விக்ரமாதித்யனுக்கு சாரல் விருது

2014-ஆம் ஆண்டுக்கான சாரல் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. விருது வரும் ஜனவரி 25 அன்று சென்னை புக்பாயிண்ட் அரங்கில் [ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில் அண்ணாசாலை] நிகழும். நேரம் மாலை ஆறுமணி.

இவ்விருது ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது. ஜேடி ஜெர்ரி இருவரும் இவ்விருதை அவர்களின் பெற்றோர் பேரில் வழங்குகிறார்கள்.

விக்ரமாதித்யன் தமிழின் முக்கியமான நவீனகவிஞர்களில் ஒருவர். அவரது தனித்துவமும் பங்களிப்பும் தமிழ்க்கவிதையை வளப்படுத்தியவை.

தமிழ்நவீனக்கவிதை படிமவியலை தன் முதன்மை அழகியலாகக் கொண்டது என்று சொல்லலாம். எஸ்ரா பவுண்ட் படிமவியல் நோக்கில் கவிதையை வரையறைசெய்து எழுதிய கட்டுரையை தமிழாக்கம் செய்து முன்வைத்த க.நா.சு.வில் இருந்து தொடங்கியது நவீனத் தமிழ்க்கவிதையின் இயக்கம்.

ஆகவே படிமச்செறிவே நவீனகவிதை என பொதுவாக அறியப்பட்டது. அப்படிமங்கள் ஒரு சொல்கூட அதிகமாக இல்லாத இறுக்கமான சொற்களில் முன்வைக்கப்படவேண்டும் என்றும், இசையற்ற கூற்றுமொழி அமையவேண்டும் என்றும், உணர்ச்சிகள் வெளிப்படவேகூடாது என்றும் அவ்வழகியல் வரையறுத்தது.

அந்தப் பொதுவரையறையை தன் இயல்பால் மீறிச்சென்றார் என்பதே விக்கிரமாதித்யனது கவிதையின் தனித்தன்மை. அவரது கவிமொழி மிக நெகிழ்வானது, சரளமானது. உள்ளோடும் இசை கொண்டது. அதற்கேற்ப அடுக்கி வரும் சொற்களால் ஆனது. நீட்டிச்சொல்லும் பேச்சுத்தன்மை கொண்டது. அத்துடன் பெரும்பாலும் படிமங்கள் இல்லாமல் நேரடியான கவிக்கூற்றையே கவிதையாக முன்வைத்தார் விக்ரமாதித்யன். அதுவே அவரது கவிதைகளின் தனித்தன்மை.

இத்தகைய கவிதைகளுக்குரிய குறைபாடுகளுக்கும் விக்ரமாதித்யன் கவிதைகளுக்கு உண்டு. உள்ளெழுச்சி சரியாக மொழியைச் சந்திக்காதபோது அவை வெறும் வரிகளாக வெளிறிக்கிடக்கும். சாதாரணப் பேச்சையே மடக்கி மடக்கி எழுதிவைத்ததுபோல தெரியும். ஏனென்றால் அவை நேரடியாக வெளிப்படும் உள்ளெழுச்சியை மட்டுமே கவிதையாக முன்வைக்க முயல்கின்றன.

விக்ரமாதித்யனின் பங்களிப்பு என்பது நவீனத்தமிழ்க்கவிதையில் பொதுவாக இல்லாமலிருந்த தமிழ் மரபுக்கூறுகளை, பழந்தமிழ் இலக்கியமரபின் அழகுகளை உள்ளே கொண்டுவந்தார் என்பதுதான். தமிழ் நவீனக்கவிதை ஐரோப்பிய நவீனத்துவத்தை நெருக்கமாக பின்பற்றியதனாலேயே தமிழின் நீண்ட கவிமரபுடன் தன் உறவை துண்டித்துக்கொண்டதாகவே இருந்தது. அவ்வுறவை அறுபடாமல் தக்கவைத்துக்கொண்டு வெளிப்பட்டவை விக்ரமாதித்யனின் கவிதைகள். அவற்றில் உள்ள தமிழ் மரபுசார்ந்த படிமங்களும் தமிழ்மரபுக்கவிதைக்குரிய மொழியோட்டமும் முக்கியமானவை.

விக்கியண்ணாச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!


விக்ரமாதித்யன் பற்றி சுகுமாரன்


விக்ரமாதித்யன் கவிதைகள் சில

மேலும் சில விக்ரமாதித்யன் கவிதைகள்

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 21