முழுநிலவில் இருள் – சிவேந்திரன்

‘புரஹந்த களுவர’ பூரணநிலவில் இருட்டு என்ற இந்த சிங்கள மொழிப்படம் ஒரு செந்திரைப்படம்(classical film).வறட்சியால் பாதிக்கப்பட்ட மிகவும் பின் தங்கிய ஒரு சிங்கள கிராமம்.வன்னிஹாமி என்ற கண்பார்வையற்ற முதியவருக்கு மழைவரப்போவது தெரிகிறது.இராணுவத்தில் இருந்த மகனின் உடல் இறுகமூடப்பட்ட சவப்பெட்டியில் முழுநிலவு நாளொன்றில் அவரின் வீட்டுக்கு எடுத்துவரப்படுகின்றது.மகன் இறக்கவில்லை என்று நம்பும் வன்னிஹாமி அரசாங்கத்தின் நட்ட ஈட்டைப் பெறுவதற்கான பத்திரங்களில் ஒப்பம் வைப்பதற்கு மறுத்து விடுகிறார்.வாட்டும் வறுமையையும் உறவினரின் அழுத்தங்களையும் புறக்கணித்து நட்டஈடு கிடைக்காமல்போனால் போகட்டும் என்று மகன் புதைக்கப்பட்ட இடத்தைக் கிளறிப்பார்க்க முடிவெடுக்கிறார்.

வறுமையால் தனது மகனை போரிற்கு அனுப்பிய ஒரு சிங்கள குடும்பத்தின் வாழ்க்கையை புகழ் பெற்ற சிங்கள இயக்குனர் பிரசன்ன விதானகே அற்புதமாக திரையில் பதிந்துள்ளார்.சிங்கள மக்களின் போரிற்கான உளவியலை இத்திரைப்படம் சிதைத்துவிடும் என்றெண்ணிய ஸ்ரீலங்கா அரசு இத்திரைப்படத்தை தடைசெய்திருந்தது.தடைநீக்கப்பட்ட பின்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது பார்த்திருக்கிறேன்.வருடங்கள் ஓடிமறைந்துவிட்ட போதிலும் மனதை விட்டு அகலாத இத்திரைப்படத்தின் காட்சியொன்று.

வன்னிஹாமியின் மகனின் சவப்பெட்டி அவரின் வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.பார்வை இழந்த அந்த முதியவர் முன்னரே எதிர்வுகூறிய மழை வருகிறது.குடிசையின் பொத்தல் விழுந்த கூரையினூடாக ஒழுகும் மழை சவப்பெட்டியில் விழுகிறது.வறுமையையும் போரையும் இந்த ஒரு காட்சியே கூறிவிடுகிறது.

ஒவ்வொரு முழுநிலவும் சிங்கள பௌத்தர்களுக்கு சிறப்பானவை.அவை நாட்டின் விடுமுறை நாட்கள்.முழுநிலவில் இருட்டு என்ற இப்படம் பௌத்தத்திற்கு முரணான யுத்த இருட்டைக் குறிப்பதாகலாம்.

http://www.youtube.com/watch?v=0yB2ONKiJqU

முந்தைய கட்டுரைவெண்முரசும் நவீனத்துவமும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 34