ஜெயமோகனும் சூத்ரதாரியும் இணைந்து செய்த நேர்காணல்களின் தொகுப்பு எனிஇந்தியன் பதிப்பக வெளியீடாக வருகிறது. பல நேர்காணல்களில் அவர்களின் நண்பர்களான செந்தூரம் ஜெகதீஷ், ஆர். குப்புசாமி, வேதசகாயகுமார், அ.கா. பெருமாள், சரவணன் 1978, ஜி. சந்திரசேகர், க. மோகனரங்கன், சுப்பிரமணியம் ஆகியோரும் பங்களித்துள்ளனர். நேர்காணல்கள் அயல் குரல்கள், மரபின் குரல்கள், முதல் குரல்கள், புதுக்குரல்கள் ஆகிய தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அயல் குரல்கள் பகுதியில் நித்ய சைதன்ய யதி, கே. சச்சிதானன்ந்தன், டி.ஆர். நாகராஜ்
மரபின் குரல்கள் பகுதியில் பேராசிரியர் ஜேசுதாசன், நா. மம்மது
முதல் குரல்கள் பகுதியில் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், நீல. பத்மநாபன், அ. முத்துலிங்கம்
புதுக் குரல்கள் பகுதியில் பாவண்ணன், எம். யுவன்
– ஆகியோரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன.
“நேர்காணலில் பலவிதப் பரப்புகளை வெகுஜன ஏடுகள் அறிமுகப்படுத்தியிருந்தாலும் சமகாலப் பரபரப்புக்கு அதைப் பயன்படுத்தியதுதான் அதிகம். ஆனால், ஞானரதம், படிகள், காலச்சுவடு ஆகிய ஏடுகள் நேர்காணலை ஒரு கலைவடிவமாக உயர்த்தின. அந்தக் கலை வடிவத்தை ஜெயமோகன் நேர்காணல்கள் இன்னமும் செழுமைப்படுத்தியுள்ளன. ஆளுமைகளின் கருத்துகள் என்ற வரையறையில் இயங்காமல், ஒரு சுதந்திர உரையாடலாய் பரிணாமம் கொள்ளும் இந்த நேர்காணல் இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைக் கோரி நிற்கின்றன” என்று பதிப்புரையில் எழுதுகிறார் கோபால் ராஜாராம்.
“குளிர் நிழல் காலங்கள்” என்ற தலைப்பில் நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் சூத்ரதாரி.
“இந்த நூலில் உள்ள நேர்காணல்கள் ஒவ்வொன்றுமே அவை வெளியான காலகட்டத்தில் அதிக கவனத்தைப் பெற்றவை. குரு நித்ய சைதன்ய யதியின் நேர்காணல் 1998ல் வெளியான பின் கலை, இலக்கியம், மொழி ஆகியவற்றிற்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள உறவு குறித்த புதிய உரையாடல் தமிழ்ச் சூழலில் உருவானது.
தலித்தியம் குறித்த பார்வைகளும் விவாதங்களும் தமிழில் வெளிப்படத் துவங்கிய காலத்தில் வெளியான டி.ஆர். நாகராஜின் நேர்காணல் தலித்தியம் குறித்த பல தெளிவுகளையும் புரிதல்களையும் சாத்தியப்படுத்தியது” என்று எழுதுகிறார் சூத்ரதாரி.
ஏறக்குறைய 285 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை: ரூபாய் 150. சென்னை புத்தகக் கண்காட்சியின்போது இந்நூல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நூலிலிருந்து மாதிரிக்காகச் சில கேள்விகள்:
குரு நிதய சைதன்ய யதியிடம்:
நீங்கள் இலக்கியத்தை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
அறிவு எப்படி உள்முரண்கள் கொண்டதாக இருக்கிறது?
கே. சச்சிதானந்தனிடம்:
மார்க்ஸியர்கள் இன்று மூன்று வகையான நிலைப்பாடுகளை எடுத்துள்ளனர். ஒன்று: பழைய நிலைப்பாடுகளை அப்படியே தொடர்தல். இரண்டு: எல்லாவற்றையும் வீசிவிட்டுப் புதிதாகச் சிந்திக்கத் தொடங்குதல். மூன்று: மார்க்ஸியத்தைத் தன்னுள் அடக்கிக் கொள்ளும் விரிவான புதிய சிந்தனைகளை நோக்கி நகர முயலுதல். உங்கள் நிலை என்ன?
எம். கோவிந்தன் மலையாளத்தைத் தமிழுக்கு அருகில் கொண்டுவர முயற்சி செய்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
டி.ஆர். நாகராஜிடம்:
பெரியார் பற்றி இன்று உங்கள் கணிப்பு என்ன?
பெரியார் இந்தியாவின் பழங்குடி மரபுகளையும் மதங்களையும் நம்பிக்கைகளையும் நிராகரித்தார் என்று முன்பு ஓர் உரையில் கூறியுள்ளீர்களே…
பின்நவீனத்துவம் பற்றி உங்கள் மதிப்பீடு என்ன?
பேராசிரியர் ஜேசுதாசனிடம்:
உங்கள் பார்வையில் இலக்கியத்தில் தொல்பழங்காலம் முதல் இந்தக் கணம்வரை தொடர்ந்து வரக்கூடிய பொதுஅம்சம் ஏதாவது உண்டா? இலக்கியம் என்ற சொல்லால் எப்போதுமே சுட்டப்படுவது என ஏதாவது உண்டா?
கம்பனுக்கு அடுத்தபடியாக தமிழ் மரபின் பெரிய கவிஞர் யார்?
நா. மம்மதுவிடம்:
தமிழிசை என்று ஒன்றை அடையாளம் காண வேண்டிய அவசியம் என்ன?
அசோகமித்திரனிடம்:
சாதாரணத்தன்மையை ஓர் அழகியல் உத்தியாகவே கடைபிடிக்கிறீர்களா?
உங்கள் படைப்புகளில் சம்பவங்களுக்கு உள்ள முக்கியத்துவம் ஏன் கதாபாத்திரங்களுக்கு இருப்பதில்லை? நீங்கள் முகங்களை நடமாடவிடுவதில்லை. “ஸ்நாப்” செய்கிறீர்கள். இது ஓர் இயல்புதான். என்ன காரணம்?
இந்திரா பார்த்தசாரதியிடம்:
இன்றைய தமிழ் நாடகச் சூழல் பற்றிய உங்களின் அபிப்பிராயம் என்ன?
கணையாழியின் கௌரவ ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். இன்றைய சிறுபத்திரிகைகளின் போக்கு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ஜெயகாந்தனிடம்:
உங்கள் ஆன்மீகமும் உங்களிடமுள்ள முற்போக்கு அம்சமும் எங்காவது முரண்பட்டது உண்டா?
காந்தியை எப்படி அணுகியிருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்?
நீல. பத்மநாபனிடம்:
உங்கள் நாவல்களில் அதிகமாக சிறுகதைகளில் ஓர் ஒழுக்கவாதியின் குரல் எழுந்தபடியே இருக்கிறதே.
உங்கள் எழுத்து தட்டையானதாக உள்ளது அல்லது வேகங்களும் உச்சங்களும் இல்லாமல் உள்ளது என்று சொல்லப்படுகிறதே.
அ. முத்துலிங்கத்திடம்:
முற்றாகவே இலக்கிய அரசியலுடன் தொடர்பற்று இருக்கிறீர்கள். ஏன்? அது ஒரு நிலைப்பாடா? உங்களுக்குக் கருத்துகள் இல்லையா? கோபதாபங்கள் இல்லையா?
கி. ராஜநாராயணின் கதை சொல்லி போக்கு உங்களிலும் காணப்படுகிறதே. அதன் ஈழவேர் என்ன? அங்கேயுள்ள நாட்டார் மரபு குறித்து இங்கு ஒன்றும் தெரியாது.
பாவண்ணனிடம்:
வறுமையை அறிந்தவர். வறுமையின் கொடுமையை எழுதுபவர் நீங்கள். இருப்பினும் உங்களால் ஏன் ஒரு இடதுசாரி எழுத்தாளராக முடியாது போயிற்று?
சமீபகாலமாகப் புராணம் சார்ந்த சில கதைகளை எழுதினீர்கள். புராணங்கள் தத்துவ சிந்தனையின் குறியீட்டு வடிவங்கள். நீங்கள் தத்துவ சிந்தனைக்குப் போகாமல் அவற்றை வேறு தளத்தில் வைத்துப் பார்ப்பதாகப் படுகிறது. பல சமயம் ஒழுக்கம், நீதி ஆகியவற்றின் தளத்தில். இது பிரக்ஞைபூர்வமானதா?
எம். யுவனிடம்:
கவிதை என்றால் என்ன? என்பது பற்றி உங்களிடம் ஏதாவது நிர்ணயம் உண்டா?
நவீனக் கவிதைக்கு மிகத் தோராயமாகவேனும் ஒரு இலக்கண அமைப்பைக் கற்பிதம் செய்ய முடியுமா?
நேர்காணல் இலக்கிய உரையாடல்கள் – நூல் அறிமுகம் பி.கெ.சிவகுமார்