வகுப்புவாதம் -ஒருகடிதம்

ஜெயமோகன்

மூலம் மகாபாரதம் காவியம் முழுமையாக படிக்கும் வாய்ப்பு .இருந்தாலும் நிறைய குழப்பம் நீடிக்கிறது அவ்வப்போது . பிரச்சனை இதுவல்ல . எல்லோருக்கும் தெரிந்த ,டி‌வி யில் தொடராகவும் வந்த ,நிறையபேர் பல விதங்களில் எழுதிய ,ஒரு கதையை தினம் ஒரு அத்தியாயம் என்று பத்து வருட திட்டத்தில் ,உழைப்பில் நீங்கள் மீண்டும் இதை எழுத வேண்டுமா ?இதை எழுத அப்படியென்ன அவசியம் உங்களுக்கு ?இதன் நோக்கம் என்ன ?

இதனால் உங்கள் நேரம்வீணாவதுடன் இந்த தொடருக்கான சந்தேகம்,கேள்விகளுக்கான பதில் சொல்லல் என்றும் இதுக்கே முழுமையாக நீங்கள் மெனக்கெட வேண்டியிருக்கும். இதனால் மற்ற வேறு நல்ல படைப்புகள் நீங்கள் எழுதாமல் போகும்படி ஆகுமே ? மேலும் இலக்கிய கட்டுரைகள் ,இலக்கியம் இன்ன பிற கேள்விகளுக்கான பதில் சொல்ல முடியாமை என்று எல்லாமே இல்லாமல் ஆகும்வாய்ப்பும் உள்ளதே . இது பற்றியெல்லாம் நீங்கள் யோசித்தீர்களா ..?

ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்,கோவை .

அன்புள்ள ஃபிர்தௌஸ்

வேறு கட்டுரைகள் மட்டுமல்ல வேறு நாவல்களைக்கூட எழுதமுடியும் என்றே நினைக்கிறேன். எழுதுவதில் உள்ள உழைப்பு ஒரு விஷயமே அல்ல. எழுதுவதற்கான தூண்டுதலே முக்கியமானது. எழுதும்போதுதான் அது இருக்கிறது. அதாவது ஒரு நாவலை எழுதும் உற்சாகம் இருக்கையில் ஒரு கட்டுரையை எழுதுவது இருபதுநிமிடவேலை

இதிகாசங்களை கம்பனும் காளிதாசனும் திருப்பி எழுதியிருக்கிறார்கள். இந்தியாவின் நவீனப்படைப்பாளிகள் நூற்றுக்கணக்கானவர்கள் எழுதியிருக்கிறார்கள். இதிகாசங்களையும் தொன்மங்களையும் மறு ஆக்கம் செய்வதென்பது உலகமெங்கும் உள்ள வழக்கம். நவீனத்துவ காலகட்டத்துக்குப்பின்னர் அது புதுவடிவம் கொண்டுள்ளது

மகாபாரதம் சென்ற இருநூறாண்டுக்காலமாகவே உலகப்பேரிலக்கியங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. மானுடத்தின் காவியம் அது. மனிதவாழ்க்கையை ஒட்டுமொத்தமாகத் தொகுத்துநோக்கும் பெரும்படைப்பு. என் நோக்கில் மானுடம் அடைந்தவற்றில் அதுவே முதன்மையான இலக்கியம்.

இதை எழுத அப்படியென்ன அவசியம் உங்களுக்கு ?இதன் நோக்கம் என்ன ? — அவசியம், நோக்கம் எல்லாம் தெரியவில்லை. வாசித்தால் தெரியலாம்

ஜெ

*

கோவை விழாவில் உங்களை சந்தித்தது மிக மகிழ்வானது .

நீங்கள் பேசும் போது சொன்ன அந்த கதை மிக அற்புதமானது.தமிழில் வந்துள்ளதா ? மிக சிறப்பான விழா .வாசகர்களை நீங்கள் மதிக்கும் பண்பும் – சிறப்பும் போற்றுதலுக்குரியது . தொடர்ந்து கோவையில் மிக சிறப்பான இலக்கிய விழாவை நடத்துவதுக்கு அன்பான பாராட்டுகள் .

உங்கள் குழுவுடன் உரையாட ஒவ்வொரு முறை முனையும் போதும் ஏதாவது ஒரு குடும்ப விஷேசம் அதே நாளில் அமைந்து விடுகிறது . இம்முறை கேரளா .

ஆண்டுக்கு ஒரு முறை விஷ்ணுபுர விழாவில் மட்டும் சிறிது நேரம் ..சில வார்த்தைகள் …..இருந்தும் மறக்காமல் என்னை ஞாபகம் வைத்துள்ளமைக்கு மிக்க நன்றி .

உங்களிடம் நிறைய கேட்க -பேச உள்ளது . ஏற்கனவே ஒரு கடிதம் உங்களுக்கு எழுத்து தொடர்பாக எல்லாம் கேட்டும் ,நீங்கல்பதில் தரவே இல்லை .

இப்ப ஒரே ஒரு கேள்வி .

இன்னும் உங்களை இந்த்துவா ஆள் -ஆர்‌எஸ்‌எஸ் அடிவருடி -என்கிற கூற்று இருந்து கொண்டே இருக்கிறது . இதை அகற்ற ஏன் முனைப்பு காட்டாமலேயே இருக்கிறீர்கள் ..? இது பழைய கேள்வி என்று தள்ளி விட வேண்டாம் . தமிழின் மிக முக்கிய ஒரு உன்னத படைப்பாளி மீது தொடர்ந்து வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு – அல்லது வசை பொழியும் செயலுக்கு என்ன காரணம் …? இதை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வந்துள்ளதால் ,அல்லது ஏற்றுக்கொள்வதால்தான் …இது தொடருகிறது .

மேலும் ,இதற்கு தகுந்தால் போல உங்கள் பயணங்களில் கோயில் தொடர்பான இந்துத்துவ புராணங்களையே எழுதுகிறீர்கள் . ஏன் இப்படியான பார்வை உங்களுக்கு ..? ஒரு படைப்பாளி இப்படி இருப்பது சரியான செயலா ..? வேறு எந்த எழுத்தாளரும் இப்படி இந்துஞான மரபு உணர்வுடனேயே எழுதிக்கொண்டு இருப்பதில்லை ..?

இதை ரொம்ப நாளாகவே கேட்க நினைத்திருந்தேன் .இம்முறை பதில் தருவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் ……..
தங்கள் அன்பு மிக்க ,
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

அன்புள்ள ஃபிர்தௌஸ்,

விழாவுக்குவந்தமைக்கு நன்றி. சந்தித்ததில் மகிழ்ச்சி.

என் மீது நான் மனநோயாளி என்ற குற்றச்சாட்டுதான் அதிகமாக இருக்கிறது. கூகிள் இட்டால் அதுதான் முதலில் வருகிறது. அதை அகற்ற நான் முனைப்பு காட்டினால் மேலும் மனநோயாளி என்றுதான் சொல்லப்படுவேன் இல்லையா?

நான் யார் என்பதை என் எழுத்துக்கள் திட்டவட்டமாகவே முன்வைக்கின்றன என நினைக்கிறேன். என் வாசகர்கள் அவற்றைக்கொண்டுதான் என்னைப்பற்றி முடிவுசெய்வார்கள். அவற்றுக்கு வெளியே உள்ள முத்திரைகளை நான் பொருட்படுத்தவில்லை.

உங்கள் கேள்வியில் உள்ள ஒரு சிக்கலை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். நான் செய்யும் பயணங்களைப்பற்றிச் சொன்னீர்கள். நான் சென்ற சிலவருடங்களாகச் சென்றபயணங்கள் சமணமையங்களுக்கும் பௌத்தமையங்களுக்கும்தான். அவை இந்துக்கோயில்கள் அல்ல.அவற்றை நீங்கள் ஒட்டுமொத்தமாக ‘இந்து’ என்று நினைக்கிறீர்கள்.

மேலும் கோயிலுக்குச் செல்வது, அவற்றைப்பற்றி எழுதுவது, ‘இந்து’ மரபு பற்றி எழுதுவது எல்லாமே இந்துத்துவா என்றும் நவீனப்படைப்பாளி இவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்றும் நினைக்கிறீர்கள். இந்துஞானமரபை அறிந்திருப்பதும் ஆராய்வதும் அதன்பின்னணி கொண்டு எழுதுவது முற்றிலும் தேவையற்றது என்றும் தவறானது என்றும் நினைக்கிறீர்கள்.

இந்திய, இந்து பண்பாட்டையும் ஞானமரபையும் ஒட்டுமொத்தமாக நீங்கள் எப்படி முத்திரைகுத்துகிறீர்கள் என்று பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது. சமகால எழுத்தாளர்கள் அனைவரும் அவற்றை முழுமையாக உதறவேண்டும் என்றும் இல்லையேல் அவர்களை வகுப்புவாதிகள் என்றும் சொல்வீர்கள் என்றும் குறிப்பிடுகிறீர்கள்.

இந்துஞானமரபு என்பது இந்துத்துவ அரசியலே என்ற எளிய சமவாக்கியத்தில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள்.இந்தியாவின், இந்து மரபின் அனைத்து ஞானச்செல்வங்களையும் துறந்த ஒரு மதச்சார்பின்மையே இங்கு தேவையான அறிவுஜீவித்தனம் என நீங்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறீர்கள்

நண்பரே,பலவருடங்களாக உங்களை அறிந்தவன் என்றமுறையில் உங்கள் இஸ்லாமியநம்பிக்கை அதில் சேராது என்று நீங்கள் எண்ணுகிறீர்கள் என்றும் எனக்குத்தெரியும்.

இம்மனநிலையை சற்றேனும் மறுபரிசீலனைசெய்ய வேண்டியவர் நீங்கள்.

இந்தியாவின் 90 சத பெரும்படைப்பாளிகள் இந்தியப் பண்பாட்டில் இருந்து எழுபவர்கள். இந்துமெய்ஞானமரபை வேர்வெளியாகக் கொண்டவர்கள். உங்கள் கண்களில் அவர்களெல்லாம் வகுப்புவாதிகளாகவே இருப்பார்கள். ஆனால் அந்தவரிசையில் நிற்கத்தான் என்க்குப்பிரியம்.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 15
அடுத்த கட்டுரைமகாபாரதம் மறுபுனைவின் வழிகள்