கலை இலக்கியம் எதற்காக?

images (3)

 

அனைவருக்கும் அன்பான வணக்கம். இந்த மேடையில் தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் , திரு .வைரமுத்து அவர்கள், எனக்குப்பின் பேசவிருக்கிறார். நான் சிறந்த பேச்சாளன் அல்ல. உங்களனைவரையும் கவரும் ஒரு பேருரையை நிகழ்த்த என்னால் இயலாமல்போகலாம். நான் பேச்சாளனல்ல, எழுத்தாளன்.என் ஊடகம் எழுத்து. ஆகவே சில சொற்களை இங்கே சொல்லி விடைபெறலாமென என்ணுகிறேன்

சிங்கப்பூருக்கு நான் வந்து சில நாட்களாகின்றன. இங்கே சுப்ரமணியன் ரமேஷ் என்ற நண்பரின் இல்லத்தில் தங்கியிருந்த போது அங்கு வந்த இந்திரஜித் என்ற நண்பர் என்னிடம் ஒன்று சொன்னார். அவர் சில கதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் ஒருநாள் தோன்றிவிட்டது, தாமஸ் ஆல்வா எடிசன் மின்விளக்கைக் கண்டுபிடித்தார். அது இன்றும் பயன்படுகிறது. ஆனால் ஒரு கதையை எழுதுவதனால் மானுடகுலத்துக்கு என்ன லாபம்? அதனால் என்ன நிகழப்போகிறது? அந்த எண்ணம் ஏற்பட்டபின் எழுதுவதில்லை என்றார்

அவருக்கு நான் சொன்ன பதிலைபற்றி எண்ணிக் கொண்டிருந்தேன். சிங்கப்பூர் போன்ற ஒரு வணிகநகரத்தில் வாழும் மக்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்கு இவ்வெண்ணமே இருக்கும் என்று எனக்குப் படுகிறது. ஆனால் யோசித்துப்பாருங்கள் வருடம்தோறும் எத்தனை ஆயிரம் எத்தனை லட்சம் பக்கங்கள் இலக்கியத்துக்காக ஒதுக்கப்பட்டு அச்சிடப்படுகின்றன! எவ்வளவு நேரம் உழைப்பு அதற்காக செலவிடப்படுகிறது!

மக்கள் இலக்கியவாதிகளை நினைவில் வைத்திருப்பதுபோல பிறரை நினைத்திருப்பதில்லை. பிற கலைகள் பிற சிந்தனைகள் காலம்தாண்டி வாழ்வதில்லை. புதுமைப்பித்தன் காலத்து அரசியல்வாதிகளில், சிந்தனையாளர்களில், நடிகர்களில், பாடகர்களில் எத்தனைபேர் இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள், ரசிக்கப்படுகிரார்கள்? மகாவைத்தியநாத அய்யர், சத்தியமூர்த்தி, பரிதிமால் கலைஞர், பி.யூ.சின்னப்பா, முசிறி சுப்ரமனிய அய்யர்….மிகமிகக் குறைவு. புதுமைப்பித்தன் இன்றும் வாழும் ஓர் ஆளுமை. ஷேக்ஸ்பியர் காலத்து அரசியல்வாதி நமக்கு ஒரு பெயர் மட்டுமே. ஷேக்ஸ்பியரோ நாம் உரையாடும் விரும்பும் வெறுக்கும் ஒருவர்.

அடிப்படையில் பயனற்றது என்று கருதப்படும் ஒன்றுக்காக இத்தனை கவனம் ஏன் செலவிடப்படுகிறது? ஏன் இத்தனை தூரம் அது மதிக்கப்படுகிறது?

இம்மாதிரி அடிப்படை வினாக்களை மிக மிகக் குறைத்து அடிப்படை அலகுக்குள் கொண்டுவந்து ஆராய்வது சிறந்த ஒரு வழிமுறையாகும். மீண்டும் மீண்டும் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் இதைப் பரிந்துரைசெய்கிறார். அன்பு, காதல், கற்பு போன்ற அடிப்படை வினாக்களை இவ்வாறு ஆராயலாம்.

என் சிறுவயதில் வாசித்த ‘நிர்வாணக் குரங்கு’ [The Naked Ape]என்ற நூல் நினைவுக்கு வருகிறது. டெஸ்மண்ட் மோரீஸ் எழுதிய இந்த நூல் ஒரு அறிவியல் அறிமுக நூல். மனிதன் என்ற விலங்கைப்பற்றியது. முடியில்லாத உடல் கொண்ட குரங்கு என்ற அளவில் மனிதனை உற்று நோக்கி எழுதப்பட்ட உலகப்புகழ்பெற்ற ஆக்கம். ஒரு உயர்தர கவிதையைப்படிக்கும் மன எழுச்சியுடன் இந்நூலை நான் படித்தேன். ”..இந்த குரங்கினத்தில் ஆணின் முகத்திலும் உடலிலும் ரோமங்கள் உள்ளன. பெண்களுக்கு அவ்வாறு இருப்பதில்லை. ஆணின் தோள்களும் தாடைகளும் வலுவாக உள்ளன. பெண் இனத்தின் முகம் தோள்கள் புஜங்கள் மென்மையானவையாகவும் சதைப்பற்றுடனும் உள்ளன….” இப்படி நூல் விரிந்தால் எப்படி இருக்கும்!

ஆண்பெண் பாலுறவு பற்றி அந்நூலில் வாசித்தது அந்த பிராயத்தில் எனக்கு ஒருபெரிய ஞான தரிசனமாக இருந்தது. இந்த முடியில்லா குரங்கினத்தில் பெண் ஆணை வலிமையின் அடிப்படையில் தேர்வு செய்கிறது. வலிமையான உடலும் தன்னையும் தன்பொருட்டு பிறரையும் வெல்லும் திறனும் ஆணில் பெண்ணைக் கவர்கின்றன. ஆண்குரங்குக்கின் நோக்கில் தன் குட்டிகளுக்கு சிறப்பாக உணவூட்டும் மார்பக உறுப்புகளும் குட்டிகளை பஞ்சத்திலிருந்து காக்கும்பொருட்டு தொடை முதலிய உறுப்புகளில் உள்ள கொழுப்புச்சேமிப்புகளும் பெண்ணில் கவர்ச்சிக்குரிய பாலினப்பண்புகளாக உள்ளன!

இந்தக்குரங்கு காமமும் வன்முறையும் கொண்ட மிருகமாக இருக்கலாம். ஆனால் இதற்கு சில சிறப்பியல்புகள் உள்ளன. கூடிவாழும் தன்மை கொண்டது இது. பிறருக்காக தன்னை அழித்துக்கொள்ளும் அளவு இது மாறக்கூடும். அனைத்துக்கும் மேலாக இக்குரங்கில் ஒன்று கற்றுக்கொண்டது இதன் இனத்தின் அனைத்துக்கும் உரியதாக மெல்ல மெல்ல மாறும்.

எல்லாவற்றையும் சுருக்கி முற்றுறுதியாக்கிப் பார்க்கும்போது மனிதன் என்ற இந்த அற்புத மிருகத்தின் சாரம் மேலும் வசீகரமாக மேலெழுந்து வருகிறது. டெஸ்மண்ட் மோரீஸை அடிப்படையாகக் கொண்டு சங்க இலக்கியத்தை, தமிழ்நாட்டு கருங்கல் சிற்பங்களை, சித்தன்ன வாசல் ஓவியங்களை, பரதநாட்டியத்தை அளவிடும்போது மேலும் மேலும் அக வெளிச்சமே கிடைக்கிறது. மனிதன் என்பவன் எத்தனை மகத்தான ஆக்கம் என்ற எண்ணமே எழுகிறது.

அதே நோக்கில் ஒருநாள் மனிதனின் கலை இலக்கியங்களை ஆராய்ந்து பார்த்தேன். ஒரு வேடிக்கைக்காக. சுஜாதாவின் நோவா கிரகத்திலிருந்து ஆத்மாவும் நித்யாவும் மண்ணுக்கு வந்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப்பெருமாள் கோயில் அருகே வீடு பார்த்து யாருமறியாமல் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் மனிதர்களைப் பற்ற்றி எழுதிய குறிப்புகளின் சில வரிகள் இப்படி இருந்தன

‘மனிதர்கள் தங்களை தாங்களே பார்த்துக் கொள்வதில் மிதமிஞ்சிய ஆர்வம் கொண்டவர்கள். இதை வெறி என்றுதான் சொல்லவேண்டும். இவர்களுடைய நகரங்கள் எங்கும் மனிதர்களின் படங்கள் விதவிதமாக வைக்கப்பட்டுள்லன. இவர்களின் திரைப்படங்கள் தொலைக்காட்சி பத்திரிகைகள் அனைத்திலும் மனிதர்களின் படங்கள்தான் உள்ளன. காலைமுதல் மாலைவரை சலிக்காமல் இவர்கள் மனிதர்களின் படங்களை பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.’

‘மனிதர்கள் ஒருவித ஒலியை தொடர்ந்து எழுப்புகிரார்கள். இதற்கு பேச்சு என்று பொருள். பயின்றால் இதற்கு பொருள் இருப்பது தெரியவரும். மனிதர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் பேச்சை கூர்ந்து கேட்டால் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதையே அவர்கள் சொல்கிறார்கள் என்று காணலாம். எதைச்செய்கிறார்களோ அதையே பேச்சுவடிவிலும் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் நிறைவுறாதபோது கற்பனையை கலந்து செய்ததாகவும் செய்யபோவதாகவும் பேசுகிறார்கள். பேச்சு இவர்களுக்கு அலுப்பதேயில்லை. இதன் பயன் என்ன என்பது தெரியவில்லை. மூச்சு போல இது இவர்களுக்கு தேவைப்படுகிறது’

‘ஒவ்வொரு மனிதரும் எப்போதும் தன்னைப்பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தன்னை மையமாக்கி பலவிதமான நிகழ்ச்சிகளையும் எண்ண ஓட்டங்களையும் தங்கள் மூளைக்குள் நிகழ்த்தியபடியே இருப்பது இவர்கள் இயல்பு. இச்செயலை இவர்கள் மனம் என்கிறார்கள்’

‘மனிதர்கள் தாங்கள் வாழும் வாழ்க்கையையே பல கோணங்களில் பலவடிவங்களில் மீண்டும் மீண்டும் கற்பனையில் நிகழ்த்திக் கொள்கிறார்கள். வாழ்க்கை விவரித்து எழுதி படிக்கிறார்கள். நடித்து படமாக்கி மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள். பேசி பேசி கேட்கிறார்கள். அப்படி கற்பனைசெய்யும் வாழ்க்கை உண்மையான வாழ்க்கை போலவே இருந்தால் அது சிறப்பாக இருப்பதாக கொண்டாடுகிறார்கள். இப்படிப்பார்த்தால் ஒவ்வொரு மனிதரும் கற்பனை மூலம் பலமடங்கு அதிகமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். வாழ்க்கையின் இன்பத்தையும் துன்பத்தையும் இதன்மூலம் அதிகப்படுத்திக் கொள்கிறார்கள்”

”மனிதர்களுக்கு அவர்களின் உயிரியல் வாழ்க்கை போதுமானதாக இல்லை. ஆகவே அதை இவ்வாறு பெருக்கி பலமடங்காக ஆக்கிக் கொள்கிறார்கள்.மண்ணில் நாம் ஏறத்தாழ முந்நூறு கோடி மனிதர்களைப் பார்க்கிறோம்.ஆனால் மூவாயிரம்கோடி வாழ்க்கைகள் இங்கே நடந்துகொண்டிருக்கின்றன ”

***

வேடிக்கைக்காக குறைத்துப் பார்த்தாலும் கலை இலக்கியங்கள் எதற்காக என்ற கேள்விக்கான பதிலை நெருங்கிவிட்டோம். மனித வாழ்க்கை போதவில்லை மனிதனுக்கு. ஆகவேதான் இலக்கியங்கள்.

ஒரு முறை என் ஆசிரியர் நித்ய சைதன்ய யதியுடன் உரையாடும்போது அவர் வேடிக்கையாகச் சொன்னார். ‘இது என் குருகுலம். என்னுடைய கட்டிடங்கள். என் இருக்கை. நான் குரு. ஆனாலும் ஒரேசமயம் ஒரு இருக்கையில்தான் நான் இருக்க முடியும். மனிதனின் அடிப்படை துக்கமே அதுதான்’

உண்மை. ஒருமனிதன் எவ்வளவு வாழ்ந்துவிடமுடியும்? நித்ய சைதன்ய யதி உலகம் முழுக்க ஓயாது பயணம்செய்தார். ஆனாலும் அவர் எவ்வளவு ஊருக்குச் சென்றுவிட முடியும்? வாழ்நாளெல்லாம் வாசித்தார். ஆனாலும் எவ்வளவு வாசித்துவிட முடியும்? மனித வாழ்க்கைதான் எத்தனை சிறியது. எத்தனை பரிதாபத்துக்குரியது!

நாம் ஒன்றை தேர்வுசெய்தாகவேண்டும். ஒரே இருக்கையில்தான் நாம் இருந்தாக வேண்டும். அது நம் பருவுடல் நமக்கு போடும் நிபந்தனை. நாம் இந்த புரோட்டீன் கட்டிடத்திற்குள் சிறையுண்டிருக்கிறோம்.

மனிதர்கள் கால்களால், மீன்கள் செதில்களால், பறவைகள் சிறகுகளால் கட்டுண்டிருக்கின்றன!

நினைவிருக்கிறதா, சின்னஞ்சிறு வயதில் மேகங்களை பார்த்து எப்படி ஏங்கியிருப்போம், பறப்பதற்கு! மலையுச்சிகளின் மாயத்தனிமையில் நிற்க கண்ணீருடன் மனம் விம்மியிருப்போம். பிறகு நாம் கற்றுக் கொண்டோம், கற்பது கைமண்ணளவு என்று.

மனிதனின் இந்த ஆதிச்சிறையின் சுவரில் ஒரு சிறிய ஓட்டை. அதன் வழியாக அவன் கண் வெளியே போக முடியாது, ஆனால் காட்சி வெளியே போகமுடியும். கருத்து வடிவில் அவன்கிளம்பி உலகமெங்கும் உலவ முடியும். விட்டுவிடுதலையாக முடியும். ஆம், அவனால் அப்போது இரண்டல்ல இரண்டாயிரம் இருக்கைகளில் அமர முடியும்!

நினைவுகூர்கிறேன்,நான் இலக்கியத்தைக் கண்டடைந்த நாட்களை! நாஸ்தர்தாம் தேவாலயத்தின் ஒவ்வொரு கூழாங்கல்லும் விக்தர் யூகோவைவிட எனக்குத் தெரிந்தது. லண்டன் சந்துகளில் எனக்கு சற்று முன்னால் சார்ல்ஸ் டிக்கன்ஸ் நடந்தார். வங்கத்து நீர்நிலைகளில் மென்காற்றின் அலையெழுவதை தாகூருடன் சேர்ந்து கண்டேன்.

எனக்கு தடையே இல்லை. நான் ஒரு நாளைக்கு ஒருமுறைமட்டுமே பேருந்து வரும் ஒரு சிற்றூரில் பிறந்து ஒரு நகரத்தைக் கூட காணாமல் வாழ்ந்த சிறுவனல்ல அப்போது. எனக்கு தூந்திரப்பனி தெரியும் அராபிய மணல் தெரியும். எனக்கு காலமில்லை. அக்பரையும் தெரியும் நெப்போலியனையும் தெரியும். ஒரு மந்திரக் கோல் என்னை தொட்டது.நான் விரிந்துபரந்து உலகை நிறைத்தேன். ஓர் உடலில் இருந்துகொண்டு ஓராயிரம் வாழ்க்கையை வாழ்ந்தேன்.

ஆம்,அதற்காகவே இலக்கியம்.

இந்த உலகில் இன்று மிகமிக அதிகமாக உற்பத்திசெய்யப்படும் பொருள் கதைதான். ஒவ்வொரு நாலும் எத்தனை கதைகள் , தொலைக்காட்சியில் இதழ்களில் திரைப்படங்களில் ஏன் நாளிதழ்களில்கூட! மனிதனின் கண்டுபிடிப்பின் மிக முக்கியமான பொருளும் கதையே. அதுதான் அவன் வாழ்க்கையை பெருக்கியது, அவனை நுகர்வுமிருகமாக அல்லாமல் மனிதனாக ஆக்கியது. கற்பனையே மனிதனின் ஆகச்சிறந்த செயல்பாடு

இந்தக் கதை ஹெர்மன் ஹெஸ¤க்கு பிடித்த ஒன்று. தன் சுயசரிதையின் இறுதியை இக்கதையின் அடிப்படையில் கற்பனைசெய்து அமைத்திருக்கிறார்.

ஓர் ஓவியனை மன்னன் சிறையில் அடைத்தான். நான்குபக்கமும் சுவர் , இடைவெளி இல்லா இருட்டு. இறுதி விருப்பமாக உனக்கு என்ன வேண்டும் என்று மன்னன் கேட்டான். வரைவதற்கான சாயமும் தூரிகையும்போதும் என்றான் ஓவியன். மன்னன் அதைக் கொடுக்க சம்மதித்தன். உள்ளூர அவனுக்குச் சிரிப்பு, ஒளியில்லா இருளில் என்ன ஓவியம் வரையப்போகிறான் இந்த மூடன் என்று

ஒருநாள் உணவுகொடுக்கும் துளை வழியாக ஒளி வெளிவருவதை காவலன் கண்டான் .மன்னன் வந்து எட்டிப்பார்த்தான். உள்ளே நான்குபக்கமும் ஒளிமிக்க நீலவானம் திறந்திருக்க நடுவே ஓவியன் நிற்பதைக் கண்டான்.

எப்படி இவன் சுவரை இடித்தான் என்ற வியப்புடன் மன்னன் கதவை திறந்தான். அப்போது தெரிந்தது அது வானமல்ல, ஓவியம். ” வானம் போல இருந்தாலும் இது வானமல்ல, இது உன் கற்பனைதான்” என்று மன்னன் கேலி பேசினான்.

”ஆம். ஆனால் என் கற்பனை என்னை விடுதலை செய்யும்”என்று சொல்லி ஓவியன் அந்த வானத்தில் குதித்துப் பறந்து தப்பிச்சென்றான்.

கலையும் இலக்கியமும் அளிக்கும் விடுதலை இதுதான்.அடையுண்ட அனுபவங்களின் சுவர்களை கரைத்து வானத்தை நிரப்புகின்றன அவை.

உங்களுக்கு வாழ்க்கையே போதுமென்றால் கலை இலக்கியம் தேவை இல்லை. கீழ்படியில் முச்சந்தி வணிகன் நிற்கிறான். வணிகமே அவனுக்கு வாழ்க்கை. அதற்குமேல் அவன் மனம் நாடவில்லை.

எஸ்விவி தமிழின் முக்கியமான பழங்கால நகைச்சுவை எழுத்தாளர். அவரது கதை ஒன்றில் கற்பனை வளம் கொண்ட டெப்டி கலெக்டர் தன் புதுமனைவியை குற்றாலத்துக்கு தேனிலவு கூட்டிச்செல்கிறான். ”குற்றால அருவியை நீ பார்க்கவேண்டும். அப்படி ஒரு அற்புதம்!” என்று பலமுறை கூறுகிறான்

கிராமத்து யதார்த்தவாதியான மனைவி குற்றலத்தில் இறங்கி அருவியைப் பார்த்ததுமே கேட்கிறாள் ”என்னமோ அற்புதம்னீகளே இங்கியும் தண்ணி மேலேருந்து கீழதானே விழுது?”

காகா காலேல்கர் இந்திய நதிகளையெல்லாம் சென்று கண்டு சிறந்த பயண அனுபவ நூலை எழுதியவர், தமிழில் அந்நூல் வந்துள்ளது.ஒருமுறை காகா காலேல்கர் ஜோக் அருவியைக் காண காந்தியை அழைத்தார். ‘இந்தியாவிலேயே உயரமான அருவி அது’ என்றார்.

‘நான் வானிலிருந்து விழும் அருவியை சிறுவயதிலேயே கண்டுவிட்டேன்’ என்றார் காந்தி.

உச்சப் படியில் நிற்பவன் யோகி. வாழ்க்கையையே ஒரு யோகசாதனையாக, தவமாக கொண்டவன். வாழ்க்கையை வாழ்க்கையாலேயே நிறைப்பவன்., அதன்பொருட்டு ஒருவாழ்க்கையை ஓராயிரம் வாழ்க்கையளவுக்கு விரிவாக்கிக் கொண்டவன். அவனுக்கும் கலையும் இலக்கியமும் தேவை இல்லை. காந்தி இலக்கியம் படித்தவரல்ல, இசை கேட்டவருமல்ல.

பிறருக்கு இலக்கியம் அவர்கள் வாழ்வின் இடைவெளிகளை ஓயாது நிரப்பியபடி பெய்யும் பெரும் பெருக்கு. வெற்றிடங்களை வானமே நிரப்புகிறது என்பது நம் ஞான மரபின் கூற்று. இலக்கியம் கற்பனையின் எல்லையில்லாத வானம். வானமே மழைக்கிறது. மண்ணை நிறைக்கிறது.

மழைதீண்டும் இடத்தையெல்லாம் காடாக்குகின்றன விதைகள்.

மானுடவாழ்வை இந்தப்புள்ளிவரை கொண்டுவந்துசேர்த்த விழுமியங்கள் எவையோ அவை கலைகளின் ஈரம்பட்டால் மீண்டும் மீண்டும் முளைக்கின்றன.

நான் மகத்தான இலக்கியவாதிகளைச் சந்தித்திருக்கிறேன், வைக்கம் முகமது பஷீரையும் டாக்டர் சிவராம காரந்தையும். முதிரா இளம் வயதில் அவர்களிடம் கேட்டேன். இலக்கியத்தின் சாரம் எது என.

நீதியுணர்வு என்றும் அறம் என்றும் அவர்கள் பதில் சொன்னார்கள்.

காட்டை நோக்கி இதன் சாரம் என்ன என்று கேட்டால் என்ன பதில் கிடைக்கும்? விதைகள் தான் காடுகளாயின. விதைகளுக்குள் உறங்கும் உயிரின் துடிப்பு காடாயிற்று.

மானுடனுக்குள் ஓர் ஆதிவல்லமை உறைகிறது. வாழ்வதற்கான இச்சையாக, வெல்வதற்கான முனைப்பாக, தாக்குபிடிப்பதற்கான திறனாக அது உருவம் கொள்கிறது. அதுவே அறங்களை உருவாக்கியது.

மனிதன் கல்லைக் கையிலெடுத்தான், ஆயுதங்களைக் கண்டுபிடித்தான். சக்கரம் கண்டுபிடித்தான், கருவிகளை உண்டுபண்ணினான்.ஆனால் அவன் உண்டுபண்ணிய மிகத்திறன் வாய்ந்த கருவி அறம்தான்.

நீதி கருணை சகோதரத்துவம் அன்பு பாசம் என்றெல்லாம் பலநூறு முகம் கொண்டு எழும் ஆதி உணர்வு அது. அதுதான் அவனை கூடிவாழச்செய்தது. சமூகமாக்க ஆக்கியது. அவனை விலங்குகளின் தலைமகனாக நிறுத்தியது.

தன் வாழ்க்கையை கற்பனை மூலம் பெருக்கிக் கொள்ளும் மனிதன் அதன் வழியாக அறத்தையே பெருக்கிக் கொள்கிறான். பேரிலக்கியங்கள் அனைத்தும் பெரும் அறப்பிரச்சார ஆக்கங்களே. எத்தனை சாதாரணமானதாக இருப்பினும் எல்லா கலைகளும் எல்லா இலக்கியங்களும் அறத்தைப்பற்றியே பேசுகின்றன

இருபது வருடங்களுக்கு முன் கேரள காந்தியவாதி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார், பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டு இந்தியாவை விட அன்றைய பிரிட்டன் பலமடங்கு மேம்பட்ட அற உணர்வு கொண்டிருந்தது. அதுவே அவர்களின் பலம்.

இந்திய சமூகத்தில் இல்லாமலைருந்த பொது நீதியை, பொது மரியாதைகளை, சமத்துவ எண்ணங்களை பிரிட்டிஷ் சமூகம் கொண்டிருந்தது. அவற்றை அது அன்றைய ஐரோப்பிய மறுமலர்ச்சியிலிருந்து பெற்றுக் கொண்டது. மாபெரும் பிரிட்டிஷ் கவிஞர்களிடமிருந்து அவற்றை அது கற்றது. ஷேக்ஸ்பியரும் ,கிறிஸ்தபர் மார்லோவும் , ஜான்சனும், எமிலி பிராண்டியும், டிக்கன்ஸ¤ம்தான் பிரிட்டிஷாரின் உண்மையான ஆயுதங்கள்.

கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல் முடியுமிடத்தில் ஒரு காட்சி. பிரிட்டிஷ் படைகள் கோபல்லகிராமத்தை தாக்குகின்றன. பற்பல கொள்ளைமுயற்சிகளை படையெடுப்புகளை தொடர்ந்து எதிர்கொண்டு தக்குப்பிடித்த கோபல்ல கிராமத்து மக்களுக்கு இவர்களை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியவில்லை.

அவர்கள் தங்கள் இனக்குழுவின் மூத்த மனிதரை கொண்டுவருகிறார்கள். முதுபாட்டியான தொட்டவ்வா நூற்றைம்பது வயதானவர். காது கேட்காது, கண் தெரியாது. மூத்து சுருங்கி ஒரு சிறு மரப்பாச்சி போல இருகிறார். அவரை தூக்கி வந்து சாவடியில் அமரச்செய்கிறார்கள்.

அவர்காதில் ஒருவர் கேள்வியை கத்துகிறார். தொட்டவ்வா பேசுவதை அவர் உரக்க பிறருக்குச் சொல்கிறார்

தொட்டவ்வா கேட்கிறார். பிரிட்டிஷார் சாதாரண மக்களை கொலைகொள்ளை செய்கிறார்களா? பெண்களை கற்பழிக்கிறார்களா? இல்லை என்று இவர்கள் சொல்கிறார்கள். அப்படியானால் நாம் அவர்களுடன் சேந்துகொள்வோம் என்கிறாள் தொட்டவ்வா. அதன் பின் கோபல்ல கிராமம் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டது இருநூறுவருடம் கழித்து சுதந்திரப்போராட்டத்தில்தான்.

இந்தியச் சமூகம் பிரிட்ட்டிஷாரை விரும்பி வணங்கி ஏற்றது என்பதே உண்மை. அவர்களை அது வழிபட்டது என்பதே நடைமுறை. பிரிட்டிஷாருக்கு எதிராக கலகம் செய்த சிப்பாய்கள் வேலூரிலும் சரி கான்பூரிலும் சரி மக்கள் ஆதரவை பெறவில்லை. கலகம் வெடித்த மறுநாளே அவர்கள் ஒன்றுமறியா அப்பாவிப் பொதுமக்களை சூறையாட ஆரம்பித்தனர். காரணம் எட்டு நூற்றாண்டாக அதுதான் இந்திய நடைமுறை. அதை கட்டுப்படுத்தியவர்கள் பிரிட்டிஷாரே. அச்சத்தால் அல்ல, அறத்தால் அவர்கள் இந்தியாவை வென்றார்கள்.

அதை காந்தி அறிந்திருந்தார். ஆகவே தான் அவர் பிரிட்டிஷாரைவிட மேம்பட்ட ஒரு தார்மீகத்தை உருவாக்கி அதை வைத்து அவர்களை எதிர்த்தார். அவர் ஏந்திய ஆகப்பெரிய ஆயுதம் அறமே.

இந்திய நவீன இலக்கியத்தின் ஆகச்சிறந்த படைப்பாளிகள் ஏறத்தாழ அத்தனைபேரும் காந்திய யுகத்தைச் சேர்ந்தவர்களே என்பது தற்செயலல்ல. அது அற எழுச்சியின் காலகட்டம்.

சுதந்திரத்திற்குப் பிறகு நாம் அதை இழந்துவிட்டோம். ஆகவே நாம் பலவீனமானோம்.

ஆனாலும் இந்தியா இன்றும் பேரறம் ஒன்று வாழும் மண்தான். இந்தியாவிற்குச் சுற்றும் உள்ள நாடுகளுடன் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும்போது அது துலங்கிவருகிறது. இன்னும் உயிர்ப்புள்ள மக்களாட்சி வாழும் மண் இது. இன்றும் எளிய குடிமகன் அடிப்படை நியாய உணர்வை இழக்காத மண் அது.

பதினைந்து வருடம் முன்பு ஒரு உயர்காவலதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்தியக் காவல்துறை அமைப்பு என்பது உண்மையில் ஒரு சம்பிரதாயம் மட்டுமே. ஏறத்தாழ இருபதாயிரம் பேருக்கு ஒருகாவலர் வீதம் இங்குள்ளனர். உண்மையில் இந்தியாவில் உள்ள அமைதி என்பது போலீஸ் நோக்கில் ஓர் ஆச்சரியம்

”இங்க பசிச்சவன் கிட்ட கருணையும் நியாயமும் இருக்கு சார்” என்றார் அந்த அதிகாரி. அதை எப்படி புரிந்துகொள்வது என்பதில் நீங்கள் வேறுபடலாம். ஓயாது இந்திய நிலத்தில் அலைபவன் என்றமுறையில் இந்த மண்ணின் ஒவ்வொரு துளியிலும் ஊறிக் கொண்டிருக்கும் கருணையை மீண்டும் மீண்டும் கண்டுகொண்டிருக்கிறேன். இந்திய நிலத்தில் எங்கும் முலைகனிந்த அன்னையரும் அகம் கனிந்த தந்தையரும் காணக்கிடைக்கின்றனர்.

அவர்களின் வாழ்வின் சாரமாக உள்ள அறம்தான் என் கற்பனையின் ஈரம் சென்று தொடும் விதை. என் பத்தொன்பது வயதில் அம்மா அப்பா இருவரும் இறந்தபின் கையில் ஒரு பைசா இல்லாமல் வீட்டைவிட்டு கிளம்பி அலைந்திருக்கிறேன். என் நாட்டில் நான் ஒருவேளைக்குமேல் பட்டினிகிடக்க நேரவில்லை. ஒரு அன்னையை நான் இழந்தேன் . பல அன்னை முகங்கள் எனக்கு சோறூட்டின. அந்த முகங்களை இப்போது என்னிப்பார்க்கிறேன். அவைதான் இந்தியாவின் முகம்.

இன்று என் நாடு சுரண்டப்பட்டு கிடக்கலாம். அச்சமும் கீழ்மையும் அங்கு நிலவலாம். ஆயினும் அதன் ஆத்மாவில் உறையும் அறம் என்றும் தோற்காது என்றே எண்ணுகிறேன்.

இலக்கியம் ஓயாது மானுடமனங்களை நோக்கி அறத்துக்காக அறைகூவிக் கொண்டிருக்கிறது. விதையுறங்கும் மண் மீது மழை பெய்தபடியே உள்ளது. இலக்கியம் வாழும் நாட்டில் அறம் அழியாது

உலக அங்கீகாரம் இல்லாமலிருக்கலாம், ஆனால் இந்திய இலக்கியம் உலகின் மிக வல்லமைவாய்ந்த படைப்புகள் செறிந்தது என நான் என் வாசிப்பில் அறிவேன். கபிலனும் ஔவையும் வான்மீகியும் வியாசனும் காளிதாசனும் கம்பனும் வாழ்ந்த மண்ணில் இன்றும் தாராசங்கர் பானர்ஜியும் , சிவராம காரந்தும் , அசோகமித்திரனும் உருவானபடித்தான் உள்ளனர்.

அந்த ஈரம் இருக்கும்வரை நாம் தோற்க மாட்டோம். நாம் வெல்வோம். வெறும் சொற்களாக அல்ல, ஒவ்வொரு சிறந்த ஆக்கத்தின் உச்சகணத்திலும் தெள்ளத்தெளிவாக நான் கண்முன் காணும் தரிசனம் இது.

***

ஒரு மகத்தான சீனக்கதை.

கொடுமையே உருவான ஜெங்கிஸ்கான் சீனா மீது படையெடுத்து சென்றான். குதிரைப்படையினர் துரத்த குழந்தைகளை அள்ளிக்கொண்டு ஓடும் பெண்களைக் கண்டான்.

இடையில் ஒருகுழந்தையை தூக்கி மூத்த குழந்தையை ஓடவிட்டு ஓடிய ஒரு தாயை அவன் கண்டான். ஓடிய குழந்தை காலிடறி விழுந்தது. இடையிலிருந்த குழந்தையை கைவிட்டு பெரிய குழந்தையை தூக்கிக் கொண்டு அவள் ஓடினாள்.

அவளை இழுத்துவரச்சொன்னான் ஜெங்கிஸ்கான்.

”நீ விட்டுவிட்டு ஓடியது உன் பக்கத்துவீட்டுப் பெண்ணின் குழந்தையைத்தானே ?உண்மையைச் சொல் ”என்றான் மன்னன் கத்திமுனையில்

”இல்லை அரசே. நான் விட்டுச் சென்றதுதான் என் குழந்தை. இது இறந்துபோன பக்கத்துவீட்டுக்காரியின் குழந்தை. அவளுக்கு நான் வாக்குறுதி அளித்திருந்தேன்.”என்றாள் அப்பெண். ” என் குழந்தை கடவுள் அளித்தது. இந்தக் குழந்தையை அளித்தது தர்மம் . கடவுளைவிட பெரியது தர்மம்”

”தாயே”என்று ஜெங்கிஸ்கான் தலைவணங்கினான் ”இந்த மண்ணை நான் ஒருபோதும் வெல்லமுடியாது” அவன் திரும்பிச் சென்றதாக கதை.

அறத்தைச் சொல்வதனாலேயே அழிவற்றதாகிறது சொல். பண்பாடு என்பது அழியாத சொற்களின் தொகையன்றி வேறென்ன?

[சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் சங்கம் 29-7-06 அன்று நடத்திய முத்தமிழ் விழாவில் ஆற்றிய உரை]

மறுபிரசுரம். முதற்பிரசுரம் Sep 5, 2006 

முந்தைய கட்டுரைநத்தையை எதிர்கொள்வது…
அடுத்த கட்டுரைகருத்தியல், கருணை, பெண்மை