ஜனநாயகம் என்பது -கடிதங்கள்

“ஜனநாயகத்தைப்புரிந்துகொள்ளாத ஒருவர் அந்தச் சர்வாதிகாரத்தை அமைதி என்றும் உறுதி என்றும் விளங்கிக்கொள்வார். ஜனநாயகத்தை கூச்சல் என்றும் என்றும் நினைப்பார். அத்தனை தடுமாற்றங்களுடனும் நிலையின்மையுடனும் ஜனநாயகம் சரியான பாதையில் செல்கிறது, அத்தனை உறுதியுடன் சர்வாதிகாரம் மக்களுக்கெதிரான பாதையில் செல்கிறது என்பதே அதற்கான பதிலாகும்.”

இந்திய ஜனநாயகத்தையும், சீன எதேச்சதிகாரத்தையும் ஒப்புநோக்கி, விமர்சிப்பவர்கள் பலரும் கொண்டிருக்கும் கருத்துக்கான விளக்கமும் பதிலும் இதுவே.

இதையே காந்தி, தனது உரை ஒன்றில், “Their railways, telegraphs and telephones – did they tend to help them forward to a moral elevation?” என்று கேட்கிறார். பொருளாதார முன்னேற்றமோ, ஒரு நாடு வல்லரசாவதோ அல்ல உண்மையான முன்னேற்றம். அவை மக்களின் பொருளாதார, சமூக முன்னேற்றம் மற்றும் அமைதியான வாழ்வுக்கு உதவும் கருவிகளாக மட்டுமே இருக்கும் வரை தான் அவற்றின் பயனும் மக்களுக்கு இருக்கும். என்று, அவை மக்களை விட முக்கியமானதாகப் போய்விடுகிறதோ, அன்று துவங்குகிறது அழிவு.

கம்யூனிஸம், முதலாளித்துவம், சர்வாதிகாரம், பாஸிஸம் என எந்தக் கோட்பாட்டை எடுத்துக் கொண்டாலும், இவை பொதுவான உண்மை. அருமையான கட்டுரை. நன்றி

பாலா

ஜெ

நான் கிராமப்புறங்களில் சேவைசெய்துவருபவன் ஜனநாயகம் என்ற கருத்தை சாதாரணமாக நம் மக்களுக்குப் புரியவைத்துவிடலாம், அறிவுஜீவிகளுக்குப் புரியவைக்கமுடியது என்று கவனித்திருக்கிறேன். அதாவது ஒருவர் எந்த அளவுக்கு நவீனக்கல்வியை அடைகிறாரோ அந்த அளவுக்கு ஜனநாயகத்தைப்புரிந்துகொள்வதில் தோல்வி அடைகிறார். ‘ஒரு சர்வாதிகாரி வரணும் சார்’ என்று சொல்பவர்கள் படித்தவர்கள்தான். இலங்கையில் சர்வாதிகாரத்தை [இருபக்கமும்] உண்டுபண்ணியவர்களும் படித்தவர்கள்தான்.

சாமானியமக்கள் தங்கள் குரலை கேடகக்கூடிய அரசு வரவேண்டும் என்று மட்டும்தான் எதிர்பார்க்கிறார்கள். அதாவது தங்களுக்கு அதிகாரம் வேணும் என நினைக்கிறர்கள். அது ஒரு தன்னம்பிக்கை. படித்தவர்கள் வேருஎவராவது எல்லாவற்றையும் சரியாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் அரசாங்கம் செய்யட்டும் சர்வாதிகாரி வரட்டும் என நினைக்கிறார்கள்

நம் ஊர்களில் சாதிப்பஞ்சாயத்து ஊர்ப்பஞ்சாயத்து என்ற வகையில் ஒருவகையான ஜனநாயகம் உண்டு. ஆகவே மக்களால் ஜனநாயகத்தை புரிந்துகொள்ளமுடிகிறது. படிப்பிலே அதெல்லாம் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை. ஆகவே ஐரோப்பிய சர்வாதிகாரத்தை பிடித்துக்கொள்கிறார்கள்.

அருமையான கட்டுரை நன்றி. ஜனநாயக அரசு என்பதற்கு மிகச்சரியான உவமை

சர்வேஸ்வரன்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 32
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’- நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 33