செவிவழி சொல்லப்பட்ட ( நூல் ஆசிரியர்க்கு.) ஒரு சேதி நெடு நாட்களாக புதைந்து புல்மண்டிக்கிடந்த ஒரு சமூகத்தின் கல்லரையை கண்களுக்குப் புலப்பட வழி செய்திருக்கிறது .
மதராசப்பட்டின வரலாற்றுச் சுவடுகளில் எழுதமறந்த தலித்துகளுக்கான இடத்தை தொட்டுக் காட்டியிருக்கிறது ஜெயமோகனின் வெள்ளையானை.
அழுத்தமான தரவுகளற்ற புனைவு என்றாலும் இந்த வரலாறு இப்படித்தான் இருந்திருக்கக்கூடுமென்ற உணர்வை ஒரு கோட்டுச்சித்திரமாக இன்றைய தலைமுறைக்கு வெள்ளையானை விதைத்திருக்கிறது.
சென்னை கடற்கரைச்சாலையில் விவேகாநந்தர் இல்ல நிறுத்தத்தில் இறங்க பேரூந்துகளில் இன்னும் ஐஸ் அவுஸ் என்று பயணச்சீட்டு கேட்பவர்களை பார்த்திருக்கிறேன்
அன்றைக்கு கிழக்கிந்தியக்கம்பெனி கட்டுப்பாட்டில் இருந்த மதராசப்பட்டினம் ஐம்பத்தேழுகளில் சிப்பாய் கலகம் அரங்கேறியபோது விக்டோரியா அரசியாரின் நேரடி நிர்வாகத்துக்கு கைமாறியது. அந்தக்காலங்களிலேயே இந்த ஐஸ் அவுசில் குளிர் பனிக்கட்டி வர்த்தகம் செய்தவர்கள் அமெரிக்கர்கள்.
பூமியின் குளிர்ந்த பிரதேச ஏரிகளில் உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை அறுவடை செய்து இந்த ஐஸ் அவுசில்தான் இந்தியாமுழுமைக்கும் சில்லரை வர்த்தகம் நடத்தினார்கள். அந்த வர்த்தகத்துக்கு அடித்தளமாக இருந்தவர்கள் அத்தனை பேரும் தலித்துகளே.
இந்த நிறுவனத்தில் வயிற்று பசிக்கு விலங்கினும் கீழாக பணியாற்றியவர்கள் நகரத்திலேயே ஒதுக்கப்பெற்ற தலித்துகள்தானாம்.பதினெட்டாம் நூற்றாண்டுக்கிடைப்பட்ட காலத்தில் இந்த நிறுவனத்தில் எதிர்பாராமல் வெடித்த ஊழியர் முற்றுகையொன்று முழுக்க முழுக்க தலித்துகளால் நிகழ்த்தபடுகிறது. வர்த்தக நிர்வாகத்தை எதிர்த்து நிகழ்ந்த அந்த முதற்தொழிலாளர் போராட்டம் பிரிட்டீஷ் அடக்கு முறையாலும் அடுத்தடுத்த அடுக்கு சாதியிராலும் தோற்க்கடிக்கப்படுகிறதுஇந்த போராட்டமே இந்த தேசத்தின் அடுத்தடுத்த ஊழியர் உரிமைக்குரலுக்கு முதற்ப்படி என்று பேசுகிறது வெள்ளையானை.
தலித் இலக்கியங்கள் தங்களோடு சேர்த்துக்கொள்ளத்தக்க இந்த புத்தகத்தை ஏறக்குறைய நானூறு பக்கங்களில் நேர்த்தியாக அச்சிட்டு தந்திருக்கிறது எழுத்து பதிப்பகம்.
இந்த எழுத்தோவியம் ஏரக்குறைய பதினெட்டாம் நூற்றாண்டு மத்தியில் நிகழ்வதாக கொள்ளலாம். கதையின் மையக்கருத்தாக கொள்ளப்பட்ட ஐஸ் அவுஸ் முற்றுகை அப்போதுதான் நிகழ்ந்திருக்கிறது.
பதினேழாம் நூற்றாண்டுகளில் கனவுகளிலேயே வாழ்ந்து அற்ப ஆயுளில் மறைந்துபோனவன் பிரிட்டீஷ் கவிஞன் ஷெள்ளி. அவனுடைய நாத்தீக இழையோடும் வார்த்தைகளில் ஊறிக்கிடந்த ஒர் ஐரீஷ் இளைஞன் சென்னப்பட்டணத்தின் பிரிட்டீஷ் காவல் பாதுகாப்புப் படையின் மேலாளராக பொறுப்பேற்கிறான்.
இயல்பாகவே இளகிய மனதையும் நேர்மை நெஞ்சத்தையும் பெற்றிருந்த இளைஞன் ஏய்டன் பர்னை இந்த மண்ணில் நிலவிய விசித்ரமான போக்குகள் அலைக்கழிக்கிறது.விலங்கினும் கீழாக இந்த மண்ணுக் குறியவர்கள் நடத்தப்படுவது அவனுக்கு பெரிதும் வேதனையை அளிக்கிறது. தான் அவர்களுக்கு ஏதாவது செய்தாகவேண்டு மென்ற உள்ளுணர்வு அவனிடையே துளிற்கிறது.
அப்போது ஐஸ் அவுஸ் நிறுவனத்தில் நிகழ்ந்த ஒரு கொலை சற்றும் எதிர்பாராமல் வெளிப்பட்டு குற்றவாளிகளை கூண்டுகளில் ஏற்ற புலனாய்வில் இறங்குகிறான் ஏய்டன்.மதராசப்பட்டினம் வெள்ளை நகராகவும் கருப்பு நகராகவும் எதிர் எதிராக நின்றிருந்த காலம்.வெள்ளைநகர சொகுசு வாழ்க்கையும் கருப்ப நகர நரக வாழ்க்கையும் ஏய்டனின் கண்களுக்குப் புலப்படுகிறது.
ஏய்டனின் இந்த பயணத்தில் அந்த நூற்றாண்டில் நிகழ்ந்த மிகப்பெரிய பஞ்சமும் மையம் கொள்கிறது.
தன் பணியில் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பெற்று கனவுகளோடு வந்த அந்த ஐரீஷ் இளைஞனை அதிகாரவர்கம் தன்னில் கரைத்துக் கொள்கிறது.
துயரத்திலும் தோல்வியிலும் முடிவுக்குவரும் இந்த நிகழ்வுகளை நீட்டி ஒரு சொல்லோவியமாக்கியிருக்கிறார் ஜெயமொகன்.
பகுத்தறிவு எண்ணங்கள் நிறைந்தவர்களும் படித்த இளைஞர்களும் இயல்பாக அறிந்த கருத்துகள்தாம் இந்த புத்தகம் முழுதும் பேசப்படுகிறது.
இந்த நூலில் நான்கய்ந்து பாத்திரங்களை ஏற்படுத்தி தலித்துகளுக்கெதிராக இந்த சமூகம் கையாண்ட அறத்தை நூலாசிரியர் தொடர்ந்து பேசுகிறார். இணையதளத்தில் அன்றாடம் அவர் நிகழ்த்தும் ஓயாத விவாதங்கள் இந்த சொல்லோவியத்துக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது என்று சொல்லலாம்.
காத்தவராயன்
கருப்பன்
வண்டியோட்டி ஜோசப்
கிருத்துவ பாதிரியார் பிரண்ணன்
ஒரு மாறுதலுக்காக வரும் மரிசா
எல்லாருமே மாறிமாறி நம் முகங்களில் அறைகிறார்கள்
இந்த தலித் பாத்திரங்கள் இழிநிலையில் இருந்தாலும் நிலைகுலையாமல் நிமிர்ந்து பேசுகிற அறிவு ஜீவிகளாகவே நெஞ்சில் நிற்கிறார்கள். இந்த சமூகத்துக்கெதிரான கூற்றுகளை எள்ளி நகையாடியும் உரத்தகுரலிலும் இந்த பாத்திரங்கள் நூலின் பக்கங்களை நகர்த்துகிறது. இந்த நூலின் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கும் புரவிகளின் பாச்சலைப்போல நூலின் முற்பகுதி இலக்கினை நோக்கி விருவிருப்பாக பயணிக்கிறது. இலக்கு தோற்கடிக்கப் பெற்றபோது நூலின் பிற்பகுதி சோர்வுற்று நகருகிறது.
ஆசிரியர்க்கு மதராசபட்டணத்தின் மொழி பரிச்சிய மில்லாததால் நூலின் உரையாடல்கள் முழுதும் ஆங்கில – தமிழ் ஆக்கமாகவே எழுதப்பட்டிருக்கிறது. உரையாடலில் உயிரின்றி காணப்பட்டாலும் நூல் எல்லாரும் படிக்கத் தக்கதாய் இருப்பது நல்ல விஷயம். பிராந்திய வழக்கால் மொழிக்கேற்படும் இடையூறு தவிற்க்கப்பட்டு ஒரு முழுமையான சொல்லோவியமாக மிளிருகிறது வெள்ளை யானை.
இந்த நூலின் மையப்புள்ளியாக நிற்கும் பிரமாண்டமான குளிர் பனிக்கட்டியையே வெள்ளையானையாக உருவகப்படுத்துகிறார் ஆசிரியர்.
‘ யானையை சிறிய குச்சியால் பழக்கி ஆட்டிவைக்கிறான் இந்த சிறிய மனிதன் . அதன் கால்கள் , அதன் தந்தங்கள் , அதன் துதிக்கை, அதன் செவிகள் எல்லாமே அவனுக்கு கட்டுப்பட்டுவிட்டன. ஆனால் இன்னும் இந்த கண்கள் அவனை ஏற்கவில்லை. யானையின் கண்களை மனிதர்கள் புரிந்து கொள்ளவே முடியாது. இருளுக்குள் உறையும் நெருப்புபோல ஏதோ ஒன்று அங்கே இருக்கிறது.
யானை வஞ்சகங்களை மறப்பதே இல்லை என்கிறார்கள் .அது ஏன் மனிதனுக்கு பணிந்து போகிறது என்ற தீராத வியப்பு.’
யானையை இந்தியாவுக்கு உவமையாக ஆசிரியர் பேசும்போது நம்மையும் சிந்திக்க வைக்கிறது.
இந்த நூலின் தொடக்கமே அற்புதமாக நிகழ்கிறது. அயர்லாந்தில் ஏய்டன் பர்ன் தாயையும் தந்தையையும் பிரியும் நிழ்வு நெஞ்சில் நிற்பவை.
இந்த நூலை மெச்சிப்பேச பல்வேறு பக்கங்கள் இருக்கின்றன. நெஞ்சை நெகிழச்செய்யும் இடங்களும் முகத்தில் மாறிமாறி அறையும் வரிகளும் அடுத்தடுத்து வருகின்றன.அந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சத்தை ஆசிரியர் விவரிக்கும்போது நெஞ்சம் நடுங்குகிறது.இன்றைய இளைஞர்களுக்கு பசியின் கொடூரம் புரிந்திருக்க வாய்ப்பில்லை.அவர்கள் வேண்டுமானால் எளிதாக இந்த பக்கங்களைத் தாண்டலாம்.
பிரிட்டீஷ் அதிகாரிகள் இந்த தேசத்தை எத்தனை துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை புத்தகத்தின் பல்வேறு பக்கங்களில் ஆசிரியர் தெளிவாக பேசுகிறார்.
இந்த தேசத்தில் பிராமணர்களது நிலையை அவர் விளக்குவது அழகானது.புனையப்பட்ட கதையென்றாலும் இடையிடையே நிஜமான மனிதர்களும் நிஜமான அபூர்வ பொருள்களும் இடம் பெறத்தவறவில்லை.
கனவாய் முடிந்து மந்தையோடு மந்தையாக ஏய்டன் பர்ன் இணைகின்ற அந்த கடைசி அத்யாயம் யதார்த்தமானது.
வாசிக்கும் பழக்கம் மங்கிப்போன ஒரு சராசரி வாசகனான என் பார்வையில் ஏற்பட்ட நூலுக்கு எதிர் மறையான எண்ணங்கள் என்னவாக இருக்கும் ?தோல்வியிலும் துயரத்திலும் முடியும் எந்த படைப்பும் மனித மனங்களில் வெருமையையே நிரப்புகிறது.உரையாடலில் பிராந்திய மொழிகளில் பழகிப்போன வாசிப்பு நூலை அன்னியமாக்குகிறது.அழுத்தமான தரவுகளற்றபோது வரலாற்றிலிருந்து விலகி படைப்பின் திடம் குன்றிவிடுகிறது.படைப்பு முழுதும் ஆசிரியன் குரலே பல்வேறு பாத்திரங்களாக ஒலிக்கிறது.
இவையெல்லாம் இந்த புதினத்தின் இனிய மொழியை நேசிக்கும்போது சொர்பமானது.
வெள்ளையானை இன்றைய எழுத்துகளில் ஒரு முதன்மையான புத்தகம் ! அதற்கான அங்கீகாரம் தானே கிடைக்கும்!
____________________________________________________
வெள்ளையானை ஜெயமோகன் எழுத்து பதிப்பகம் 2013 மதுரை 625 004 விலை ரூ 400 — நன்றி திண்ணை இணைய இதழ் 08 டிசம்பர் 2013