1980-களின் இறுதியில் நான் பள்ளி மாணவனாக இருக்கும்போது ஒரு பேச்சுப் போட்டிக்கு பள்ளி சார்பில் அனுப்பப்பட்டேன். எனக்கு பேச்சினை எழுதித் தந்த தமிழாசிரியர் “அறிஞர் அண்ணா” வெளிநாட்டுப் பல்கலைக் கழகத்தில் எப்படி அவர்களே வியக்கும் வண்ணம் ஆங்கிலத்தில் பேசி டாக்டர் பட்டம் பெற்றார் என்பதை உணர்ச்சிகரமாக எழுதித் தர, நான் அதை விட உணர்ச்சிகரமாக அதைப் பேசி மாவட்டக் கல்வி அலுவலரிடம் பரிசும் பெற்று வந்தேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, பல வாசிப்புகளுக்குப் பின்னர் தெரிகிறது ஒரு நடக்காத சம்பவத்தை எப்படி தமிழ்நாடே இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறது என. எப்படி சாத்தியம் இது? நான் என்னை அவதானித்ததில் ஒன்று உணர்கிறேன். வாசிப்பும், அதனை ஒட்டிய சுய சிந்தனையும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டும் வரை எனக்கு புனைவையும், வரலாறையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. எனது கல்லூரிக் காலங்களெல்லாம் முடிந்த பிற்பாடுதான் இந்த மெல்லிய கோட்டை பார்க்கும் கண்கள் திறந்தன. அதுவரை புனைவெல்லாம் எனக்கு வரலாறுதான். முதிரா இளமைக் காலத்தில் மிகு புனைவும், வீர வழிபாடும் சரியாகப் பொருந்தும் சரித்திர புருஷர்களே நமக்கு முன்னுதாரணங்கள். வாசிப்பையும், அறிதலையும் அக்கணத்தோடு நிறுத்திக் கொண்டுவிட்டோமானால் நமது வாழ்க்கை முழுவதற்கும் அவர்களே நாயகர்கள், அவர்கள் குறித்த மிகு புனைவே நமக்கு வரலாறு. அவ்வாறானால் புனைவையும், வரலாறையும் இணைக்கும் எழுத்தின் கடமை என்ன?
தமிழில் நமக்கு மிகுதியும் வரலாறும், புனைவுகளும் தனித்தனியே வாசிக்கக் கிடைக்கின்றன. வரலாற்று பாடப் புத்தகங்களிலும், புனைவுகள் சராசரி படைப்புகளாகவும். இரண்டும் இணைந்து நிற்கும் புள்ளி சார்ந்த படைப்புகள் தமிழில் சற்று குறைவே என்கிறது என் வாசிப்பு. ஏன் புனைவும், வரலாறும் இணைந்து நிற்கும் எழுத்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று?
வரலாறு எப்போதும் அறிவியலின் முறைகளைக் கையாளக் கூடியது. உறுதியான ஆதாரங்களும், அழுத்தமான தரவுகளும், நிரூபிக்கப்பட்ட சான்றுகளும், அறுதியான உறுதிப்பாட்டு முறைகளும் கொண்ட அமைப்பாக வரலாறு இருக்கிறது. வரலாறு விடுபடல்களை அனுமதிக்கிறதே தவிர தவறான தகவல்களை வெகு நாட்கள் தன்னிடம் அனுமதிப்பதில்லை. வரலாறு ஒவ்வொரு நாளும் உருவாவது மட்டுமல்ல, தன்னைத் தானே ஒவ்வொரு நாளும் சீர்படுத்திக் கொண்டும்தான் இருக்கிறது. தவறான வரலாற்றுத் தகவல்கள் ஒவ்வொரு தினமும் மறுக்கப்பட்டு வரலாறு தன்னை புதுப்பித்துக் கொண்டேதான் இருக்கிறது. புனைவோ இத்தகைய நிர்பந்தங்கள் ஏதுமில்லாதது. படைப்பூக்கத்தின் நேர்மை ஒன்றை மட்டுமே கைக்கொண்டு புனைவு எந்த எல்லைகளையும் சென்றடைய முடியும். வரலாறு அதற்கே உரிய காலத்தை எடுத்துக் கொள்ளும்போதோ, அல்லது அதற்கான தரவுகளின் கண்டடைதலுக்கு காத்திருக்கும்போதோ உருவாகும் இடைவெளிகளை புனைவு இட்டு நிரப்பிவிடும். வாசிப்பின் மொழியில் சொல்வதானால் வரலாற்றின் வழியே ஒரு இலக்கியம் சாத்தியமாகிறது. அதே நேரம் புனைவின் வழி வரும் வரலாறு, தகவல்களாக இல்லாமல் வாசிப்பவரை அந்த நிகழ்வுகளின் பங்கேற்பாளர்களாகவே உணரச் செய்கிறது. ஒரு கணமேனும் வரலாற்றில் நம்மையும் வாழச் செய்து விடும் வல்லமை புனைவுக்கு உண்டு. இதனாலேயே உலகம் முழுவதும் வரலாறும், புனைவும் இணையும் வரலாற்றுப் புனைவுப் படைப்புகள் பெரும் புகழ் அடைகின்றன. இரண்டின் விகிதாச்சாரங்கள் குறித்த விமர்சனங்களும் அதிகம்.
தமிழில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை கவனித்தால் இப்படி வகைப்படுத்தலாம். ஒன்று நமது மரபின் தொடர்ச்சியாகப் பயின்று வரும் புராண, இதிகாசங்களின் மீதான புனைவுப் படைப்புகள். பெரும் கதைக் களஞ்சியமாகத் திகழும் அவற்றின் ஊடுபாவுகளுக்குள் நுழைந்து அச்சிறு இடைவெளிகளில் தனது படைப்பின் தாக்கத்தை ஒரு எழுத்தாளன் காட்டிவிட முடியும். கம்பனில் தொடங்கி இப்போதைய எஸ்.ராமகிருஷ்ணன் வரை இந்த மரபு தமிழில் உண்டு. இரண்டாம் வகை, நிறுவப்பட்ட வரலாற்று மூலங்களில் இருந்து படைப்பினை புனைய எழுத்தாளன் முயல்வது. அதாவது தரவுகளும், ஆதாரங்களும் கொண்ட ஒரு வரலாற்று நிகழ்வை ஆதாரமாகக் கொண்டு தனது படைப்பை உருவாக்குவது. இந்த முயற்சி எழுத்தாளனுக்கு மிகுந்த சவாலானது. புனைவின் சுதந்திரம் வரலாற்று நிகழ்வுகளின் ஆதாரங்களால் வரையறை செய்யப்படும் என்பது மட்டுமன்றி படைப்பு செல்ல வேண்டிய திசையின் வழிகாட்டியும் வரலாறுதான். இங்கே புனைவின் வழியே படைப்பினைக் கொணர எழுத்தாளனுக்கு வரலாற்றில் இல்லாத மாந்தரை உருவாக்கி படைப்பினுள் நுழைக்கும் சுதந்திரம் உண்டு. ஏனெனில் அதன் வழியேதான் வரலாறும், புனைவும் இணையும் புள்ளி உருவாகி வரலாற்றுப் புனைவிலக்கியப் படைப்பு என்ற ஒன்று சாத்தியமாகிறது.
இரண்டாம் வகை முயற்சிகள் பெரும்பான்மையும் கடும் உழைப்பைக் கோருபவை. ஆதாரங்களும், தரவுகளும் தரும் நிகழ்வின் சட்டகத்திற்குள் ஒரு கதையினை உருவாக்கி இணைக்க வேண்டிய நிர்பந்தம் எழுத்தாளருக்கு. இந்த சவாலை சந்திப்பதில் இரு நிலைகள் இருக்கின்றன. வரலாற்றுப் புனைவிலக்கியம் என்ற நிலைப்பாட்டை கவனமாகத் தவிர்த்துவிட்டு வரலாற்றை கதைக் களமாக மட்டுமே கொள்ளும் வரலாற்றுக் கதையாடல் என்பது ஒரு நிலை. இங்கு எழுத்தாளருக்கு வழக்கமான புனைவின் முழு சுதந்திரம் கிடைத்து விடுவதோடு மட்டுமல்லாமல் வரலாற்றுப் புனைவு என்கிற கூடுதல் தனி முத்திரையும் கிடைக்கும். அதாவது கதைக்கும், வரலாற்றுக்கும் இடையே நேரடித் தொடர்பு இல்லாமல் வரலாறு வெறுமே கதைக்கு கட்டியம் கூற மட்டுமே பயன்படுத்தப்படும். இவ்வகை எழுத்துகளே தமிழில் வரலாற்றுப் புனைவுகளின் வரிசையில் அதிகம். கல்கி, சாண்டில்யன் தொடங்கி பாலகுமாரன் வரை ஒரு பட்டியல் இட முடியும் இவ்வரிசை எழுத்தாளர்களில். ஆனால் வெகு குறைவான படைப்பாளிகளே இந்த சவாலை வெற்றிகரமாக கையாள முடிந்திருக்கிறது. பொதுவான உதாரணமாகக் கூற வேண்டுமென்றால் கல்கியின் “அலை ஓசை”. தேச விடுதலைப் போராட்டத்தின் பின்புலத்தைக் கொண்டு உருவான இக்கதை தேச விடுதலைப் போராட்ட சம்பவங்களும், அவை நடுத்தர வர்க்க பிராமண குடும்பங்களில் உருவாக்கிய பாதிப்புகளையும் கதை நிகழ்வுகளாகக் கொண்டு நெய்யப்பட்டிருந்தது. கல்கியின் இவ்வாறேயான மற்றுமொரு படைப்பு “தியாக பூமி”. ஆனால் அவை இன்று வரலாற்றுப் புனைவு என்று வகைப்படுத்தப்பட்டாலும் உருவாக்கப்படுகையில் அவை சமகால நிகழ்வுகளையே பேசியிருக்கின்றன. காலத்தால் வயதாகி விட்டதால் வரலாற்றுப் புனைவு எனும் அடையாளம் அவற்றுக்கு இயல்பாகவே உருவாகிவிட்டிருக்கிறது.
மெய்யாகப் பார்த்தோமானால் தனது காலத்திற்கு வெகு முன்பு நடந்து வரலாறாக நிலை பெற்றுவிட்ட சம்பவங்களின் இடையே உள்ள நிரப்பப்படாத அல்லது சொல்லப்படாத இடைவெளிகளில் வெளிச்சம் வீசும் வரலாற்றுப் புனைவுகள் வெகு குறைவே. அவ்வகையில் காவல் கோட்டம், புயலிலே ஒரு தோணி போன்றவற்றை சுட்ட முடியும். இந்த வகைப்பாட்டில் உள்ளடங்கக் கூடிய அதே நேரம் இலக்கியப் படைப்பாகவும் முன்னிற்கும் ஒரு படைப்பாகத்தான் ஜெயமோகனின் “வெள்ளையானை” யை சொல்லலாம்.
உலகின் பெரும் பஞ்சங்களில் ஒன்று நமது மாநிலத்தைக் கடந்து நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் கூட முடியவில்லை. அதன் சுவடுகள் கூட மறக்கடிக்கப்பட்டு விட்டன. 2002-இல் கால்டுவெல் குறித்த ஒரு வாசிப்பில்தான் இப்படி ஒரு பஞ்சம் இங்கு நிகழ்ந்ததையே வாசித்தேன். அதுவரை நான் அறிந்ததெல்லாம் பாடநூல்களில் கண்ட “கிரேட் பெங்கால் பேமைன்” தான். தமிழில் தாது வருடப் பஞ்சம் என்று குறிப்பிடப்படும் இது உலகின் மிகப்பெரிய செயற்கைப் பஞ்சம் என்பதை வாசித்தபோது மிகுந்த அதிர்ச்சி. பஞ்ச காலத்தின் மழை அளவு அதற்கு முந்தைய காலங்களின் மழை அளவுக்கு குறைந்ததல்ல. பஞ்ச காலங்களின் போது இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கான தானிய ஏற்றுமதி அளவு குறையவே இல்லை என்பதற்கான தரவுகளை (பசுமைப் புரட்சியின் கதை – சங்கீதா ஸ்ரீராம் – காலச்சுவடு) காண மனம் வெம்பி விட்டது. இப்படி ஒன்றை உணர 20 வருட வாசிப்பு தேவை என்றால் அப்படி இல்லாதவர்களுக்கு இந்த பஞ்சம் நிகழ்ந்ததே தெரியாமல் போனதில் வியப்பென்ன?
வெள்ளை ஆட்சியாளர்களுக்கு இப்பஞ்சம் உருவாக்கி அளித்த தொழில் வாய்ப்புதான் சோற்றுக்கு வழியின்றி கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி நகர்ந்த பெரும் மனித மந்தைகள். அவர்களில் பெரும்பான்மையும் தாழ்த்தப்பட்ட இனம். மொத்தப் பஞ்சத்தின் சுமையும், அழுத்தமும் அந்த இனத்தினராலேயே தாங்கப்பட்டது. அவர்களே அச்சுமையால் நசுங்கி செத்தவர்கள். கரும்புத் தோட்டங்கள், தேயிலைக் காடுகள், ரப்பர் தோட்டங்கள், வாழைத் தோட்டங்கள், அவுரி வயல்கள் என உலகின் அனைத்து பணப் பயிர்களுக்கும் உரமாகிச் சிதைந்தவர்கள் அவர்கள்தாம். வெள்ளையானை படைப்பின் மையம் இப்பஞ்சமும், உடல் ஆரோக்கியம் சுரண்டப்பட்டு புண்ணுடலுடன் வாழுமாறு பஞ்சத்தால் நிர்பந்திக்கப்பட்ட தலித் மக்களும், அவர்கள் முயற்சித்த முதல் வேலைநிறுத்தமும், அதைச் சிதறடித்த ஆளும் வெள்ளை அதிகாரம் மற்றும் உள்ளூர் சமூக அதிகாரங்களின் கூட்டும்.
ஒரு படைப்பாக வெள்ளையானையைக் காண்போமானால் அதன் கதை அமைப்பு, சொல்லப்பட்ட விதம், காட்சி/நிகழ்வுகளின் சித்தரிப்புகள், கதை மாந்தர்கள், உரையாடல்கள் என ஒவ்வொரு கூறையும் விரிவாகப் பேச முடியும். புனைவின் மொழி ஜெயமோகனுக்கு வசப்பட்டிருக்கிறது என்று சொல்வது தமிழிலக்கிய உலகில் 20 வருடங்களைத் தொடப்போகும் பழைய சொல். அம்மொழியை வெள்ளையானையிலும் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் எனலாம். மொத்த படைப்புமே இங்கு பணிபுரிந்து வரும் ஐரிஷ்காரனான எய்டனின் பார்வையில் நகர்கிறது. எய்டனின் பார்வைக்கோ, கவனத்துக்கோ வராத எதுவும் படைப்பில் வாசகனுக்கு நேரடியாகத் தரப்படவில்லை. ஏன் எய்டன் வழியே கதை சொல்லப்பட வேண்டும்? ஜெயமோகனே சொல்வது போல எய்டனின் பார்வையில் கதை நகர்வது அன்றைய வட்டார மொழி வழக்கு கதையில் பயன்படுத்தப்படுவதிலிருந்து ஒரு ஆசுவாசம் தருகிறது. ஆனால் எய்டன் பிரிட்டனுக்காக, மகாராணியாரின் சேவையில் இருந்தாலும் அவன் மனதளவில் தன்னை ஆங்கிலேயனாக உணர்ந்தவனல்லன். அவன் பிரிட்டனை தனது தாய்நாடாகக் கருத முடியாத இடத்திலிருந்து வருகிறவன். அதனால்தான் அவனால் ஒரு சிறு விலக்கத்துடன் இங்கு நடப்பவற்றை கவனிக்க முடிகிறது. அவனது கதாபாத்திரம் எப்போதுமே ஒரு மனவிலக்கம் கொண்டதாகத்தான் இருக்கிறது. சிறு வயதிலிருந்தே தனது குடும்பத்துடன், தந்தையுடன் ஒரு அடி விலகியே இருக்கும் அவன் தனது பயிற்சிக்குப் பின்னர் வீடு திரும்பும்போது தனது விலகி நிற்கும் மனோபாவத்தை நேரடியாக உணர்கிறான். ஆனால் அந்த விலக்கம் அவனது சராசரித் தன்மையிலிருந்து அவனைத் தள்ளி வைக்கும் அளவுக்கு வலிமையானதில்லை. தலித் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், அதை மாற்ற முயற்சிக்கும் தருணம் தோறும் அவன் கையறு நிலையில் சென்று நிற்பதை உணரும் பொழுதுகளில் மதுவில் தன்னை மூழ்கடித்துக் கொண்டு ஷெல்லியைப் புலம்புவதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாத நிலையில்தான் எய்டன் கதை முழுதும் வருகிறான். ஐஸ் ஹவுஸ் தொழிலாளர் வேலை நிறுத்தப் பிரச்சினையில் அவனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து பதவி உயர்வு என்ற சமரசத்துடன் தென்காசியில் பதவி ஏற்று கதிரவனின் ஒளிக் கீற்றை பனிக்கட்டியில் பார்த்து, “ஏசுவின் ரத்தத் துளி” யை அருந்தி, கழிவிரக்கத்தில் தன்னை ஆழ்த்திக் கொள்வதுடன் முடிந்தே போகிறான் எய்டன். ஒப்பு நோக்க எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் வண்டியிலிருந்து இறங்கி ஓடிய ஆண்ட்ருவே கதை நாயகன்.
காட்சி சித்தரிப்புகள் மிகச் சிறந்த முறையில் அமைந்திருக்கின்றன. ஒரு சித்தரிப்பு வாசகனுக்கு என்ன உணர்த்தும்? நிகழ்விடத்தை, அதன் ஓசைகளை, கால நிலையை, கதாபாத்திரங்களின் செயல்களை, உடல் மொழியை – இதன் வழியே சம்பவத்தின் காட்சி வாசகனுக்கு அகக்கண்ணில் புலனாகும். எழுத்தாளன் தான் கண்டதை வாசகனும் காணவேண்டி சித்தரிப்புகளை உருவாக்குகிறான். ஆனால் எழுத்தாளுமை மிக்க எழுத்தாளர்களின் சிறப்பே அவர்களது சித்தரிப்பு வெறும் காட்சியை மட்டும் உருவாக்காமல் வேறொன்றையும் வாசகனுக்கு உணர்த்தி விடும் வல்லமைதான். ஜெயமோகனின் சித்தரிப்புகள் இவ்வகையில் முதன்மையானவை. சாதி அமைப்பு இந்தியரிடையே ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பதை எப்படிச் சொல்வது? ஒரு காட்சிப்படுத்தலில் இந்த இடம் வாசகனுக்கு உணர்த்தப்பட்டுவிடுகிறது. எய்டன் ஆணையிட்டால் அவனது காலணியைக் கூட முத்தமிடத் தயாராக இருக்கும் ஒரு கங்காணி; பணமோ, படிப்போ, தொழில் நுட்ப அறிவோ இல்லாத வெறும் மந்தை மேய்ப்பன். ஆனால் எய்டன் எவ்வளவு ஆணையிட்டும் விழுந்து கிடக்கும் தொழிலாளியை நீலமேகம் தொட மறுக்கிறான். மறுப்பை அவன் வெளியிடும் இடம்தான் மிக நுட்பமானது. அசைவற்ற சிலையாக நின்று, கண்களில் கூட எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இறுகி நிற்கிறான். எய்டனின் கூவல்கள், உறுமல்கள், சீறல்கள், முறைப்புகள் அனைத்துக்கும் அந்த சிலைத் தன்மையே பதில். அந்த உடல்மொழி வழியே கங்காணி சொல்வதென்ன? நீ கொலையே செய்தாலும் மௌனமாய் ஏற்றுக்கொள்வேனேயன்றி அவனைத் தொட மாட்டேன் . திகைத்து நிற்பது எய்டன் மட்டுமல்ல, வாசிக்கும் நானும்தான். சாதி எவ்வளவு ஆழமாக ஊடுருவியிருக்கிறது என்பதை இக்காட்சிச் சித்தரிப்பு நல்ல வாசகனுக்கு அதிர்ச்சியுடன் உணரச் செய்கிறது. இப்படியான சித்தரிப்புகள் நிறையவே காணக் கிடைக்கின்றன படைப்பில்.
எய்டனின் கதாபாத்திரத்தை மட்டுமே கொண்டு படைப்பைப் பார்த்தோமானால் ஒரு இலக்கியப் படைப்பின் வெற்றியாகவே காண முடிகிறது. தனது தவிப்பையும், தீரா மனச் சலனங்களையும் ஷெல்லியின் கவிதை வரிகள் வழியாகக் கடக்க முயலும் ஒருவன், தாங்கவொண்ணா மனப்பாரத்தை மதுவால் மூழ்கடிக்க முயலும் ஒருவன், அவன் மனதின் மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் குற்றவுணர்ச்சி அற்ற ஆண்டான் மனோபாவத்தை உணர்ந்து அவனை ஒதுக்கித் தள்ளும் காமக் கிழத்தியை அதிகாரத்தால் வெல்ல முடியாத அளவு நீதி உணர்ச்சிக்கு ஆட்படுகிற ஒருவன், காத்தவராயனின் கம்பீரத்தை மனதால் உணர்ந்து பாராட்டும் ஒருவன் – எய்டனின் பாத்திரப்படைப்பு கதையின் போக்கிற்கு ஏற்ப மட்டுமல்ல, வாசிக்கும் நாம் அந்த நிலையில் இருந்தால் எப்படி யோசிப்போமா அப்படி யோசித்து படைக்கப்பட்டிருக்கும் ஒன்று. எய்டன்தான் நாவலின் வாசகனும் கூட. காத்தவராயனை, ஆண்ட்ரூவை சிலாகிக்கும் நாமெல்லாம் எய்டனின் நீட்சியே. தென்காசி விருந்தின் உரையாடல்களே நாம் இப்படியான சமூகக் குற்றத்தின் மீது எப்படி மனசாட்சியை முகமூடியிட்டு வைத்திருக்கிறோம் என்பதற்கான சரியான உதாரணங்கள். அந்த விருந்தின் உரையாடல்களே இப்படைப்பை வெறும் வரலாற்றுப் புதினம் எனும் இடத்திலிருந்து வரலாற்றுப் புனைவிலக்கியம் என்ற இடத்திற்கு நகர்த்துகிறது.
படைப்பில் வரும் நுண்தகவல்கள் மற்றொரு சிறப்பு. அதுவும் இந்த நுண்தகவல்கள் பயன்படுத்தப்படும் இடம் ஜெயமோகனின் அழுத்தமான எழுத்துத் திறனை வெளிப்படுத்துகின்றன. ஸ்டேஜ் கோச் வண்டிகள் பற்றி வரும் வர்ணனைகள் சிறப்பானவை. அனேகமாக தமிழில் ஸ்டேஜ் கோச் குறித்து இவ்வளவு விவரங்கள் முதல்முறையாக பதிவாகி இருக்கின்றன எனலாம். நுண் தகவல்களைப் பயன்படுத்துவதில் வழு நிகழும் வாய்ப்புகள் அதிகம். அது தகவல்களின் நுட்பங்களால் கவரப்படும் எழுத்தாளன் அதனைப் பயன்படுத்த வேண்டி அவற்றை படைப்பில் இட்டு நிரப்ப முயல்வதுதான். இவ்வழுவையும் வெள்ளையானை வெற்றிகரமாகத் தாண்டியிருக்கிறது எனலாம். ஸ்டேஜ் கோச் வண்டிகள் அனைத்தும் எய்டனால் “கோட்டைக்குள்” மட்டுமே பார்க்கப்படுகிறது. மரிசாவை அவன் கோச்சில் ஏற்றும்போதும் கோச் ஒரு அதிகார அந்தஸ்தின் குறியீடாகத்தான் நிற்கிறது. சுற்றிலும் சோற்றுக்குச் சாகும் கும்பலின் நடுவே எய்டன் பதுங்கி ஒளிந்திருப்பது “கோச்”ச்சுக்குள்தான். மரத்துப் போன மனதுடன் இருக்கும் வழிகாட்டி ஜோசப் கூட சாரட்டின் வெளியே அமர்ந்து வண்டியோட்டி வருபவன்தான். சாரட் வண்டி அதிகாரத்தின், அந்தஸ்தின் குறியீடாக சித்தரிக்கப்பட்டிருப்பது அருமை.
ஒரு இலக்கியப் படைப்பாக வெள்ளையானை பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும் சில கேள்விகள் தோன்றாமலில்லை. புனைவையும், வரலாறையும் இணைப்பதன் அபாயம் என்ன? ஒரு வரலாற்றுப் பாத்திரத்தை புனைவால் கட்டி எழுப்பும்போது புனைவையும், வரலாறையும் பிரிக்கக்கூடிய கோடு மிக மெல்லியதாவதுதான். அதுவும் ஜெயமோகன் போன்ற புனைவின் மொழி சரளமாக வரக் கூடிய ஒருவரின் எழுத்தில் இந்த எல்லைக் கோடு மங்கி மறைந்தே போகும். அப்படியான சில இடங்கள் இப்படைப்பில் இருக்கின்றன. ஒரு கடுமையான குற்றச்சாட்டு ஒரு கதாபாத்திரத்தின் முன் வைக்கப்படுகிறது. இதில் கதாபாத்திரங்கள் வரலாற்று மாந்தர்கள். ஆனால் குற்றச்சாட்டும், அது வைக்கப்படும் விதமும் புனைவின் மொழியில். இப்போது வாசகனுக்கு வரலாற்றுக் கதாபாத்திரங்களின் மீதான ஆதாரம் புனைவிற்கான நம்பிக்கையையும் கொண்டு வந்து விடும். மொத்த சம்பவமும் வரலாறாகி விடும்.
எந்தக் கதாபாத்திரமும் உண்மையான வரலாற்றுப் பாத்திரங்களின் உண்மைப் பெயர்களில் சுட்டப்படாவிட்டாலும் அக்கதாபாத்திரம் யாரைச் சுட்டுகிறது என்பது வாசகனுக்கு உணர்த்தப்பட்டுவிடுகிறது. உணர்த்தப்படுவதுதான் இலக்கியம் சொல்லப்படுவதல்ல எனும் வாக்கிலிருந்து பார்த்தோமானால் இந்தக் கூற்று பொருள் தரும். புனைவின் சுதந்திரம் அந்த வரலாற்றுக் கதாபாத்திரத்திற்கு என்ன செய்கிறது என்ற கேள்வி நேர்மையான ஒன்று எனவே நினைக்கிறேன்.
இந்தப் படைப்பின் மீதான ஒரு விமர்சனமாக இதன் தலித் சார்பு நிலை வைக்கப்படுகிறது. உண்மையாகவே பார்த்தோமானால் தலித் மக்கள் சுரண்டப்பட்டதன், வஞ்சிக்கப்பட்டதன் பெரும் பரப்பிலிருந்து ஒரு சிறு வரலாற்று நிகழ்வே புனைவின் உதவியுடன் படைப்பாகத் தரப்பட்டிருக்கிறது. ஆக படைப்பின் நோக்கம் எதுவோ அதை ஒட்டியே சம்பவங்கள், நிகழ்வுகள் விளக்கப்படுகின்றன. இதன் மற்றொரு தரப்பை ஏன் சொல்லவில்லை என்ற கேள்வி படைப்பாளனை நோக்கி கேட்கப்பட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். அதை படைப்பாளனின் சுதந்திரம் என்றே கொள்வோமானால் அக்கேள்வி என்ன பொருள் பெறும்? படைப்பினை ஒட்டி, அதன் மீதான அடுத்த கட்ட விவாதம் எனும் அளவில் அக்கேள்விக்கான விடை இருப்பது நலம். இல்லையெனில் இப்படைப்பு பேசும் நீதியுணர்ச்சி ஒரு தரப்பின் தர்க்கமாகவே மட்டும் முடிந்து போகும் அபாயமும் உண்டு.
வரலாற்றுச் சமநிலை என்ற ஒரு வாதம் வந்து பொருந்தும் அளவுக்கு வெள்ளையானையில் இடமில்லை என்பதே என் கருத்து. நாளை ஜெயமோகனே மொத்த தமிழக சாதி வரலாறை எழுதுவாரானால் அந்த வரலாற்றுச் சமநிலை படைப்பின் நோக்கமாக கேட்கப்படலாம். வெள்ளையானை வரலாற்று நிகழ்வுகளின் சட்டகத்துள் குறுக்கப்பட்ட, வரலாற்றின் ஒரு மின்னல் கீற்றே. ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றம் மட்டுமே. அனைத்துப் பரிமாணங்களும் இந்தப் படைப்புக்குள் அடைபட்டிருக்கவேண்டியதில்லை. அவற்றை மேலதிக விவாதங்களின் வழியே முன்னெடுக்கலாம் என்பதே என் எண்ணம்.
வெள்ளையானை வரலாற்றுச் சம்பவங்களின் தூண்களால் கட்டப்பட்டுள்ள மண்டபத்துக்குள் நிற்கும் யானை. எல்லைகளற்ற காட்டில் திரியும் கொம்பன் யானை அல்ல. ஆனால் வஞ்சிப்பின் அங்குசத்தாலும், சுரண்டலின் சங்கிலியாலும் கட்டிப் போடப்பட்டுள்ள யானை. யானையை கட்டி மேய்க்கும் பாகனின் துயரம் தனிக் கதையில் வரலாமே தவிர வெள்ளையானை யானையின் பின்காதுப் புண்ணையும், கால்களின் ரணத்தையுமே பேசுபொருளாகக் கொண்டிருப்பதால் அந்தச் சட்டகத்திற்கு உட்பட்டே வாசிக்கப்பட வேண்டும்.
வெள்ளையானை – நமது நீதியுணர்ச்சியின் மீதான அபிப்ராயங்களை கலைத்து அடுக்கும் படைப்புதான்.