‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 14

பகுதி மூன்று : புயலின் தொட்டில்

[ 4 ]

காந்தாரநகரியில் இருந்து கிளம்பிய தூதுப்புறா புருஷபுரத்தில் அரண்மனை உள்முற்றத்தில் காலைநேர பயிற்சிக்குப்பின் குளியலுக்காக அமர்ந்திருந்த சகுனியின் முன் சென்றமர்ந்தது. தன் சிறிய கண்களை நிழல்பட்டுமறைந்த செம்மணிகள் போல மூடித்திறந்து தலைசரித்து குக் குக் என்றது. சுஃப்ரை என்னும் அந்தப் புறா முதன்மையான செய்தி இல்லையேல் வராது என்றறிந்த சகுனி எழுந்து அதை அருகே வரவழைக்கும் குறியொலியை எழுப்பி, அதைப் பிடித்து அதன் கால்களில் மெல்லிய தவளைத்தோல் சுருளில் மந்தண எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த செய்தியை வாசித்தான்.

பீஷ்மரின் தூதையும் அதன் நோக்கத்தையும் அவன் தம்பி விருஷகன் எழுதியிருந்தான். சகுனி அந்தத் தோல்சுருளை முதலில் இருந்து இறுதி வரி வரைக்கும் இறுதியிலிருந்து முதல்வரி வரைக்கும் மும்முறை வாசித்துவிட்டு தன்னருகே எரிந்துகொண்டிருந்த நெருப்பில் போட்டான். தன் உடலெங்கும் அப்யங்கத்துக்காக மருத்துவர் பூசியிருந்த மலைப்பாம்பின் நெய்யுடன் குளிக்கச்சென்றான்.

அதிகந்தப்புல் போட்டு கொதிக்கச்செய்த நீரில் அவனை சேவகர் நீராட்டுகையில் அவன் உடலை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சிந்தனையில் மூழ்கி இருந்தான். மானிறைச்சியும் பாலும் உண்டபின் கூந்தலை குதிரைவால் வலையால் மூடிக்கட்டி மான்தோல் அந்தரீயமும் பட்டுச்சால்வையும் அணிந்து குதிரைமேல் ஏறிக்கொண்டான். ஒற்றைச்சொல்லில் ‘காந்தாரநகரிக்கு’ என்றபின் விரைந்தான்.

அவனைத் தொடர்ந்து சென்ற அவனுடைய களத்தோழனான சுஜலன் சகுனி நிலையழிந்திருப்பதை உணர்ந்துகொண்டான். புரவியில் நிமிர்ந்து அமர்ந்து கண்களில் தொடுவானின் ஒளியுடன் அவன் சென்றுகொண்டிருந்தான். பாலைப்பொழில்களில் ஓய்வெடுக்க கண்களை மூடிக்கொண்டு படுத்திருக்கையில்கூட அவன் தாடை இறுகி இறுகி மீள்வதை சுஜலன் கவனித்தான்.

ஆறுநாட்களுக்கு முன்புதான் மகதத்தில் இருந்து குதிரைச்சவுக்கு வந்தசெய்தி புருஷபுரியின் தசவிருட்சத்துக்கு வந்து சேர்ந்தது. அதை தூதன் சகுனியிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது சுஜலன் சற்று அப்பால் நின்று கவனித்துக்கொண்டிருந்தான். தூதன் சென்றதும் அருகே சென்று சகுனியின் சொற்களை எதிர்பார்த்து நின்றான். சகுனி தூதனிடம் என்ன செய்தியென சுஜலனிடமும் சொல்லும்படி சொல்லிவிட்டு குடிலுக்குள் சென்றுவிட்டான்.

அச்செய்தியைக் கேட்டதுமே சுஜலனுக்கு அச்சம்தான் எழுந்தது. அவனுக்கு மகதத்தின் வல்லமையைப்பற்றிய புரிதலோ காந்தாரத்துடனான ஒப்பீடோ இருக்கவில்லை. ஆனால் அச்சம் கருமேகம் போல அவன் நெஞ்சை அடைத்துக்கொண்டது. அது ஏன் என்றும் தெரியவில்லை. சகுனியையே கவனித்துக்கொண்டிருந்தான். அன்று முதல் சகுனியிடம் இறுக்கமான அமைதி பரவியிருந்தது. அவன் உடலின் எடை பலமடங்கு அதிகரித்திருப்பதுபோல, அவன் சருமம் காய்ச்சலால் தகித்துக்கொண்டிருப்பதுபோலத் தோன்றியது.

காந்தாரபுரியை நெருங்க ஒரு பகல் எஞ்சியிருக்கும் தொலைவில் அவர்கள் காலகம் என்னும் சிறு பாலைப்பொழிலில் தங்கினார்கள். சகுனி அங்கே மல்லாந்து படுத்திருந்தபோது அவனுக்குமேல் நிழல்விரித்து நின்றிருந்த ஸாமி மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த பருந்து ஒன்றைப் பார்த்தான். பொருளாக மாறாத சொல்லோட்டங்களாக தன் உள்ளத்தை உணர்ந்தவனாக அதைப் பார்த்துக்கொண்டிருந்தான். சுஜலன் வந்து புரவிகள் ஒருங்கிவிட்டன என்று சொன்னதும் எழுந்து தன் சால்வையை இழுத்து தோள்மேல் போட்டுக்கொண்டு வில்லை எடுத்தான். மேலிருந்து எழுந்த பருந்து சிறகடித்தபடி ஒளிர்ந்துகொண்டிருந்த வானில் ஏறிச்சுழன்றது.

ஏதோ எண்ணத்தில் அதை நோக்கிக்கொண்டிருந்த சகுனி தன் வில்லை வளைத்து நாணில் அம்பேற்றி அதைக் குறிவைத்து எய்தான். வானில் நிலையழிந்து சிறகடித்த பருந்து கீழிறங்கி மேலும் சிறகடித்து பின் காற்றால் அள்ளப்பட்டு கிழக்காகக் கொண்டுசெல்லப்பட்டு வான் வளைவில் சரிந்து மறைந்தது. அக்கணம் வரை அவனில் இருந்த அனைத்து அமைதியின்மைகளும் மறைய சகுனி புன்னகை செய்தான். சால்வையை சரிசெய்தபடி சென்று புரவியில் ஏறிக்கொண்டு அதன் விலாவை கால்களால் தட்டி விசையுறச்செய்து புழுதிக்கடலாகக் கிடந்த பாலைநிலம் வழியாக பாய்ந்து சென்றான்.

VENMURASU_EPI_64
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

புறப்பட்டு நான்கு நாட்களுக்குப்பின் சகுனி காந்தாரநகரியை அடைந்தான். கோட்டை வாயிலில் அவனை எதிர்கொண்ட அமைச்சர் சத்யவிரதர் அவனருகே வந்து பணிந்து அவன் சொல் காத்து நின்றார். அவன் விழிகளால் வினவியதும் பீஷ்மரின் தூது வந்ததைச் சொன்னார். “விழியிழந்தவருக்கு மணக்கொடை கேட்டு வந்ததை மாமன்னர் ஓர் அவமதிப்பாகவே எண்ணுகிறார். உடனடியாக பீஷ்மரை திரும்பும்படி சொல்ல ஆணையிட்டார். மூத்த இளவரசரும் சினம் கொண்டிருக்கிறார். இளையவர்தான் அவர்களிருவரையும் தடுத்து தங்கள் ஆணைக்குப்பின் முடிவெடுக்கலாமெனச் சொன்னார்” என்றார்.

சகுனி “அந்தச் சவுக்கு எங்குள்ளது?” என்றான். அந்த வினாவினால் முதலில் திகைப்புடன் நோக்கிய சத்யவிரதர் மெல்ல “அதை அழித்துவிடும்படி மன்னர் சொன்னார்” என்றார். சகுனியின் கண்களில் ஏதும் தெரியாததனால் “அதை உடனே நம் வீரர்கள் அழித்துவிட்டனர்” என்று மேலும் தணிந்த குரலில் சொல்லி “அதை தங்களுக்கு அறிவிக்கலாகாது என ஆணை” என்றார்.

சகுனி கைகாட்டி “அது எரிக்கப்பட்ட இடத்தை எனக்குக் காட்டும்” என்றான். “இதோ விசாரித்துச் சொல்கிறேன்” என்று சத்யவிரதர் சொல்லி “தாங்கள் அரண்மனையில் இளைப்பாறுகையில்…” என்று இழுத்தார். சகுனி “நான் முதலில் பார்க்கவிரும்புவது அதைத்தான்’ என்றான்.

சத்யவிரதர் திரும்பி குதிரையில் பாய்ந்துசென்றார். சகுனி அரண்மனையை அடையும்போது அவர் மீண்டும் அவனை அணுகி “இளவரசே, அரண்மனையின் குப்பைகளை எரிக்கும் குழி தென்கிழக்கு மூலையில் அடுமடைகளுக்கு அப்பால் உள்ளது. அங்கே தேடிப்பார்க்க நான்கு வீரர்கள்…” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலேயே சகுனி புரவியைத் திருப்பிவிட்டான். ஒருவரை ஒருவர் விழிகளால் சந்தித்தபின் அவனுக்குப்பின்னால் சத்யவிரதரும் சுஜலனும் சென்றனர்.

அரண்மனையின் ஏழு அடுமடைகள் வரிசையாக அங்கே இருந்தன. உயரமான மரக்கூரை போடப்பட்ட கட்டடங்களுக்குமேல் செங்கல்லால் ஆன புகைகுழாய்கள் கசிந்துகொண்டிருந்தன. மதிய உணவுமுடிந்த நேரமாதலால் மடைவலர் துயின்றுகொண்டிருக்க அப்பகுதியே அமைதியாக இருந்தது. மையச்சாலைக்கு பின்னாலிருந்து சென்ற பாதை பின்பக்கம் உள்கோட்டைச் சுவரின் அருகே விரிந்திருந்த எரிகுழிக்குச் சென்றது.

எரிகுழியில் காலைநேரக்குப்பைகள் அனலாகக் குமுறி தழலின்றி எரிந்துகொண்டிருந்தன. அங்கே காற்று குவிந்து வீசும்படி கோட்டைவாயிலும் சுவர்களும் அமைக்கப்பட்டிருந்தமையால் புகையும் கரிச்சுருள்களும் மேலெழுந்து தென்கிழக்குத்திசையில் பறந்து அப்பால்சென்றன. காற்று வலுத்து வீசியபோது புகை அடங்கி வெங்காற்றில் கரித்திவலைகள் எழுந்து சுழன்றுசென்றன. மெல்லிய குரலில் “எரித்து எட்டுநாட்களாகின்றன இளவரசே” என்றார் சத்யவிரதர்.

குதிரையை நிறுத்தி இறங்கியபடி “அதில் ஒரு கழியைவிட்டு தேடச்சொல்லுங்கள்” என்று சகுனி ஆணையிட்டான். “அதன்மேல் மேலும் பல மடங்கு குப்பைகள் போடப்பட்டு எரிக்கப்பட்டிருக்கின்றன இளவரசே” என்று சொன்ன சத்யவிரதர் சகுனியின் விழிகளைப்பார்த்தபின் தலைவணங்கி நான்குசேவகர்களை வரவழைத்து அந்தக்குழியை துழாவச்சொன்னார்.

எரிந்து அடங்கி சாம்பலடுக்குகளாகவும் கரிவடிவுகளாகவும் எஞ்சிய இலைச்சருகுகளையும் தொன்னைகளையும் கழிகள் கிண்டியும் துழாவியும் புரட்டியபோது இறந்த கருநாகம்போல அதில் அந்த சவுக்கு சிக்கிக்கொண்டதை நம்பமுடியாதவராகப் பார்த்தபடி சத்யவிரதர் சகுனியிடமிருந்து சற்று பின்னடைந்து நின்றார். “அதை எடு” என்று சகுனி சொன்னான்.

சேவகன் “இளவரசே, இதை தழலாடிய நெருப்பில் நானேதான் வீசினேன். இது தழலுக்குள் கிடந்து எரிந்து நெளிவதை கண்டபின்னர்தான் நான் விலகிச்சென்றேன்…” என்றான். சகுனி சைகையால் அவனைத் தடுத்து அதை எடுக்கும்படி சொன்னான். கரையில் எடுத்துப்போடப்பட்ட சவுக்கு மேல் குடத்தில் நீர் கொண்டுவந்து விட்டபோது சாம்பல்பூச்சு கரைய அது கருமையாக பளபளத்தது.

சகுனி குதிகால்களில் அமர்ந்து குனிந்து அதைப்பார்த்தான். பின்பு மெல்ல கையால் அதைத் தொட்டான். அவன் விரல்கள் அதன் தோல்பட்டையில் நீவிச்சென்றன. அது தோல்தானா என்று சத்தியவிரதர் பார்த்தார். தோல்போலத்தான் தெரிந்தது. ஆனால் அந்த வெம்மை அதை ஒன்றுமே செய்யவில்லை. சற்று புதுப்பித்திருந்தது என்றுகூட பட்டது.

சகுனி அதை கையில் எடுத்து இலேசாகச் சுழற்றினான். அவனை நக்க விரும்புவதுபோல அதன் நுனி வளைந்து அவன் கையை அடைந்தது. அதைப்பற்றி சாட்டையைச் சுற்றி சுருட்டி எடுத்துக்கொண்டு திரும்பி தன் குதிரையில் ஏறிக்கொண்டான். குதிரை குளம்படிகள் கட்டடச்சுவர்களில் எதிரொலித்துப் பின்னால் தொடர அவன் விரைந்தான்.

அவன் பின்னால்சென்ற சுஜலன் சகுனி ஒரு சொல் கூட சொல்லாமல் குதிரையை நிறுத்திவிட்டு இறங்கி தன் மாளிகைக்குள் சென்றதைப் பார்த்து சற்றுநேரம் நின்றுவிட்டு சத்யவிரதரிடம் “இங்கே எப்போதும் அமைச்சகத்தில் இருந்து எவரேனும் காத்து நிற்கட்டும் சத்யவிரதரே. எந்தத் தகவலென்றாலும் எனக்குத் தெரிவியுங்கள்” என்றான்.

அந்தியில் வெளிவந்த சகுனி வெண்பட்டாடையும் மணிக்குண்டலங்களும் வைரஆரமும் அணிந்திருந்தான். அவனுக்காகக் காத்திருந்த ரதத்தில் ஏறி பந்தங்களின் ஒளியில் தீப்பிடித்த புதர்க்காடு போலத் தெரிந்த காந்தாரநகரியின் சாலை வழியாகச் சென்றான். இருள் மறைந்ததுமே காந்தாரத்தின் விரிநிலமெங்கும் வானில்இருந்து குளிர் இறங்கத்தொடங்கும் என்பதனால் நகரம் வேகமாக ஒலியடங்கிக்கொண்டிருந்தது. வணிகக்கூடாரங்களின் மேல் காற்று அலையடித்துக்கொண்டிருந்தது.

செதுக்கப்பபட்ட சேற்றுப்பாறைகளை அடுக்கிக் கட்டப்பட்ட உள்கோட்டைவாயிலுக்கு அப்பால் அரண்மனை மாளிகைகளின் தொகை சாளரங்கள் அனைத்தும் தீபங்கள் ஒளிர சிறியதோர் நகரம்போல அத்திசையை மறைத்துப் பரவியிருந்தது. வடக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த அரண்மனைப்பகுதியிலிருந்து யானைகளும் கழுதைகளும் பணிமுடிந்து திரும்பும் ஒலி கேட்டது.

அரண்மனை முற்றத்தில் ரதம் நின்றதும் முறைப்படி முகமன் சொல்லி சகுனியை எதிர்கொண்ட சத்யவிரதர். “மாமன்னர் மந்திரசாலையில் இருக்கிறார் இளவரசே. பீஷ்மரையும் அவரது அமைச்சரையும் தாங்கள் இன்றிரவு சந்திக்கவிருக்கிறீர்கள். அதற்குள் தங்களுடனான மந்திராலோசனை நிகழவேண்டுமென்று இளையவர் சொன்னார்” என்றார். சகுனி தலையசைத்து நடந்தான்.

“இன்னும் ஒருநாழிகையில் தட்சிண மண்டபத்திற்கு பீஷ்மர் வருவார்… அவருக்கு செய்திசென்றிருக்கிறது” என்று சத்யவிரதர் அவனைத் தொடர்ந்து வந்தபடி சொன்னார். “இன்றே ஒரு முடிவை அவர் எதிர்பார்ப்பார் என்று தெரிகிறது.”

மந்திரசாலையில் சுபலர் முன்னதாகவே வந்து பீடத்தில் அமர்ந்திருந்தார். ஏற்கனவே அவர் சிறிது மது அருந்தியிருந்ததை அவரது வாயின் கோணலைக் கண்டதுமே சகுனி ஊகித்தான். அசலன் தந்தையின் அருகே கைகளைக் கட்டியபடி நிற்க வாயிலில் விருஷகன் சகுனிக்காகக் காத்து நின்றிருந்தான். சகுனி உள்ளே வந்ததும் விருஷகன் சைகை காட்ட கதவு மூடப்பட்டது. “மூத்தவரே, தங்கள் வருகைக்குப்பின் முறையான ஆலோசனைகள் நிகழுமென பீஷ்மரிடம் சொல்லியிருந்தோம். இன்றிரவே அவருக்கு நாம் முடிவைச் சொல்லிவிடவேண்டும். ஏனென்றால் நீண்ட ஆலோசனையே அவமதிப்பாக கொள்ளப்படலாம்” என்றான்.

சகுனி சென்று தந்தையையும் தமையனையும் வணங்கி பீடத்தில் அமர்ந்துகொண்டான். அவன் பேசத்தொடங்குவதற்குள்ளேயே சுபலர் உரக்க “நீ என்ன சொல்லப்போகிறாய் என எனக்குத் தெரியாது. என் எண்ணத்தைச் சொல்லிவிடுகிறேன். இப்படி ஒரு மணத்தூது வந்ததே எனக்கும் என் குலத்துக்கும் அவமதிப்பு. விழியிழந்தவனுக்கு வேறு ஷத்ரியகுலங்கள் பெண்ணளிக்கப் போவதில்லை என்பதனால்தான் அவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்…” என்றார்.

விருஷகன் “தந்தையே, அது உண்மை. ஆனால் அஸ்தினபுரிக்கு அப்படி முற்றிலும் பெண் கிடைக்காமலும் போய்விடாது. பாரதவர்ஷத்தில் சிறிய அரசுகள் பல உள்ளன. கூர்ஜரத்தருகே புதியதாக உருவாகிவந்திருக்கும் யாதவ அரசுகளும் தெற்கே வேசரத்தில் தண்டக அரசுகளும் உள்ளன” என்றான். “அவர்கள் தகுந்த காரணத்துடன் மட்டும்தான் நம்மிடம் வந்திருக்கிறார்கள்…”

பொறுமையிழந்த அசலன் “தம்பி, இந்த சூழ்ச்சிகளை எல்லாம் நாம் ஏன் பேசவேண்டும்? நம் இளவரசியை நாம் ஒருபோதும் விழியிழந்த ஒருவனுக்கு அளிக்கப்போவதில்லை” என்றான். “விழியிழந்தவனுக்கு மனைவியாவதென்பதை குரூபிகூட விரும்பமாட்டாள். பாரதவர்ஷத்தின் பேரழகிகளில் ஒருத்தியான என் தங்கை அதை எண்ணிக்கூடப் பார்க்கமுடியாது…”

“மூத்தவரே, அரசகுல மணம் என்பது எப்போதும் அரசியல்நிகழ்வு மட்டுமே” என்று விருஷகன் சொன்னான். “இந்த மணம் நம் அரசுக்கு எவ்வகையில் நலம்செய்யும் என்று மட்டுமே நான் எண்ணுகிறேன். இதை மறுத்துவிட்டு நாம் எங்குசென்று இளவரசிக்கு மணமகனைத் தேடப்போகிறோம்? இன்று முளைவிட்டுக்கொண்டிருக்கும் ஏதேனும் சிற்றரசக்குலங்கள் நம் செல்வத்தையும் படைபலத்தையும் கண்டு நம்முடன் மணவுறவுக்கு வரக்கூடும். நம்மருகே அரியணை இட்டு அமரத் தகுதியற்றவர்களை நாம் பட்டத்து யானையை அனுப்பி வரவேற்க வேண்டியிருக்கும்.”

“ஆம், ஆனால் விழியிழந்த ஒருவனை…” என்று அசலன் தொடங்குவதற்குள்ளாகவே விருஷகன் உரக்க “மீண்டும் மீண்டும் அதைச் சொல்லாதீர் மூத்தவரே. விழியில்லை என்பதல்ல இங்கே வினா. அவரால் நாடாளமுடியுமா, நாடாள அங்கே நெறிநூல் அனுமதி உண்டா என்பது மட்டும்தான்.” அவனுடைய வேகத்தை சகுனி பொருள் ஏதும் வெளித்துலங்காத விழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

விருஷகன் “நான் அதைப்பற்றி பலபத்ரரிடம் விரிவாகவே பேசினேன். நூல்நெறிகளில் விழியிழந்தோன் அரசனாக முடியாதென்று எங்கும் சொல்லப்படவில்லை. அஸ்தினபுரியின் இளவரசன் பெருவீரன் என்கிறார்கள். அவனுடைய அமைச்சனாகப் பணியாற்றப்போகும் அவனுடைய தம்பியாகிய ஒரு சூதன் அஸ்தினபுரியின் மாபெரும் அரசியல் அறிஞன் என்று சூதர்குலமே கொண்டாடுகிறது. ஐயமே தேவையில்லை தந்தையே, இன்னும் ஒரு தலைமுறைக்காலம் அஸ்தினபுரியே ஆரியவர்த்தத்தை ஆளும்.”

தந்தையின் தயங்கிய விழிகளைப் பார்த்துவிட்டு விருஷகன் தொடர்ந்தான். “தந்தையே தாங்கள் தயங்குவது ஏனென்று நான் நன்கறிவேன். நம்மை ஷத்ரியர் எள்ளி நகையாடுவர் என்று எண்ணுகிறீர்கள். ஆம், எள்ளிநகையாடுவர். ஏனென்றால் அவர்கள் எப்போதும் அதையே செய்துகொண்டிருக்கிறார்கள். துர்வசு அடைந்த அவமதிப்பின் சுமை நம் மீது என்றும் இருந்துகொண்டிருக்கிறது. சிந்துக்கரையின் மீனவமன்னர்களிடமோ இமயச்சரிவின் வேடர்மன்னர்களிடமோ நாம் மண உறவுகொண்டால் மட்டும் அந்த இளிவரல் இல்லாமலாகிவிடுமா என்ன?”

“ஆம் அது உண்மை” என சுபலர் பெருமூச்சுவிட்டார். “ஆனால் அஸ்தினபுரியிடம் நாம் மணம்கொண்டால் நம்மை அந்த ஷத்ரியர் அஞ்சுவார்கள். அந்த இளிவரல் அவர்களின் அவைக்களத்தில் இருந்து வெளிவராது” என்று விருஷகன் சொன்னான். “அவமதிப்புக்கு பதில் என்றும் அச்சமேயாகும்.”

சுபலர் சகுனியிடம் “நீ என்ன நினைக்கிறாய்?” என்றார். “நான் பீஷ்மரிடம் பேசியபின்னரே அதைப்பற்றிச் சொல்லமுடியும். என் எண்ணங்கள் இன்னும் முழுமைகொள்ளவில்லை” என்று சகுனி சொன்னான். சுபலர் “அவரை இங்கு இரவுணவுக்கு வரச்சொல்லியிருக்கிறேன். அவருக்காக காந்தாரத்தின் அஹிபீனா கலந்த மது கொண்டு வரச்சொன்னேன்” என்றார். சகுனி தலையசைத்தான்.

பீஷ்மர் வந்து தட்சிண மண்டபத்தில் காத்திருப்பதை சத்யவிரதர் வந்து சொன்னதும் சுபலர் எழுந்து “நல்ல மது அவரை மகிழ்விக்கும்” என்று சொல்லி நடந்தார். அசலனும் அவர் பின்னால் நடக்க விருஷகன் பின்னால் தங்கி சகுனி அருகே நின்றான். சகுனி எழுந்ததும் மெல்லியகுரலில் “பீஷ்மரை நான் மூன்றுமுறை சந்தித்து உரையாடினேன் மூத்தவரே. அவர் பெரிய அரசியல் சூழ்ச்சியாளர் அல்ல. மலைக்கங்கர்களின் எளிமை அவரிடம் உள்ளது…” என்றபின் சற்று தயங்கினான்.

“சொல்” என்றான் சகுனி. “அவரிடம் நாம் எண்ணமுடியாத ஒன்றுள்ளது… அவர் நம்மை அவருடைய சிந்தனைகளை நோக்கி வலுவாக ஈர்க்கிறார். அவர் குறைவாகவே பேசுகிறார். ஆனால் அவரது சொற்களை நம்முள் ஆழமாகவே விதைத்துச்செல்கிறார். அது ஏன் என்று நான் பலவாறாக எண்ணிப்பார்த்தேன். நேற்றுதான் எனக்கு ஒரு விடை கிடைத்தது.”

சகுனி சொல் என்பதுபோலப் பார்த்தான். “அவர் நம்மை அவரது மைந்தர்களாக உணரச்செய்கிறார். அவரது அமைச்சர் அஸ்தினபுரியில் அவரை படைவீரர்களும் பிதாமகரே என்றுதான் அழைக்கிறார்கள் என்றார்” என்ற விருஷகன் சற்றே சிரித்து “அவரது தந்தையேகூட அவரை அப்படித்தான் உணர்ந்ததாக சூதர்கள் பாடுகிறார்கள்” என்றான்.

சகுனி புன்னகைசெய்யவில்லை. அவன் நடந்தபோது “அவரைப்பார்க்கையில் தன்னை வீரனென்று எண்ணும் ஒவ்வொருவரும் தான் தேடும் தந்தைவடிவம் அவரே என்று உணர்வார்கள்” என்று சொன்னபடி விருஷகன் பின்னால் வந்தான். “அவர் வரும்போது நானும் ஒரு மூத்தவரைப்போல விழியிழந்த மைந்தனுக்காக வந்திருக்கிறார், அவரது சொற்களை நான் தாயக்கட்டைகளைப்போல உருட்டி விளையாடலாம் என்றுதான் எண்ணினேன். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் நான் அவரைப்போல எண்ணத் தொடங்கினேன்.”

தட்சிண மண்டபத்தை அடைந்ததும் சகுனி மெல்லியகுரலில் “இளையவனே, மகதனின் அந்த குதிரைச்சவுக்கு என் அறையில்தான் உள்ளது” என்றான். விருஷகன் திகைத்து நின்றபின் “மூத்தவரே” என ஏதோ சொல்லத்தொடங்க சகுனி “அது அவ்வளவு எளிதாக அழியாது” என்றபின் உள்ளே சென்றான். சிலகணங்கள் என்ன செய்வதென்றறியாமல் நின்றபின் விருஷகனும் தொடர்ந்தான்.

மண்டபத்துள் நுழைந்து அங்கே பீடத்தில் அமர்ந்திருந்த பீஷ்மரிடம் முகமன் சொல்லி வணங்கிவிட்டு சகுனி அமர்ந்துகொண்டான். காந்தாரத்தினர் உயரமானவர்கள் என்றாலும் அவரது உயரம் கொண்ட எவரையும் அவன் கண்டதில்லை.  வெண்மைகலந்து விரிந்த அவரது தாடியும் எளிய தோல்பட்டையால் கட்டப்பட்ட கூந்தலும் செவ்வெண்ணிறமும் யவன மூக்கும் அவரை கங்கைக்கரை ஷத்ரியர்களிடமிருந்து விலக்கிக் காட்டின.

சுபலரும் அசலனும் வந்ததுமே மதுக்கிண்ணங்களை கையில் எடுத்திருந்தனர். பீஷ்மர் மதுவை அருந்தும் பாவனையே காட்டுகிறார் என்பதைக்கூட அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை. தன்னை நோக்கிய பீஷ்மரின் விழிகளை சகுனியின் விழிகள் எதிர்கொண்டன. பேச்சுவார்த்தைகளின்போது எச்சரிக்கைக்காக கண்களில் சலிப்புற்று உள்வாங்கிய பாவனை ஒன்றை அணிந்துகொள்வதை பயின்றிருந்த சகுனி அவரது கண்களில் தன்னை கூர்ந்தறியும் முயற்சியே இல்லை என்பதைக் கண்டான். அது அவனை குழப்பியது. அவரது அந்தநோக்கு ஒரு தேர்ந்த பயிற்சியின் விளைவோ என்று அவன் எண்ணினான். வழக்கமான முகமன்களையும் துதிகளையும் சொல்லிக்கொண்டு மீண்டும் மீண்டும் அவரது விழிகளையே சந்தித்து அதை கூர்ந்துகொண்டிருந்தான்.

பின்பு அவன் அவரைப் புரிந்துகொண்டான். தன் பெருவல்லமையை அறிந்தமையால் எதிரியின் வலிமையை எடைபோடாமலிருக்கும் மல்லனைப்போன்றவர் அவர் என்று நினைத்துக்கொண்டான். ஆகவே பீஷ்மர் அவனிடம் நேரடியாக “சுபலரும் அசலரும் தங்கள் சொல்லையே முதன்மையாக எண்ணுகிறார்கள் சகுனிதேவரே. ஆகவே நானும் உங்கள் சொல்லை எதிர்நோக்குகிறேன்” என்றபோது அவன் வியப்புறவில்லை. மெல்லிய புன்னகையுடன் “நான் எளியவன்… என் தந்தை என்மேல் அன்புகொண்டிருக்கிறார்” என்று மட்டும் சொன்னான்.

பீஷ்மர் “தாங்கள் அறியாத எதையும் நான் சொல்லப்போவதில்லை இளவரசே. அஸ்தினபுரி இன்று பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளில் தலையாயது. அதனாலேயே நாங்கள் சூழப்பட்டிருக்கிறோம். எங்கள் மன்னன் விழியிழந்தவன். நானோ முதியவன். தாங்கள் வல்லவர். எங்களுக்கு படையும் செல்வமும் உறவும் கொண்ட காந்தாரம் போன்ற நாட்டின் மணம் பெரும் நன்மை பயக்கும். அதேபோன்று காந்தாரத்துக்கும் அஸ்தினபுரி வலிமைசேர்க்கும்” என்றார்.

சகுனி மெல்ல அசைந்தான். அவனையறியாமலேயே வெளிப்பட்ட அவ்வசைவின் மூலம் அவன் அகம் பீஷ்மருக்குத் தெரிந்தது என்பதை உடனே அவன் உணர்ந்துகொண்டான். விழியிழந்த மன்னன், முதிய தளபதி, நீ வல்லவன் என்னும் மூன்று சொற்சேர்க்கைகளையும் அவன் அகம் இணைத்து அறிந்துகொண்டது என அவர் அறிந்ததை அவன் உணர்ந்தான்.

அவன் கேட்டவற்றிலேயே மிகநுணுக்கமான அரசியல் சூழ்மொழி அது. அச்சொற்களை அவர் திறமையாக அருகருகே அமைத்தாரா என்ற எண்ணம் எழுந்தது. எளிய மலைக்கங்கரால் அவ்வாறு மொழியை கையாள முடியுமா என்ன? ஒருவேளை அவரது இயல்பான மொழியே அவ்வாறானதாக இருக்கலாம். வாழ்நாளில் முதல்முறையாக சகுனி ஒரு மனிதரை அஞ்சினான்.

பீஷ்மர் அவனை நேரடியாக நோக்கி “நாங்கள் மகதத்தை அஞ்சுகிறோம் என்பது அனைவருமறிந்ததே. பழமையான ஷத்ரிய நாடான மகதம் கங்கையின் அனைத்துப்படகுகளிலும் சுங்கம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. மகதத்தை வெல்லாமல் நாங்கள் கங்கைக்கரை வணிகத்தை தொடரமுடியாது. காந்தாரத்தின் உதவியுடன் மகதத்தை வென்றால் அது காந்தாரத்தின் வணிகத்துக்கும் உகந்ததே” என்றார்.

அவர் சூழ்ந்து சொல்லாற்றவில்லை, இயல்பாகவே வந்து சேர்ந்த சொற்களையே சொல்கிறார் என்றும், ஆனால் விருஷகன் சொன்னது போல அவனை அவர் தன் சொற்களை நோக்கி கொண்டுசென்றுவிட்டார் என்றும் சகுனி அறிந்தான்.

“திருதராஷ்டிரனைப்பற்றி இளவரசிக்கு தயக்கமிருக்கக்கூடும்” என்று பீஷ்மர் சொன்னார். “அவள் வயிற்றில் பிறக்கும் மைந்தன் பாரதவர்ஷத்தின் மாபெரும் சக்கரவர்த்தியாவான் என்று அவளிடம் சொல்லுங்கள். மாமனின் வில்லும் அவள் அளிக்கும் மணிமுடியும் ஐம்பத்தைந்து ஷத்ரியர்களையும் அந்த மைந்தன் முன் அடிபணியச்செய்யமுடியும்.” மீண்டும் ஓர் அழகிய சொல்லிணைவு. மாமனின் வில்லை முதலில் வைத்த கூர்மை. சகுனி புன்னகைசெய்தான்.

அவனுடைய புன்னகையைக் கண்டதும் விருஷகன் மேலும் விரிந்த புன்னகையுடன் “ஆம், அஸ்தினபுரியில் மூத்தவரின் வில் நிலைகொண்டால் பாரதமே அதை மையம் கொள்ளும்” என்றான். சுபலர் அசலனை நோக்கினார். அசலன் “தம்பி கூறும் முடிவையே இந்நாள்வரை இங்கே மேற்கொண்டிருக்கிறோம்” என்றான்.

சுபலர் தெளிவடைந்தவராக உடலை நெகிழச்செய்து பீடத்தின் கீழிருந்த காலை நன்றாக நீட்டியபடி “ஆம், அவன் அனைத்தையும் சூழ்பவன்” என்றார். “அவன் முடிவு காந்தாரத்தின் கொள்கை.”

“இனியமது” என்றார் பீஷ்மர். “அதன் வாசனை இளமையை மீட்டுக்கொண்டுவருகிறது.” அரசியல்பேச்சை அவர் இயல்பாகவும் அழகாகவும் முடித்துவிட்டார் என்பதை சகுனி உணர்ந்தான். மேற்கொண்டு பேசாமல் அம்முடிவை உறுதிசெய்ய விழைகிறார்.

சுபலர் சிரித்தபடி “ஆம், இளமையில் நாமறிந்த அனைத்துக் கன்னியரும் ஒன்றாகத்திரண்டு நம் முன் வந்துவிடுகிறார்கள்” என்றார். கையசைத்து அங்கே சுவர் அருகே நின்றிருந்த காதும்நாவுமற்ற சேவகனிடம் மதுவைப் பரிமாறும்படி சொன்னார். பீஷ்மர் கோப்பை நிறைய மதுவை வாங்கிக்கொண்டு சிரித்தபடி “அஹிபீனத்தில் கந்தர்வர்கள் வாழ்கிறார்கள்” என்றார்.

அனைத்து முகங்களிலும் புன்னகைகள் தெரிவதை சகுனி கண்டான். விருஷகன் “தமக்கையிடம் அந்தத் தயக்கமேதும் இல்லை பிதாமகரே. நான் தங்கள் தூதை அவளிடம் சொன்னேன். அவள் ஓவியம் வரைந்துகொண்டிருந்தாள். இளவரசருக்கு விழியில்லை என்றதும் அரசரின் விருப்பமே காந்தார அரசின் ஆணை என்று மலர்ந்த முகத்துடன் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்” என்றான். சுபலர் “ஆம், அவள் முற்றிலும் அரசமகள்” என்றார்.

சகுனி மெல்ல இருக்கையில் முன்னகர்ந்து “தம்பி, அவள் வரைந்த அந்த ஓவியம் என்ன?” என்றான். “மலைகள் என நினைக்கிறேன். வண்ணம்தீட்டத் தொடங்கியிருந்தாள். தெளிவாக இல்லை.” சகுனி “அந்த ஓவியத்தை அவள் முழுமைசெய்யவில்லையா?” என்றான். “இல்லை மூத்தவரே, அதை திரையிட்டு மூடிவிட்டாள்” என்றான் விருஷகன்.

சகுனி எழுந்து வணங்கி “அஸ்தினபுரியின் பிதாமகரே தங்கள் அடிபணிந்து விடைகொள்கிறேன். தங்கள் தூது காந்தாரத்துக்கு வந்த பெரும் வாய்ப்பு என்றே எண்ணுகிறேன். காந்தாரத்தை தங்கள் வருகைமூலம் கௌரவித்திருக்கிறீர்கள். ஆனால் என் தமக்கையின் உள்ளம் ஏற்காத எதையும் இந்நாடு செய்யாது” என்றான். விருஷகன் “மூத்தவரே தமக்கை…” என்று சொல்லவந்ததை கையமர்த்தி “நான் அவள் உள்ளத்தை அறிந்துகொண்டேன்” என்று சொன்னபின்பு பீஷ்மரை வணங்கிவிட்டு வெளியேறினான்.

முந்தைய கட்டுரைவலசைப்பறவை 5 : நீர்க்குமிழிகளின் வெளி
அடுத்த கட்டுரைபின்தொடரும் நிழலின் குரல்களைப்பற்றி…