ஆனால் காந்தி ஒரு சாராசரி பனியாவா? இன்று சில தரப்புகளால் அவர் ஒரு பனியா, பனியா மட்டுமே என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை?
காந்தி தன்னை ஒரு சனாதனி என்று சொல்லிக்கொண்டவர். சனாதனமான [தொன்மையான] தன் மரபில் உள்ள சிறந்தவற்றை மட்டுமே அவர் அப்போது உத்தேசித்தார். ஆனால் அவரது வாழ்க்கையைக் கவனித்தால் எப்போதுமே அவர் மரபுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து வாழ்ந்தவரல்ல என்பதைக் காணலாம். மிக இளம் வயதிலேயே அவர் தன் தோழரின் பேச்சை நம்பி உடல்வலிமைக்காக மாமிசம் உண்டார். அது அவரில் இருந்த மீறும் தன்மையையே காட்டுகிறது.
ஒரு சராசரி மனிதன் தனக்கு தன் மரபு என்ன கொடுத்ததோ அதை அப்படியே ஏற்றுக்கொள்பவன். சாதி என்பது அவனுக்கு அவனுடைய மாற்றமுடியாத அடையாளம். அதன் ஆசாரங்கள் அவனுடைய வாழ்க்கையை தீர்மானிப்பவை. இப்போது நாம் பொதுபேச்சுகளிலும் மேடையிலும் சாதியை மறைத்துப்பேசக் கற்றுக்கொண்டுவிட்டோம். ஆனால் நம் அந்தரங்கம் இப்போதும் அதே வழியில்தான் முன்னகர்கிறது. காந்தியின் காலகட்டத்தில் இன்றைய இடக்கரடக்கல்கள் கூட தேவையில்லை என்ற நிலை நிலவியது.
ஆனால் காந்தியின் வாழ்நாள் முழுக்க அவர் தனக்கு தன் மரபு அளித்த சாதி, மத அடையாளத்துடன் மோதிக்கொண்டே இருந்தார். சாதியை மரபு அவருக்கு அளித்த அர்த்தத்தில் ஒரு கணம் கூட அவர் ஏற்றுக்கொண்டதில்லை. அவருக்கு அதில் கடுமையான மாற்றுக்கருத்துக்கள் இருந்தன. ஏற்றத்தாழ்வுகளை அவர் ஒத்துக்கொண்டதில்லை.
அவரது வாழ்க்கையை அவர் அமைத்துக்கொள்ள ஆரம்பித்ததுமே ஒரு சராசரி இந்தியன் இன்றும்கூட நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றைச் செய்தார். தாழ்த்தப்பட்டவர்கள் உட்பட அனைவருமே சேர்ந்து வாழும் குடும்பம் ஒன்றை உருவாக்கினார். அதில் கழிப்பறை கழுவுவது உட்பட எல்லா வேலைகளையும் எல்லாரும் முறைவைத்து செய்யச்சொன்னார். அதில் தன் குடும்பத்தினரை ஈடுபடுத்தினார்.
அதேபோல காந்தி தன் மத அடையாளத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது மதம் குலதெய்வமான மோதாதேவி வழிபாடு, சமணம், வைணவம் கலந்த ஒன்று. அவர் தன் குலதெய்வ வழிபாட்டை எப்போதுமே செய்ததில்லை. சமணர்களின் இறுக்கமான ஆசாரங்கள் விரதங்களில் பெரும்பாலானவற்றை அவர் கடைப்பிடித்ததில்லை. உதாரணமாக சமணர்களுக்கு தேன்,பால், இரவில் உண்ணுவது இதெல்லாம் கடுமையாக விலக்கப்பட்டிருந்தவை. காந்தி அவற்றை விரும்பிச் செய்தார்.
விரிவான பொருளில் பிற்கால காந்தி ஒரு வைணவர். ஆனால் அவருக்கு வைணவத்தின் உருவ வழிபாட்டில் முற்றிலும் ஆர்வம் இருந்ததில்லை. அவர் கோயில்களை அசுத்தமான, நெரிசலான, அருவருப்பான இடங்களாகவே பார்த்தார். காந்திக்கு அவரது சமகாலத்து இந்து துறவிகள், மடாதிபதிகள், பக்தமகான்கள் எவர்மேலும் ஈடுபாடிருந்ததில்லை. சமூகசீர்திருத்த ஆர்வம் இல்லாத துறவிகளை அவர் சந்திக்க விரும்பியதே இல்லை.
வைணவரான காந்தி ஒரே ஒருமுறைதான் பிருந்தாவன் போயிருக்கிறார், அருவருப்புடன் திரும்பிவிட்டார். காந்திக்கு வைணவபுராண நூல்கள் எதிலுமே ஆர்வமோ குறைந்த பட்ச வாசிப்போ இல்லை. அவர் பாகவதத்தை காது கொடுத்து கேட்க முற்பட்டதில்லை. வைணவத்தின் அடையாளமான கிருஷ்ணலீலா பாடல்கள் அவரைக் கவரவில்லை. காந்திக்கும் அவர் காலத்து வைணவ மதத்தின் அமைப்புகளுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இருக்கவில்லை.
இந்த மனவிலகலுக்கான முதற்காரணம் காந்தியின் மனம் அவரே சொன்னது போல ஒரு இந்தியப் பாரம்பரிய மனம் அல்ல என்பதே. அப்படி இருந்திருந்தால் அது கங்கையைப் பார்த்து அருவருப்பு கொண்டிருக்காது. காசிவிஸ்வநாதர் கோயில் மனம் கூசியிருக்காது. அவையெல்லாம் ஒரு இந்திய மனத்துக்கு பிரம்மாண்டமான ஒரு பாரம்பரியத்தின் சின்னமாகவே தோன்றியிருக்கும். அந்த மனதுக்குள் உறைந்திருக்கும் பாரம்பரியத் தன்னடையாளம் பெருமிதம் கொண்டிருக்கும். கங்கைக்கரையில் அவர் மனம் விம்மி எழுந்திருக்கும், விவேகானந்தருக்கு தோன்றியது போல. சுபாஷ் சந்திர போஸுக்கு தோன்றியது போல.
காரணம் காந்தியின் மனம் என்பது நவீன ஐரோப்பாவில் உருவான ஒன்று. ஆகவேதான் இந்தியாவில் எங்கே போனாலும் காந்திக்கு அசுத்தம் மட்டுமே கண்ணில் பட்டது, ஒரு ஐரோப்பியன் இன்றுகூட இந்திய நிலத்தில் கால் வைத்தால் அதே உணர்ச்சியைத்தான் அடைவான். காந்தி இந்தியாவின் பாரம்பரியமான எல்லாவற்றையும் ஒரு சராசரி ஐரோப்பியன் கண்களால்தான் பார்த்தார், கடைசி வரை.
இந்த நிலத்தின் இயற்கை அவரை மகிழ்ச்சியுறச் செய்தது. ஆனால் இடிபாடுகளும் பழமையும் எந்தக் கனவையும் எழுப்பவில்லை.
இக்காரணத்தால்தான் அவரைச் சந்தித்த ஐரோப்பியர்கள் பெரும்பாலானவர்கள் அவரால் கவரப்பட்டார்கள். அவருடன் அவர்கள் மிக நெருக்கமானவர்களாக உணர்ந்தார்கள். அந்த நெருக்கத்தை நேருவுடனோ சுபாஷ்சந்திர போசுடனே அவர்கள் உணரவில்லை. ஐரோப்பியர்களின் தர்க்கமொழியில் பேசாத காந்தியை புரிந்துகொள்ள அவர்களுக்கு தடையேதும் இருக்கவில்லை.
இரண்டாவதாக, காந்தி எல்லாவற்றையும் புறவயமாக, தர்க்க பூர்வமாக, சோதனை செய்து பார்த்த பின்னரே ஏற்றுக்கொண்டார். அந்த மன அமைப்பும் ஐரோப்பியத்தன்மை கொண்டதே. ஆகவே சாதி, மதம் எல்லாமே அவருக்கு சோதனை செய்யப்பட வேண்டியவையாகவே பட்டன. எதையுமே அவர் மரபாகக் கிடைத்தது என்பதற்காக ஏற்றுக்கொள்ளவில்லை. வைணவத்தை அவரது குடும்பம் அவருக்கு கொடுத்த வடிவில் அவரால் ஏற்க முடியாது. அவர் அதை தன் போக்கில் பகுப்பாய்வு செய்தே ஏற்றுக்கொண்டார்.
சாதியை அவர் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டதுகூட அவரது மனம் ஐரோப்பியத்தன்மை கொண்டது என்பதனாலேயே. ஒரு இந்தியமனம் ஐரோப்பியன் சொன்னான் என்றோ, ஐரோப்பியன் என்ன நினைப்பான் என்று எண்ணியோ சாதி ஒழிக என்று தானும் சொல்லிவிடும். காந்தி ஐரோப்பிய கள ஆய்வு மனநிலையில் நின்று அது ஒரு சாதகமான அமைப்பாக இருக்கக் கூடும் என்று நம்பினார். பின்னர் அதிலிருந்து ஏற்றத்தாழ்வை பிரிக்கமுடியாதென அனுபவ பூர்வமாக உணர்ந்தபின் அந்த எண்ணத்தை நேர் எதிராக மாற்றிக்கொண்டார்.
காந்தி அவருக்கான வைணவத்தை அவரே தயாரித்துக்கொண்டார் என்றே சொல்லவேண்டும். அது பெரும்பாலும் கீதை என்ற நூலை மட்டுமே சார்ந்தது. அந்த நூலை எழுதிய ஞானாசிரியனாக மட்டுமே கிருஷ்ணனைப் பார்ப்பது. கீதையை காந்தி தன்னுடைய சொந்த வைணவத்துக்காக தன் நோக்கில் விளக்கிக் கொண்டார். ‘அனாசக்தி யோகம்’ என்று தன்னுடைய கீதை உரையை காந்தி அழைத்தார். கர்மயோக கோட்பாட்டை மட்டுமே கீதையிலிருந்து காந்தி எடுத்துக்கொண்டார் என்று சொல்லலாம். அதை மட்டுமே விரிவாக்கம் செய்து தன்னுடைய மதமாக ஆக்கிக்கொண்டார்.
அவர் மரபான பஜனைப்பாடல்களைக்கூட சாதாரணமாக தனக்காக மாற்றிக்கொள்வதைக் காணலாம். ‘ரகுபதிராகவ ராஜாராம்’ என்ற பாடலில் ‘ஈஸ்வர அல்லா தேரேநாம்’ என்ற வரி அவரது சொந்த வைணவத்தின் சமரச நோக்கின் இயல்பு. கைராட்டை சுற்றுவதையே ஒரு உயர்ந்த வகையான உபாசனையாக காந்தி முன்வைத்தார். காந்தியின் பக்தியில் சடங்குகளும் ஆசாரங்களும் முற்றிலும் இல்லை. பக்தி என்பது கைங்கரியமாக [சேவையாக] மட்டுமே வெளிப்படவேண்டும் என்றார்.
நரநாராயணர் [மனிதக்கடவுள்கள்] என்று அவர் சொன்ன எளிய மக்களுக்கான சேவையாக வெளிப்பட்ட இறை பக்தியை மட்டுமே காந்தி அங்கீகரித்தார் என்பதைக் காணலாம். மற்ற எந்தவகையிலான கிருஷ்ணபக்தியையும் அவர் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. ஆகவேதான் அவர் வாழ்நாள் முழுக்க கீதையைப் பற்றிப் பேசியபோதிலும் இந்தியாவின் வைணவ அமைப்புகள் எதுவுமே அவரை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை!
காந்தி தனக்காக உருவாக்கிய வைணவமதத்துக்கு கபீரின் மதத்துடன் உள்ள நெருக்கமான உறவு கவனிக்கத்தக்கது. கபீரும் நெசவுசெய்தார், காந்தி நூல்நூற்றதைப்போல! அவரும் இந்து முஸ்லீம் சமரச மதம் ஒன்றை உருவாக்க முயன்றார். உருவமில்லாத கடவுளை இருவருமே வழிபட்டார்கள். சேவையையே பக்தியின் ஒரே வெளிப்பாடாக இருவருமே எண்ணினார்கள்.
மொத்தத்தில் காந்தி அவரது மரபு அவருக்களித்த மதத்தை பின்பற்றியவரல்ல. தன் மதத்தை தானே உருவாக்கிக்கொண்டவர். அதே போல காந்தி தன் மரபின் எந்த ஒரு அடையாளத்தையும் இயல்பாக ஏற்றுக்கொண்டவர் அல்ல. சாதி அடையாளத்தை அவர் கூர்ந்து ஆராய்திருக்கிறார். பின்னர் திட்டவட்டமாக தன்னை ஒரு சூத்திரன் என்று அறிவித்துக்கொண்டார். இன்றைய யுகத்தில் அனைவருமே உடலால் உழைக்கும் சூத்திரர்களாக ஆகவேண்டும் என்று அறைகூவினார். அதை தன் வாழ்க்கையில் ஒவ்வொருநாளும் செய்தார். உடலுழைப்பு இல்லாத ஒருநாள் கூட தாண்டாமல் பார்த்துக்கொண்டார் காந்தி.
தன் வாழ்நாளில் எந்த ஒரு தருணத்திலும் தன்னை காந்தி பனியாவாக உணர்ந்தவரோ வெளிப்படுத்தியவரோ அல்ல. பனியாக்களின் தலைவராக அவர் எப்போதும் இருந்ததில்லை. அவர்களுக்காக அவர் வாதாடியதுமில்லை. மூவாயிரத்துக்கு மேற்பட்ட சாதிகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்திய மக்களின் தலைவராக மட்டுமே அவர் தன் அரசியல் வாழ்க்கை முழுக்க விளங்கினார். அவர்களுக்காக மட்டுமே பேசினார்.
தாங்கள் பிறக்க நேர்ந்த சாதிக்காக மட்டுமே பேசிய தலைவர்கள், அந்தரங்கத்தில் ஒருகணம்கூட சாதியைவிட்டு வெளியே வரமுடியாதவர்கள், தங்கள் சொந்த சாதிக்கு வெளியே மக்கள் நம்பிக்கையை பெறமுடியாது போனவர்கள்தான் பெரும்பாலான சமயங்களில் காந்தியை பனியா என்கிறார்கள். காந்தி பனியாவாகப் பிறந்தார். இந்தியாவின் ஒரேதலைவராக வாழ்ந்தார்.
ஆனால் பனியாப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்கள் அவரது ஆழ்மனத்தில் இருந்தன. அவை அவரது பாரம்பரியச் சொத்துக்கள். சமணமரபின் அகிம்சை மற்றும் சமரச மனப்பான்மை. பல்லாயிரம் வருடங்களாக வணிகம் மூலம் இந்த தேசத்தை இணைத்த சாதியின் பொறுமை, எல்லாவற்றையும் உலகியல் தளத்தில் வைத்தே அணுகும் நடைமுறைப்புத்தி. அந்த ஆழ்மனப்பண்புகளின் விளைச்சலே நாம் பெற்ற சுதந்திரம். நாம் இன்றும் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஜனநாயகம்.