«

»


Print this Post

சமணர் கழுவேற்றம்


1

 

அன்புள்ள ஜெயமோகன்

சமணர்களைப் பற்றி கொஞ்சம் பழைய கட்டுரை. 1929ல் வந்தது. வாசிப்பதற்கு கஷ்டம். ஆனால் உபயோகமானது

http://www.unarvukal.com/index.php?showtopic=11917

ஆனந்த்

 

அன்புள்ள  ஆனந்த்,

உபயோகமான இணைப்பு.

நான் எப்போதுமே இந்த சமணர் கழுவேற்றம் என்ற கருத்தை ஏற்றுக்கொள்பவன் அல்ல. அதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதே என்னுடைய எண்ணம். அது ஒரு நிரூபிக்கப்பட்ட வரலாற்றுத்தகவல் அல்ல, ஓரு தொன்மம் மட்டுமே. அதை அரசியல் காரணங்களுக்காக வரலாற்றுத்தகவலாக ஆக்குகிறார்கள்.

எந்த ஒரு வரலாற்றுத்தகவலுக்கும் அதை மறுக்கிறவர்களிடம் அதை நிரூபிக்க ஆதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும். ஆனால் தமிழக வரலாற்றில் பெரும்பாலான விஷயங்களைப்போலவே இதிலும் தொன்மம் அப்படியே வரலாறாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு சிறிய ஆராய்ச்சி கூடச் செய்யப்படவில்லை.

சமணர்கள் கழுவேற்றப்பட்டமைக்கு இருக்கும் ஆதாரம் என்பது சைவசமயப்பாடல்களுக்கு பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்பட்ட உரைக்குறிப்புகளில் சொல்லப்பட்டிருக்கும் தொன்மம் மட்டுமே. அந்தப்பாடல்களை எடுத்துப்பார்த்தால் சைவக்குரவர்களின் மூல வரிகளில் கழுவேற்றம் குறித்த தெளிவான குறிப்புகள் ஏதுமில்லை. சமணர்களை வாதில் வென்று அவமதிக்க வேண்டும் என்ற பிரார்த்தனை மட்டுமே உள்ளது.

கழுவேற்றம் நடந்த காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் போன்ற அக்காலத்தைய  ஆதாரங்கள் ஏதுமில்லை. மறுபக்கம் சமணர்களின் நூல்களில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்தமைக்கான சான்றுகள் இல்லை. சமணர்களின் தென்னகத்தலைநகரமான சிரவணபெளகொளாவில் உள்ள சமண ஆவணங்களில் ஏதேனும் சான்று உள்ளதா என இன்றுவரை எவரும் ஆராய்ந்ததில்லை.

அந்த தொன்மத்தை அப்படியே வரலாறாக எடுப்பதற்கான தடை என்ன? இச்சம்பவம் நடந்தபின்னரும் பல நூற்றாண்டுக்காலம் சமணர்கள் தமிழ்நாட்டில் மிக வலுவாக இருந்திருக்கிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில்கூட பாண்டியநாட்டில் அவர்கள் நிறையபேர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எங்குமே எதையுமே சொல்லவில்லை.

இரண்டாவதாக, இந்தக்கதையை நம்புவதாக இருந்தால் சைவக்குரவர்களை சமணர்கள் கொடூரமாக துன்புறுத்திய கதைகளையும் நம்பவேண்டும். சுண்ணாம்பு காளவாயில் அப்பரை போட்டதும் தந்திரங்கள் மூலம் சம்பந்தரை கொல்ல முயன்றதும், பதினாறாயிரம் சைவர்களை கொல்ல சதிசெய்ததும், கோயில்களை அழித்ததும் எல்லாம் உண்மையாகிவிடும்.  இந்தியாவில் எங்குமே சமணம் அப்படி நடந்துகொண்டது என்பதற்கான ஒரு சான்றுகூட இல்லை. அப்படி சமணத்தை அவதூறு செய்ய எவருக்குமே உரிமை இல்லை.

மூன்றாவதாக, சமணர்களுக்கும் சைவர்களுக்கும் நடந்த விவாதத்தில் ஏடுகளை நீரிலும் தீயிலும் போட்டுத்தான் எது புனிதமானது என நிரூபித்தார்கள் என்று நம்ப வேண்டியிருக்கும். பகுத்தறிவாலார் அபப்டி நினைக்கிறார்கள், எனக்கு அது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது.

சமணமும் சைவமும் தத்துவ மோதல்களில் ஈடுபட்டது ஏழாம் நூற்றாண்டுக் காலத்தில். சைவம் பெரிய இயக்கமாக வளர்ந்தது மேலும் மூன்று நான்கு நூற்றாண்டு கழித்துத்தான். சைவப்பெருமதம் உருவானபோது அதற்கே உரிய தொன்மக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. நாயன்மார்களின் தொன்மங்கள் அவ்வாறு உருவாக்கப்பட்டன. ஆகமங்கள் உருவாக்கப்பட்டன. சைவத்திருமுறைகள் தொகுக்கப்பட்டன.

இக்காலகட்டத்தில்தான் சைவக்குரவர்களைப் பற்றியும் உக்கிரமான தொன்மங்கள் பல உருவாயின. வெள்ளெலும்பை பெண்ணாக்கியது. கோயில் கருவறை கதவு திறக்கவும் மூடவும் பாடியது இவைபோல. இவை நூல்களில் உரைக்குறிப்பாகவும் இடைச்செருகல்களாகவும் சேர்க்கப்பட்டன. அப்பர் கல்லைக்கட்டி கடலில் போடப்பட்டது, சம்பந்தர் சமணரை கழுவேற்றியது எல்லாம் அப்போது உருவாக்கப்பட்ட தொன்மங்களே. சைவக்குரவர்களை தெய்வங்களின் தளத்துக்குக் கொண்டுசெல்வதற்காக உருவாக்கப்பட்ட மிகையான தொன்மங்கள் இவை.

இவற்றில் ஏதேனும் உண்மை இருக்குமா? சமணர்கள் கழுவேற்றப்பட்டிருக்கலாமா? ஆ. ஈசுவரமூர்த்திப்பிள்ளை சொல்வதைப்போல சமண-சைவ பூசலில் சமணர்கள் சிலர் தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை வாது வைத்திருக்கலாம், அப்படி ஒரு வழக்கம் முன்னும் பின்னும் தமிழ்நாட்டில் இருந்ததாகத் தெரியவில்லை. எண்ணாயிரம் என்பது குலப்பெயராக இருக்கலாம். வணிகர்கள் எண்ணாயிரம் கூட்டம் நாலாயிரம் கூட்டம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறார்கள்

ஆனால் அதற்குள் எண்ணாயிரம் சமணர்கள் கூட்டம் கூட்டமாக கழுவேற்றப்பட்டார்கள் என்ற அதிகொடூரச் சித்திரம் உருவாக்கப்பட்டுவிட்டது. அதை தமிழ்ச் சமூகம் குற்றவுணர்ச்சி இல்லாமல் ஏற்றது என்கிறார்கள். அஞ்சினான் புகலிடம் அமைத்து மன்னர்களையே உள்ளே வரவிடாமல் தார்மீக தடை விதித்தவர்கள் சமணர்கள். ஒரு சமணமுனி இறந்தால்கூட அந்த பாவம் பலநூற்றாண்டுகள் பின்னால் வரும் என நம்பிய  தமிழ்ச்சமூகம் இது. ஆனால் அந்த மாபெரும் கொலை வேறு எங்குமே பதிவாகவில்லை என்றும் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

மேலே உள்ள கழுவேற்ற சிலையை பாருங்கள்.  இதை ஒருவர் சமணார் கழுவேற்றத்துக்கான ஆதாரம் என்கிறார். என்ன ஒரு ஆதாரம்! சமணர் எக்காலத்தில் முடிவளர்த்தார்கள்? அது சமணக் கோட்பாட்டுக்கே எதிரானது. நீள்குடுமியும் அரைக்கச்சையும் அவனை ஒரு படைவீரனாகவே காட்டுகின்றன. மீசைவேறு.

இப்படி போலி ஆதாரம் கொடுத்தாவது ஒரு தொன்மத்தை உண்மையாக்கவேண்டும் என்பது யாருடைய கட்டாயம்? அப்படி சமணர்களை, சைவர்களை, தமிழ்ச்சமூகத்தை ஒட்டுமொத்தமாக சித்தரிப்பதன் மூலம் யார் என்ன அடைகிறார்கள்?

ஆ.ஈசுவரமூர்த்திப்பிள்ளை அக்காலகட்டத்து சைவ அடிப்படைவாதிகளில் ஒருவர். செந்தமிழ்ச்செல்வியில் நிறைய எழுதியிருக்கிறார். சமணர்களை அவர் சைவர்களை கொடுமைப்படுத்திய கொடூரர்களாகவே சித்தரிக்கிறார். ஆனால் சம்பந்தரை கொல்ல முயன்ற சில சமணர்களே மன்னரால் கழுவேற்றப்பட்டார்கள் என்கிறார் . அக்டோபர் 2009 ‘ரசனை’ மாத இதழில்  ஈசுவரமூர்த்திப்பிள்ளை  அவர்கள் எழுதிய சமனர் குறித்த கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம் Oct 21, 2009

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/4574

1 comment

1 ping

  1. எண்ணாயிரம் சமணர் என்பது 8000 பேர் என்று ஆகாது. பாண்டி நாட்டு வணிகக் குழுக்களில் திசை ஐயாயிரத்து ஐநூற்றுவர் என்று ஒரு பிரிவுண்டு. அதனால் 5500 பேர் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதே போல் எண்ணாயிரம் என்பது ஒரு குழுப்பெயரே. இதை ஆய்வு மூலம் ஒருவர் நிறுவியுள்ளார் விரைவில் அதற்கான மேற்கோளை செர்க்கிறேன்.

    களப்பிரர் வரலாறு இருண்ட காலம் என்று கூறப்படுவதே அவர்கள் சமணர் என்பதால் தான். மேலும் சமணம் தமிழ்கத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே நுழைந்து விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் பூவிலுடையார் ஆலயத்தில் சமணக் கல்வெட்டுகள் காண்பட்டுகின்ரன. மாங்குளம் கல்வெட்டில் கூறப்படும் செழியன் கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலேயெ சமணத்தை ஆதரித்தான் என்றால் அதற்கு முன்னரேயெ தமிழ் வணிகர்கள் அதை பின்பற்றினர் எனலாம்.

  1. சமணர் கழுவேற்றம்

    […] […]

Comments have been disabled.