மிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா?

நல்ல ஆய்வை [வாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி]  சுட்டி இருக்கிறீர்கள், நன்றி!

வாஞ்சி மற்றும் ஆஷைப் பற்றி சில மாதங்களுக்கு நான் எழுதிய ஒரு பதிவில் –http://koottanchoru.wordpress.com/2009/03/17/வாஞ்சிநாதன்-ஜாதி-வெறியரா/
– அருந்ததியர் வாழும் வரலாறு என்ற புத்தகத்தை பற்றி கேள்விப்பட்டதை எழுதி
இருந்தேன். வாஞ்சியின் மத சார்புக்கான ஆதாரங்கள் இந்த புத்தகத்தில்
இருக்கிறதாமே? இந்த புத்தகம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேவியர்
கல்லூரி வெளியிட்டது. பேராசிரியர் மார்க் எழுதியது. நீங்கள்
படித்திருக்கிறீர்களா?

மேலும் வாஞ்சிநாதன் மனைவிக்கு தி.மு.க. காலத்தில் வாஞ்சிநாதனுக்கு உரிமை
உள்ள பென்ஷன் கொடுக்கப்பட்டதை  எதிர்த்து தி.க.காரர்கள் போராடினார்களாம்.
அதற்கு முன்னாள் இருந்த ராஜாஜி, காமராஜ், பக்தவத்சலம் அரசுகளில் என்
கொடுக்கப்படவில்லை என்று உடனே கேள்வி எழுகிறது. உங்களுக்கு ஏதாவது
தெரியுமா?

காந்தியும் தலித் அரசியலும் மிக அருமையாக இருந்தது. ஒரே ஒரு குறைதான்.
அதற்குள் முடித்துவிட்டீர்களே! :-)

அன்புடன்,
ஆர்வி

 

 

அன்புள்ள ஆர்வி

மாற்கு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியை சேர்ந்த ஏசு சபை பாதிரியார். இவர் நாவலாசிரியரும்கூட.  இவரை நான் ஒருமுறை  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் சந்தித்திருக்கிறேன். உண்மையான மனிதாபிமானமும் ஏழைகளின்பால் கனிவும் கொண்ட மனிதர் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அவர் பலகாலமாக பகடைகள் அல்லது சக்கிலியர் நடுவே மதப்பிரச்சாரப்பணி செய்துவருகிறார். அந்த செயல்பாட்டின் விளைவாக அவர் எழுதிய நூல்தான் ‘அருந்ததியர் வாழும் வரலாறு’

இந்த நூலை நீங்கள் முனைவர் கரசூர் பத்மாவதி எழுதிய ‘நரிக்குறவர் இனவரைவியல்’ [தமிழினி] என்ற நூலுடன் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும். முனைவர் பத்மாவதி நெடுங்காலமாக நரிக்குறவர்களுடன் வாழ்ந்து அவர்களை கூர்ந்து அவதானித்து எழுதிய நூல் இது. இதில் அவர் தன்னை ஒரு ஆய்வாளராக, சகமனிதராக மட்டுமே நரிக்குறவர்கள் முன் வைத்துக்கொள்கிறார். இந்த நட்பான பார்வை அவருக்கு அவர்களை துல்லியமாக சித்தரிக்க உதவுகிறது.

பத்மாவதியில் நூலில் நரிக்குறவர்களைப் பற்றிய கருத்துருவாக்க முயற்சி ஏதும் இல்லை. அவர்களின் வாழ்க்கையைப்பற்றிய தகவல்கள் முறையாக தொகுத்தளிக்கப்படுகின்றன. சரிபார்க்கப்படாத தகவல்கள், மையப்பொருளுக்குத் தேவையில்லாத தகவல்கள், ஆசிரியரின் அபிப்பிராயங்கள் அல்லது விமரிசனங்கள் எதுவும் இந்நூலில் இல்லை. அதன் மொழியும் மிக நிதானமாக கறாராக உள்ளது. மானுடவியலின் ஆய்வு முறைமை முழுமையாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ள இந்நூல் அம்மக்களைப் பற்றி அறிவதற்கான சரியான கையேடு.

முனைவர் பத்மாவதியின் நூல்தான் இந்த நூற்றாண்டில் மானுடவியல் என்னும் அறிவுத்துறை  உருவாக்கிக்கொண்டுள்ள அளவுகோல்களின்படி ஓர் ஆய்வாளனால் பொருட்படுத்தத் தக்கது. முதல்நிலை ஆதாரமாகக் கொள்ளத்தக்கது.  ஆனால் மாற்குவின் நூல் அப்படி அல்ல என எளிதில் உணரலாம்.

மாற்கு தன்னை பகடைகளை விட மேலான ஓர் இடத்தில் மீட்கப்பட்ட நாகரீக மனிதனாக, ஞானம் பெற்றவனாக, உருவகித்துக்கொண்டு அம்மக்களை குனிந்து நோக்கி எழுதுகிறார். நட்பான சகமனிதனின் நிலைக்குப் பதிலாக அவர்களை அறியாமை மற்றும் இழிவிலிருந்து மீட்க விரும்புகிறவரின் தொனி அவரிடம் இருக்கிறது. அது அவரது மதநம்பிக்கை அவருக்கு அளித்தது.

ஆகவே அந்நூல் சக்கிலியரைப்பற்றிய மாற்குவின் அபிப்பிராயங்களின் தொகுப்பு மட்டுமே. அவரது அபிப்பிராயங்களை உருவாக்கும் தகவல்களுக்கு மட்டுமே அங்கே இடமிருக்கிறது. அவர்களின் பண்பாடு பாரம்பரியம் போன்றவற்றை பற்றிய அவர்களின் கதைகளும் நம்பிக்கைகளும் அவநம்பிக்கை கலந்த அலட்சியத்துடன் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன.

தெலுங்கு பேசும் இம்மக்கள் தமிழகத்தின் நாயக்கர் ஆதிக்க காலத்தில் படைவீரர்களாக வந்தவர்கள். அதற்கு முன் விஜயநகரத்து ராணுவத்தில் இவர்கள் படைவீரர்களாக இருந்தார்கள்.  குறைந்தது நாநூறு ஆண்டு வரலாறு இவர்களுக்கு உண்டு. அவர்களின் வரலாற்றைப்பற்றி இந்த நூலில் தகவல்களைத் தேடினால் ஏமாந்து போவீர்கள். அம்மக்கள் வாய்மொழியாக தங்கள் வரலாற்றைப் பேணுபவர்கள், தொடர்ந்து முன்வைப்பவர்கள். ஆனால் அவர்களை வரலாறற்றவர்களாக ஆக்கவே மாற்குவின் நூல் முயல்கிறது.

தமிழகத்தில் மிஷனரிகளால் மதம் மாற்றம் செய்யப்பட்ட பெரும்பாலும் அனைத்து சமூகங்களும் அதற்கு முந்தைய வரலாற்றை இழந்திருக்கின்றன, சிறந்த உதாரணம் பரதவர்கள். மாற்குவின் நூலில் அந்த மனநிலை இயல்பாகவே வெளிப்படுகிறது.

இந்நூலுடன் ஒப்பிட்டு வாசிக்கப்படவேண்டிய ஆய்வேடு நாமக்கல் மாணவரான மு.நடராஜன் பெரியார் பல்கலைக்காக எழுதிய  ‘தொட்டிய நாயக்கர் குலதெய்வ வழிபாடு’. இதில் பகடைகளின் வரலாற்றுப்பின்புலம் குறித்த விரிவான ஒரு சித்திரம் உள்ளது. ஆனால் ஆய்வேடு தொட்டிய நாயக்கர்களைப் பற்றியது. தமிழகத்துக்கு வந்த நாயக்கர்களின் விரிவான இனவரைவியலை பகடைகளின் வரலாறு இல்லாமல் எழுதமுடியாது. ஆய்வுநோக்குள்ள ஒரு மாணவரால் அந்த வரலாற்றை விட்டுவிட முடியாது.

மாற்கு எழுதிய இந்நூல் கால்டுவெல் எழுதிய ‘சாணார் வரலாறு’ நூலுக்கு சமானமானது. நாடார்களை வரலாறற்ற, பண்பாடற்ற, பிறப்பிலேயே இழிவாக்கப்பட்ட, அரைப்பழங்குடிகளாகச் சித்தரிக்கும் இந்த நூலுக்கு கடுமையான எதிர்ப்பு கால்டுவெல் இருந்தபோதே அதன் இரண்டாம் பதிப்பு பரவலாக வந்தபோது எழுந்தது. அதன்பின் இது குறைவாகவே அச்சிடப்பட்டிருக்கிறது. கால்டுவெல்லின் நூல் கொஞ்சம் நேரடியானது, மாற்குவின் நூல் உண்மையான மானுடநேயத்தினால் மூடப்பட்டது

உலகம் முழுக்க மானுடவியலில் இவ்விரு வகையான எழுத்துமுறைகள் உள்ளன. ஆஸ்திரேலியா, நியூகினியா, நியூசிலாந்து முதல் அமெரிக்கக் கண்டங்கள் வரையிலான பழங்குடிகளைப் பற்றிய ஆரம்பகாலப் பதிவுகள் பெரும்பாலும் மிஷனரிகளால் எழுதப்பட்டவை. அவை அம்மக்களை முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு கோணத்தில் மட்டுமே சித்தரிக்கின்றன. ஆகவே இன்றைய மானுடவியலாளர் அவற்றை முதல்நிலை ஆதாரமாகக் கொள்வதில்லை. மிகுந்த எச்சரிக்கையுடனேயே அவற்றில் உள்ள தரவுகளை கையாள்கிறார்கள்.

கால்டுவெல் முதல்  மாற்கு வரையிலான ஆராய்ச்சிகளை அத்தகைய மிஷனரி வரலாற்றை சார்ந்தவை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். முனைவர்.பத்மாவதி ,  மு.நடராஜன் போன்றவர்களின் ஆய்வையே மானுடவியல் ஆய்வுக்கான மதிப்பை அளித்து முதலிநிலை ஆதாரமாகக் கொள்ள வேண்டும்

மிஷனரி ஆய்வாளர்களின் அடிப்படை நோக்கமே அவர்களின் மனநிலையையும் அவர்களின் கோணத்தையும் தீர்மானிக்கிறது. அவர்களைப்பொறுத்தவரை அவர்கள் மெய்ஞானம் பெற்றவர்கள், மீட்கப்பட்டவர்கள். மறுதரப்பில் அவர்கள் எதிர்கொள்ளும் மக்கள் ஞானம் இல்லாதவர்கள், மீட்கப்படாதவர்கள். அவர்களை மீட்பதையும் அவர்களுக்கு தங்கள் மெய்ஞானத்தை அளிப்பதையும்தான் தங்கள் புனித கடமையாக நினைத்து அவர்கள் செய்கிறார்கள். அவர்கள் அம்மக்கள் நடுவே செல்வதும் அவர்களை ஆராய்வதும் அதற்காகவே.

ஆகவே அந்த மக்களின் பிணிகளை நீக்கவும், அவர்களுக்குக் கல்வி அளிக்கவும், அவர்களின் உரிமைகளுக்காகப் போராடவும் அவர்கள் முயல்கிறார்கள். அதன்பொருட்டு அவர்கள் உயிரிழக்கவும் துணிகிறார்கள். அந்த மாபெரும் மானுடநேயத்தை நாம் பார்க்கிற அதே நேரத்தில் அந்த மக்களின் பாரம்பரியத்தை இழிவாக அவர்கள் எண்ணுவதையும் காண்கிறோம். அப்படி இழிவாக  எண்ணாவிட்டால் அவர்களை மீட்கும்பொருட்டு அந்தப் பணியை அவர்களால் ஆற்ற முடியாதென்பதே அதற்கான காரணமாகும்

மாற்குவின் நூலுக்கு வருகிறேன். அந்நூலில் ஏராளமான தகவல்கள் ‘சொன்னார்கள்’ என்ற அளவிலேயே உள்ளன. மாற்குவின் இந்து இந்தியப் பாரம்பரிய எதிர்ப்பு, உயர்சாதி எதிர்ப்புபாகியவற்ரை ஆதரிக்கும் எந்தத் தகவலையும் அவர் மேற்கொண்டு விசாரிக்காமல் அப்படியே ஒரு தரவாக பதிவுசெய்து விடுகிறார். அப்படி அவர் அளிக்கும் ஒரு ‘சொன்னார்கள்’ தகவல்தான் வாஞ்சிநாதனின் சாதிவெறி பற்றிய தகவல். அதில் பிரிட்டிஷ்காரர் ஒருவர், அவர் கிறித்தவர், மீட்பராகக் காட்டப்படுகிறார் என்பது மட்டுமே அதற்குக் காரணம்.

அப்படி அவர் ‘பதிவு’செய்வது அயோத்திதாசர் நூலில் இருந்து திராவிடர் கழகம் எடுத்து துண்டுபிரசுரமாக வெளியிட்ட அதே மொத்தையான தகவல்தான். மேலதிக ஆதாரம் ஏதும் இல்லை.  இந்த ‘ஆய்வுகள்’ வேடிக்கையானவை. முதலில் ஒருவர் ஒரு கதையை உருவாக்குகிறார். அதை ஒருநூலில் எழுதினால் அந்தக்கதை நூறு நூல்களில் மேற்கோள் காட்டப்படும். ஒரு நூல் இன்னொரு நூலை மேற்கோள்காட்டினாலேயே அந்த கருத்து ஆதாரபூர்வமானதாக ஆகிவிடும்!

ஆஷ் துரையின் கொலை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஒரு செயல். அந்த எதிர்ப்புணர்வை மழுங்கடிக்க பிரிட்டிஷ் தரப்பிலிருந்தும் முயற்சிசெய்யப்பட்டிருக்கலாம். ஆஷ் ஒரு நியாயவான் என்று காட்டும் கதையின் ஊற்றுமுகம் அதுவாகவே இருக்கும். ஏன் என்றால் திருநெல்வேலியின் அப்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவ்வாறு சாதிய ஒழிப்பு , சமூக சீர்திருத்தம் என எதுவுமே செய்யப்பட்டதில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமான, சாதிவெறியர்களான, ஜமீந்தார்களின் ஆட்சி அப்போது நிலவியது. வெள்ளையர்கள் அவர்களுக்குமேல் தங்கள் நிதிவசூல் அதிகாரத்தை மட்டுமே செலுத்தி வந்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால் பிரிட்டிஷ் அரசு இந்திய உற்பத்திமுறைகளில் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்று சாதிய அடக்குமூறை அமைப்பை எவ்வகையிலும் கலைக்க மனமில்லாமல் இருந்தது. அந்த மனநிலைக்கு எதிராக மீண்டும் மீண்டும் மிஷனரிகள் போராடுவதை நாம் காணலாம். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மதம் மாறிய தாழ்ந்த சாதியினருக்கு மட்டுமாவது சாதிய அடிமைக்கடமைகளில் இருந்து விலக்கு அளிக்கும்படி பாதிரிமார்கள் கோரிக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

பிரிட்டிஷாருக்கு இந்தியர்களில் சாதிவேறுபாடு இல்லை, ஆகவே அவர்கள் அனைவரையும் சமமாக நடத்தினார்கள்.  கிறித்தவ சபைகள் மிகச்சிறிய அளவில் அவர்கள் தலித்துக்களை மதம் மாற்றியதைவிட்டால் அவர்களுக்காக எதுவுமே செய்யவில்லை. அவர்களின் கவனம் எல்லாமே நாடார் சாதியைச் சார்ந்தே இருந்தது. தலித்துக்களை மதம் மாற்றினால் நாடார்கள் வராமல் போய்விடுவார்கள் என்ற அச்சமும் நிலவியது.

நெல்லையில் சாதிய அமைப்புக்கு எதிரான முதல் சலனம் என்பது காந்தியின் ஹரிஜன இயக்கம் மூலமே நிகழ்ந்தது. திருச்செந்தூர் ஆலயப்பிரவேசம் ஒரு பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. ஹரிஜன மக்களின் உரிமைகள் அப்போதுதான் முதல்முறையாகப் பேசப்பட்டன.ஆனால் நெல்லையில் காங்கிரஸ¤ம் சுதந்திரப்போராட்டமும் பிறபகுதிகளில் நடந்த அளவு தீவிரம் பெறவில்லை. ஆகவே மற்ற இடங்களில் நடந்த மாற்றங்கள் அங்கே நடக்கவில்லை

நெல்லை மிகவிரைவிலேயே பிற்படுத்தப்பட்ட சாதிகளின் அரசியலுக்கு திராவிட இயக்கங்கள் வழியாகச் சென்று சேர்ந்தது. ஆகவே காங்கிரஸின் ஹரிஜன இயக்கத்தால் தொடங்கப்பட்ட சமத்துவக்கோரிக்கை ஒருசில வருடங்களில் அப்படியே அடக்கப்பட்டது.  தமிழகத்தின் பிறபகுதிகளில் இல்லாத அளவுக்கு இங்கே தலித் ஒடுக்குமுறை நிலவியது. திராவிட இயக்கத்தின் தூண்களாக இருந்த, இருக்கும் பிற்படுத்தப்பட்டோர்தான் அதற்குக் காரணம்.

இன்னும் ஒரு விஷயம் என்னவென்றால் கிறித்தவ மதத்திலும் பிற்படுத்தப்பட்டவர்களே இருந்தார்கள். அங்கும் உச்சகட்ட தலித் அடக்குமுறை நிலவியது. இந்தியாவில் வேறெங்கும் இல்லாதபடி கிறித்தவ தேவாலயங்களில் கூட நடுவே சுவர் கட்டி தாழ்த்தப்பட்டவர்களை தனியே விட்டு அவர்கள் தங்கள் கண்களிலேயே படாதபடி வழிபட்டனர் கிறித்தவர்கள். பின்னர் தனி தேவாலயங்களை அமைத்துக்கொண்டனர். [சாதிக்கு எதிராக ‘கொதித்தெழுந்த’ ஆஷ் துரை ஏன் கத்தோலிக்க தேவாலயங்களின் சுவரை இடிக்கச் சொல்லவில்லை என மாற்கு ஆராய்ந்து பார்க்கலாம். அல்லது பகடைப்பெண்ணை ஒரு தேவாலயத்துக்குள் கொண்டு வர அவர் முயன்றிருக்கலாமே] இந்த காரணத்தால்தான் இங்குள்ள தலித்துக்கள் முஸ்லீம் மதத்துக்கு மாற முடிவெடுத்தனர். மீனாட்சிபுரம் சம்பவங்கள் சிலருக்கு நினைவிருக்கலாம்.

பின்னர் 1980களில் தலித் இயக்கங்கள் உருவாகி வந்த பின்னர்தான் மீண்டும் சமத்துவத்துக்கான கோரிக்கைகள் உருவாகி வந்தன. அவை மிகமிகக் கடுமையாக பிற்படுத்தப்பட்ட சாதியினரால் எதிர்கொள்ளப்பட்டன. விளைவாக எண்பதுகள் முதல் இருபதுவருடம் தொடர்ச்சியான சாதிக்கலவரங்கள் இப்பகுதியில் நடந்தன. இப்போது தலித் இயக்கங்களும் வலுவாகவே வேரூன்றிவிட்டிருப்பதனால் அதிகாரச் சமநிலை உருவாகிவிட்டிருக்கிறது. தலித்துக்கள் ஆட்சியதிகாரத்தில் தங்கள் பங்குக்காக குரலெழுப்புகிறார்கள்.

இதிலும் நுட்பமான உட்சிக்கல் உள்ளது. இங்கே தலித்துக்களில் பெரும்பாலானவர்கள் மள்ளர்கள் அல்லது தேவேந்திரகுல வேளாளர்கள். இவர்களே தலித் அரசியலை முன்னெடுக்கிறார்கள். இவர்களின் கண்ணில் பகடைகள் கீழ்த்தளத்தில்தான் இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டின் பலன் பகடைகளுக்கு வருவதில்லை. ஆகவே சமீபகாலமாக அவர்கள் உள் ஒதுக்கீடு கேட்கிறார்கள். அவர்களின் கோரிக்கையை மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சி வலுவாக முன்னெடுக்கிறது. தேவேந்திரகுல வேளாளர்களின் புதிய தமிழகம் அதை எதிர்க்கிறது

இதுதான் சூழல். இந்த அதிகாரச்சமரில்  உயர்சாதி என்றொரு தரப்பே இல்லை. செயற்கையாக அதை உருவாக்க முயலும் ஓர் அரசியல் உத்தியே மாற்கு போன்ற மிஷனரிகளும் திராவிடர் கழகத்தினரும் வாஞ்சி எதிர்ப்பு வழியாக செய்வது. அது தங்கள் சாதிய நோக்குகளை, ஆதிக்க நோக்குகளை மறைத்துக்கொள்ளும் தந்திரம் அன்றி வேறல்ல

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தி என்ற பனியா – 3
அடுத்த கட்டுரைநாசாவில் சனி