‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 37

பகுதி ஏழு : தழல்நீலம்

[ 3 ]

செஞ்சதுப்பில் உழுதுவாழும் காட்டுப்பன்றி மதமெழுந்து நகர்நுழைந்ததுபோல சிகண்டி காட்டிலிருந்து வெளியே வந்தான். மூன்று மாதகாலம் காட்டில் பெரும்பசியுடன் உண்டதனால் திரண்டுருவான கரிய உடலும் எரியும் சிறுவிழிகளும் தோளில் மூங்கில்வில்லும் அம்புமாக இளங்காலை வேளையில் அவன் நுழைந்த முதல் சிற்றூரின் பூசகன் திகைத்து எழுந்து நின்றான். மெல்லியதாடியும் மீசையும் கொண்ட முகமும் சிற்றிளம் முலைகளும் கொண்டிருந்த சிகண்டி அவனை நோக்கி ‘உணவு’ என ஆணையிட்டான். பன்றி உறுமல் என எழுந்த அக்குரலைக் கேட்டதும் பூசகன் அவனை அறிந்துகொண்டான். “தேவி எங்கள் சிற்றாலயத்தில் எழுந்தருளுங்கள். எங்க நிலங்கள் வளம் கொழிக்கட்டும். எங்கள் குழந்தைகள் பெருகட்டும்” என்று வணங்கினான்.

ஊரின் தெற்குமூலையில் கட்டப்பட்டிருந்த வராஹியன்னையின் ஆலயமுற்றத்தில் அமர்ந்து அவன் முன் ஊரார் படைத்த உணவுக்குவையை கடைசி பருக்கை வரை அள்ளிவழித்து உண்டான். உண்ணும்போது சருகை எரித்து எழும் நெருப்பு போன்ற ஒலி அவனிடமிருந்து எழுவதையும் அவன் கைகளும் நாக்கும் உதடுகளும் தீயின் தழலாகவே நெளிவதையும் ஊரார் கண்டனர். அவன் கையை உதறிவிட்டு எழுந்து ஊரைவிட்டு நீங்கியபோது அவன் காலடிபட்ட மண்ணை அள்ளிக்கொண்டுசென்று வயல்களில் தூவ வேளாண்மக்கள் முட்டிமோதினர்.

நாற்பத்தெட்டுநாள் நடந்து சிகண்டி பாஞ்சாலத்தைச் சென்றடைந்தான். சத்ராவதி நகரின் விரிந்த கோட்டைவாயில் முன்னால் எரிவிழி அம்பையின் சிற்றாலயம் இருந்தது. அதற்குள் வராகி மேல் ஆரோகணித்தவளாக ஒருகையில் நெருப்பும் மறுகையில் அருள்முத்திரையுமாக எரிவிழியன்னை அமர்ந்திருந்தாள். அவள் கூந்தல் நெருப்பாக எழுந்து அலையடித்து நின்றது. சிறுவிளக்கில் நெய்ச்சுடர் அதிர புதிய செங்காந்தள் மலர்மாலை சூடி அமர்ந்திருந்த அன்னையின் ஆலயத்துக்குள் நுழைந்த சிகண்டி அந்த மாலையை எடுத்து தன் கழுத்தில் அணிந்துகொண்டான்.

அதைக்கண்டு கோட்டைமுன் நின்ற காவலன் சீறிச்சினந்து வேல்தூக்கி ஓடிவந்தான். அவன் எழுப்பிய ஒலி கேட்டு நடந்தவை என்ன என்று ஊகித்த பிறரும் வேல்களும் வாள்களுமாக ஓடிவந்தனர். கோட்டைமுகப்பில் சென்றுவந்துகொண்டிருந்தவர்கள் திகைத்து ஒருபக்கம் கூடினர். முன்னால்வந்த நூற்றுவர்தலைவன் ஓங்கிய ஈட்டியுடன் சிகண்டியைக்கண்டு அஞ்சி செயலிழந்து நின்றான். மின்னிச் சேர்ந்தெழுந்த ஆயுதங்களைக் கண்டும் அரைக்கணம் அவன் கைகள் வில்லைநாடவில்லை. அவன் விழிகள் இமைக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவராக பின்னடைந்தனர்.

“நான் அம்பை அன்னையின் மகன்” சிகண்டி சொன்னான். “என்னை பாஞ்சால மன்னனிடம் அழைத்துச் செல்லுங்கள்!” நூற்றுக்குடையவன் வணங்கி “பாஞ்சாலத்தின் இறைவி, இதோ இந்நகரம் பதினாறாண்டுகளாக தங்கள் பாதங்கள் படுவதற்காகக் காத்திருக்கிறது. எங்களுக்கு அருளுங்கள்” என்றான். வீரர்கள் புடைசூழ சிகண்டி பாஞ்சாலனின் அரண்மனை நோக்கிச் சென்றான்.

உத்தரபாஞ்சாலத்தின் தலைநகரமான சத்ராவதி கங்கையில் இருந்து வெட்டி துணைநதிகளுடன் இணைக்கப்பட்ட ஓடைகள் நரம்புகளாகப் பரவிய நிலத்தின் மகுடம்போலிருந்தது. கோட்டைகளை மீறி உள்ளே சென்ற அந்த ஓடைகள் நகரமெங்கும் பரவி களஞ்சியங்களின் பின்பகுதிகளை இணைத்தன. அவற்றினூடாக கோதுமை மூட்டைகளுடன் வந்த கனத்தபடகுகளை தோணிப்போகிகள் மூங்கில் கழிகளினால் தள்ளியபோது அவை மெல்ல ஒழுகிச்சென்று களஞ்சியங்களின் அருகே ஒதுங்கி உள்ளே நுழைந்தன. அவற்றை நோக்கி பலகைகளைப் போட்டு அதன் வழியாக இறங்கி பொதிகளை உள்ளே எடுத்து அடுக்கினர் வினைவலர்.

படகுகளின் மேல் வளைந்து வளைந்தெழுந்த மரப்பாலங்கள் மீது பொதிவண்டிகள் சகடங்கள் அதிர, மாடுகளின் தொடைத்தசைகள் இறுகி நெகிழ, ஏறி மறுபக்கம் சென்றன. சாலைகளும் ஓடைகளும் ஊடும்பாவுமாக பின்னி விரிந்த அந்நகரில் சாலைகளுக்கு இருபக்கமும் சுதைவீடுகளும் ஓடைகளுக்கு இருபக்கமும் மரவீடுகளும் இருந்தன.

பாஞ்சாலத்தின் வயல்களெல்லாம் அறுவடை முடிந்திருந்த பருவம். நான்குதிசைகளிலிருந்து நகருக்குள் வந்த கோதுமைவண்டிகள் தெருக்களெங்கும் தேங்கி நின்றன. கோட்டைமதில்கள் போல மாளிகை முகடுகள் போல அடுக்கப்பட்ட தானியப்பொதிகளைச் சுற்றி வினைவலரின் வேலைக்கூவல்கள் எழுந்து நிறைந்திருந்தன. வண்டிச்சகடங்கள் ஓய்விலாது ஒலித்துக்கொண்டிருந்தன. சிகண்டி அவ்வழியாகச் சென்றபோது வியர்த்த பளிங்குமேல் விரலால் இழுத்ததுபோல அமைதியாலான வழியொன்று உருவாகி வந்தது. கூலப்புழுதி நிறைந்திருந்த தெருக்களிலும் தானியமணம் நிறைந்திருந்த வீடுகளிலும் இருந்து மக்கள் எழுந்து விழிவிரிய அவனை நோக்கி நின்றனர்.

சிகண்டி அரண்மனையை அடைவதற்குள்ளாகவே அவன் வரும் தகவல் அறிந்து அரண்மனைமுகப்பில் பாஞ்சாலத்தின் அமைச்சர் பார்க்கவர் வந்து காத்திருந்தார். சுதைத்தூண்களின் மேல் பெரிய மரத்தாலான‌ கட்டிடம் அமர்ந்திருந்தது. அரண்மனைக்கு அடியில் நீரோடைகள் சென்றன. அவற்றில் மிதந்தபடகுகளிலும் காவல்வீரர்கள் இருந்தனர். பார்க்கவர் நிலைகொள்ளாமல் சாலையை பார்த்துக்கொண்டிருந்தார்.

ஓடைமேல் சென்ற மரப்பாலத்தில் காலடி ஓசை ஒலிக்க ஏறி மறுபக்கம் சென்றான் சிகண்டி. அரண்மனை முகப்பில் மண்படிந்த உடலுடன் முலைகுலுங்க அவன் வந்து நின்றதும் பார்க்கவர் செய்வதறியாமல் சிலகணங்கள் நின்றுவிட்டார். அக்கணம் வரை அவருக்குள் குழம்பிச்சுழன்ற ஐயங்களும் அச்சங்களும் மறைந்தன. மலைப்பன்றி வீட்டுமுகப்பில் வந்து நிற்பது வளத்தை அளிக்கும் என நம்பிய வேளிர்கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் அவர். இவன் எம்மொழியிலேனும் பேசுவானா என அவர் மனம் ஐயுற்றது.

வணங்கியபடி முன்னகர்ந்து “அம்பாதேவி நகர்நுழைந்ததை வணங்கி வரவேற்கிறேன். நான் பாஞ்சாலத்தின் பேரமைச்சன் பார்க்கவன். தங்களுக்கு இவ்வரண்மனை காத்திருக்கிறது” என்றார். சிகண்டி அவரது கண்களை நோக்கி “நான் மன்னரைப் பார்க்கவேண்டும்” என்றான். அவன் கழுத்தில் குருதிவழியும் குடல் போல அந்தக்காந்தள் மாலை கிடந்தது.

பார்க்கவர் “மன்னர் சிலகாலமாகவே உடல்நலமற்றிருக்கிறார்” என்றார். “நான் அவரைப் பார்த்தாகவேண்டும்” என்றான் சிகண்டி. பார்க்கவர் அவன் சொல் கூடாதவன் என்பதைக் கண்டுகொண்டார். “ஆம், அவ்வாறு ஆகட்டும்” என்று தலைவணங்கினார்.

மரத்தாலான படிக்கட்டுகளில் சிகண்டி ஏறியபோது மொத்த அரண்மனையிலும் அவன் காலடியோசை எதிரொலித்தது. அரண்மனையெங்கும் தொங்கியிருந்த செம்பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிய தீபூத்த வனம்போலிருந்தது அது. மூன்றாவது மாடியில் உத்தரபாஞ்சாலத்தை ஆண்ட மன்னர் சோமகசேனரின் ஆதுரசாலை இருந்தது.

பாரதவர்ஷம் உருவான நாளில் கிருவிகுலம், துர்வாசகுலம், கேசினிகுலம், சிருஞ்சயகுலம், சோமககுலம் என்னும் ஐம்பெரும் குலங்களால் ஆளப்பட்ட கங்கைச்சதுப்பு பின்னாளில் பாஞ்சாலம் என்னும் ஒற்றைநாடாக ஆகியது. ஆயிரமாண்டுகாலம் கழித்து சோமக குலமும் சிருஞ்சயகுலமும் முரண்பட்டுப் பிரிந்தபோது அது இருநாடுகளாகியது. தட்சிண பாஞ்சாலத்தின் தலைநகரமாக காம்பில்யம் உருவாகி வந்தது. அதை சிருஞ்சயகுலத்து பிருஷதன் ஆண்டுவந்தான்.

உத்தரபாஞ்சாலத்தின் சத்ராவதியிலிருந்துகொண்டு ஆட்சிசெய்த சோமகவம்சத்து மன்னன் சோமகசேனன் முதுமையும் நோயும் கொண்டு படுத்திருந்தான். அவனுக்கு மைந்தர்கள் இருக்கவில்லை. அமைச்சர் பார்க்கவரின் பொறுப்பில் இருந்த உத்தரபாஞ்சாலத்தை வென்று கைப்பற்ற பிருஷதன் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருந்தன. பாஞ்சாலத்தை ஒன்றாக்கி தன் மைந்தன் யக்ஞசேனனை மன்னனாக்க பிருஷதன் எண்ணியிருந்தான்.

VENMURASU_EPI_37_
ஓவியம்: ஷண்முகவேல்
[பெரிதுபடுத்த படத்தின்மீது சொடுக்கவும்]

ஆதுரசாலையில் மூலிகைமெத்தைமேல் படுத்திருந்த சோமகசேனர் காம்பில்யத்தில் இருந்து அன்று காலை வந்த ஒற்றுச்செய்தியைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தார். அவரது மரணம் அடுத்த இருள்நிலவுநாளுக்குள் நிகழும் என்று நிமித்திகர் கூறியிருந்தனர். மருத்துவர்கள் அதை மௌனமாக அங்கீகரித்திருந்தனர்.அவர் மறைந்து நாற்பத்தொன்றாம்நாள் நீர்க்கடன்கள் முடிந்ததும் நகரில் ஒரு தீவிபத்து நிகழும் என்றனர் ஒற்றர்கள். அந்தத் தீவிபத்துக்குக் காரணம் வேள்விக்குறை என்றும், முறையான அரசன் இல்லாத நிலையின் விளைவு அது என்றும் குற்றம்சாட்ட வைதிகர்களை அமர்த்தியிருந்தனர் தட்சிண பாஞ்சாலத்தினர். அதைக் காரணம் காட்டி பிருஷதன் உத்தரபாஞ்சாலம் மீது படைகொண்டுவந்து பாஞ்சாலத்தை ஒன்றாக்கி அரசமைக்க திட்டமிட்டிருந்தான்.

வெளுத்த தாடி மார்பில் படிந்திருக்க தூவித்தலையணைமேல் தலைவைத்து மெலிந்த கைகால்கள் சேக்கையில் சேர்ந்திருக்க கிடந்த சோமகசேனர் சேவகன் அறிவித்ததை சரியாக உள்வாங்கிக்கொள்ளவில்லை. வரச்சொல் என கையசைத்தபின் சாளரம் வழியாக கீழே ஓடைகளில் கொடிபறக்க வந்துகொண்டிருந்த பெரும்படகுகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். கதவு திறந்து உள்ளே வந்த வராகரூபனைக் கண்டதும் அவர் உடல் அதிர்ந்தது. சிகண்டி கழுத்திலணிந்திருப்பதென்ன என்பதை அவர் சித்தம் புரிந்துகொண்டதும் “தேவி!” என்றார்.

“நான்…” என சிகண்டி பேசத்தொடங்கியதுமே “நீ தேவியின் தோன்றல். இந்த அரண்மனையும் தேசமும் என் நெஞ்சமும் உன் சேவைக்குரியவை” என்றார் சோமகசேனர். சிகண்டி அருகே வந்து முழந்தாளிட்டு அமர்ந்தான். “நீங்கள் என் தந்தை என அன்னை சொன்னாள்” என்றான். செயலிழந்து கிடந்த சோமகசேனர் கைகள் அதிர்ந்தன. ஒரே உந்தலில் வலக்கையைத் தூக்கி சிகண்டியின் தலையில் வைத்து “ஆம், இன்றுமுதல் நீ பாஞ்சாலத்தின் இளவரசன்” என்றார். அப்பால் நின்றிருந்த பார்க்கவர் தலைவணங்கினார்.

“நீ என் மகன்.. இங்கே இரு. உனக்கென அரண்மனை ஒன்றை ஒருக்கச் சொல்கிறேன்” என்றார் சோமகசேனர். “என் பணி ஒன்றே” என்றான் சிகண்டி . சோமகசேனர் புன்னகையுடன் “காட்டில் வளர்ந்த வராகராஜன் போலிருக்கிறாய். ஆனால் உன் இலக்கு கூர்மை கொண்டிருக்கின்றது” என்றார்.  “உன் பணி என்ன?”

“நான் பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்று சிகண்டி சொன்னான். சோமகசேனர் அதிர்ந்து அறியாமல் உயிர்பெற்ற கைகளை மார்பின்மேல் கோர்த்துக்கொண்டார். “நீ சொல்வதென்னவென்று தெரிந்துதான் இருக்கிறாயா? பீஷ்மரைக் கொல்வதென்பது பாரதவர்ஷத்தையே வெல்வதற்குச் சமம்” என்றார்.

மாற்றமில்லாத குரலில் “அவர் எவரோ ஆகட்டும். அது என் அன்னையின் ஆணை” என்றான் சிகண்டி. சோமகசேனர் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. உதடுகளை அழுத்தியபடி “இக்கணம் நான் பீஷ்மரை எண்ணி பொறாமைகொள்கிறேன். மகத்தான எதிரியைக் கொண்டவன் விண்ணகத்தால் வாழ்த்தப்படுகிறான்” என்றார். பார்க்கவரிடம் “இவனுக்கு மறுசொல் என ஒன்று இங்கே ஒலிக்கலாகாது” என்றார். “ஆணை” என்றார் பார்க்கவர்.

சிகண்டி செல்வதைப் பார்த்தபோது சாளரத்திரைச்சீலைகளை அசைத்து உள்ளே வந்த காற்றை உணர்வதுபோல அவர் நிம்மதியை அறிந்தார். அவருள் இருந்த புகைமேகங்களெல்லாம் அள்ளி அகற்றப்பட்டு ஒவ்வொன்றும் ஒளியுடன் துலங்கி எழுந்தன.”இவன் இருக்கும் வரை இந்த மண்மீது எதிரிகள் நினைப்பையும் வைக்கமுடியாது” என்று சொல்லிக்கொண்டபோது முகம் மலர்ந்து சிரிக்கத் தொடங்கினார்.

சிகண்டியை அரண்மனைக்குள் அழைத்துச்செல்லும்போது பார்க்கவர் “இளவரசே, இந்த அரண்மனையில் தங்களுக்குத் தேவையானவை என்ன?” என்றார். சிகண்டி “உணவு” என்றான். பார்க்கவர் சற்று திகைத்தபின், “அதுவல்ல… இங்கே வசதிகள்…” என இழுத்தார். “இங்கு ஆயுதசாலை எங்கே?”

பார்க்கவர் “வடமேற்குமூலையில்…” என பார்க்கவர் முடிப்பதற்குள் சிகண்டி “நான் அங்கேயே தங்குகிறேன்” என்றான். “அங்கே தங்களுக்கு ஏவலர்கள்…” என பார்க்கவர் தொடங்கியதும் “தேவையில்லை. பயிற்சித்துணைவர்கள் மட்டும் போதும்” என்றான் சிகண்டி.

நேராக ஆயுதசாலைக்கே சிகண்டியை இட்டுச்சென்றார் பார்க்கவர். ஆயுதசாலைப் பயிற்சியாளரான ஸாரணர் சிகண்டியைக் கண்டதும் ஒருகணம் முகம் சிறுத்தார். “ஸாரணரே, இவர் பாஞ்சாலத்தின் இளவரசர் என்பது மன்னரின் ஆணை” என்றதும் தலைவணங்கி “வருக இளவரசே” என்றார்.

சிகண்டி “நாம் பயிற்சியைத் தொடங்குவோம்” என்றான். ஸாரணர் அதைக்கேட்டு சற்றுத் திகைத்து “தாங்கள் சற்று இளைப்பாறிவிட்டு…” என்று சொல்லத் தொடங்கவும் சிகண்டி “நான் இளைப்பாறுவதில்லை” என்றான்.

அப்போதே அவனுக்கு பயிற்சி அளிக்கத்தொடங்கினார் ஸாரணர். அவனை விற்கூடத்துக்கு அழைத்துச்சென்றார். மூங்கில்வில்லைப் பற்றிப்பழகியிருந்த சிகண்டி அதன் நடுவே பிடித்து இடைக்குமேல் தூக்கி எய்யும் பயிற்சியை அடைந்திருந்தான். இரும்பாலான போர் வில்லை அங்குதான் முதலில் அவன் கண்டான்.

வில்லாளியைவிட இருமடங்கு நீளமுள்ள கனத்த இரும்புவில்லின் கீழ்நுனியை மண்ணில் நட்டு மேல்நுனி தலைக்குமேல் எழ நின்று எய்யும்போது இடக்கையின் பிடி வில்லின் மூன்றில் ஒருபங்கு கீழே இருக்கவேண்டும் என ஸாரணர் சொன்னார்.

“இளவரசே, மூங்கில்வில்லை நீங்கள் முழுத் தோள்பலத்தால் பின்னாலிழுத்து நாணேற்றுவீர்கள். ரதத்தில் இருந்து எய்யப்படும் இந்த இரும்புவில் மும்மடங்கு பெரியது. எட்டுமடங்கு கனமுடையது. அம்புகள் பத்துமடங்கு நீளமானவை. எருமைத்தோல் திரித்துச் செய்யப்பட்ட இதன் நாண் பன்னிரு மடங்கு உறுதியானது. இதைப்பற்றி கால்கட்டைவிரலால் நிலத்தில் நிறுத்தி நாணைப்பற்றி ஒரே கணத்தில் முழு உடல் எடையாலும் இழுத்து தண்டை வளைக்கவேண்டும்.”

கரியநாகம்போல வளைந்த வில்லை கையில் எடுத்தபடி ஸாரணர் சொன்னார். “நாண் பின்னிழுக்கப்ப‌ட்டு வில் வளைந்த அதேகணத்தில் அம்பு தொடுக்கப்பட்டிருக்கவேண்டும். இல்லையேல் நாணின் விசை உங்கள் முதுகிலும் கையிலும் அடிக்கும். தசை பிய்ந்து தெறிக்கும். அம்பு நாணேறிய மறுகணமே அது எய்யப்பட்டு வானிலெழவும் வேண்டும். இல்லையேல் இழுபட்ட வில் நிலைகுலைந்து சரியும். அம்புசென்ற மறுகணமே விம்மியபடி முன்னால் வரும் நாணில் இருந்து உங்கள் கைகளும் தோளும் விலகிக் கொள்ளவேண்டும். நிமிரும் வில் தெறித்தெழும்போது உங்கள் கால்விரல்களும் கைப்பிடியும் அதை நிறுத்தவேண்டும்…அனைத்தும் ஒரேசமயம் ஒரே கணத்தில் நிகழ்ந்தாக வேண்டியவை.”

“ஒருமுறை நீங்கள் செய்யுங்கள்” என்று சிகண்டி சொன்னான். ஸாரணர் பெருவில்லை மண்ணில் கால்விரலால் பற்றி ஒருகணத்தில் எம்பி நாணேற்றி அம்பைத்தொடுத்து எய்து எதிரே இருந்த மரப்பலகையை இரண்டாகப்பிளந்து தள்ளினார். அனைத்தும் ஒரே கணத்தில் நிகழ்ந்து முடிய சற்று முன்னால் குனிந்து இறுகிய உதடுகளுடன் அதைப்பார்த்துக்கொண்டிருந்தான் சிகண்டி. அம்பு பலகையை உடைத்தபோது அவனுடைய வாயில் இரு பன்றித்தேற்றைகள் வெண்ணிறமாக வந்து மறைந்தன. அவன் புன்னகைசெய்ததுபோலிருந்தது.

“எட்டாண்டுக்காலப் பயிற்சியால் அடையப்படும் வித்தை இது” என்றபடி ஸாரணர் வில்லை சாய்த்து வைத்தார். “முறையாக எய்யப்படும் பெருவில்லின் அம்பு நான்குநாழிகைதூரம் சென்று தாக்குமென்பார்கள். இதன் நுனியில் சுளுந்து கட்டி எரியம்பாக எய்வதுண்டு. வெட்டவும் உடைக்கவும் சிதைக்கவும் இச்சரங்களால் முடியும்.”

சிகண்டி அந்த வில்லை குனிந்து எடுத்தபோது “அதை கையாளக் கற்றுக்கொள்வதில் எட்டு படிகள் உள்ளன. முதலில் நாண் இல்லாமல் அதன் தண்டை மட்டும் ஏந்திக்கொள்ளப் பழக வேண்டும்” என்றார் ஸாரணர். அவர் அவனுக்கான வில்லை காட்டுவதற்காகத் திரும்பினார்.

சிகண்டி அந்த இரும்புவில்லை தன் இடக்கையில் தூக்கி காலைநீட்டி கட்டைவிரலிடுக்கில் அதன் நுனியை நிற்கச்செய்து தண்டைப்பிடித்து நின்றான். ஸாரணர் அதைக்கண்டு வியந்து நின்றுவிட்டார். நீள்சரத்தை எடுத்தவேகத்திலேயே முழு உடலாலும் வில்லைவளைத்து நாணை ஏற்றி எய்துவிட்டான். அம்பு திசைகோணலாக எழுந்து ஆயுதசாலையின் கூரையைப் பிய்த்துமேலே சென்றது. கூடிநின்ற மாணவர்கள் அனைவரும் ஓடி வந்து சிகண்டியைச்சுற்றிக் கூடினார்கள்.

“இளவரசே, தாங்கள் எவரிடம் நிலைவில்லைக் கற்றீர்கள்?” என்றார் ஸாரணர். “இப்போது, சற்றுமுன் தங்களிடம்” என்று சொன்ன சிகண்டி “நான் பயிற்சி செய்யவேண்டியிருக்கிறது. என் இலக்குகள் இதுவரை பிழைத்ததில்லை” என்றான். அவர்களிடம் விலகும்படி கைகாட்டியபடி அடுத்த அம்பை எடுத்தான்.

அதன்பின் அவன் ஒருகணமும் திரும்பவில்லை. ஒவ்வொரு அம்பாக எடுத்து தொடுக்கத் தொடங்கினான். அன்றுபகல் முழுக்க அவன் அதை மட்டுமே செய்துகொண்டிருந்தான். உணவுண்ணவில்லை, அமரவும் இல்லை.

மாலையில் சூரியன் அணைந்தபோது ஸாரணர் “இளவரசே, ஆயுதசாலையை மூடவிருக்கிறோம். தாங்கள் ஓய்வெடுங்கள்” என்றார். சிகண்டி அவரை திரும்பிப்பார்க்கவில்லை. “இளவரசே, நாங்கள்…” என ஸாரணர் தொடங்க “நீங்களெல்லாம் செல்லலாம். நான் இரவில் துயில்வதில்லை” என்றான் சிகண்டி .

சற்று திகைத்தபின்பு “ஆயுதசாலையை அந்தியில் மூடுவதென்பது மரபு. பூசகர்கள் வந்து  ஆயுதங்களுக்குரிய தேவதைகளுக்கு குருதிபலி கொடுத்து பூசையிட்டு நடைமூடினால் உள்ளே அந்த தேவதைகள் வந்து பலிகொள்ளும் என்பார்கள்” என்றார். “நான் வெளியே சென்று பயிற்சி செய்கிறேன்” என வில்லையும் அம்புக்குவியலையும் கையில் எடுத்துக்கொண்டு சிகண்டி சொன்னான்.

நள்ளிரவில் ஸாரணர் ஆயுதசாலைக்கு முன்னாலிருந்த களத்துக்கு வந்து பார்த்தார். இருளில் சிகண்டி பயிற்சி செய்துகொண்டிருந்தான். அம்புகளைத் தீட்டுவதையும் அடுக்குவதையும் மட்டுமே அவன் ஓய்வாகக் கொள்கிறான் என்பதை அவர் புரிந்துகொண்டார். அவன் ஒரு மனிதனல்ல, மனிதவேடமிட்டு வந்த பிடாரி என்ற எண்ணம் அவருக்குள் உருவாகியது.

மறுநாள் சிகண்டி அம்பால் மரக்கிளைகளை வெட்டி வீழ்த்தினான். பறக்கும் அம்பை இன்னொரு அம்பால் துண்டித்தான். அவன் கையில் கரியவில் பெருங்காதல் கொண்ட பெதும்பைப்பெண் என நின்று வளைந்தது. அவன் யாழின் தந்தியைத் தொடும் சூதனின் மென்மையுடன் நாணைத்தொட்டபோது குகைவிட்டெழும் சிம்மம் போல அது உறுமியது. வில்குலைத்துநாணேற்றி அவன் அம்புவிடுவதை மீன் துள்ளி விழும் அசைவைப்போலவே காணமுடிந்தது.

ஏழுநாட்கள் சிகண்டி ஆயுதசாலையிலேயே வாழ்ந்தான். அங்கே சேவகர் கொண்டுவந்து அவன்முன் கொட்டிய உணவை உண்ணும் நேரமும், தனியாக அமர்ந்து தன்னுள் ஆழ்ந்து வான்நோக்கி வெறித்திருக்கும் கணங்களும் தவிர முழுப்பொழுதும் ஆயுதங்களுடன் இருந்தான். ஏழாம் நாள் அவன் ஸாரணரிடம் “நான் இனிமேல் தங்களிடம் கற்பதற்கு ஏதும் இருக்கிறதா ஸாரணரே?” என்றான்.

ஸாரணர் “இல்லை இளவரசே. இனிமேல் பாரதவர்ஷத்தின் எந்த ஆயுதசாலையிலும் எதையும் கற்கவேண்டியதில்லை. தங்களுக்கு ஆசிரியராக வில்வித்தையை மெய்ஞானமாக ஆக்கிக்கொண்ட ஒரு ஞானி மட்டுமே தேவை” என்றார். “அவர் பெயரைச் சொல்லுங்கள்” என்றான் சிகண்டி.

“இளவரசே, பிரஜாபதியான பிரசேதஸ் இயற்றி தன் மாணவர்களுக்குக் கற்பித்த பிரவேஸாஸ்திரபிரகாசம் என்ற நூலில் இருந்து வில்வித்தை மானுடருக்கு வந்துசேர்ந்தது. அது ஐந்து உபவேதங்களில் ஒன்று. கிருஷ்ணயஜுர்வேதத்தின் கிளை” என்றார் ஸாரணர். “அந்த மரபில் வந்த ஆயிரம் தனுவேத ரிஷிகள் இன்றிருப்பதாகச் சொல்கிறார்கள். அவர்களில் இருவரே அனைவரும் அறிந்தவர்கள். பிராமண ரிஷியான பரசுராமன் இப்போது சதசிருங்கத்தில் தவம்செய்கிறார். அவரைக் காண்பது அரிது. ஷத்ரிய ரிஷியான அக்னிவேச மாமுனிவர் விஸ்வாமித்திரரின் வழிவந்தவர். அகத்தியரிடம் ஆயுதவித்தை கற்றவர். இப்போது கங்கைக்கரையில் தன் தவச்சாலையில் இருக்கிறார். அவரிடம்தான் தட்சிண பாஞ்சாலநாட்டின் பட்டத்து இளவரசரும் பிருஷதரின் மைந்தருமான யக்ஞசேனர் வில்வித்தை கற்கிறார்.”

“அவரிடம் நானும் கற்கிறேன்” என்று சிகண்டி எழுந்தான். “இன்றே நானும் கிளம்பிச்செல்கிறேன்.” ஸாரணர் அவன் பின்னால் வந்து “ஆனால் அக்னிவேசர் தங்களை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை” என்றார். அவர் சொல்லவந்தது கண்களில் இருந்தது. சிகண்டி பன்றியின் உறுமல்போன்ற தாழ்ந்த குரலில் “ஏற்றுக்கொண்டாகவேண்டும்” என்றான்.

முந்தைய கட்டுரைவலசைப்பறவை 2, சாரையின் நடுக்கண்டம்
அடுத்த கட்டுரைஅ.முத்துலிங்கமும் தாயகம் கடந்த தமிழும்