கிறித்துவம், இந்து மரபு

அன்புள்ள ஜெயமோகன்,
கேரள சிரியன் கிறித்துவர்கள் திடீரென மிசிகா ராத்திரி கொண்டாட ஆரம்பித்துள்ளதை [கிறித்தவ தசரா;கடிதங்கள் ] நீங்கள் வரவேற்றிருப்பது பெரும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. தெய்வநாயகத்தைப் போன்றதொரு மோசடியாகத்தான் நான் இதைக் காண்கிறேன். இந்திய கலாச்சார கூறுகள் பலவற்றையும் திருச்சபை எடுத்தாண்டிருக்கிறது. ஆர்வத்துடன் மக்களின் கலாச்சார விகிதிங்களை கூர்ந்து கவனித்தும் அவற்றை உரிய வகையில் உட்கொண்டும் திருச்சபை புதிய ஆன்மிக வடிவங்களை மக்களின் தேவைக்கேற்ப அடைகிறது.

ஆனால் பாரம்பரியமாக இந்திய மரபில் இருந்துவரும் கல்விக்கான உயர் மதிப்பும் அதன் வெளிப்பாடான பக்தி முயற்சிகளும் கிறித்துவ முறைகளிலிருந்துதான் பிறந்து வந்தன என்பது சற்றும் உண்மையில்லாத ஒன்று என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இதில் ஜடாயு மற்றும் நண்பர் அநீயின் கருத்துக்களில் எனக்கு எந்த மறுப்பும் இல்லை.

கலாச்சாரத்தை கையாளும் விதம் குறித்து திருச்சபைக்குள் நான்கு முக்கிய இயக்கங்கள் இருப்பதைக் காண இயலும். ஒன்று கலாச்சாரப்படுத்தலை ஆதரிக்கும் பாதிரியார்கள், அடுத்து அதை ஆதரிக்கும் பொதுமக்கள், இதன் எதிர் தரப்ப்பான பாதிர்யார்கள், பொதுமக்கள். சென்னை பங்கு ஒன்றில் பொங்கலுக்கு சிறப்பு பூஜை செய்த பாதிரியாரை பொதுமக்கள் அடித்து விரட்டிய கதையும் உண்டு. அதே சமயம் ஆயுத பூஜைக்கு சாமியாரை கூப்பிட்டு கடையை மந்திரிக்கும் பழக்கும்டையவர்களும் உண்டு.

இந்திய கலாச்சாரம் இன்றைக்கு சிலருக்கு குத்தகை விடப்பட்டுள்ள தோற்றம் இருப்பதாலேயே திருச்சபையை கலாச்சாரப் படுத்தும் விஷயத்தில் பல குழப்பங்களும் இருப்பதாக நான் காண்கிறேன். ஆனால் இந்திய முறையில் சர்ச்சில் பூசை செய்வது இந்திய திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. மலர், தீபம் தூபம் என கலாச்சார மனத்துடன் வழிபாடுகள் நடைபெறுவது அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கேரள புனிதருக்கு பட்டம் தரும் விழாவில் ரோமில் இந்திய முறை வழிபாடுகள் நடந்தன என்பதுவும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடை அணிகலன்கள் துவங்கி திருமணச் சடங்குகள் வரையிலும் சர்ச்சுக்கு வெளியே நடக்கும் எந்த கலாச்சார நிகழ்வுகலையும் திருச்சபை கட்டுப்படுத்த முயன்றதாக எனக்குத் தெரிந்து இல்லை(சாதிக் கொடுமைகள் உட்பட). இந்த நான்கு குழுக்களுக்குமிடையிலான முரணியக்கத்தின் மத்தியில் திருச்சபையின் கலாச்சாரப்படுத்துதல் தொடர்ந்து நடந்துகொண்டும் குறைந்து கொண்டும் இருக்கிறது.

இதனிடையில் ஆன்ந்தனி டி மெலோவை தன்பக்க ‘வேத சாட்சியாக்கும்’ அநீ  [ கிறித்தவ விஜயதசமி ]என்ன சொல்ல வருகிறார் என முழுமையாகத் தெரியவில்லை. ஆந்தனி டி மெலோ திருச்சபையை கலாச்சாரப் படுத்த முயன்றவரல்ல. அவர் எந்த ஒரு ‘இந்து மத’ பக்தி முயற்சியையும் கிறித்துவத்தில் நுழைக்கவில்லை. தனக்கென சாதனா எனும்  தியான வடிவத்தை உருவாக்கினார். அதை பிரபலப்படுத்தினார். ஆந்தனி டி மெலோவின் முக்கிய தாக்கம் பௌத்தமே. புத்தரே அவரின் புத்தகங்களின் அதிகம் வெளிப்படும் ஆளுமை. அவரின் ஆன்மகுரு ஒரு பௌத்தர். இயேசுவை புத்தனாகவே காண்கிறார். எப்படி பௌத்தம் பக்தி மார்கத்தில் சென்று ‘சீரழிந்ததோ’ (degenerated) அதேபோலவே அவர் கிறித்துவத்தைக் கண்டார். இயேசுவின் கடவுள் தரிசனம் திருச்சபையில் சென்று சீரழிந்ததாகக் காண்கிறார் டி மெலோ.

‘ஆந்தனி டி மெலோவுக்கு நேர்ந்தது தெரியும்தானே எனச் சொல்லி உடனேயே சிவன் கோவில் முன் விழுந்து இறந்த கத்தோலிக்கரைக் குறித்துச் சொல்வதனால் ஒரு குழப்பம். ஆந்தனி டி மெலோ 1987ல் நியுயார்க் நகரில் இறந்தார். அவரது புத்தகங்களை ஆராய்ந்த (1998ல்) கத்தோலிக்க திருச்சபை அவற்றை தற்காலிகமாக தடை செய்தது. ‘கத்தோலிக்க நம்பிக்கைகளை விட்டு படிப்படியாக விலகிச் செல்வதனால்..’ என தடைக்கான காரனம் சொல்லப்பட்டுல்ளது. நான் இதில் மிக முக்கியமாகக் காண்பது இரண்டு விஷயங்கள். ஒன்று ஆந்தனி கடைசி வரைக்கும் ஒரு இயேசு சபை பாதிரியாராகத்தான் வாழ்ந்தார். மறைந்தார். இரண்டாவதாக திருச்சபை அவரின் புத்தகங்களை கத்தோலிக்க நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது எனச் சொல்லியதேயன்றி அதை முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டிய ஒரு பாகனிய, சாத்தானிய படைப்பாக முத்திரை குத்திவிடவுமில்லை. இன்றும் அவரின் புத்தகங்கள் கத்தோலிக்க, கிறீத்துவ மையங்களில் வாங்கக் கிடைக்கின்றன. ‘இவை கத்தோலிக்க திருச்சபையின் நம்பிக்கைகளை ஒட்டியவை அல்ல’ எனும் எச்சரிக்கையோடு.(‘The books of Father Anthony de Mello were written in a multi-religious context to help the followers of other religions, agnostics and atheists in their spiritual search, and they were not intended by the author as manuals of instruction of the Catholic faithful in Christian doctrine or dogma.’)  நான் அந்தோனி டி மெலோவை படிக்க ஆரம்பித்தது செமினரியில் என்றால் அநீ நம்புவாரா எனத் தெரியவில்லை.

ஆந்தனி டி மெலோ மதம் ஒரு வழிகாட்டி மட்டுமே என்றார். கடவுள் அனுபவம் தனிமனிதனது என்றார். வழிகாட்டிப்பலகையை பிடித்துக்கொண்டு இலக்கை அடைந்துவிட்டேன் எனக் குதிக்காதே என்கிறார். ஞானி நிலவைக் காண்பிக்கிறான் முட்டாள் விரலை மட்டுமே பார்க்கிறான் என்றார். திருச்சட்டங்களைக் கொண்டு மெசியாவையே கொன்றுவிட்கிறார்கள் என்று சொல்கிறார். இவையெல்லாம் திருச்சபையின் ஆன்மிகப்பணியை, பாத்திரத்தை(Role),  கணிசமாகக் குறைத்து விடுவதை திருச்சபை நிச்சயம் உணர்ந்திருக்கும். இதுவே ஆந்தனி டி மெலோ விலக்கப்பட முக்கியமான காரணமாய் நான் காண்கிறேன். டி மெலோ இதை பெரிதும் விரும்பியிருப்பார் என்றே எனக்குத் தோன்றுகிறது. திருச்சபையின் பின்னால் சென்று தன் தெரிவுகளை அடகு வைத்திருப்பாரென்றால் அவர் சொல்லும் ஒன்றிலும் அர்தமில்லை.

கத்தோலிக்கம் மட்டுமல்ல இந்து மதம் கூட சிறு மதங்களை உள்வாங்கி பிர்மாண்டமானதுதான். உங்கள் விஷ்ணுபுரத்தில் இதை முன்வைத்துள்ளீர்கள் என்று நியாபகம். ‘மாடனுக்கு சர்க்கரை பொங்கல் படைப்பதுவும்’ பாகன் அடையாளங்களை உள்வாங்குவதற்கும் என்ன பெரிய வித்தியாசம்? வரலாற்றில் கிறித்துவம் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தரப்புக்கள் கலாச்சாரக் கலாச்சாரக் கொலைகள் புரிந்துள்ளன இந்து பக்தி இயக்கம் உட்பட. சமணம் இந்துமதத்தை அழித்தது என்றால், மீண்டெழுந்த பக்த்தி இயக்கம் சமணத்தை அழித்தது எனலாமே? அவற்றை அப்படிக் காண வேண்டியதும் இல்லை. அவை மானுடத்தின் வளர்சிதை மாற்றங்கள்தான். கிறித்துவம் தன் அரசியல் பலத்தை பயன்படுத்தியது உண்மையே. இதுவும் இந்தியாவிலும் நடைபெற்றிருக்கும் என்பதே எனதெண்ணம். (எனக்கு இது குறித்து தெரிந்த வரலாறு தசாவதாரம் படத்திலிருந்துதான் எனப்தை தாழ்மையுடன் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்)

கலாச்சாரப்படுத்துதல் குறித்த ஆய்வு புத்தகம் ஒன்று மறைந்த போப்புக்கு ஆசியாவிலிருந்து அனுப்பப்பட்டது. சீனா வட, தென் இந்தியா, இலங்கை என ஆசிய நாடுகளின் கலாச்சாரங்களை திருச்சபை எடுத்தாள்வது குறித்தான ஆய்வு அது. அதை பிழைதிருத்தும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒருவர் ஜென் முறைகளை உள்வாங்குவது குறித்து, இன்னொருவர் சில இந்திய கலாச்சார பழக்கங்களைக் குறித்து என கட்டுரைகள் அதில் இருந்தன. ஆனால் என் செவிட்டில் அறைந்தது இலங்கை பாதிரியார் எழுதியிருந்த கட்டுரைதான்.
அவர் அதில் முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருந்தார். ஏன் நாம் இந்த கலாச்சாரப்படுத்தலை செய்ய வேண்டும் அதனால் சடங்கலை மேன்மைப்படுத்த முடியுமேயன்றி வேறென்ன  பலன்? இருக்கும் சடங்குகளால் என்ன நேர்ந்திருக்கிறது? சர்ச்சில் முதியவர்களுக்கு எழுந்து இடம் கொடுக்கும் பண்போ, அல்லது சர்ச்சில் கூடுபவர்களுக்கிடையே நட்புணர்வோ, அல்லது முகம் தெரியாதவருக்கு நட்போ, வியாபாரத்தில் நேர்மையோ, சாதி பாகுபாடில்லாமல் பழகுவதோ போன்ற அடிப்படை மனிதப்பண்புகளை வளர்ப்பதை நாம் முன்னெடுக்க வேண்டுமேயன்றி வெறுமனே கலாச்சாரப் பழக்கங்களையல்ல என அந்த ஆய்வையே மறுதலித்து எழுதியிருந்தார் அவர். கிட்டத்தட்ட டி மெலோவின் குரல். இத்தகையதொரு திருச்சபையைத்தான் அவர் கனவுகாண்கிறார். ஆனால் அது மிகவும் கடினமானதொரு விஷயம் அப்படி ஒரு மதம் நீடித்து நிற்பதும் பரவலாகுவதும் இயலாத காரியம். அடிப்படையில் இந்துமதம் அப்படி இருந்தது என்றும் பின்னர் அது பக்தி மார்க்கமானபின்னரே நீடித்து நிலைத்து பரந்துபட்டது என்றும் நீங்கள் சொன்னது நியாபகம்.

திருச்சபை இரண்டாம் வட்டிக்கான் மூலம் தன் கதவுகளை சாதாரணர்களுக்குத் திறந்துவிட்டது. ஆனால் அதற்கும் பல காலம் முன்னரே பல சாமியார்களும் அந்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். பலரையும் திருச்சபை கண்டித்திருக்கும், தடை செய்திருக்கும். ஆனால் இறுதியில் அது அதிகாரபூர்வமாக ஒன்றுகூடி விவாதித்து கிட்டத்தட்ட ஒரு புதிய திருச்சபையை உருவாக்கியது. அந்த நம்பிக்கை எனக்கு கத்தோலிக்க திருச்சபை மீது எப்போதும் உண்டு.

கிறீத்துவர்கள் எடுத்தாள வேன்டியது இந்தியாவின் சடங்குகளை அல்ல. (அதைச் செய்வதில் எனக்கு ஒரு மறுப்பும் இல்லை) மாறாக அதன் பின்னிருக்கும் தத்துவ தரிசனங்களையே.


Regards,
Cyril Alex
http://www.cyrilalex.com

 

அன்புள்ள சிறில்,

உங்கள் கருத்துக்களை நான் முழுக்க முழுக்க ஏற்கிறேன். அவற்றின் சாராம்சம் நான் சொல்ல விரும்பும் விஷயங்களைப்போலவே இருக்கிறது. சடங்குகளுக்கும் ஆன்மீகமான மலர்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. கிறித்துவ ஆன்மீகம் என்பது தன்னை இன்மைவரை தாழ்த்திக்கொள்ளும் எளிமை, இறைச்சமர்ப்பணம், எளியோர் சேவை ஆகிய மூன்றிலேயே இருக்கிறது. இவற்றில் முதல் இரண்டும் மிக அந்தரங்கமானவை. மூன்றாவதை திறம்படச்செய்வதற்கு அமைப்பு தேவை என்ற அளவிலேயே சபை கூட தேவையாகிறது. ஆகவே கிறித்தவ ஆன்மீகத்துக்கும் சடங்குகளுக்கும் இடையேயான உறவு என்பது முரண்பாடுள்ளதே, எந்தச்சடங்கும்.

கிறித்தவ ஆன்மீகம் இந்தியாவின் சமண,பௌத்த பாரம்பரியத்துடனும் பக்தி இயக்கப் பாரம்பரியத்துடனும் ஆக்கபூர்வமான ஓர் உரையாடலை மேற்கொள்ள முடியும். அப்படி செய்த ஒருவராகவே நான் ஜோச·ப் டி மெல்லோவை பார்க்கிறேன். அதிகம்பேருக்குத்தெரியாத மேலும் பலர் உள்ளனர். மறைந்த ஜோச·ப் புலிக்குந்நேல் [மலையாள எழுத்தாளர் ஸகரியாவின் மாமா] அவர்களில் ஒருவர்.

சடங்குகளை நான் வரவேற்பது அவை அன்றாட வாழ்க்கையின் தளத்தில், சாமானிய மக்களின் தளத்தில், குறியீட்டுரீதியாக சில விளைவுகளை உருவாக்குகின்றன என்பதனாலேயே. இன்று கிறித்தவம் என்பதை இந்திய மையஓட்டத்தில் இருந்து பிரித்து தனிமைப்படுத்தும் பெந்தேகொஸ்தே போன்ற இயக்கங்கள் மிக வலுவடைந்துவரும் சூழலில் இத்தகைய செயல்பாடுகள் பொதுவான பண்பாட்டுடனான ஓர் உணர்வுரீதியான உறவை உருவாக்குகின்றன. காரணம் அவை குறியீட்டு ரீதியானவை.

அவற்றுக்கும் தெய்வ நாயகத்துக்கும் உள்ள வேறுபாடு, ஏற்கனவே நான் சொன்னதுதான். தெய்வநாயகம் அவர் சொல்வதை அவரது விசுவாசிகளுக்குள் இறங்கிச் சொல்பவரல்ல. அதன் மூலம் தன் மதத்தை அவர் இந்தியத்தன்மை கொண்டதாக மாற்றவே இல்லை. அதை ‘தூய்மையாக’ வைத்திருக்க விரும்பும் ஒரு சீர்திருத்த கிறித்தவர் அவர். அவரது தேவாலயத்தில் அவர் சொல்லும் ‘தாமஸ் கிறித்தவ’ மதங்களின் நூல்களான தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றில் இருந்து செய்யுட்களை சொல்லி வழிபடவேண்டும் என்று ஓர் இயக்கத்தை அவர் ஆரம்பிக்கலாமே. முடியுமா?

அவர் அந்தத் திரிபை இந்துக்களிடம் வந்து சொல்கிறார். இதன்மூலம் இந்துக்களின் மதங்களையும், தமிழ்ப்பண்பாட்டையும் சிறுமைப்படுத்துகிறார். சிந்திக்க தெரியாத கூட்டம் என்றும் கிறித்தவம் இல்லையேல் இவர்களிடம் எதுவுமே இருக்கமுடியாது என்றும் நம்மிடம் சொல்கிறார். வரலாற்றை அழிக்கிறார். அது ஒரு மதமாற்ற மோசடியன்றி வேறல்ல

மாறாக சிரியன் கிறித்தவர்கள் இங்கே தங்கள் வழிபாட்டை மாற்றிக்கொள்கிறார்கள். தங்கள் சொந்த விளக்கம் ஒன்றை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஏற்கனவே அவர்களிடம் இதைப்போல உருவம் மாற்றப்பட்ட எத்தனையோ இந்தியச் சடங்குகள் உள்ளன. அவர்களுக்கென தனியான குத்துவிளக்குகூட உள்ளது. இந்த சடங்குமாற்றத்தால் என்ன நடக்கிறது என்பதற்கு அவர்களின் வரலாறே உதாரணம். அவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பத்து நூற்றாண்டுகளில் எப்போதுமே மதப்பூசல் உருவானதில்லை. மோசடி மதமாற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதும் இல்லை.

அவர்களின் நெகிழ்தன்மை காரணமாகவே இந்துக்களின் நூல்களைக் கற்பதற்கும் அவர்களுக்குத் தடை இருந்ததில்லை. வெட்டம் மாணி ,ராவ்பகதூர் செறியான் போன்ற இந்துப்பேரறிஞர்கள் அவர்களில் உருவானார்கள். இந்த உள்வாங்கல் காரணமாக கலை, இலக்கியம், வரலாறு போன்ற துறைகளில் அவர்களால் பெரும் சாதனைகளை படைக்க முடிந்திருக்கிறது. இந்தியப் பண்பாட்டில் சிரியன் கிறித்தவர்கள் அல்லாத கிறித்தவர்களின் பங்களிப்பு என்பது அனேகமாக பூஜ்யம் என்பதை பலர் அறிவதில்லை.  விதிவிலக்காக இருப்பவர்கள் மிகச்சில கத்தோலிக்கர்கள் மட்டுமே — தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் போல.
என் என்றால் பிற கிறித்தவர்கள் தங்கள் கிறித்தவ நம்பிக்கை காரணமாக தங்களை துண்டித்துக்கொள்வதனால் பொதுப்பண்பாட்டைப்பற்றியும் வரலாற்றைப்பற்றியும் அவர்களின் அறிதல் பரிதாபகரமானதாக இருக்கிறது ஒரு தமிழர் கிறித்தவர் என்பதனால் கம்பனையும் ஆண்டாளையும் வாசிக்கும் மனநிலை அமைவதில்லை, புதுமைப்பித்தனின் கயிற்றரவு அல்லது கபாடபுரத்தை அவரால் வாசித்துணர  முடியவில்லை என்றால் தமிழிலக்கியத்துடன் அவரது உறவு என்னவாக இருக்கும்? இன்றைய கிறித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவ்வாறுதான் இருக்கிறார்கள்.

1991ல் பேராசிரியர் ஜேசுதாசன் மார்த்தாண்டம் கிறித்த தேவாலயம் ஒன்றில் கிறிஸ்துமஸ் இசைநிகழ்ச்சிக்கு வீணை கொண்டு சென்றபோது பெரிய பிரச்சினை ஆகியிருக்கிறது என்று அவர் என்னிடம் சொன்னார். கித்தார், பியானோ, கீபோர்டு போன்றவையே கிறித்தவ வாத்தியங்கள், வீணை இந்து வாத்தியம் என்று அவர்கள் சொன்னார்கள் என்று சிரித்தார். இன்றும் இங்குள்ள சீர்திருத்த கிறித்தவ சபைகளில் இது சாத்தியமே இல்லை. பேராசிரியர் முறைப்படி தமிழிசை கற்றவர், கம்பனில் தோய்ந்தவர். அவருடைய ஞானத்துக்கு தேவாலயத்தில் இடமில்லை. இவ்வாறுதான் இன்றைய கிறித்தவம் உருக்கொள்கிறது.

அந்த சுய விலக்கத்துக்கு எதிரான எதுவும் வரவேற்கத்தக்கதே. ஆனால் அது அவர்களில் நிகழும் மாற்றமாக இருக்கவேண்டும், தங்களை அப்படியே இறுக்கிக் கொண்டு பிறர் வரலாற்றை திரிக்க முயலும் மோசடிக்கும் இதற்கும் தொடர்பில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைநாசாவில் சனி
அடுத்த கட்டுரைகாந்தி என்ற பனியா – 4