சம்ஸ்கிருதச் சொற்கள்- வெண்முரசு

வெண்முரசில் சம்ஸ்கிருதச் சொற்களை எந்த அடிப்படையில் எழுதுகிறேன் என்ற வினா எழுந்தது. அனேகமாக ஒவ்வொருநாளும் சொற்களை ‘சரியான’ உச்சரிப்பில் திருத்தி எழுதி எனக்கு அனுப்புகிறார்கள்.

நண்பர்களே, நான் சம்ஸ்கிருதத்தின் எல்லா ஒலிகளையும் எழுதமுடிவதும், சொல்லப்போனால் அதற்கென்றே உருவாக்கப்பட்டு சம்ஸ்கிருதத்தின் அதே இலக்கணத்தையும் அனைத்துச் சொற்களையும் அப்படியே பயன்படுத்துவதுமான மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவன் என்றுமட்டும் சொல்லவிரும்புகிறேன்

தமிழின் உச்சரிப்பு அமைப்பும் ஒலி அமைப்பும் முற்றிலும் வேறு. ஆகவே சம்ஸ்கிருதத்தின் ஏராளமான உச்சரிப்புகளை தமிழில் எழுதமுடியாது.அதற்காகவே கிரந்த எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன.

ஆனால் சென்ற நூறாண்டுக்காலத்தில் கிரந்த எழுத்துக்கள் பெரும்பாலும் வழக்கொழிந்துவிட்டன. ஏனென்றால் அவை சம்ஸ்கிருதத்தை தமிழில் எழுதுவதற்கு மட்டுமே தேவையானவை. ஜ,ஷ,ஸ,ஸ்ரீ போன்ற சில எழுத்துக்களே உள்ளன. ஆகவே பழைய கிரந்த எழுத்துக்களை அள்ளிப்போட்டு எழுதுவது இன்றைய தமிழ் வாசகனை அன்னியப்படுத்தும்.

மிகையான கிரந்த உபயோகம் தமிழின் உச்சரிப்பு அமைதியை அழிக்கக்கூடும். ஆகவே எல்லைக்குட்பட்டே அவ்வெழுத்துக்களைப் பயன்படுத்தவேண்டிய நிலை இன்றுள்ளது.ஆகவே கூடுமானவரை தமிழிலும், தேவையான இடத்தில் இன்று நீடிக்கும் கிரந்த எழுத்துக்களிலும் எழுதுவதே சரியானது அதையே கடைப்பிடிக்கிறேன்

தமிழில் இன்று சம்ஸ்கிருதத்தை ‘சரியாக’ எழுத முயல்கிறோம் என்ற பேரில் எழுதுபவர்கள் பெரும்பாலும் ஒரு மணிப்பிரவாளத்தை செயற்கையாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்புகழ்பெற்றவர்கள் வலிந்து எழுதும் சம்ஸ்கிருத உச்சரிப்பேகூட பெரும்பகுதி பிழையானது என்பதே உண்மை.

மேலே சொன்ன சொற்களையே பார்ப்போம். ஸம்ஸ்க்ருதம் என எழுதலாம். அப்போதும் அந்த த வேறு. பெரிய த அங்கே வரும். தேவையான இடத்தில் ஸ போடலாம். ஆனால் சின்ன ஸ வேறு. சம்பு வில் உள்ள ஸ அது. அதை தமிழில் எழுதமுடியாது. ஆகவே சம்ஸ்கிருதமே போதுமானது. ஏறத்தாழ மூல உச்சரிப்பு வருகிறது. மீதி காதிலும் நாவிலும் உள்ளது.

க்ஷத்ரியஹ் என்று மூல உச்சரிப்பை எழுத முயல்வது அபத்தம். அதேசமயம் சத்திரியன் என எழுதினால் காதுக்கு மிகவிலகிச் செல்கிறது. எனவேதான் ஷத்திரியன் என எழுதுகிறேன்.

தக்ஷன் என எழுதாமல் தட்சன் என எழுதுவது தமிழில் அதை கூடுமானவரை சொல்லிவிடமுடிகிறது என்பதனாலேயே. பிருகத்காரன் என்றோ மகாபாரதம் என்றோ எழுதலாம். உச்சரிப்பு பெரும்பாலும் விலகுவதில்லை.

பீசுமர் என எழுதாமல் பீஷ்மர் என எழுதுவது அதனால்தான்.அந்த பீ என்பது பீடு என்பதில் உள்ள பீ அல்ல.f கலந்தது என பெரும்பாலும் அனைவரும் அறிவார்கள்.

இவ்வாறு பெரும்பாலான சொற்களுக்கு கூடுமானவரை மூலத்துக்கு அருகே செல்லக்கூடிய தமிழ் உச்சரிப்பை அளிக்கிறேன். வேறுபாட்டை சுட்டியாகவேண்டும் என்ற இடத்தில் கிரந்த எழுத்துக்கள் அல்லது ஃ மூலம் அதைச்சுட்டுகிறேன்.

எந்த மொழியும் உச்சரிப்பை முழுமையாக எழுதிவிடமுடியாது – அந்தமொழிச் சொற்களையேகூட அம்மொழி எழுத்துக்களால் முழுமையாக எழுதிவிடமுடியாது.காகம் என்ற சொல்லில் இரண்டாவது க வேறு என தெரியாத தமிழன் இல்லை. to வேறு go வேறு எனத்தெரியாத ஆங்கிலேயனும் இல்லை. சொல்வதில் உள்ள பழக்கமே சொற்களை உச்சரிக்கவைக்கிறது

பிறமொழிச் சொற்களை தமிழில் எழுதுகையிலும் சாத்தியமான வேறுபாடுகளைக் காட்டி எழுதுவதும் மீதியை உச்சரிப்பின் சாத்தியங்களுக்கு விட்டுவிடுவதுமே சரியானது என நினைக்கிறேன்.

சம்ஸ்கிருதம் என்றதுமே உச்சரிப்புசுத்தம் பற்றிப் பேச ஆரம்பிப்பது ஒருவகை மத-சாதிய மேட்டிமைத்தனமா என நாமே நம்மை பரிசீலனைசெய்துகொள்ளவேண்டும்.நாம் ஒருபடி மேல் என்று காட்டிக்கொள்வதற்காகவா என.

சம்ஸ்கிருதத்தில் உள்ள ஞானக்குவைகள் எனக்குப்பொருட்டல்ல, அது என் வெற்று அடையாளம் மட்டுமே என நினைப்பவர்களே எப்போதும் முதலில் இந்த உச்சரிப்புச்சிக்கலைத் கொண்டுவருகிறார்கள். அதேசமயம் உண்மையில் சம்ஸ்கிருத இலக்கியங்களை, ஞானநூல்களை ஆழ்ந்து கற்ற் மிகச்சிலர் கூட நம்மிடையே இல்லாத நிலையும் உள்ளது.

ஆகவே மூலச்சொற்களை புரட்டிப்பார்த்து எனக்கு எழுதியனுப்புவதை விடுங்கள். அப்படி எழுதியனுப்புபவர்கள் தாங்கள் சம்ஸ்கிருத அறிஞர்களா என்று மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். மகாபாரதத்தை ஒட்டி நான் விவாதிக்கவிரும்புவது எப்போதுமுள்ள இந்த உச்சரிப்பு-இலக்கண அக்கப்போர்களை அல்ல.

நான் மலையாளத்தில் எழுதினால் சம்ஸ்கிருத உச்சரிப்பை சரியாக எழுதுவேன். தமிழின் எல்லைகள் எனக்குத்தெரியும். தமிழின் மகத்துவம் அதன் தனித்துவமான ஒலியில் உள்ளது. அந்த ஒலியை அடைந்த நூல் என வெண்முரசுவைச் சொல்வேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஇணையமும் நம் சிந்தனையும்
அடுத்த கட்டுரைஇளவெயினியும் செல்வேந்திரனும்