‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4

பகுதி ஒன்று  : வேழாம்பல் தவம்

[ 4 ]

சத்யவதி நன்றாக முதுமை எய்தி இளைத்திருப்பதாக பீஷ்மர் நினைத்தார். அவளைப் பார்த்த முதல்கணம் அவருக்குள் வந்த எண்ணம் அதுதான். அவள் மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை என்று அவர் அறிந்திருந்தார். ஆனால் கோபுரத்தின் எடையைத்தாங்கும் ஆமையைப்போல அவ்வளவு படிந்திருப்பாளென எண்ணவில்லை. அவள் கண்களுக்குக் கீழே தசைவளையங்கள் தொங்கின. வாயின் இருபக்கமும் அழுத்தமான கோடுகள் விழுந்து உதடுகள் உள்ளடங்கி அவள் இறுக்கமாக எதையோ பொத்திப்பிடித்திருக்கும் ஒரு கைபோலத் தோன்றினாள்.

வணங்கியபடி “அன்னையே, உங்கள் புதல்வன் காங்கேயனுக்கு அருள்புரியுங்கள்” என்றார். சத்யவதி அவரை ஏறிட்டு நோக்கி “முதல்கணம் உன்னைக் கண்டதும் என் நெஞ்சு நடுங்கிவிட்டது தேவவிரதா. மெலிந்து கருமைகொண்டு எவரோ போலிருக்கிறாய். ஆனால் உன்னியல்பால் நீ பயணத்தை மிக விரும்பியிருப்பாய் என்று மறுகணம் எண்ணிக்கொண்டேன்” என்றாள்.

“நீங்களும் மிகவும் களைத்திருக்கிறீர்கள் அன்னையே” என்றார் பீஷ்மர். “தங்கள் உள்ளம் சுமைகொண்டிருக்கிறதென நினைக்கிறேன்.” சத்யவதி பெருமூச்சுவிட்டு “நீ அறியாதது அல்ல. இருபத்தைந்தாண்டுகளாக என் சுமை மேலும் எடையேறியே வருகிறது” என்றாள். பீஷ்மர் அவள் அன்பற்ற மூர்க்கனை கணவனாக அடைந்தவள் போலிருப்பதாக எண்ணிக்கொண்டார். அவள் அஸ்தினபுரியிடம் காதல்கொண்டவள் என்று மறுகணம் தோன்றியது.

பீஷ்மர் “மைந்தர்களைப்பற்றி வந்ததுமே அறிந்தேன்” என்றார். சத்யவதி அவர் கண்களை நோக்கி “நான் உன்னிடம் வெளிப்படையாகவே சொல்கிறேனே, நீ இங்கிருந்தால் அரசிகளின் உள்ளங்கள் நிறையில் நில்லாதென்று நினைத்தேன். ஆகவேதான் உன்னை இந்த நகரைவிட்டு நீங்கும்படி நான் சொன்னேன். அன்று அந்த வைதிகர் சொன்னதை அதற்காகப் பயன்படுத்திக்கொண்டேன்” என்றாள்.

பீஷ்மர் மெல்ல தலையசைத்தார். “அதில் பிழையில்லை அன்னையே” என்றார். “இல்லை தேவவிரதா, அது மிகப்பெரிய பிழை என்று இன்று உணர்கிறேன். இரு மைந்தர்களும் உன் பொறுப்பில் வளர்ந்திருக்கவேண்டும். இன்று இருவருமே பயன்படாதவர்களாக இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி.

பீஷ்மர் “அன்னையே, அவர்கள் என் தமையனின் மைந்தர்கள். ஒருபோதும் அவர்களிடம் தீமை விளையாது. அவர்கள் பயிலாதவர்களாக இருக்கலாம். அதை மிகச்சிலநாட்களிலேயே நான் செம்மை செய்துவிடமுடியும். அத்துடன் ஆட்சியை நடத்த என் தமையனின் சிறியவடிவமாகவே நீங்கள் ஓர் அறச்செல்வனை உருவாக்கியும் இருக்கிறீர்கள்” என்றார்.

சத்யவதியின் முகம் மலர்ந்தது. “ஆம், தேவவிரதா. இன்று என் குலம் மீது எனக்கு நம்பிக்கை எழுவதே அவனால்தான். அவனிருக்கும்வரை இக்குலம் அழியாது. இங்கு அறம் விலகாது” என்றாள். “அவனைப் பார்த்தாயல்லவா? கிருஷ்ணனின் அதே முகம், அதே கண்கள், அதே முழங்கும் குரல்… இல்லையா?” பீஷ்மர் சிரித்தபடி “யமுனையின் குளுமையை அவன் கண்களில் கண்டேன்” என்றார். அச்சொல் சத்யவதியை மகிழ்விக்குமென அறிந்திருந்தார். அவள் அனைத்துக் கலக்கங்களையும் மறந்து புன்னகைத்தாள்.

பின்பு நினைத்துக்கொண்டு கவலையுடன் “தேவவிரதா, பத்தொன்பதாண்டுகளுக்கு முன்பு அஸ்தினபுரி அடைந்த அதே இக்கட்டை மீண்டும் வந்தடைந்திருக்கிறோம்” என்றாள். “மூத்த இளவரசனுக்கு இப்போது பதினெட்டாகிவிட்டது. அவனை அரியணையில் அமர்த்தவேண்டும். அவனால் அரியணையமர முடியாது என்று ஷத்ரியமன்னர்கள் பேசிக்கொள்கிறார்கள். இரண்டாவது இளவரசன் சூரிய ஒளியில் நிற்கமுடியாதவன் என்பதனால் அவனும் அரசனாக முடியாதென்கிறார்கள். விதுரனை அரசனாக ஆக்க நான் முயல்வதாக வதந்திகளை நம் நாட்டிலும் அவர்களின் ஒற்றர்கள் பரப்புகிறார்கள். பிராமணர்களும் வைசியர்களும் அதைக்கேட்டு கொதிப்படைந்திருக்கிறார்கள்.”

பீஷ்மர் “அன்னையே அவையெல்லாமே சிறுமதிகொண்டவர்களின் பேச்சுக்கள். இந்த கங்கையும் சிந்துவும் ஓடும் நிலம் உழைப்பில்லாமல் உணவை வழங்குகிறது. ஷத்ரியர்கள் அதில் குருவிபறக்கும் தூரத்துக்கு ஓர் அரசை அமைத்துக்கொண்டு அதற்குள் பேரரசனாக தன்னை கற்பனைசெய்துகொண்டு வாழ்கிறார்கள். அவர்களின் கனவுகளெல்லாம் இன்னொரு ஷத்ரியனின் நாட்டைப் பிடித்துக்கொள்வதைப் பற்றித்தான். இல்லையேல் இன்னொருநாட்டு பெண்ணைக் கவர்வதைப்பற்றி. இவர்களின் சிறுவட்டத்துக்கு வெளியே உலகமென ஒன்றிருக்கிறது என்று இவர்கள் அறிவதேயில்லை.”

“ஆம், நீ சென்று வந்த தேவபாலத்தைப்பற்றி ஒற்றன் சொன்னான்” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அந்தச் சொல்லைக்கேட்டதுமே முகம் மலர்ந்தார். “தேவபாலம் கூர்ஜரர்களின் ஒரு துறைமுகம்தான். ஆனால் அது பூனையின் காதுபோல உலகமெங்கும் எழும் ஒலிகளை நுண்மையாக கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தத் துறைமுகத்தில் நின்றபோது என்னென்ன வகையான மனிதர்களைக் கண்டேன்! பாறைபோன்ற கருப்பர்கள் சுண்ணம்போன்ற வெண்ணிறம் கொண்டவர்கள் நெருப்பைப்போலச் சிவந்தவர்கள். பீதமலர்களைப்போல மஞ்சள்நிறமானவர்கள். எவ்வளவு மொழிகள். என்னென்ன பொருட்கள். அன்னையே, ஐநூறு வருடம் முன்பு மண்ணுக்குள் இருந்து இரும்பு பேருருவம் கொண்டு எழுந்துவந்தது. அது உலகை வென்றது. இரும்பை வெல்லாத குலங்களெல்லாம் அழிந்தன. இன்று அவ்வாறு பொன் எழுந்து வந்திருக்கிறது. பொன்னால் உலகை வாங்கமுடியும். பீதர்களின் பட்டையோ யவனர்களின் மதுவையோ எதையும் அது வாங்கமுடியும். வானாளும் நாகம்போல பொன் உலகை சுற்றி வளைத்துப் பிணைப்பதையே நான் கண்டேன்.”

VENMURASU_5EPI_54__
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

சத்யவதியின் கண்கள் பேராசையுடன் விரிந்தன. “கூர்ஜரம் பேரரசாக ஆகும். அதைத் தடுக்கமுடியாது” என்றாள். “நதிகள் ஜனபதங்களை இணைத்த காலம் முடிந்துவிட்டது. இனி கடலை ஆள்பவர்களே மண்ணை ஆளமுடியும்.” பீஷ்மர் “அன்னையே, நாம் கடலையும் ஆள்வோம்” என்றார். “அதற்கு நாம் அஸ்தினபுரி என்ற இந்த சிறு முட்டைக்குள் குடியிருக்கலாகாது. நமக்குச் சிறகுகள் முளைக்கவேண்டும். நாம் இந்த வெள்ளோட்டை உடைத்துப் பறந்தெழவேண்டும்.”

சத்யவதியின் மலர்ந்த முகம் கூம்பியது. பெருமூச்சுடன் “பெரும் கனவுகளைச் சொல்கிறாய் தேவவிரதா. நானும் இதைப்போன்ற கனவுகளைக் கண்டவள்தான். இன்று நம் முன் இருப்பது மிகவும் சிறுமைகொண்ட ஒரு இக்கட்டு. நாம் இன்னும் மூன்றுமாதங்களுக்குள் திருதராஷ்டிரனை அரியணை ஏற்றவேண்டும். இல்லையேல் ஷத்ரியர்களின் கூட்டு நம் மீது படைகொண்டு வரும்” என்றாள்.

“வரட்டும், சந்திப்போம்” என்றார் பீஷ்மர். “நீ வெல்வாய், அதிலெனக்கு ஐயமே இல்லை. ஆனால் அந்தப்போருக்குப் பின் நாம் இழப்பதும் அதிகமாக இருக்கும். மகதமும் வங்கமும் கலிங்கமும் நாம் இன்று நிகழ்த்தும் வணிகத்தை பங்கிட்டுக்கொள்ளும்” சத்யவதி சொன்னாள். “நான் போரை விரும்பவில்லை. அவ்வாறு போரைத் தொடங்குவேனென்றால் கங்கைக்கரையிலும் கடலோரமாகவும் உள்ள அனைத்து அரசுகளையும் முற்றாக என்னால் அழிக்கமுடிந்தால் மட்டுமே அதைச் செய்வேன்.” அவள் கண்களைப் பார்த்த பீஷ்மர் ஒரு மன அசைவை அடைந்தார்.

பீஷ்மர் ‘ஆம் அன்னையே’ என்றார். சத்யவதி “நாம் திருதராஷ்டிரனுக்கு உகந்த மணமகளை தேடி அடையவேண்டியிருக்கிறது” என்றாள். பீஷ்மர் “விழியிழந்தவன் என்பதனால் நம்மால் சிறந்த ஷத்ரிய அரசுகளுடன் மணம்பேச முடியாது” என்றார். “சேதிநாட்டில் ஓர் இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்.”

சத்யவதி கையை வீசி “சேதிநாடு அவந்திநாடு போன்ற புறாமுட்டைகளை நான் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை” என்றாள். “அவர்களிடமிருந்து நாம் மணம்கொள்வோமென அவர்கள் நினைத்திருக்கிறார்கள். அந்த மணம் நம்மை எவ்வகையிலும் வலுப்படுத்தப்போவதில்லை. சொல்லப்போனால் அந்நாடுகளை பிற ஷத்ரியர் தாக்கும்போது நாம் சென்று பாதுகாப்பளிக்கவேண்டுமென எண்ணுவார்கள். அது மேலும் சுமைகளிலேயே நம்மை ஆழ்த்தும்.”

பீஷ்மர் அவளே சொல்லட்டும் என காத்திருந்தார். “நமக்குத் தேவை நம்மை மேலும் வல்லமைப்படுத்தும் ஓரு மண உறவு.” பீஷ்மர் அதற்கும் பதில் சொல்லவில்லை. சத்யவதி “காந்தாரநாட்டில் ஓர் அழகிய இளவரசி இருப்பதாகச் சொன்னார்கள்” என்றாள். பீஷ்மர் திகைத்து “காந்தாரத்திலா?” என்றார். சத்யவதி “ஆம், வெகுதொலைவுதான்” என்றாள்.

“அன்னையே தொலைவென்பது பெரிய இக்கட்டுதான். ஆனால்…” பீஷ்மர் சற்றுத் தயங்கியபின்பு முடிவெடுத்து “தாங்கள் காந்தாரம் பற்றி சரியான தகவல்களை கேள்விப்பட்டிருக்கவில்லை என நினைக்கிறேன். காந்தாரத்தின் நிலப்பரப்பு நம்மைவிட பன்னிரண்டு மடங்கு அதிகம். அந்நிலம் வெறும்பாலை என்பதனால் முன்பொருகாலத்தில் அவர்கள் வேட்டுவர்களாகவும் நம்மைவிட இழிந்தவர்களாகவும் கருதப்பட்டிருந்தனர். முற்காலத்தில் சந்திரகுலத்திலிருந்து தந்தையின் பழிச்சொல்லால் இழித்து வெளியேற்றப்பட்ட துர்வசு தன் ஆயிரம் வீரர்களுடன் காந்தாரநாட்டுக்குச் சென்று அங்கே அரசகுலத்தை அமைத்தார். ஆகவே சப்தசிந்துவிலும் இப்பாலும் வாழ்ந்த நம் முன்னோர் எவரும் அவர்களை ஷத்ரியர்கள் என எண்ணியதில்லை. அங்கே வலுவான அரசோ நகரங்களோ உருவாகவில்லை. அறமும் கலையும் திகழவுமில்லை.”

பீஷ்மர் தொடர்ந்தார் “ஆனால் சென்ற நூறாண்டுகளாக அவர்கள் மாறிவிட்டனர். பீதர் நிலத்தில் இருந்து யவனத்துக்குச் செல்லும் பட்டும் ஓலைத்தாள்களும் உயர்வெல்லமும் முழுக்கமுழுக்க அவர்களின் நாடுவழியாகவே செல்கிறது. அவர்கள் இன்று மாதமொன்றுக்கு ஈட்டும் சுங்கம் நமது ஐந்துவருடத்தைய செல்வத்தைவிட அதிகம். அவர்கள் நம்மை ஏன் ஒருபொருட்டாக நினைக்கவேண்டும்?”

“அனைத்தையும் நான் சிந்தித்துவிட்டேன். அவர்கள் இன்று ஒரு பேரரசாக வளர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் இடத்தில் நான் நின்று சிந்தித்தேன். இன்று அவர்களின் தேவை என்ன? பெரும்செல்வம் கைக்கு வந்துவிட்டது. செல்வத்தைக்கொண்டு நாட்டை விரிவாக்கவேண்டும் இல்லையா? காந்தாரம் மேற்கே விரியமுடியாது. அங்கிருப்பது மேலும் பெரும்பாலை. அவர்கள் கிழக்கே வந்துதான் ஆகவேண்டும். கிழக்கேதான் அவர்கள் வெல்லவேண்டிய வளம் மிக்கநிலமும் ஜனபதங்களும் உள்ளன. இன்றல்ல, என்றுமே காந்தாரத்தில் படையோ பணமோ குவியுமென்றால் அவர்கள் சப்தசிந்துவுக்கும் கங்கைக்கும்தான் வருவார்கள்.”

அவள் என்ன சொல்லவருகிறாள் என்று பீஷ்மருக்குப் புரியவில்லை. “அவர்களுக்கு அஸ்தினபுரத்தையே தூண்டிலில் இரையாக வைப்போம்” என்றாள் சத்யவதி. அக்கணமே அவர் அனைத்தையும் புரிந்துகொண்டு வியந்து அவளையே நோக்கினார். “சிந்தித்துப்பார், அவர்கள் சந்திரவம்சத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள். ஷத்ரியர்கள் அல்ல என்று இழித்துரைக்கப்பட்டவர்கள். ஆகவே அவர்கள் இங்குள்ள மகாஜனபதங்கள் பதினாறையும் வெல்லவே விரும்புவார்கள். அதற்கு முதலில் இங்குள்ள அரசியலில் கால்பதிக்கவேண்டும். அதன்பின்புதான் இங்குள்ள பூசல்களில் தலையிடமுடியும். ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஷத்ரியர்கள்மேல் படையெடுக்கமுடியும்.”

“ஆம்” என்றார் பீஷ்மர். “அதற்கு அவர்களுக்கும் குலஷத்ரியர் என்ற அடையாளம் தேவை. அஸ்தினபுரியுடன் உறவிருந்தால் அவ்வடையாளத்தை அடையமுடியும். அவர்கள் உண்மையில் அஸ்தினபுரியின் பழைய உரிமையாளர்களும்கூட. யயாதியின் நேரடிக்குருதி அவர்களிடம் இருக்கிறது.” சத்யவதி கண்களை இடுக்கி சற்றே முன்னால் சரிந்து “தேவவிரதா, காந்தாரமன்னன் சுபலன் எளிமையான வேடனின் உள்ளம் கொண்டவன். செல்வத்தை என்ன செய்வதென்றறியாமல் திகைப்பவன். அவனுக்கு அஸ்தினபுரியின் உறவு அளிக்கும் மதிப்பு மீது மயக்கம் வரலாம். அதை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதைவிட முக்கியமானது ஒன்றுண்டு. சுபலனின் மைந்தன் சகுனி. அவன் பெருவீரன் என்கிறார்கள். நாடுகளை வெல்லும் ஆசைகொண்டவன் என்கிறார்கள். சிபிநாட்டையும் கூர்ஜரத்தையும் வெல்ல தருணம் நோக்கியிருக்கிறான் என்று சூதர்கள் பாடுகிறார்கள். அவனுக்கு நாம் அளிப்பது எத்தனை பெரிய வாய்ப்பு!”

“அவன் மூடனாக இருக்க வாய்ப்பில்லை” என்றார் பீஷ்மர். “ஆம், ஆனால் ஆசைகொண்டவன் மூடனாக ஆவது மிக எளிது” என்றாள் சத்யவதி. “அவனுடைய கண்களால் பார். இந்த அஸ்தினபுரி இன்று விழியிழந்த ஓர் இளவரசனையும் வெயில்படாத ஓர் இளவரசனையும் வழித்தோன்றல்களாகக் கொண்டுள்ளது. அந்தப்புரத்தில் இருந்து அரசாளும் முதுமகளாகிய நான் இதன் அரியணையை வைத்திருக்கிறேன். ஆட்சியில் ஆர்வமில்லாத நீ இதன் பிதாமகனாக இருக்கிறாய். இந்த அரியணையை மரத்தில் கனிந்த பழம்போல கையிலெடுத்துவிடலாமென சுபலனும் சகுனியும் எண்ணுவார்கள் என்பதில் ஐயமே இல்லை.”

“ஆம் அன்னையே, அவன் அதிகாரவிருப்புள்ளவன் என்றால் அவனால் இந்தத் தூண்டிலைக் கடந்துசெல்லவே முடியாது” என்றார் பீஷ்மர். “அவன் இதை விடப்போவதில்லை, அதிலெனக்கு ஐயமே இல்லை.” பீஷ்மர் தாடியை நீவியபடி “ஆனால் அவனுடன் நம் உறவு எப்படி இருக்கும் என்பதை நாம் இப்போதே அமர்ந்து முடிவெடுக்கமுடியாது. ஒருவேளை…”

அவர் சொல்லவருவதை அவள் புரிந்துகொண்டாள். “முடிவெடுக்கலாம். ஒருபோதும் காந்தாரன் நேரடியாக அஸ்தினபுரியை வென்று ஆட்சியமைக்கமுடியாது. நாம் காந்தாரத்தையும் ஆளமுடியாது. அது பாலை, இது பசும்நிலம். அவன் நம்மைச்சார்ந்துதான் இங்கே ஏதேனும் செய்யமுடியும்… அவன் எதிர்பார்க்கக்கூடியது ஒன்றே. அவன் நாட்டு இளவரசி பெறும் குழந்தை அஸ்தினபுரியை ஆளும் சக்கரவர்த்தியாகவேண்டும் என்று. அது நிகழட்டுமே!”

“அன்னையே, கடைசிச் சொல்வரை நீங்களே சிந்தனை செய்திருக்கிறீர்கள். இனி நான் செய்வதற்கென்ன இருக்கிறது? ஆணையிடுங்கள்” என்றார் பீஷ்மர். “சௌபாலனாகிய சகுனியிடம் நீ பேசு. அவன் தன் தமக்கையை நமக்கு அளிக்க ஒப்புக்கொள்ளச்செய். அவனே தன் தந்தையிடம் பேசட்டும். அவன் ஏற்றுக்கொண்டால் அனைத்தும் நிறைவாக முடிந்துவிட்டதென்றே பொருள். பாரதவர்ஷத்தை அஸ்தினபுரியில் இருந்துகொண்டு ஆளமுடியும் என்ற கனவை சகுனியின் நெஞ்சில் விதைப்பது உன் பணி” என்றாள் சத்யவதி.

“ஆணை அன்னையே” என்றார் பீஷ்மர். “தங்கள் விருப்பப்படியே செய்கிறேன்” என்று எழுந்து தலைவணங்கினார். “தேவவிரதா, இந்த அரியணையுடன் தெய்வங்கள் சதுரங்கமாடுகின்றன. பெருந்தோள்கொண்ட பால்ஹிகனையும் வெயிலுகக்காத தேவாபியையும் மீண்டும் இங்கே அனுப்பிவிட்டு அவை காத்திருக்கின்றன. நாம் என்ன செய்வோமென எண்ணி புன்னகைக்கின்றன. நாம் நம் வல்லமையைக் காட்டி அந்த தெய்வங்களின் அருளைப் பெறும் தருணம் இது.”

“நம் தெய்வங்கள் நம்முடன் இருந்தாகவேண்டும் அன்னையே” என்றார் பீஷ்மர். “நான் பொன்னின் ஆற்றலை அஞ்சத்தொடங்கியிருக்கிறேன். நீங்கள் சொல்லும் அனைத்து நியாயங்களுக்கும் அப்பால் அந்த அச்சம் என்னுள் வாழ்கிறது.” சத்யவதி “அவர்கள் நம்மை ஒன்றும் செய்யமுடியாது தேவவிரதா. நம்மிடம் தேர்ந்த படைகள் இருக்கின்றன. தலைமைதாங்க நீ இருக்கிறாய். அனைத்தையும்விட காந்தாரத்தை நம்மிடமிருந்து பிரிக்கும் கூர்ஜரமும் பொன்னின் வல்லமை கொண்ட நாடுதான்.”

“அன்னையே நீங்கள் காந்தாரத்தை நம்முடன் சேர்த்துக்கொள்ள என்ன காரணம்?” என்றார் பீஷ்மர். “வெறும் அரியணைத் திட்டமல்ல இது.” சத்யவதி “இந்த ஷத்ரியர்களின் சில்லறைச் சண்டைகளால் நான் சலித்துவிட்டேன் தேவவிரதா. குரைக்கும் நாய்களை பிடியானை நடத்துவதுபோல இவர்களை நடத்திவந்தேன். ஆனால் இன்று அந்தப் பொறுமையின் எல்லையை கண்டுவிட்டேன். அவர்கள் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்த விரும்புகிறேன். அத்துடன் கங்கைவழி வணிகத்தில் நம்மிடம் முரண்படுவதற்கான துணிவை எவரும் அடையலாகாது என்றும் காட்டவிரும்புகிறேன்” என்றாள்.

அவள் கண்கள் மின்னுவதை பீஷ்மர் கவனித்தார். “ஏதேனும் மூன்றுநாடுகள். அங்கம் வங்கம் மகதம் அல்லது வேறு. படைகொண்டு சென்று அவற்றை மண்ணோடு மண்ணாகத் தேய்க்கப்போகிறேன். அவற்றின் அரசர்களை தேர்க்காலில் கட்டி இழுத்துவந்து அஸ்தினபுரியின் முகப்பில் கழுவேற்றுவேன். அவர்களின் பெண்களை நம் அரண்மனையின் சேடிகளாக்குவேன்… இனி என்னைப்பற்றியோ என் குலத்தைப்பற்றியோ அவர்கள் ஒரு சொல்லும் சொல்லக்கூடாது. நினைக்கவும் அஞ்சவேண்டும்.”

அவள் கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து பீஷ்மர் எழுந்தார். வணங்கிவிட்டு வெளியே சென்றார். வெளியே நின்றிருந்த விதுரனிடம் இன்சொல் சொன்னபிறகு முற்றத்துக்குச் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டார். ஹரிசேனன் ரதத்தை ஓட்டினான்.

பீஷ்மர் சிந்தனையில் மூழ்கி அமர்ந்திருந்தார். பின்மதியத்தில் வெயில் முறுகியிருந்தது. மண்ணிலிருந்து எழுந்த நீராவி விண்ணிலேயே குளிர்ந்து சில சொட்டுக்களே கொண்ட மழையாகப் பெய்தது. அந்த மழை வெயிலின் வெம்மையை அதிகரித்தது. வியர்வையையும் தாகத்தையும் உருவாக்கியது. ஒவ்வொருவரும் நீர் நீர் என ஏங்குவதை முகங்கள் காட்டின. வேழாம்பல்கள் பேரலகைத் திறந்து காத்திருக்கும் நகரம் என அவர் நினைத்துக்கொண்டார்.

முந்தைய கட்டுரைமழைப்பாடலின் வடிவம்
அடுத்த கட்டுரைமலேசியப்பயணம்