‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 41

பகுதி எட்டு : வேங்கையின் தனிமை

[ 3 ]

குழந்தைகள் பிறந்த பன்னிரண்டாம்நாள் பீஷ்மர் குறிப்பிட்டிருந்ததுபோல அவர்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நான்குமாதங்கள் முடிந்தபின்பு சூரியதரிசனச்சடங்கு நடந்தபோதுதான் பீஷ்மர் காட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு வந்தார். இரவெல்லாம் பயணம்செய்து விடியற்காலையில் அவர் தன் ஆயுதசாலைக்கு வந்து ஓய்வெடுக்காமலேயே நீராடச்சென்றார். அவருடன் ஹரிசேனன் மட்டும் இருந்தான். பீஷ்மர் மெல்ல சொற்களை இழந்துவருவதாக அவனுக்குப்பட்டது. காடு அவரை அஸ்தினபுரிக்கு அன்னியராக மாற்றிக்கொண்டிருக்கிறது என நினைத்துக்கொண்டான்.

அரண்மனையின் தென்மேற்கே இருந்த பித்ருமண்டபத்தில் சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அஸ்தினபுரியின் பேரமைச்சர் யக்ஞசர்மர் அங்கே நின்றிருந்தார். அருகே தளகர்த்தர்களாகிய உக்ரசேனரும், சத்ருஞ்சயரும், வியாஹ்ரதத்தரும், கருவூலக்காப்பாளராகிய லிகிதரும், வரிகளுக்கு பொறுப்பாளராகிய சோமரும், ஆயுதசாலைக்கு அதிபராகிய தீர்க்கவ்யோமரும், எல்லைக்காவலர் தலைவரான விப்ரரும், யானைக்கொட்டடிக்கு அதிபராகிய வைராடரும் நின்றனர். அனைவரும் பீஷ்மரை வணங்கி வரவேற்றனர்.

இருள்விலகாத காலையில் தூண்களில் மாட்டப்பட்ட நெய்விளக்குகளின் ஒளியில் வெண்கலக்குமிழ்களும் பாத்திரங்களும் கண்விழிகளும் செந்நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தன. மண்டபத்தின் பலகைத்தரையில் ஐந்துவண்ணங்களில் கோலமிடப்பட்ட களத்தின்மேல் வைக்கப்பட்டிருந்த மலர்களும் நெய்யும் கலந்து எழுப்பிய வாசனை அதிகாலையின் குளிர்ந்த காற்றில் மேலும் அழுத்தம் கொண்டிருந்தது.

பீஷ்மர் அரண்மனையின் உபமண்டபத்திற்குச் சென்று அமர்ந்ததும் சேடியர் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். பேரரசி சத்யவதி விழவுக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறார் என்றும் மூன்று அரசியரும் அணிசெய்துகொண்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்தனர். பீஷ்மர் குழந்தைகளைக் கொண்டுவரச் சொன்னார். சேடியர் மூன்று குழந்தைகளையும் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தனர். பாண்டு இருகைகளையும் இறுக மூடி தூங்கிக்கொண்டிருந்தான். திருதராஷ்டிரன் கண்குமிழிகள் அசைய கால்களை ஆவேசமாக உதைத்து எம்ப முயல்வதுபோல நெளிந்தான். விதுரன் கைப்பிடியில் சேடியின் பட்டு உடையை வைத்திருந்தான். பீஷ்மரைக் கண்டதும் அவன் கைகால்களை அசைத்தபோது அந்த மேலாடையும் சேர்ந்து அசைந்தது. இன்னும் பார்வையாகக் குவியாத அவன் சிறுவிழிகள் அங்கிருந்த நெய்ச்சுடர்களில் மாறிமாறி தாவிக்கொண்டிருந்தன.

பீஷ்மர் மூன்று குழந்தைகளையும் ஒரேசமயம் தன் கைகளில் வாங்கிக்கொண்டார். அவரது பெரிய கரங்களுக்குள் அவை சின்னஞ்சிறு பாவைகள் போலிருந்தன. குனிந்து அவற்றின் சிறிய முகங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். திரைச்சீலைகள் காற்றிலாட அறை அமைதியாக இருந்தது. வெளியே காற்றில் ஒரு மரக்கிளை இன்னொன்றில் உரசும் ஒலி கேட்டது. ஒரு சேடி மெல்ல அசைய அவள் சங்குவளைகள் ஒலியெழுப்பின. வெளியே இருந்து சியாமை வந்து பீஷ்மரைக் கண்டதும் சற்றுத் தயங்கினாள். அவளுடைய கனத்த காலடியோசையைக் கேட்டு பீஷ்மர் நிமிர்ந்தார்.

“பேரரசி எழுந்தருள்கிறார்கள்” என்றாள் சியாமை. பீஷ்மர் குழந்தைகளின் கால்களை தன் கண்களில் ஒற்றிவிட்டு திரும்பக்கொடுத்தார். எழுந்து குனிந்தமையால் தோளில் விழுந்துகிடந்த குழலை பின்னால் தள்ளிவிட்டு “செல்வோம்” என்றார். வெளியே எல்லைக்காவல் அமைச்சரான பலபத்ரர் வணங்கி “பூசைமுறைகள் தொடங்கவிருக்கின்றன பிதாமகரே” என்றார். பீஷ்மர் தலையசைத்தார்.

இளம்வைதிகர்கள் பூசைக்களம் அமைத்திருந்தனர். பெரிய தாம்பாளத்தில் அபராசி, அருகு, முயற்செவி, திருதாளி, சிறுகுறிஞ்சி, நிலப்பனை, கரிசலாங்கண்ணி, அமிர்தவல்லி, தீந்தணலி, உழிஞை என்னும் பத்து மூலிகைகள் வைக்கப்பட்டிருந்தன. அப்பால் முக்குணங்களின் வண்ணங்களும் கலந்த பன்னிரு மலர்கள் தனித்தனியாக இருந்தன. எண்மங்கலங்களான நெல், நாழி, ஆடி, குங்குமம், சந்தனம், அகல்விளக்கு, ஏடு, வெண்பட்டு ஆகியவற்றை ஒருக்கிக்கொண்டிருந்த இளையவைதிகன் எழுந்து “அமுதவேளை நெருங்குகிறது ஆசிரியரே” என்றான்.

பெருஞ்சங்கம் முழங்க பல்லியம் ஆர்க்க முரசு மெல்ல அதிர்ந்து அடங்கியது. வேதியர் நிறைகலத்துடன் முன்னால் வர பின்னால் சூதர்கள் வர சத்யவதி வெண்பட்டு ஆடை அணிந்து நடந்துவந்தாள். அதிகாலையின் கரையும்இருளில் அந்த வெண்மை ஒளிகொண்டிருந்தது. பீஷ்மர் எட்டடி முன்னால் சென்று சத்யவதியை வணங்கி முகமன் உரைத்தார். அமைச்சர்கள் ஒவ்வொருவராகச் சென்று வாழ்த்தி வணங்கினர். சத்யவதி பலபத்ரரிடம் “எங்கே அரசியர்?” என்றாள்.

சியாமை “வந்துகொண்டிருக்கிறார்கள்” என்றபின் உள்ளே சென்றாள். உள்ளே மணிச்சங்கங்கள் இருமுறை ஒலியெழுப்பின. முரசு முழங்கி அமைந்தது. கையில் குழந்தையுடன் அம்பிகை வெண்ணிற ஆடையுடன் படியிறங்கி வந்தாள். அவளைத்தொடர்ந்து அம்பாலிகை குழந்தையுடன் வந்தாள். அம்பிகை துயிலிழந்த கண்களுடன், இறுகிய முகத்துடன் சோர்ந்தவளாகத் தெரிந்தாள். வாயின் இருபக்கமும் அழுத்தமான கோடுகள் விழுந்து, கண்களுக்குக் கீழே கருவளையம் அமைந்து, அவள் மிக மூத்துவிட்டவளாகத் தோன்றினாள். அம்பாலிகை உடல் மெலிந்திருந்தாலும் உள்ளூர உவகையுடன் இருப்பதாகத் தோன்றியது. கடைசியாக சிவை வந்தாள். அவள் நடப்பதுபோலவே தெரியவில்லை. அவளை தேவதைகள் சுமந்து கொண்டுவந்தனர்.

துணைவைதிகர் களத்தில் பட்டுப்பாய்களை விரித்தனர். ஒருவர் “பேரரசியும் அரசிகளும் குழந்தைகளுடன் அமரலாம்” என்றார். அம்பிகையும் அம்பாலிகையும் அமர்ந்துகொண்டனர். மண்டபத்துக்கு வெளியே விரிக்கப்பட்ட பட்டுப்பாயில் சிவை தன் குழந்தையுடன் அமர்ந்துகொண்டாள். சத்யவதி சற்று நிலையிழந்திருப்பதை பீஷ்மர் கவனித்துக்கொண்டிருந்தார். அவள் பலபத்ரரை கையசைத்து அழைத்து ஏதோ கேட்டாள். பலபத்ரர் உள்ளே ஓடி சிலகணங்களில் அச்சமுற்றவராகத் திரும்பி வந்தார். அவர் சத்யவதியிடம் ஏதோ சொல்ல சத்யவதியின் முகம் சுருங்கியது. யக்ஞசர்மர் அருகே சென்று குனிந்தபின் அவரும் உள்ளே சென்றுவிட்டு அதேபோல மீண்டுவந்தார்.

பீஷ்மர் உடனே என்ன நடக்கிறது என்று புரிந்துகொண்டார். முதுவைதிகர் எழுவர் வந்து ஜாதகர்மத்தைச் செய்யவேண்டுமென்பது மரபு. எழுவரும் மண்டபத்துக்கு வரவில்லை. அவர்கள் அப்பால் சபாமண்டபத்துக்குப் பின்னால் தூண்களின் அருகே கூடி நின்றிருந்தனர். என்ன நடக்கிறது என்று வினவுவதற்காக பீஷ்மர் மார்பில் கட்டியிருந்த கைகளைத் தாழ்த்தியபோது யக்ஞசர்மர் தன்னை நோக்கி வருவதைக் கண்டார். அவர் பெருமூச்சுடன் தன்னை எளிதாக்கிக்கொண்டார்.

யக்ஞசர்மர் வணங்கி “பிதாமகரே, இந்த அஸ்தினபுரி உங்கள் மடியில் தவழும் குழந்தை. இதன் நலனையே நாடுபவர் நீங்கள். இதை உணவூட்டிப் புரப்பவர். இதன் அன்னை. ஆகவே இதன் நோய்களையும் பிடிவாதங்களையும் குறும்புகளையும் அனைவரை விடவும் நீங்கள் நன்கறிவீர்கள்” என்றார். பீஷ்மர் பேசாமல் கூர்ந்து நோக்கி நின்றார். “வைதிகர்கள் தாங்கள் இங்கிருப்பதை விரும்பவில்லை.”

ஒருகணத்திலும் சிறிய அளவில் பீஷ்மர் முகம் சிவந்து பின் மீண்டது. புன்னகையுடன் “ஏன்?” என்றார். “உங்கள்மீது காசிநாட்டு இளவரசியின் தீச்சொல் உள்ளது என்கிறார்கள். இந்த வைதிகச்செயலில் நீங்கள் பங்கெடுப்பது அறப்பிழை என்கிறார்கள்” என்ற யக்ஞசர்மர் வேகமாக “அவர்களுக்கு இந்த விழா ஓர் உகந்த தருணம். இதைப்பயன்படுத்திக்கொள்ள எண்ணுகிறார்கள். ஆனால் அவர்களை நாம் ஒன்றும் செய்யமுடியாது” என்றார்.

“பேரரசி என்ன சொல்கிறார்?” என்றார் பீஷ்மர். “பேரரசியின் ஆணைப்படித்தான் நான் பேசவந்தேன்…” என்றார் யக்ஞசர்மர். “தாங்கள் மீண்டும் சிலகாலம் வனம்புகுவது நல்லது என்று பேரரசி எண்ணுகிறார்.” பீஷ்மர் தாடியை நீவிவிட்டு “நான் இப்போது என்ன செய்யவேண்டும் என பேரரசி ஆணையிட்டார்?” என்றார். “தாங்கள் உடனே இங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்றும் பேரரசியே தங்களை மாலையில் சந்தித்து இதைப்பற்றி விவாதிப்பார் என்றும் சொன்னார்.”

அங்கிருந்த அத்தனை சருமங்களும் அந்த உரையாடலை கேட்டுக்கொண்டிருந்தன என்பதை பீஷ்மர் உணர்ந்தார். தலைநிமிர்ந்து நிதானமாக திரும்பிநடந்தார். அவர் முதுகுக்குப் பின் அத்தனை உடல்களும் இறுக்கமிழப்பதன் அசைவை அவரது சருமம் கேட்டது. அப்போதுதான் அவரை வெளியேற்ற அந்த சபையில் அனைவருமே விரும்பியிருந்தனர் என்பதை அவர் உணர்ந்தார். கீழ்வாயுவை வெளியேற்றும் உடலின் நிம்மதி என நினைத்துக்கொண்டதும் அவர் உதடுகள் மெல்லிய புன்னகையில் வளைந்தன.

பின்மதியத்தில் அவர் சத்யவதியை அந்தரமண்டபத்தில் சந்தித்தபோது அவள் ஓய்வாக நீளிருக்கையில் படுத்திருந்தாள். பீஷ்மர் உள்ளே சென்றதும் மேலாடையை எடுத்துப்போர்த்தியபடி அவரை முகமன் சொல்லி வரவேற்றாள். அஸ்தினபுரியின் ஆட்சிமைக் குறிப்புகளைப்பற்றி மட்டுமே பேசினாள். பீஷ்மர் அவள் கண்களைச் சந்தித்தபோது அவை குழந்தைக்கண்கள்போல தெளிந்திருக்கக் கண்டார். அதை எண்ணி அவர் அகம் வியந்தது.

விடைபெற்று எழும்போது “நான் காடேகவிருக்கிறேன்” என்றார் பீஷ்மர். சத்யவதி மிக இயல்பாக “உனக்குள் காடு உள்ளது மைந்தா. நீ நகரில் வாழ்பவனல்ல” என்றாள். “ஆனால் நீ உடனடியாகச் சென்றால் ஆட்சியில் இடர்கள் நிகழக்கூடும். நீ சிறிதுநாட்களுக்கு…” என அவள் சொல்லத்தொடங்கியதும் “அதற்குரியனவற்றைச் செய்துவிட்டேன்” என்றார். சத்யவதி புன்னகையுடன் “நீ என்றுமே முன்னறிந்து நடப்பவன்” என்றாள்.

அன்று மாலையே பீஷ்மர் அஸ்தினபுரியை விட்டு நீங்கினார். நகரத்தெருக்களில் அவரது ரதம் சென்றபோது மக்களின் நடத்தை மாறியிருப்பதை கண்நுனிகளால் கண்டார். அவர்கள் அவரது ரதத்துக்கு பணிந்து வழிவிட்டனர். ஆனால் திமிறும் குழந்தையின் உடல்போல அவ்வசைவுகளில் ஒரு புறக்கணிப்பு வெளிப்பட்டது. பெண்கள் சாளரம் வழியாக அவரை நோக்கவில்லை. முதியவர்கள் குழந்தைகளை அழைத்து அவரை சுட்டிக்காட்டவில்லை. வீரர்களின் வேல்தாழ்த்துதலில் கூட அந்தக் கசப்பு வெளிப்பட்டது.

VENMURASU_EPI_41_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

காற்றில் நழுவி பின்னால்செல்லும் பொன்பட்டு மேலாடை போல நகர் நீங்குகையில் அஸ்தினபுரியை உணர்வது அவர் வழக்கம். அன்று தோள்சுமையொன்று உதிர்ந்ததுபோல நினைத்துக்கொண்டார். நகரின் ஒலிகள் முழுமையாகவே மறைந்தபின்னர்தான் அவர் தன் உடல் இறுகி இருப்பதை, தாடை முறுகி உதடு கடிபட்டிருப்பதை உணர்ந்தார். பெருமூச்சுகள் வழியாகத் தன்னை தளர்த்திக்கொண்டார்.

அஸ்தினபுரியில் இருந்து வடமேற்காகச் சென்றுகொண்டிருந்தார் பீஷ்மர். ரதசாலை அவருக்கு முன்னால் நெளிந்து நெளிந்து வந்தபடியே இருந்தது. செம்புழுதி படிந்த மரங்களும் அரசாணைக்கல்வெட்டுகள் பொறிக்கப்பட்ட பாறைகளும் சுங்கச்சாவடிகளும் வந்தன. இரவேறியபின் குதிரைகள் மூச்சுவாங்கியபடி மெல்லத்தளர்ந்தன. கடிவாளத்தை ஒருகையால் பற்றியபடி சாலையோரத்தைப் பார்த்துக்கொண்டே சென்றார். பெரியசத்திரங்களில் பந்தங்கள் எரிய மது அருந்திய பயணிகளின் உரத்த குரல்கள் கேட்டன. பெரியதோர் அரசமரத்தடியில் கட்டப்பட்டிருந்த சிறிய கல்மண்டபத்தில் அகல்விளக்கின் சுடரும் நிழல்களும் தெரிந்தன. ஒரு சூதனின் மெல்லிய கிணையொலி வந்தது.

பீஷ்மர் ரதத்தை நிறுத்தி குதிரைகளை அவிழ்த்து காட்டுக்குள் விட்டார். காட்டுக்கொடியொன்றால் குழல்களைக் கட்டி பின்னால் விட்டுக்கொண்டு நடந்து அந்த மண்டபத்தை அடைந்தார். அங்கே எட்டுபேர் இருந்தனர். ஒருவர் கிழட்டு சூதர். பிறர் உடைமைகளற்ற நாடோடிகள். அவர்களின் மூட்டைகள் ஓரமாகக் கிடந்தன. அனைவரும் மதுவின் போதையில் இருந்தனர்.

“இதோ வருகிறார் பீஷ்மர், அஸ்தினபுரியின் கல்கோபுரம், அஹஹ்ஹஹ்ஹா!” என்று சூதர் நகைத்தார். போதையில் எச்சில் ஊறிய வாயை சப்புக்கொட்டியபடி “நெட்டைமனிதரே, நீர் பீஷ்மருக்கு என்ன உறவு என நான் அறியலாமா?” என்றார். பிறர் சிரித்தனர். சூதர் “பீஷ்மரின் தந்தை சந்தனு தன் ஆயுதத்தை வேறு இடங்களிலும் கூர்தீட்டியிருக்கலாமென இவர் காட்டுகிறார் அல்லவா?” என்றார். குடிகாரர்கள் சிரித்துக்கொண்டு அவரைப்பார்த்தனர்.

பீஷ்மர் மண்டபத்தின் கல்திண்ணையில் அமர்ந்துகொண்டார். “வீரரே, நீங்கள் குளிக்காமல் துயிலவிருக்கிறீர்கள். ஆகவே நீங்களும் எங்களைப்போல மகிழ்ச்சியான குடிகாரர் என நாங்கள் நினைக்கலாமா?” என்றான் ஓர் இளைஞன். “அவரைப்பார்த்தால் துயரமான குடிகாரர் என்று தோன்றுகிறதே” என்றான் இன்னொருவன். “அவர் முனை மழுங்கிய ஆயுதத்துடன் அலைபவராக இருக்கலாம்” என இருளில் இருந்து ஒருவன் சொன்னான். அனைவரும் சிரித்தனர்.

ஒரு கிழவன் எழுந்து மூங்கில் குவளையில் மதுவுடன் அருகே வந்தான். அழுகிய மதூகமலரின் நாற்றம் அதில் இருந்தது. “நீங்கள் இதைக் குடிக்கலாம் வீரரே. இது சிறந்த பெண்கழுதையின் சிறுநீரால் தயாரிக்கப்பட்டது” என்று நீட்டினான். அனைவரும் சிரிக்க ஒருவன் “அய்யய்யோ! கழுதையின் சிறுநீர்! அற்புதம்! கழுதையின் சிறுநீர்!” என்று பொங்கிப்பொங்கி சிரிக்கத் தொடங்கினான்.

பீஷ்மர் குவளையை வாங்கி “நலம்திகழட்டும்!” என்றபின் ஒரே மூச்சில் அதைக்குடித்தார். மதூகமலரை அழுகச்செய்து நீரில் கொதிக்கவைத்து எடுக்கப்படும் அந்த மது சிந்தனையின் அனைத்துச் சரடுகளையும் எண்ணையில் நெளியும் மண்புழுக்களாக ஆக்கிவிடும் என பீஷ்மர் அறிந்திருந்தார்.

மதூகம் அவர் நாசியிலும் வாயிலும் நிறைந்தது. “இவர் சிறந்த குடிகாரர்… இவரது தந்தை கூர்தீட்டும்போது இந்த மஹுவாக் கள்ளை கண்டிப்பாகக் குடித்திருப்பார்” என்றான் ஒருவன். சூதர் “வீரரே, உயர்ந்த ஆமையிறைச்சியும் இங்கே இருக்கிறது. அதைத்தின்று மேலும் குடித்தால் நாம் போதையின் பெருக்கெடுப்பான யமுனையில் நீந்த முடியும்” என்றான். “காளிந்தியில் பிடிக்கப்பட்ட ஆமை இது… கன்னங்கரியது…” அப்பால் ஒருவன் “கழுதையின் சிறுநீர்! அருமை!” என எச்சில் வழிய சிரித்துக்கொண்டிருந்தான்.

ஆமையிறைச்சி நெடுநேரம் முன்னரே சுடப்பட்டிருந்தது. உதடுகளில் அதன் மென்கொழுப்பு ஒட்டி கடைவாயில் வழிந்தது. பீஷ்மர் மும்முறை இறைச்சியைத் தின்று மதூகமதுவை அருந்தினார். வாயில் பசைபோல ஏதோ ஊறி நிறைந்தது. கழுத்தில் தலையின் எடை அதிகரித்து வந்தது. கால்களை நீட்டிக்கொண்டு மண்டபத்தூணில் சாய்ந்தார். சூதர் “வீரரே என் பெயர் விடம்பன். நான் இந்த பாரதவர்ஷத்திலேயே ஞானியான ஒரே சூதன் என ஞானியான ஒரே சூதனால் கருதப்படுபவன். நான் கங்கையின் மகனாகிய பீஷ்மரைப்பற்றி பாடிக்கொண்டிருந்தேன்” என்றார். பீஷ்மர் ஒரு பொன் நாணயத்தை எடுத்து சூதரிடம் வீசி “பாடுக!” என்றார்.

நாடோடிகள் திகைத்தனர். “பொன்நாணயம்! வீரரே, இது கையில் இருந்ததென்றால் நீங்கள் ஏன் பெரிய சத்திரங்களுக்கு செல்லக்கூடாது?” என்றான் ஒருவன். இன்னொருவன் “மூடா, பெரிய சத்திரங்களில் இருந்துதான் இந்தப் பொன் நாணயத்தையே இவர் கொண்டுவந்திருக்கிறார்” என்றான். “திருடியா?” என்றான் இன்னொருவன். “சேச்சே, வீரர்கள் திருடுவார்களா என்ன? அவர்கள் இறந்த உடல்களில் இருந்து நாணயங்களை எடுப்பார்கள்” என்றான்.

முதலில் கேட்டவன் மேலும் குழம்பி “இறந்த உடல்களை எங்கே கண்டுபிடிப்பார்கள்?” என்றான். “கண்டுபிடிப்பது கடினமல்ல. அவை அவர்களின் காலடியில் கிடக்கும்.” முதலில் கேட்டவன் எழுந்துவிட்டான். “எப்படி?” என்றான். “டேய், கொல்லப்பட்ட பிணம் கொன்றவன் முன்னால்தானே விழும்?” அப்போதுதான் புரிந்துகொண்டு அவன் வெடித்துச் சிரித்தான். கீழே விழுந்து கிடந்தவன் “கழுதையின் சிறுநீர்! ஓ” என்று கண்ணீரும் மூக்குநீரும் வழியச் சிரித்தான்.

விடம்பன் உரக்க “அமைதி! அமைதி பேரரசர்களே, அமைதி மாவீரர்களே! அமைதி!” என்றார். அவர்கள் கைகளைத்தூக்கி கூச்சலிட்டனர். “பீஷ்மரின் கதை கேளுங்கள். அவர் இந்த அஸ்தினபுரியை அவரே உருவாக்கும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றும் பாதுகாவலர் அல்லவா? பிறரது குழந்தைகளுக்காக சொத்துசேர்க்கும் தந்தை அல்லவா?” ஹோஹோஹோ என்ற கூச்சல்களும் சிரிப்புகளும் எழுந்தன.

“பீஷ்மருக்குத் தேவையானது என்ன சான்றோரே? அவர் நம் நாட்டின் பிதாமகர். அவருக்குத் தேவையானது எள்ளும் தண்ணீரும். அவர்செய்த தியாகங்களுக்காக நாம் அவரை எள்ளால் ஆன மலைமீது ஏற்றி கங்கையில் மிதக்கவிடவேண்டும். ஓம் அவ்வாறே ஆகுக!” விடம்பன் ஏப்பம் விட்டு “அடேய், சுனகா எங்கே என் மஹுவா? எங்கே அவள்?” என்றார்.

அவன் மதுக்குவளையைக் கொடுத்ததும் ஒரே மிடறில் குடித்துவிட்டு “நாளை வெளியே போகும் சிறுநீருக்கும் இந்த மஹுவாவுக்கும் நடுவே உள்ள வேறுபாடு என்ன?” என்றார். “என்ன என்ன?” என்றனர் குடிகாரர்கள். “கவிதை! வாக்தேவி!” என்றார் சூதர். ஊஊஊ என நான்குபேர் ஊளையிட பிறர் சிரித்தனர்.

“அந்தக்காலத்திலே ராமன் என்று ஓர் அரசன் இருந்தான். வீட்டுப்பெண்ணை காட்டுக்குக் கூட்டிச்சென்று அரக்கனிடம் அகப்படச்செய்தான். அந்தப்பிழையைச் சரிசெய்ய அவன் அகச்சான்று துடித்ததனால் அவன் அரக்கவம்சத்தை அழித்தான். அவன் நாமம் வாழ்க!” குடிகாரர்கள் கைகளைத் தட்டினர். “அதன்பின் அரக்கவம்சத்தை அழித்ததன் அகச்சான்றின் வலியால் அவன் அந்த மனைவியை மீண்டும் காட்டுக்கு அனுப்பினான். அவள் எரிபுகுந்தாள். அவள் எரிபுகுந்ததன் அகச்சான்றுத்துயர் தாளாமல் புழுவாகத் துடித்த அவன் அதைவெல்ல தன்னை விஷ்ணுவின் பிறவிவடிவம் என அறிவித்தான். அவன் வாழ்க!”

“ராமன் இக்‌ஷுவாகு குலத்தவன். அவ்வம்சத்திலே மகாபிஷக் என்னும் மன்னன் ஒருவன் ஆண்டுகொண்டிருந்தான். அவன் ஆயிரம் அஸ்வமேத யாகங்களும் நூறு ராஜசூய யாகங்களும் செய்தான். எஞ்சிய நேரத்தில் பிள்ளைகளைப் பெற்றான். பிள்ளைகள் அவனுக்கு நீர்க்கடன் செய்து பிரம்மனின் உலகுக்கு அனுப்பினர். அவன் அங்கே ராஜரிஷியாக அமர்ந்திருந்தான். அவன் நெஞ்சமெல்லாம் வேள்விகளுக்கு செலவழித்த நேரத்தில் இன்னும் சற்று மகவுகளை பிறப்பித்திருக்கலாமோ என்னும் எண்ணம் நிறைந்திருந்தால் அது பிழையல்ல அல்லவா?”

“ஆம்! ஆம்! ஆம்!” என்றனர் குடிகாரர்கள். ஒருவன் மட்டும் “கழுதைச்சிறுநீர்! அய்யய்யோ!” என்று சிரித்து கண்ணீர் விட்டான். விடம்பன் “அப்போது அங்கே பிரம்மனைப்பார்க்க கங்கை வந்தாள். கங்கை மீது காற்றடிப்பது இயல்புதானே? அலைவிலகிய கங்கையில் சுழிகளிருப்பதை ஒரு மன்னன் பார்ப்பதில் என்ன பிழை? அந்தக்குற்றத்துக்காக அவனை பிரம்மன் நீ மண்ணில் சந்தனு என்னும் மன்னனாகப் பிறப்பாய் என்று தீச்சொல் விடுத்தார். அவ்வாறாக சந்தனு மஹுவா சுவையாக இருப்பதும் அறம் திகழ்வதுமான அஸ்தினபுரியில் மாமன்னர் பிரதீபரின் மைந்தனாகப் பிறந்தார். பாரதவர்ஷம் புளகம் கொண்டது. ஏனென்றால் போனவன் அவ்வளவு விரைவாகத் திரும்பிவருவான் என அது எதிர்பார்க்கவேயில்லை.”

“ஒருபெண்ணை விரும்புபவனை தண்டிக்க சிறந்தவழி அந்தப்பெண்ணையே அவன் அடையும்படிச் செய்வது அல்லவா? பிரம்மனின் தீயாணைப்படி சந்தனு மண்ணில்பிறந்து கங்கையை மணக்க நேர்ந்தது. கங்கை விண்வழியாக மண்ணுக்கு வரும் வழியில் எட்டு வசுக்களும் எட்டு எல்லைக்கற்கள் போல வெளுத்து நிற்பதைக் கண்டாள். ஏன் இந்தக் கோலம் என்று கேட்டாள். கங்கையன்னையே நாங்கள் விண்ணக ஷத்ரியர்கள். பொழுதுபோகாத ஷத்ரியர்கள் பசுக்களைத் திருடுவது மண்ணிலும் விண்ணிலும் விதியல்லவா? ஆகவே நாங்கள் வசிட்டரின் பசுக்களைத் திருடினோம். அவர் நன்கு சிந்திக்காமல் எங்களை ஆற்றலிழக்கச் செய்துவிட்டார் என்றனர்” விடம்பன் பாடினார்.

“எங்களை நீயே கருவுற்று மனிதர்களாகப் பெற்றாயென்றால் நாங்கள் விரைவாக வல்லமையை மீளப்பெறுவோம் என்றனர் வசுக்கள். அவ்வாறே ஆகுக. நீங்கள் மண்ணில் நற்செயல்களைச் செய்து செய்நலம் ஈட்டி விண்ணகம் புகுங்கள் என்றாள் கங்கை. எட்டுவசுக்களில் மூத்தவர் பதறி அன்னையே எங்களை அறிந்தபின்னரும் இதைச்சொல்லலாமா? நாங்கள் அங்கே பிறந்தால் கைகால் மற்றும் உறுப்புக்கள் வெறுமே இராத காரணத்தால் இன்னும் நாலைந்து பிறவிக்கான பழிகளையே ஈட்டிக்கொள்வோம். அப்படி எதையும் நாங்கள் செய்வதற்குள் எங்களை நீயே உனது நீரில் மூழ்கடித்து கொலைசெய்துவிடு என்றார். அவ்வண்ணமே செய்கிறேன் என்று அன்னை வாக்களித்தாள்.”

“மாமன்னர் பிரதீபர் கங்கைக்கரைக்கு வேட்டையாடச்சென்றபோது கங்கையன்னை ஒரு சிறுபெண்ணாகச் சென்று அவரது வலது தொடையில் அமர்ந்தாள். வலது தொடையில் அமர்பவள் மருமகளாகவே ஆகமுடியும் என்று அமைச்சர்கள் சொல்லிவிட்டதனால் மனம் வருந்திய பிரதீபர் தன் மகன் சந்தனுவுக்கே அவளை மணம் புரிந்துவைக்க முடிவெடுத்தார். அவர் மணக்கோரிக்கையை முன்வைத்தபோது கங்கை நான் என்ன செய்தாலும் உன் மைந்தன் ஏன் என்று கேட்கலாகாது என்று சொன்னாள். அன்றிலிருந்தே அக்கோரிக்கையை அனைத்து மணமகள்களும் முதல்நாளிரவில் முன்வைக்கும் நிலை மண்ணில் உருவாகியது என்றறிக! ஓம், அவ்விதி என்றும் அவ்வாறே ஆகுக!”

குடிகாரர்களில் இருவர் விழுந்து எச்சில்வழிய தூங்கிக்கொண்டிருந்தனர். நாலைந்துபேர் எங்கிருக்கிறார்கள் என்ற நிலையில் அமர்ந்திருக்க ஒருவன் மட்டும் “கழுதைச் சிறுநீர்” என்று மெல்ல விசும்பி மூக்கைச் சிந்தி உதறினான்.

“கங்கையன்னை ஏழு வசுக்களை நீரில் மூழ்கடித்துக் கொன்றாள். அவர்கள் உடனடியாக பறந்து எழுந்து வானில் சென்று வேறு ஆநிரைகளுக்காக தேட ஆரம்பித்தனர். எட்டாவது வசு மட்டும் கங்கையில் மூழ்கடித்த அன்னையின் கையை கடித்துவிட்டான். கங்கை கையை உதறியதும் அவன் ஓடிப்போய் கரையில் நின்றுகொண்டான். அவன் ஜஹ்னு முனிவரின் புதல்வியும் தேவியுமான கங்கையைக் கடித்தமையால் தேவதம்ஸன் என்று அழைக்கப்பட்டான். பிற்பாடு அஸ்தினபுரியின் அரசாணையின்படி அந்தப்பெயர் தேவவிரதன் என்று ஆக்கப்பட்டது. முந்தைய பெயரைச் சொல்பவர்கள் பிந்தைய பெயரை ஆயிரம் முறை கூவியபடி கசையடியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வகுக்கப்பட்டது.”

விடம்பன் பீஷ்மரிடம் “ஆகவே மாவீரரே, சிறந்த பொன்நாணயங்களால் அணிசெய்யப்பட்ட தோல்பையைக் கொண்டவரே, மற்ற ஏழுவசுக்களும் வான்வெளியில் நின்று பரிதவித்து கூச்சலிட்டனர். அன்னையே, அவனை அப்படி விட்டுவிடாதீர்கள். பாம்பின்காலை மற்ற ஏழு பாம்புகளும் அறியும். அவன் அங்கே என்னசெய்வான் என்று எங்களுக்குத் தெரியும் என்றனர். தேவி கவலைவேண்டாம், இப்பிறவியில் இவனுக்கு அரசு, காமம், மக்கள்பேறு மூன்றும் இருக்காது என்றாள். வசுக்கள் கடைசி வசுவை நோக்கி எள்ளி நகைத்தபடி மறைந்தனர். தன் கையைக் கடித்த மகனைநோக்கி கங்காதேவி நீ இப்பிறவியில் செய்வனவெல்லாம் தீங்காகக் கடவது என்றாள்” என்றபின் “மஹுவாவை வாழ்த்துங்கள் மானுடரே” என்றார்.

பின்பு விடம்பன் தொடர்ந்தார் “அந்த வசு அவளை வணங்கி அன்னையே நான் உயிர்தரிப்பதற்காகச் செய்த பிழையை பொறுத்தருள்க. நான் இங்கே பாவங்களைச் செய்தால் நீங்களே என்னை மீண்டும் மைந்தனாகப் பெற்று அப்பாவங்களைத் தீர்க்க அருள் புரியவேண்டும் என்றான். கங்காதேவி அந்தக்கோரிக்கையில் உள்ள இக்கட்டை உடனே புரிந்துகொண்டு சொல்மீட்சி அளித்தாள். நீ செய்யும் தீமைகளை முழுக்க நல்ல நோக்குடனயே செய்வாய். ஆகவே உனக்கு எப்பாவமும் சேராது, நீ பிறவியறுப்பாய் என்றாள்.”

விடம்பன் பறையை ஓங்கி அறைந்து “சிறியவர்கள் தங்கள் சிறுமையாலும் பெரியவர்கள் தங்கள் பெருமையாலும் பிழைகளைச் செய்யவைக்கும் பெருங்கருணையை வாழ்த்துவோம். சிறியவர்களுக்கு சிறிய தண்டனைகளையும் பெரியவர்களுக்கு பெரியதண்டனையையும் வைத்திருக்கும் பெருநியதியை வணங்குவோம்…ஓம் ஓம் ஓம்!” என பாடிமுடித்தார்.

அப்பால் ஒருவன் மட்டும் “கழுதைச்சிறுநீர்!” என்று கண்ணீர்விட்டு அழுதுகொண்டிருக்க பிற அனைவருமே ஆங்காங்கே விழுந்து தூங்கிவிட்டனர். “வீரரே இன்னொரு பொன் இருந்தால் நான் விசித்திரவீரியன் கதையை பாடுகிறேன்” என்று விடம்பன் ஆர்வமாகக் கேட்டார். “திரேதாயுகத்தில் ஆயினிப்பழத்தின் விதைகளை தன் முட்டைகள் என எண்ணி ஆயிரம் வருடம் அடைகாத்த நிர்வீர்யன் என்னும் ஒரு நாகம் இருந்தது. அது மறுபிறவியில் சந்திரகுலத்தில் அரசனாகப்பிறந்த கதை அது.”

“தேவையில்லை சூதரே… இந்தக்கதையே சிறப்பாக இருந்தது” என்றார் பீஷ்மர். சூதர் எழுந்துசென்று சத்திரத்தின் எல்லா மூலைகளையும் ஆர்வமாகத் தேடினார். “முன்பு தேவர்கள் அமுதுண்டதுபோல கடைசித்துளியையும் அருந்திவிட்டனர்” என்றபின் “வீரரே நான் இந்த சுளுந்துவிளக்கை அணைக்கலாமல்லவா?” என்றார்.

பீஷ்மர் தலையசைத்தார். சூதர் படுத்துக்கொண்டபின் அவர் எழுந்து வெளியே சென்று பனி பெய்துகொண்டிருந்த வெளியில் முற்றத்து மென்மணலில் மல்லாந்து படுத்துக்கொண்டார். தன் முகம் புன்னகை செய்துகொண்டிருப்பதை உணர்ந்ததும் அவருக்கு சிரிப்பு வந்தது. விடம்பனின் ஒவ்வொரு வரியும் நினைப்புக்கு வர உதடுகளை இறுக மூடி ஓசையின்றி உடல்குலுங்கச் சிரித்தார்.

இரவெல்லாம் சிரித்துக்கொண்டிருந்தபின் கருக்கிருட்டில் எழுந்து சூதரின் அருகே சென்று நின்றார். தன் இடைக்கச்சையில் இருந்த அனைத்து பொன்நாணயங்களையும் எடுத்து விடம்பனின் காலடியில் வைத்துவிட்டு இருளில் கிளம்பிச் சென்றார். மேய்ந்த குதிரைகள் ரதமருகே வந்து ஒற்றைக்கால்தூக்கி தூங்கிக்கொண்டு நின்றிருந்தன. அவரது ஓசைகேட்டு கண்களைத் திறந்த கபிலநிறப்புரவி பிடரி குலைய அருகே வந்தது. அதன் கழுத்தைத் தடவியபின் அவர் ரதத்தைப்பூட்டி ஏறிக்கொண்டார்.

முந்தைய கட்டுரைரசயாத்ரா
அடுத்த கட்டுரைவரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல்