அகிம்சை

‘அவரவர் ஹிம்சை’ என்ற சொல்லின் சுருக்கமே அகிம்சை. அ[டக்கப்பட்ட]ஹிம்சை என்ற பொருளிலும் அதைச் சொல்பவர்கள் உண்டு. அக ஹிம்சையே அகிம்சை ஆகியது என்றும் சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ·ப்ராய்டிய உளவியலாளர்கள் மஸோக்கிஸமும் சாடிஸமும் சரியாக இணையும் தருணத்தில் அகிம்சை உருவாகிறது என்கிறார்கள்.

அதாவது அகிம்சை என்பது செய்யப்படுபவர்கள் ஒத்துக்கொள்ளும்படி அவர்களை ஹிம்சை செய்வதாகும். இதன்மூலம் அவர்கள் நம்மைத் திருப்பி ஹிம்சை செய்வதை நாம் ஒத்துக்கொள்ளச்செய்யப்படுகிறோம். ஆகவே அவர்களும் அகிம்சை செய்யவைக்கப்படுகிறார்கள். விளைவாக மொத்த நடவடிக்கையுமே அகிம்சையாக ஆகிறது. இதுவே அகிம்சைப்போராட்டம்.

1906 வாக்கில் பின்னர் மகாத்மா என்று சொல்லி அஹிம்சை செய்யப்பட்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கண்டுபிடித்த இந்த வழி இன்று உலகமெங்கும் ஆயுதம் வாங்கும் சக்தியில்லாதவர்களால் அந்தச் சக்தியை அடையும்வரை பரவலாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆயுதங்கள் தீர்ந்து அடித்து நொறுக்கப்பட்டபின்னர் மீண்டும் பேசப்படுகிறது. பொதுவாக இது செய்வதையும் செய்துவிட்டு லபோதிபோ என்று நாலாபக்கமும் முறையிடுவதற்கான சிறந்த சாக்கு என்று அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

காந்தி சிறுவயதிலேயே மாமிசம் முதலியவற்றைத் தின்றும் ஆங்கிலம் கற்றும் அஹிம்சை செய்வதற்குப் பழக முயன்றாலும் பனியாக்களின் வழக்கப்படி அவரால் மனைவியை மட்டுமே அஹிம்சை செய்ய முடிந்தது. ஆகவே பொதுவாழ்வில் ஒரு பனியாவால் செய்யத்தக்க போராட்டமுறைக்காகத் தேடிய காந்தி கண்டடைந்ததே அகிம்சைமுறை.

அகிம்சை முறை என்பது பல படிகள் கொண்டது. பப்புகளில் நுழைந்து ஆரஞ்சு பழச்சாறு கேட்பதும் மிதமிஞ்சி கஞ்சிபோட்ட கழுத்துக்குட்டையைக் கட்டிக்கொண்டு பொது இடங்களில் ஆஜராவதும் இதன் ஆரம்ப படிநிலைகள். மென்மையான நாகரீகமான கனவான்களிடம் இதுவே போதுமானதாகும். அற்றகைக்குத் தனக்குத்தானே கோணலாக முடிவெட்டிக்கொள்ளலாமென்றும் காந்தி கண்டுபிடித்திருக்கிறார். கொடிய எதிரிகளை வெல்ல பலவகை மது மாமிசங்களுடன் அவர்கள் உல்லாசமாக உணவருந்தும் இடத்துக்கு வெட்டிய வெள்ளரிக்காயை மட்டும் கொண்டுவைத்து வைத்து சாவகாசமாக மதிய உணவருந்துவது உதவும். களிமண்பத்து போடப்பட்ட தலையுடன் காந்தி வைஸ்ராய் வேவல் துரையைப் பார்க்கப்போய் அவருக்கு காய்ச்சல் வரவழைத்ததை பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் பீதியுடன் எழுதியிருக்கிறார்கள்.

பேச்சுவார்த்தைகள் சூடேறும்தோறும் மேலும் மேலும் சாந்தமடைவது, நம்மை நோக்கிக் கத்துபவர்களை நோக்கிப் பல் இல்லாத வாயால் புன்னகை செய்வது, கோட்டு சூட்டு போட்டுக் கூடவரும் ஏழடி உயர வெள்ளைக் கனவானின் தோளில் புகைப்படக்காரர் கிளிக்கிடும் கடைசித்தருணத்தில் சட்டென்று எம்பிக் கையைப் போட்டுக்கொள்வது, அவர்களுக்கு குஜராத்தி பழமொழிகளைச் சொல்வது, அவர்களின் சீமாட்டிகளுடன் சட்டைபோடாமல் நின்று கடலைபோட்டு பல்லில்லாமல் கெக்கெக் என்று சிரிப்பது, வைஸ்ராய்களுக்கு வரலாற்றுச் சிறப்புள்ள கடிதங்களை டாய்லெட் பேப்பரில் எழுதி அனுப்புவது, அதற்கு முனை மழுங்கிய பென்சிலைப் பயன்படுத்துவது, அந்தப்பென்சிலைத் தொலைத்துவிட்டு மொத்த சீடர்குழாமையும் தவழ்ந்து தேடவைப்பது, தமிழில் கையெழுத்துப்போடுவது என்று பல அகிம்சைப்போராட்டங்களை காந்தி பயன்படுத்தியிருக்கிறார். அவை சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் பேரரசை கதிகலங்கச் செய்தன என்பது வரலாறு.

ஓய்வு ஒழிவில்லாமல் எழுதுவது ஒரு நல்ல அகிம்சைப்போராட்டமுறை என்றால் நம்மிடம் பேசவருபவர்களிடம் துண்டுப்பேப்பரைக் காட்டி எழுதிக்கொடுங்கள் என்பது அதைவிடச் சிறந்த அகிம்சைப்போராட்டமுறையாகும். தொப்பை உள்ளவர்கள் என்றால் மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் கம்பை ஊன்றியபடி பாய்ந்தோடிச் செய்யும் காலைமாலை நடைகளில் கூடவே கூட்டிச்சென்றபடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடலாம். வெள்ளைக்காரச் சிந்தனையாளர்களை மூன்றாம் வகுப்பு ரயிலில் கூட்டிச்செல்லலாம். கழிவறைகுறித்து அவர்கள் மனக்குறைப்பட்டால் அவர்களையே கழுவச்சொல்லலாம். கூடவே நின்று கழுவினால் அவர்களால் தப்பியோடவும் முடியாது.

மூன்றாம் அகிலத்தின் எதிர்காலம் குறித்து விவாதிக்க வருபவர்களிடம் வேர்க்கடலையின் மலமிளக்கும் இயல்பு குறித்தும், மத்தியக்கிழக்கில் ஐரோப்பியப் படைகுவிப்பு குறித்து பேச விரும்புகிறவர்களிடம் சத்தியத்தைக்கொண்டே குடல்வால் அழற்சியைக் குணப்படுத்தமுடியும் என்பதைப்பற்றியும் விவாதிக்கலாம். விவாதத்திற்குப் பின்னர் அவர்கள் குழம்பிப்போயிருக்கும்போது அவர்களுக்கு அனைத்தையும் தெளிவுபடுத்தும் முகமாக விரிவாகவும் துல்லியமாகவும் மௌனமாக இருந்துவிடலாம். இளைஞர்களிடம் புலனடக்கத்தைப் பற்றியும், முதியவர்களிடம் அமைதியான மரணத்தைப் பற்றியும், இளம்பெண்களிடம் துறவைப்பற்றியும், முதிய பெண்களிடம் அரசியலைப்பற்றியும் விரிவாகப் பேசுவதும் காந்தி சிறப்பாக கடைப்பிடித்து வெற்றிகண்ட அகிம்சைமுறைகளாகும்.

நாஜி பட்டினி முகாம்களில் உண்ணாவிரதப் போராட்டத்தைப் பரிந்துரைத்தும், ஹிட்லருக்கு ராணுவ விருந்துகளில் ஆட்டுப்பாலைப் பரிந்துரைத்தும், சர்ச்சிலுக்குப் பொதுக்கூட்டத்தில் மௌனவிரத்தைப் பரிந்துரைத்தும் காந்தி அகிம்சைப்போராட்டத்தை சர்வதேச அளவிற்குக் கொண்டுசென்றிருக்கிறார். ஈ.வே.ராமசாமிநாயக்கரிடம் தினம் இருவேளை குளிப்பதைப் பரிந்துரைத்து அரசியல் கொந்தளிப்புகளுக்கு வழிவகுத்திருக்கிறார். இருபதுவருடங்கள் பொறுத்திருந்த ஈவேரா நேருவின் இந்தியாவுக்கு காந்திதேசம் பெயரை வைக்கலாம் என்று சொல்லி காந்தி மீது கடுமையான அகிம்சையை ஏவினார் என்பது வரலாறு.

திருமணம் ஒரு நல்ல அகிம்சை முறை என்று காந்தி நம்பினார். ஆனால் தம்பதிகள் அதைக் குறைந்தது நாற்பது வருடங்களுக்காவது ஒத்திப்போடுவது நல்லது. அகிம்சைமுறையில் ஆழமான பயிற்சி அவர்களுக்கு அதன் மூலம் கிடைக்கும். திருமணத்தின்போது அகிம்சையின் பகுதியாக ஒருவருக்கொருவர் கதர்மாலைகள் அணிவிக்கலாம். திருச்செங்கோடு ஆசிரமத்தில் கதரைவிட சிறந்த அரிப்பு அளிக்கக்கூடிய கற்றாழைநாரை சக்ரவர்த்தி ராஜாகோபாலாசாரியார் கண்டுபிடித்தபின்னர் தென்னகமெங்கும் அதுவே பயன்படுத்தப்பட்டது. திருமணமான தம்பதிகள் தினமும் அனாசக்தியோகம் படிப்பதும் பரமார்த்திக விஷயங்களை மட்டுமே பேசிக்கொள்வதும் அகிம்சையை வளர்க்கும் என்று காந்தி கருதினார். அதையும் மீறி அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதை மட்டும் அவரால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

காந்தி தினமும் அகிம்சையை செய்துவந்தார் என்று அவரது வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். இதற்காக அவர் சர்க்கா என்ற கருவியை வைத்திருந்தார். இந்தியாவில் உள்ள பெண்கள் எல்லாம் காதலிக்கும்போதும்கூட அதைச் சுழற்ற வேண்டும் என்று சொல்லி அவர் கணவர்களை அகிம்சைப்படுத்தினார் என்று வரலாறு சொல்கிறது. மீன் மது போன்றவற்றை விலக்கும்படிச் சொல்லி அவர் தேசபக்தர்களையெல்லாம் போட்டு அகிம்சை செய்ததை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பதிவுசெய்திருக்கிறார்.

அகிம்சை என்பது மானுடருக்கு மட்டும் உரியதல்ல, பிற உயிர்களிலும் காணப்பட்டிருக்கிறது. உதாரணமாக டோடோ என்ற பறவை அகிம்சையில் நம்பிக்கை உள்ளது. இது வேடர்களைக் கண்டால் ஓடுவதில்லை என்பது மட்டுமல்ல பணிவுடன் நின்று அம்பைப் பெற்றுக்கொள்ளும். இதனால் மனமுருகும் வேடர்கள் நன்றாக மிளகாய் போட்டுக் கண்ணீர் மல்கியபடித்தான் இதன் மாமிசத்தை உண்பார்கள். துரதிருஷ்டவசமாக இந்த அகிம்சைப்பறவை இப்போது இனஅழிவுக்கு ஆளாகிவிட்டிருக்கிறது.

அகிம்சை என்பது கோழைகளின் ஆயுதமல்ல என்று காந்தி சொன்னார், அவர்களுக்கு வேறு ஆயுதங்கள் இருக்கின்றன. அகிம்சை தைரியம் கொண்டவர்களின் ஆயுதம் காரணம் பலசமயம் அவர்களிடம் வேறு ஆயுதங்கள் இருப்பதில்லை. எதிர்த் தரப்பிலும் அதே ஆயுதம் இருந்தால் மட்டுமே அவர்கள் அஞ்சவேண்டும். அகிம்சையைக் கடைப்பிடிக்க நேரும்போது நாம் நம்பிக்கை இழக்கலாகாது, காரணம் எப்படியானாலும் அதைவிடப் பாதுகாப்பற்ற நிலைக்கு நம்மால் போகமுடியாது.

பொதுவாக நம் எதிரிகள் மனமுவந்து ஒத்துக்கொள்ளும் ஹிம்சை என்பது நாம் நம்மைநாமே செய்துகொள்ளும் ஹிம்சையே. ஆகவே காந்தி இதை அதிகமாகச் செய்திருக்கிறார். ஒரு பனியாவின் வாழ்வில் அவர் செய்துகொள்ளும் ஆகப்பெரிய ஹிம்சை என்பது எனிமா கொடுத்துக்கொள்ளுதலே என்று கண்ட காந்தி அதை ஒரு போராட்டமுறையாகவே வடித்தெடுத்தார். எனிமாவுக்கு முன்னும்பின்னும் அவர் உண்ணாவிரதம் இருப்பது மௌனவிரதம் இருப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டார். காந்தியின் எனிமா காரணமாகவே மேலைநாட்டு ஆய்வாளர் அவரை ஒரு எனிக்மா என்று சொன்னார்கள்.

உச்சகட்ட துன்பங்களை அனுபவிப்பது வழியாக எதிரிமேல் அகிம்சையை செலுத்துவதில் காந்தி கண்டுபிடித்த வழிகளில் ஒன்று ரகுபதி ராகவ ராஜாராம் என்ற பாடலாகும். இதை முப்பதுவருடம் தினமும் காலையிலும் மாலையிலும் இவர் பாடிக் கேட்டுவந்திருக்கிறார். இந்தப்பாடலைப்பாடி உபன்னியாசம் செய்யும்போது காலை விதவிதமாக ஒடித்து அமர்ந்துகொண்டு பிறரையும் அவ்வாறு அமரச்செய்வதும் அகிம்சை வழக்கம். பேசவருபவர்கள் எழுந்திருக்கும்போது கைத்தாங்கலாக தூக்கிவிட ஆசிரமத்தில் ஆளிருந்திருக்கிறார்கள். பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும்வரை தூக்கிவிடமுடியாது என்று அம்பேத்கார் மிரட்டப்பட்டார் என்பது வதந்தியாக இருக்கலாம்.

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்’ என்ற திருக்குறள் பாடலில் இருந்தே காந்தி அகிம்சை குறித்த தன் கருத்துக்களை எடுத்துக்கொண்டார் என்கிறார்கள். இது அகிம்சையின் உச்ச நிலை. நடைமுறையில் ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண என்னமாம் செய்து விடல்’ என்ற அளவிலேயே இது வெற்றிகரமாக இருந்திருக்கிறது.

வயதான காலத்தில் காந்தி தன்னை சிலுவையில் அறைவதை விரும்பினார். ஆனால் கத்தோலிக்க சபை அதைத் தங்கள் மத அடையாளமாக மாற்றியிருக்கும் தகவல்  அவருக்குச் சொல்லப்பட்டது.  ஆகவே தான் துப்பாக்கியால் சுடப்படலாம் என்றார் காந்தி. அதை அவர் பேட்டிகளில் சொல்லக்கேட்டு நாதுராம் கோட்ஸே என்ற இளைஞர் செய்தார். காந்தியால் ஒத்துக்கொள்ளப்பட்ட செயலாகையால் அதுவும் அகிம்சையே என்று கருதப்படுகிறது.

இறுதி ஊர்வலத்தில் காந்தியின் உடல் பீரங்கி வண்டியில் வைக்கப்பட்டு மயானத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டது. அது அகிம்சையா என்று கேட்கப்பட்டபோது அது குண்டு இல்லாத பீரங்கி, ஆகவே அகிம்சைக்கு சிறத்த குறியீடுதான் என்று நேரு சொன்னதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.

 

முந்தைய கட்டுரைஆப்ரிக்க யானைடாக்டர்
அடுத்த கட்டுரை”வாங்க! வாங்க! வாங்க…”