சிறுவயதில், விடுமுறை நாட்களில், தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் போது, மனமெல்லாம் ஒரே நினைவுதான்.
தூரத்தில், ரப்பர் காற்று ஒலிப்பான் (அதற்கு எங்களூரில் – “பூவாத்” என்று பெயர்) ஒலிக்கக் கேட்டதும், வரப்புகளூடே தலைதெறிக்க ஓடி, வீட்டிற்குள் சென்று, டப்பாவைத் திறந்து, ஐந்து பைசா எடுத்துக் கொண்டு, தார் சாலையில் காத்து நிற்பேன். மரப்பெட்டியில், பவானியில் இருந்து குச்சி ஐஸ் எடுத்து விற்றுவரும் நபருக்காக.
அந்தக் காலகட்டத்தில், எப்படியோ, ஒரு நாள் இமய மலை முழுவதும் பனி என்று கேட்டோ / படித்தோ விட்டேன். நம்பவே முடியவில்லை. அவ்வளவு பனியும் இந்தக் குச்சி ஐஸ் போல இனிப்பாக இருக்குமா என்று ஒரு பெரும் சந்தேகம்.
இன்று மீண்டும் புறப்பாடு படித்துக் கொண்டிருக்கிறேன்.
இதில் ‘உப்பு நீரின் வடிவிலே..” மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பிடித்த பாடலின் துவக்க வரிகள் மனதுக்குள் வந்து விட்டன. ஒன்று எங்கள் ஜாதியே.. ஒன்று எங்கள் நீதியே. உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே.
என்னை விட வயதில் 7-8 வருடங்கள் மூத்த, பண்ணையாள் கிறுக்கனின் நினைவு வந்துவிட்டது. டெண்ட் கொட்டாய் சினிமாப் பார்க்கப் பெற்றோர் அனுமதியோடு, அழைத்துச் செல்லும் நண்பன் அவன். பெற்றோர் முன்னால், இருக்கும் அரசியல் சரிகள் தளர்ந்து, சினிமாக் கொட்டாயில், ஒரே முறுக்கை இருவரும் பகிர்ந்து கொள்ளும் நட்பு. டீயைக் குடித்து விட்டு, தலைப்பாகையை அவிழ்த்து, அதில் முடிந்திருக்கும் புகையிலையை எடுக்கும் போது வரும் மணம் ரொம்பப் பிரியமாக இருக்கும்.
மதுரை வீரன் படம் பார்த்த அடுத்த நாள், உயர்ந்த கரும்புத் தோட்டத்தில் எருமை மேய்த்துக் கொண்டே அவன் அக்கதையை மீண்டும் எனக்குச் சொன்னது முந்தைய பிறவி போல் இருக்கிறது. அவன் கண்களில் தெரிந்த அந்த மகிழ்ச்சி – கால் வயிற்றுக் கஞ்சிக்காக உடலையும் உயிரையும் அடகு வைத்ததன்றி, வேறொன்றும் இல்லாத வாழ்வில், சில மணி நேரங்கள் அவனுக்கு ஒரு பொன்னுலகை நிகழ்த்திக் காட்டிய மாமனிதர் அவர். பின்னால், படித்து நகரம் சென்ற காலங்களில், அவரை ஒரு கோமாளி என்றே கிண்டல் செய்து வந்திருக்கிறோம். ஆனால், சமூகத்தில் நடக்கவே நடக்காத பல சமூக மாற்றங்களை, திரையில் நடத்திக் காட்டிய அவர் ,அவனின் மீட்பர் என்று இன்று தோன்றுகிறது.
”இதோ இந்தக் கரிய மனிதர்களின் கண்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன. சிலர் சன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் மேல் ஒளியும் நிழலுமாகப் படபடத்தோடுகிறது பாடல். சிலர் கண்மூடித் தங்களுக்குள் அலைகிறார்கள். சிலர் தாளம் போட்டு பின் அதை விட்டுவிட்டு வேறெங்கோ சென்று விடுகிறார்கள்”
வார்த்தைகளை வண்ணமாகக் கொண்டு, மனத்திரையில், என்றும் அழியாச் சித்திரங்களை உங்கள் தூரிகை வடித்து விடுகிறது.
“தமிழ் மண்ணுடனும், வாழ்க்கையுடனும் என்னை வாழ்நாள் முழுக்க பிணைத்து நிறுத்துபவை இந்தப் பாடல்கள் தான்.. இந்தப் பாடல்களின் சாலை வழியாகச் சென்று நான் அனைத்தையும் தீண்டி விட முடியும்”
என்றோ ஒரு நாள் வேலை முடிந்து வீடு செல்லும் பயணம் – முடிந்த அந்த நாளின் துயரம் மனத்தை அழுத்த, மகன் என்றோ தரவிறக்கிக் கொடுத்த ராஜாவின் ”மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட..” காதுக்குள் சென்று பரவிய அந்தக் கணம் – அது தந்த நிம்மதி –
”ஏதோ சொல்லவந்தவரால் சொல்ல முடியவில்லை.. ‘ஒண்ணில்ல’ திரும்பிப் படுத்தவர்களைப் பார்த்தார். ‘பாவப்பட்ட சனங்க தம்பி நாம’
பல லட்சம் பேர் கோடிப் பிரார்த்தனைகளுடன் கண்ணீர் மல்கி நோக்கி நின்றவை.. கை நீட்டி இரந்தவை..
அழ வேண்டும் போலிருந்தது. ஆனால், அழுகையும் வரவில்லை..”
வியாபாரத்துக்காக தென் ஆசிய நாட்டில் கப்பலில் சென்ற தமிழ் வணிகர்களின் பேச்சுக்கள் நிகழ்ந்த கணங்கள் என்றோ மறைந்து விட்டன. ஆனால், அவை மறையாக் கணங்களாய் உறைந்து நிற்கின்றன – சிங்காரம் என்னும் பெருங்கலைஞரால்.
கறுப்பு வெள்ளைப் படங்களும், பாடல்களும் அவை தந்த பேரின்பமும் அவ்வாறே நிலைபெற்று நிற்கின்றன. திகட்டவே இல்லை.
பாலா
அன்புள்ள பாலா
இந்த அனுபவத்துக்கு இன்னொரு முகமும் உண்டு. 1984 முதல் நான் ஆந்திராவில் பயணம்செய்து வருகிறேன். ஆனால் 2005, 2008 ல்தான் விரிவான பயணம். அப்பயணத்துக்குப்பின் ஆந்திராவின் திரைப்பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். பழைய பாடல்கள். அவை எனக்கு ஆந்திர மக்களின் முகங்களாக , நிலமாக, தெரிய ஆரம்பித்தன. இன்று ‘ராகமயி ராவே’ என்ற பாடலைக் கேட்டால் நான் கோதாவரிக்குச் சென்றுவிடுகிறேன்
ஜெ