[ஒன்று]
தமிழ்நாட்டுக் கவிதைகளையும் ஈழக்கவிதைகளையும் ஒப்பிட்டு பேசும் சந்தர்ப்பம் அடிக்கடி அமைவதுண்டு, பெரும்பாலும் மேடையில் கேள்வி-பதில் உரையாடல்களின்போது. முக்கியமான வேறுபாடாக எவருக்கும் கண்ணில்படுவது நடைதான். தமிழ்நாட்டுக் கவிதைகள் கவிதைகள் செறிவான உள்ளழுத்தம் கொண்ட துண்டுபட்ட உரைநடையில் அமைந்துள்ளன. ஈழக்கவிதைகள் யாப்பில் இருந்து விடுபட்டும் சந்தத்திலிருந்து விடுபடாதவையாக உள்ளன. சமீபகாலமாகத்தான் சந்தம் ஈழக்கவிதைகள்களிலிருந்து நீங்கி வருகிறது. இந்த வெளிபபட்டுமுறை வேறுபாட்டை எளிமையான மொழிப்பழக்கம் அல்லது வடிவப் பயிற்சி என்று எடுத்துக்கொள்ள முடியாது. இலக்கியத் திறனாய்வின் முறைமையைப்பொறுத்தவரை இலக்கிய ஆக்கங்களின் எந்த ஒரு தனித்தன்மையும் அதன் ஆக்கத்திற்குக் காரணமாக உள்ள அடிப்படைக்கூறுகளைப் பிரதிபலிப்பவையே ஆகும். ஆகவே தமிழ்நாட்டுக் கவிதைகள் மற்றும் ஈழக்கவிதைகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது கிடைக்கும் இந்த முதன்மையான வேறுபாட்டை இவ்விரு இலக்கியப் பண்பாட்டுத்தளங்களை அடையாளம் காட்டும் கூறாக எடுத்துக்கொள்லலாமா?
எம்.யுவனின் ஒருகவிதை. இப்படி முடிகிறது
தினவடங்காது விழித்திருந்த
போது
பார்த்தேன்
இரவு
என் கண்களால்
தன்னைப்
பார்த்துக்கொண்டிருப்பதை
[மழைநாள் இரவு / தொகுப்பு கைமறதியாய் வைத்த நாள்]
இக்கவிதைகளில் அவர் வார்த்தைகளை செறிவாக்கும்பொருட்டே உடைத்து துண்டுகளாக்குகிறார். மொழியை தெளிந்த நீரோடை ,ஆற்றொழுக்கு, தென்றலின் சலசலப்பு என்றெல்லாம் சொல்வதுண்டு. இங்கே மொழி பொற்கொல்லனின் தட்டுமீது கிடக்கும் துளிதுளி பொற்கண்ணிகளாக உள்ளது. எடுத்து ஒவ்வொன்றாகப்பொருத்தி ஊதிசேர்க்கும்போது ஒற்றை அழகுப்பொருளாக வருகிறது நகை. இளையராஜா இசையமைப்பதைப் பார்த்தபோதும் இதை உணர்ந்தேன். அங்கொரு வயலின் கீற்று ,இங்கே ஒரு தாளம், நடுவே சில குரல்வரிகள்.அவரது மூளைக்குள்ளும் அதன் பிரதிநிதியாகிய அந்த ஒலியிணைவுக்கருவியிலும் அவை எங்கெங்கோ சிதறிகிடக்கின்றன. அவர் அவற்றை என்ன செய்கிறார் என்பது பாடலாக அது முழுமைகொண்டு நம் முன் நிற்பதுவரை நமக்குப் புரிவதில்லை. நவீனக்கலைகளில் இந்த நுண்தொழில்நுட்பம் என்ன பங்கு வகிக்கிறதென்பது விரிவாகப் பார்க்கவேண்டிய ஒன்று.
மேலே சொன்ன கவிதையில் எடுத்துக்காட்டப்பட்டது உண்மையில் ஒரே ஒரு உரைநடை வரி மட்டுமே. அதையே வேண்டுமென்றால் ‘தினவடங்காது விழித்திருந்தபோது பார்த்தேன்” என்றும் ” இரவு என் கண்களால் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை’ என்றும் இரு கூறுகளாகப் பிரிக்கலாம். ஆனால் இக்கவிதை அதை ஏழு அடிகளாக மாற்றியுள்ளது. ‘தினவடங்காது விழித்திருந்த’ என்ற இடத்தில் ஒடித்து ‘போது’ என்று தனிச்சொல்லை ஓர் அடியாக்கும்போது போதுக்கு அதிக அழுத்தம் கிடைக்கிறது. அச்சொல்லில் வாசகக் கவனம் நிலைத்து பின் முன்னகர வேண்டியுள்ளது. விழித்திருந்த நேரத்தின் நீட்சியை உணர்த்த இந்த கண்தயக்கம் நமக்கு உதவுகிறது என்பதுடன், போது தனியாக நின்று அந்தப் பொழுதை நமக்குச் சொல்லவும் செய்கிறது. பார்த்தேன், இரவு ,தன் கண்களால் ஆகியவையும் தனித்தனி அடிகளாக நிற்பது அந்த ஒவ்வொரு சொல் மேலும் அழுத்தம் அளித்து வாசக்க கவனத்தை அதன் மீது கோருகிறது. ‘தன்னைப் பார்த்து கொண்டிரூப்பதை’ என்பதற்குப் பதிலாக ‘தன்னை’ ‘பார்த்துக்கொண்டிருப்பதை’ என்று ஒடிக்கும் முறைமூலம் பார்த்தல் அதிக அழுத்தம் பெற்று தன்னை என்பது அதன் கூட இணைகிறது.
சரளமான ஓட்டம் முறிந்து நகரும்போது கவிதையில் சொற்கள் மீது அதிக அழுத்தம் விழுகிறது என்ற கண்டடைதலே இந்த வகையான எழுத்துமுறையின் காரணமாக அமைகிறது. இதே வரிகளை ” இரவு என் கண்களால் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்” என்ற முடிப்புக்குப்பதிலாக பாத்தேன், இரவு என் கண்களால் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை என்று வளைத்து ஒடித்திருக்கும் முறை மேலதிக அழுத்ததை அளிக்கிறது. பார்த்த செயல் அதிக அழுத்தம் பெற்று , எதை என்ற வினாவுக்குப் பொருளாக அடுத்தவரி அமைகிறது. இவ்வாறு மொழியை ஒடித்தும் வளைத்தும் ஆக்கும் கவிதைகளே தமிழ் புதுக்கவிதைகளின் இன்றைய சாதனைகளாக கொள்ளப்படுகின்றன.
காரணம் இவை கவிதையின் சில அடிப்படை இயல்புகளை மேலும் சிறப்பாக நிறைவேற்ற முயல்கின்றன என்பதே. எஸ்ரா பவுண்ட் முதல் நவீனக் கவிதையின் இயல்புகளாக அறியப்பட்டுள்ள இயல்புகள் அவை. 1. கவிதை சொல்லும் கருத்தால் நம்மைக் கவர்வது அல்ல சொல்லும் முறையால் நம்மில் நிகழ்வது 2. கவிதை சொற்களைப் படிமங்களாக ஆக்கும் கலை 3. கவிதையின் வாசக இடைவெளி அல்லது மௌனம் அதன் ஒவ்வொரு சொற்களுக்கு இடையேயும் உள்ளது . 4. கவிதை ஒவ்வொரு மூறையும் மொழியின் புதிய சாத்தியப்பாடு ஒன்றை நிகழ்த்துகிறது இதைப்போன்ற பல வரையறைகளை நாம் அறிவோம். நவீனக் கவிதை இவ்வியல்புகளை அடையும்பொருட்டே இன்று அதன் வடிவத்தில் காணப்படும் தனித்தன்மைகளை அடைந்து முன்செல்கிறது
அந்த தனித்தன்மைகளை இரண்டாகப்பிரிக்கலாம். ஒன்று மக்களின் பேச்சுமொழியில் இருந்து கவிதையின் மொழியை அடைவது. இரண்டு பேச்சுமொழியை செறிவாக்கி மேலும் மேலும் மௌனம் மிக்கதாக ஆக்கி கவிதைக்கான தனிமொழியாக [meta language] அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வது. மேலே சொன்ன வரி அப்படியே எளிமையான பேச்சுமொழியில்தான் உள்ளது. வழக்காற்றில் இல்லாத அல்லது தனியான ஒலியழகோ அணியழகோ உள்ள எந்த சொல்லும் அவ்வரிகளில் இல்லை. ‘தினவடங்காது விழித்திருந்த
போது இரவு என் கண்களால் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்தேன்’ . அம்மொழியை அது கவிதைக்கான தனிமொழியாக மாற்றும் பொருட்டே ஒடிக்கிறது, முன்பின்னாக்குகிறது. ஒட்டுமொத்தமாக அதை செறிவு படுத்தி, ஒவ்வொரு சொல்லையும் அழுத்தம் கொண்டதாக ஆக்கி, வாசக்க கவனத்தை சொல்லின் இடைவெலிகளில் நிற்கசெய்து இன்னொரு மொழியாக ஆக்குகிறது.
இந்த தனிமொழி உருவாக்கம் என்பது புதுக்கவிதை தொடங்கியது முதல் தமிழில் நிகழ்கிறது. பாரதியின் வசனகவிதையின் முக்கியமான சிறப்பியல்பு அதன் நேரடியான உரையாடல் தன்மை. அடுத்த கட்டத்தில் ந.பிச்சமூர்த்தி போன்றோர் சந்தத்தை தக்கவைத்துக் கொண்டு பேச்சு மொழியை கவிதையாக்க முயன்றார்கள். அவ்வகையில்தான் எழுத்து இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டன ‘பெட்டிக்கடை நாரணன்’ஒரு திருப்புமுனையாக அமைந்து தமிழில் புதுக்கவிதை இயக்கத்தை விழித்தெழச்செய்தது. தமிழில் மொழியை வெட்டுவதும் ஒட்டுவதும் மேலதிக அழுத்ததை கவிமொழிக்கு அளிக்கும் என்பதைக் கண்டுகொண்ட முக்கியமான முன்னோடி கவிஞர் சி.மணி. ஆனால் அந்தச் சாத்தியத்தையும் ந.பிச்சமூர்த்தியின் கவிதைகளிலிருந்தே சி.மணி கண்டுகொண்டிருக்கவேண்டும். ந.பிச்சமூர்த்தியின் பொதுவான கவிமொழி சந்தநயம் கொண்டதாயினும் —
‘படிக்க குளத்தோரம் கொக்கு
செங்கால் நெடுக்கு
வெண்பட்டுடம்புக்
குறுக்கு’
[கொக்கு]
என உடைந்த சொற்களின் சாத்தியத்தையும் அவர் அபூர்வமாகப் பயன்படுத்தியிருந்தார். பின்னர் பசுவய்யா அதை விரிவாகவே பயின்றார். நகுலன், பிரமிள் போன்றோர் பிந்தியே அந்த சாத்தியத்தைப் பயன்படுத்திக் கொண்டனர். முந்தைய இருவரும் அங்கதமாகவே அதைச்செய்து பார்த்தனர்.
சி.மணி ஆரம்பத்தில்
வேதனை விழிக்கு விளிம்பு கட்ட
நீர் காணா ஏரிபோல் நெஞ்சு பிளக்க
தூறலிடைக் காடாக மாநிலம் மங்க
என்று எழுதியவர் மெல்ல அடுத்த கட்டத்துக்கு நகர்வதை அவர் படைப்புகளில் காணலாம்.
”சாதா
ரண வாழ்க்கை வாழும் ..”
என்று அங்கதமாக மொழி உடைப்பை மேற்கொண்டபின்பு மெல்ல
சாவதும்
பழக்கமானதோ என்னவோ
அதுவும் நாள்தோறும்
என அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்றார். அதன் பின் எளிதாகத் தமிழ்க்கவிதை இந்த சாத்தியக்கூறைக் கண்டடைந்து மெல்லமெல்ல மேலெடுத்தது. இன்றைய கவிமொழி செறிவின் உச்சத்துப்போய் அதிலிருந்து சரளத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்று ஆராயுமிடத்தில் வந்து நிற்கிறது.
ஈழக்கவிதைகள் மரபுக்கவிதையிலிருந்து முன்னெழுந்து யாப்பை உதறி அங்கே மகாகவி , இங்கே ந.பிச்சமூர்த்தி என ஓர் எல்லைவரை வந்தன. பின்னர் கிளைத்து இருபெரும் பிரிவுகளாக முன்னகர்ந்தன. ஒன்று சு.வில்வரத்தினம், அ.யேசுராஜா, வ.ஐ.ச ஜெயபாலன், மு.புஷ்பராஜன், சேரன் என பலவகையான வடிவ வேறுபாடுகளுடன் நீளும் ஒரு சரடு. இதை நான் சந்தத்தை தக்கவைத்துக்கொண்டு யாப்பை உதறி உணர்ச்சிகரமான வேகத்தை நம்பி இயங்கும் கவிதைகள் என வரையறை செய்வேன். இன்னொரு சரடு தமிழ்நாட்டு வானம்பாடி இயக்கத்தை முன்னுதாரணமாக்க கொண்டு மேடைப்பேச்சின் வெளிப்படைத்தன்மைகொண்ட , உரத்த உணர்ச்சிவெளிபபடுள்ள கவிதைகளை எழுதியது. காசி ஆனந்தன், போன்று பெரும்புகழ் பெற்றவர்கள் இவ்வகையினரே. இம்மரபில்தான் ஈழக்கவிஞர்களில் கணிசமானோர் உள்ளனர். இவர்களை நான் எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை, கவிதை என்று நான் எண்ணும் அனுபவத்தை இவை எனக்கு அளிக்கவில்லை. முந்தைய சரடின் சந்தம்கொண்ட மொழிச்சாயலும் பிந்தைய சரடின் வெளிப்படையான தட்டைத்தன்மையும் கொண்டவர்களும் சிலர் உள்ளனர், உதாரணம் சிவசேகரம். நான் இவர்கள் எழுதுவதும் கவிதை அல்ல, வெற்றுப்பேச்சு என்றே எண்ணுகிறேன்.
முதல்வ¨க்க கவிதைகளை மட்டுமே ஈழக்கவிதைகள் என்ற பட்டியலில் வைத்து நான் விவாதிக்க விழைகிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் கவிதை என எழுதப்படுபவை எண்ணிக்கையில் பற்பல. கவிதை ஆக எழுபவை சில. காலத்தைக் கடந்து கவித்துவத்தை நிலைநாட்டுபவை மிகச்சில. எண்பதுகளில் ஈழம் எரிந்த காலகட்டத்தில் என் நெஞ்சை தீப்பிடிக்கச் செய்த பல கவிதைகள் இன்று எனக்கு ஊமைச் சொற்களாக தெரிகின்றன. ஒரு தருணத்தின் ஒரு காலகட்டத்தின் ஒரு உள்ளத்தின் எழுச்சியைச் சொல்லும் கவிதை அதுகவிதையாக மாறும்போதே என்றுமுள்ள ஏதோ ஒன்றைச் சொல்வதாக ஆகிறது. அது வரலாற்றுப் பின்புலம் மூலம் நிலைநிற்பதல்ல, வரலாற்றைத் தாண்டிய நிலையான மனிதவிழுமியங்கள் மற்றும் அழியாத மானுட உணர்வுகள் மூலம் நிலைநிற்பது. கவிதைகளை அடையாளம் காட்டுவதன் மூலமே அதைப்பற்றிப்பேச முடியும்.
ஈழக்கவிதைகளின் பொது இயல்பாக நான் காண்பவை இவை. அவை கவிதையில் வெளிப்படையான ஓசை அளிக்கும் பாதிப்புக்கு மதிப்பளிக்கின்றன. அவை யாப்பை உதறும்போதே ஒலியழுங்கை வேண்டியும் நிற்கின்றன. ஆகவே அகவல், சிந்து என அறிந்த சந்தங்களை விலக்கும்போது புதிய சந்தங்களை தனக்கென உருவாக்கிக் கொள்கின்றன. இவ்வாறு சந்தத்தை நிலைநிறுத்திக் கொள்ளும்போது சில கட்டாயங்கள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டு நவீனகவிதையில் நிகழ்ந்ததைப்போல சொற்களுக்கு அழுத்தம் அளிக்க முடிவதில்லை. சந்தத்தில் சொற்கள் ஒழுகி ஓடிச்செல்ல நேர்கிறது. சொற்களுக்கு இடையேயான மௌனத்தை உருவாக்க முடிவதில்லை. ஒரு சொல்லில் இருந்து அடுத்ததுக்குச் செல்லும்போது உணர்வு மாற்றம் நிகழ முடிவதில்லை. காரணம் சந்தம் ஒரு குறிப்பிட்ட உணர்வை பல வரிகளுக்கு நீட்டிச்செல்லும். ஆகவே செறிவுக்காக வரிகளை ஒடித்து துண்டுகளாக ஆக்கும் கவிமொழி சாத்தியமல்லாமலாகிறது. சந்தத்தின் பொருட்டுமட்டுமே அப்படி ஒடிப்பது சாத்தியமாகிறது.
விளைவாக நம்மை சொற்கள் தோறும் நிறுத்தி சொல்லப்படாதவை வழியாக நகரச்செய்து நம் கற்பனையில் கவிதையை நிகழ்த்தும் நவீனக் கவிதை வடிவத்தை அடைய முடிவதில்லை. மாறாக இந்தவ¨க்க கவிதைகள் உணர்வுகளையும் கருத்துக்களையும் நேரடியாகச் சொல்கின்றன. அந்த உணர்வுகளை நம்மில் அந்தச் சந்தம் நேரடியாக நிறுவுகின்றது. அக்கவிதை உத்தேசிக்கும் உணர்வெழுச்சியானது நாம் அதை வாசிக்கும்போதே சிந்தனையை தவிர்த்து உடனடியாக நம்மில் நிகழ்கிறது. இப்படிச்சொல்கிறேனே, தமிழின் சிறந்த நவீனக்கவிதைகளை வாசித்து நாம் கண்ணீர் மல்கவோ புல்லரிக்கவோ முடியாது. வாசிக்கும் அக்கணத்தில் நமக்கு அவை ஒரு சிறு அதிர்வையோ நிலைகுலைவையோதான் உருவாக்குகின்றன. நம் எண்ணத்தில் அவை ஒருபதிவை உருவாக்குகின்றன. அப்பதிவை நாம் நம் கற்பனையாலும் சிந்தனைத்தொடராலும் நெருடி நெருடி படிப்படியாக நம்முடைய சொந்தக்கவிதை ஒன்றை நமக்குள் உருவாக்கிக் கொள்கிறோம். அது நம்முடன் வளர்கிறது. ஆனால் ஈழக்கவிதைகளில் சிறந்தவை உருவாக்குவது உடனடியான உணர்வெழுச்சியையே.
இன்னொரு முக்கியமான கூறு, தமிழ்நாட்டு நவீன கவிதை அதன் முதல் கட்டத்திலேயே, அதாவ்து பிச்சமூர்த்தியிலிருந்து பிரியும் போதே சட்டென்று மக்களின் பேச்சுமொழிக்குத் தாவிவிட்டது. பேச்சுமொழியை ஒட்டி அமையும் ஓர் உரைநடையை அது செறிவுபடுத்தி கவிமொழியாக்கியது. அதில் பசுவய்யா, சி.மணி இருவரும் பெரும் பங்காற்றினர். அக்காலகட்டத்தில் நகுலன், பிரமிள் ஆகியோர் கவிதைக்குரியவை மட்டுமேயான சொற்களை தாராளமாகப் பெய்து கவிதைகளை எழுதிக்கொண்டிருந்தனர். உதாரணமாக நகுலன் எழுதிய புகழ்பெற்ற ‘கொல்லிப்பாவை’ என்ற கவிதையில்
தெருநடுவினில் தேவன் இணையடி
தன்னறல் கூந்தலால் வருடி…
என்றும்
ஐவர் வரித்த அருங்கனியாகி
என்றும் எழுதுவதைக் காணலாம். இணையடி, நறல்கூந்தல் , அருங்கனி போன்ற சொல்லாட்சிகள் மரபுக்கவிதையின் காலகட்டத்தைச் சேர்ந்தவை. சங்ககாலம் முதல் தமிழில் அடைமொழிகள் சேர்த்தே விவரிப்புகள் நிகழ்ந்துள்ளதைக் காணலாம். அதற்கு மரபுக்கவிதையில் பலவிதமான தேவைகள் உள்ளன. ஒன்று யாப்பின் சந்தத்துக்கு ஏற்ப சொற்களை நீட்டவும் மாற்ரவும் இணைக்கவும் அவை உதவின. இன்னொன்று மிகைபடச் சொல்வது நம் மரபுக்கவிதையின் இயல்புகளில் ஒன்று. பசுவய்யாவுக்குப் பின் தமிழில் அடைமொழிகள் கிட்டத்தட்ட இல்லாமலேயே போய்விட்டன எனலாம். கவிதைக் கோட்பாட்டாளராக க.நா.சுப்ரமணியமும் அதை தமிழில் நிறுவினார்.ஆனால் ஈழக்கவிதை நீண்டகாலத்துக்கு செய்யுளில் இருந்து பெற்ற சொல்லாட்சிகளைக் கொண்டு இயங்கியது என்று படுகிறது. சு.வில்வரத்தினம், மு.பொன்னம்பலம், வ.ஐ.ச.ஜெயபாலன் போன்றோரின் கவிதைகளை சிறப்பான உதாரணமாக்க கூறலாம்.
தமிழ்நாட்டுக்கவிதையின் இந்த இரு முக்கிய இயல்புகளையும் தவிர்த்துவிட்டு ஈழக்கவிமொழி உருவானதற்கான காரணங்கள் என்ன? ஊகிக்ககூடுவனவாக எனக்குப்படுபவை சில. தமிழ்நாட்டு நவீனக் கவிதை ஒரு மக்கள் இயக்கமாக இருக்கவில்லை. கவிதைசார் நூண்ணுணர்வு கொண்ட சற்று பெரிய ஒரு குழுவுக்குள்ளேயே அது இயங்கி வந்தது. ஆகவே கவிதை மேலும் மேலும் குறிப்புணர்த்தும் தன்மை நோக்கி வளர்ந்து வடிவம் பெற்றது. அதேசமயம் இக்குழு பலவகை சமூக அரசியல் பின்னணிகளில் இருந்து வந்தவர்களின் கூட்டாக இருந்தமையால் நவீனக் கவிதை அது செயல்பட்ட காலத்தின் குரலாகவும் அமைந்தது.
இன்னொன்று தமிழ்நாட்டு நவீனக் கவிதை ‘நவீனத்துவக்’ கவிதை. தனிமனிதனை அலகாக்கி உலகையும் காலத்தையும் நோக்கும் அதன் நோக்கு அதன் வடிவை உருவாக்கியது. செறிவு அடர்த்தி மற்றும் ஒழுங்கு என்ற நவீனத்துவ வடிவ உருவகம் அதன் ஆக்கத்தில் பெரும் பங்காற்றியது. நவீனத்துவ நோக்கின் அடிப்படை இயல்பு விலகிய விமரிசன நோக்கு ஆகும். உணர்ச்சியின் சமநிலை கொண்ட வடிவம் என்பது இதன் அடுத்த படி. கவிஞன் நேரடியாக் கவிதையில் தன் உணர்வுகளை வெளிப்படுத்துவது நவீனத்துவத்தின் இயல்புக்கு மாறானது. அவன் அதற்கு சாட்சி மட்டுமே. அவன் காட்டும் உலகை வாசகன் காணும்போது வாசகனில் எழும் உணர்ச்சிகளும் விமரிசனங்களும் மட்டுமே முக்கியமானவை. ஆகவே அவன் கவிதையில் அழுவதும் கொதிப்பதும் கொந்தளிப்பதும் இல்லை. அவனது கவிதை அழவைப்பதோ அறைகூவுவதோ இல்லை.
நேர் மாறாக ஈழக்கவிதை பெரும்பாலான தருணங்களில் மக்கள் இயக்கமாக இருந்தது. அதற்கான அரசியல் சமூக்க காரணங்கள் அங்கு இருந்தன. தமிழ்நாட்டுக் கவிதைக்கு மாறாக அங்குள்ள கவிதைக்கு எப்போதுமே முன்னிலை தெளிவாக உருவகிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். தமிநாட்டு நவீனத்துவக் கவிதை தனக்குத்தானே பேசுகிறது, அந்தரங்கக் குறிப்பு வடிவில் உள்ளது. ஈழக்கவிதை முன்னால் கூடியுள்ள வாசகர்களிடம் பேசுகிரது. அது ஓர் உரை அல்லது உரையாடல். கவிதைப்பயிற்சியோ பலசமயம் கவித்துவ நுண்ணுணர்வோ இல்லாத திரளிடம் அது உரையாடியது. ஆகவே அது குறிப்புணர்த்தலுக்கு நேர் எதிரான திசையில் சென்று அறிவுறுத்தவும் தொடர்புறுத்தவும் முற்பட்டது. பல நல்ல ஈழக்கவிதைகள் கூட கூறியவற்றையே மேலும் கூறுகின்றன. கவியரங்குகளில் பெரும்கூட்டத்தின் நடுவே அவற்றை வாசித்தால் கூட எளிதாக வாசகனைச் சென்றடையும் அவை.
ஈழக்கவிதைகள் நவீனத்துவக் கவிதைகள் அல்ல. அவை போராடும் சமூகத்தில் பிறந்தவை, ஆகவே பெரும்பாலும் இலட்சியவாதத் தன்மை கொண்டவை. கற்பனாவாதம் [ரொமாண்டிசிசம்] தான் இலட்சியவாதத்தின் அழகியல் வடிவம். ஆகவே இயல்பாகவே இக்கவிதைகளில் ஏறத்தாழ அனைத்துமே கற்பனாவாத அழகியல் கொண்டவையாக உள்ளன. இலட்சியவாதம் நன்னம்பிக்கை கொண்டது. நவீனத்துவம் நம்பிக்கையிழப்பின் இலக்கிய வெளிப்பாடு. ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் வெளியான சுகுமாரனின் தொடக்ககால கவிதைகள், சேரனின் தொடக்க காலக் கவிதைகள் ஆகியவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டால் இந்த வேறுபாடு தெளிவாகவே புரியும்.
ஈழக்கவிதைகள் உடனடியாக தொடர்புறுத்தியாகவேண்டுமென்ற கட்டாயத்தாலேயே அந்த வடிவத்தைப் பெற்றன என்று எண்ணுகிறேன். உணர்ச்சிச் செறிவை சந்தம் எளிதாக ஊட்டும். சந்தத்தில் முழங்க மரபான சொற்கள் பெரிதும் உதவுபவை. அவ்வடிப்படையிலேயே முழக்கமும் அணியழகும் கொண்ட சொற்கள் தேவையாயின. பின்பு மேலும் மேலும் மக்கள் இயக்கமாக கவிதை ஆனபோது மக்கள் மொழியில் அதை அமைக்க வேண்டிய தேவை உருவாயிற்று. முழக்கம் மேலும் மேலும் பெருக வேண்டியதாயிற்று. முழக்கம் வெற்றோசையாக மாறியது.
ஈழக்கவிதையில் மேற்குறிப்பிட்ட இயல்புகளுக்கும் அவ்வியல்புகளின் வெற்றிக்கும் முதல் உதாரணமான கவிஞர் என நான் சு.வில்வ ரத்தினத்தைக் கருதுகிறேன்
[ இரண்டு ]
1985க்குப் பிறகு ‘அகங்களும் முகங்களும்’ என்ற தொகுப்பு மூலமாக சு.வில்வரத்தினம் தமிழ்நாட்டுக்கு அறிமுகமானார். ஆனால் அவர் இங்கே குறிப்பிடத்தக்க வாசகக் கவனத்தைப் பெற்றார் என்று கூற முடியாது. அதற்கான காரணம் இரண்டு, ஒன்று அன்றைய சூழலில் ஈழ அரசியல் சூழ்நிலை சார்ந்து தமிழ்நாட்டில் கொந்தளிப்பான ஒருநிலை நிலவியது. ஈழ எழுத்துக்களை ஈழப்போரின் அறைகூவல்களாக மட்டுமே காணும் மனநிலை அதன் விளைவாக இருந்தது, நானும் அந்நிலையிலேயே இருந்தேன். அன்று வெளிப்படையாகப் பெருங்குரலெடுக்கும் கவிதைகள் மீது தமிழ்நாட்டு பொதுக் கவனம் குவிந்தது. ஓரளவு நுண்ணுணர்வு கொண்டவர்கள் இன்னும் சற்று செறிவான கவிமொழியில் நேர்மையான உணர்வுகளை வெளிப்படுத்திய கவிதைகள் மீது ஆர்வம் கொண்டார்கள். சேரனின் ”இரண்டாவது சூரிய உதயம்” வ.ஐ.ச.ஜெயபாலனின் ‘நமக்கென்றொரு புல்வெளி’ போன்ற தொகுப்புகள் விரிவான ஆர்வத்தை இத்தகைய தேர்ந்த கவிதைவாசகர்களிடம் உருவாக்கின. சு.வில்வரத்தினம் இந்த அலையில் கவனிக்கப்படாமலானார்.
அதேசமயம் கவிதையின் நுண்தளங்களைப்பற்றிய பிரக்ஞை கொண்ட தமிழ்நாட்டு வாசகர்கள், குறிப்பாக நவீனத்திய அழகியல் நோக்கை மையமாக கொண்டவர்கள், ஒட்டுமொத்த ஈழக்கவிதைகளையே ஒற்றைப்படையான உணர்ச்சி வெளிப்பாடுகள் என்று எண்ணினார்கள். இன்றும் என்ணுகிறார்கள். அலை அடங்கிய பின் எல்லா ஈழக்கவிஞர்கள் மேலும் மறுவாசிப்பு உருவான போதுதான் சு.வில்வரத்தினம் கவனத்துக்குரியவரானார். இன்று தமிழ்நாட்டின் முதன்மையான கவிதை வாசகர்களில் பலர் ஒட்டுமொத்த ஈழக்கவிஞர்களிலேயே அவரே தலைசிறந்தவர் என்ற எண்ணம் கொண்டிருப்பதை கவிதை விவாதங்களில் கேட்டிருக்கிறேன். என் கணிப்பில் வெற்றிகரமான கவிதைகள் ஒப்புநோக்க குறைவு என்பதனால் சு.வில்வரத்தினம் சற்று பின்னகர்கிறார், ஆனால் ஈழக்கவிதையின் உச்சகட்ட வரிகள் சு.வில்வரத்தினம் வழியாகவே நிகழ்ந்தன.
ஈழத்தில் 1950ல் புங்குடுதீவில் பிறந்த சு.வில்வரத்தினம் மு.தளையசிங்கத்தின் இளைய தோழராக இலக்கியத்தில் நுழைந்தார். மு.தளையசிங்கத்தின் குறிப்புகளில் அவரது பெயரும் காணப்படுகிறது. 1970களில் கவிதைகள் வழியாக இலக்கியத்தில் நுழைந்தார். நவீன இலக்கியத்தை ஈழத்தில் அறிமுகம் செய்த ‘பூரணி’ முதலிய இதழ்களுடன் தொடர்புகொண்டிருந்தார். 2001ல் இவரது ‘உயிர்த்தெழும் காலத்திற்காக’ என்ற முழுத்தொகைநூல் வெளியிடப்பட்டது. இப்போது திரிகோணமலையில் வசிக்கிறார்.
சு.வில்வரத்தினம் கவிதைகளின் சிறப்பியல்புகள் ஏற்கனவே சொன்னபடி ஈழக்கவிதைகளின் பொதுவான சிறப்பியல்புகள்தான். அவை பெரும்பாலும் யாப்பை மீறி தனக்கென சந்த ஒழுங்கை மேற்கொண்டவை. செய்யுள்மொழியில் இருந்து பெரிதும் விலகாது இயல்பவை. நேரடியாக வாசகனிடம் பேசுபவை. உணர்ச்சிகளை தீவிரமாக வெளிப்படுத்துபவை. அத்துடன் நேரடியாக காட்சிகளை சித்தரித்துக் காட்டும் ஒரு நாடகத்தன்மையையும் பல கவிதைகளில் சு.வில்வரத்தினம் கையாண்டிருக்கிறார்.
சந்தத்தை நவீனக் கவிதை உதறியமைக்கு சில அடிப்படை காரணங்கள் உள்ளன. சந்தம் நேரடியான உணர்வெழுச்சியை உருவாக்குகிறது. அவ்வெழுச்சியில் சற்றேனும் பொய்மையோ பாவனையோ இருந்தால்கூட அவ்வுணர்ச்சி செயற்கையாக ஆகி கவிதையின் தரம் பெரிதும் சரிந்துவிடும். அதாவது உண்மையான உணர்வெழுச்சியை தீவிரமாக நிலைநாட்டும் சந்தம்தான் பொய்மையின் துளியை பூதாகரமாக்க்கிக் காட்டவும் செய்யும். அந்நிலையில் உண்மையிலேயே உணர்ச்சி பெருக்கெடுக்கும் தருணங்களுக்கு மட்டுமே உரியது சந்தம். அத்தகைய தருணங்கள் நவீனக் கவிதையில் மிகவும் குறைவு. வாழ்க்கையை ஐயத்துடனும் நிதானத்துடனும் நோக்கும் நவீனத்துவ அணுகுமுறை நவீனக்கவிதையின் பின்னால் உள்ளது.ஆகவே உணர்ச்சிகரமாக்க கவிதையை ஆக்கும், ஓரளவுக்கு கற்பனாவாதத் தன்மை கொண்ட கவிஞர்களுக்கு உரியது சந்தம். தமிழ்நாட்டுக்கவிதையில் பிரமிள் தேவதேவன் இருவரிலும் அவ்வப்போது அதைக் காணமுடியும்.
ஆனால் இரண்டாம்தரக் கவிஞர்கள் சாதாரணமாக சந்தத்தைப் பயன்படுத்துகிறார்கள். காரணம் அது கவிதையில் கட்டுமானத்தில் உள்ள குறைகளைப் போர்த்தி மூடுகிறது என்பதே. எந்தவிதமான கவித்துவக் கூறும் இல்லாத வெற்று கூற்றுகளைக்கூட சந்தம் கவிதைபோல் ஆக்கிக் காட்டுகிறது. உதாரணமாக
கடலைப் பாறை நெரிக்கும் வரையிலும்
கடலின் கரங்கட் கேது ஓய்வு
[சிவசேகரம் ]
என்னும் வரி மிக அபத்தமான ஒரு செயற்கைப் படிமத்தால் ஆனது. [ஒரு படிமம் செயற்கையானது என உணர்வது எப்படி? நல்ல படிமம் நேரடிக் காட்சியின் அனுபவத்திலிருந்து இயல்பாக கவிமனம் தொடுவதன்மூலம் உருவானதாகவும் முதலில் ஒரு உண்மையான காட்சியை நம்மில் எழுப்பி அதன் பின்னர் அதன் பொருள்விரிவை நோக்கிக் கொண்டுசெல்வதாகவும் இருக்கும். அந்தப்பொருள் ஒரு குறிப்பிட்ட கருத்துப்புள்ளியைச் சுட்டுவதாக அல்லாமல் எண்ணும்தோறும் விரிவதாக இருக்கும். கடலை பாறை நெரிப்பது என்பது தந்திர புத்தியுடன் ஜோடிக்கப்பட்ட ஒரு ஒப்புமை. கண்ணால் பார்த்து அந்த சித்திரத்தை அடைய முடியுமா என்ன?] இத்தகைய ஒரு வரிமீது சந்தம் அமைக்கப்பட்டிருந்தால் ஒரு கவிதையை வாசித்த எழுச்சியை அதிக கவிதைப்பழக்கம் இல்லாத வாசகன் தற்காலிகமாக அடையக்கூடும். இவ்வாறு இரண்டாம்தரக் கவிஞர்களால் செயற்கையான முறையில் அதிகமாகப் பயன்படுத்தப் படுவதனாலேயே சந்தம் நவீனக் கவிதைவாசகர்களால் ஐயத்துடன் பார்க்கப் படுகிறது.
சு.வில்வரத்தினம் கவிதைகளின் முதன்மையான சிறப்பியல்பு அவை தங்கள் சந்தத்தை உண்மையான உணர்ச்சியிலிருந்து பெற்று அதை வாசகனில் நிலைநாட்டும்பொருட்டு கவிதையில் ஒலிக்கவிட்டுள்ளன என்பதே. அவரது மொத்தக் கவிதைகளிலும் செயற்கையான சந்தம் ஒலிக்கும் தருணத்தைப் பார்க்க இயலவில்லை என்பதையே அவரது முதன்மைத்தகுதியாக நான் காண்கிறேன். ஏராளமான கவிதைகளில் உணர்ச்சித்தீவிரம் நிகழாதபோது இயல்பாக எளிய உரைநடை நோக்கி வந்து அமைகிறார் சு.வில்வரத்தினம். தீயில் நெளிவு போல சொல்லில் சந்தம் நிகழும் பல பூர்வமான ஆக்கங்கள் அவரது கவியுலகில் உள்ளன.
மெய்த்தலம்
========
மூண்டெழுகிறது நெருப்பு
முடுகி முடுகி எரிகின்றது
ஒருபொறிதான் உள்விழுந்தது
உலகே பற்றி எரிவதென
ஓங்கி எரிகின்றது
கீழிருந்து மேலெழுகிற சோதி
ஆளுகின்றதா ?எனது
போக்கும் வரவும்
புணர்வுமெரிகின்றதா?
சிற்றறிவாளும் நினைவுகளை
சீண்டியழித்துச் செயலை முடுக்கி
தூண்டும் சுடரொளியான
சுதந்திரப் பிழம்பாய்
மூண்டெழுகிறது
நெருப்பு
மேலே மேலே இன்னும் மேலே
வாலின் நுனியை ஊன்றியெழுந்து
வளர்பிறை நிலவைக் குறிவைத்து
தூவெளி வானில் சோதி சுடர்த்தி
நீலநிறத்துச் சுவாலையை வீசி
சீறியெழுகின்ற அரவென நெளிதரு
நடனம் நடனம் தீயளி நடனம்!
நர்த்தனமாடும் அக்கினி வீச்சம்
அக்கினியாளே அக்கினியாளே
நர்த்தனமாடிடும் அக்கினியாளே
சிற்பரமென மெய்த்திரள் நிலவை
சுடர் நா நீட்டி கொத்திய கொத்தில்
பொத்தல் விழுந்து பொழியுது பொழியுது
முட்டி நிரம்பிய மூவா அமிழ்தம்
மெய்த்தவமாகி மிளிருது உலகம்.
சு.வில்வரத்தினம்த்தின் இந்தக் கவிதை தமிழில் ஆக்கப்பட்ட சிறந்த படைப்புகளில் ஒன்று. இதன் சந்தம் எழும் விதத்தை கவனிக்கலாம். தீயைப்போலவே மெல்ல மெல்ல பற்றி ஏறுகிறது. முதல் பத்தியில் அதற்கான நிதானமான சொற்கள் சந்தமில்லாது ஒலிக்கின்றன.
கீழிருந்து மேலெழுகிற சோதி
ஆளுகின்றதா ?எனது
போக்கும் வரவும்
புணர்வுமெரிகின்றதா?
என சந்தம் மெல்ல ஒலிக்கத் தொடங்குகிறது. தீ அசைந்ந்தாடத் தொடங்குவதைப்போல. பின்னர்
மேலே மேலே இன்னும் மேலே
வாலின் நுனியை ஊன்றியெழுந்து..
என்ற தொடக்கத்தில் சந்தம் வேகம் கொள்கிறது.
அக்கினியாளே அக்கினியாளே
நர்த்தனமாடிடும் அக்கினியாளே
என அதிவேகம் கொண்டு தாண்டவமாடி மெல்ல அடங்கியபின்
மெய்த்தவமாகி மிளிருது உலகம்.
என்ற முடிப்பில் மென்மையாக அதிர்ந்து முத்தாய்ப்பை வைக்கிறது.
குமரிமாவட்டத்து சிறுதெய்வக் கோயில்களில் நெருப்புமூட்டி கொடுக்கப்படும் பலிகொடைகளில் உடுக்கு அல்லது துடியும் வாசிப்பதுண்டு. அவ்வொலியைப் பின்னணியாகக் கொண்டு தீயின் நடனத்தைப் பார்க்கையில் தீயின் தாளமே உடுக்கொலியாக ஆனதா என்ற என்ணம் ஏற்படுவதுண்டு. இக்கவிதையில் உடுக்கு ஒலிப்பதை வாசகர் கேட்க முடியும். உடுக்கு இரண்டாவது பத்திமுதல் ஒலியெழுப்பி உச்சம் கொண்டு கடைசி வரியில் அடங்குகிறது.
பொத்தல் விழுந்து பொழியுது பொழியுது
முட்டி நிரம்பிய மூவா அமிழ்தம்
தத்தத் தகதிமி தகதிமி தகதிமி
தத்தத் தகதிமி தாதா தகதிமி
என கச்சிதமாக உடுக்கின் உச்சகட்ட ‘வாய்த்தாரி ‘ நிகழ்ந்திருப்பதைப்பார்த்து வியந்தேன்.
இந்த சந்தமானது இக்கவிதையின் பொருளுக்கும் உணர்ச்சிக்கும் ஏற்ப பிரிக்க ஒண்ணாதபடி கலந்துள்ளது. எளிமையான ஓரு கருத்தையோ சாதாரணமான ஓர் உணர்வையோ சொல்லும்பொருட்டு இக்கவிதை நிகழவில்லை. இதன் அடிப்படைத்தூண்டுதல் தீ என்னும் முதற்பெரும் இயற்கை நிகழ்வை நோக்கிய ஆதிமனித மனம் கொண்ட அதே எழுச்சிதான். சாமவேதத்தின் ஆக்னேய காண்டத்தை நோக்கும்போது தீயின் விந்தையில் தோய்ந்த புராதன நெஞ்சம் அதனூடாக எண்ணற்ற கற்பனைகளை நோக்கி சிறகடித்தெழுவதைக் காண முடிகிறது. பருப்பொருட்களை நுண்மையும் இன்மையும் ஆக்கும் வல்லமை அது. ஒளியே உடலானது.. நிகழ்வே இருப்பானது. ஒருகணமும் நிலைகொள்ளதது. மண்ணிலிருந்து விண்ணுக்கு ஓயாது தாவி ஏறுவது. விண்ணை மண்ணில் இணைப்பது.
அக்கினியே
நீயே காவலன் நீயே சத்தியன்
நீயே புனிதன்
எங்கும் படர்பவன்
எங்கும் சுடர்பவன்
கவிஞர் உன்னை எண்ணுகின்றனர்
உன்னை அழைக்கின்றனர்.
அக்கினியே
தூய்மைசெய்பவனே
வாழ்வில் விளக்கமும்
விரும்பும் செல்வமும்
நல்வழிசேர் புகழும்
எங்களுக்கு அளிக்க வருக!
என்று சாமவேத ரிஷிகள் விரூபரும் சுனக்ஷேபரும் அழைக்கும் அதே அக்கினி நூற்றாண்டுகளாக நம் கவிதையில் எரிந்துகொண்டே இருக்கிறது. பாரதியில், பிரமிளில், தேவதேவனில்.
ஜ்வாலையின் நாட்டியம்
அழைக்கிறது என்னை
[எம்.யுவன்]
என இன்றைய நவீனகவிஞனின் குரலில் அதே ஆதிப்பெரும் அழைப்புதான் ஒலிக்கிறது. ஏன்? தீஓரு ஜடநிகழ்வு மட்டுமல்ல. அதைக் காணும்போது மானுட அகம் அறியும் தீ ஒன்று உண்டு.
உக்கிரம்
தீயாயிற்று
[விக்ரமாதித்தன்]
என்று கவிஞனே அதைக் கண்டடைகிறான். நெஞ்சின் உக்கிரத்தின் நேரடி வெளிப்பாடாக உள்ளது நெருப்பு. அந்த உக்கிரத்தின் ஒரு சொல்நிகழ்வாக சொல்லில் எரியும் நெருப்பாக நிகழ்ந்துள்ளது சு.வில்வரத்தினம் எழுதிய இந்த கவிதை.
பிரமிள் கவிதைகளைக் குறித்த என் கட்டுரை ஒன்றில் பிரமிளின் தனித்தன்மை அவர் மரபின் மௌனமான அக நீட்சியாக, வளர்ச்சியாக தன் கவிதையை நிறுத்திக் கொண்டதன் மூலம் உருவானது என்று சொல்லியிருக்கிறேன்.தமிழின் நவீனத்துவக் கவிதை தன் தொல்மரபை முற்றாக அறுத்துவீச முயன்று , தன் அந்தரங்க மரபாக ஐரோப்பியக் கவிதையை வரித்துக் கொண்டு செயல்பட்டமையால் தமிழ் மரபு அளிக்கும் மாபெரும் குறியீட்டுப்பெரும்புலம் ஒன்றை முற்றாக இழந்தது. அதன் விளைவாக நுண்ணிய அகவெளிபபடுகளைச் சொல்ல அது அந்தரங்கப்படிமங்களை நோக்கி நகர நேர்ந்தது. ஆகவே அதன் தொடர்புறுத்தும் தன்மை குறைந்து தனிநபர்சார்ந்த குரலாக மட்டுமே அது நிற்கநேர்ந்தது. பிரமிள் தன் கவிதைகளை மரபின் குறியீட்டுப்புலத்தை உள்வாங்கி ஆக்கியதன் காரணமாக ஆழமும் விரிவும் கொண்ட ஒரு தளம் அவர் கவிதைகளுக்கு நிகழ்ந்தது. உதாரணமாக தெற்குவாசல் கவிதையை எடுத்து விளக்கியிருந்தேன். [ உள்ளுணர்வின் தடத்தில். தமிழினி பிரசுரம்]
சு.வில்வரத்தினம் குறித்தும் அதே வரிகளை சொல்லமுடிகிறது என்பது மிக முக்கியமானது. அவரது கவிதைகள் நவீனத்துவ குணங்கள் அற்றவை. மரபின் நவீன கால நீட்சியாக ஒலிப்பவை. மரபு உருவாக்கிய குறியீடுகளின் பின்புலத்தில் வேர் பரப்பி சாரத்தை உறிஞ்சிக் கொள்பவை. அவை கொண்டுள்ள உணர்வெழுச்சி இயல்பாக வாசக மனத்தை எட்டுவதும் இதனாலேயே. வாசக மனம் இயல்பாகவே அது உருவாகி வந்த பண்பாட்டுப் பின்புலத்தில்தான் பதிந்துள்ளது. அம்மரபின் குறியீடுகளாலேயே அது ஆக்கப்பட்டுள்ளது. ஒரு சமூகம் உருவாக்கிக் கொள்ளக் கூடிய பெரும் செல்வமென்பது அதற்கே உரிய குறியீடுகள்தான் என்று படுகிறது. வாழ்க்கையின் அலைகள் வழியாக அது குறியீடுகளை தொகுத்து மறு தொகுப்புசெய்து முன்வைத்தபடியே உள்ளது. உண்மையில் பண்பாடு என்று நாம் சொல்வதே இத்தகைய குறியீட்டுப் பெரும் தொகுப்பைத்தானோ என்ற என்ணம் ஏற்படுகிறது. அக்குறியீட்டுப்புலத்தை புறக்கணிப்பவன் தன் பண்பாட்டையே புறக்கணிக்கிறான்
இந்த குறிப்பிட்டக் கவிதையில் சு.வில்வரத்தினம் சைவ மரபின் தனிக்குறியீடுகளை மீளாக்கம் செய்திருப்பதைக் கவனிக்கலாம். இதன் மூலமே இக்கவிதையின் உண்மையான சாரம் வாசக மனதை எட்டுகிறது. சைவ – யோக மரபில் உயிர், அல்லது உள்ளார்ந்த ஆற்றல் எப்போதுமே நெருப்பாகவே சுட்டப்பட்டுள்ளது. மூலாதாரம் முதல் ஒன்பது ஆற்றல் மையங்களில் எரியும் அக நெருப்பாக. தன்னுள் பொறியாக விழுந்தெழும் நெருப்பைச் சொல்லித் தொடங்கும் இக்கவிதை மேலும் இரு முக்கியமான படிமங்களை மரபிலிருந்து எடுத்து கையாள்கிறது. ஒன்று அந்நெருப்பு சென்று தொட முயலும் கீற்று நிலா. சகஸ்ராரம் என்றும் அமுதகலை என்றும் மரபு குறிப்பிடும் உச்சப் புள்ளி ஒன்றை அது குறிப்பால் உணர்த்துகிறது. ஈசன் சிரமணிந்த பிறையாகவும் அது உள்ளது. ‘சிற்பரமென மெய்த்திரள் நிலவு’ என கவிஞரே அதை மேலும் விளக்கவும் செய்கிறார். இரண்டு பாம்பு. மூலாதாரம் [அல்லது காமத்திற்கான ஆற்றல் மையம்] என்னும் முதற்புள்ளியில் தன்னைத்தான் விழுங்கி சுருண்டு கிடக்கும் பாம்பாக அதன் நெருப்பை யோக மரபு உருவகிக்கிறது. சுருளவிழ்ந்த பாம்பு நெருப்பாகி இரட்டை நாநீட்டி படர்ந்தேறுகிறது. சகஸ்ராரத்தை தீண்டி எழுப்பும்போது அதன் விஷமே அமுதமாகிறது. ஈசல் கழுத்தின் நச்சரவாக அதை மரபு உருவகித்துள்ளது.
கவிதையை மேன்மேலும் விளக்கும் அபாயகரமான எல்லைக்குச் செல்ல விரும்பவில்லை. தன்னுள் சுடராகி தன்னையும் சூழலையும் எரித்து எரிந்து தாண்டவமாடி எழும் நெருப்பு வால்நுனி ஊன்றி பத்தி விரித்து நா நீட்டி எரிந்தாடும் பாம்பாக மாறி நிலவைக் கொத்தி அமுதமழையாக பொழியும் கணமே இக்கவிதையால் தொடப்பட்டுள்ளது. உலகை மூடும் ‘மூவாத’ அமுதத்தின் ஒரு துளியைச் சொல்லால் தொட முயலும் எழுச்சி. இத்தகைய பெரும் உணர்வெழுச்சியுடன் இயல்பாகவே கலந்துள்ளதனால்தான் சந்தம் இக்கவிதையின் பெரும் வல்லமையாக ஆகிறது. நெருப்பு குறித்த காட்சிசார்ந்த அகச்சித்திரங்களுடன் கேள்விசார்ந்த ஓர் அகச்சித்திரத்தையும் அளிக்க இக்கவிதைக்கு உதவுகிறது சந்தம். சு.வில்வரத்தினம் கவிதைகளின் சந்தத்தன்மை இத்தகையது.
[மூன்று]
உணர்வுகள் நேரடியாக வெளிப்படும் கவிதைகளை ஐயப்பட நவீனத்துவம் நம்மைப் பயிற்றுவித்துள்ளது. நவீனத்துவம் உலகிற்களித்த கொடையே அதுதான், ஐயப்படுதல். உணர்வுகளை , கொள்கைகளை ,கோட்பாடுகளை, அமைப்புகளை. ஒற்றைப்படையான உணர்ச்சிவேகமென்பது மனம் இயங்கும் பலகூறான சலனத்தில் ஒன்றை மட்டும் முதன்மையாக்கி பிறவற்றை அழுத்தி மௌனமாக்கி செயற்கையான உச்சநிலைகளை உருவாக்குவதன் மூலம் உருவாவது என்று அது நமக்குச் சொன்னது. ” அச்சம் தவிர்” ஆண்மை தவறேல்” என கற்பனாவாதம் அறைகூம்போது [பாரதி, புதிய ஆதிச்சூடி] ”என்ன அது, போலீஸ்காரருக்கான நடவடிக்கை கிரமமா?”என்று நக்கல்செய்வது அது [புதுமைப்பித்தன் கட்டுரைகள்] ”வாய்மையே வெல்லும் ” என்ற பெருவாக்கியத்தின் நடுவே அடைப்புக்குள் ‘சிலசமயம் ‘ என்று சேர்ப்பது [சுஜாதா]. உணர்ச்சிகரத்தின் அடிபடையாக அமையும் அறம், அன்பு, கருணை, விடுதலை, மரபின் பெருமை, தேசியம் போன்ற அனைத்து கருத்தாக்கங்க¨ளையும் அது ஐயப்படுகிறது ”எனக்கும் தமிழ்தான் மூச்சு ,ஆனால் பிறர்மேல் அதை விடமாட்டேன்” [ஞானக்கூத்தன்] அன்று அது அத்தகைய எழுச்சிகளை பகடி செய்கிறது.
இத்தகைய சூழலில் காற்றில் கர்ப்பூரம் என உணர்ச்சிகரம் ஆவியாகிவிடுகிறது. சென்ற காலங்களில் தமிழில் தீவிரக்கவிதைச்சூழலில் மிகையுணர்ச்சி சார்ந்த கவிதைகள் எழுதப்பட்டது மிகமிக்க குறைவு. அப்படி வெளிப்பட்டவைகூட காமத்தின்,காதலின் தாபம் சார்ந்தே நிகழ்ந்துள்லன, பிரமிளின் மோகினி போன்று. காமம் அந்த அளவுக்கு உக்கிரம் கொள்ளும்போது காமம் அல்லாமலாகி , ஒரு வகை படிமத்தன்மை கொண்டு, மேலும் ஆழமான சிலவற்றைக் குறிக்கத் தொடங்குகிறது.
”கருகாத தவிப்புகள் கூடி
நாவின் திரிபிளந்து
அணையாது எரியும்
ஒரு பெயர் நீ ” [பிரமிள்]
போன்றவரிகளில் உள்ள ‘நீ” ஒரு பெண்ணாக , காதலியாக இருக்கவேண்டுமென்பதில்லை, அவ்வரிகளை பொறுத்தவரை.
தமிழ்நாட்டில் வானம்பாடிகள் பாடிய ‘நெம்புகோல்’ கவிதைகளை இங்குள்ள தேர்ந்த வாசகர்கள் எள்ளி நகையாடி புறக்கணித்தனர். அக்கவிதைகளில் புகைந்த நெருப்பு வெறும் காகிதச் சிவப்புதான் என்பதை அக்கவிதைகளே ஒவ்வொரு கணுவிலும் காட்டிக்கொடுத்தன. கவிதை காட்டும் உணர்வெழுச்சியை மிகை என்று தள்ளிய அதே தமிழ் வாசகச் சூழல்தான் சேரனின்
முகில்கள் மீது
நெருப்பு
தன் சேதியை எழுதியாயிற்று
இனியும் யார் காத்துள்ளனர்?
சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து
எழுந்து வருக!
[ இரண்டாவது சூரிய உதயம்]
போன்ற வரிகளைக் கொண்டாடியது. காரணம் அந்த உணர்ச்சிகள் அக்கணங்களில் உண்மையாக இருந்தன, அவ்வரிகளில் அந்த உண்மையான வெம்மை சுட்டது என்பதே. பெரும்பாலான சு.வில்வரத்தினம் கவிதைகளில் வெளிப்படும் உணர்ச்சித்தீவிரத்தை இப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. அக்கவிதைகள் அதை நியாயப்படுத்தும் உண்மையான மன எழுச்சியை தன் வரிகளில் கொண்டுள்ளன.
”தாயவள்
தமிழ்தம் உணத்தந்த கலைத்தெய்வம்
பூண்டிருந்த வெள்ளைப்பணியெல்லாம் புகை படர
ஆயகலைகளெலாம் அவளைசூழ நின்று
பாலுக்கிரந்த பரிபாடலை
நான் எப்படிப் பாடுவேன்…”
என்று சு.வில்வரத்தினம் பாடும்போது தமிழ்மைய அரசியல் கூப்பாடுகளின் வெற்றோசை கண்டு சலித்திருக்கும் தமிழ்நாட்டு வாசகனுக்கும் அவ்வரிகளில் இருந்து ஓர் ஆதி மன எழுச்சி எழுந்து வருகிறது. மரபை முற்றாக தவிர்த்து செல்லும் தமிழ்நாட்டு நவீனத்துவ வாசகனுக்குக் கூட ‘தமிழ்தம்’ என்ற பழஞ்சொல்லாட்சி தித்திக்கிறது. ஆம், கவிதை அதை ஆக்கியவனின் உள்ளத்தை பிரதிபலிக்கும் வெறும் வரிவடிவம் மட்டுமே.
சு.வில்வரத்தினம் கவிதைகளின் முதன்மையான பலம் இத்தகைய உண்மையான உணர்ச்சிகள்தான் என்று படுகிறது. அந்த உண்மை என்பது ஒருவன் தன் நெஞ்சுக்கு முன் நிமிர்ந்து நிற்பதிலிருந்து வருகிறது. அந்தரங்கமான எழுத்தின் முதல் அடையாளமே அதுதான். தன்னை ஒரு அமைப்பின், கோட்பாட்டின், அல்லது புறத்தே உள்ள ஏதோ ஒன்றின் குரலாக நிறுத்திக் கொள்கையில்தான் அக உண்மை மீது கறைபரவுகிறது. கலைஞனின் குரலில் உண்மை மறைந்து பாசாங்கின் நிழல் பரவுகிறது. பல சமயம் இந்நிலையிலேயே படைப்பாளியின் குரல் தேவைக்கு மேல் உரத்து ஒலிக்கிறது. சு.வில்வரத்தினம் அவரது அனைத்து கவிதைகளிலும் அந்தரங்கமாக தன் அகம் முன் நின்றிருப்பதை உணர முடிகிறது. இனவிடுதலைப் போராட்டம் நடைபெறும் ஈழச்சூழலில் நின்றபடி அவ்வழிவுகளையும் துயரங்களையும் பாடும் கவிஞராக இருக்கும்போதுகூட அமைப்புசார்ந்த நோக்குகளையும் பொதுமைப்படுத்தப்பட்டு பிரச்சாரம்செய்யப்படும் கருத்துக்களையும் பெரும்பாலும் விலக்கி தன் அந்தரங்க நோக்கையே கவிதைகளில் முன்வைக்கிறார். போரின் அழிவைச்சொல்லும் கவிதைகளில் கவிஞனின் உள்ளப்பதைப்பும் கொதிப்புமே வெளிப்படுகிறது. காற்றுக்கு வந்த சோகம், சற்றுமுன்பு வரையிலும் இது பறவைகளின் சரணாலயமாக இருந்தது போன்ற கவிதைகளில் அழிவைக்காணும் கவிநெஞ்சின் தவிப்பையே உணர முடிகிறது. நாளை என்றோ ஒருநாள் இப்போரும் இதன் அழிவுகளும் பொய்யாய் பழங்கதையாய் மெல்லப்போனபின்னரும்கூட இக்கவிதையின் இந்த தவிப்பு சாஸ்வதமாக சொல்லில் துடித்தபடி நிற்கும் என்று படுகிறது.
அவ்வாறு ஒருவன் தன் அகம் முன் நிற்கும்போது அவனால் தன் மரபை நிராகரித்துவிட முடியாதென்று நான் எண்ணுகிறேன். அவனது அகம், அதன் ஆதாரப்படிமங்கள் , அவனுடைய சிந்தனையும் ஆளுமையும் உருவாவதற்குள்ளேயே அவனுள் சூழலால் செலுத்தப்பட்டிருக்கும். அவனது அகம் மரபின் ஆழ்படிமங்கள் [ஆர்கிடைப்] வழியாகவே இயங்கும். அவன் பிரக்ஞைபூர்வமாக தன் மரபை விலக்கி எழுதுவானென்றால் அந்த ஆழ்படிமங்களின் அச்சில் போட்டு தன் அந்தரங்கப் படிமங்களை வார்த்துஎடுக்க முயல்வான். அதேசமயம் தன் மரபை அப்படியே மீண்டும் தன் சொற்களில் வெளிப்படுத்துபவன், மரபின் எதிரொலியாக மட்டுமே இலங்குபவன் ஆளுமையற்றவன். பெரும்பாலும் இவர்கள் வெற்று அறிஞர்கள். சு.வில்வரத்தினம் கவிதைகளின் முதன்மையான வலிமை அவரது கவிமனம் இயல்பாகவே தன் சைவபெருமரபுடன் இணைந்துகொள்ளும் விதமும், அதை தன் ஆளுமைக்கேற்ப மறு ஆக்கம் செய்தெடுக்கும் படைப்பூக்கமும்தான்.
சு.வில்வரத்தினம் கவிதைகளில் சைவமரபுடனான தொடர்ச்சி இரு வகைகளில் வெளிப்படுகிறது. ஒன்று, மரபின் ஆழ்படிமங்கள் நேரடியாகவும் உருமாறியும் அவரது கவிதைகளில் இடம்பெற்று அவற்றை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்கின்றன.
தாண்டவனே தழலேந்திய செங்கையில்
யாண்டும் உயிர்த்திருப்பேனாக
எதனுள்ளும் உயிர்த்தணலாகிய
சங்கரனே
என்று நேரடியாக சிவனும் உமையும் தோன்றும் கவிதைகளும்
”பெருங்குடமுழுக்காட்டுவதுபோல கொட்டிற்று வானம்”
என படிமங்களுக்குள் நுட்பமாக உருமாறி வெளிப்படும் கவிதைகளும் அவரது ஆக்கங்களுக்குள் ஏராளமாக உள்ளன. ஒரு எளிய அந்தரங்கப்படிமம் சென்றடையாத இடங்களுக்கு இத்தகைய ஆழ்படிமங்கள் [அல்லது தொல்படிமங்கள்] இயல்பாகவே சென்றடைகின்றன. காரணம் நீண்டநாட்களாக இவற்றின் மீது நம் சமய , தத்துவ மரபானது அர்த்தங்களை படியவைத்தபடியே உள்ளது.
எண்ணிறந்த யுகங்களை
எரிமூட்டிப்பெற்ற விபூதிக்குப்
பின் மின்னும் தணல்…
என்று சு.வில்வரத்தினம் சிவனின் மூன்றாம் விழியை சொல்லுமிடம் மரபில் இயல்பான பயிற்சியுடையவர்களுக்கு அளிக்கும் பொருள்விரிவு வியக்கத்தக்கது. காலங்களை எரியால் அழித்து அச்சாம்பலையே அணியாகக் கொண்டு ஆடும் சிவனுக்கு அவ்வெரிவிழியே உயிர்த்தெழுந்து எரியும் முதற்கனலாக எஞ்சுவதென்பது பல கோணங்களில் கற்பனைகளை விரியச்செய்கிறது. ”என்ன நிகழ்ந்திருக்கும் அந்த ஒற்றை விழிக்கு/”என்ற ஆற்றாமையுடன் தொடங்கி ”காத்திருப்பது அதுவா அல்லது காலாதிகாலமாய் அதை தொலைத்துவிட்டு புதுச்சுவடு தேடி நடக்கிற பிரக்ஞையின் முதிர்வா?” என வியந்து அலையும் அக்கவிதைக்கு இந்த இறுதிப்பெரும்படிமம் அளிக்கும் அர்த்த தளத்தை கவனிக்கும் போது இதன் சாத்தியங்கள் தெளிவாகும்.
மரபிலிருந்து சு.வில்வரத்தினம் பெற்ற அடுத்த வலிமை சைவ பக்திக் கவிதைகளிலிருந்து எடுத்தாண்டும் மறு ஆக்கம்செய்தும் அவர் வளர்த்தெடுத்துள்ள செழுமையான கவிமொழி ஆகும். பல்லாயிரமாண்டுகளாக தமிழ் செய்யுளில் புழங்கி ஆற்றோட்டத்தின் அடியில் கிடக்கும் கூழாங்கற்களென சொற்களை மெருகேற்றியிருக்கிறது. அப்பெருஞ்செல்வத்தை நாம் உரைநடையில் எழுதும்போது தவிர்க்கமுடியாதபடி இழந்துவிடுகிறோம். இசையும் மொழியும் இயைந்த பக்திகாலகட்டத்தில்தான் தமிழின் ஒலியழகு அதன் உச்சத்தை அடைந்ந்து. கம்பனில் தொடங்கி ஆண்டாளில் உச்சமடைந்த இக்காலகட்டத்தின் நிழல்களாக குமரகுருபரர், திரிகூடராசப்ப கவிராயர் வரை சந்தமே ஒரே அழகாக அமைந்த கவிதைகலின் காலகட்டமொன்று வந்தது. இதை நாம் சிற்றிலக்கியக்காலகட்டம் என்கிறோம். சு.வில்வர்த்தினம் இந்த மரபின் சாரத்தை ,பெரும்பாலும் சைவப் பக்திக் கவிதைகல் வழியாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று படுகிறது.
நாதப்பறைமுழங்க
நடனித்துக் கழல்கள் குரைசலிட
பாதத்திறம்பாடி எழுகின்ற பார்வதி
போன்ற வரிகளில் மொழியும் இசையும் முயங்கிய பெரும்பக்திமரபின் அழகிய தமிழாடலை காண்கிறோம்.
சு.வில்வரத்தினம் கவிதைகளை வாசிக்கவைப்பவது நாவுக்கும் காதுக்கும் இனிமையாக மாறும் இந்த சொல்லழகுதான். இந்த வகையில் பாரதிக்குப் பின் எழுதிய நவீனத் தமிழ்க் கவிஞர்களில் சு.வில்வரத்தினம் திற்கு இணையாக எவரும் இல்லை என்றே சொல்லத்துணிவேன். பிரமிள் தன் சிறந்த கவிதைகளில் அடையும் மொழியாட்சி உவகையூட்டுவதென்றாலும் அதில் அவ்வப்போது உருவாகும் சந்தப்பிழையும் , மொழிக்கலப்பும் சிறு சிறு ஒவ்வாமைகளை உருவாகியபடித்தான் இருக்கும். தேவதேவன், யூமா வாசுகி ஆகியோரின் கவிதைகளில் இந்த மொழிநடனத்தின் அழகுகள் அவ்வப்போது அடையப்பெற்றுள்ளன. சு.வில்வரத்தினம் கவிதைகளை மந்திரம்போல் சொல்லின்பம் கொள்பவையாக ஆக்கும் மையக்கூறு இதுவே.
சு.வில்வரத்தினம் கவிதைகளின் சிறப்புக் கூறுகளில் ஒன்று அவரது சிறந்தவரிகளில் மரபின் செழுமையான வரிகளின் ஒளியைக் காண்கிறோம் என்பது. அதிகாலைச் சூரியனை கோபுரகலசத்தில் வளைவின் செம்மையெனக் காண்பதுபோல! நவீனத் தமிழ் கவிஞர்களில் இக்குறிப்பிட்ட தனித்தன்மையை நாம் வேறு எவரிலும் காண முடிவதில்லை
நீண்டெரிந்த கோடையில் தீக்குளித்த நிலமகளை
மழைமுழுக்காட்ட வந்தனை மாரி நீ வாழி!
என்ற வரிகள் நம்மைக் கவர்வதன் பின்னணியில், கண்டிப்பாக வெகுதொலைவில்தான், சிலம்பின் கானல்வரி உள்ளது.
இருளின் துயில் கலைகிறது
நீயோ இழுத்துபோர்த்தபடி
இன்னம் உறங்குதியோ!
என்ற வரிகளில் திருப்பாவை, திருவெம்பாவை பள்ளியெழுச்சிகளின் நினைவு. சிலசமயம்
எங்கள் முன்றிலும் எறித்த நிலவுமாடத்து
இன்புறு நாட்கள் எங்கே தொலைந்தன?
என ஏதோ ஒரு வரியை நினைவுறுத்தி அது எது என மனம் தொடர்ந்து தவிக்கச்செய்யும் ஓர் அனுபவமாகவும் அவரது வரிகள் உள்ளன.
அவரது முதற்தொகுதியில் சு.வில்வரத்தினம் தமிழகத்து வானம்பாடி மரபை நினைவுறுத்தும் ஆழமற்ற வெற்றொலி மேலெழுந்த கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார். அக்கவிதைகளை இப்போது பார்க்கையில் அக்காலகட்டத்து அரசியல் கொதிப்புகளின் சாட்சியமாக அவை இருக்கும்போதே கவித்துவத்தை அடையமுடியாதவையாக இருப்பதையும் உணர முடிகிறது அக்காலகட்டத்துக் கவிதைகளில் உணர்ச்சிகரமான உரைநடையை சந்தமில்லாது எழுதவும் அவர் முயன்றுள்ளார். எழுத்து கவிதைகளின் பாணியில் அமைந்த கோடை மட்டுமே இவ்வகை கவிதைகளில் ஓரளவேனும் அழுத்ததுடன் அமைந்துள்ளது.
சொல்லெறிந்து மீண்டும் காக்கை
எதையோ குத்திக்காட்டுவதாய்…
என்னும் வரியில் அந்த ஈஸிசேர் அமர்தலின் நடுத்தரவற்கத்துச் செயலின்மைக்கு எதிரான சலிப்பும் சுயவெறுப்பும் அமைந்து கவிதையை இன்னொரு தளத்துக்கு நகர்த்துகின்றன.
அவரது பெருந்தொகையில் வேறு எந்த கவிஞனின் பெருந்தொகையிலும் உள்ளதுபோல சு.வில்வரத்தினத்தின் சில வெற்றிகளும் பல சரிவுகளும் நிறைந்துள்ளன. தொடக்க காலக்கவிதைகளில் உணர்ச்சிமயமான வெறும் ஒலி மிகுந்த எளிய ஆக்கங்கள் நிறைந்துள்லன. பிற்காலக் கவிதைகலில் தன் கவித்துவ உச்சத்தை அடையும் முயற்சியில் அவர் கொண்ட சரிவுகள் மிகுந்துள்ளன. பலசமயம் இது தனக்கு ஏற்கனவே வாய்த்த சிறந்த வரிகளை வேரு ஒருவகையில் மறு ஆக்கம்செய்வதனூடாக நிகழ்கிறது. பெரும்பாலான கவிஞர்கள் இயல்பாகவே செய்யும் பிழை இது. அம்மீட்டலின்போதுதான் சிலசமயம் ஒருதுளி நெருப்பு பற்றிக்கொள்கிறது. நவீனத் தமிழ்க்கவிதையின் சந்த அழகின் சிறந்த உதாரணங்களாக அமையும் கவிதைகளை அவருக்கு அளிக்கிறது அம்மெய்த்தருணம்.
[நான்கு]
ஒரு சிறந்த கவிஞன் தன் ஆகச்சிறந்த கவிதையை எபப்டி அடைகிறான்? தன் எழுதினூடாக தனக்குரிய சிறப்பியல்புகளை அவன் கண்டடைகிறான். வானில் வட்டமிடும் தன் சொல் எந்தக் கோணத்தில் சிறகசைத்துத் திரும்பும்போது ஒரே கணத்தில் கவிதையின் செவ்வொளி பட்டு பொன்னாகிறதென அவன் அறிகிறான். அதையே தீராது மீட்டும் ஒரு கணத்தில் அது நிகழ்ந்துவிடுகிறது. உடல்கீறிவந்து கிடக்கும் குழந்தைபோல. அது அக்கவிஞன் எந்த ஆதார விசைகளால் இயக்கப்பட்டானோ அவற்றின் தூல வடிவம். அவனை கவிஞனாக்கிய உந்துதல்களின் உச்சம். அது அப்பண்பாட்டின் ஒரு கணம். அவன் மொழியின் ஒரு சிகரம். வாழும் கவிதைமரபு கொண்ட ஒருமொழியில் பலர் கூடி பல கோணங்களில் பல்லாயிரம் வரிகளை ஆக்கும் ஒரு கூட்டுச்செயல்பாட்டின் ஒரு உச்சச் சந்திப்புப்புள்ளியாக அக்கவிதை பிறக்கிறது. அப்படி நான் கருதும் தமிழ் கவிதைகளில் ஒன்று சு.வில்வரத்தினம் எழுதிய இக்கவிதை
நெற்றிமண்
========
அம்மா
விழாக்காலங்களிலும்
விரத நாட்களிலும்
கோயில்களில்
அடியழித்துத் தொழுவது
ஓர் அழகு
கோயில் வீதிகளைச் சுற்றிசுற்றி
நெற்றிப்பிறை மண்ணில்
ஒற்றிடத் தொழுது எழுவாள்
மண்துகள்கள்
மின்னும்
புடமிட்ட பொன்னாக
பூமிப்பிறையாக
என் அம்மை
ஒற்றியெடுத்த
நெற்றிமண் அழகே
வழிவழி நினதடி தொழுதவர்
உழுதவர் விதைத்தவர்
வியர்த்தவர்க்கெல்லாம்
நிறைமணி தந்தவளே
உனக்கு பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு…
சு.வில்வரத்தினம் கவிதைகளின் பொதுவான சிறப்பியல்புகளனைத்தும் கூடி வந்துள்ளது இக்கவிதையில். எளிய உரைநடையில் தொடங்கி மெல்ல ஒலிக்கத் தொடங்கும் இயல்பான சந்தம் அவ்வுணர்ச்சியுடன் பிரிக்க இயலாதபடி முயங்கும் முறை, ‘பூமிப்பிறை’ போன்ற மரபின் செழுமைகொண்ட படிமங்கள், பல்லாண்டுபல்லாண்டு என முடிவதில் உள்ள பழங்கவிதையை நினைவுறுத்தும் அம்சம் என அவற்றைச் சொன்னபடியே செல்லலாம்.
அனைத்துக்கும் அப்பால் இக்கவிதையில் உள்ள சிறப்பம்சம் ஒன்றுண்டு. இதன் எளிமை. மகத்தான கவிதை மிகமிக எளியதாகவும் இருக்கும் என்பது என் கொள்கை. அப்படிப்பட்ட கவிதைகளினாலான என் சொந்தபப்ட்டியல் ஒன்று உண்டு என்னிடம். காலஇட எல்லைகளைக்கடந்த அடிப்படை மனஎழுச்சி ஒன்றின் வெளிப்பாடு அத்தகைய கவிதை. மிக எளிதாக பறவை வந்து மரக்கிளையில் சிறகுமடக்கி அமைவதுபோல சொல்லாட்சிகள் மீது நிகழ்வது அது . அது மிக நவீனமானது, அதேசமயம் பழமையின் எழிலின் இயல்பான நீட்சியாகவும் அது இருக்கிறது. நம் காலகட்டத்து கவிஞன் ஒருவன் எழுதிய அவ்வரிகளை நம் மரபின் ஆகப்பழைய பெருங்கவிஞனும் சிறிய சொல்லாட்சிபேதங்களுடன் எழுதியிருக்க்க கூடுமென உணர்கிறோம். அதில் பகுத்தாய்வதற்கு ஏதுமில்லை. புரிந்துகொள்ள முடியாத மனத்தோய்வு ஒன்றை அதன் வரிகள் தொடர்ந்து எழுப்புகின்றன. சொல்லச் சொல்ல மந்திரம்போல் அதன் சொற்கள் நம்முள் ஒலிக்கின்றன. சிந்திக்கச் சென்றோமெனில் ஒவ்வொருமுறையும் நாமறியா இடங்களுக்குக் கொண்டும் செல்கின்றன. அன்னையும் மண்ணும் ஒன்றாகும் குழந்தைமை மிக்க கணமொன்றைத் தொட்டு சு.வில்வரத்தினம் அதை நிகழ்த்தியிருக்கிறார்.
அகமெரியும் சந்தம் – சு.வில்வரத்தினம் கவிதைகள்
1999ல் எழுதப்பட்டது. Dec 29, 2006 ல் இணையத்தில் வெளியானது. மறுபிரசுரம்