வாசிப்பு, கடிதங்கள்

உங்களது ஞானம் கட்டுரை வாசித்தேன். இவ்வளவு புத்தக அறிவும், ஆர்வமும் உள்ளவர்கள் எப்படி மனசாட்சி இல்லாமல் மனிதாபிமானமற்று மனிதப் படுகொலைக்கு சாட்சியாக நிற்கிறார்கள். அப்போது அவர்கள் தேடல்தான் என்ன?
ராமலிங்கம்

அன்புள்ள ராமலிங்கம்,

ஒரு போர் என்பது  உக்கிரமான வெறுப்பின் அடித்தளம் மீதுதான் கட்டப்பட முடியும். வெறுப்பைச் சமைக்க பிரச்சாரம் தேவை. பிரச்சாரமே போருக்கு முந்தைய முதல்கட்டப்போர். போர் முடிந்தபின்னரும் பிரச்சாரத்தின் வேர்களை நீக்க ஒரு தலைமுறை தாண்டவேண்டும். உங்கள் எண்ணங்கள் அப்பட்டமான் பிரச்சாரத்தால் உருவாக்கப்பட்டவை.

உலகுக்கே நாகரீகம் கற்றுத்தந்த வெள்ளையர்கள்தான் இந்தியாவை அடிமையாக்கி சுரண்டி ஆண்டார்கள். ஜாலியன் வாலாபாக்கில் எளிய மக்களை கொன்றார்கள். ஆனால் காந்தி பிரிட்டிஷ் பொதுமக்களையும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும் பிரித்தறியும் விவேக ஞானம் கொண்டிருந்தார்

அந்த விவேகம் தேவைப்படும் தருணம் இது

ஜெ

உயர்திரு ஜெ மோ சார்,

வணக்கம். உங்கள் இணையதளத்தில் புத்தக விற்பனை பற்றி நீங்களும் திரு.மனுஷ்யபுத்திரன் அவர்களும் நடத்திய உரையாடலை வாசித்திதேன்

நான் ஒரு கொள்கை வைத்துள்ளேன். அல்லது என் குணம் என்று கூட சொல்லலாம்.
நான் ஒரு புத்தகத்தை படிக்கச் விரும்பினால் அது எவ்வளவு விலை அதிகமானதாக இருந்தாலும் நான் அதை பணம் கொடுத்தே வாங்கிப்படிப்பேன். அதே புத்தகம் நூலகத்திலோ அல்லது எனது நண்பரிடமோ இருந்தால் கூட அதை வாங்கிப்படிக்கமாட்டேன்.எனது சொந்த பணத்திலேயே  வாங்கிப்படிப்பேன்.

மிக முக்கியமான  விஷயம் என்னவென்றால் நான் அப்படி பணம் கொடுத்து வாங்கும் புத்தகங்களை யாருக்கும் ஓசி கொடுக்கமாட்டேன். எனது தங்கைக்கு கூட ஓசி தரமாட்டேன். நான் ஒரு புத்தகம்  படிக்கும் பொழுது யாரவது நண்பர்கள் வந்தால் டேபிளில் கவிழ்த்து வைத்திருக்கும் புத்தகங்களை பார்த்து விட்டு அந்த புத்தகங்களைப்ப்றி விசாரித்ததால் அந்தபுத்தாகங்களை  பற்றி சொல்லி விட்டு கூடவே  ஒன்றையும் அவர்களிடம் சொல்லிவிடுவேன் புத்தகம் யாருக்கும்   ஓசி தருவதில்லை ஆகையால் ஓசி கேட்காதீர்கள் என்று.

நான் மிகவும் விரும்பும் எழுத்தாளர்ராகிய நீங்களே என்னிடம் ஏதாவது புத்தகம்  கேட்டால் என்னுடைய ஒரே பதில் ”தரமாட்டேன்”

அன்புடன்
பெருமாள்
கரூர்

 

அன்புள்ள பெருமாள்

நல்ல விஷயம். ஆழமான ஏரிகள் பனியில் உறைவதில்லை. ஏன் என்றால் அவற்றின் ஆழம் காரணமாக அடியில் உள்ள நீர் வெம்மையாக இருக்கும். மேலே உள்ள நீர் உள்ளே சென்று மீண்டபடியே இருக்கும். நீர்ச்சுழற்சி அந்த ஏரியை உயிருடன் வைத்திருக்கும். அமெரிக்காவில் கிரேட்டர் லேக் ஏரியைப்பார்த்தபோது அதை வாசித்தேன்

ஆழம் உள்ள சமூகம் எப்போதும் சலனத்துடன் தான் இருக்கும்  புத்தகங்கள் எங்கே வாங்கப்படுகின்றனவோ அங்கேதான் அறிவியக்கம் இருக்கும். அச்சமூகங்களே வெல்கின்றன, வாழ்கின்றன
ஜெ

 

வணக்கம்,

உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த வேளையில் வாயைத் திறக்காத ஜெயமோகன், மூன்று லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் வாழ்வா சாவா என்றிருக்கும் போதும் சமூக பிரக்ஞையற்று இருக்கும் ஜெயமோகன், கொழும்பில் தமிழ் புத்தகங்கள் விற்கவில்லை என்று புலம்புகின்றார். சமூகத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள அக்கறை வாழ்க.

சரவணகுமார்

அன்புள்ள சரவணக்குமார்

முந்நூறுவருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளையன் போய் அங்கிருந்த மக்களினத்தை முற்றாக அழித்தான், என் என்றால் அந்த இனம் தேங்கிப்போய்  இருந்தது. தமிழனத்தை தேங்கவைத்தது உங்களைப்போன்ற உணர்ச்சிமூடர்கள். ஆகவே அழிவுக்கும் நீங்களே பொறுப்பு
ஜெ

 

 

வணக்கம்,

இப்போது யார் பொறுப்பு என்ற விவாதம் தேவையற்ற ஒன்று. உங்கள் பதிலில் இருந்து ஒன்று நன்றாக புலப்படுகிறது. நடந்த இன அழித்தலுக்கு உங்கள் மனம் சிறிதளவேனும் கவலை பட்டதாக தெரியவில்லை. யார் மீதாவது குற்றம் சுமத்தி கடமை முடிந்ததென்று கைகழுவுவது நல்லதோரு கலை. அதில் தேர்ந்தவர் தான் நீங்கள்.

 

என் இரண்டு வரி மின்னஞலில் என்னை உணர்ச்சிமூடன் என்று கண்டு பிடித்ததற்கு உங்களுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கிறேன்

 

நன்றி

சரவணகுமார்

அன்புள்ள சரவணக்குமார்

கொஞ்சம் கவனியுங்கள், யார்மேலாவது குற்றம் சுமத்தி கைகழுவிவிட முயன்றது யார் என. உங்கள் முதல் கடிதத்தின் காரணம் எது என…

ஓரு  சமூகம் எப்போது தர்க்கபூர்வமாக வரலாற்றுபூர்வமாக யோசிக்கிறதோ அப்போதுதான் அது சரியான முடிவுகளை எடுக்கும். சரியானவற்றை ஏற்கும். சரியான திசையை தேர்ந்தெடுக்கும். நமக்கு  அதற்கான தகுதி இல்லை. ஏன் என்றால் நாம் வாசிப்பதில்லை. நமது சொந்த வரலாறே நமக்கு தெரியாது. நமது சொந்தசூழலைப்பற்றியே நாம் அறிவதில்லை. நாமறிந்தது உணர்ச்சிக்கொந்தளிப்புகளை துப்பும் பொதுப்பிம்பங்களை மட்டுமே.

சிங்கள இனமும் இப்படித்தான் இருந்தது. ஜெவிபி போன்ற அமைப்புகள் வழியாக அது இன்று தமிழர்கள் கொடுத்ததைப்போல பெரிய விலை கொடுத்து வரலாற்றைக் கற்றுக்கொண்டது. அதனால்தான் அவர்கள் வாசிக்கிறார்கள். சிந்திக்கிறார்கள்

நீங்கள் விலைகொடுக்க வைப்பீர்கள். சிந்திக்க விடமாட்டீர்கள். அதுவே உங்கள் கடிதத்தின் உள்ளடக்கம்.

நீங்கள் உணர்ச்சிமூடன் என்று கண்டுபிடிக்க நோபல் பரிசு எதற்கு? பத்துரூபாய் ‘கன்சல்டிங் ஃபீஸே’ போதுமானதாகும்

ஜெ

 


முந்தைய கட்டுரைபதிப்பகங்கள்,நூல்கள்:கடிதம்
அடுத்த கட்டுரைஉப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்) 2