சிலவருடங்களுக்கு முன்பு தஞ்சையில் காவேரிக்கரையோரமாக பத்துநாட்கள் பயணம்செய்தேன். ஒரேமூச்சாக வேறுவேலைகளும் கவனங்களும் இல்லாமல் செய்யபப்டும் இத்தகையபயணங்கள் ஒரு நிலப்பகுதியைப்பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கவல்லவை என்பது என் அனுபவம். நம்முடைய அனுபவஅறிவும் இயல்பான நுண்ணுணர்வும் கவனமும் ஒருங்கிணைந்தாலே போதுமானது. உண்மையில் அப்பகுதியைப்பற்றி எழுதப்பட்ட பலநூறு ஆய்வுக்கட்டுரைகளை, தரவுத் தொகுப்புகளை அமர்ந்து வாசித்து பகுப்பாய்வுசெய்து பொதுமுடிவுகளுக்கு வருவதை விட இது உதவிகரமானது. ஏனென்றால் தரவுகளும் தரப்புகளும் பெரும்பாலும் பிறருடைய பார்வையால் கட்டமைக்கப்பட்டவை. நாம் பார்க்கும் ஒருகாட்சி நம்மால் மட்டுமே அர்த்தப்படுத்தப்படுகிறது.
அத்துடன் இன்னொன்றும் உண்டு. நாம் நேரடியாக ஈடுபடாத, நமக்குப்பங்களிப்பே இல்லாத ஓர் இடத்தை நாம் பார்க்கையில் அங்குள்ள காட்சிகளில் முக்கியமானவை- முக்கியமற்றவை, வேண்டியவை -வேண்டாதவை என்னும் பாகுபாடுகள் இல்லாமலாகின்றன. அனைத்தும் நம்மளவில் சமமானவை. அனைத்தும் நம்மில் அர்த்தப்பதிவுகளை உருவாக்குகின்றன. அந்நிலையில் சின்னஞ்சிறு விஷயங்கள் கூட குறியீடுகளாக ஆகி பெரிய வரலாறுகளை,சமூக மனநிலைகளைச் சுட்டுவனவாக ஆகிவிடுகின்றன. உதாரணமாக தஞ்சையின் சிறிய கிராமங்களில்கூட இருக்கும் ‘தந்தைபெரியார் படிப்பகங்கள்’. அவை பெரும்பாலும் அறுபதுகளில் கட்டப்பட்ட சிறிய கட்டிடங்கள் ஒன்றிரண்டு பெஞ்சுகள். ஒரு டெஸ்க். அதில் நாலைந்து செய்தித்தாள்கள். சுவர்களில் பழைய பெரியார்,அண்ணா படங்கள். அபூர்வமாக நெடுஞ்செழியன், மதியழகன் படங்கள். அவை தஞ்சையில் ஓர் அலையென எழுந்து இன்று அடங்கிமறைந்த திராவிட இயக்கத்தின் எழுச்சியின் தடையங்கள்.
அத்தகைய ஓரு வாசிப்புசாலையில் ஒரு படம் சட்டமிடப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. வி.என்.ஜானகியும் விஜயகுமாரியும் நீண்டகைகள் கொண்ட ஜாக்கெட் அணிந்து, கோணவ்கிடு எடுத்து சீவி மலர்சூடிய கூந்தலுடன், கைகளில் கறுப்பு – சிவப்பு கொடிகளை ஏந்தியிருந்தனர். ஜானகியின் கொடியில் எம்ஜிஆர் சுட்டுவிரலை தூக்கிக் காட்டினார்.விஜயகுமாரியின் கொடியில் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.நெடுநேரம் அந்தப்படத்தைப்பார்த்து அப்படியே நின்றுவிட்டேன். ஒரு காலப்பயணம் போல. நான் வாழாத ஒருகாலகட்டத்தில் என்னை வாழச்செய்தது அந்தப்படம். அத்தனை அறிதல்களையும் ஒரே கணத்தில் நிகழ்த்தும் கணத்தை அந்தப்படம் உருவாக்கியது. உண்மையில் அது ஒரு பரவசநிலை.புகைப்படங்கள் ஓவியங்களை விட வல்லமை கொள்ளும் தருணம் அது
ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய சாமானியனின் அரசியலையும் கனவையும் அந்தப்படம் காட்டுவதுபோலத்தோன்றியது. அந்த ஒருபடத்தில் இருந்து என்னென்ன அரசியல், சமூகவியல் , வரலாற்று ஊகங்களுக்குச் செல்லமுடியும் என எண்ணி வியந்துகொண்டேன். அந்தப்படத்தை உருவாக்கியவனின் மனநிலை என்ன? அதை விலைகொடுத்து வாங்கி சட்டமிட்டு மாட்டியவர்கள் எவ்வகை இளைஞர்கள்? அவர்கள் கனவுகண்ட சமூகம் என்ன? அவர்கள் அடைந்த எழுச்சிகள் ,சஞ்சலங்கள், ஏமாற்றங்கள் என்னென்ன?
1962 ல் பிறந்த நான் அந்தக்காலகட்டம் முற்றிலும் வடிய ஆரம்பித்த பின்புதான் நாளிதழ்களையே வாசிக்க ஆரம்பித்திருப்பேன். ஆயினும் அதை தகவல்களைக்கொண்டு வகுத்துக்கொண்டேன்.
இந்தியசுதந்திரப்போராட்டம்தான் இந்தியாவெங்கிலும் அரசியல்நடவடிக்கையை ஆரம்பித்துவைத்தது. அதற்குச் சில ஆண்டுகள் முன்னரே சென்னையிலும் மும்பையிலும் தலித் உரிமைகளுக்கான அரசியல் ஆரம்பித்திருந்தது. ஆனால் இந்திய சுதந்திரபோராட்டம் நாடுதழுவிய அலை. அது ஆரம்பித்தது 1918ல் காந்தி இந்தியாவுக்கு வந்து காங்கிரஸை மெல்ல கைப்பற்றியபின்னர்தான். அன்றுவரை காங்கிரஸின் உறுப்பினர் உரிமை நிபந்தனைக்குட்பட்டதாக இருந்தது. காந்தி அதை அனைவருக்கும் உரியதாக ஆக்கினார். அச்செயல் காங்கிரஸை சட்டென்று பெரும் மக்களியக்கமாக ஆக்கியது. காங்கிரஸ் இந்தியாவின் அனைத்து மூலைகளுக்கும் அரசியலை கொண்டுசென்று சேர்ந்தது. அங்குள்ளவர்களை இந்தியா என்ற பெரும் நிலப்பரப்பின் குடிமக்களாக உணரச்செய்தது. மொத்த இந்தியர்களின் நலன்களைப்பற்றிக் கவலைப்படச்செய்தது. அது ஓர் இலட்சியவாத அரசியல் அலை எனலாம்
1935ல் காங்கிரஸ் பிரிட்டிஷாரிடமிருந்து மாகாணசபைகளில் ஆட்சியமைப்பதற்கான உரிமையை வென்றெடுத்து தேர்தலரசியலில் நுழைந்ததும் அதிகார அரசியல் இந்தியாவில் ஆரம்பித்தது. ஆரம்பித்த கணமே அது காங்கிரஸை உடைத்தது. தேர்தலில் போட்டியிடும் பொருட்டு காங்கிரஸில் இருந்து வெளியேறிய சுயராஜ்யக்கட்சியின் பிளவின் பின்னடைவை காங்கிரஸ் தாண்டிவர காந்தியின் ஆறுவருடக்கால கடும் உழைப்பு தேவையாகியது. மனம்சோர்ந்த அவர் கிட்டத்தட்ட அரசியலைவிட்டே விலகி கிராமசேவைப்பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். தன்னைச்சூழ்ந்திருந்த அனைவரும் அதிகரா அரசியலின் வேட்பாளர்கள் என உணர்ந்த காந்தி அதற்கு முற்றிலும் அப்பாற்பட்டவர்களான ஒரு தொண்டர்படையை அமைத்தார். அந்த தொண்டர்களுடன் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தார். அவருடைய இலட்சியவாத அரசியலின் வீரர்களாக அவர்களே கடைசிவரைத் திகழ்ந்தனர்.
முதற்கட்ட இலட்சியவாத அரசியல் அல்ல, தேர்தல்களின் விளைவாக உருவான அடுத்தகட்ட அதிகார அரசியல்தான் இந்தியாவை அரசியல்மயமாக்கியது என்பதுதான் உண்மை.இந்தியாவில் தேசிய அளவில் தேர்தல்கள் ஆரம்பித்த 1935 லேயே அவை அனைத்துச் சமூகக்குழுக்களும், சாதிகளும் தங்கள் அதிகாரத்துக்காக முட்டிமோதிச் சண்டையிடும் களமாக ஆகிவிட்டன. அதிலிருந்து எவரும் விலகிநிற்கமுடியாதென்ற நிலை உருவாகியது. அன்றைய இலக்கியப்படைப்புகள் அன்று மாகாணசபைகளுக்கும் நகரசபைகளுக்கும் நிகழ்ந்த தேர்தல்களில் பணபலமும் சாதியப்பின்னணியும் எப்படி முதன்மைப்பங்காற்றின என்பதைக் காட்டுகின்றன. பிரிட்டிஷ் யானை உண்ட கவளத்தில் சில பருக்கைகள் சிந்தின. அவற்றை உண்ண எறும்புகள் ஒன்றை ஒன்று முட்டிமோதி முன்சென்றன.
இந்திய அரசியலின் மூன்றாவது கட்டம் என்பது 1952ன் சுதந்திர இந்தியாவின் முதல்பொதுத்தேர்தலில் ஆரம்பிக்கிறது. அதுவரைக்கும் வரிகட்டுபவர்களுக்கு மட்டுமே இருந்த வாக்குரிமை வயதுவந்த அனைவருக்கும் அளிக்கப்பட்டது. விளைவாக இந்தியாவின் அத்தனைகுடிமக்களும் அரசியலில் ஈடுபட்டேயாகவேண்டும் என்ற நிலைவந்தது. கும்பிட்டகைகளுடன் அரசியல்வாதிகள் அடித்தளமக்களைத் தேடிவந்தனர். அடித்தளமக்கள் அந்த அரசியல்வாதிகளை தங்களுக்குப் பயன்படுத்துவதெப்படி என சிந்திக்கத்தொடங்கினர். சாதிகளாக, மதங்களாக, வட்டாரங்களாகத் திரள்வது வாக்கரசியலில் வலிமையை அளிக்கும் என மக்கள் கண்டுகொண்டனர். அவர்களை அப்படித் திரட்டுவது அரசியல் ரீதியாக பலன் தருவது என அரசியல்வாதிகளும் கண்டடைந்தனர். இலட்சியவாத அரசியல் முழுமையாகவே மறைந்தது. அதிகார அரசியலில் தங்கள் பங்கைப்பெறுவதற்கு ஒன்றுதிரள்வதே வழி என்று ஒவ்வொரு சமூகக்குழுவும் எண்ண ஆரம்பித்தபோது இன்றைய ப்ங்கீட்டு அரசியல் ஆரம்பித்தது.
இந்தியாமுழுக்க பங்கீட்டு அரசியல் பல வடிவங்களில் பல பாவனைகளில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அன்று அரசியல் என்பது இலட்சியவாதம் சார்ந்ததாகவே இருந்தாகவேண்டும் என்ற பொதுவான நம்பிக்கை இருந்தது. அத்துடன் அரசியல்சட்டமும் பிரிவினைநோக்குள்ள அரசியலை எதிர்த்தது. ஆகவே சாதிசார்ந்த மதம்சார்ந்த அரசியல் மேல்பூச்சுக்கு ஒருவகை இலட்சியவாதத்தை உருவாக்கிக் கொண்டது. பஞ்சாபிசுபா போன்ற சில இயக்கங்கள் தெளிவான பிரிவினை அரசியல்முகத்தைக் கொண்டிருந்தாலும் பிறபகுதிகளில் உள்ள அரசியலியக்கங்கள் ஒருவகை இலட்சியவாதத்தை மேல்தளத்தில் முன்வைத்தன. அந்த இலட்சியவாத முகம் இளைஞர்களை உள்ளே இழுத்து தொண்டர்களை உருவாக்கியது. நடைமுறைத்தன்மை கொண்ட பங்கீட்டுஅரசியல் சமூகஅதிகார விசைகளை ஒருங்கிணைத்தது.
தமிழகத்தின் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அரசியல் ஆசைகள் 1925 முதலே வலுவாகத் தொடங்கிவிட்டாலும் தேர்தலரசியல் வலுப்பெறும்தோறும் வளர்ந்தது. காங்கிரஸுக்குள் அது ஒரு அதிகாரத் தரப்பாக வலுவடைந்தது. ஜஸ்டிஸ்கட்சியில் மேலும் வல்லமைகொண்ட அந்தத்தரப்பு படிப்படியாக திராவிட இயக்கத்தை உருவாக்கிக் கொண்டது. இடஒதுகீட்டு அரசியல் வழியாக அது வலுவடைந்து மெல்ல ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.இந்த பங்கீட்டுஅரசியல் எழுச்சியின் புறவயமான இலட்சியவாத முகம் என்பது மொழிப்பற்றாகவும் இனப்பற்றாகவும் இருந்தது.
இலட்சியவாதம் வழியாக அடையப்போகும் ஒரு பொன்னுலகை மக்கள் முன் காட்டியாகவேண்டிய அவசியம் இருந்தது. காங்கிரஸும் கம்யூனிஸ்டுக் கட்சியும் அந்த பொன்னுலகை எதிர்காலத்தில் சுட்டிக்காட்டின. திராவிட இயக்கம் அதை இறந்தகாலத்தில் சுட்டிக்காட்டியது. இழந்துவிட்ட ஒரு மகத்தான காலகட்டத்தை அலங்காரமும் உணர்ச்சிகரமும் கொண்ட சொற்கள் வழியாக அது மக்கள் மனத்தில் நிறுவியது. ஏற்கனவே தமிழகத்தில் வலுவாகநிகழ்ந்திருந்த தமிழியக்கத்தில் இருந்து அந்தக்கனவை அது கடன்வாங்கியது. சங்ககாலம் என்ற பொற்காலகட்டம். காதல்,மானம்,வீரம் என்னும் விழுமியங்கள். சிலம்பு ,குறள் போன்ற நூல்கள். கரிகாலன் செங்குட்டுவன் இளஞ்செழியன் போன்ற மாமன்னர்கள், குதிரைகள், உடைவாள்கள், வேல்கள், வேங்கைகள், அடலேறுகள், கடல்கடந்துசெல்லும் நாவாய்கள்… அவற்றை எதிர்கொண்டவர்கள் பெரும்பாலும் அன்று அடிப்படைக் கல்விகற்ற முதல்தலைமுறையிரான பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த இளைஞர்கள். அவர்களின் சாதியமரபும் குடும்பமும் அவர்களுக்கு இறந்தகால மேன்மை என எதையும் அளிக்கவில்லை. எந்தக் கனவையும் அவர்கள் அடைந்திருக்கவில்லை. திராவிட இயக்கம் அதை அளித்தது
எதிர்காலம் பற்றிய கனவை உருவாக்க மாபெரும் தத்துவஞானிகளாலேயே முடியும், மார்க்ஸ் அல்லது காந்திபோல. இறந்தகாலம் பற்றிய கனவை அதைவிட எளிதில் உருவாக்கிவிடலாம். ஏனென்றால் அது ஏற்கனவே முளைக்காதவிதை வடிவில் மக்களிடம் இருந்துகொண்டிருக்கிறது. மூதாதைவழிபாடாக அது மாற்றப்பட்டிருக்கும். எந்தப்பழங்குடிச்சமூகமும் மாபெரும் இறந்தகாலப் பொன்னுலகம் ஒன்றைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும். அது அவர்களின் சமகாலத்தின்மேல் இறந்தகாலத்தின் அதிகாரத்தை நீட்டிக்க உதவும். சமகாலத்தில் சென்றகாலத்தின் விழுமியங்களை ஏற்றிவைக்க உதவும். நிகழ்காலத்தை சென்றகாலத்தின் மரபில் இணைக்க உதவும். ஆகவே சென்றகாலத்தைய சிறப்பைச் சொன்னால் எந்த ஒரு சமூகமும் அதை மறுக்கத்துணியாது. அந்தச் சிறப்பு முற்றிலும் கற்பனை என அது அறிந்திருந்தாலும் அதை ஏற்கும் மனநிலையிலேயே இருந்துகொண்டிருக்கும். அதை ஒருபோதும் தர்க்கபூர்வமாக அணுகாது. ஆகவேதான் ஃபாசிசத்தின் கருவியாக, அடிப்படைவாதத்தின் ஆயுதமாக என்றுமிருப்பது சென்றகாலம் பற்றிய கனவு. இனம், மொழி, மதம், வட்டாரம் சார்ந்து சமைக்கப்பட்ட ஒரு இறந்தகாலப் பொன்னொளி
காங்கிரஸும் கம்யூனிஸ்டுகளும் பொன்னுலகத்தை மக்களின் அறிவை நோக்கி முன்வைத்தனர். திராவிட இயக்கம் அதை மக்களின் உணர்ச்சியையும் கனவையும் நோக்கி முன்வைத்தது. ஆகவேதான் பிற இரு சாராரைவிடவும் அவர்கள் அதிகமாக கலையை பயன்படுத்தினார்கள். அவர்களின் மேடைப்பேச்சு கருத்துப்பகிர்வே அல்ல, அது ஒரு நிகழ்த்துகலை. சி.என்.அண்ணாத்துரையின் பல உரைகளை நான் ஒலிப்பதிவில் கேட்டிருக்கிறேன். அவற்றில் அவர் சொல்லும் கருத்து என்பது ஒற்றைவரியில் முடிந்துவிடக்கூடியது. ஆனால் சுழலும் சொற்கள், ஓசையொழுங்குடன் துள்ளும் சொற்றொடர் அமைப்புகள், பாமரருக்கான நகைச்சுவை என அது ஒரு கலைநிகழ்ச்சி போலிருக்கும். தமிழகத்தில் அன்று புகழ்பெற்றிருந்த புராணக்கதைகூறலுக்கும், தெருக்கூத்துக்கும் திராவிட இயக்கத்தின் மேடையுரைகளுடன் இருந்த ஒற்றுமையை ஆச்சரியத்துடன் கவனிக்கலாம். மேடையில் கிட்டத்தட்ட நடனமிடுவார்கள். குரல்வித்தை காட்டுவார்கள். நகைச்சுவைத்துணுக்குகளை நடிப்பார்கள். மனப்பாடப்பகுதிகளை சரசரவென ஒப்பித்து கைத்தட்டல் வாங்குவார்கள்.
திராவிட இயக்கம் நாடகத்துக்கும் பின்னர் சினிமாவுக்கும் வந்த பாதை இது. அவர்களின் நாடகமும் சினிமாவும்கூட மேடைப்பேச்சுதான். மிகச்சிறந்த உதாரணம் பராசக்தி. அதில் சிவாஜிகணேசன் நீதிமன்றத்தில் பேசும் காட்சி நேரடியாகவே ஒரு திராவிட இயக்க மேடைப்பேச்சு. அதில் பிச்சைக்காரர் நலவாழ்வு பற்றி எஸ்.எஸ்.ராஜேந்திரன் பேசுவதுபோல சிறிய மேடைப்பேச்சுக்கள் பத்துக்கும் மேல் உள்ளன. மெல்ல சினிமா திராவிட இயக்கத்தின் அதிகாரபூர்வ கலையாக ஆகியது. தமிழகத்தின் பிரபலமான கலைகளான தெருக்கூத்து, நாடகம், பாவைக்கூத்து, கதாகாலட்சேபம், மரபிசை, நாட்டாரிசை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்துக்கொண்ட சினிமா தமிழர்களின் நிரந்தரப் போதையாக மாறியது. அதில் ஏறி திராவிட இயக்க்கம் தமிழகத்தின் மக்களியக்கமாக ஆகியது. ஆட்சியைக் கைப்பற்றியது.அங்கு தொடங்கிய பங்கீட்டு அரசியல் இன்று நேரடியான சாதிய அரசியலாக மாறி முழுமைகொண்டிருக்கிறது. இலட்சியவாத அரசியல் என்பது பழங்கதையாக மாறிவிட்டிருக்கிறது.
திராவிட இயக்கத்தின் வரலாற்றைக் கூர்ந்து பார்ப்பவர்கள் அது சினிமாவைக் கைப்பற்றியபின்னரே மக்களியக்கமாக ஆனது என்பதைக் காணலாம். அதன் அரசியல் உள்ளடக்கம் என்பது பிற்படுத்தப்பட்டோரின் அரசியலதிகார விழைவு. ஆனால் அதை முன்னெடுத்துச் சென்றது சினிமா வழியாக அது முன்வைத்த பொற்காலக் கனவு. அன்றைய இளைஞர்களை அதைநோக்கி இழுத்தது அக்கனவுதான். அக்கனவை சினிமாவில் சொன்ன நடிகர்கள் மிக விரைவிலேயே தலைவர்களைவிட செல்வாக்கு பெற்றார்கள். சி.என்.அண்ணாத்துரை பேசும் அரங்கில் எம்.ஜி.ஆர் பேசிமுடித்ததும் முக்கால்வாசி பார்வையாளர்க்ளும் கிளம்பிச்செல்வது பலமுறை நிகழ்ந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் தன் முக்கியத்துவத்தை காட்ட அதை திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கிறார்.திராவிட இயக்கம் அடைந்த அனைத்து அரசியல்வெற்றிகளும் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர் போன்ற நடிகர்களின் பங்களிப்பால் விளைந்தவையே. ‘தம்பி உன் முகத்தை மட்டும் கொடு, வெற்றிபெறுவேன்’ என அண்ணாத்துரை எம்.ஜி.ஆரிடம் கோரியது வரலாறு
எஸ்.எஸ்.ராஜேந்திரன் மிகக்குறுகிய கால அளவில் தி.மு.கவின் இரு நடிகமுகங்களில் ஒன்றாக இருந்திருக்கிறார். சரளமான வசன உச்சரிப்பும், திராவிட இயக்கத்தினர் பெரிதும் விரும்பிய செந்நிறத்தோலும் கொண்டவர் அவ்ர். ஆனால் அவர் மிக விரைவிலேயே வீழ்ச்சியடைந்தார். அவரது வீழ்ச்சி எம்.ஜி.ஆர் , மு.கருணாநிதி இருவரும் இணைந்து நிகழ்த்தியது என்று கேட்டிருக்கிறேன். அதைவிட அரசியலில் நீடிப்பதற்கான திறமைகள் அவருக்கில்லை என்பதே காரணம் என நான் ஊகிக்கிறேன். எம்.ஜி.ஆரிடம் வெற்றியைநோக்கிக் கொண்டுசென்ற மூன்று அம்சங்கள் இருந்தன. திரையிலும் வெளியிலும் ஓரு தெளிவான நாயக பிம்பத்தை கட்டமைத்த கவனம், தனக்கென ஓர் ரசிகர் அமைப்பை உருவாக்கிக்கொள்ளும் அமைப்புத்திறன், வலுவான தொடர்புகளை பேணும் நிதானம். மூன்றுமே எஸ்.எஸ்.ராஜேந்திரனிடம் இருக்கவில்லை.
அவர்கள் இருவரும் தி.மு.கவின் முகங்களாக அறியப்பட்ட அந்த குறுகிய காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட படம் அது. அதில் அன்றைய எளிய தி.மு,க தொண்டனின் கனவு இருந்தது. அழகிய நாயகன். அரும்புமீசை, செந்நிறம் [படத்தில் கிட்டத்தட்ட ரத்தச்சிவப்பு] சுருள்முடி, உயர்தர ஆடைகள். கொள்கைப்பற்று அல்லது இலட்சியவாதம் கொண்டவன். அத்துடன் அழகிய பெண்கள் அவர்களை நெஞ்சில் ஏற்றியிருக்கிறார்கள்! அவர்கள் அவன் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அவனுக்குத் தோள்கொடுக்கிறார்கள். அனைத்தும் அந்தப்படத்தில் இருந்தது. சங்ககாலம் போலவே தி.மு.க அன்று உருவாக்கிய ஒரு சமகாலக் கனவு. அந்தப்படத்தில் இருந்த பகற்கனவு தமிழகத்தின் தலைவிதியைத் தீர்மானித்த விசை என்றால் ஆச்சரியமில்லை.
விஜயகுமாரியை மிகவிரைவிலேயே எஸ்.எஸ்.ராஜேந்திரன் விவாகரத்து செய்தார். அதற்கு முன் திருமணமான நாளில் இருந்தே அவர்களின் உறவு மிக வன்முறை மிக்கதாக, துன்பம் நிறைந்ததாக இருந்தது. எம்.ஜி.ஆர் இன்னொருவரின் மனைவியாக இருந்த வி.என்.ஜானகியை மணந்தாலும் அவர் பலகதாநாயகிகளுடன் உறவுள்ளவராக இருந்தார் என்பது தமிழகம் அறிந்தது. அந்தப்படத்தை அமைத்தவர் கண்ட கனவுக்கும் அவர்களின் உண்மைவாழ்க்கைக்கும் தொடர்பே இல்லை.. ஆனால் என்றாவது யதார்த்தம் கனவுகளை உருவாக்குவதற்குத் தடையாக இருந்ததுண்டா என்ன?