மலையாளம் கற்பது…

அன்புள்ள ஜெயமோகன் சார்,

போன மாதம் நான் என் வாழ்க்கையிலேயே முதல் இரண்டு மலையாளப் படங்களைப் பார்த்தேன்.ஒழிமுறி,எலிப்பத்தாயம். ஒழிமுறியின்’வஞ்சீஷபாலன்’ என்ற முகப்புப் பாடலை அர்த்தம் புரிந்தும் புரியாமலும் 100 முறை கேட்டிருப்பேன்.பின்பு,என்ன தோன்றியதோ ,மலையாளம்கற்றுக்கொள்ள முடிவுசெய்து இணையத்தில் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.எழுத்துக்களை கற்றுக்கொள்ள 3 நாட்கள்தான் ஆகியது.

மிக உற்சாகமும்,மகிழ்ச்சியாகவும் தொடர்ந்தபோதுதான் தெரிந்தது, சமஸ்கிருதம் மலிந்த மலையாள சொற்களின் ஆயாசமூட்டும்,விரிவான சொற்களஞ்சியம்.பின்பும் நான் தொடர்ந்ததற்கான காரணங்கள்:

1. பள்ளி செல்லும் நாட்களில் தனியாக ஹிந்தி ட்யூஷன் வலுக்கட்டாயமாக ஏற்பாடு செய்து 8 பரிட்சைகள் வரை எழுதவைத்தார்கள்,கிட்டத்தட்ட டிப்ளமோவிற்கு நிகரான ஒரு படிப்பு.மனப்பாடம் செய்து பாஸ் செய்ததாலும்,பின்பு எப்போதும் தேவைப்படாததாலும் ஹிந்தியை நான் கிட்டத்தட்டமறந்தே விட்டிருந்தேன்,எழுத்துக்கள் மட்டுமே நினைவில் இருக்கிறது.ஆனால் இப்போது மலையாள வாசிப்புக்கு மிக மிக உதவியாக ஹிந்தி இருக்கிறது,நான் மறந்த ஹிந்தி சொற்கள் மீண்டும் நினைவுக்குவரஆரம்பித்திருக்கிறது (கேந்த்ர ,ராஷ்ட்ரிய, கிதாப், க்ரியா, புல்லிங், ஸ்ரீலிங், அத்யாபக், வித்யார்த்தீ) போன்ற வார்த்தைகள்.

2.மனப்பாடம் செய்த சில சமஸ்கிருத ஸ்லோகங்கள் மற்றும் பிராமண கொச்சை வழக்கில் கலந்துள்ள சமஸ்கிருத வார்த்தைகள் மூலம் உருவான ஒரு சின்ன சமஸ்கிருத பரிச்சயம்.(ப்ராப்தம்,மாத்ரம்,ஸ்வீகாரம்,தரித்ரம்,மண்டூகம்) போன்றவை.

3.உங்களுடைய,நாஞ்சில் நாடனுடைய‌ நாவல்கள் மூலம் பெற்ற மலையாள வார்த்தைகள்.

இப்போது நான் தட்டுத்தடுமாறி மலையாள மனோரமா வாசிப்பேன்,மாத்ருபூமி ஓரளவு எளிதாக வாசிக்கிறேன்.எனக்கு மலையாளபுனைவு,அபுனைவுகளை வாசிக்குமளவு கற்றுக்கொள்ள வேண்டும்,மணிப்பிரவாளம் அளவுக்கு கடினமான நடையைக் கூட வாசித்துப்பழகிக் கொள்ள வேண்டும் என ஆசையாய் இருக்கிறது.

என்னுடைய கேள்விகள்:

1.மலையாளம் என்னுடைய தாய்மொழி அல்லாததாலும்,தொடர்ந்து காதில் ஒலிக்காததாலும்,எனக்கு அது மிகப் பெரிய தடையாக இருக்குமா? (மேலும் எனக்கு காது சார்ந்த நுண்ணுணர்வு குறைவு என்றும் நினைக்கிறேன்)

2.எந்த திசையில் எப்படி இதை முன்னெடுத்துச் செல்வது?(இலக்கணப் பயிற்சி,படங்கள் பார்ப்பது,சிறுவர் கதைகள்,பாட்டுகள் என அறிமுகப்படுதல், டி.வி பார்த்தல்,தினசரி வாசித்தல்).

3.என் நேரத்தை மிக அதிகமாக எடுத்துக்கொள்கிறது,இந்த முயற்சியை நான் தொடரலாமா,இது தேவையில்லாத நேர விர‌யமா?

எனக்கு இருக்கும் இப்போதைக்கு முக்கியமான சவால்,வார்த்தைகளை அர்த்தப்படுத்திக்கொள்ளுதல்,கஷ்டமான சமஸ்கிருத வார்த்தைகளை.உங்களது வழிகாட்டுதல் அவசியமாக தேவைப்படுகிறது,இல்லையென்றால் நான் எங்கெங்கோ திசைதிரும்பி செல்லக்கூடும் என பயமாக இருக்கிறது.புத்தகப் பட்டியல்,இணையதள சுட்டிகள் போன்றவை எனக்கு மிக உதவியாக இருக்கும்,சிரமத்திற்கு மன்னிக்கவும்.

குறிப்பு:’ஸ்ரீகண்டேஸ்வரம்’ தொகுத்த மஹாநிகண்டு பற்றி நீங்கள் எழுதியதை கூகிள் செய்து பார்த்தேன்,ஒன்றும் கிடைக்கவில்லை,

அந்தப் புத்தகம் எங்கு கிடைக்கும்?

மணவாளன்

*

அன்புள்ள மணவாளன்,

டி.எஸ்.எலியட் அறிவுஜீவியின் தகுதிகள் என்ன என்று ஒரு பட்டியலிடுகிறார். அதில் முக்கியமானவை இரண்டு.

ஒன்று ஓரு செவ்வியல் மொழியை நன்கறிந்திருத்தல், இரண்டு சமகாலத்தில் தன் மொழிக்கு இணையாக உள்ள இன்னொரு மொழியை அறிந்திருத்தல்.

அவ்வகையில் மலையாளம் கற்றுக்கொள்வது உதவிகரமானது. அது சம்ஸ்கிருதத்துடன் அதிகநெருக்கத்தைக் கொண்டுவரும். மலையாளம் பேச்சுமொழியில் இருந்து மேலே செல்லச்செல்ல நேரடியாகவே சம்ஸ்கிருதச் சொற்களஞ்சியத்தையும் இலக்கணத்தையும் கையாளத்தொடங்கும்

மலையாளம் வழியாக சமகால உலக இலக்கியத்தை தமிழை விட அதிகமாக அறியமுடியும். நேரடியாக ஆங்கிலத்தில் வாசிக்கலாம்தான். ஆனால் ஒரு சமகாலப் பண்பாட்டுச்சூழலில் உலக இலக்கியம் அளிக்கும் பிரதிபலிப்பை கவனிப்பது இன்னமும் தெளிவாக வழிகாட்டக்கூடியது

தொடர்ந்து வாசித்துக்கொண்டிருப்பதும் சினிமா பார்ப்பதும் மட்டும் போதும், மொழியறிமுகம் நீடிக்கும். மாதம் ஒரு கட்டுரை வாசித்தாலே போதுமானது

ஜெ

ஸ்ரீகண்டேஸ்வரம் அகராதி கேரளத்தில் முக்கியமான கடைகளில் மட்டுமே கிடைக்கும்

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் பயணம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 3