காந்தி என்ற பனியா – 1

காந்திமீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எல்லாம் அவர் ஒரு பனியா என்பது மீண்டும் மீண்டும் வருகிறது. அவரது செயல்களை விமரிசிக்கும்போது பனியாப்புத்தி என்று சொல்கிறார்கள். தமிழிலேயே இந்தியதேசியத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் பார்ப்பன-பனியா ஆதிக்கம் என்று அவரை மனதில் கொண்டுதான் பேசுகிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காந்தி பனியாப்புத்தியைத்தான் அரசியலிலே காட்டினாரா?

சிவராம் சௌந்தரராஜன்

***

அன்புள்ள ஜெயமோகன்,

நான் உங்கள் காந்தியைப்பற்றிய கட்டுரைகளை ஆழமாக வாசித்து வருகிறேன். நான் இவற்றைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது என்னுடைய ஒரு மூத்த நண்பர் காந்தியில் ஈடுபாடு வந்தால் வியாபாரம் படுத்துவிடும் என்று சொன்னார். நான் கிரைண்டர் பாகங்கள் வியாபாரம் செய்கிறேன். அது உண்மையா என்ற சந்தேகம் எனக்கு வந்தது. காந்தியமும் வியாபாரமும் சேர்ந்து போகாதா? உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்

சந்திரசேகர்

***

அன்புள்ள சிவராம்,சந்திரசேகர்,

சமீபத்தில் காந்தியைப்பற்றி வந்த கட்டுரைகள் அளவுக்கு பரபரப்பாக எதுவுமே என் இணையதளத்தில் வாசிக்கப்பட்டதில்லை. கட்டுரைகள் மீது கடிதங்கள் வந்து குவிகின்றன. நீண்டபதில் என்றால் பலருக்கு சேர்த்து ஒரே கடிதமாக எழுதிவிடுகிறேன்.

நீங்கள் கேட்டபடி காந்தி பனியாப்புத்தியைத்தான் அரசியலில் காட்டினாரா? ஆமாம். அவரது அணுகுமுறை பனியா அணுகுமுறைதான். இரண்டாவது கேள்விக்கான விடையும் அதுவே. ஒரு மிகவெற்றிகரமான மூத்த பனியா அளவுக்கு உங்களுக்கு வணிகத்தில் வழிகாட்டியாக இருக்கக்கூடியவர் வேறு யார்?

காந்தியை பனியா என வசைபாடுகிறவர்களை நான் இந்த விவாதத்தில் கணக்கில் கொள்ள மாட்டேன். அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் அப்பட்டமான சாதியவாதிகள். அவர்களால் தங்கள் சாதியடையாளத்தையோ, சாதிப்பார்வையையோ கொஞ்சமும் துறக்க முடிந்ததில்லை. ஆகவே ஒவ்வொவரும் தங்கள் சாதிக்குள்தான் இருக்கிறார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆகவே ஒருவரை வசைபாட வேண்டுமென்றால் முதலில் அவர் சாதியைப்பற்றித்தான் பேசவேண்டும் என்று எண்ணுகிறார்கள். காந்தியைப் பற்றிய ஒரு விவாதத்தின் தரப்பாக ஆகும் தகுதியெல்லாம் அவர்களுக்கு இல்லை.

இந்தவிஷயத்தை உண்மையான அக்கறையுடன் ஆராய உங்களுக்கு ஆர்வமிருக்குமென்றால் சில விஷயங்களைக் கருத்தில்கொண்டு நாம் யோசிக்கலாம். ஒன்று ஒருவருடைய சாதி அவரது குணத்திலும் ஆளுமையிலும் என்ன வகையான விளைவுகளை , சாதகமாகவும் பாதகமாகவும், உருவாக்கும் என்பது. இரண்டு, சாதிக்கு ஏதாவது சமூகப்பங்களிப்பு உண்டா என்பது. மூன்றாவதாக, இந்திய வரலாற்றில் பனியா பண்பாடு என்பதற்கான வரலாற்றுப்பின்புலம் என்ன என்பது.

ஒருவருடைய சாதி அவர் பிறந்துவிழுந்ததுமே அவரைச் சூழ்ந்து கொள்கிறது. சாதியை எந்தவிதமான சமூகவியல் ஆராய்ச்சிமுறைமையும் இல்லாமல், அது ஒருசாராரால் இன்னொரு சாரார் மேல் திணிக்கப்பட்ட ஒரு அமைப்பு என்றும் அது ஒரு ஒடுக்குமுறைக் கருவி மட்டுமே என்றும் சொல்லிக்கொண்டிருக்கும் பழைய வாய்ப்பாடுகளுக்கு இந்த விவாதத்தில் இடமே இல்லை. அது இந்தியசமூகத்தில் மக்களுடைய பழங்குடி அடையாளத்தில் இருந்து உருவாகி வந்தது. நிலப்பிரபுத்துவம் உருவான காலத்தில் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு அதிகார அமைப்பாக ஆகியது.

இந்தியாவில் உள்ள கோடானுகோடி மக்களுக்கு அவர்களின் பாரம்பரிய அடையாளம் சாதி. அவர்களின் சுயத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான பண்பாட்டுக்கூறு அது. ஒருசாதி எந்த சமூகப்படிநிலையில் நின்றாலும் சரி, அந்த மக்களுக்கு அந்த அடையாளம் அவர்களின் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வடிவம்தான். அதனால்தான் அதை இழக்க அவர்கள் சம்மதிப்பதேயில்லை. நடைமுறையில் சாதியாகவே அம்மக்கள் திரளமுடிகிறது. சாதிகளாகவே அவர்கள் இணைந்து செயலாற்ற முடிகிறது.

நம் நாட்டில் சாதியும் தொழிலும் பின்னிப்பிணைந்தவை. ஒவ்வொரு சாதியும் அவர்களுக்கான தொழில்களங்களைக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பல்லாயிரம் வருடங்களாக ஒரே இனக்குழுவாக இணைந்து செயலாற்றி வருவதன் மூலம் ஒவ்வொரு சாதிக்கும் அவர்களுக்கான தனித்திறமைகளும் குணாதிசயங்கள் உருவாகி வருகின்றன. மூவாயிரம் வருடம் போர்புரிந்த சாதிக்கு ஒருகுணம் உருவாகிவருகிறது. மூவாயிரம் வருடம் வணிகம் புரிந்த சாதிக்கு ஒரு குணம் உருவாகி வருகிறது.

முன்னோர்கள் அனுபவத்தின் வழியாக கற்றவை அச்சாதியில் சமூக ஏற்பாடுகளாக, ஆசாரங்களாக, நம்பிக்கைகளாக, மரபுகளாக பேணப்படுகின்றன. அவை அதற்கான மனநிலைகளை மெல்ல மெல்ல உருவாக்குகின்றன. அந்த மனநிலை அச்சாதியின் பொதுமனநிலையாக மெல்ல மெல்ல வடிவம் கொள்கிறது. அச்சாதியின் மொழியில், குலதெய்வம் விரதங்கள் பண்டிகைகள் போன்ற அச்சாதியின் படிமங்களில் அது உறைகிறது. அந்த மனநிலைக்குள் பிறந்து விழுந்த குழந்தை அந்த மனநிலையையே தன் ஆழ்மனதின் இயல்பாக கொண்டுவளர்கிறது.

அக்குழந்தையின் தனிப்பட்ட ஆளுமை பல திசைகளில் வளரலாம். ஒருவன் தான் பிறந்த சாதிக்குள் மட்டுமே சிந்திக்க முடியும் என்றும், அதற்கு அப்பால் அவனுக்கு ஆளுமை இல்லை என்றும் சொல்வது பழமைவாதம். அதை விதியாக ஆக்குவது பாசிஸம். ஆனால் மனிதனை அந்தப் பாரம்பரிய அடையாளத்தில் இருந்து முற்றாகத் துண்டித்துப்பார்க்க முடியும் என்று எண்ணுவது வெறும் பகற்கனவு. மனிதனின் ஆளுமை என்பது இந்த இரு நிர்ணையிக்கும் சக்திகளின் முரணியக்கம் மூலம் உருவாகி வருவது.

உதாரணமாக நான் நாயர். போரிடும் சாதி. நிலவுடைமை சாதி. அந்தச் சாதியடையாளத்தை மீறிசெல்லவே என் வாழ்நாள் முழுக்க முயன்று வருகிறேன். என் மணவாழ்க்கை, என் நட்புகள் எதிலும் சாதி இல்லை. என் சாதி நாநூறு வருடங்களுக்கு முன்னரே செவ்வியல் கலைகளுக்கும் செவ்வியல் இலக்கியத்துக்குள்ளும் வந்துவிட்டது. நிலப்பிரபுத்துவ உயர்பண்பாட்டை அடைந்தும் விட்டது. மிஷனரிகளின் தயவால் நவீனக்கல்விக்கு நூறு வருடங்களுக்கு முன்னரே வந்துவிட்டது.

இன்றைய நாயர்கள் வலுவான இனக்குழுக்கள் அல்ல. பெரும்பாலான நாயர் குடும்பங்களில் பலசாதிகளில் மணம்புரிந்து மருமகன்களும் மருமக்களும் பேரக்குழந்தைகளும் இருப்பார்கள். சமீபமாக வெள்ளை, மஞ்சள் இனத்திலும் சாதாரணமாக மணம் நடக்கிறது. நாயர்களுக்கு இன்று பணம் மூலம் வரும் அந்தஸ்து மட்டுமே அளவுகோல். ஆனால் அந்த அம்சங்களை மீறி அவர்களின் அந்த தனிக்குணமும் நீடிக்கத்தான் செய்கிறது.

ஆகவே ‘சாதிப்புத்தி’ என்பது ஓர் நடைமுறை உண்மை. அதை முழுக்க முழுக்க எதிர்மறையான கோணத்தில் பார்க்கவேண்டியதில்லை. நூற்றாண்டுகளாக சேர்த்துக்கொண்ட திறமைகள் பாரம்பரிய இயல்பாக ஆதல் என்று சொல்லலாம். இந்த இயல்புகளில் கண்டிப்பாக சிறந்தவையும் உண்டு, அல்லவையும் உண்டு. எந்த ஒரு சாதிக்கும் மேன்மைகளை மட்டுமே உரிமைகொண்டாட இயலாது, எவருக்கும் இழிவை மட்டுமே பொறுப்பளிக்கவும் இயலாது.

இந்தியாவின் பல தொழில்களில் குறிப்பாக ஆசாரிமார், சிற்பிகள் போன்றவர்களில் இது மிகச்சிறப்பான விளைவை உருவாக்கியிருக்கிறது.

ஆனால் என்னுடையது போன்ற போர்த்தொழில் சாதிகள் பாரம்பரியமாக அடைந்த இயல்புகள் பெரும்பாலானவற்றுக்கு எந்த மதிப்பும் இன்று இல்லை என்றே நான் நினைக்கிறேன். தொழில்சார்ந்த சாதகமான நுண்ணுணர்வுகளே முக்கியமானவை. காந்தியில் அவரது பனியா சாதி நூற்றாண்டுகளாக சேர்த்துக்கொண்ட பல விஷயங்கள் நம்பிக்கைகளாகவும் பழக்க வழக்கங்களாகவும் நுண்ணுணர்வுகளாகவும் செயல்பட்டிருக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே ஒரு விஷயத்தை கவனிக்கமுடிகிறது, வறண்ட, பாலைநில மக்களே பெரும்பாலும் சிறந்த வணிகர்கள். அம்மக்களுக்கு வேறு வழியே இல்லை என்பது ஒரு காரணம். அவர்கள் உயிர்வாழ்வதற்காக வளர்த்தெடுத்துக்கொண்ட பல இயல்புகள் வணிகத்துக்கு மிகப்பொருத்தமானவையாக இருப்பது இன்னொரு காரணம். ஒவ்வொரு காசிலும் சிக்கனமாக இருப்பது, பொறுமையாக நெடுநாள் காத்திருப்பது, வெற்றிகொண்டே ஆகவேண்டுமென்ற வேகம், உறுதியான குழுக்களாகச் சேர்ந்து செயல்படும்தன்மை ஆகியவையே அவை.

இந்தியநிலத்தில் நாமறியும் ஆரம்பகாலம் முதலே ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளைச் சேர்ந்தவர்களே சிறந்த வணிகர்கள். மிகத்தொன்மையான காலத்திலேயே வணிகர்கள் துவாரகையில் இருந்து வந்தார்கள் என்ற குறிப்புகளை நாம் இலக்கியங்களில் காண்கிறோம். இவர்களின் இயல்புகள் வணிகம் மூலமே உருவாகிவந்தவை.

இந்தியாவில் சமணம் மிகுந்த செல்வாக்கு பெற்ற நிலப்பகுதி இது. இன்றும் சமணம் இங்கேதான் ஒப்புநோக்க வலுவாக இருக்கிறது. சமணம் இந்தியாவில் இன்றைக்கு இரண்டாயிரத்தைநூறு வருடம் முன்பு உருவாகியது. சமணம் அதன் அடிப்படைத்தரிசனங்களை அதற்கு முன்பிருந்த லோகாயத [நாத்திகவாதம், பொருள்முதல்வாதம்] பாரம்பரியத்தில் இருந்து எடுத்துக்கொண்டது. ஆகவே சாராம்சத்தில் இந்துஞானமரபின் மைய ஓட்டமாக அமைந்த வைதிக மரபுக்கு நேர் எதிரானது சமணம்.

இவ்வாறு சுருக்கமாகச் சொல்லலாம். இந்துமெய்ஞான மரபின் மைய ஓட்டமாகிய வேதஞானம் இந்த பிரபஞ்சவெளி நாம் அறிய முடியாத ஒரு மையநோக்கம் அல்லது மையத்திட்டம் அல்லது மைய ஆற்றல் கொண்டது என்று நம்புகிறது. அந்த மையமே உண்மை, நாம் காண்பதெல்லாம் அதன் மாறுபட்ட தோற்றங்களையே என வாதிடுகிறது. அந்த பிரபஞ்ச சாரத்தை அது பிரம்மம் என்று வகுக்கிறது. பார்ப்பவையெல்லாமே பிரம்மத்தின் வடிவங்கள் என்று சொல்கிறது.

இதிலிருந்து உருவானதே வேதஞானத்தின் விடுதலைக் கோட்பாடு. இந்த உலகச்செயல்களில் ஈடுபடும்போதே இது ஒரு பெரும் மாயை என்ற பிரக்ஞையுடன் இருப்பதே அது சொல்லும் வழி. செயல்களை திறம்பட ஆற்ற அந்த விலகல்நிலை உதவும். இறுதியில் இந்த மாயை முற்றாக விலகி இப்பிரபஞ்சத்தின் உண்மையாக எது உள்ளதோ அதை அறிந்து அதாக தன்னை உணர்தலே வேதஞானம் கூறும் மீட்புநிலை, முக்தி நிலை.

இந்த மையத்துக்கு எதிராகப்பேசிய புராதனமான தரிசனங்கள் பல இருந்தன. அவற்றின் சாராம்சங்களை எடுத்துக்கொண்டு விரிவான தத்துவ அடிப்படையை உருவாக்கிக் கொண்டு உருவானது சமணம். அதன் உலகநோக்கு அனைத்திருப்புவாதம் [சர்வாஸ்திவாதம்] எனப்படுகிறது. பிற்பாடு பௌத்தத்தில் அது முக்கியமான கொள்கையாக வளர்ச்சி பெற்றது.பிரபஞ்சத்தில் நாம் அறியும் எல்லாமே உண்மையானவை என்பதே அதன் பொருள். எதுவுமே மாயை அல்ல, பொய்த்தோற்றமும் அல்ல. ஆகவே இந்த உலகின் சாராம்சத்தை இந்த உலகுக்கு அப்பால் சென்று தேடவேண்டியதில்லை.

இதன் நீட்சியாகவே சமணர்கள் அனைத்துச்சார வாதம் [சர்வாத்ம வாதம்] என்ற கொள்கையை உருவாக்கினார்கள். பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றுக்கும், உயிர்களுக்கும் பொருள்களுக்கும் கூட, ஆன்மா உள்ளது. ஆன்மா என்றால் சமணத்தைப் பொறுத்தவரை சாராம்சமான கருத்து நிலை என்றே பொருள். ஒரு கல்லை கல்லாக வைத்திருப்பது அதன் ஆன்மாதான். அதாவது இப்பிரபஞ்சத்தில் உள்ள கோடானுகோடி ஆன்மாக்களில் ஒன்று மட்டுமே நாம். நாயைப்போல, செடியைப்போல, பாக்டீரியாவைப்போல, மலையைப்போல, கூழாங்கல்லைப்போல. அதற்குமேல் ஏதுமில்லை.

இதில் இருந்து சமணர்கள் வந்துசேர்ந்த அடிப்படைத் தரிசனம் என்பது ஒருமைமறுப்புவாதம் [அனேகாந்தவாதம்] எனப்படுகிறது. உண்மை என்பது உச்சநிலையிலும் சரி அடித்தளத்திலும் சரி பன்மையாகவே மனிதனுக்கு கிடைக்கும் என்பதே அதன் சாரம். ஒருபோதும் முழுமுதல் உண்மை ஒரு மனித மனத்துக்கு தட்டுபட்டுவிடமுடியாது. மனிதன் அந்த அளவுக்குச் சிறியவன், உண்மை அந்த அளவுக்குப் பிரம்மாண்டமானது.

எனவே ஒரே உண்மையின் பல முகங்கள் பல கோணங்களினாலான பார்வைகள் எப்போதும் இருக்கும், எல்லாம் உண்மையே அதேசமயம் எல்லாமே தவறும்கூட.. முழு உண்மை என்பது பலநூறு பல்லாயிரம் கோடி தனி உண்மைகளின் ஒட்டுமொத்தமாகவே நம்மால் அறியப்பட இயலும். இந்த உண்மையை விளக்க சமணர்கள் கூறிய உதாரணமே யானையை தொட்டுப்பார்த்த ஐந்து குருடர்களின்கதை

ஒருமைமறுப்புவாதம் காந்தியை பெரிதும் கவர்ந்திருக்கிறது.”உண்மையின் பன்மைத்தன்மை என்னை மிகவும் கவர்ந்த கொள்கை. இந்த கொள்கையை வைத்தே ஓர் இஸ்லாமியரை அவரது பார்வையிலும் கிறிஸ்தவரை அவரது பார்வையிலும் நான் புரிந்துகொள்கிறேன். ஆரம்பகாலத்தில் நான் என் எதிர்தரப்பினரின் அறியாமையை எண்ணி பொறுமை இழந்திருக்கிறேன். இப்போது என்னால் அவர்களையும் நேசிக்க முடிகிறது. ஏனென்றால் இப்போது அவர்கள் என்னைப்பார்க்கும் கோணத்திலும் என்னை என்னால் பார்க்கமுடிகிறது. என்னுடைய ஒருமைமறுப்புவாதம் என்பது சத்தியம் அகிம்சை என்ற இரட்டைக்கொள்கையின் விளைவாக உருவாகிவந்தது”

இதன் நீட்சியாக உருவானதே சமணர்களின் அடுத்த மையக்கொள்கையான ஆனால்வாதம் [சியாத்வாதம்] என்பது. நாம் நம்மைச்சுற்றி உள்ளவற்றைப்பற்றி அறியும் எந்த அறிவும் முழுமையானதல்ல, எல்லாமே சார்புநிலை உள்ளதே. புராதன கிரேக்க அவநம்பிக்கைவாதம் [Sceptisim] எதுவுமே தீர்மானமானவையல்ல எல்லாமே ஒப்பீடானவை [Nothing is absolute everything is relative] என்ற நவீன இயற்பியல் கோட்பாடு ஆகியவற்றுக்கு மிக நெருக்கமான சிந்தனை இது.

இந்நான்கு பிரபஞ்சதரிசனங்களின் அடிப்படையில் சமணம் உலகியல் வாழ்க்கையை வகுத்துக்கொள்கிறது. இந்த உலகம் உண்மையானது. இதன் துயரங்களும் இன்பங்களும் உண்மையானவை. இதில் உள்ள எல்லாவற்றுக்கும் சாராம்சமும் சுயமான வாழ்க்கையும் உள்ளது. அந்த சாராம்சத்தையும் நோக்கத்தையும் நம்மால் முழுமையாக அறிந்துகொள்ளவே இயலாது. ஆகவே நாம் நமக்களித்துள்ள வாழ்க்கையை நம்முடைய ஆன்மா நிறைவுறும்படியாக வாழ்வதே முழுமைநிலை என்பது.

அவ்வாறு வாழ்வதற்கு அவசியமான முதல் விதி என்பது அகிம்சையே. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஆன்மா உண்டு என்னும்போது பிறிதை அழிக்காமலிருப்பதே உயர்வான விழுமியம் ஆகிறது. ஒவ்வொன்றுடனும் கொள்ளும் மிகச்சிறந்த உறவே உண்மையான வாழ்க்கை ஆகிறது. அதுவே அகிம்சை.

அகிம்சை ஒருவனை தன்னைச் சார்ந்த எல்லாவற்றுடனும் உண்மையுடன் இருக்கச் செய்கிறது. ஒவ்வொன்றுடனும் கருணையுடன் இருக்கச் செய்கிறது. தன் வாழ்க்கையை அமைத்தபின் அதற்குமேல் ஏதும் தேவையில்லை என்ற நிலையை இறுதியாக அடையச்செய்கிறது. உண்மை, கருணை, துறவு ஆகிய விழுமியங்களே அகிம்சையின் நடைமுறைநிலைகள். அவற்றின் வழியாக தன் வாழ்க்கையை நடத்திச் செல்பவன் ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்’, அவனே தெய்வநிலையை அடைந்தவன். இதுவே சமணம் கூறும் முழுமைநிலை அல்லது முக்தி. கிட்டத்தட்ட இந்தக் கொள்கைகள் அனைத்தையுமே திருக்குறளில் காணலாம்.

வேதஞானம் பிராமணர்களுக்கும் ஷத்ரியர்களுக்கும் உவப்பானதாக இருந்தது. அவர்கள்தான் ஆரம்பகாலத்தில் இந்திய சமூகத்தை உருவாக்கி தொகுத்து தக்கவைக்கும் மைய ஆற்றல்களாக இருந்தார்கள். பிரம்மம் என்ற மையக்கருத்து ஒரு மாலையின் சரடுபோல பல்வேறு இனக்குழுக்களின் மதங்களையும் ஆசாரங்களையும் இணைத்து அவர்களை ஒரே சமூகக் கட்டுமானத்துக்குள் கொண்டுவரவும், அவர்களைமேல் கீழாக அடுக்கி ஓரு நிலப்பிரபுத்துவ அரசமைப்பை நிறுவவும் உதவியாக இருந்தது. அதன் விளைவே இந்துமதம். அதன் விளைவே ஆரம்பகாலப் பேரரசுகள்.

இந்திய சமூக உருவாக்கத்தின் அடுத்த கட்டத்தில் வைசியர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றது. இந்தியா முழுக்க நிலவழிகள் மற்றும் கடல்வழிகள் கண்டடையப்பட்டன. இந்தியாவின் விரிந்த நிலப்பகுதிகளை இணைக்கும் நரம்புப் பின்னலாக அவை அமைந்தன. அவற்றினூடாகச் சென்ற வணிகர்கள் இந்தியாவின் பல்வேறு சமூகவளர்ச்சிப் படிநிலைகளில் வாழ்ந்த பல்லாயிரம் சமூகங்களை வணிகம் மூலம் ஒன்றுடன் ஒன்று தொடுக்க ஆரம்பித்தார்கள். நாமறியும் இன்றைய இந்தியா இவ்வாறாக இன்றைக்கு இரண்டாயிரத்தைநூறு வருடம் முன்பு உருவானதே.

அந்த இணைப்புப் போக்கில் மெல்ல மெல்ல வணிகர்கள் பலம் மிக்க சக்திகளாக எழுந்து வந்தார்கள். பிராமண- சத்ரிய அதிகாரத்துக்கு எதிராக ஒரு வைசிய சக்தி எழுந்தது என இதை ஆய்வாளர் சொல்கிறார்கள். வணிகர்கள் செல்வம் மூலம் அதிகாரம் கொண்டவர்களாக ஆனார்கள். பிறகு ஏறத்தாழ ஆயிரம் வருடம் வைசியர்களுக்கும் பிராமண-ஷத்ரியர்களுக்குமான முரணியக்கம் நம் சமூகத்தில் நீடித்தது.

அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியன் மன்னர் எப்படி வணிகர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும் என்று விரிவாகப் பேசுகிறார். முத்ரா ராட்சஸம் போன்ற நாடகங்களில் வணிகர்கள் எப்படியெல்லாம் அதிகார ஆட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என்று காணமுடிகிறது. கதாசரித சகரம் போன்ற புராதன நூல்கள் வணிகர்களின் அதிகாரம் செல்வம் ஆகியவற்றைப் பற்றியே பேசுகின்றன.

இந்தப் பரிணாமப் போக்கில் வணிகர்களுக்கான மதம் ஒன்று தேவைப்பட்டது. அதிகார அடுக்கை உருவாக்குவதற்குப் பதில் சமூக உரையாடலை நிகழ்த்தும் மதம். வெவ்வேறு படிநிலைகளில் இருக்கும் பல்லாயிரம் சமூகங்களை பொதுவான சில விழுமியங்களுக்குள் கொண்டுவரும் வல்லமை கொண்ட மதம். ஆயுத பலத்தை நம்பாமல் அதற்கிணையான இன்னொரு ஆயுதத்தை அளிக்கக்கூடிய மதம். அவ்வாறாக சமணம் வணிகர்களின் மதமாகக் கண்டடையப்பட்டது. பின்னர் முந்நூறு வருடம் கழித்து பௌத்தமும் அதேபோல உருவாக்கப்பட்டது.

சமணம் பெருவணிகர்களின் ஆதரவால் இந்தியா முழுக்க பரவிய மதம். உலக வரலாற்றின் முதல் ‘மிஷனரி’ மதம் அதுதான். திட்டமிட்டு அர்ப்பணிப்புள்ள மதப்பரப்புநர்கள் எல்லா திசைகளுக்கும் அனுப்பப்பட்டார்கள். அவர்கள் மெல்ல மெல்ல தாங்கள் சென்ற இடங்களின் வாழ்க்கையிலும் பண்பாட்டிலும் கரைந்து அங்கே தங்கள் கருத்துக்களை நிறுவினார்கள். வணிகர்களின் நிதியுதவி சமணமதத்தின் பரவலுக்கு பெரிய அடித்தளத்தை அமைத்தமையால் மிகவேகமாக அந்த மதம் இந்தியாவை ஆட்கொண்டது.

சமணம் பரவிய வழியை நீர் சென்ற தடம்போல இந்தியாவின் மத்திய நிலப்பகுதியில் இப்போதும் காணலாம். ராஜஸ்தானில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் வழியாக மத்தியபிரதேசத்துக்குள் புகுந்து, போபால் வழியாக ஆந்திரத்தில் ராயலசீமா வழியாக கர்நாடகாவில் சிவரணபெளகொலா வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைந்து, கன்யாகுமரி சிதறால் வரை வந்தது அது. இவ்விடங்களில் இன்றும் முக்கியமான சமணபீடங்கள் வரிசையாக உள்ளன. அதேசமயம் அன்றைய இன்னொரு முக்கியமான வணிகப்பாதையான தஞ்சை முதல் வங்கம் வரையிலான கடற்பாதையில் சமணத்தின் பாதிப்பு இல்லை.

சமணம் கல்வியையும் மருத்துவத்தையுமே தன் ஆயுதமாகக் கொண்டது. தமிழ் உட்பட எல்லா இந்திய மொழிகளிலும் முக்கியமான இலக்கணநூல்களையும் நீதி நூல்களையும் சமணர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆயுர்வேத மருத்துவத்தை அவர்களே நாடெங்கும் கொண்டுசென்றார்கள். கல்வியும் மருத்துவமும் அளிக்கப்பட்ட தர்மசாலாக்கள் வழியாக அவர்கள் எளிய மக்களுக்குள் ஊடுருவி பெரும்செல்வாக்கை செலுத்தினார்கள்.

வணிகர்கள் ஏன் சமணத்தை ஆதரித்தார்கள் என்றால் அது வணிகத்துக்குச் சாதகமான விழுமியங்களை பரப்பியது என்பதனால்தான். அன்றைய இந்தியப்பெருநிலம் எப்படி இருந்திருக்கும் என்று எவரும் எளிதில் ஊகிக்கலாம். பல்லாயிரம் பழங்குடிகள் ஒருவரோடொருவர் இடைவெளியில்லாத போரில் ஈடுபட்டிருந்திருப்பார்கள். சமணம் அவர்கள் நடுவே ஒரு மாபெரும் சமரச மனநிலையை உருவாக்கியது. அதன் அகிம்சை என்பது போர்களே வாழ்க்கையாக இருந்த ஒரு நிலத்துக்கு மிகப்பெரிய ஒரு வரமாக அமைந்திருக்கவேண்டும். அகிம்சையை அவர்கள் கல்வியுடன் கலந்து கொண்டுசென்றார்கள். இந்தியாவெங்கும் பொது மொழியாக சம்ஸ்கிருதத்தைக் கொண்டு சென்றவர்களும் அவர்களே. இந்திய பழங்குடி மொழிகளும் தொல்மொழிகளும் சம்ஸ்கிருதம் மூலம் ஒன்றுடன் ஒன்று உரையாட வழிசெய்தார்கள்.

சமரசம் உரையாடல் ஆகியவை மூலம் சமணர்கள் உருவாக்கியதே இந்தியப்பண்பாட்டின் பொதுக்கட்டுமானம் என்று சொல்லலாம். முன்னரே வேதமதம் இந்தியாவெங்கும் பரந்திருந்தது. பல்லாயிரம் பழங்குடிகளை புராணம் மூலம் இணைத்து அவர்களின் ஆதிக்கத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டு மேல்கீழாக அடுக்கி ஓர் அதிகாரக் கட்டுமானத்தை அது உருவாக்கியிருந்தது. ஆனால் அந்த அமைப்புக்குள் ஒவ்வொரு கூறும் ஒன்றுடன் ஒன்று போரிட்டுக்கொண்டே இருந்தன. போருக்குப் பதில் சமரசத்தையும் உரையாடலையும் கல்விமூலம் உருவாக்கிய சமணம் அக்கால மன்னர்களுக்கும் உகந்ததாக இருக்கவே அது அரசமதமாகவும் ஆகியது.

பௌத்தம் சமணத்தின் பின்னால் அதே வழியாக வந்தது. அவை இரண்டையுமே ஒரே மதமாக நோக்கும் அணுகுமுறை நம் மரபில் இருந்துள்ளது. பற்பல நூற்றாண்டுக்காலம் இந்திய சமூகத்தின் பண்பாட்டுக்கும் சிந்தனைக்கும் அம்மதங்கள் ஆற்றிய பங்களிப்பு முக்கியமானது. அவை இரண்டுமே வணிகர்களின் மதங்கள். இந்தியாவில் உள்ள எல்லா வணிகசாதிகளும் சமணர்களாகவோ பௌத்தர்களாகவோ இருந்தவர்களே.

சமண ஆதிக்கம் அடுத்த கட்டத்தில் உருவான பக்தி இயக்கத்தால் ரத்துசெய்யப்பட்டது என்று சொல்லும் வரலாற்றாய்வாளர் உண்டு. அவை பக்தி இயக்கத்தால் உள்வாங்கப்பட்டன, அவற்றின் சாராம்சமான விழுமியங்கள் வளர்த்தெடுக்கப்பட்டன என்பதே முறை. எந்த மக்கள் சமணர்களாக இருந்தார்களோ அவர்களே பக்தி இயக்கத்தையும் உருவாக்கினார்கள்.

சமணமும் பௌத்தமும் அடிப்படையில் வணிகர்களின் மதங்கள் என்றால் பக்தியியக்கம் சூத்திரர்களின் மதம். வேள்விகளையும் தத்துவசிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டது பிராமண ஷத்ரியர்களின் வேதமதம். விரதங்களையும் தத்துவசிந்தனைகளையும் தியானத்தையும் அடிப்படையாகக் கொண்டது வைசியர்களின் சமண-பௌத்த மதங்கள். திருவிழாக்கள், பண்டிகைகள், கலைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது சூத்திரர்களின் பக்தி இயக்கம்.

பக்தி இயக்கம் சமண பௌத்தத்தின் சமரசம், அகிம்சைபோன்ற பல அடிப்படை மதிப்பீடுகளை முன்னெடுத்தது. சமணத்தின் சிக்கலான தத்துவ விதிகளை அது வளர்க்கவில்லை என்றாலும் அனேகாந்தவாதம் போன்ற கருத்துக்கள் பக்தி இயக்கத்திலும் ஆழமாக இருந்தன. எல்லா பார்வைகளையும் சமமாக மதிக்கும் சமரச நோக்கு பக்தி இயக்கத்தின் பெரும்பாலான ஞானிகளிடம் இருந்தது.

பக்தி இயக்கம் தமிழகத்தில் இருந்து மேலே சென்று பலநூற்றாண்டுக் காலமாக பரவி வட இந்தியாவை முழுமையாக கைப்பற்றியது. கடைசியாக சைதன்ய மகாப்பிரபு வரையில் பக்தி இயக்கத்தின் அலை நீடித்தது. கலைகளே பக்தி இயக்கத்தின் ஊடகம் என்பதனால் சைவத்தைவிட வைணவம் மேலே எழுந்தது. வட இந்தியா பெரும்பாலும் வைணவத்தைச் சார்ந்ததே.

தமிழகத்தின் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும், சைவவேளாளர்களும், சைவ முதலியார்களும் பக்தி இயக்கத்துக்கு முன்னர் சமணர்களாக இருந்து பின்னர் சைவர்களாக ஆனவர்கள் என அவர்களின் ஏராளமான சடங்குகள் ஆசாரங்கள் வழியாகச் சொல்லமுடியும். செட்டியார்களில் பதினேழாம் நூற்றாண்டில்கூட சமணர்கள் இருந்திருக்கிறார்கள். வட இந்திய வணிகர்களில் பெரும்பாலானவர்கள் வைஷ்ணவ மதத்துக்குச் சென்றார்கள். ஒருசாரார் சமணர்களாகவே நீடித்தார்கள்.

இன்றும் இந்தியாவில் சமணர்கள் முக்கியமான வணிகக்குழுவே. சமணம் அவர்களுக்கு வணிகத்தின் பகுதியாக அறம்செய்தலையும் போதித்திருக்கிறது. இந்தியாவில் மிகப்பெரும்பாலான அறநிறுவனங்கள் சமணர்கள் நிறுவி நடத்துவனதான். தமிழகத்திலும்கூட பெரும் அறக்கொடைகள் செட்டியார்களுடையவை. பிற பண்பாடுகளில் எளிய மக்களுக்கு வணிகச் சமூகம் மீது இருக்கும் கசப்புகள் இங்கே இல்லாமல் போனது இந்த அறம் செய்யும் மனநிலையினால்தான்.

காந்தி வைஷ்ணவத்தை தழுவிய வணிக சாதியைச் சேர்ந்தவர். பனியா என்பது வாணிஜ்ய என்ற சம்ஸ்கிருதச் சொல்லின் மரூஉ. [பாணிஜ்ய, பானிய, பனியா] அது வணிகன் என்ற தமிழ்ச்சொல்லின் சம்ஸ்கிருத எடுத்தாளுகை. பனியா என்ற பொதுச்சாதி அடையாளத்துக்குள் குஜராத்தில் உள்ள ‘மோத்’ என்ற பிரிவைச்சார்ந்தவர் காந்தி. மோதேஸ்வரி அன்னை என்று சொல்லக்கூடிய பதினெட்டுகரங்களுடைய தாய்தெய்வத்தை வழிபடும் பிரிவு இது. இவர்கள் வாழ்ந்த பகுதி மோதேரா என்று சொல்லப்பட்டது. அதிலிருந்து இவர்களின் சாதிப்பெயர் வந்தது. மோத்திகளில் பிராமணர்களும் வைசியர்களும் சூத்திரர்களும் உண்டு. காந்தி ஒரு மோதி பனியா எனலாம்.

இங்கே ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஒரு மக்கள்கூட்டம் சமண மதத்துக்குள் இருக்கும்போதே குலதெய்வம்போன்ற பிற தெய்வங்களை வணங்கலாம். தமிழ்நாட்டிலும் சமணம் வலுவாக இருந்தபோதே குலதெய்வ வழிபாடும் இருந்தது. சமணம் ஓர் உயர்நிலை மதமாக அவர்களுடன் இருக்கும். இப்போது நாம் மாடசாமியையும் சிவபெருமானையும் ஒரேசமயம் வழிபடுவதுபோல. மோதி பனியாக்கள் பெரும்பாலும் சமணர்களாகவே பதினேழாம் நூற்றாண்டுவரை இருந்திருக்கிறார்கள். அகமதாபாத் அருகே உள்ள தாந்துகா [Dhandhuka] என்ற ஊரில் இவர்களின் சமணமடாலயம் உள்ளது. வாத்வான் என்ற இடத்தில் மோத் பனியாக்களால் கட்டப்பட்ட 500 சமண கோயில்கள் உள்ளன.

காந்தியின் குடும்பம் வைஷ்ணவ மதத்தை தழுவிய போதிலும்கூட சமணர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இதை இஸ்லாமிய கிறித்தவ மதங்களுக்குச் செல்வதுபோல பார்க்கலாகாது. சமணம் பலவீனப்பட்டு பக்தி இயக்கம் மூலம் சைவமும் வைணவமும் வலுப்பெற்றபின் ஏறத்தாழ முந்நூறாண்டுகள் கோடிக்கணக்கான மக்கள் ஒரேசமயம் சமணர்களாகவும் சைவவைணவர்களாகவும் கூடவே குலதெய்வ வழிபாடு கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். காந்தி குடும்பம் சமண ஆசாரங்களை பேணி வந்தது. காந்தியின் அம்மா புத்லிபாய் சமணத்துறவியாப பேசாரி சுவாமி என்பவரை குருவாக வழிபட்டுவந்தார். அவரே காந்தி லண்டன் சென்றபோது சைவ உணவையும் பிற ஆசாரங்களையும் விடுவதில்லை என்று சத்தியம் வாங்கச்சொல்லி புத்லிபாய்க்கு ஆலோசனைசொன்னவர் என்று சத்திய சோதனையில் காந்தி சொல்கிறார்.

ஆகவே காந்தியை ஒரு சமணராகவும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் பல இடங்களில் சமண ஆசாரங்கள் மேல் தனக்குள்ள நம்பிக்கையைச் சொல்கிறார். இந்தியாவை ஒருங்கிணைத்த சமணக் கருத்தியலின் சமகால நீட்சியே காந்தி. அவர் சொன்ன அகிம்சை என்பது சமணத்தின் ஆதாரமான கோட்பாடுதான். காந்தியப் போராட்ட வழிமுறைகளான சத்யாக்ரகம், உண்ணாவிரதம் போன்றவை பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமணமுனிகள் பயன்படுத்தி வெற்றிகண்டவை.

இந்திய வரலாற்றை எடுத்துப்பார்த்தால் இந்தியாவை ஒருங்கிணைத்து முன்னெடுப்பதில் இருபோக்குகள் உள்ளன என்பதைக் காணலாம். ஒன்று பிராமண-ஷத்ரிய வழிமுறை. ஒரு மையத்தை உருவாக்கி அதன்மூலம் அனைத்துப் பிரிவுகளுடனும் விரிவான உரையாடலை நிகழ்த்தி அதற்கேற்ப தன்னை மாற்றியமைத்துக்கொண்டு தன் நெகிழ்வான கட்டமைப்புக்குள் எல்லாரையும் உள்ளிழுத்துக்கொளவ்து அதன் வழி. எல்லா பிரிவினரையும் கீழ் கீழாக அடுக்குதல் அதன் இயல்பு. அதற்கு ஞானத்தையும் ஆயுதத்தையும் ஒரே சமயம் பயன்படுத்துதல் அதன் வழிமுறை.

இரண்டாவது, சமண — பௌத்தர்களின் வழிமுறை. ஒரு மைய நோக்கத்தைச் சார்ந்து எல்லாரும் பங்கெடுக்கக்கூடிய ஒரு சமரசத்தை உருவாக்குதல். வன்முறையற்ற வழியில் அனைவரையும் திரட்டுதல். சமண-பௌத்த வழிமுறைகளின் இன்னொரு வடிவமே பக்தி இயக்கத்தின் வழிமுறையாகும்.

திலகர், அரவிந்தர் முதலியோர் முன்வைத்தது பிராமண-ஷத்ரிய வழிமுறையை என்பதைக் காணலாம். திலகர் அவரது எழுத்துக்களில் மிகவிரிவாகவே அதை எழுதியிருக்கிறார். அக்காலத்தில் சாத்தியமானதென அனைவருக்கும் தெரிந்திருந்த ஒரே வழிமுறை அதுவே. அதற்கு எதிராக இருந்த வழிமுறை கோகலே முன்வைத்த ஐரோப்பிய பாராளுமன்ற அரசியலின் வழிமுறை. அதற்கு இந்தியபாரம்பரியத்தில் வேர்கள் இல்லை. ஆகவே அது இங்கே வேரூன்றவும் இல்லை.

பாரதியின் பாடல்களிலேயே நாம் அதை பார்க்கலாம். ‘சிவாஜி தன் படைவீரர்களுக்கு உரைத்தது’ ‘பாஞ்சாலிசபதம்’ போன்ற கவிதைகளில் அவர் ஷத்ரிய வீரியத்தையே முன்வைக்கிறார். ‘பார்த்தன்போல் விழியினால் விளக்குவாய்’ என்று புதியபாரதத்தை அவர் அர்ஜுனவீரத்துடன் இணைத்துப்பார்க்கிறார். ஏனென்றால் அக்காலத்தில் மிகுந்த மன எழுச்சியை அளித்த ஒரு கருத்து அது. அது ஒன்றே வழி என கருதப்பட்டது.

காந்தி இந்திய மரபில் இருந்த, அப்போது முற்றிலும் மறக்கப்பட்டிருந்த, இரண்டாவது வெற்றிகரமான வழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார். அது சமணர்களின் வழி. திலகரும் அரவிந்தரும் பிராமண-ஷத்ரியர்கள். காந்தி பனியா. இந்தியாவில் ஒரு சாத்வீக இணைப்பை உருவாக்கிய மாபெரும் வணிகப் பண்பாட்டின் நீட்சிதான் காந்தி. சமண-பௌத்தப் பண்பாடும் பக்தி இயக்கப் பண்பாடும் சரிவரக் கலந்த ஒரு கலவை. அவருக்குப்பின்னால் அகிம்சையை வழிமுறையாகக் கொண்ட, கல்வியையும் மருத்துவத்தையும் வழிமுறையாகக் கொண்ட, ஒரு மாபெரும் பாரம்பரியம் இருந்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைகாந்தி மேலும் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்திக்குமா…கடிதங்கள்