டி.கே.சி.யின் வட்டத்தொடர்க் கூட்டங்களைப்போலவும் சுந்தர ராமசாமியின் காகங்கள் கூட்டங்களைப்போலவும் ஜெயமோகன் முன்னின்று நடத்திவரும் நித்யா கவிதை ஆய்வரங்கங்கள் தமிழ்ச்சூழலில் ஆரோக்கியமான விளைவுகளை உருவாக்கியிருக்கின்றன. முக்கியமாக, கவிதைகளை அணுகும் பார்வைகளை வளர்த்தெடுக்கிற முறையைச் சொல்லவேண்டும்.
ஒரு கவிதையை முன்வைத்து, ஆய்வரங்கில் பங்கேற்கும் கவிஞர்களும் வாசகர்களும் சுதந்தரமாக பகிர்ந்துகொள்ளும் அனுபவங்களைப் புதுசாக பார்க்கிற அல்லது கேட்கிற பார்வையாளன் கவிதையின் வலிமையையும் ஒரே கவிதையில் விரிவுகொள்ளும் புதுப்புது சாத்தியப்பாடுகளையும் எளிதில் உணரமுடியும்.
மூன்று நாள்கள் இத்தகு அனுபவங்களிடையேயே திளைத்துவிட்டுத் திரும்பியபிறகு பார்க்கிற ஒவ்வொரு கவிதையையும் தன் அனுபவத்துடன் உரசிஉரசிப் பார்த்துச் சுவைக்க அவ்வாசகன் முனைவது உறுதி.
ஆய்வரங்கத்தில், வாசிப்பதற்கென்றே குறிப்பிட்ட மலையாளக் கவிஞர்களின் கவிதைகளை தமிழிலும் சில தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளை மலையாளத்திலும் மொழிபெயர்த்துத் தொகுக்கப்பட்ட கவிதைகள் ஒரு தொடக்க ஆவணமாக அமையும். ஒவ்வொரு கவிதையும் படிக்கப்பட்டு அதையொட்டிய விவாதங்கள் மெள்ளமெள்ள உருவாகி வளரும். விவாதங்கள் சற்றும் கவிதைகளின் சட்டகத்தைவிட்டு வெளியேறாது. ஒவ்வொரு நொடியையும் கவிதையைப்பற்றிய சிந்தனையாகவே இருக்கும்படி சூழல் மிக இனிமையானதாக மாறும்.
இவ்வகையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வரங்கங்களில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மலையாளக் கவிதைகளின் தமிழ்மொழிபெயர்ப்பு ‘நெடுஞ்சாலை புத்தரின் நுாறு முகங்கள் ‘ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இதற்கு முன்னர் ‘இன்றைய மலையாளக் கவிதைகள் ‘ என்ற தலைப்பில் ஒரு தொகுதி வெளிவந்தது.
ஒரே வாசிப்பில் இக்கவிதைத் தொகுதியைப் படித்துமுடித்ததும் மண்ணை அடையாளப்படுத்தும் சிற்சில கலைச்சொற்களையும் இடப்பெயர்களையும் தவிர இம்மலையாளக்கவிதைகள் தமிழ்க்கவிதைகளைப்போலவே காணப்படுவதை உணரமுடிகிறது. . எழுத்துமுறையிலும் வெளிப்பாட்டு முறையிலும் தமிழ்க்கவிஞர்களும் மலையாளக்கவிஞர்களும் கிட்டத்தட்ட ஒரே நேர்க்கோட்டில் நிற்பதைப்போலவே உள்ளது. கால்நுாற்றாண்டுகளுக்கு முன்னர் கவியரங்குகளில் ஓங்கியொலித்த வடிவமுறைகள் மலையாளத்தில் பின்தங்கிப்போன விஷயம் ஆச்சரியமாக உள்ளது. காலத்தால் உருவாகியிருக்கும் இந்த மாற்றத்தின் தடங்களை அடையாளங்காட்டி இத்தொகுப்பின் முன்னுரையில் ஜெயமோகன் எழுதியிருக்கும் விஷயம் அவசியமாக படிக்கவேண்டிய ஒன்றாகும்.
தொகுப்பில் கல்பற்றா நாராயணன், அனிதா தம்பி, பி.பி.ராமச்சந்திரன், டி.பி.ராஜீவன், பி.ராமன், வீரான்குட்டி, அன்வர் அலி ஆகிய ஏழு மலையாளக்கவிஞர்களின் கவிதைகள் உள்ளன. இந்த வரிசையில் வயதில் மூத்தவர் கல்பற்றா நாராயணன். ஐம்பத்துநான்கு வயதுக்காரர். கல்லுாரிப் பேராசிரியர். மிக இளையவர் பி.ராமன். முப்பத்துமூன்று வயதுக்காரர். வேலையற்ற இளைஞர். நல்ல அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய கவிதைகளை ஏழுபேருமே எழுதியிருக்கிறார்கள்.
கல்பற்றா நாராயணன் எழுதிய ‘உறக்கம் ‘ தொகுப்பின் மிகச்சிறந்த கவிதையாகும். உறக்கம் என்பது துயில் என்கிற நிலையிலிருந்து அமைதி, தவம், தியானம், மலர்ச்சி, நெருக்கம் என வெவ்வேறு நிலைக்கு மாறி வெவ்வேறு விதமான அனுபவங்களைக் கொடுக்கிறது. கருதும் நிலைக்குத் தகுந்தபடி விதம்விதமான எண்ணக்கோவைகளை உருவாக்கியபடி உள்ளது.
கவிதைக்குள் ‘இருளாதது எப்படி தெளியும் ? ‘ என்று கல்பற்றா முன்வைக்கும் ஒற்றைக்கேள்வி அலையலையாக உருவாக்கும் அனுபவங்கள் எல்லாமே இனிமையானவை. எது இருள் எது தெளிவு என்று உடனடியாக அரக்கப்பரக்க எதையும் கலைத்துப்போட்டு அணிபிரித்து உண்மையை வகுத்துக்காட்ட மனம் துடிக்கவில்லை. மாறாக, ஒரு சின்ன அசைபோடல் மட்டுமே நேர்கிறது. ஒரு சின்னக் கிளர்ச்சி உருவாகிறது.
அக்கேள்வியை உருட்டியபடியே எண்ணங்களில் ஆழ்கிறது மனம். நமக்குள்ளேயே இருக்கும் பதிலை நாம் இத்தனை காலமும் அடையாளம் காணவியலாதவண்ணம் அறியாமையில் மூழ்கி இருந்திருக்கிறோமே என்கிற கூச்ச உணர்வுடன் கூடிய புன்னகை நம் உதட்டில் நெளிகிறது. எந்தக் குழப்பத்துக்கும் சிறிது அவகாசத்துக்குப் பிறகு தெளிவும் முடிவும் உண்டல்லவா ? குழப்பமும் தெளிவும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல. குழப்பத்தின் பக்கம் நாம் நிற்கும்போது தெளிவைக் காண முடிவதில்லை. தெளிவின் பக்கம் நிற்பவனுக்கு குழப்பம் இல்லை. கவித்துவம் மிகுந்த இந்த இடைவெளியை அமைதியாகக் கடக்க அனுமதிப்பதன் வழியாகமட்டுமே பழமை மறைந்து புதுமை மலர்கிறது.
அப்படியென்றால் மானுடன் செய்யத்தக்கது என்ன ? அந்த இடைவெளியை ஒரு காற்றைப்போல அல்லது வெளிச்சத்தைப்போல கடந்துசெல்ல அனுமதித்துவிட்டு நின்றிருத்தலே போதும் என்று தோன்றுகிறது. இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கி நகர்த்துகிற உறக்கமே அஞ்ஞானத்திலிருந்து ஞானத்தை நோக்கி நகர்த்துகிறது. மரணத்திலிருந்து அமரத்துவத்துக்கு நகர்த்துகிறது. இப்படி அனுபவங்கள் அடுக்கடுக்காக ஒவ்வொரு நிலையிலிருந்து வேறொரு நிலைக்கு மிக இயல்பாக மாறிவிடுகின்றன.
கல்பற்றாவின் மற்றொரு இனிய கவிதை ‘நெடுஞ்சாலை புத்தர் ‘. இக்கவிதையிலும் கிளர்ச்சியூட்டக்கூடிய ஒரு வரி காணப்படுகிறது. ‘எப்போதும் அங்கிருக்கும் பாதை ‘ என்பதுதான் அவ்வரி. சதாகாலமும் இரைச்சலும் வேகமுமாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களைக் கொண்ட நெடுஞ்சாலைப் பாதையல்ல அது. பார்வைக்குப் புலப்படக்கூடிய இந்தப் பாதையில் படிந்திருக்கும் மற்றொரு பாதையைத்தான் கல்பற்றாவின் இவ்வரி குறிப்பிடுகிறது. இரைச்சல் மிகுந்த பாதையின் நடுவே நீண்டுசெல்லும் மெளனத்தின் பாதை அது. மெளனத்துக்கென்று தனித்த இடமோ பாதையோ இல்லை. எல்லா இரைச்சல்களுக்கிடையேயும் அது வீற்றிருக்கிறது.
மெளனம் தனியே கிட்டுமொரு அதிசய நிலை அல்லது வாய்ப்பு என்ற எண்ணமுள்ளவர்கள் கடலலை ஓய்ந்த பிறகு குளிக்கக் காத்திருப்பவர்களுக்கு நிகரானவர்கள். கடலில் சீற்றத்தைமட்டும் காண விழைகிறவர்கள் சீற்றத்தை மட்டுமே காண்கிறார்கள். கடலிலும் அமைதியைக் காண விழைகிறவர்கள் சீற்றத்தின் அடியிலும் அமைதி காண்கிறார்கள். இந்த அனுபவத்தை வாழ்வின் வெவ்வேறு தளங்களில் பொருத்தி மேலும்மேலும் சொல்லமுடியும். அன்பு என்பது தனித்த குணமல்ல. ஆயிரம் குரூரங்களுக்கு நடுவே மலரும் ஒரு குணம். இனிமை என்பது தனித்த சுவையல்ல. நூறுநூறு கசப்புகளுக்கிடையே மிக இயல்பாகப் படிந்து வெளிப்படும் உணர்வு. இப்படி ஏராளமாக விரித்துரைத்தபடி போகலாம்.
பி.பி.ராமச்சந்திரனுடைய ‘பலுான் ‘ என்னும் கவிதை எளிய தோற்றமும் ஆழ்ந்த அனுபவமும் கொண்டதாகும். திருவிழாக்களத்தில் காற்றடிக்கப்பட்ட பலுானை வாங்கிக்கொண்டு ஓடுகிற மகனைப் பின்தொடரும் ஒரு தந்தையின் கோணத்திலிருந்து நகர்கிறது இக்கவிதை. மகனுடைய கையில் நூலின் ஒருமுனை. மறுமுனையின் விளிம்பில் நெளிகிறது பலுான். தாயின் பால்மடி நோக்கி எம்பி ஓடும் பசுக்கன்றைப்போல அது தோற்றம் கொள்கிறது. எங்கெங்கும் நிரம்பியிருக்கும் காற்றுமண்டலம் தாயாகவும் சின்னப்பலுானில் நிரப்பப்பட்ட காற்று கன்றாகவும் தோற்றம் தருவது பொருத்தமாகவே உள்ளது. நூலைப்பற்றியிருக்கும் சிறுவனுடைய கையைப்போலவே சிறுவனை வேறொரு நூலால் பற்றியிருக்கிறார் பின்னால் நிற்கும் தந்தை. இப்படி ஒரு காட்சி கவிதைக்குள் உருவானதுமே கவிதையில் தன்னையறியாமல் தத்துவச்சாயல் உருவாகிவிடுகிறது. ‘எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ? ‘ என்னும் மெளனியின் வரியைப்போல எவர்கையில் உள்ளது ‘என் இடையில் கட்டியிருக்கும் கண்காணா நுால் ? ‘ என்ற வரி அமைந்திருக்கிறது. ‘ஆட்டுவிப்பன் அங்கே, ஆடுபவர்கள் இங்கே ‘ என்னும் ஆதிக்குரலின் எதிரொலிகள் பற்பல சுவர்களில் பட்டுப்பட்டு ஒலித்த குரலேயென்றாலும் பலுான் வழியாக எதிரொலிக்கும்போதுகூட புதுவிதமாகவும் இனிமையாகவும் உள்ளது.
இப்படி ஒவ்வொன்றாக எடுத்துச்சொல்ல பல கவிதைகள் இத்தொகுதியில் உள்ளன. அனிதா நம்பியின் ‘உணவு ‘, பி.பி.ராமச்சந்திரனின் ‘மண் ‘, ‘ஒருத்தி ‘ பி.ராமனின் ‘உள்ளுலர்தல் ‘, ‘கடைசிப்பூதம் ‘, வீரான்குட்டியின் ‘இருப்பு ‘, ‘மந்திரவாதி ‘ ஆகியவை முதல் வாசிப்பில் மனம்கவர்ந்த கவிதைகள்.
ஜெயமோகனுடைய இந்த மொழிபெயர்ப்பு முயற்சி மிகமுக்கியமான ஒன்று. கவிதைகளைப்பற்றிய பார்வை தமிழ் வாசகர்களிடையே செழுமையடை இவை நிச்சயம் உதவும். தேவதேவனுடைய கவிதைகளை முன்வைத்து அவர் ஏற்கனவே எழுதிய நூல் தமிழ்க்கவிதைகளில் நவீனத்துவக் கூறுகளையும் பின்நவீனத்துவக்கூறுகளையும் பிரித்தறியவும் உதவக்கூடிய படைப்பாக அமைந்தது. நாலைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘இன்றைய மலையாளக்கவிதைகள் ‘ என்னும் மொழிபெயர்ப்புத் தொகுதியைத் தொடர்ந்து வந்திருக்கும் இப்புதிய தொகுப்பின் வழியாக மலையாள மொழியில் மலர்ந்துவரும் புதுக்கவிதைகளின் முகங்களை அடையாளப்படுத்துகிறார் ஜெயமோகன். ஜெயமோகனுடைய தொடர்முயற்சிகள் நல்ல ரசனைஉணர்வுள்ள கவிதை வாசகர்களை கணிசமான அளவில் தமிழ்ச்சூழலில் உருவாக்கும் என்பது உறுதி.
நன்றி www.thinnai.com(நெடுஞ்சாலை
[புத்தரின் நுாறு முகங்கள்- புதிய மலையாளக் கவிதைகள். தொகுப்பும் மொழிபெயர்ப்பும்: ஜெயமோகன். வெளியீடு: யுனைடெட் ரைட்டர்ஸ், 130/2, அவ்வை சண்முகம் சாலை, சென்னை ௮6. விலை. ரூ.40)