உப்பிட்ட வாழ்க்கைகள் (லோகிததாஸின் திரைக்கதைகள்)

1. முள்முடி

 

ஒரு செவ்விலக்கிய ஆக்கத்தின் உண்மையான கதாநாயகன் விதிதான். என்று ஒரு கூற்று உண்டு. விதி என்னும்போது இங்கே முன்வினைகள் நிகழும் வினைகளாக விளைந்து வருதலை குறிப்பிடவில்லை. மனிதன் அவன் அறியாத இறை விளையாட்டுக்களால் பந்தாடப்படுவதையும் குறிப்பிடவில்லை. இங்கே விதி என்று கூறப்படுவதை பிரபஞ்ச இயக்கம் என்று கூறலாம். மானுட வாழ்வின் ஒட்டுமொத்த பரிணாமம் என்று கூறலாம். வாழ்க்கையின் மகத்தான வலைப்பின்னல் என்று கூட கூறலாம். அதைத்தான் செவ்வியல் கலைஞன் கூற முற்படுவான்.

 

அந்த விதியின் மாபெரும் கதை என்று மகாபாரதத்தை கூறலாம். மகாபாரதத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமம் பிற பல்லாயிரம் கதாபாத்திரங்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துள்ளது. யாருக்கும் அவர்களுக்கு மட்டுமேயான கதை இல்லை. ஒட்டு மொத்தமாய் பெருகி வழிந்தோடும் வாழ்க்கைப் பெருவெள்ளத்தின் துளிகள்தான் ஒவ்வொரு கதாபாத்திரமும். அந்தப் பின்னல் அவர்கள் வாழும் காலத்தில் பக்கவாட்டில் விரிந்து விரிந்து செல்கிறது. அத்துடன் முற்பிறவிகளால் இறந்த காலத்தில் பின்னிப் படர்கிறது. மறுபிறவிகள் மூலம் வரும் காலத்தில் பரவிச் செல்கிறது. அந்த வலையில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மாட்டியிருக்கின்றது. ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் ஒவ்வொரு செயல்பாட்டின் மூலமும் அந்த வலையை பின்னிக் கொண்டும் இருக்கிறது.

மகாபாரதம் வியாசனின் ஆக்கம். வியாசன் உச்சரித்து விட்டவையே உலகில் அத்தனை கதைகளும் ‘வியாச உச்சிஷ்டம் ஜகத் சர்வம்’ என்ற தொன்மையான பழமொழி கூறுவதும் இதையே.

 

வியாசனின் பக்தராக இருந்தார் லோகி. ஒருமுறை அவரது கதை ஒன்றின்மீது உரிமைகோரி ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. பாலக்காடு நீதிமன்றத்தில் லோகி கூண்டில் ஏறினார். நீதிபதி கேட்டார். “உங்கள் கதை அசலா?” லோகி சொன்னார் “இல்லை”  நீதிபதியும் வழக்கறிஞர்களும் அதிர்ந்து போனார்கள். “அப்படியானால் இது யாருடைய கதை?” என்றார் நீதிபதி. “இது வியாச மகரிஷியின் கதை. மண்ணில் எழுதப்படும் கதைகள் அனைத்துமே அவர் உருவாக்கிய கதைகளின் நகல்கள்தான்.” என்றார் லோகி

 

“இந்தக் கதையின் மூல வடிவத்தைச் சொல்லுங்கள்”  என்றார் நீதிபதி. லோகி அதை விவரித்தார். உணர்ச்சிகரமாக கதை சொல்பவர் அவர். நீதிமன்றத்தில் ஆர்வம் பரவியது. ‘அப்படியானால் இது எந்தக்கதை?’ என்று இன்னொரு கதையைச் சுட்டிக்காட்டி கேட்டார் நீதிபதி. அதன் மூலத்தை விளக்கினார் லோகி. அப்படியானால் இது? அதையும் லோகி விளக்கினார். மகாபாரதத்தின் முடிவிலா முகங்கள்.

 

“அப்படியானால் உங்கள் பங்களிப்புதான் என்ன?” என்றார் நீதிபதி. லோகி “நான் அந்தக்கதைகளுக்கு சமகால வாழ்க்கையை அளிக்கிறேன். என் ரத்தத்தாலும், கண்ணீராலும் அவற்றுக்கு உணர்ச்சிகளை அளிக்கிறேன். நான் அந்தக் கதைகளில் மீண்டும் வாழ்கிறேன். அதில் தெரியும் கதை புராதனமானது. அதில் உள்ள வாழ்க்கை என்னுடையது. என் கண்ணிரும் சிரிப்பும் அவற்றை இன்றைய ரசிகனுக்கு கொண்டு செல்கின்றன” என்றார். வழக்கு தள்ளுபடியாயிற்று.

கிரீடம்

இந்தக் கதையை லோகி என்னிடம் சொன்னபோது, அவரது கண்கள் ஒளிவிட்டன. மிகமெல்ல கீழிமைகள் ஈரமாயின. நான் கேட்டேன், “சரி லோகி, கிரீடம் மகாபாரதத்தில் எந்தக்கதை?” லோகி புன்னகை புரிந்தார். “சேதுமாதவன் ஒரு கடையின் வாசலில் அமர்ந்திருந்தான். அவன் கண்முன் எதிர்காலம் பற்றிய கனவுகள். வேலை. ஒரு காதலி. இனிய ஒரு குடும்ப வாழ்க்கை. அப்போது அவனுடைய கண்ணுக்கு முன்னால் அந்தச் சிறிய நகரத்தின் முச்சந்தியில் ஒரு பத்மலியூகம் விரிந்தது. அதற்குள் நுழைய அவனுக்குத் தெரியும். ஆனால் வெளியேற வழி தெரியாது. அவனுக்கு என்று அல்ல, எவருக்குமே அதிலிருந்து வெளியேறும் வழி தெரியாததுதான். சேது ஒரு கணம் தயங்கினான். அவனுக்குத் தெரியும் உள்ளே நுழைந்தால் என்ன ஆகும் என்று. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது. அது அவன் அப்பாவுக்குச் செய்தாக வேண்டிய கடமை. அதை அவன் செய்யவில்லை என்றால் கோழையாக ஆகிவிடுவான். ஆகவே அவன் இறங்கி வந்தான். வியூகத்தை உடைத்து உள்ளே புகுந்தான். கீரிக்காடன் ஜோஸை தாக்கினான்.”

 

ஆம், அபிமன்யுவின் கதையேதான். அதுதான் லோகியின் மாயம். அவருள் விழுந்த மகாபாரதத்தின் கதை நிஜவாழ்க்கையின் ஒரு யதார்த்தத்தை ஒரு புள்ளியில் வந்து சந்திக்கிறது. அங்கே அவரது திரைக்கதை ஆரம்பிக்கிறது. அந்த நிகழ்ச்சியை லோகி சொல்லியிருக்கிறார். சிறுவயதில் கேட்ட கதை. ஒரு சிறிய கிராமத்துக் கள்ளுக்கடை. மது அருந்திக் கொண்டிருக்கும் சமானியனான ஆசாரியை உள்ளூர் ரவுடி தேவை இல்லாமல் மிரட்டுகிறான், அடிக்கிறான். சட்டென்று தற்காப்புக்காக ஆசாரி தன் உளியை எடுத்து விசுகிறார். ரௌடி இறந்துவிடுகிறான்.

 

லோகி சந்திக்கும்போது அந்த ஆளை சிறைக்குச் சென்று மீண்டு வந்து நகரின் அஞ்சப்படும் ரௌடியாக இருக்கிறான்! தன் இருப்பில் இருந்த கட்டாரியை எடுத்துக்காட்டி ஆசாரி சொன்னான், “உள்ளே வந்துவிட்டேன். இனி வேறு வழியே இல்லை. நான் போராடித்தான் ஆகவேண்டும். வெளியே போக வழியே இல்லை. ஒரே வழி இதுதான். இந்தக் கத்தி போல எனக்காக ஒரு கத்தி எங்கோ இருக்கிறது. அது என் விலாவைத் துளைத்து நுழையும். அதுதான். அதுவரை இந்த வியூகத்தின் உள்ளேதான் என் வாழ்க்கை.”

 

பிறகு ஒரு தருணத்தில் லோகி நினைத்துக் கொண்டார். “அடடா இதுவல்லவா பத்ம வியூகம்” என்று. அங்கே விழுந்தது கிரீடத்தின் முதல் விதை. பலருக்கும் தெரியாத ஒன்று உண்டு. லோகி எழுதிய முதல் திரைக்கதை ‘தனியாயவர்த்தனம்’ அல்ல. அது முதலில் படமாக்கப்பட்டது. ஆனால் அது மூன்றாவது திரைக்கதை மட்டும்தான். லோகியின் முதல் திரைக்கதை இரண்டாவதாக வெளிவந்த ‘எழுதாப் புறங்கள்’ இரண்டாவது திரைக்கதை ‘கிரீடம்’. பிரகுதான் ‘தனியாவர்த்தனம்’. கிரீடம் இரண்டரை வருடம் லோகியின் கையில் இருந்த திரைக்கதை. அதை அவர் திரையில் கண்டபோது எதையோ இழந்ததாகவே உணர்ந்தார் என்று கூறியிருக்கிறார்.

 

பத்மவியூகமாக வந்த விதியின் கதைதான் கிரீடம். சேதுமாதவன் அவனை சுற்றியிருப்பவர்களால் சிறகின் வெதுவெதுப்புக்குள் வைத்து அரவணைக்கப்படுகிறான். அப்பாவுக்கும் மாமாவுக்கும் அவன் எதிர்காலம். அம்மாவுக்கும் முறைப் பெண்ணுக்கும் அவன் நிகழ்காலம். அப்போதுதான் விதி தன் வலையை விரிக்கிறது. கிரீடம் படத்தின் வலிமையே  சேதுமாதவன் ஜோஸை தாக்க முடிவெடுக்கும் தருணத்தை லோகி எழுதியிருக்கும் விதம்தான். அப்பாமீது அபாரமான பிரியம் உள்ளவனாக, அப்பாவின் செல்லப் பிள்ளையாக இருக்கிறான் சேதுமாதவன்.

 

அவனுடைய கண்ணுக்கு முன்னால் அப்பாவை கேடி கீரிக்காடன் ஜோஸ் போட்டு அடிக்கிறான். கடை வராண்டாவில் அமர்ந்திருக்கும் சேது மாதவன் அந்தக் காட்சியை பார்ப்பதை தவிர்க்கிறான். தாளமுடியாத தவிப்புடன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். செயலிழந்தவனாக இருப்பதற்கு முயற்சி செய்கிறான். ஆனால் அப்பாவை கீரிக்காடன் ஜோஸ் கொலை செய்துவிடுவான் என்ற கணம் வருகிறது. எந்தக் கொலைக்கும அஞ்சாதவன் ஜோஸ். இன்னும் சில கணங்கள் சேது பேசாமலிருந்திருந்தால் அவன் கண்ணுக்கு எதிரே அப்பா பிணமாகியிருப்பார். அவனுக்கு இன்னொன்றை தேர்வு செய்யும் வாய்ப்பே இல்லை. அவன் பாய்கிறான்.

 

கீரிக்காடன் ஜோஸ¤டன் நடக்கும் அந்தச் சண்டையிலும் சண்டையை தவிர்க்கவே சேது முனைகிறான். மௌனமாக அடி வாங்குகிறான். ஆனால் மீண்டும் இன்னொரு தருணம் வருகிறது. அடி வாங்கி புழுப்போல அவன் சாகலாம் அல்லது அவன் திருப்பி அடிக்கலாம். அடிபட்டு தெறித்து விழும் சேதுவின் கையில் ஒரு கம்பு அகப்படுகிறது. பாதாளத்தில் விழுபவனுக்கு பிடி கிடைத்த உயிர்காக்கும் கொடிபோல அது. அவன் அந்தக் கம்பை எடுத்தபடி ‘ஹ’ என்ற ஒலியுடன் துடித்தெழுகிறான்.

 

அது உண்மையில் சேதுவின் முடிவே அல்ல; அவனுடைய உயிரின் முடிவு. தங்கி வாழவும், தப்பிச் செல்லவும், ஓயாது துடிக்கும் உயிரின் ஆதி விழைவு. அவன் திருப்பி அடிக்கிறான். ஜோஸை அடித்து வீழ்த்தும்போது அவன் முகத்தில் கோபமும் வெறியும் தெரிவதில்லை. பயமும் தப்பியோடும் விருப்பமும்தான் தெரிகின்றன. அடித்துப் போட்டுவிட்டு சேதுமாதவன் கொக்கரிக்கவில்லை. அது அவனுக்கு ஒரு வெற்றி அல்ல. அது ஒரு மாபெரும் தோல்வி. தன்னை தன் விதியை விதியாகி வந்த சூழலை வெறுத்து மனம் உடைந்து அந்தக் களத்தில் அமர்ந்து சேதுமாதவன் குமுறி அழுகிறான்.

 

“அடிப்பதும் அடிபடுவதும் ஒரு போலீஸ்காரனின் வேலை. அதற்குத்தான் அவனுக்குச் சம்பளம் தருகிறார்கள். அவனை பாதுகாக்க அவனுடைய துறை உண்டு. நீ எதற்காக உள்ளே வந்தாய்?” என்று அச்சுதன்நாயர் மகனிடம் கேட்கிறார். “பின்னே நான் என்ன செய்திருக்க வேண்டும்? அப்பா அடிபட்டுச் சாவதை கைகட்டி பார்த்திருக்க வேண்டுமா என்ன?” என்று கேட்கிறான் சேது. அச்சுதன்நாயருக்கு பதில் இல்லை. தலைகுனிகிறார். அந்த பதிலே இல்லாத தருணம் அத்தனை வலுவுடன் சித்தரிக்கப்பட்டிருப்பதனால்தான் கிரீடம் அந்த காவியத் தன்மையை அடைந்தது. மற்றபடி அது ஒரு எளிமையான சண்டைப்படம்தான். தெலுங்கிலும் தமிழிலும் இந்தியிலும் அந்தப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டபோது இந்த விதியின் தருணத்தை சாதாரணமான ஒரு அடியின் தருணமாக மாற்றி ‘மேம்படுத்தி’னார்கள் இங்கே உள்ளவர்கள். அந்தப்படங்கள் சர்வ சாதாரணமான சண்டைப் படங்களாகவே எஞ்சின.

 

கிரீடத்தில் சேதுமாதவன் எஞ்சிய படம் முழுக்க அந்த பத்மவியூகத்தில் இருந்து வெளியே வருவதற்காகவே முயல்கிறான். அவனிடம் தெரிவதெல்லாமே புதை மணலில் மாட்டிக் கொண்டவனின் பதற்றமும் பயமும்தான். வெளியே வருவதற்காக முயற்சிகள் எல்லாமே மேலும் மேலும் புதைவதற்குத்தான் உதவுகின்றன. சேதுமாதவனின் உள்ளத்தில் கொந்தளித்துக் கொண்டிருப்பது வாழ்வுக்கான ஆசை மட்டுமே.

ஆனால் மெல்ல அவன் தனிமைப்படுகிறான். அவனை கைநீட்டி பிடித்து தூக்கிவிட வேண்டியவர்கள் ஒவ்வொருவரும் வேறு வழியே இல்லாமல் விலகிச் செல்கிறார்கள். முதலில் நண்பர்கள். பிறகு அப்பா, அம்மா, சகோதரர்கள்.

 

தன் காதலியைக் கண்டு கடைசியாக விடைபெறச் செல்கிறான் சேது. “எனக்குத் தெரியவில்லை. நான் எங்கே செல்கிறேன் என்றே தெரியவில்லை. எனக்கு எல்லாமே இழப்பாகின்றன. உன்னையும் நான் இழந்தாகவேண்டும்” என்று சொல்கிறான். தப்பமுடியாது என்ற பிரக்ஞை  அவனுக்குள் வந்தபிறகு பிறந்த விரக்திமிக்க அமைதி அவனில் நிரம்பி விட்டிருக்கிறது. அந்தப் புதை சேற்றின் அடிவயிற்றில்தான் தன் முடிவு என்று அவன் கண்டுவிட்டிருந்தான். “நானும் கூட வருகிறேன். எங்கே போனாலும் கூடவே வருகிறேன்” என்று அவள் சொல்லும்போது, “இல்லை. நீ எனக்கு ஒரு சுமை. நானே இன்று எனக்கு ஒரு சுமை” என்கிறான் சேதுமாதவன்.

அவனைக் கொல்லவரும் பரமேஸ்வரனை அடிக்கும் இடத்தில்தான் வாழ்தலுக்கான அவனுடைய கடைசி இச்சை வெளிவருகிறது. பரமேஸ்வரனை அடித்துத் தூக்கி போட்டுவிட்டுச் செல்கிறான் சேது. “போ. இன்று மதியத்திற்குள் உன் தலையை எடுப்பேன்” என்று பரமேஸ்வரன் கத்த, திரும்பி வந்து, “நானும் வாழவேண்டும்!” என்று கூவியபடி அவனை அடித்துத் துவைக்கிறான். கடைசி இடுக்குவரை ஓடியபின் சேதுமாதவன் திரும்பி நின்று விட்டான். புதைமணலை அஞ்சுவதை அவன் விட்டுவிட்டான். கடைசியில் மீண்டும் அவனைத் தேடிவரும் கீரிக்காடன் ஜோஸை அடித்துக் கொல்கிறான். புதைமணலுக்குள் அவன் தலை புதைந்து மறைகிறது.

 

தன் அற்புதமான நடிப்பால் மோகன்லால் உயிரூட்டிய இந்த படத்தில் அந்தக் கடைசி தாக்குதலுக்குப் பிற்பாடு கையில் கத்தியுடன் சேதுமாதவன் அமர்ந்திருக்கும் காட்சியே உச்சம். பலமுறை பார்க்கும்போது ஈடிணையற்ற ஒரு நடிகன்முன் நாம் அமர்ந்திருக்கிறோம் என்ற எண்ணத்தை உருவாக்கும் காட்சி அது. சேதுமாதவன் கண்களில் பயங்கரமான ஒரு வெறிப்பு குடியேறி விட்டிருக்கின்றது. அதுவரை வாழ்க்கையை துளிகளாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் அப்போது கடலாகப் பார்த்துவிட்டான். விதியை அதன் விஸ்வரூபத்தில் தரிசித்து விட்டான். அந்த பிரமிப்பு அந்த உக்கிரமான பரிதவிப்பு அவன் கண்களில் தெரிகிறது.

 

ஒரு பக்தன் கடவுளை பற்றிக் கொண்டிருப்பதுபோல அந்த குருதி படிந்த கத்தியை பற்றிக் கொண்டிருக்கிறான் சேதுமாதவன். அவனை நோக்கி வரும் ஒவ்வொரு அசைவையும் தாக்குதலாகவே நினைக்கிறான். மொத்த உலகுமே அப்போது அவனுக்கு எதிரியாக ஆகிவிட்டிருக்கிறது. உறவுகள் இல்லை. சுற்றம் இல்லை. அவனுக்கு என்று எவருமே இல்லை. முதன்முதலில் கீரிக்காடன் ஜோஸைத் தாக்கிய தருணம் முதல் அவன் படிப்படியாக தனிமையாகிக் கொண்டே இருந்தான். அந்தத் தனிமை அந்தத் தருணத்தில் முழுமையடைந்து விட்டிருந்தது. பரிபூரணமான தனிமை. வேட்டை மிருகத்தின் தனிமை. வேட்டையாடப்படும் மிருகத்தின் தனிமை. அந்தத் தனிமையின் பீடத்தில் அமர்ந்திருக்கிறான் சேதுமாதவன் – பித்தனைப்போல….

 

மறுபக்கம் அவனுடைய அப்பா நின்று கதறுகிறார். “சேது கத்தியை கீழே போடு” ஆனால் சேது அவரிடம் இருந்தும் வெகுதூரம் விலகிவிட்டிருந்தான். அவரும் அவனுக்கு அவனை வேட்டையாடும் சமூகத்தின் ஒரு பகுதிதான். அவனை கொல்லும் புதை மணலின் ஒரு துளிதான். “மகனே கத்தியை கீழே போடுடா” என்று நெஞ்சடைக்க கூறிவரும் அச்சுதன் நாயர். பிறகு ஒரு கணத்தில் உடைந்து சிதறுகிறார். “உன்னைப் பெற்ற அப்பன் சொல்றேண்டா, கத்தியை கிழே போடு”. அந்தக் கணத்தில் தனிமையின் மாயத்திரை கிழிந்து விலகி அவன் தன் அப்பாவைப் பார்க்கிறான். தன்னைப் பெற்று சீராட்டி வளர்த்த அந்தப் பழைய அப்பாவை. அவரை நிரந்தரமாக இழந்துவிட்டோம் என்று உணர்ந்தவனாக சேது அப்படியே அமர்ந்து குமுறி அழ ஆரம்பிக்கிறான்.

 

போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலைக்கு நடத்தைப் பரிசோதனை அறிக்கை கோரப்படுகிறது. அச்சுதன் நாயர் இன்ஸ்பெக்டரிடம் அறிக்கை கொடுக்கிறார். “சேதுமாதவன் தகுதியற்றவன் சார், அவன் ஒரு நொட்டோரியஸ் கிரிமினல்” அவரது கண்களில் அமைதி. அவர் இறந்து பிறந்து வந்தவர்போல. மகன் கைவிட்டு போகிறான் என்று உணர்ந்தும் லாக்கப்புக்குள் நுழைந்து அவனை தாறுமாறாக அடித்து உதைத்த அதே அப்பா. அந்த அடிகளை எல்லாம் தந்தையின் பேரன்புமிக்க முத்தங்களாக எண்ணி அழுத அதேமகன். மகன் லாக்காப்பில் குற்றவாளியாக இருக்க அப்பா போலீஸ்காரராக அவனுடைய முடிவை அறிவிக்கிறார்.

 

கேரளத்தில் எத்தனையோ அறிவுஜீவிப் படங்கள் வெளிவந்துள்ளன. மேலும் வந்தபடியும் இருக்கின்றன. கேரளத்தின் ‘கலைப்பட’ மரபில் லோகி பெரிய மரியாதையுடன் குறிப்பிடப் படுவதும் இல்லை. ஆனால் கிரீடம் அளவுக்கு கேரள மனதில் பாதிப்பை உருவாக்கிய படங்கள் மிகமிகக் குறைவே. கிரீடம் கேரள மக்களின் அறிவுடன் உரையாட முற்பட்ட படம் அல்ல. அம்மக்களின் ஆழ்மன உணர்ச்சிகளுடன் விளையாடிய படம் – பெட்ரோலுடன் தீ போல!

 

கிரீடம் வெளிவந்து கால் நூற்றாண்டு ஆகப்போகிறது. இதனிடையே எத்தனையோ படங்கள் வந்தன. அரசாங்கங்கள் மாறின. தலைமுறைகள் மாறின. ஏன் லோகி சித்தரித்த வாழ்க்கைச் சூழலும், மனநிலைகளும் கூட மாறின. ஆயினும் இன்றும் கிரீடம் ஒரு பெரும் படைப்பாகவே பார்க்கப்படுகிறது. தலைமுறைகள் பிறந்து வந்து அந்தப்படத்தைப் பார்க்கின்றன. ஒவ்வொரு வாழ்க்கையிலும் அழிக்க முடியாதபடி பிணைக்கப்பட்ட விதியின் முத்திரைச் சரடைப் பற்றி பேசும்படம் அது. ஒவ்வொரு மனிதனுடனும் மிகமிக ஆழத்தில் அது உரையாடுகிறது.

 

லோகியின் படங்களில் ஆகச்சிறந்தது கிரீடம்தான் என்பது என் எண்ணம். அப்படி அல்ல என்று மறுப்பவர்களே எண்ணிக்கையில் அதிகம் இருப்பார்கள். ஆனால் ஒன்றை அவர்கள் மறுக்க மாட்டார்கள், கிரீடம் லோகியின் புனைவுலகின் உள்ளே நுழைவதற்கான மிகச்சிறந்த வாசல். அவரது ஆத்மா குடியிருக்கும் திரைக்கதைகளில் ஒன்று. ஒரு கதாசிரியனாக லோகி யார் என்பதை கிரீடத்தை வைத்து அறிய முடியும். லோகியின் எல்லா திரைக்கதைகளையும் கிரீடத்தின் மையக்கதாபாத்திரமான விதியை முன்னால் வைத்து அர்த்தபூர்வமாக விவாதிக்க முடியும்.

 

திரைக்கதை எழுத்தாளராக லோகிக்கு மலையாளத்தில் ஒரு கிரீடத்தை அளித்தது இந்தப் படம்தான். வாழ்நாள் முழுக்க லோகிக்கு அந்த மணிமுடி இருந்தது. ஆனால் அது எத்தகைய மணிமுடி? கிரீடம் என்ற தலைப்பு எத்தனை கசப்பு நிறைந்தது! ஏசு கிறிஸ்துவின் முள்முடிக்கு நிகர் அல்லவா அது? விதி முன்வந்து நின்று அந்த கிரீடத்தைச் சூட்டி அரியணையில் அமரச் செய்தது. கொதித்து உருகிக்கொண்டிருக்கும் அரியணையில். அந்த தலைப்பின் வழியாக அந்தப் படத்தையும் தாண்டி லோகி எதையோ சொல்ல வருகிறார்.

 

கிரீடத்துக்குப் பிறகு லோகி திரும்பிப்பார்க்க நேரிடவில்லை. தனியாவர்த்தனம் கேரளத்தை உலுக்கிய படம் என்றாலும் லோகியின் படங்களில் ஆகச்சிறந்த வசூல்படம் கிரீடம்தான். மீண்டும் மீண்டும் கேரளமக்கள் கிரீடத்தை அரியணை ஏற்றியபடியே இருந்தார்கள். பிறகு எழுதிய பெரும்பாலான படங்கள் வழியாக லோகி கிரீடத்தின் கதாநாயகனை, விதியை, மகிமைப்படுத்தியபடியே இருந்தார் என்று கூறலாம்.

முந்தைய கட்டுரைஞானம்
அடுத்த கட்டுரைபதிப்பகங்கள்,நூல்கள்:கடிதம்