத்தில் ஒரு மேலோட்டமான சித்திரத்தையே அளிக்கிறது. மேலும் ஜார்ஜுக்கு இசையைப்பற்றி பெரிதாக ஏதும் தெரியும் என்றும் படவில்லை, அதை அவரே சொல்லிக்கொள்ளவும் இல்லை
ஆனால் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையின் அந்தரங்கத்திற்குள் ஜார்ஜ் எளிதாக இறங்கிச்செல்கிறார். நாம் அறியாத, ஆனால் முயற்சி செய்திருந்தால் மிக எளிதாக அறிந்திருக்கக்கூடிய, தகவல்களை அள்ளி முன்வைக்கிறார். அதன் வழியாக மூன்று தளங்களிலாக எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை முன்வைக்கிறார். ஒன்று அவரது இளமைப்பருவம். அவரது ஆளுமை உருவாக்கத்தின் காலம் இது. இரண்டு, அவர் திரைப்படம் மேடைப்பாடல் மூலம் புகழ்பெற்று குடும்பவாழ்க்கையில் அமைந்த காலகட்டம். மூன்று அவரது கணவர் சதாசிவம் தன் பெருமுயற்சியினால் எம்.எஸ்.சுப்புலட்சுமியை ஒரு கலாச்சாரச் சின்னமாக மாற்றிய காலகட்டம்.
இந்த சித்திரம் வழியாக ஒரு மனிதர் பிறந்து வளர்ந்து, சமூக இடத்தை தேடி அலைந்து அடைந்து, அந்த இடத்தில் மெல்லமெல்ல ஒரு தொன்மமாக ஆனதன் அழகிய சித்திரத்தை நாம் காண்கிறோம். ஜார்ஜ் தன் ஆய்வில் இந்த தொன்மத்தில் இருந்து பின்னால் சென்றிருக்க வேண்டும். எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி தொன்மமாக்கப்பட்டார், அந்த தொன்மத்திற்குப் பின்னால் உள்ள மானுட உயிர் எது என்று அவர் தேடிச்சென்றிருக்கலாம். இந்நூல் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் ஆளுமையைப் பற்றியநூல் அல்ல. அவரது ஆளுமை மற்றும் படிம உருவாக்கத்தைப் பற்றிய நூல்.
டி.ஜெ.எஸ்,ஜார்ஜ் அவரது நூலை மூன்று பெண்கலைஞர்களுக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார். வீணை தனம்மாள் ,பெங்களூர் நாகரத்தினம்மாள், நாட்ட்டியமணி பாலசரஸ்வதி. மூவருமே பிறப்பின் அடிப்படையில் கற்பிக்கப்பட்ட இழிவில் இருந்து தங்கள் கலையின்மூலம் வெளியே வந்தவர்கள் என்கிறார் ஜார்ஜ். அவரது ஆய்வின் அணுகுமுறையை இந்தச் சமர்ப்பணமே தெளிவாகக் காட்டிவிடுகிறது.
கிட்டத்தட்ட முதல் நூறுபக்கத்திற்கு கர்நாடக சங்கீதத்தின் சூழல் பரிணாமம் அதனுடன் பிரிக்கமுடியாதபடி பிணைந்த இசைவேளாளர் வாழ்க்கை ஆகியவற்றைறொரு பொதுவாசகருக்காக விவரிக்கிறார் ஜார்ஜ். சாதிகள் தங்களை சம்ஸ்கிருதப்படுத்திக்கொள்வதன் மூலமே மேம்பட்ட நிலையை அடைகின்றன என்ற பிரபலமான கருதுகோளின் ஊடாகவே அவரது நோக்கு அமைகிறது. அதன் பின் எம்.எஸ்ஸின் இளமைப்பருவத்தை நோக்கி வருகிறார்.
இந்தநூலை எழுதும் திட்டத்தை பலமுறை கைவிட்டதாக ஜார்ஜ் சொல்கிறார். காரணம் அவரது வாழ்க்கையைப்பற்றி மிகமிகக் குறைவான தகவல்களே கிடைக்கின்றன. ‘எம்.எஸ்ஸைச்சுற்றி சதாசிவம் ஒரு பெரிய கோட்டையை கட்டி வைத்திருந்தார்’ என்கிறார் ஜார்ஜ். எம்.எஸ். ஒருபேட்டியில்கூட வாய்திறக்க சதாசிவத்தால் அனுமதிக்கபப்ட்டதில்லை.
சதாசிவம் எம்.எஸ்ஸின் நாம் காணும் ஆளுமையை சிறுகச் சிறுக வடிவமைத்தார். ஊடகங்களில் அவர் செல்வாக்கு செலுத்தினார். பாடவேண்டிய பாடல்களை அவர்தான் தீர்மானித்தார். சினிமா வேண்டாம் என அவர்தான் முடிவெடுத்தார். எம்.எஸ். சிருங்கார பதங்களைப் பாடக்கூடாது என்றார். முழுக்கமுழுக்க பக்தியின் வெளிப்பாடாக எம்.எஸ்ஸின் இசையை அவர்தான் மாற்றினார். ஜார்ஜின் இந்நூல் சதாசிவம் செய்தவற்றை விலக்கிப் பார்க்க முயல்கிறது.
வீணைக்கலைஞரான மதுரை சண்முகவடிவு அம்மாளுக்கு 1916 ல் மகளாகப் பிறந்தார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அவருக்கு ஒரு அக்கா வடிவாம்பாள். ஒரு அண்ணா சக்திவேல். எம்.எஸ்ஸின் அப்பா சுப்ரமணிய அய்யர் என்று அவரே பின்னர் சில பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆனால் சுப்ரமனிய அய்யருக்கு சண்முகவடிவு அம்மாளுடன் தொடர்பு இருந்தது என்பதற்கு அப்பால் அதற்குப்பொருள் இல்லை. சுப்ரமனிய அய்யர் அந்த அடையாளத்தை வழங்கவில்லை.
மதுரை புஷ்பவனம்தான் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தந்தை என்ற ஒரு பலமான பேச்சு அக்காலத்தில் இருந்தது. அதை ஜார்ஜ் அவரது நூலில் குறிப்பிடுகிறார். மதுரை ஷண்முகவடிவின் வீட்டுக்கு வருபவர்களில் காரைக்குடி சாம்பசிவ அய்யர், அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் போன்றவர்களும் இருந்தார்கள். இன்றைய நோக்கில் தன் தந்தை சுப்ரமணிய அய்யர் என்று எம்.எஸ். சொல்வதை அவரது நம்பிக்கை என்று மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் என்று ஜார்ஜ் சொல்கிறார்
மதுரையில் அன்று ஒரு தேவதாசிக்கு மகளாகப் பிறப்பதன் பொருளை சிறு வயதிலேயே எம்.எஸ்.உணர்ந்திருக்கவேண்டும். சமூக இழிவு ஒருபக்கமும் இசை மறுபக்கமுமாக எம் எஸ்ஸ¤க்கு கிடைத்தது. அவருக்கு இசையில் பாரம்பரியம் இருந்தது, அவரது பாட்டி அக்கம்மாள் ஒரு வயலின் கலைஞர். மேலும் தாசி என்ற நிலையில் அவருக்கு இருந்த ஒரே சாதகமான அம்சம் இசையே. ஆகவே இசையை அவர் ஆரத்தழுவிக்கொண்டே ஆகவேண்டிய நிலை இருந்தது.
எட்டுவயதிலேயே எம்.எஸ்.சுப்புலட்சுமி அவரது முதல் இசைப்பதிவைச் செய்துவிட்டார். அவரது தாயார் வாசித்த வீணை இசையை பதிவு செய்ய வந்தவர் எம்.எஸ்ஸையும் பாடச்செய்து பதிவுசெய்துகொண்டாராம். அதில் எம்.எஸ்.சுப்புலட்சுமி செஞ்சுருட்டி ராகத்தில் ‘மரகத வடிவம்’ என்ற பாடலை பாடினார். 1926ல் தன் பத்துவயதிலேயே தாயார் மதுரை ஷண்முகவடிவு வீணை வாசிக்க சேர்ந்து பாடி இசைத்தட்டு வெளியிட்டார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அதில் ‘மரகத வடிவும் செங்கதிர் வேலும்’ என்ற பாடலை பாடியிருந்தார். மிக விரைவிலேயே பெரிதும் விரும்பப்படக்கூடிய பாடகராக எம்.எஸ். அறிமுகமானார்.
ஆனால் 1936ல் தன் 20 ஆவது வயதில் நகைகளையெல்லாம் கழற்றி வைத்து விட்டு ரகசியமாக மதுரையிலிருந்து ரயிலேறி திருவல்லிக்கேணி வந்து 32 வயதான சதாசிவத்திடம் சரணடைந்தார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. ஆச்சரியமான இந்தச் செயல், அக்காலத்தில் இருந்த பயண வசதியை வைத்துப்பார்த்தால் ஆபத்தானதும்கூட, அவரது அகால வாழ்க்கைச்சூழலைக் காட்டுகிறது. சதாசிவத்துக்கு ஏற்கனவே மணமாகி அபிதகுசலாம்பாள் என்ற மனைவி இருந்தார். அவருக்கு குழந்தைகளும் இருந்தன. காங்கிரஸ் தொண்டராகவும் சமூக சேவகராகவும் அவர் புகழ்பெற்றிருந்தார்.
எம்.எஸ் தப்பி ஓடிய வாழ்க்கை அவரது அக்கா வடிவாம்பாளுக்கு வாய்த்ததுதான் என்று ஜார்ஜ் காட்டுகிறார். கோவையைச்சேர்ந்த ஒரு முதியவருக்கு பல ஆசைநாயகிகளில் ஒருவராக செல்ல நேர்ந்த வடிவாம்பாள் விரைவிலேயே மரணம் அடைந்தார். தாயை உதறி எம்.எஸ். சென்னைக்கு சென்றது ஒரே ஒரு விஷயத்துக்காக மட்டுமே, சுய கௌரவத்துடன் வாழ்வதற்காக.
மதுரையில் கதர் பணியாளராக இருந்த சதாசிவத்துடன் எம்.எஸ்ஸ¤க்கு ஏற்கனவே உறவு இருந்தது. அது எம்.எஸ்ஸின் அம்மாவுக்கு தெரிந்து அம்மா அதைமிகக் கடுமையாக எதிர்த்தார். எம்.எஸ்ஸ¤க்கு சதாசிவம் திரைப்படத்தில் அவரை நடிக்க வைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். சினிமா தன்னை விடுதலைசெய்யும் என எம்.எஸ்.நம்பியிருக்கலாம். சதாசிவத்தின் காந்திய இலட்சியவாதத்தை மட்டுமே நம்பி அவர் கிளம்பியிருந்தார்.
ஆனால் சென்னை வாழ்க்கை அவருக்கு ஒரு பெரும் போராட்டமாக இருந்திருக்க வேண்டும். அபிதகுசலாம்பாள் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வருகையை எப்படி எதிர்கொண்டிருப்பார் என்பது ஊகிக்கத்தக்கதே. நான்குவருடங்கள் எம்.எஸ். சதாசிவத்தின் ஆசைநாயகியாக வாழ்ந்தார். பின்பு 1940ல் அபித குசலாம்பாள் இறந்தபின்னர்தான் சதாசிவம் எம்.எஸ்.சுப்புலட்சுமியை மனந்துகொண்டார். அபிதகுசலாம்பாள் மனமுடைந்த நிலையில் இறந்ததாக அக்காலத்தில் ஒரு பேச்சு இருந்தது. சதாசிவம் அவரது மரணத்துக்குக் காரணம் என்றுகூட அந்த வதந்தி இருந்தது என்று ஜார்ஜ் குறிப்பால் உணர்த்துகிறார்.
எம்.எஸ். தாயை உதறி கிளம்பிச்சென்ற பின்னரும்கூட சதாசிவத்துக்கும் சண்முகவடிவுக்குமான போராட்டம் நீடித்தது. அதில் எம்.எஸ் சதாசிவத்தின் தரப்பை எடுத்தார். தாயின் உறவை முறித்துக்கொண்டார். பிற இரு குழந்தைகளும் இறந்து கிட்டத்தட்ட அனாதையாக நோய்வாய்ப்பட்டிருந்த சண்முகவடிவை கடைசிக்காலத்தில் எம்.எஸ் கவனித்துக்கொள்வதை சதாசிவம் விரும்பவில்லை. அந்த மனக்குறை எம் எஸ்ஸ¤க்கு கடைசிவரை இருந்திருக்கிறது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியை தன் நண்பர் இயக்குநர் கெ.சுப்ரமணியத்துக்கு அறிமுகம் செய்து வைத்த சதாசிவம் அவரை திரைப்பட நடிகையாக ஆக்கினார். 1936ல் எடுக்க ஆரம்பித்து 1937ல் வெளிவந்த ‘சேவாசதனம்’ என்ற படத்தில் எம்.எஸ்.கதாநாயகியாக நடித்திருந்தார். அந்தப்படத்தின் வணிகவெற்றியால் உற்சாகமடைந்த சதாசிவம் மறுவருடம் எம்.எஸ்ஸை கதாநாயகியாக நடிக்கச்செய்து சகுந்தலை என்ற படத்தை தயாரிக்க ஆரம்பித்தார்
அந்தப்படத்தில் கதாநாயகனாக அக்காலத்தின் பிரபலமான பாடகராகிய ஜி.என்.பாலசுப்ரமனியம் நடித்திருந்தார். ஜி.என்பிக்கு அப்போது இருபத்தாறு வயது. அக்காலத்தில் மிக மரியாதைக்குரிய படிப்பான பி.ஏ ஆனர்ஸ் படித்துவிட்டு இசைத்துறைக்கு வந்தவர் ஜி.என்.பி. அக்கால பாடகர்களில் அவர் பேரழகன் என்று கருதப்பட்டார். உயரமான சிவந்த கட்டான தோற்றம் கொண்ட அவர் ஐந்து படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
அன்றிருந்த இசையுலகில் பாலுறவு என்பது கட்டற்றதாகவே இருந்தது. அக்காலத்தில் ஆண்களுக்கு பாலியல் கட்டுப்பாடு பொதுவாக இருக்கவில்லை, தாசிகளிடம் போவது இயல்பான வழக்கமாக கருதப்பட்டது. என்றாலும் இசையுலகின் கட்டுப்பாடின்மை கொஞ்சம் அதிகம். அதற்குக்காரணம் தாசியுலகுடன் உள்ள நெருக்கமான உறவே. அதிலும் ஜி.என்.பி இந்த தளத்தில் மிக உற்சாகமானவர். அவரது மாணவி எம்.எல்.வசந்தகுமாரிக்கும் அவருக்குமான உறவும் புகழ்பெற்றது.
எம்.எஸ்.ஸ¤க்கும் சதாசிவத்துக்குமான உறவு ஒரு சமகால ஐதீகம். எம்.எஸ்.ஸின் பின்னணிச் சக்தியாகவும் வாழ்க்கை வழிகாட்டியாகவும் சதாசிவம் இருந்தார். 1997ல் சதாசிவம் இறப்பது வரை அவர்களின் உறவு உணர்ச்சிகரமாக நீடித்தது. தன் வாழ்க்கையில் எம்.எஸ். செய்த மத, கல்விச் சேவைகளுக்கு சதாசிவத்தின் ஆன்மீகமான உந்துதல்தான் காரணம் என்பதை எம்.எஸ்.ஸே பல முறை குறிப்பிட்டுமுள்ளார்.
ஆனால் ஒரு பெண் என்ற அளவில் எம்.எஸ்.ஸின் ஆழ்மனதில் இருந்த கனவுகள், ஆசைகள் என்ன? ஜார்ஜின் நூல் அந்த இடங்களை நோக்கியும் சற்று வெளிச்சம் வீசுகிறது. சகுந்தலை படமெடுக்கப்படுமையில் ஜி.என்.பாலசுப்ர மணியத்துக்கும் எம்.எஸ்.ஸ¤க்கும் உணர்ச்சிகரமான காதல் ஏற்பட்டது. அதை வழக்கமான ஒரு பாலியல் விளையாட்டாக மட்டுமே ஜி.என்.பி கண்டிருக்கிறார். ஆனால் எம்.எஸ். அதை உணர்ச்சிகரமான சுயசமர்ப்பணமாக எடுத்துக்கொண்டிருக்கிறார்
அந்த உக்கிரமான காதலைப் பற்றி விவரிக்கும் இந்நூல் ஜிஎன்பிக்கு எம்.எஸ். எழுதிய காதல் கடிதங்களையும் ஆதாரமாகக் காட்டுகிறது.
எம்.எஸ். எழுதிய இருபது கடிதங்களை பின்னிணைபபக அவர் கொடுத்திருக்கிறார்.. ‘கண்ணா’ என்றும் ‘அன்பே’ என்றும் ஜிஎன்பியை அழைத்து எழுதப் பட்ட இக்கடிதங்கள் மிக மிக உணர்ச்சிகரமானவை
ஒரு கடிதத்தில் எம்.எஸ். “இந்தப் படத்தின் வேலை முடிந்தாலும் உங்களைப் பிரிந்து என்னால் இருக்க முடியாது. தேவையில்லாமல் என்னை சோதிக்காதீர்கள். இந்தப் படத்தின் வேலை முடிந்ததும் நாம் ஒன்றாவோம். உங்கள் மீதான என் அன்பில் எந்த மாற்றமும் இல்லை. நான் இறந்த பிறகு அதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். பேசவோ அழவோ எனக்கு யாருமில்லை. எல்லா நாட்களிலும் நான் உங்களை கனவில் காண்கிறேன். நீங்கள்? நடிப்பின் நடுவே உங்கள் விரல் என்னைத் தீண்டும் போது நான் நினைப்பதுண்டு இதோ என் இறைவன் என்று . . .” என எழுதுகிறார்.
எம்.எஸ்., ஜி.என்.பாலசுப்ரமணியம்,’சகுந்தலை’
எம்.எஸ்ஸின் அக்கால மனநிலைதான் என்ன? அவர் சதாசிவத்தை நம்பி வந்தார். ஆனால் அபிதகுசலாம்பாளின் எரிச்சலையும் அவமதிப்பையும் தாங்கி வாழ நேர்ந்தது. முப்பதுகளில் ஒரு சினிமா நடிகையின் கௌரவமென்பது தேவதாசியின் கௌரவத்துக்கு சற்றும் மேலானதல்ல. எம்.எஸ்.சுப்புலட்சுமி ஜி.என்.பி வழியாக மீண்டும் ஒரு தப்பிச்செல்லலை விரும்பினாரா? அந்தக்கடிதங்களில் உள்ள நெஞ்சுருக்கும் மன்றாடல் காட்டுவது என்ன?
ஆனால் ஜி.என்.பி அவரை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. எம்.எஸ். மீண்டும் மீண்டும் மன்றாடி கடிதங்கள் எழுதுகிறார். அக்கடிதங்களில் ஜி.என்பி அளித்த பதில்களைப் பற்றிய குறிப்புகளே குறைவாக இருக்கின்றன. இதற்கிணையான கடிதங்களாக பாடகர் கிட்டப்பாவுக்கு கெ.பி.சுந்தராம்பாள் எழுதிய கடிதங்களையே சொல்லவேண்டும். இவ்விருவரின் கடிதங்களிலும் ஆணின் காலடியில் மண்டியிட்டு காதலுக்காகவும் கருணைக்காகவும் இறைஞ்சும் பெண் மனதை நாம் காண்கிறோம்.
பொதுவாக பெண்கள் அப்படி இறைஞ்சுவதில்லை. ஆணுக்கு தன்னை சமர்ப்பணம் செய்வதையே ஆண் தன்னை கவர்ந்துகொள்ளும் பாவனையில் செய்ய விரும்புவதே பெண்கள் விரும்புகிறார்கள். வெளிப்படையாக மன்றாடும் நிலை அவர்களின் சுயகௌரவத்தை குறைக்கிறது. கிட்டத்தட்ட வீம்புக்கு நிகரான சுயகௌரவம் பெண்களின் வலிமை. அதை இழந்துவிட்ட பெண் தன்னுடைய ஆளுமையே அவமானப்படுத்தப்பட்டதாகவே உணர்வாள். அவள் மனதின் மெல்லிய பகுதி ஒன்று அடிவாங்கி கன்றிவிடுகிறது.
எம்.எஸ், கெ.பி.சுந்தராம்பாள் இருவரின் வாழ்க்கையிலும் இந்த கன்றிப்போதலை நாம் காணலாம் என்று இப்போது படுகிறது. கே.பி.சுந்தராம்பாள் மிக இளம்வயதிலேயே கிட்டப்பாவுடனான உறவை இழந்துவிட்டார். அப்போதிருந்தே தன்னை ஒரு விதவையாக ஆக்கிக்கொண்டு கடுமையான வைராக்கியத்துடன் வாழ்ந்து மறைந்தார். எம்.எஸ். தன்னைவிட மூத்த சதாசிவத்துக்கு மனைவியாகி, குழந்தைகள் இல்லாதவராக, இசைதவிர உலகமே இல்லாமல் வாழ்ந்து மறைந்தார்
இவ்விருவரின் கடிதங்களிலும் உள்ள இன்னொரு பொதுத்தன்ன்மையும் கவனிக்கத்தக்கது. இருவருமே தங்கள் காதலர்களிடம் தங்களை நம்பும்படி கெஞ்சுகிறார்கள். மீண்டும் மீண்டும் தங்கள் சுய சமர்ப்பணத்தை சொல்லிச்சொல்லி இறைஞ்சுகிறார்கள். நாடகம் ,இசைக்கலை போன்ற துறைகளுக்கு வந்துவிட்ட பெண்கள் மீதான ஆழமான அவநம்பிக்கை அன்றைய சமூகத்தில் இருந்தது. அந்த அவநம்பிக்கை கிட்டப்பாவுக்கும், ஜி.என்பிக்கும் இருந்திருக்கலாம்.
கிட்டப்பா, ஜி.என்.பி இருவரும் கொள்ளும் குரூரமான தந்திரமான மௌனம் அவர்களின் மனசாட்சி அதிர்ந்திருப்பதையே காட்டுகிறது. ஆனால் அவர்கள் அப்பெண்களை காம வடிகால் கருவிகளாக மட்டுமே கண்டிருக்கிறார்கள். அவர்களின் மனத்தைப்பற்றி அக்கறையே படவில்லை. அவர்களின் கண்ணீரையும் மன்றாட்டையும் வெறும் பசப்புகளாகவே எண்ணியிருக்கிறார்கள். அதேசமயம் அவர்களின் அந்தரங்கம் அறிந்த உண்மை அவர்களைச் சுட்டுக்கொண்டும் இருந்திருக்கிறது.
அக்காலத்தைய பிரபல நாவல்களான வடுவூர் துரைசாமி அய்யங்காரின் துப்பறியும் கதைகளில் பெரும்பகுதி தாசிவருணனைகளும் தாசிகளின் மோசடிகளைப்பற்றிய விவரணைகளும்தான். பெரும்பாலும் ‘நல்ல’ தாசிகளே தாசிகளின் மோசத்தைப்பற்றி பேசுகிறார்கள். அந்தக் கோணத்துக்கு நேர் எதிரான நாவலாகிய மூவாலூர் ராமாமிருதத்தம்மையாரின் ‘மதிபெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோசவலை’ நாவலும் தாசிகளின் மோசடியை, அவர்களின் பசப்புகளைப்பற்றியே பேசுகிறது. இது அக்காலத்தின் ஒரு பொது மொழிபு. தாசிகளைப்பற்றிய பெருவிருப்பும் வெறுப்பும் கலந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது அன்றைய பொதுமனநிலை.
இன்னொரு உதாரணம் தில்லானா மோகனாம்பாள். கொத்தமங்கலம் சுப்பு எழுதிய இந்த நாவல் அக்காலத்து தாசிகளின் வாழ்கைப்பின்னணியை அனுதாபத்துடனும் மரியாதையுடனும் எழுதியது. தாசியை கௌரவமாக காட்டிய ஆக்கம் இது. மோகனாம்பாள் அந்த நாவலின் ஆயிரம் பக்கங்களில் ஆசைப்படுவது ஒரு கௌரவமான கணவனை மட்டுமே. அதற்கு இரு தடைகள். ஒன்று அவளை தாசியாக மட்டுமே கண்டு அவமதிக்கவும் அடையவும் நினைக்கும் சமூகம். இன்னொந்று அவளது ஒழுக்கத்தை ஐயப்படும் சண்முகசுந்தரம். மோகனாம்பாள் அந்த நாவல் முழுக்க என்னை நம்புங்கள் நம்புங்கள் என்றே கதறிக்கொண்டிருக்கிறாள்.
அந்நாவலின் உச்சமும் அதுவே . தன்னை தாசியாக மட்டுமே காணும் காமுகனாகிய ஜமீந்தாரிடம் நான் ஒரு பெண் என்று சீறிவிட்டு தன் காதலனிடமும் அதையே சொல்லி கதறுகிறாள் மோகனாம்பாள். மகாராஜாவே சாட்சி சொன்னதும் சண்முகசுந்தரம் நம்பும்போது கதை உச்சத்தை அடைகிறது. மோகனாம்பாளின் இதிகாசத்தன்மை கொண்ட போராட்டம் சமூகத்திடமும் ஆண்மனத்திடமும்தான்.
எம்.எஸ். போராடிக்கொண்டிருந்ததும் அவற்றை எதிர்த்துத்தான். தன்னை தாசியாக அல்ல ஒரு பெண்ணாக அணுகவேண்டும் என்ற மன்றாட்டையே அக்கடிதங்கள் காட்டுகின்றன. அந்த கோரிக்கை தீர்மானமாக நிராகரிக்கப்பட்டது. 1940 வரை சகுந்தலை தயாரிப்பு காலகட்டத்தில் என்னென்ன மன மோதல்கள் நடந்தன என்று ஊகிக்கலாம். தயாரிப்பாளரான சதாசிவத்துக்கு தன் ஆசைநாயகிக்கும் ஜி.என்.பிக்குமான உறவு என்ன மனநிலையை கொடுத்திருக்கும்?
1940ல் சகுந்தலை படம் வெளிவந்தது. சதாசிவத்தின் மனைவி ராதா, விஜயா என்ற இரு மகள்களை விட்டுவிட்டு மறைந்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியை சதாசிவம் அதிகாரபூர்வமாக மணம்புரிந்துகொண்டார். எம்.எஸ்ஸ¤க்கு அப்போது இருபத்துநான்கு வயது. அக்காலத்தைய வழக்கப்படி அது திருமணமாவதற்கு முதிர்ந்த வயது. சதாசிவத்துக்கு அப்போது நாற்பது வயது.
அதன்பின்னர் எம்.எஸ்ஸின் வாழ்க்கை என்பது இசைக்கே முழுமையாக அர்ப்பணித்துக்கோண்ட ஒன்று. அதை ஒருவகை உபாசனை என்றே சொல்லலாம், ஏனென்றால் பிறகு அவர்களுக்கு பிற எதிலுமே ஆர்வம் இருக்கவில்லை. அவர் அடைந்த புகழ் பணம் எதையுமே அவர் ஆர்வத்துடன் அனுபவித்ததாகத் தெரியவில்லை. அந்த அர்ப்பணம் அவரை இசையில் மேலே கொண்டுசென்றது
அத்துடன் எம்.எஸ்ஸ¤க்கு சதாசிவம் அளித்த பிம்பமும் மிக முக்கியமாக உதவியது என்கிறார் ஜார்ஜ். அன்று [இன்றும்] சென்னை இசைத்துறை என்பது மைலாப்பூர் ஸ்மார்த்த பிராமணர்களின் உலகமே. அவர்களில் ஒருவராக எம்.எஸ்ஸை மாற்றினார் சதாசிவம். அதற்கேற்ப ஆசாரமான பிராமண குடும்பத்தலைவியின் தோற்றத்தை எம்.எஸ் ஏற்றுக்கொண்டார். அன்று பிராமணர்களின் தலைவராக விளங்கிய ராஜாஜியின் ஆசி கல்கி இதழ் மூலமாக அவருக்குக் கிடைத்தது. கல்கி என்ற சக்திவாய்ந்த எழுத்தாளரின் பேனா அவருக்கு உதவியது. கல்கி என்ற பிரபல இதழ் உதவியது. சதாசிவத்தின் காங்கிரஸ் பின்புலம் பெருமளவுக்கு உதவியது
வேறெந்த கர்நாடக சங்கீத பாடகியை விடவும் எம்.எஸ் அதிக உயரத்தை அடைந்தார். வசந்தகுமாரி, பட்டம்மாள் இருவருமே எம்.எஸ்ஸை விட சிறந்த பாடகிகள் என்றாலும் அவர்கள் எம்.எஸ்ஸின் இடத்தை கனவுகூட காணமுடியாத நிலை உருவாகியது. அரசியல் அந்தஸ்தை எம்.எஸ். இசைக்கு பயன்படுத்திக்கொண்டார் என்று சொல்வதைவிட இசைமூலம் அடைந்த அந்தஸ்தை அரசியல் மூலம் பெருக்கிக்கொண்டார் என்று சொல்லலாம்
மதத்தை தன் கௌரவத்துக்கான பெரும் கருவியாக எம்.எஸ். பயன்படுத்திக்கொண்டார். பிராமணர்களின் அறநிறுவனங்களுக்கு பெரும் தொகையை அவர் வசூல் செய்து கொடுத்தார். சதாசிவம் பிராமணப்பையன்களுக்கு தவிர பிறருக்கு அறக்கொடைகள் அளிப்பதில்லை என்று ஜார்ஜ் பதிவுசெய்கிறார். எம்.எஸ் காஞ்சி சங்கராச்சாரியாரின் ஆதரவை பெற்றதற்கு பிராமண நிறுவனங்களுக்கு அவரளித்த மாபெரும் அறக்கொடைத் தொகைகள்தான் காரணம். அந்த மதஅந்தஸ்து வெங்கடேச சுப்ரபாதம் மூலம் உறுதிப்பட்டது
எம்.எஸ் அவர் நினைத்ததை அடைந்தார். பிறப்பு அவர் மீது ஒட்டவைத்த இழிவை முழுமையாக விலக்கிக் கொண்டார். அவர் பிராமணர்களின் ஆதர்சமாக ஆனார். மயிலை பிராமனர்களின் கௌரவத்தின் சின்னமாகிய மியூசிக் அக்காதமியின் முதல் பெண் தலைவராக அவர் ஆனதென்பது ஒரு கோட்டைமீது கொடியைப்பறக்கவிடுவதுதான்.
ஆனால் அப்பொதும் ஒரு கேள்வி எஞ்சியிருக்கிறது. எம்.எஸ் ஒருவேளை குழந்தைபெற்றிருந்தால் அக்குழந்தை பிராமணர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்குமா என்ற வினாதான் அது. தன் வாழ்நாளெல்லாம் நல்ல சித்தியாகவே வாழ்ந்தார் எம்.எஸ். அதில் ஓரு வைராக்கியம் இருந்தது.
பாலசரஸ்வதி தன் அடையாளத்தை முன்வைத்து போராடினார் என்கிறார் ஜார்ஜ். அவர் அந்த அடையாளம் மூலமே ஒரு சிறந்த கௌரவநிலையை அடைந்தார். ஆனால் தன் அடையாளத்தை அழித்ததன்மூலமே எம்.எஸ் விடுதலை பெறமுடிந்தது. அந்த அடையாளத்தை மேம்படுத்துவதன் மூலம் அல்ல. 1940ல் மதுரை சண்முக வடிவின் மகள் இறந்தாள், சதாசிவத்தின் மனைவி பிறந்தார் கிட்டத்தட்ட சீதை தீக்குளித்ததுபோன ஒரு மீட்பு அது.
ஜார்ஜின் நூலில் பின்னிணைப்பாக அளிக்கப்பட்டிருக்கும் எம்.எஸ் அவர்கள் ஜி.என்.பிக்கு எழுதிய காதல்கடிதங்கள் எனக்கு ஆழமான மனநிறைவை அளித்தன. அந்தக் கலையுள்ளத்தின் உணர்ச்சிகரத்தை நெருங்கி அறிந்தது போல இருந்தது. எம்.எஸ்.ஸின் இசையை இனி நான் கேட்கும்போது மேலும் அருகே சென்று லயிக்க முடியும் என்று பட்டது. ஒரு வகை வறண்ட லட்சியவாதத்தாலும், மேலோட்டமான பக்தியாலும்தான் எம்.எஸ்.ஸின் பிம்பம் இதுவரை உருவாக்கப்பட்டிருந்தது. டி.ஜெ.எஸ்.ஜார்ஜ் உருவாக்கும் ஆழமான மானுட உணர்ச்சிகள் கொண்ட இச் சித்திரமே உண்மையானது.
ஆனால் இந்திய மனதுக்கே உரிய துரதிருஷ்டவசமான சில போலிப் பாவனைகள் நம்மை உண்மையைப் பார்க்க விடாது செய்கின்றன. நாமே சமைத்து நம்பிக்கொள்ளும் பொய்களை விரும்பச் செய்கின்றன. ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு நம் முன் வாழ்ந்த இந்த பெரும் இசைக் கலைஞரைப் பற்றிய நேர்மையான மதிப்பீடோ திறனாய்வோ நம் இசைத் துறையில் இல்லை. இறப்பை ஒட்டி அள்ளி இறைக்கப்படும், வானைத் தொடும் புகழுரைகளை வாசித்துக் களைத்த எனக்கு இந்நூல் மகத்தான ஒரு தரிசனமாக அமைந்தது.
மறுபிரசுரம் முதற்பிரசுரம் அக்டோபர் 2009