காந்தி இரு கடிதங்கள்

இத்துடன் மாதிரிக்கு இரு கடிதங்களை இணைத்திருக்கிறேன்.அடிப்படைகளைப் பற்றி புரிதலே இல்லாமல், விசித்திரமான ஒரு தீவிரத்தை கற்பனைசெய்துகொண்டு இம்மாதிரி கடிதங்கள் வந்துகொன்டே இருக்கின்றன. இவற்றுக்கு பெரும்பாலும் நான் பதில் அளிப்பதில்லை

இக்கட்டுரைகள் இந்த தளத்தில் நிற்கும் வாசகர்களுக்காக அல்ல. இந்த இணையதளமே அவர்களுக்காக அல்ல என்று சொல்லவிரும்புகிறேன். இது அடிபப்டைகளை கொஞ்சம் முயற்சி எடுத்து பயிலவும்  எல்லா தரப்புக் கருத்துக்களையும் உணர்ச்சிகளை மிகைப்படுத்தாமல் வாசிக்கவும் கூடிய சிலருக்காகவே நடத்தப்படும் தளம்.

***

 

நான் காந்தியை பற்றியோ அம்பேத்கரை பற்றியோ எந்த அறிவு ஜீவிகளும் எழுதிய புத்தகங்களையும் படித்தது இல்லை.நீங்கள் காந்தியை பற்றி அம்பேத்கர் பற்றி எழுதிருக்கும் கட்டுரைகளுக்கு சரியான பதில் எழுதும் அளவிற்கு எந்த வரலாற்று பட்டறிவோ,இலக்கிய நுன்னறிவோ எனக்கு இல்லை என்ற உண்மையை உங்களுக்கு முதலில் நான் சொல்லிவிடுகிறேன்.ஆனால் எனக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது,நீங்கள் இது வரை கனவில் கூட வாழாத வாழ்ந்து பார்க்க விரும்பாத என் தலைமுறையின் வாழ்க்கை என் கண்முன் இருக்கிறது,அது கொண்ட ஒரு சிறிய கோபமே இது.
உங்களின் இலக்கியம் படிக்க தொடங்கி இருக்கும் ஆரம்ப கால வாசகன் நான்,உங்களின் கன்னியாகுமரி ,காடு ,ஆகிய நாவல்களை வாசித்து வியந்த என் குடும்பத்தில் முதல் தலைமுறை நான் .அம்பேத்கரை பற்றியும் தலித் மக்களின் அரசியல் பற்றியும் நீங்கள் உங்கள் வலைப்பூவில் எழுதி இருப்பதை படித்து என்னை அறியாமல் வந்த கோபம் இது.
அம்பேத்கர் பற்றி எவனோ என் வாயில் நுழையாத பெயர் கொண்டவன் எழுதிய புத்தகத்தை ஆதாரமாய் வைத்து அம்பேத்கர் பிரிட்டிஸ் அரசின் கைப்பாவை என்றும் ,இந்திய சுதந்திரத்தை விரும்பாத ரகசிய பிரிட்டிஸ் உளவாளி என்றும் ,அதிகாரத்தின் மீது மோகம் கண்டவர் என்றும் ,காந்தியுடைய மக்கள் செல்வாக்கின் மீது பொறாமை கொண்டவர் என்றும் ,இறுதியாக அம்பேத்கரை தலித் மக்கள் தங்களின் தலைவராக நினைக்கவில்லை என்றும் காந்தியே தலித் தலைவர் என்றும் உங்களின் இலக்கிய அறிவார்த்தன அரசியலை முன் வைக்கும் ஜெயமோகனே!
நீங்கள் எப்போதாவது உங்களின் தந்தையின் மேலாடை உருவப்பட்டு அவன் வாயில் மலம் திணிக்க பட்டதை பார்த்து இருக்கிறீர்களா?தாகத்திற்காய் தண்ணீர் அருந்தி அதற்காய் சவுக்கை அடி வாங்கி இருக்கிறீர்களா,கடவுளை வணங்க சென்றதற்காய் உங்களின் கால்கள் வெட்டபட்டிருக்கிறதா,கோமணத்தோடு வீதிகளில் நடந்து வந்து இருக்கிறீர்களா அல்லது உங்கள் குடும்பத்தில் யாராவது வந்துருக்கிறார்களா?நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை நீங்கள் அடைந்ததற்காய் உங்களின் ஆணுறுப்பு எப்போதாவது
வெட்டபட்டிருக்கிறதா,இவை எல்லாவற்றிற்கும் உங்களின் பதில் இல்லை என்றால் உங்களுக்கு அம்பேத்கர் என்ற பெயர் சாதாரனமாய் தெரிந்ததில் எனக்கு வியப்பு இல்லை .ஹரிஜன் என்றும் கடவுளின் குழந்தைகள் என்றும் தலிதுக்களுகாய் குரல் கொடுத்த காந்தி,எங்கள் மீது வைத்திருந்த பாசத்தைதானே அம்பேத்காருடன் நீங்கள் எடை போடுகிறிர்கள்,ஆற்றில் விழுந்து தத்தளிப்பவன் தன்னை காப்பாற்றுங்கள் என்று அலறுவதற்கும் கரையின் மீது நிற்கும் ஒருவன் அவனை காப்பற்றுங்கள் என்று அலறுவதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்கும் என்பதைகூடவா நீங்கள் தெரியாமல் போய்விட்டிர்கள்.அம்பேத்கர் தான் நினைத்த மாதிரி படித்து தான் நினைத்த மாதிரியே மாபெரும் தலைவன் ஆனவர் அல்ல,அவமானங்களும் அடிமைதனத்துக்குள்ளும் சிக்கி அதை அனுபவித்து தான் கொண்ட தீராத வலி வாங்கி கொடுத்ததே அவர் கொண்ட கல்வியும் அறிவும்.காந்தி அவர்கள் பதினைந்து வயதில் உடுத்திய ஆடையை எம் புரட்சியாளன் உடுத்த அவனுக்கு ஒரு யுகம் ஆகிவிட்டது.
அப்புறம் என்ன எம் புரட்சியாளன் அதிகார மோகம் கொண்டவனா?எங்களை வீதிகளில் நடக்கவே அனுமதிக்காத உங்களின் எதிர் இருக்கையில் ஒட்டு மொத்த எம் மக்களின் வாழ்வுரிமைக்காய் எம் புரட்சியாளன் அமர நினைத்தது அதிகார மோகமா?இல்லை இது உங்களின் ஆதிக்க மனோபாவத்தின் நுன்னறிவா,
எம் புரட்சியாளன் பிரிட்டிஸ் ஆதிக்கத்தின் கைப்பாவையா,உங்களுக்கு இன்னோர் நாட்டுகாரனிடமிருந்து விடுதலை தேவைப்பட்டது ஆனால் எம் புரட்சியாளனுக்கோ அவன் மக்களுக்கு அவன் நாட்டு மக்களிடம் இருந்தே விடுதலை தேவைபட்டதே!
ஒருவர் கோமணம் கட்டினார் ஆகையால் அவர் உங்களால் மகாத்மா,அவரே உண்ணாவிரதம் இருந்தார் அவர் உங்களுக்கு தேச தந்தை ,ஆனால் காலகாலமாய்
எம் இன மக்கள் கோமணம் தானே கட்டி கொண்டிருந்தார்கள்,ஒரு வேலை உணவுக்கு உங்கள் கழிவறையை தானே சுத்தம் செய்தார்கள் அவர்கள் விடுதலைககு அவர்களின் ஒருவன் குரல் கொடுத்து வெற்றி பெற்றது சுயநலமா?
சரி நீங்கள் சொல்லுவது போல் காந்தி தான் தேச தந்தை அவர்தான் எம் தலித் மக்களுக்கும் தலைவர் என்றால் பாவம் அந்த சாதரண அம்பேத்கர் என்ற மனிதனின் சிலையை ஏன் இன்னும் கம்பி போட்ட சிறைகளில் வைத்துள்ளிர்கள்.அந்த அம்பேத்கார் என்ற மனிதனின் சிலைக்கு ஏன் இரவில் வந்து செருப்பு மாலை போடுகிறிர்கள்,அந்த காந்தி சிலையில் உள்ள காக்கைகளை விரட்ட போக வேண்டியதுதானே,
கடைசியாய் என்ன சொன்னீர் தலித் மக்கள் அதிகம் சாராயம் குடித்து சுத்தம் இல்லாமல் வாழ்கிறார்களா?யோவ் அறிவாளி நீ கண்டதையும் கழுதையும் தின்னுட்டு போடுற கழிவ அவங்க அள்ளனும்,உன் அழுக்கு துணியை துவைத்து கொடுக்கணும்,உன் வீட்டு சாக்கடைகள் அவங்கதான் சுத்தம் செய்யனும்.இதுல அவங்க சுத்தமா வேற இல்லன்னு உனக்கு கவலையா காந்தி பேரனே!
எங்களுக்கான விடியலை உம்மை போன்ற அறிவு ஜீவிகள்
மறைக்க முயலுவார்கள் எனில் ஒரு நாள் அவர்களுக்கே தெரியாமல் அழிந்து போகும் அவர்களின் அறிவும் ஆதிக்கமும் என்பதை மறந்து விடாதீர் ,,,,,,,,

ஆனந்த் ஷா

அன்புள்ள ஆனந்த் ஷா

நான் எழுதியிருக்கும் கட்டுரைகளுக்கும் நீங்கள் வாசித்துப் புரிந்துகொண்டிருப்பவற்றுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. இப்படித்தான் வாசிப்போம் இப்படித்தான் புரிந்துகொள்வோம் என்றால் அது உங்கள் விருப்பம். ஆனால் இக்கட்டுரைகள் புரிந்துகொள்ள கொஞ்சம் முயற்சி செய்பவர்களுக்காக எழுதப்பட்டவை

ஜெ

 

 

திரு. ஜெயமோகன்

வணக்கம்…! ஒரு வகையில் இது எனக்கு ஒரு ‘வேண்டாத வேலைதான்’ எனினும்…………….
காந்தி அம்பேத்கர் குறித்த விஷயங்கள் தொடர்பாக… (குறிப்பாக தமிழினி அக்டோபர் இதழில் வெளியான விஷயங்கள்)
1. தங்களின் ஒட்டுமொத்த நிலைப்பாடும் உலகப் பொருளாதாரம், உலகப் போர் 1 & 2 அதனால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி இதிலிருந்து துண்டித்துக்கொண்ட ஒரு பார்வை -எனது சிந்தனையில் இதுதான் இந்திய விடுதலை எனும் இலக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது- என்பது ஒரு புறமிருக்க…
ஒரு மனிதனை எவ்வாறு எடை போடுவது என்பது குறித்த அடிப்படைக்கு வருவோம்:
தாங்கள் சூழலை இலக்கணமாகக் கொண்டு காந்தியையும் அம்பேத்கரையும் எடை போடுகிறீர்கள். இதைவிடவும் நான் வைத்துக்கொள்ளும் இலக்கணம் என்னவெனில், அவரவர் சொல்லும் செயலும் என்பதுதான்.
1. காந்திக்கும் முன்னதாகவே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனம் நடத்தி நொடித்துப்போன சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி க்குக் கிடைத்த தண்டனை தொடர்பாக… அதைக் குறைக்க அல்லது அவரை விடுவிக்க காந்தி மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?
2. தென்னாப்பிரிக்காவிலிருந்து வ.உ.சிக்காக சேகரித்து காந்தி மூலமாக அனுப்பப்பட்ட தொகை என்னவாயிற்று… அதற்கென வ.உ.சி எழுதிய கடிதங்கள் உணமையா போலியா… தனி மனித ஒழுக்கத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்ததாகச் சொல்லப்படும் காந்தி செய்தது என்ன? அவரது சொல்லையும் செயலையும் இவ்விஷயம் தொடர்பாக உரசிப் பார்த்து பதில் சொல்வீரா?
3. தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த காலத்தில் போயர் யுத்தத்தின் போது காந்தி இரு எதிரெதிர்த் தரப்பினருக்கும் சேவை செய்தாரா அல்லது பிரிட்டிஷாருக்கு மட்டுமா?
4. சமகாலத்தில் பிரிட்டிஷ் நிறுவங்கள் இங்கே இந்தியர்களை சுரண்டிக்கொண்டிருக்கையில் பிரிட்டிஷ் நிறுவங்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் இராட்டையில் நூற்பது போன்ற கிராமப்புற விஷ்யங்களை காந்தி முன்வைத்ததை எப்படிக் கணக்கில் கொள்வது?
5. காந்தியின் நுழைவுக்குப் பின்னர் யாரையும் கொன்றுவிடக்கூடாது; அதே நேரத்தில் தனது இலக்கு உலகுக்கு வெளிப்பட வேண்டும், இந்தியாவுக்கு விடுதலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய பகத்சிங்கிற்காக, அதாவது அவரது விடுதலைக்காக காந்தி செய்தது என்ன? அல்லது அவருக்கு தூக்கு தண்டனை என்று அறிவிக்கப்பட்டதை ‘அஹிம்சை’ என்ற நோக்கில் இருந்து குறைப்பதற்காக காந்தி செய்தது என்ன?
6. “போராட்டங்கள் வன்முறை நோக்கி அத்து மீறிய போதெல்லாம் காந்தி வாபஸ் பெற்றதைக் குறை கூறுவோர்” முற்றிலும் தவறானவர்களா? காந்தி இன்றி இம்மண்ணில் எப்போராட்டமும் நிகழவே இல்லையா? காந்தியின் அஹிம்சை இந்திய விடுதலைக்கு உதவியதா அல்லது பிரிட்டிஷுக்கு உதவியதா? காந்தி வாபஸ் பெற்றதனால் இந்திய விடுதலை ‘கத்தியின்றி இரத்தமின்றி’ கிடைத்ததா?
7. போராட்டங்கள் வன்முறைக்குச் செல்வது என்பது போராட்டம் நடத்துபவர்கள் -அதாவது உரிமை கோருவோர்- சார்ந்ததா அல்லது அதைத் தர மறுப்போர் சார்ந்ததா? அதைத் தர மறுப்போர் சார்ந்தது எனில், வெள்ளை ஏகாதிபத்தியம் காந்தியின் சிறு செயலுக்கும் -அல்லது சொல்லுக்கும் கூட- வன்முறையைப் பிரயோகித்து இருக்குமெனில் காந்தி என்ன செய்திருப்பார்? போராட்டங்களே வேண்டாம்.. அனைத்தும் வன்முறையில் முடிகிறது என்று சொல்லி வீட்டிலே முடங்கியிருப்பாரா? போராட்டத்தை வன்முறை காரணமாக அவர் வாபஸ் பெற்றார் எனில் வன்முறை என்பது அவர் சார்ந்த விஷயம் அல்ல என்பதைத் தாங்கள் எங்ஙனம் பார்க்கிறீர்கள். அது காந்தியின் சாதனையாகச் சொல்ல முடியுமா அல்லது பிரிட்டிஷின் தந்திரோபாயங்களில் ஒன்றாகச் சொல்லமுடியுமா? “காந்தி யாரையும் பலி கொடுக்க விரும்பவில்லை” என்று நீங்கள் சொல்லும்போது காந்தியால் பிரிட்டிஷ் அரசைக் கட்டுப்படுத்த முடியும் என்றாகிறது. ஒருவேளை அவர்கள் காந்தியை ஒரு பொருட்டாகக் கருதாது பலரையும் கொல்ல விழைந்திருந்தால்; முதல் நபராக காந்தி தன் நெஞ்சை நிமிர்த்தி நின்றிருப்பாரா? அதற்கான சுட்டுக்குறிப்புகள் ஏதேனும் உளவா?
8. விடுதலை (Liberation) என்ற சொல் பயன்படுத்தபடாது தற்சார்பு (independence) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது அல்லது (ஸ்வதந்த்ரம்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது வெறும் தற்செயலா?
9. காங்கிரசை வெள்ளையர்களே தொடங்கியது எவ்வகையிலும் காந்திக்கோ அல்லது இன்றைக்கு அது பற்றி கருத்துரைக்கும் உங்களுக்கோ ஒரு சிறு நெருடலாகக் கூட இல்லையா?
10. ”காந்தி கடுமையாக தண்டிக்கப்பட்டார்” என்று சொல்லும் நீங்கள் வ.உ.சி. செக்கிழுத்ததை என்னவென்று சொல்வீர்கள்… அல்லது வி.டி. சவர்கர் போன்றவர்கள் அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டதை என்னவென்று சொல்வீர்கள். பகத் சிங்க் தூக்கிலடப்பட்டதை – உலக வரலாற்றில் மாலை நேரத்தில் தூக்கிலிடப்படும் அளவுக்கு அவசரம் காட்டப்பட்டது என்பதை என்னவென்று சொல்வீர்கள்.?
11. கிடைத்த இலாபங்களைத் தக்கவைத்துக்கொண்டு அந்த இலாபங்களைப் பயன்படுத்தும் விதமாக நம்மை மேம்படுத்திக் கொண்டு மேலும் போராடுவதே அவரது வழி” என்கிறீர்கள். இதைத்தான் அண்ணாதுரையும் செய்தார், இதைத்தான் கருணாநிதியும் சொல்கிறார். கேரளத்திடம் முல்லைப் பெரியார் விவகாரத்தையும், கர்நாடகத்திடம் காவிரியையும், ஆந்திரத்திடம் பாலாற்றையும் என்ன செய்ய? காந்திய வழி என்று ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள்.
இன்னும் நிறைய கேட்பதற்கிருந்தாலும் இப்போதைக்கு இத்துடன் காந்தி தொடர்பாக நிறுத்திக்கொள்கிறேன்.. பின்னர் விலாவரியாக….
அம்பேதகர் குறித்து:-
1. அம்பேத்கர் அறிவித்துக் கொண்ட கம்யூனிச விரோதி… என்பதைத் தாங்கள் அறிவீர்களா? “the country would be doomed if it went into the hands of communists”  என்று சொன்னவர் அவர்.
2. பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக இந்தியாவின் ஆதிக்க சாதிகள் போராடுகின்ற நேரத்திலேயே தம் சாதிக்கென அதிக உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தது சரியா? தற்காலத்திலும் கூட அவர்களுக்கு அரசியல் சாசன உரிமைகளே கிட்டவில்லை என்ற நிலை அவர் நினைத்தது சரிதான் என்று உறுதிப் படுத்துவதாகக் கொள்ளலாமா?
3. இரட்டை வாக்குரிமை கோரினார் அம்பேத்கர்.. அதை முழுமூச்சாக எதிர்தார் காந்தி. இதற்கு நீங்கள் சொல்லும் காரணம் ‘மேலும் பிரிவினையை அவர் விரும்பவில்லை” என்பது. உண்மையில் பிரிவினை இருந்ததால்தான் இரட்டை வாக்குரிமை கோரப்பட்டதேயன்றி, அது கிடைத்துவிட்டால் பிரிவினை உருவாகிவிடும் என்பது அபத்தத்தில் அபத்தம் என்பது காந்திகோ அல்லது தங்களுக்கோ உறைக்காமற்  போனதை எனக்கு விளங்கிக் கொள்ள முடியவில்லை.
4. ஹரிஜனங்கள் என்ற பதப் பிரயோகத்தையும் அதற்கெதிராக அம்பேத்கர் ‘நீங்கள் சாத்தானின் குழந்தைகளா” என்று கேட்டதையும் எப்படிப் பார்க்கிறீர்கள்.
காந்தியிடமும் பிழைகள் இருந்தன என்று சொல்லிவிடுவதன் மூலம் இவையனைத்தையும் விட்டுவிடவேண்டுமா?
பதில் சொல்வீரா?
ப்ரவாஹன்.
பி.கு. நான் காந்தியின் ஆதரவாளனோ அல்லது அம்பேத்கரின் ஆதரவாளனோ அல்ல. அவர்கள் இருவரின் சில விஷயங்களை -சரியானவை என நான் கருதுவனவற்றை ஏற்பவன்.
அன்புள்ள பிரவாகன்,

உங்கள் கடிதம் கண்டேன். இந்தவகையான கேள்விகளைக் கேட்கும் முன் நீங்கள் அடிபப்டையில் ஏதேனும் வாசித்திருக்கவேண்டும். நீங்கள் கேட்கும் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விரிவாகவே நான் பதில் ஏற்கனவே எழுதிவிட்டேன். தமிழில் ஏற்கனவே பலர் எழுதியும் இருக்கிறார்கள். உங்கள் விசித்திரமான தன்னம்பிக்கை எதையும் வாசிக்காததில் இருந்து வருகிறதென எண்ணுகிறேன். நான் பக்கம் பக்கமாக எழுத நீங்கள் திரும்பத் திரும்ப இதையே கேட்டுக்கொண்டிருப்பீர்கள். இதனுடன் விவாதிப்பது  எனக்குத்தான் வீண் வேலை என நினைக்கிறேன்

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைஉப்பிட்ட வாழ்க்கைகள்: லோகிததாஸின் திரைக்கதைகள் 4
அடுத்த கட்டுரைஆன்டனி டிமெல்லோ,கிறித்தவ,இந்து உரையாடல்