வாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி

22 வருடங்களுக்கு முன்பு குற்றாலத்தில் இருந்து தென்காசிக்கு பேருந்தில் வரும்போது ஒரு குழு பேருந்தில் ஏறி ஒரு துண்டுப்பிரசுரத்தை எல்லாருக்கும்  அளித்தது. அது மணியாச்சி ரயில்நிலையத்தை வாஞ்சிநாதன் பேருக்கு மாற்றவேண்டும் என்று குமரி அனந்தன் முதலியோர் கோரிக்கை விடுக்க அதை மத்திய அரசு பரிசீலித்து வந்த காலகட்டம். அதற்கு எதிராக திராவிடர் கழகத்தினர் வெளியிட்ட துண்டுப்பிரசுரம் அது.

அதில் வாஞ்சியின் செயலின் நோக்கமென்ன என்று ஆராய்ந்திருந்தார்கள். தென்காசி அருகே உள்ள கடையம் அக்கிரஹாரத்தில் ஆஷ் துரை குதிரையில் செல்லும்போது ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண் பிரசவ வலியால் துடிப்பதைக் காண்கிறார். அவளை உடனடியாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்ல அவர் முயன்றபோது அக்ரஹாரம் வழியாகச் செல்லக்கூடாது என பிராமணர்கள் தடுக்கிறார்கள். துப்பாக்கியைக் காட்டி மிரட்டி வழி எடுத்து ஆஷ் துரை வளை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்.

இந்த ‘ அடாத செயலுக்கு’ பழிவாங்கவே வாஞ்சி ஆஷ் துரையை சுட்டுக்கொன்றார் என்று அந்த துண்டுபிரசுரம் சொன்னது. அவர் தன் சட்டைப்பைக்குள் வைத்திருந்த கடிதத்தில் ஆங்கிலேயரை மிலேச்சர் என்றும் ஜார்ஜ் மன்னரை பஞ்சமன் அல்லது பறையன் என்றும் வசைபாடியிருந்தார் என்றும் அதில் இருந்தது.

எனக்கு அந்தப் புதிய கதை ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அந்தப்பேருந்தில் என்னருகே இருந்தவர்கள் இருவர் உடனடியாக அதை ஆதரித்து இருந்தாலும் இருக்கும் என்று பேச ஆரம்பித்தது அதைவிட ஆச்சரியம் அளித்தது. அந்த புதிய கதைக்கு எந்த விதமான ஆதாரத்தையும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களின் சாதிச்சார்பு உடனடியாக அந்த கதையை ஏற்க வைத்தது. அது பிராமணர் குடியிருப்பு அல்லாமல் தேவர் குடியிருப்பு என்றிருந்தால் தேவர்கள் அதற்கு ஆதாரம் கேட்டிருப்பார்கள்.

பின்னர் இந்தக்கதையை பல ஊடகங்களில் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒருவர் கூட ஒரு இடத்தில்கூட ஆதாரம் கேட்கவில்லை, அளிக்கவில்லை. ஏன், இந்தக்கதையின் நாயகனாகிய ஆஷ் துரையைப்பற்றிக்கூட ஒரு சித்திரம் உருவாக்கப்படவில்லை. அவரது மனிதாபிமானம் எத்தகையது என்பதற்காக ஒரு சிறிய சான்றுகூட உருவாக்கப்படவில்லை.

பின்னர் அந்தக் கதையின் மூலத்தை நானே கண்டேன். அயோத்திதாசப் பண்டிதர்தான் இந்தக் கதையைச் சொல்கிறார். நிகழ்ச்சி நடந்து ஒருமாதத்துக்குள் அவர் தன் இதழில் எழுதிய குறிப்பில் இதைச் சொல்கிறார். அப்போது அவர் கர்நாடகத்தில் கோலாரில் இருந்தார். அவருக்கு இங்கே நடக்கும் நிகழ்ச்சி ஏதும் தெரிய நியாயமில்லை.

ஒருவகை வன்மத்துடன் வெள்ளைய ஆட்சியை ஆதரிக்கும் போக்கை நாம் அயோத்திதாசரின் கட்டுரைகளில் காணலாம். அந்த வன்மத்துடன் தான் இந்தக் கதையையும் சொல்கிறார். இதையும் ஓரிரு வரிகளில் ‘இப்படிக் கேள்விப்பட்டேன்’ என்று சொல்கிறார். ஆஷ் மட்டுமல்ல எல்லா வெள்ளைக்காரர்களுமே மனிதாபிமானிகள், நல்லவர்கள் என்பதே அவரது கொள்கை. ஆஷ் துரை செய்த இந்த கருணைச்செயலை முன்பு அவர் பதிவுசெய்யவில்லை. கொலையை மாபெரும் பாதகமாகச் சித்தரித்து மொத்த புரட்சியாளர்களையும் கடுமையாக கண்டிக்கும்போது ஆஷ் துரை கொல்லப்பட்டமைக்கு இதுவே காரணம் என்கிறார்.

இந்தக்கதையை இதற்குப் பின்னரும் எவரும் நிரூபிக்க முற்படவில்லை. ஆனால் ஒரு உண்மைச்சம்பவம் போல திராவிடர் கழக பேச்சுகளில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். சம்பவம் நடந்த இடம் மட்டும் கதைகளில் மாறிக்கொண்டே இருப்பதைக் காணலாம். ஐந்தாம் ஜார்ஜ் மன்னரை அன்றைய பாடப்புத்தக பாணியில் ‘ஜார்ஜ் பஞ்சமன்’ என்று வாஞ்சி சொல்கிறார், அதைத்தான் சாதியக்குறிப்பாக மாற்றிவிட்டார்கள்.

ஆனால் இங்கே கவனிக்கவேண்டிய திருப்பம் ஒன்றுண்டு. அயோத்திதாசர் வாஞ்சியையும் பாரதியையும் கண்டிக்கும் அதே வேகத்துடன் அதே மாதிரியான உயர்சாதிவெறியராகத்தான் வ.உ.சிதம்பரம்பிள்ளையையும் சொல்கிறார். பிரிட்டிஷார் இந்தியாவுக்கு நல்லாட்சி அளிக்கையில் அதைக் கவிழ்க்கும் முகமாக தீய நோக்குடன் கப்பல் வணிகத்தை ஆரம்பித்தார் வ.உ.சி என்று எழுதுகிறார். அதை கொடும் ராஜதுரோகம் என்று கண்டிக்கிறார்.ஆனால் வ.உ.சிக்கு மணிமண்டபம் கட்டப்பட்டபோது, அவர் பேரில் மாவட்டம் அமைந்தபோது, தி.கவினர் எவரும் அயோத்திதாசரை மேற்கோள் காட்டி அவரை பழித்து துண்டு பிரசுரங்கள் அச்சிடவில்லை.

ஆ.இரா.வேங்கடாசலபதி காலச்சுவடு இதழில் எழுதிய ஆஷ் துரை பற்றிய கட்டுரை[ http://www.kalachuvadu.com/issue-118/page12.asp]  ஆஷ் துரையின் ஆளுமை மற்றும் அக்காலச் சூழல் ஆகியவற்றை கூர்ந்து ஆராய்ந்து தெளிவான ஒரு சித்தரிப்பை அளிக்கிறது. திருநெல்வேலியில் நடந்த சுதந்திரப் புரட்சி என்பது அன்று திலகர் தலைமையில் இந்திய அளவில் உருவாகியிருந்த தீவிரவாதப்போக்கை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முதிரா முயற்சி.

ஆனால் அது அந்த உணர்ச்சிகளை வளரவிடும் வாய்ப்பு கொண்டது. ஏனென்றால் நெல்லைக்கு அத்தகைய வரலாற்றுப்பின்புலம் உண்டு. கட்டபொம்மு நாயக்கர், பூலித்தேவன் போன்ற கிளர்ச்சிகள் மக்கள் நெஞ்சில் இருந்தன. போர்மறவர்களான தேவர்கள் நிறைந்த பூமி. தீவிரவாதிகள் பெரும் ஆள்பலத்தையும் ஆயுதபலத்தையும் திரட்டிவிட்டார்கள் என்று உளவுச்செய்திகள் இருந்தன

அதனால் அஞ்சிய பிரிட்டிஷ் அரசு பெரும் பலத்துடன் அந்த தொடக்கத்தை முளையிலேயே கிள்ளியது. அந்த அடக்குமுறைக்கு முன்னின்ற அதிகாரிகளில் விஞ்ச் துரையும் ஆஷ் துரையும் முக்கியமானவர்கள். விஞ்ச் துரை தான் முக்கியமான இலக்காக இருந்தார், ஆனால் அவர் முன்னதாகவே நெல்லையைவிட்டுச் சென்றுவிட்டார். ஆஷ் துரை கொல்லப்பட்டார். ஆஷ் கொல்லப்பட்டது ஒரு தற்செயல்தான். தீவிரவாதிகள் ஒரு எச்சரிக்கை கொடுக்க நினைத்தார்கள், ஆஷ்தான் இருந்தார்.

நெல்லைக்கிளர்ச்சி உண்மையில் பெரிய ஒரு இலட்சியக்கனவுடன் ஆரம்பிக்கப்பட்டது.  வாஞ்சியின் கடிதத்திலேயே அந்த கனவு இருக்கிறது, ‘ஆயிரக்கணக்கானவர்கள் பிரதிக்கினை எடுத்திருக்கிறோம்’ என்று அவர் உண்மையிலேயே நம்பியிருக்கலாம். ஆனால் அது நடைமுறை ஞானம் இல்லாதவர்களின் கத்துக்குட்டித்தனமான முயற்சியாகவே இருந்தது.

ஆஷ் கொலை என்பது வெறும்கனவாகப்போன அந்த தீவிரவாதக் கிளர்ச்சியின் கடைசி துள்ளல். மிகவும் பலவீனமானது, அபத்தமானது. அந்தக்கொலைக்குப் பின்னர் ஆங்கில ஆட்சி தொடர்ந்த அடக்குமுறைகளின் விளைவாக 1947ல்  இந்திய சுதந்திரம் கிடைக்கும் வரை நெல்லையில் எந்த போராட்டமும் நடக்கவில்லை. அதுதான் வாஞ்சி உருவாக்கிய விளைவு.

ஆஷ் பிரிட்டனின் ஒரு எளிய அதிகாரி. அன்று ஒரு பிரிட்டிஷ் அதிகாரி இந்தியர்களைப்பற்றி என்ன எண்ணம் கொண்டிருப்பாரோ அந்த எண்ணமே அவருக்கும் இருந்திருக்கும். அன்று ஒரு பிரிட்டிஷ் அதிகாரி என்ன செய்தாரோ அதையே அவரும் செய்திருப்பார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின் ஒரு அடிப்படை அலகு, அவ்வளவுதான். அதற்காக அவர் கொலையுண்டதென்பது ஒரு அநீதியே.

இந்தியாவில் எந்த பிரிட்டிஷ் அதிகாரியும் மனிதாபிமானம் கொண்டு இந்தியாவின் சாதிசமூக அமைப்புக்குள் தலையிட்டதாகவோ மாற்றங்களைச் செய்ததாகவோ சரித்திரம் இல்லை. சட்டம் ஒழுங்கு, வரிவசூல் இரண்டுக்கும் பாளையக்காரர்களையும் ஜமீன்தார்களையும் குறுநில மன்னர்களையும் நம்பியிருந்தார்கள் அவர்கள். அவர்கள் செய்த எல்லா சாதியக் கொடுமைகளையும் அவர்கள் மறைமுகமாக அங்கீகரிக்கவே செய்தார்கள்.

ஆஷ் துரையின் வேர்களை தேடிச்செல்லும் ஆ.இரா.வெங்கடாசலபதி அவரை  கடுமையான ஏகாதிபத்தியக் கொள்கை கொண்டவராகவும் அதே சமயம் எளிய தனிமனிதராகவும் அடையாளம் காண்கிறார். ஆஷ் துரையின் முகம் கடந்த காலத்தின் எத்தனையோ முகங்களைப்போல வரலாற்றின் கறைபடியாததாக உள்ளது.

அசலான ஆய்வுகள் அருகி வரும் சூழலில் ஆ.இரா.வேங்கடாசலபதியின் இந்த தேடலும் ஆய்வும் மிக மிக பாராட்டத்தக்கது. ஆதாரபூர்வமான உண்மைச்சித்திரம் ஒன்றை அளித்துவிட்டு முடிக்கும்போது அயோத்திதாசரின் கதையையும் திராவிடகழக இயக்கத்தின் பிரச்சாரத்தையும் மெல்ல மறுத்து, செல்லமாகத் தொட்டுச் செல்கிறார்.  இதுவே ஒரு ‘பார்ப்பன திரிபாக’ இருந்திருந்தால் திராவிட இயக்க ஆதரவாளரான வேங்கடாசலபதியின் மொழி எந்த அளவுக்கு கூர்மை கொண்டிருக்கும் என எண்ணிக்கொண்டேன்

ஆஷ் அடிச்சுவட்டில்

முந்தைய கட்டுரைகாந்திக்குமா…கடிதங்கள்
அடுத்த கட்டுரைகிறித்தவ தசரா;கடிதங்கள்